Saturday, May 19, 2018

May 19, 2009 கொழும்பு விமானநிலையத்தில் நான்..


May 19, 2009 ல் கொழும்பு விமான நிலையத்தில் நான்

இப்போது நினைத்தாலும் உடல் சில்லிட்டு உறைந்து போகிறது.
வரலாற்றின் அந்தக் கொடுமையான தினத்தில் நான் அந்த மண்ணில்
நிர்கதியாக நின்று கொண்டிருந்தேன். அதுவும் என் குடும்பத்துடன்.
பாங்காக்கிலிருந்து மும்பைக்கு வரும் வழி.  அதுவும் ஶ்ரீலங்கா
விமானத்தில் பயணம். கொழும்பு வழியாக எங்கள் பயணம். இந்திய அரசு
மீது அசாத்தியமான நம்பிக்கையுடன் இருந்த காலக்கட்டம். எப்படியும்
இந்திய அரசு எதாவது செய்துவிடும். தமிழக அரசின் கெடுபிடி அதிகரிக்கும்
என்றெல்லாம் தவறாக ஊட்டப்பட்ட நம்பிக்கையில் -குருட்டு நம்பிக்கையில்-
காத்திருந்த தருணம்.
கொழும்பு நகரில் இறங்கியுவுடன் நிலைமை கைமீறிப் போய்விட்டதை அறிந்து
கொள்கிறேன். கால்கள் நடுக்கமெடுக்கின்றன. என் கணவர் சங்கர் என் குழந்தைகளை
என்ன நடந்தாலும் அமைதியாக இருக்க வேண்டும். பயப்படக்கூடாது, டிவியில் காட்டப்படும்
எந்தக் காட்சிகள் குறித்தும் மும்பையில் வீடுபோய் சேரும் வரை எதுவும் பேசக்கூடாது
என்று சொல்லி அழைத்து வருகிறார். மும்பை விமானத்திற்கு 4 மணி நேரம் நாங்கள்
விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை. டிவி திரைகளில் காட்சிகள் ஓடுகின்றன.
அதைக் கொண்டாடிய சிங்கள முகங்கள் .. ஆண்களும் பெண்களும் கூடி பேசி சிரித்து
ஆராவாரம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது நான் என்ன மன நிலையில் இருந்திருப்பேன்
என்று என்னால் முழுமையாக வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை. எனக்குள் ஒரு நெருப்பு..
நானே அக்னியாகி அத்தருணத்தில் என்னை எரித்துக்கொண்டு எல்லாவற்றையும் எரித்துக்
கொண்டு இந்து மாகடலில் கரைந்துவிட மாட்டோமா என்றிருந்தது. என்னால் எதுவும் செய்ய
முடியாது என்ற கையறுனிலை இன்றுவரை குற்ற உணர்வுக்கு தள்ளுகிறது.
உடல் அனலாகக் கொதித்தது. தலை விண்விண் என்று வலிக்க ஆரம்பித்தது.
பாத்ரூமிறிகுள் நான் போவதும் திரும்புவதுமாய் இருப்பதை அவர்கள் கவனிக்க
ஆரம்பித்தார்கள். நான் போய்வந்தவுடன் பாத்ரூமுக்குள் போய் அறையைக் கண்காணித்தார்கள்.
அவள் கண்முன்னாலேயே பேசினில் வாந்தி எடுத்து தொலைத்தேன். அவள் முகச்சுழிப்புடன்
என்னைப் பார்த்தாள்.
நான் வெளியில் வரவும் அவளும் அவளுடன் இன்னும் இரு ஆண்களும் பெண்களும்
என்னைச் சுற்றி நின்றார்கள். என் பாஸ்போர்ட் டிக்கெட் விவரங்களை வாங்கிப் பரிசோதித்தார்கள்.
வெட்கத்தை விட்டு சொல்கிறேன்.. அப்போது நாங்கள் அவர்களுடன் இந்தியில் பேசினோம்.
மும்பை முகவரி.. இந்தியில் பேசியது.. நெற்றியில் போட்டு இல்லாதது.. குழந்தைகள் இந்தியில்
பேசிக்கொண்டது.. இப்படியாக அச்சூழலிருந்து தப்பினோம்.. எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.
அதன் பின்திமுக அரசியலையும் அக்கட்சியின் தலைமையையும் மிகவும் கடுமையாக எதிர்க்க
ஆரம்பித்தேன். திமுக  அரசும் திமுக தலைமையும் ஈழப்போருக்கு ஆதரவாக பதவி விலகி இருந்தால்
மட்டும் முள்ளிவாய்க்கால் கொடுமைகள் நடந்திருக்காது என்றோ அல்லது ஈழப்போரின்
முடிவுகள் வேறுமாதிரி இருந்திருக்கலாம் என்றோ சொல்லவரவில்லை.
பன்னாட்டு அரசியல் ஆயுத அரசியல் பூகோள அரசியல் வல்லரசுக்கான போராட்டத்தில்
ஈழம் பலிகாடானது என்பதை நானும் அறிவேன். ஆனால் அத்தருணத்தில் திமுக தலைமை
எடுத்த முடிவுகளும் உண்ணா நிலைப் போராட்ட கேவலமான நாடகக்காட்சியும் 
என் போன்றவர்களுக்கு  உள்ளத்தில் ஆறாத தழும்பாக இருக்கிறது.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு 
என்ற வரிகளைச் சொல்லித்தான் எல்லா மேடைகளிலும் என் உரையை 
ஆரம்பிப்பது வழக்கம். 2009 மே 19 க்குப் பிறகு அந்த வரிகள்
என்னை விட்டு விடைபெற்றுவிட்டன. எதுவும் எழுதமுடியாமல் வாசிக்க முடியாமல் சற்றொப்ப
இரண்டு வருடங்களுக்கும் மேலாக அவதிப்பட்டிருக்கிறேன். 

அன்று கொழும்பு நகர் விமான நிலையத்தில் நான் என்ன நினைத்தேன் என்பதையோ
என்ன செய்ய விரும்பினேன் என்பதையோ என்னால் பதிவு செய்ய முடியாது. இதற்குமேல்
அதைப் பற்றி சொல்வதற்கு தெரியவில்லை.

தேசப்பற்று தேசியம் என்று பேசப்படும் கருத்தருவாக்கங்களை இன்று நான் மீள்வாசிப்பு
செய்து கொண்டிருக்கிறேன். 
(ஒவ்வொரு ஆண்டும் இந்த என் அனுபவத்தை என் தோழி மீராவுடன் பகிர்ந்து கொள்வதுண்டு.
அவள் இதைப் பற்றி நான் பதிவு செய்யவேண்டும் என்று அடிக்கடி சொல்லுவாள். அவளை விட்டு
தொலைவில் இருக்கும் இன்னாளில் .. நன்றி தோழி.)


4 comments:

  1. தங்களது மனநிலையில் நானும் கொழும்புவில் இருந்திருக்கிறேன்.

    நீங்களாவது விமான நிலையத்தின் உள்புறம் நான் வெளியே நீர் கொழும்பில்.

    பிரபாகரன் கொல்லப்பட்ட மூன்றாவது நாளில்...

    ReplyDelete
  2. தங்கள் உள்ளத்து எண்ணங்களை
    வரவேற்கிறேன்.

    ReplyDelete
  3. வருந்துகிறேன்

    ReplyDelete
  4. நான் அந்த நாளில் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தேன். பாடசாலை விட்டு விசேட வகுப்புக்குச் செல்லும் வழியில் செய்தியை அறிந்து இதயம் நொறுங்கினேன். உள்ளூர் சர்வதேச வணிக அரசியலை தமிழீழத்தால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சிங்களவர்களின் வெற்றிக் கொண்டாட்டத்தில் அவர்களின் இனவெறியன் தீவிரத்தை உணர முடிந்தது. எல்லாம் காலத்தின் கோலம். ஆண்டுகள் கடந்தாலும் அழியாத காயம்.

    இராஜராஜர் பராக்...!
    பதிவர் : கவின்மொழிவர்மன்
    #கவிதை #தமிழ் #கவின்மொழிவர்மன் #ராஜராஜசோழன் #லோகமாதேவி #Tamil #Thamizh #Poem #Kavidhai #KavinMozhiVarman #RajaRajaChozhan #Logamadhevi #SIGARAM #SIGARAMCO
    #சிகரம்

    ReplyDelete