Friday, September 13, 2019

கனவாகிப் போன புத்தக அலமாரி

நான் சபிக்கப்பட்டிருக்கிறேன்..
உங்களில் பலருக்கு நான் அனுபவிக்கும்
 இந்த வேதனையை/ உணர்வைப் புரிந்து கொள்ள முடியுமா..?
 என் வாழ்க்கையில் நான் இல்லை
எனக்கான இடம் இல்லை..
என் எழுத்துகள் … இல்லவே இல்லை! 
வாசிப்பு பைத்தியத்திற்கு கிடைத்த
 ஆயுள் தண்டனை இது!

வாசித்த எதையும் சேர்த்து வைக்க 
எனக்கு இடமில்லை.
 கல்லூரியில் வாங்கிய புத்தகங்கள் 
எழுதிய மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரைகள்…
 மதுரையிலிருந்து திரு நெல்வேலி
வந்த து. ஒரு டிரங்க் பெட்டியில் வைத்து
 பூட்டி வைத்துவிட்டு நான் வழக்கம் போல 
மும்பை வந்தேன். இந்த அரபிக்கடல்
 என்னை அடித்துப் போட்டு 
தன் கரையில் ஒதுக்கித் தள்ளியது.

மும்பை சாலையோரத்து புத்தகங்களை 
இரவலாக வாங்கி வாசித்து பசியாறிய நாட்களுண்டு…’
எழுத மறந்த காலங்களும் உண்டு…
ஓடி ஓடி ஓடி… திரும்பி பார்க்கும் போது
‘என்னைக் காணவில்லை.
எனக்கான இட த்தில் நான் இல்லை!

உண்டு உறங்கி கால் நீட்டி படுப்பதுவே
வாழ்க்கையின் அதிகப்பட்ச தேவையாகிப்போனது..
தீப்பெட்டி மாதிரி
 அடுக்கி வைத்திருக்கும் வீட்டில் 
நீங்கள் கால்களை மடக்கி வைத்துக் கொண்டு 
படுத்திருக்கிறீர்களா..
எனக்கு அந்த அனுபவம் உண்டு.

மிக மிக குறைந்த தேவைகளுடன் வாழ விரும்பும் நான்
ஆசைப்பட்ட தெல்லாம் 
ஒரே ஒரு புத்தக அலமாரிக்குத்தான்!அது கூட இன்றுவரை எனக்கு எட்டாத கனவுதான்.
இன்று நண்பர் பொன்.குமார் என் புத்தகவரிசை,
2006ல் நான் எழுதிய கடிதம்..
தன் முக நூல் பக்கத்தில் போட்டு 
என்னை அழ வைத்துவிட்டார்.
.
ஆம்.. கண்களை மூடிக் கொண்டு
 ஒரு கனவு காணுகிறேன்..
ஒரு சின்ன அறை.
அதில் ஓரமாக ஒரு மேசையும் நாற்காலியும்.
நாலு பக்கமும் சுவரை ஓட்டி புத்தக அலமாரி..
வரிசையாக புத்தகங்கள்..
புத்தகங்களின் சுவாசத்துடன் நான் ..
இது இந்தப் பிறவியில் எனக்கு கனவு மட்டும்தான்.
என் வாழ்க்கை…. இப்படித்தான் சபிக்கப்பட்டிருக்கிறது.

மும்பையில் தொட்டிச்செடியாகிப் போன நான்

ஆலமர நிழலுக்கு ஆசைப்படுவது பேராசை தான்.
(மகா.. உன் தோள்களில் சாய்ந்து அழ வேண்டும்.
என் இயலாமைகளை உனையன்றி யாரறிவார் தோழி?)

1 comment:

  1. இப்போது கிண்டில், கூகுள்புக்ஸ் போன்ற செயலிகள் நவீன வாசகர்களுக்கு கைய்யடக்கப்பேசிகளையே புத்தக அலமாரிகளாக மாற்றிவிட உதவுகிரது மேடம். அதுவும், மின்புத்தகங்களையே நம்பியுள்ள என்போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வேறுவழியும் இல்லை. உலகம் சுருங்கி கிளௌட் தொழில்நுட்பம், பெண்டிரைவ்கள் அல்லது எக்ஸ்டெர்ணல் ஹார்ட்வேர்களே புத்தக அலமாரிகளின் பணியை ஆற்றிவிடமுடியும்.

    ReplyDelete