இன்றைய மோசிகீரனார்கள் எவரும்
முரசுக்கட்டிலில் களைப்பு மிகுதியால்
உறங்குவதில்லை.
அவர்களிடம் சொந்தமாக அரண்மனையே இருப்பதால்
வெண்சாமரம் வீசுவதற்கு மட்டும்
அரசர்களையே பணிக்கு அமர்த்திக் கொள்கிறார்கள்.
இவர்களின் கூட்டணியில்
கலையும் இலக்கியமும் செழித்து செழித்து
அடர்ந்து படர்ந்து
பல்கலை கழகத்தின் வாசலுக்கும்
பத்திரிகையின் அட்டைப்படங்களுக்கும்
அலங்காரமாகிவிடுகின்றன.
இதில் பெண்ணியம் வண்ணமயமாகவும்
ஆணியம் கறுப்பு வெள்ளையில் இருப்பதாகவும்
ஆய்வாளர்கள் குறைபட்டுக்கொள்கிறார்கள்.
புகழ்வதற்கோ கொண்டாடுவதற்கோ
காரணங்கள் தேவையில்லை
வைரமுத்து நன்றாக கிரிக்கெட் ஆடுவார்
என்று நான் சொன்னால்
நீங்கள் இல்லை என்றா சொல்லிவிடப் போகிறீர்கள்?!
சரி..
இலக்கியத்தை கொச்சைப்படுத்துகின்ற
இலக்கியத்தை விற்றுப்பிழைக்கின்ற
கலை இலக்கியத்தை
தன் அதிகாரத்தாலும் பணத்தாலும்
விலைக்கு வாங்கி அதையும்
ஆரவாரமாகக் கொண்டாடுகின்ற
சமூகம் சீரழிந்துவிடும்.
அந்தச் சீரழிவைக் கொண்டாடும் கூட்டம்
அந்தச் சீரழிவை கேள்வி கேட்காத கூட்டம்
500 ரூபாய்க்கும் 1000 ரூபாய்க்கும்
தன்னை விற்றுப் பிழைக்கின்ற
மானங்கெட்ட குடிகாரக் கூட்டம்
இந்தக் கூட்டத்திற்கு ஜால்ரா போடும்
அவன் இவன் அவன் சாகாக்கள் இவன் சகிகள்
தலையில் ஒளிவட்டத்தைச் சுமந்து
திரிகின்ற பாவனையில்
சொற்களை ஒலிக்குப்பைகளாக
துப்பிக்கொண்டிருக்கிறது
உங்கள் கூட்டம்.
எச்சிலைத் துடைத்துக் கொள்.
என் சிவகாமி தாம்பூல தட்டுடன்
ஊஞ்சலில் ஆடுகிறாள்.
இதோ…சுண்ணாம்பு தடவி
நடு நரம்பை எடுத்துவிட்டாள்.
நுனியையும் காம்பையும் கிள்ளிய கையால்
சாதிக்காயை துண்டுகளாக நொறுக்குகிறாள்.
ஏலக்காயும் கொட்டைப்பாக்கும்
அவள் தாம்பூலத்திற்குள் மறைகின்றன.
அவள் தாம்பூலம் தரிக்கிறாள்.
எச்சிலை எச்சிலால் துடைப்பாளோ
எச்சிலை நஞ்சாக்கி அழிப்பாளோ
காத்திருக்கிறது பவளபற்பங்கள்.
அவள் சக்கையைத் துப்ப தெரிந்தவள்.
வயிற்றுப்புண்ணுக்கும் செரிமானமின்மைக்கும்
தாம்பூலம் தரிப்பது நல்லது.
இலக்கியவாதிகளுக்கும் இது பொருந்தும்.
தற்காத்துக் கொள்ள
தமிழ்த்தாய் மறக்காமல்
தாம்பூலம் தரிக்க வேண்டும்.
இலக்கியத்தை இலக்கியவாதிகளிடமிருந்து
ReplyDelete"தற்காத்துக் கொள்ள
தமிழ்த்தாய் மறக்காமல்
தாம்பூலம் தரிக்க வேண்டும்"
நல்ல கவிதை