Friday, August 18, 2017

திமுக வின் எதிர்காலம் அதிமுக கையில்...

திமுக வின் எதிர்காலம் அதிமுக கையில் !
அரசியல் கட்சிகளின் செல்வாக்கு இரண்டு வகையில் உண்டு.
ஒன்று ஆளுமை மிக்க தலைவர்./ தலைமை வழிபாடு
இன்னொன்று: அரசியல் சித்தாந்தம்.
காங்கிரசில் நேரு, இந்திரா, ராஜீவ்காந்தி என்ற பிம்பங்கள்
 தலைமை வழிபாட்டு தளத்தில் இருந்தவர்கள். 
அதன்பின் அந்த இடத்தை ராகுல்காந்தியால் அடைய முடியவில்லை.
 காங்கிரசின் பின்னடைவுக்கு இதுவே மிக முக்கியமான காரணம்.
பிஜேபியைப் பொறுத்தவரையில் நாம் விரும்பாவிட்டாலும் நாம் விரும்பாத
சில அரசியல் சித்தாந்தங்கள்..கொண்டவர்கள். அதாவது
 இந்துத்துவா கோட்பாடுகள் உண்டு. அவர்களிடம் பிற  அரசியல்
கட்சிகளுடன் ஒப்பிடும் போது தலைமை வழிபாடு குறைவு தான்.
. இன்று மோதி மோதி என்று கூட்டம் அலைமோதினாலும்
 நாளையே கூட வாஜ்பாய் அவர்கள்  இன்று இருப்பது போல 
மோதியும் ஒதுங்கி இருக்கும் காலம் வரலாம். 
அப்படி ஒருநிலை வந்துவிடக் கூடாது என்று 
மோதி தனிப்பட்ட முறையில் தன் தலைமையை
ஆகச்சிறந்த பிஜேபி ஆளுமையாகக் காட்டுவதில் முனைப்பாகவும்
 கவனமாகவும் இருக்கிறார். (இதுவும் கவனிக்கப்பட வேண்டியதுதான்)

இடது வலதுசாரித் தோழர்களுக்கு தலைமை வழிபாடு இல்லை.
 தமிழகத்தைப் பொறுத்தவரை கட்சிகளை விட தனிமனித
 தலைமை பிம்பங்களுக்கே முக்கியத்துவம் உண்டு. மரியாதை உண்டு.
 திமுக வின்  அறிஞர் அண்ணா, அதன் பின் கலைஞர் கருணாநிதி,
அதிமுக வில் எம்ஜிஆர், ஜெயலலிதா ,
 திராவிட அரசியலுக்கு முன் காங்கிரசின் பெருந்தலைவர் காமராச்ர்
.. இவர்கள் அனைவருமே தாம் சார்ந்த அரசியல் கட்சியின்
 மூலம் நுழைந்தவர்கள் தான் என்றாலும் அவர்களுக்கென்று
 தனிப்பட்ட ஆளுமையை வளர்ந்துக் கொண்டவர்கள்.
தனி மனித பிம்பங்களாக சமூகத்தில் கொண்டாடப்பட்டவர்கள். 
அவர்களுடைய பிம்பங்கள் முன்னிலைப் படுத்தப்பட்டு 
அவர்களின் கட்சி அவர்களின் பிம்பங்களின் சாயலாக இருந்தது.
இப்போது இந்த பிம்பங்களின் இடம் தான் ஒட்டுமொத்தமாக
 காலியாக இருக்கிறது.
திமுக வின் செயல்தலைவர் ... உண்மையில் திமுக வின் 
தலைமைத்துவ பிம்பமா இல்லையா என்பது அவருக்கே 
சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது. வாரிசு அரசியலில் அவருடைய இடத்தை வருங்காலம் மட்டுமே தீர்மானிக்க முடியும்.
அதிமுக வைப் பொறுத்தவரையில் "ஜெ"வின் மறைவுக்குப் பின்
 தலைமை பிம்பம் .. அந்த இடம் ..  காலியாக இருக்கிறது. 
இனி அந்த இடத்திற்கு எவரும் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. 
அதிமுக அரசியல் தன் கட்சிக்கு விசுவாசிகளை வளர்த்த அளவுக்கு
 தலைமைகளை உருவாக்கவில்லை அல்லது உருவாகும் சந்தர்ப்பத்தைக் கொடுக்கவில்லை.
அரசியல் சித்தாந்தங்களைப் பொறுத்தவரை... 
அதிமுக , திமுக இரு கட்சிகளுக்கும் ஒருவரை ஒருவர் எதிர்த்து நிற்பது
 என்பதை விட்டால் வேறு என்ன பெரிய அரசியல் சித்தாந்தங்கள் தற்போது 
 நடைமுறையில் இருக்கின்றன என்பது எவருக்கும் தெரியாத ரகசியம்.
அப்படி ஒன்று இருந்தால் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். 
எனவே தான் திமுக எதிர்ப்பு என்பதை முன்வைத்து அரசியலுக்கு வந்த
 அதிமுக கட்சி அந்த திமுக எதிர்ப்பை விட்டுவிட்டால்
அது என்னவாக இருக்கும்???
எதிர்ப்பதற்கு அதிமுக இல்லை என்றால் திமுக காரர்கள் என்ன செய்வார்கள்?
எதை வைத்து அரசியல் நடத்துவார்கள்?!!

காங்கிரசு அல்லது பிஜேபியை எதிர்த்து அரசியல் செய்யலாம். 
செய்வார்களா..?
ஊழல் வழக்குகள், அது இதுனு தலைக்கு மேல் நிறைய சுருக்கு கயிறுகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன.
அதாவது தேசியக்கட்சிளாக காங்கிரசும் பிஜேபியும் தமிழகத்தில்
 காலூன்ற முடியாமல் இருந்ததற்கு காரணம் 
தமிழகத்தின் திராவிட அரசியல் மட்டுமல்ல,
 திராவிட அரசியல் கட்சிகள் உருவாக்கிய வலிமையான
 தலைமை பீட வழிபாடுகள் மிக முக்கியமான காரணமாக இருந்திருக்கின்றன.

தலைமை பீட வழிபாடுகள் (HERO WORSHIP) தவறு
 என்று நாம் சித்தாந்தம் பேசலாம்.
ஆனால் அவர்கள் தான் தமிழக அரசியலில் தேசியக்கட்சிகள் 
நுழைவதற்கு இடம் கொடுக்காத தடுப்புச் சுவர் போல
 இருந்திருக்கிறார்கள்.
இன்று சுவர்கள் எல்லாம் இடிந்துப் போய்விட்டன.
இடிந்த சுவர்களின் நிழலில் கழுதைகள் இளைப்பாறிக் 
கொண்டிருக்கின்றன ..!
அதனால் தான் ரஜினிகாந்தும் கமலஹாசனும் 
எப்போதும் நடக்காத ஊழல் என்னவோ இப்போது நடந்துவிட்டதாக
 தூய்மைவாத அரசியல் பேசுகிறார்கள்... 
எம்ஜிஆர் ஆகிவிடலாம் என்ற நப்பாசையில் தான்.

அதிமுகவின் எடப்பாடி அணிக்கோ ஓபிஎஸ் அணிக்கோ
 தினகரனுக்கோ ஏன் சிறையில் செக்கிழுக்கும் சின்னம்மாவுக்கோ 
அதிமுக கட்சி தேவைப்படுவதை விட திமுக வுக்குத் தான் அதிமுக கட்சி பெரும் தேவையாக இருக்கிறது.

2 comments:

  1. நல்லதொரு அலசல்.
    எம்ஜிஆர் என்கின்ற நடிகரை புரச்சி தலைவராக்கி, ஜெயலலிதாவை புரச்சி தலைவியாக்கி பார்த்து மகிழ்ந்த மக்கள், ஓவியா ஆமி அமைத்த மக்கள் மீதான ஒரு நம்பிக்கை தான் ரஜினிகாந்துக்கும்,கமலஹாசனுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.

    ReplyDelete
  2. நல்ல ஒரு பதிவுக்கு ஒரு கருத்துக்களும் வரவில்லை!
    Hero Worship கொண்ட சமூகம் என்று உண்மையை சொன்னீர்கள்.
    தனது உண்மையை பார்க்க மறுக்கும் சமூகம் இது.

    ReplyDelete