Tuesday, February 27, 2018

விடுதலை .. அவள் நிர்வாணமாக வருகிறாள்


Image result for syria war affected children modern art
எம் இனிய தோழி சிரியா பெண்கவிஞர்
மரம் அல் மஷ்ரி (Maram - AL - Masri )
குரலை மீள்பதிவு செய்கிறேன்.
தோழியின் கண்ணீர்க்குரல் இப்போதும் என் செவிகளில் ஒலிக்கிறது.
கவிதையின் சில துளிகள்..
பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின்
சுவர்களில் எழுதப்பட்டிருந்தது
விடுதலை என்ற சொல்.
சரித்திரத்தின் சுவர்களில்
விடுதலை குருதியால் எழுதியது
அவர்களின் பெயர்களை.
----
இக்குழந்தை
தாயின் கருப்பையிலிருந்து
வெளியில் வீசப்படவில்லை.
வீசப்ப்பட்டது
பூமியின் கருப்பையிலிருந்து.
அவன் வரலாற்றுக்கு முந்திய
ஆதிகாலத்து சிலையல்ல
அவன் ஒரு குழந்தை.
வெள்ளைத் துணியால் பொதியப்பட்டு
குண்டுகளால் மூடப்பட்டவன்.
தாயின் பால்குடி அறியாத பாலகன்
சீம்பால் கூட அருந்தவில்லை.
---------------------------
விடுதலையின் குழந்தைகள் அணிந்ததில்லை
தங்கள் ஆடைகளாக
வெள்ளைக் கம்பேனியின் துணிகளை.
அவர்கள் உடல் பழகிவிட்டது
முரட்டு துணிகளுக்கு.
விடுதலையின் குழந்தைகள்
பிறர் அணிந்த ஆடைகளை
(பழைய ஆடைகளை) அணிகிறார்கள்
அவர்களின் காலணிகள் பாதங்களைவிட
பெரிதாக இருக்கிறது.
ஒருவேளை அடுத்தவருடம் சரியாக இருக்கலாம்.
பெரும்பாலும் அவர்கள் அணிவது
நிர்வாணத்தையும் அச்சத்தையும் தான்.
விடுதலையின் குழந்தைகள் அறிந்ததில்லை
'வாழைப்பழத்தின் ருசியையோ
ஸ்டாரபெர்ரியின் ருசியையோ
அவர்கள் சாப்பிட்டதில்லை சாக்லெட் பிஸ்கட்டுகளை
அவர்களுக்கு கிடைத்ததெல்லாம்
பொறுமை என்ற தண்ணீரில் நனைந்த
காய்ந்த ரொட்டிகள் தான்.
விடுதலையின் குழந்தைகளுக்கு
மாலைநேரத்தில் கதகதப்பான குளியல் கிடையாது.
வண்ணமயமான சோப்புக்குமிழிகளுடன் விளையாட்டும் கிடையாது.
அவர்கள் விளையாடுவதெல்லாம்
ரப்பர் டயர்களோடும் டிண் டப்பாக்களோடும்
(தவறுதலாக )விட்டுப்போன குண்டுகளோடும்..
விடுதலையின் குழந்தைகள்
தூங்குவதற்கு முன் பல்துலக்குவதில்லை.
ராஜா ராணி கதைகள் கேட்பதில்லை
அவர்கள் கேட்பதெல்லாம்
குளிரின் மவுனத்தையும் அச்சத்தையும் தான்.
அகதிகள் முகாமின் நடைபாதையில்
அல்லது கல்லறைகளில்
எல்லா குழந்தைகளையும் போல
விடுதலையின் குழந்தைகளும்
காத்திருக்கின்றார்கள்
தங்கள் தாய்மார்களுக்காக..
சிரியாவின் பள்ளத்தாக்குகளிலும்
மலைகளிலும்
அவள் வருகிறாள் நிர்வாணமாக
அகதிகளின் முகாம்களில்
அவள் பாதங்கள்
சகதியில் புதைந்து கிடக்கின்றன.
கடுங்குளிரின் வெடிப்பு அவள் உள்ளங்கைகளில்
ஆனாலும் அவள் தன் பாதையில்
முன்னேறி செல்கிறாள்.
அவள் கடந்துச் செல்லும் போது
அவள் கைகளில் தொங்கிக்கொண்டிருக்கும்
அவள் குழந்தைகள்
அவள் ஓடும் போது
விழுந்து விடுகிறார்கள்.
அந்த வேதனையில்
அவள் கதறுகிறாள்
ஆனாலும் தன் பாதையில்
முன்னோக்கி நடக்கிறாள்
நெரிக்கிறார்கள் அவள் குரல்வளையை
ஆனாலும் அவள் தொடர்ந்து பாடுகிறாள்.
---
சிரியாவின் சிறைக்கூடத்தில்
பிறந்த மகன்
கற்பழிக்கப்பட்ட தன் தாயிடம்
கேட்கிறான்
"அம்மா, ஒரு கதை சொல்லு'
(அவள் சொல்ல ஆரம்பிக்கிறாள்)
ஒரு விருந்தினர்...(சரி வேண்டாம்)
முன்பொரு காலத்தில்
ஒரே ஒரு ஊர்ல ஒரு குட்டிப்பையனும் அவன் அம்மாவும்.
அவர்கள் வீட்டில் ஒரு சன்னல்.
அவர்கள் இருவரும் அமைதியாக
அந்தச் சாலையைப்
பார்த்துக் கொண்டிருந்தார்களாம்!"
பையன் குறுக்கிட்டான்.
"அம்மா, அது என்ன சன்னல்?'
- சன்னல் என்பது சுவரில் ஒரு சின்ன திறப்பு.
அது வழியாக சூரிய வெளிச்சம் வரும்
அந்தச் சன்னல் கம்பிகளில்
பறவைகள் கூட உட்காரும்!"
பையன் மீண்டும் குறுக்கிட்டான்.
'அம்மா, அது என்ன பறவைகள்?"
கதை சொன்ன அம்மா இப்போது
கைகளில் பென்சிலை எடுத்தாள்
சுவரில் ஒரு சன்னலையும் குட்டிப்பையனையும்
வரைந்தாள்.
குட்டிப்பையனுக்கு இரு சிறகுகளுடன்.
===============
மரம் அல் மஷ்ரி :(Maram - AL - Masri ) சிரியாவில் லட்டக்கியாவில் பிறந்தார். தற்போது
பாரீசில் வசிக்கிறார். இந்த நூற்றாண்டின் பெண்ணியக்குரலாய் ஒலிக்கிறது
அவர் கவிதைகள். இதுவரை 6 கவிதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
8 மொழிகளில் அவை மொழியாக்கம் பெற்றுள்ளன. சிரியாவில் போர்மேகங்கள் சூழ்ந்திருக்கும் இக்காலக்கட்டத்தில் . "விடுதலை - அவள் நிர்வாணமாக வருகிறாள்" என்ற தலைப்பில் வெளிவந்த அவருடைய கவிதைகள் சிரியாவின் சர்வாதிகாரத்திற்கு எதிரான கலகக்குரலாய்
போருக்கு எதிரான மனித நேயமாய் பேசப்படுகின்றன.
"என் தாய்நாடு சிரியா இன்று கோமாவில் சுயநினைவின்றி இருக்கிறது.
அந்நியர்களின் ஊடுருவலால் எங்கள் புரட்சி களவாடப்பட்டுவிட்டது.
2013 ல் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சிரியா மக்கள்
அகதிகளாக பிறநாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.
 உலகநாடுகளிடம் நான் கேட்பதெல்லாம், " எங்கள் மக்கள் உயிர்வாழ
தேவையான மருந்து, உணவு கொடுத்து காப்பாற்றுங்கள் என்பதுதான்.
நான் என் மக்களுக்காக தொடர்ந்து பேசுவேன். எழுதுவேன். எவருடைய அச்சுறுத்தலுக்கும் அஞ்சமாட்டேன். ஒருவேளை அப்படியே நான்
கொலை செய்யப்பட்டாலும், அதுவும் என் மக்களுக்காக,
 என் தாய்நாட்டுக்காக..
பெற்ற தாயோ மகவோ நோய்வாய்ப்பட்டிருந்தால்
 நாம் நம் உயிர்க்கொடுத்து அவர்களைக் காப்பாற்றுவதில்லையா?
இன்று என் சிரியா நோய்ப்படுக்கையில்.
அதைக் காக்கும் போராட்டதில் என் உயிர்ப்போனாலும் பரவாயில்லை.
ஆனாலும் நான் சாகவிரும்பவில்லை. 
வாழவே விரும்புகின்றேன்.
 என் நாட்டுக்காகவும், என் மக்களுக்காகவும்.
என் கவிதைகள் பேசுவது அரசியல் அல்ல. மக்களைப்பற்றி பேசுகிறது.
என் கவிதைகள் விடுதலை குறித்துப் பேசுகின்றன. 
ஆம், கவிதைகள் எப்போதும்
விடுதலையின் குரல் தான்."
..

5 comments:

 1. உருக்கமான கவிதை மனதை நொறுக்கி விட்டது...

  ReplyDelete
 2. மனம் கனக்கிறது...

  ReplyDelete
 3. கவிதை உங்களின் மொழியாக்கம் தானே?
  அது தெரியாத அளவிற்கு, உணர்ச்சி பூர்வமாக களப்போராளியின் தீயுமிழும் வார்த்தைகள் படிக்கும்போதே கண்ணும் நெஞ்சும் தகிக்கிறது!
  ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாக குண்டுகளால் அழிபட்டபோதும் முன்னர் யாழ் நூலகம் எரிபட்ட போது தமிழகம் இருந்த நிலையில்தான் இப்போது சிரியாவுக்கு உதவாத உலக மனிதமும் விக்கித்து நிற்கிறது!
  வரலாறு இவர்களை விடுதலை செய்யும்! அப்போது இந்தக் கவிதைகளும் ரத்த சாட்சியாக வரலாற்றில் இடம்பெறும்.

  ReplyDelete
 4. //அவருடைய கவிதைகள் சிரியாவின் சர்வாதிகாரத்திற்கு எதிரான கலகக்குரலாய் போருக்கு எதிரான மனித நேயமாய் பேசப்படுகின்றன.//
  சிரியாவின் அதிபர் அசாத் இஸ்லாமிய ஷியா பிரிவைச் சேர்ந்தவர் என்பதினால் அவர் ஆட்சியை அகற்றி தங்கள் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்று பல இஸ்லாமிய‌ ம‌த‌ அடிப்ப‌டைவாத வன்முறை குழுக்கள் யுத்தம் செய்கிறார்கள். இவர்கள் எல்லாம் சுன்னி இஸ்லாம் பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களுக்கிடையிலும் மோதல்கள் நடை பெறுகிறது.அரபு நாடுகளில் சிரியாவில் மட்டும் தான் சர்வாதிகார ஆட்சி நடைபெறவில்லை.அமெரிக்கா தனது சுயநலத்திற்காக, சர்வாதிகாரத்திற்கு எதிராக சிரியாவின் அதிபரை அகற்ற வேண்டும் என்று என்று சொல்லி கொண்டு, இந்த மதவாத வன்முறை குழுக்கள் சிலவற்றை தாராளமாக ஆயுதம்,பணம் வழங்கி ஆதரிக்கிறது. ரஷ்யா சிரியா அரசை ஆதரிக்கிறது. இவர்கள் சிரியா மக்களுக்கு செய்யும் கொடுமைகளோடு அவர்களுக்கு உதவி செய்கிறோம் என்று வந்த ஐநாஅமைப்பு அதிகாரிகள் ஊழியர் சிலர் பெண்களிடம் பாலியல் கொடுமைகள் செய்கின்றனர். என்ன கொடுமை நடந்தால் என்ன சிரியாவில் இஸ்லாமிய‌ ம‌த‌ அரசு மலருவது தான் முக்கியமானது என்ற கனவில் பலர் தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள்.

  ReplyDelete