Wednesday, May 30, 2018

cerritos Library (California, USA)


Cerritos library



செரிடோஸ் பகுதியில் இருக்கும் இந்த லைப்ரரிக்குள் நுழைந்தவுடன்
அப்படியே கருவறைக்குள் நுழைந்துவிட்ட பக்தனைப் போல ஒவ்வொரு
புத்தகமாகத் தொட்டு தொட்டு கன்னத்தில் போட்டுக்கொள்ள வேண்டும் போலிருந்தது.
யாராவது பார்ப்பதற்குள் எப்படியும் செய்துவிட வேண்டும் என்று நூலகத்தின்
ஒரு கோடியில் ஒதுங்கி கன்னத்தில் போட்டுக்கொண்டேன்.
போனவுடன் ஒரு பெரிய மீன் தொட்டி. குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையும்
கவர்ந்திழுக்கிறது. இதைப் போலவே ஒரு மீன் தொட்டியை துபாய் மால் பகுதியிலும்
பார்த்திருக்கிறோம். கிரவுண்ட் ஃப்ளோர் முழுக்கவும் சிறுவர்களுக்கான நூலகம்.
நடுவில் பெரிய மரம். குட்டி குட்டியான பெஞ்சுகள். இடையிடையே டைனசோர்.
சித்திரக்கதைகள் அடங்கிய புத்தகவரிசை. எழுத்துக்கூட்டி வாசிக்கும் முன்பே
குழந்தைகளை அங்கு அழைத்து வருகிறார்கள். அக்குழந்தைகள் அவர்களே
புத்தகத்தின் வண்ண மயமான அட்டைப்படத்தைப் பார்த்து எடுத்துக் கொண்டு நடக்கிறார்கள்.
பிஞ்சு விரல்கள் புத்தகங்களுடன் நடக்கும் காட்சி என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
அம்மாக்களும் அப்பாக்களும் சித்திரம் பார்த்து கதை சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.
சீனம், ஸ்பானிஷ், குஜராத்தி என்ற பிற மொழி புத்தகங்களைப் பார்த்தவுடன்
அவர்கள் குழந்தைகள் அவரவர் தாய்மொழியில் கற்றுக்கொள்ள வேண்டும்,
தாய்மொழி குழந்தையின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றுகிறது என்பதை
மிகவும் தெளிவாக அறிந்திருப்பது கண்டு மகிழ்ச்சி ஏற்பட்டது. தமிழ்ப் புத்தகங்கள்
இருக்கின்றனவா என்று தேடிக் கொண்டே வந்தேன். பெரிய மரத்தின் விழுதுகள்
முடியும் பகுதியில் ஒரு அலமாரியில் தமிழ்ப் புத்தகங்கள்
ஆஹாகைகள் பரபரத்தன. ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப் புரட்டினேன்.
ஆங்கில நர்சரி பாடல்களின் தமிழாக்கம் என்ற வகையில் அப்புத்தகங்கள்
அமைந்திருந்தன.
இன்னும் கொஞ்சம் யாராவது முயற்சி எடுத்தால்,
கை வீசம்மா.. கை வீசு
கடைக்குப் போகலாம் கைவீசு..”
 மாதிரியான சிறுவர்களுக்கான ஒரிஜினல் தமிழ்ப் பாடல்களை நூலகத்தில்
இடம் பெற செய்யலாம் என்ற எண்ணம் வந்தது. 
தானியங்கி படிகளில் எறி முதல் மாடி, இரண்டாம் மாடிக்கு சென்றால் 
உலகம் உங்கள் கைகளில் வந்து உட்கார்ந்து கொள்கிறது .. 
இது  மனப்பிரமை அல்ல. 
ஆய்வு மாணவர்கள், புத்தகப்பிரியர்கள், லைப்ரரியில் சந்திக்கும் நண்பர்கள்,
காதலர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள்.. என்னைப் போல சில பரதேசி பயணிகள்..
லைப்ரரிக்கு போனவுடன் எந்தப் பகுதிக்குள் போவது,, 
எதை வாசிக்க எடுப்பது..
இப்படியாக .. அங்குமிங்கும் கால்கள் நடக்க.. இப்படியே திருவிழாவைப் பார்த்த
சிறுமியைப் போல அலைந்து கொண்டிருந்தேன். அங்கிருந்த உதவியாளர்
அருகில் வந்து .. “என் உதவி வேண்டுமா?” என்று கேட்கும் வரை.. என் கண்கள்
அலைபாய்வதைத் தடுக்க முடியவில்லை.  Free wifi, PC, reading tables with llights.., 
small reading rooms .. sofa chairs..
எல்லா வசதிகளுடனும் ஓர் அரசு பொது நூலகம் 18000 சதுர அடியில்
பிரமாண்டமாய்.. என்னை தனக்குள் இழுத்துக்கொள்கிறது.
கடிகாரத்தின் முட்கள் என்னிடம் தோற்றுப்போகின்றன.
நேரம் போவது தெரியவில்லை.
நான் புத்தகங்களுக்குள் கரைந்துப் போகிறேன்.
மதுரைப் பல்கலை கழகத்தின் நூலகத்தில் எல்லா புத்தகங்களிலும்
கைரேகைப் பதிந்திருக்கும். 
இன்று அது சாத்தியமில்லையோ.
இந்த நூலகம் தன் பிரம்மாண்டத்தில் என்னை வசீகரித்துக் கொள்வது
தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் சிவலிங்க தரிசனம் போல


நான் வெளியில் வருகிறேன்.
சின்ன சின்ன நீர்க்குழாயில் நீர்க்குமிழிகள்..
கீழிருந்து மேலாக நுரைப்பொங்க கொப்புளித்து
குதியாட்டம் போடுகின்றன.
குழந்தைகள் அதனடியில் விளையாடுகிறார்கள்.
கைகளில் இருந்தப் புத்தகங்களை ஒரு ஓரமாக பாதுகாப்பாக வைத்துவிட்டு
நானும் அந்த வளைவுக்குள் ..
நீர்த்துளிகள் முகத்தில் படும்போது ..
சில்லென்ற காற்றின் வருடல்.
பிராமாண்டங்கள் ஒரு நொடிக்குள் .. ஒரு துளியில்..
கரைந்து காணாமல் போகின்றன.
நான் மீண்டு வருகிறேன்.

1 comment:

  1. அது நூலக நாடு. நூலகம் மற்றும் நூலக அறிவியல் பற்றி உலகமே இவர்களிடம் தான் இன்றும் கற்றுக்கொண்டு வருகிறது.

    ReplyDelete