Monday, November 25, 2013

சச்சினின் பாரதரத்னாவை நிராகரிக்கும் ஓர் இந்திய அன்னை




சச்சின் டெண்டுல்கர் ஏகப்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கிறார். அதற்காக அவர் சம்பாதித்த தொகை பல கோடிகளைத் தாண்டும்,. ஆனால் அண்மையில் இந்திய அரசு சச்சின் டெண்டுல்கர் தன் 24 வருட கிரிக்கெட் ஆபிஸிலிருந்து விருப்ப ஓய்வு பெறும் நாளில் அவரை இந்தியாவின் தலைசிறந்த விருதான 'பாரத ரத்னா" விருதுக்கான அம்பாசிடராக்கிவிட்டது. சச்சின் டெண்டுல்கர் இனி லிட்டில் மாஸ்டர் சச்சின் அல்ல. பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கர்.
அவர் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த உயரிய விருதை இந்திய அன்னையர்களுக்கு சமர்ப்பணம் செய்திருப்பதாக பத்திரிகை செய்திகள் சொல்கின்றன. சச்சின் உளப்பூர்வமாகவே இந்த சமர்ப்பணத்தைச் செய்திருக்கலாம். எனினும்  சச்சின், நானும் ஒரு இந்திய அன்னை என்ற நிலையில் நீங்கள் கொடுத்திருக்கும் இந்த சமர்ப்பணத்தை மனம் உவந்து ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்கள் சமர்ப்பணத்தை ஓர் இந்திய அன்னையாக நிராகரிக்கும் உரிமை எனக்கிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
சச்சின், உங்கள் கிரிக்கெட் விளையாட்டுகளைப் பற்றியோ அதில் எந்தளவுக்கு நீங்கள் நம் இந்திய திருநாட்டுக்காக விளையாடினீர்கள் என்பது குறித்தோ பத்திரிகைகளில் விளையாட்டு பகுதியில் விலாவரியாக நிறையவே எல்லோரும் எழுதி தீர்த்துவிட்டார்கள். எனக்குப் புதிதாக சொல்ல எதுவுமில்லை, சச்சின்.
நீங்கள் உங்கள் வசதிக்கு ஏற்றபடி உங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர். இந்திய மக்கள் அனைவரும் உங்களை ஒரு கிரிக்கெட் வீரராக மட்டுமே அடையாளம் கண்ட போதும் அதை நீங்கள் மிகவும் நன்றாக அறிந்திருந்தும் வாய்க்கூசாமல் நான் ஒரு மாடலிங் நடிகன் என்று உங்களைச் சொல்லிக்கொண்டீர்கள், நினைவிருக்கிறதா சச்சின். இப்போதும் அதற்கான கோப்புகள் இந்திய வருமானவரித்துறையிடம் இருக்கின்றன.
2001- 2002, 2003, 2004 உங்கள் வருமானவரித்துறை கோப்புகளைப் புரட்டிப் பாருங்கள்!
இ எஸ் பி என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், பெப்சி, வெளிநாடுகளில் பணம் எடுக்கும் விசா கார்ட் (ESPN STAR SPORTS, PEPSICO, VISA FOREIGN CURRENCY) கம்பேனிகளின் விளம்பரங்களில் வந்ததற்காக (நடித்ததற்காக என்று சொல்வதே தவறு..) உங்களுக்கு கிடைத்த வருமானம் 5,92,31, 211/ அந்த வருமானத்திற்கு நீங்கள் கட்ட வேண்டிய வரி 2,08,59,707/ ஆனால் நீங்கள் உங்கள் வருமானத்திற்கான வரியைக் கட்ட மறுத்தீர்கள், அத்துடன் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் வாதம் செய்தீர்கள். அந்தச் சூழலில் தான் உங்கள் திருவாய் மலர்ந்து, என் தொழில் மாடலிங் நடிப்பு என்று சொன்னீர்கள்.
அதாவது இந்திய அரசுக்கு கட்ட வேண்டிய வரியில்  சலுகை பெற இல்லாத ஒன்றை இருப்பதாக வாதம் செய்தீர்கள்! உங்கள் கூற்றுப்படி உங்கள் தொழில் - நடிப்பு, நீங்கள் நடிகர். அதிலிருந்து வரும் வருமானத்தை தான் முதன்மையான வருமானமான காட்டினீர்கள்! கிரிக்கெட் மூலம் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை "பிற வருமானங்கள்" (INCOME FROM OTHER SOURCES)என்றல்லவா சொன்னீர்கள்! he is a popular model acts in various products of various companies என்று உங்கள் வருமான வரி ஆலோசகர்கள் வாதிட்டார்களே!
நீங்கள் கிரிக்கெட் வீரர் இல்லை என்றால் வேறு யார் தான் கிரிக்கெட் வீரர்? நீங்கள் கிரிக்கெட் வீரர் என்பதால் உங்களைத் தங்கள் விளம்பரங்களில் அவர்கள் பயன்படுத்திக்கொள்ள விரும்புகின்றார்களே தவிர நீங்கள் ஒரு மிகச்சிறந்த மாடலிங் கலைஞர் என்பதால் அல்ல என்று வருமான வரித்துறை அதிகாரிகள் அல்லவா உங்களிடம் சொல்ல வேண்டி வந்தது? ஏன் சச்சின்? கிரிக்கெட் உங்கள் அடையாளம், உங்கள் உயிர்மூச்சு என்றால் அதை எப்படி உங்கள் வரிச்சலுகைக்காக இரண்டாம் நிலைக்குத் தள்ளினீர்கள்?
அதன் பிறகும் நீங்கள் தொடர்ந்து வரிச்சலுகைப் பெற என்னவெல்லாம் செய்தீர்கள் சச்சின்?
ரூ. 57,969/ உங்கள் பணியாட்களின் நலநிதி
ரூ 50,000/ தொலைபேசி செலவு
ரூ 142,824/ உங்கள் கார்ச்செலவு...
இதற்கெல்லாம் கூட வரிவிலக்கு கேட்டீர்கள்.. இறுதியில் இதெல்லாம் உங்கள் குடும்பச்செலவு என்று இந்திய வருமான வரித்துறை கொஞ்சம் கறாராக சொல்லிவிட்டது.
சரி இதெல்லாம் இருக்கட்டும், உங்களுக்குப் பரிசாகக் கிடைத்த ஃபிராரி காருக்கு வரி கட்ட மறுத்தீர்களே எவ்வளவு கோபத்துடன் ஊடகங்களைச் சாடினீர்கள்? இறுதியில் உங்களுக்கு அந்தக் காரைப் பரிசாகக் கொடுத்த ஃபியட் அல்லவா அந்த வரியைக் கட்டினார்!
பரிசுப் பொருட்களுக்கு வரி வாங்குவது சரியல்ல என்றே வைத்துக்கொண்டாலும் பரிசாக வாங்கிய அந்தக் காரை குஜராத்தில் ஒரு வியாபாரிக்கு விற்றுவிட்டீர்களே! அந்தக் காரை விற்று வந்த வருமானத்தை எந்தக் கேபிடல் கணக்கில் காட்டி எப்படி சமாளித்தீர்கள்?
நல்ல இந்தியக் குடிமகன் வருமான வரியை உடனே கட்ட வேண்டும். அரசை ஏமாற்றாமல் கட்ட வேண்டும், சரியாகக் கட்ட வேண்டும், என்றெல்லாம் இந்திய அரசு எங்களைப் போன்றவர்களுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.. அதே இந்திய அரசு தான் உங்களுக்கு
பாரத ரத்னா வழங்கி இருக்கிறது!
சஹாராவின் க்யு ஷாப் விளம்பரத்தில் நீங்களும் வந்தீர்கள்.. அதுவும் செபி அந்த நிறுவனத்தின் மீது சந்தேகப்பட்டு யாரும் அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டாம் என்று அறிவித்தப் பின்னரும் உங்கள் விளம்பரங்கள் ஓடிக்கொண்டு இருந்தன! ஒரு பேச்சுக்காவது சஹாராவின் மீது உங்கள் வருத்தத்தைப் பதிவு செய்திருப்பீர்களா? அதுமட்டுமா சச்சின், ஹோம் டிரேட் விளம்பரத்தில் உங்களைப் பார்த்து வீடு வாங்க தங்கள் சேமிப்பைக் கட்டி வீடும் கிடைக்காமல் நடுவீதிக்கு வந்தவர்களைப் பற்றி என்றைக்காவது வருத்தப்பட்டிருப்பீர்களா சச்சின்?
நீங்கள் நன்றாக விளையாண்டீர்கள், அதற்கு மிக அதிகமாகவே உங்களுக்குச் சம்பளம் கொடுக்கப்பட்டது. கிரிக்கெட் மட்டை வியாபாரத்தில் நீங்கள் கொடி கட்டிப் பறந்தது போல இனி எவராலும் பறக்க முடியாது! வாய்ப்புகளும் வசதிகளும் உங்கள் வாசலில் கொட்டியது போல யாருக்கும் வாய்த்ததில்லை. நீங்கள் எப்போதும் இந்தியாவுக்காக விளையாடியதாக எல்லோரும் சொல்கிறார்கள், நீங்களும் கூட இப்போதெல்லாம் அடிக்கடி அப்படித்தான் சொல்லிக்கொண்டீர்கள்.. ஆனால் உங்கள் சட்டைக்காலரிலிருந்து கை, கால், சட்டைப்பை என்று உங்கள் உடலெங்கும் விளம்பரங்களைச் சுமந்து கொண்டுதானே விளையாடிக் கொண்டிருந்தீர்கள்!
இதெல்லாம் பெரிய குற்றச்சாட்டுகள் இல்லை என்கிறீர்களா சச்சின்? அப்படித்தான் .. நீங்கள் வெறும் கிரிக்கெட் வீரராக, ஏன் கிரிக்கெட்டின் அடையாளமாக மட்டுமே இருக்கும் வரை இதெல்லாம் இந்த விளம்பர உலகத்தின் ஓர் அங்கமாகவே இருக்கும். ஆனால் இந்தியாவின் பாரத ரத்னா சச்சினுக்கு?


7 comments:

  1. நன்றாகச் சொன்னீர்கள் கவிஞரே!

    “நீங்கள் நன்றாக விளையாண்டீர்கள், அதற்கு மிக அதிகமாகவே உங்களுக்குச் சம்பளம் கொடுக்கப்பட்டது. கிரிக்கெட் மட்டை வியாபாரத்தில் நீங்கள் கொடி கட்டிப் பறந்தது போல இனி எவராலும் பறக்க முடியாது! வாய்ப்புகளும் வசதிகளும் உங்கள் வாசலில் கொட்டியது போல யாருக்கும் வாய்த்ததில்லை. நீங்கள் எப்போதும் இந்தியாவுக்காக விளையாடியதாக எல்லோரும் சொல்கிறார்கள், நீங்களும் கூட இப்போதெல்லாம் அடிக்கடி அப்படித்தான் சொல்லிக்கொண்டீர்கள்.. ஆனால் உங்கள் சட்டைக்காலரிலிருந்து கை, கால், சட்டைப்பை என்று உங்கள் உடலெங்கும் விளம்பரங்களைச் சுமந்து கொண்டுதானே விளையாடிக் கொண்டிருந்தீர்கள்!”
    என்பதுதான் உண்மை. ஆனால் நீங்கள் எழுதும்போது இந்தப் பத்திக்கு முந்திய பத்தியை இதன்பிறகு போட்டிருக்க வேண்டும்.
    எனினும் தாய்க்குலத்தின் பாரதரத்னா முன்மொழிவுச் சிந்தனையை இந்தியத் தந்தைக்குலத்தின் சார்பாக நான் வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  2. 100% TRUE.. hERE I WANT TO TELL YOU ABOUT THE PADMASREE AWARDS. 2011 MIMICRY ARTISTE JAYARAM GOT PADMASREE AWARD FOR NOTHING.. WHO DID THIS KOLAI VERI TO TAMIL KALAI ULAKAM? WHO RECOMMENDED HIM FOR THIS TITLE? EVEN KERALA GOVT KEPT QUIET ....THEY ARE LAUGHING AT THIS ACT OF TAMILNADU

    ReplyDelete
  3. சச்சின் பணிவோடு மறுக்கலாம் . அதுவே நல்லது,

    ReplyDelete
  4. So you ppls claim that every one is filing taxes perfectly...99.99% are not filing thier actual IT...if means I have paid my taxes duely perfect...is that funds properly used by the government no....All our funds have been as scam and open robery by the management....in many aspect(3G....etc.....)....

    ReplyDelete
  5. மிக அருமையான பதிவு, ஆனால் சச்சினின் ரசிகர்களால் இவ்வுண்மைகளை ஜீரணிக்க முடியாது. மற்றவர்கள் எல்லோரும் யோக்கியமா என்று கேள்வி கேட்பவர்களே, இவரும் இன்னொரு திருடன் தான் என்று இந்த பதிவில் சொல்லும் கருத்தை நீங்களும் ஒப்புக் கொள்கிறீர்கள் என்பதை உணர்கிறீர்களா?

    \\சச்சின் டெண்டுல்கர் இனி லிட்டில் மாஸ்டர் சச்சின் அல்ல. பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கர்.\\ பேரோட சேர்த்து போட்டுக் கொள்ளக் கூடாதாம், விருதோடு பணம் எதுவும் கிடையாது, இந்த விருதை வைத்து ஒரு ரயில் டிக்கட் கூட புக் செய்ய முடியாது. புர் ...........


    ReplyDelete