Wednesday, August 23, 2017

மணல் கடிகை

Image result for மணல் கடிகை

மணல் கடிகை
அண்மைக் காலத்தில் நம் கண் முன்னாலேயே எத்தனையோ
 மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.
தொலைதூரை தொலைபேசி தொடர்புகளுக்கு இரவு 9 மணிக்கு மேல் வரிசையில் காத்திருந்து பேசிய காலம் ஒன்றிருந்தது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
அறிவியல் தொழில்நுட்பங்கள் மனித வாழ்க்கையில் நூற்றாண்டு
 கால மாற்றங்களை ஒரு சில ஆண்டுகளில் புரட்டிப்போட்டு செய்து விடுகின்றன. மாற்றங்களின் விளைவுகளைப்
பற்றி நாம் யோசிப்பதற்குள் நம் வாழ்க்கையில் அதன் தாக்கங்கள்
பல்வேறு இடங்களில் புகுந்துவிட்டதை காலம் கடந்து தான் நாம் உணர்கிறோம்.
மும்பை நகரத்தைப் பெருநகரமாக்கிய நூற்பாலைகள்
 மராட்டிய சமூகத்தில் ஏற்படுத்திய
மாற்றங்கள் சமூகநீதி தளத்தில் மிக முக்கியமானவை.
இன்னும் சொல்லப்போனால்,
இந்திய இலக்கிய வரலாற்றில் தலித்திய இலக்கியத்தின்
 தோற்றுவாயாக இந்த ஆலைகளும்
ஆலைகளில் வேலை செய்வதற்காக கிராமங்களிலிருந்து வந்த விளிம்புநிலை மக்களும்.
இந்த ஆலைகள் 1980 வாக்கில் ஒவ்வொன்றாக மூடப்பட்டன. தொழிலாளர்களின் குடும்பங்கள் வீதிக்கு வந்தன.
தனியார்மயம் உலகமயம் அவர்களைத் தின்று துப்பி
குப்பைத்தொட்டிகுள் வீசியது.
இதுவும் நடந்தது. நடந்துக்கொண்டிருக்கிறது.
வான் பொய்த்ததோ.. மண்ணின் அரசு பொய்த்ததோ
 இரண்டும் சேர்ந்து செய்த சதியில் விவசாயிகள் தற்கொலையும் அனாதைகளாக பெருநகரத்தின் சாலைகளில்
 அன்றாடக் கூலிகளாக அலையும் நிலையும் ஏற்பட்டது. இத்தனை மாற்றங்களும் சற்றொப்ப ஒரு கால்நூற்றாண்டுக்குள்
 என் கண் முன் நிகழ்ந்துவிட்டன. இந்த மாற்றங்கள் சமூகத்தளத்தில்
 ஆண் பெண் உறவுகளையும் குடும்பம் என்ற நிறுவனத்தின்
 தூண்களையும் ஆட்டிக்கொண்டு தான் இருக்கிறது.
நெகிழ்ச்சி தன்மை இருந்தால் மட்டுமே
இருத்தல் இனி சாத்தியப்படும் என்ற நிலைக்கு
மனித உறவுகளைத் தள்ளிவிட்டது.

இப்படியான பின்புலத்தில் எழுதப்பட்ட ஒரு நாவல்
 அண்மையில் நான் வாசித்த "மணல் கடிகை"
தமிழினி பதிப்பகம் மீதும் பதிப்பகத்தின் வசந்தக்குமார் மீதும்
 எப்போதும் எனக்கு நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையை இப்புதினம் மீண்டும் உறுதி செய்திருக்கிறது. நாவலாசிரியர்  எம்.கோபாலகிருஷ்ணன் இந்த நாவல் மூலமாக மட்டுமே என் வாசிப்ப்புக்கும் அறிமுகத்திற்கும்
வந்திருக்கிறார்.
திருப்பூர் என்ற தொழில்நகரமே இந்த நாவலின் முதன்மையான கதைப்பாத்திரம். தறி நெய்து கொண்டிருந்த திருப்பூர் எப்படி
 "டாலர் சிட்டியாக" மாற்றம் பெறுகிறது..
தறியில் சட்டைப்போடாமல் வியர்வை நாற்றத்துடன்
இருக்கும் ஆணின் உடலை கலவியில்
வெறுக்கும் பெண்ணுடல் கதையின் ஆரம்பப்புள்ளி. கதை ஓட்டத்தில் கதைக்களமும் கதைக்காலமும்  கதை நிகழ்வுகளைத்
தீர்மானிக்கின்றன. அந்த சூத்திரத்தை மிகவும் வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறது இப்புதினம்.
 சமகால அரசியல் கதைக்கருவுக்கு இன்னும் வலு சேர்த்திருக்கிறது.
 எம் ஜி ஆர் என்ற நிஜக்கதை நாயகன், அக்காலத்தில் வாழ்ந்தப்
பெண்களின் உணர்வுநிலையை எந்தளவுக்குப் பாதித்திருந்தார்
 என்பதை மிகவும் கூர்மையாக
பதிவு செய்திருக்கிறது. புணர்ச்சியில் கண்களை
மூடிக்கொண்டிருக்கும் அவள்களில் மனக்கண்ணில்
 எம்ஜிஆர் மட்டுமே ஆண்மகனாக எப்போதும் இருக்கிறார்.
 அவள்களைத் தொடும் கணவனாகட்டும் காதலனாகட்டும்
 அவள்களின் மனக்கண்ணில் எம்ஜிஆராக மட்டுமே
இருப்பதால் அவன்களின்சுயம் காயப்படுகிறது.
 லிங்கமையவாதம் உடைபடுகிறது.
ஆண் உடலின் ஆதிக்கத்தை பெண்ணின் மவுனங்களே சிதைக்கின்றன.
தொழில் நகரத்தில் இயங்கும் பொதுவுடமை
 இயக்கமும் இலக்கியப் போக்குகளும் கதைப் பாத்திரங்களின் உரையாடல்களின் வழி விவதாங்களை முன் வைக்கின்றன.
"பேசும் போதெல்லாம் புரிகிற  மாதிரி பேசும் நண்பன்,
எழுதும்போது மட்டும் ஏன் இப்படி எழுதுகிறான்"
என்று தன் எழுத்தாள நண்பன்  சண்முகம் (பரதேசி )பற்றி நண்பர்கள்
நினைக்கிறார்கள்.

தெருவிலும் வீடுகளிலும் ஓடிக்கொண்டிருந்த தறிகள்
காணாமல் போகின்றன.
ஆண்களும் பெண்களும் பனியன் கம்பேனிக்கும்
 பிரா கம்பேனிக்கும் வேலைக்குப் போகிறார்கள்.
சனிக்கிழமை சம்பளம் வாங்கியவுடன் கிராமத்திலிருந்து
 வந்த அவர்களுக்கு சில கனவுகள் நனவாகின்றன.
சினிமா தியேட்டருக்கு இரண்டாவது காட்சி படம் பார்க்கப்
போகிறார்கள். இரவும் பகலும் ஆணும் பெண்ணும் இணைந்து வேலைப்பார்க்கும் இடங்களில் பெண்ணுடலின் அருகாமை
ஆணுடலின் அவஸ்தை இரு உடல்களும் தம்தம் பசியைத்
தீர்த்துக் கொள்ளும் தருணங்கள், அதில் காணாமல் போகும் கற்பு
கத்தரிக்காய் தூய்மைவாதங்கள் , திருமணத்திற்கு முன் சகஜமாக எவ்விதமான குற்றவுணர்வுமின்றி ஆண் பெண் உடலுறவு
கொள்ளும் நிலை
 இதனால் விளையும் ஆணின் உளவியல் சிக்கல்கள்
என்று கதை மிகவும் கனமுள்ளதாக  ...

ஆனால் கதை முழுக்கவும் ஆண்களின் பார்வையில் மட்டுமே  ..விரிகிறது.
அதனால் தான் ஆண் தொட்டவுடன் பெண் அவனுடன்
படுத்துவிடுகிறாளோ என்னவோ.. !
இம்மாதிரியான சில சினிமாத்தனமான கற்பனைகளும்
கதையில் உண்டு.

ஒரு தொழில் ஆரம்பம் என்னவெல்லாம் மாற்றங்களைக்
 கொண்டுவரும் என்பதை மிகவும் துல்லியமாக இப்புதினம் பேசுகிறது. பனியன் கம்பேனிகள், அதை ஏற்றுமதி செய்யும்
ஏற்றுமதியாளர்கள், துணி கழிவுகளை வாங்கி மறுசுழற்சி
 செய்பவர்கள்,   சாயபப்ட்டறைகளின் கழிவுகள் கலந்து ஒரு நதிநீரே பாழாகிப்போன அவலம், சிறுசிறு கம்பேனிகளுக்கு
நிதி உதவி அளிக்கும் லேவாதேவி பிசினஸ்,
மாதச்சம்பளக்காரனுக்கு அதீத ஆசையை உருவாக்கும்
சிட்பண்ட்ஸ், சிட்பண்ட் ஏமாற்றுகள், சாலையொர தேநீர்க்கடைகள்,
அங்கே போடப்படும் ஆம்லெட், ஆம்லெட் தேவைக்கான முட்டை,
கோழி வளர்ப்பு .., சிறுதொழில் முதலாளிகள்
பெரும்பணக்காரர்கள் ஆவதும், அவர்கள் தங்கள் அந்தஸ்த்தைக் காட்ட விலையுயர்ந்த கார்களை லோன் போட்டு வாங்குவது, அவர்களுக்கு லோன் கொடுக்க இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிகளின் கிளைகளும் திருப்பூரைத் தேடி வருதல், இந்த மாற்றங்களில் ஒட்டமுடியாமல்
தனித்துவிடப்படும் மனம் ஆன்மிகம் பேசி ஆசிரமம் நிறுவி ..
ஒன்றிலிருந்து ஒன்றாக திருப்பூரைச்
சுற்ரிய மணல் கடிகை.
நாவல் விரும்பி வாசிக்கும் வாசகர்கள்
கட்டாயம் வாசிக்க வேண்டிய புதினத்தில் ஒன்று மணல் கடிகை.
வாழ்த்துகள் நாவலாசிரியர் எம். கோபாலகிருஷணன் அவர்களுக்கு
வெளியீடு : தமிழினி பதிப்பகம்
பக்: 544
விலை ரூ 400.




2 comments:

  1. ஆய்வு நன்று! த ம 1

    ReplyDelete
  2. சிறப்பான அறிமுகம்

    தாங்கள் https://seebooks4u.blogspot.com/2017/08/blog-post.html இல் வெளியிட்டுள்ள மின்நூல்களை 10,000,000 வாசகர்களுக்குப் பகிர்ந்து உதவுங்கள். என்னங்க... இந்த உதவியைத் தானே கேட்கிறேன்.

    ReplyDelete