Saturday, June 30, 2018

அந்த நான்




அந்த நான் 
இப்படித்தான் இருக்க வேண்டும் 
இதைத் தான் செய்ய வேண்டும்
இதைத்தான் பேச வேண்டும்
இப்படித்தான் உடுத்த வேண்டும்
இன்னாரிடம் தான் பழக வேண்டும்
இப்படியாக அவரவர்க்கான நான்
அவர்களை மகிழ்விக்கும் நான்
அவர்களின் பார்வையில் நான்
அந்த நான் எப்போதும் நானாகவே
இருப்பதில்லை என்பதால் தான்
அந்த நானிலிருந்து இன்னொரு நான்
எப்பொதாவது விழித்துக்கொள்கிறது.
அந்த நானை அவர்கள் 
கருக்கலைப்பு செய்ய முயற்சித்து தோற்றுப்போகிறர்கள்.
அந்த நான் அவர்களை எப்போதும்
அச்சுறுத்திக் கொண்டே இருப்பதாக
அவர்கள் நினைப்பதை
இந்த நான்இல்லைஎன்று சொல்வதில்லை.
அதனால் கடுப்பாகி அந்த நான்
காட்டேரி, பேய், பிசாசு, மோகினி
என்று அழைக்கிறார்கள்.
அடிக்கடி அவர்களே பேயோட்டும் மந்திரங்களுடன்
அந்த நானை விரட்டிவிடும் வேகத்தில்
புளியம் கம்பால் அடிக்கிறார்கள்.
அந்த நானின் கதறல் 
அவர்களின் ஆத்திரத்தை தணிக்கிறது.
கைகள் சோர்ந்து அவர்களே 
நிறுத்திக் கொள்கிறார்கள்.
நானின் காயங்கள் ஆறாமல்
சீழ்ப்பிடித்து அவர்களைச் சுற்றி
நானின் நாற்றமெடுக்கிறது.
இப்போது அவர்கள் நானை
விரட்டிவிடலாம் என்று ஒருமனதாக
தீர்மானிக்கிறார்கள்.
அந்த நான் விரட்டப்படும் போது
அவர்களும் அகதிகள் ஆகிவிடும்
அபாயம் இருப்பதை
அவர்களின் சட்டங்கள் சொல்கின்றன.
அவர்கள் இப்போது அவர்களுக்குள்
சண்டைப் போட்டுக்கொள்கிறார்கள்.
அந்த நானை யார் வெறுத்தது?
அந்த நானை யார் அடித்தது?
அந்த நான் செய்ததை எல்லாம்
யார் யார் மறந்தது?
அவர்கள் ஒருவரை ஒருவர் குற்றம்
சொல்லிக்கொண்டு 
அவர்களுக்குள் யுத்தம் நடத்துகிறார்கள்.
அந்த நான்.. நினைவுகள் தப்பிய 
அந்த நான்.. கோமாவில்
அமைதியாக படுத்திருக்கிறது.
அந்த நானின் இந்த நான்
இன்னும் உயிர்ப்புடன்
மோகினியாக காட்டேரியாக
காடுகளிலும் வீடுகளிலும்.

No comments:

Post a Comment