Sunday, July 8, 2018

அவள் மொழி



சொற்களை ஊடறுத்தல் யுத்தம் தான். 
அவள் அந்த போர்க்களத்தில் நிராயுதபாணியாக
ஏன் நிர்வாணமாகவும் கூட .

சக்தி மிக்கதெல்லாம் ஆண் என்றாய்.
அதுவே நன்று என்றும்
உனக்கு இனிமை தருவதெல்லாம் 
பெண் என்றாய்.
பெண் இனிமை என்றாய்.
பெண் அழகு என்றாய்.
உன் சொல்லை நம்பாதவர்களை
சிறையிலிட்டாய், தூக்கிலிட்டாய்.
அவர்கள் வாழ்ந்த அடையாளங்களை
துடைத்து எறிந்தாய்.
உன் அகராதிகள் அவளுக்கானதாக இல்லை..
உன் நுகர்வு இன்பத்தின் அடிப்படையில்
இனிமையும் அழகும் தீர்மானிக்கப்பட்டிருக்கும்
சூத்திரங்களை அவள் கண்டடைகிறாள்.
சூத்திரதாரிகளின் கட்டுமானங்களை 
அவள் உடைக்க நினைக்கிறாள்.
கிளிப்பிள்ளைகளைக் கொண்டாடும் கூட்டத்தில்
அவள் மொழி அயல்மொழியாகிறது.
அவள் தீட்டாகிறாள்.
இருளுக்குள் அவளை அடைத்துவிட 
சூரிய சந்திரர்கள் முடிவு செய்கிறார்கள்.
நட்சத்திரப் பெண்கள் அந்தப்புரத்தை
அலங்கரிக்கிறார்கள்.
போரின் வெற்றி முரசு ஒலிக்கிறது.
அவள் யுத்தங்களை வெறுக்கிறாள்.
தேச எல்லைகளைக் கடந்து விட துடிக்கிறாள்.
மொழிகளின் எல்லைகள் அவளை அகதியாக
துரத்திக் கொண்டே இருக்கின்றன.
பனிக்குடம் உடைந்து கடலின் அலைகளாய்
அவள் கரை எங்கும் ..
மணல்வெளி எங்கும் அவள் மொழியின் பிரவாகம்.
துவாரகைக் கடலில் மூழ்கிக்கொண்டே இருக்கிறது.
வெண்சங்குகள் கரைகளில் ஒதுங்குகின்றன.



No comments:

Post a Comment