படைப்புக்கும் பிரம்மத்திற்கும் நடுவில்
அவள் பிரபஞ்சம்
நிலவு வானம் மலர் மாங்கனி
அவளை உங்கள் கண்களால்
பார்த்துக்கொண்டதற்கு
அவள் பொறுப்பல்ல.
அவளுடைய இன்னொரு முகம்
கொலைமுகமாக உங்களைப் பயமுறுத்துகிறது.
கழுத்தில் மண்டையோட்டு மாலையைப் போட்டு
கையில் சூலாயுதம் கொடுத்து.
நாக்கை நீட்டித் தொங்கவிட்டு..
நடுக்காட்டில் நிறுத்திவிட்டீர்கள்.
குருதியின் வாடை
ஓ நாய்களின் ஓலக்குரல்
பாலைவெளி எங்கும் அவள் வழித்தடம்
வெயிலையே நீராகக் குடித்து குடித்து
வெந்து தணிகிறது அவள் வேட்கை.
ஐம்படைத் தாலிகள் அறுபடுகின்றன.
வேல்முனையை முத்தமிடுகிறாள்.
குருதி வழியும் பீடத்தில்
ஒவ்வொரு பூக்களாக உதிர்கின்றன.
கலிங்கத்துப் பரணியின் கதவுகளை
களிறுகள் கொண்டு உடைக்க நினைக்கிறான்
ஒட்டக்கூத்தன்.
No comments:
Post a Comment