Tuesday, December 3, 2013

பாவம், திருமதி நரேந்திர மோதி



நரேந்திர மோதிக்கு திருமணம் ஆகிவிட்டதா , இல்லையா?
அவருக்கு காதலியர் உண்டா, கிடையாதா?
இதைப் பற்றி விமர்சிப்பதை நான் விரும்பவில்லை.
எந்த ஒரு தனிநபரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதில்
எப்போதும் சில நடைமுறை சிக்கல்கள் உண்டு.
இங்கே நான் விமர்சனப்படுத்த விரும்புவது தனிநபரின் வாழ்க்கையுடன்
அந்த தனிநபர் ஏற்றுக்கொண்டிருப்பதாக சொல்லப்படும் அல்லது
நம்பப்படும் தத்தவம் குறித்த விசாரணை தான்.

ஜசோதாபேன் ( JASHODABEN) அவர்கள் தான் திருமதி நரேந்திர மோதி.
அவருக்கும் மோதிக்கும் திருமணம் ஆகி ஒரு சில நாட்களில் தன்
பிறந்தவீட்டுக்கு அனுப்பப்பட்டவர் ஜசோதாபென். திருமணம் நடக்கும்போது
அந்தப் பெண்ணின் வயது 18, ஏழோ எட்டோ தான் படிப்பு. பார்க்க ரொம்பவும்
சுமாராக இருப்பதாக அந்தப் பெண்ணுக்கே ஒரு தாழ்வு மனப்பான்மை.
தன் கணவர் மோதி அளவுக்கு தான் அழகானவளில்லை, அறிவுள்ளவளில்லை
என்று இப்போதும் அந்தப் பெண் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

தன் பிறந்த வீட்டுக்கு அனுப்பப்பட்ட அந்தப் பெண் அதன் பின் 1972ல்
எஸ் எஸ் சி தேர்வு எழுதி பாஸாகி ஆரம்பபள்ளிக்கூட ஆசிரியர் வேலைக்குப்
படிக்கிறார். அதன்பின் அகமதாபாதி டெக்வாலி பள்ளிக்கூடம், ரூபல் கிராமத்தில் இருக்கும் பஞ்சாயத்து போர்ட் பாடசாலை என்று அவர் ஆசிரியர் பணி தொடர்ந்தது. தற்போது பணியிலிருந்து ஓய்வுப் பெற்றுவிட்ட ஒர் ஆசிரியை.

மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் தகரக்கூரை வேய்ந்த வீட்டில் வாழ்க்கை
தனியாக. 100 சதுர அடியில் வாடகை வீடு. கழிவறையோ குளியலறையோ
கிடையாது. தண்ணீருக்கு வெளியில் தான் வரவேண்டும். அதிகாலையில் விடியலுக்கு முன் எழுந்து வீட்டுக்கு வெளியில் குளித்தால் தான் குளியலுக்கு
சாத்தியப்படும் வாழ்க்கை.

அந்தப்பெண்ணை எந்த நிருபரும் சந்திக்க வழியில்லை. அதையும் மீறி சந்தித்தவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். இசுலாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் தன் ஆசிரியர்
தொழில் மூலம் அந்த மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர்.
வேலைப்பார்த்த கிராமங்களிலும் சொந்த ஊரிலும் திருமதி ஜசோதாபென் நரேந்திரமோதி என்றே அறியப்பட்டவர்! அவரைச் சுற்றிய கண்காணிப்பு வலையம் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறது. அவரோ தன்னைப் பற்றி
எவரிடமும் அதிகம் சொல்லிக்கொள்ளாமல் தன் கணவர் நரேந்திரமோதி
கலந்து கொள்ளும் கூட்டங்களில் தூர நின்று பார்த்துச் செல்லும் பெண்ணாக
இருக்கிறார்.

45 வருடங்களுக்கு மேலாக கணவனைப் பிரிந்து வாழும் வாழ்க்கையில்
அவரை வாழ வைத்துக்கொண்டிருப்பது ஆருடங்களும் ஆன்மிகமும் தான்.
ஜோசியக்காரர்கள் எல்லோரும் " கட்டாயம் உங்கள் கணவர் உங்களை அழைத்துக் கொள்வார்... அந்த நாள் வரும்"என்று உறுதியாகச் சொல்கிறார்களாம். அதை அப்படியே நம்பி இந்தப் பெண்ணும் அந்த அழைப்பு
வரும் என்று காத்திருக்கிறார்.

கணவரின் அதிகாரவட்டம் மிகவும் பெரியது என்பதை அறிந்தவர்தான் இந்தப் பெண். பல நேரங்களில் அச்சப்பட்டும் சிலநேரங்களில் அதையும் மீறி எதையோ
நம்பி இன்றும் காத்திருக்கிறார்.

இந்தச் செய்தி வெளிவந்தவுடன் மோதி பக்தர்கள் சொன்ன விளக்கம்,
"அவர் திருமணம் செய்து கொண்டார், ஆனால் முதலிரவு, இரண்டாம் இரவு..
இத்தியாதி எதுவும் நடக்கவில்லை" என்பது தான்.
இப்படிச் சொல்வதன் மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் ?

எது எப்படியோ.., இந்து தர்மம் திருமணத்தை உடலுறவுக்கு அப்பால் எடுத்துச்
செல்வதாக சொல்கிறது. அது மட்டுமல்ல, ஒரு மனைவியைக் காப்பாற்றுவதும்
கணவனின் கடமை என்பதை மிகவும் உறுதியாகச் சொல்கிறது இந்து தர்மம்.
இந்து தர்மம் இன்னும் என்னவெல்லாம் சொல்கிறது என்பதை என் போன்றவர்களைவிட மோதியும் மோதியின் பக்தர்களும் நன்கு அறிவார்கள்.

மற்ற தலைவர்களின் லட்சணமெல்லாம் தெரியாதா? என்று கேட்காதீர்கள்.
தெரியும். என் கவலை எல்லாம், தான் தூக்கிப்பிடித்திருக்கும் இந்து தர்மத்தின்
முதல் தர்மத்தையே காப்பாற்ற தவறி விட்டாரோ நரேந்திரமோதி என்பது தான்.

1 comment: