பத்திரிகை, புத்தகம் .. வெளியீடுகள் எப்போதும்
மும்பையில் நடந்துக்கொண்டிருக்கின்றன.
பத்திரிகை - நாளிதழோ வார மாத இதழ்களோ வெளியிடும் போது
யாரை வைத்து வெளியிடுவது என்பது எப்போதுமே வெளியிடுபவருக்குப்
பிரச்சனையாகத்தான் இருக்கிறது.
யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது?
முன்னாள் தலைவருக்கா? இன்னாள் தலைவருக்கா?
யார் முதல் பிரதியை வாங்குவது?
யாரை விமர்சனம் செய்ய சொல்லலாம்?
அல்லது யார் விமர்சனம் செய்தால் பிரச்சனைகள் இருக்காது?
யார் யாரெல்லாம் வாழ்த்துரையில் இருக்கிறார்கள்?
வாழ்த்துரையில் இல்லாத பெயர்களை முன்னிலையில் போட்டுவிடலாம்.
முன்னிலையிலும் விடுபட்டவர்களை சிறப்பு அழைப்பாளர்கள் போட்டுவிடலாம்
இதில் முன்னிலை பட்டியலுக்கும் சிறப்பு அழைப்பாளர்கள் பட்டியலுக்கும்
என்ன வேறுபாடு? என்று யாரும் யோசித்து யோசித்து மண்டை காய வேண்டாம். !
இப்படியாக சகலவிதமான முன்னெச்சரிக்கையுடன் தயாரிக்கப்படும் அழைப் பிதழில் தங்கள் பெயர் எத்தனாவது வரிசையில் யார் யாருக்குப் பின்
அச்சிடப்பட்டிருக்கிறது என்று பார்த்து வருத்தப்பட்டு தங்களின் ரேட்டிங்
இறங்கிவிட்டதாக நினைத்து அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள்
எங்கள் மும்பைவாசிகள் சிலர் ..
பத்திரிகை வெளியீட்டு விழாவில் வாழ்த்துரை என்ற
பெயரில் "உன்னால் பத்திரிகை நடத்த முடியாது" என்று வாழ்த்திவிட்டுப்
போகிறவர்களும் உண்டு. அவ்வளவு நல்ல மனசு அவர்களுக்கு.
தங்கள் தோல்வி அனுபவங்களால் அடுத்தவருக்கு எச்சரிக்கை செய்கிறார்களாம்!
இப்படியான பல காட்சிகள் அடிக்கடி அரங்கேறும் மும்பையில்
சரிதான் போங்கப்பா... நான் இந்த வெளியீட்டு விழா விளையாட்டுக்கெல்லாம்
வரவில்லை. என் "வணக்கம் மும்பை" இதழை தமிழர்கள் அதிகம் வாழும்
தாராவி சாலையில் வெளியிடப்போகிறேன் என்று சொல்லி அப்படியே
நவம்பர் 2 ல் மாலை 5 மணி வாக்கில் தாராவி 90 அடிச்சாலையிலும்
குறுக்குச்சாலையிலும் தன் பத்திரிகையை வெளியிட்டிருக்கிறார்
மும்பை பாமரன். எந்த முன்னறிவிப்பும் இன்றி சாலையில் போன ஒருவரை
அழைத்து " நீங்கள் தான் அய்யா இந்தப் பத்திரிகையை வெளியிடுகின்றீர்கள்!"
என்று சொன்னால் அந்த நபருக்கு எப்படி இருந்திருக்கும்?
பத்திரிகை வெளியீட்டில் அதிரடியாக இப்படி செய்திருக்கும்
வணக்கம் மும்பையின் ஆசிரியரிடம் பத்திரிகையின் நோக்கம் குறித்துக் கேட்டால்
"வணக்கம் மும்பை வாசிக்கிற வாசகன் கொஞ்ச நேரம் வாய்விட்டு சிரிக்கனும்ங்க, லோ லோனு மும்பை டிரெயினில் ஏறி போயி வேலைப் பார்த்திட்டு அலுத்து வற்ற நம்ப ஆள்களுக்கு என். எஸ். கே பாணியில்
ஏதாவது சொல்லிட்டு இருப்போங்க.. சரிதானே !நான் சொல்றது?" என்று
சொல்லிவிட்டு வேகமாக வீரார் டிரெயின் பிடிக்க ஓடுகின்றார்.
No comments:
Post a Comment