Saturday, June 23, 2018

ஸ்டாலினுக்காக ஶ்ரீரங்கத்தில் சுக்ர ப்ரீத்தி யாகமா?!!



தளபதி , திமுக செயல் தலைவர் திரு ஸ்டாலின் அவர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் பாவ கிரஹமாக 
இருந்து தொலைப்பதால் தான் அவருக்கு 
கைக்கு கிடைப்பது வாய்க்கு கிடைக்காமல் 
அல்லாடும் நிலை ஏற்பட்டுவிட்டதாக
 கேரளா ஜோதிட சாம்பிராணிகள் சொன்னதை
அப்படியே நம்பி.. நம்பி.. 
இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று
சொல்கிறார்கள்.. 

தளபதி.. கோவிலுக்குள் நுழையவில்லை!
ஒரு மரியாதை நிமித்தமாக வழியில் போன காரை
கோவில் யானையுடன் அவர்கள் வழிமறித்ததால்
காரை நிறுத்தி பிரசாதத்தை மட்டும் வாங்கிக்கொண்டு
சர் ரென எங்கள் தளபதியின் கார் சென்றது 
என்று  சொல்லிப் பார்த்தாகிவிட்டது!!
..
ஶ்ரீரங்கத்திற்கு ஸ்டாலின் செல்வது 
இது ஒன்றும் முதல்முறை அல்ல!
அங்கேயே தங்கி அவர் தேர்தல் 
பிரச்சாரம் செய்திருக்கிறார்.
அப்போதெல்லாம் அந்தக் கோவில் 
வாசல் பக்கம் போவதைக் கூட தவிர்த்தவர் அவர்.
தற்போது
நான்கு நாட்களாக கோயிலுக்குள் 
சுக்கிர ப்ரீத்தி யாகம் 
நடைபெற்றது. யாகம் முடியும் நாள் சுக்கிரனுக்கு 
உகந்த வெள்ளிக்கிழமையாக இருக்கவே, 
இன்று காலை ஸ்ரீரங்கத்தில் நடந்த 
திருமணத்துக்கு வந்தவர்
 கோயிலுக்குள் வராமல் ரங்கா ரங்கா 
கோபுரம் வரைக்கும் 
வர்ற மாதிரி வந்திட்டுப் போனதாகவும்
ஸ்ரீரங்கநாதருக்கு வெண்மை நிற வஸ்திரம் அளித்து 
இருபத்து ஐந்து பேருக்குத் தானம் கொடுத்ததாகவும்
அவா ஆத்து மாமிகளே சொல்லறா..

இந்தப் பாருங்கோ .. தளபதி..
நீங்களோ நானோ பெரியாரில்லை.
அப்படி இருக்கனும்னு யாரும் கட்டாயப்படுத்தவும்
முடியாது!
ஆனா..
உங்களுடைய  சுக்ர தோஷ பரிகாரத்திற்கு
அவாளுக்கு நீங்க தானம் செய்ததுதான் 
நேக்குப் பிடிக்கலை..!
இந்த மாதிரி செய்தி எதுவும் என் காதிலே விழுந்து
படுத்தற இம்சையிலிருந்து தப்பிக்கவே
இவ்வளவு தொலைவில் வந்து இருந்தா..
இங்கே வரை உங்க சுக்ர ப்ரீத்தி யாகத்தின்
புகை வர்றது.. 
இந்தப் பாருங்கோ..அடுத்த தேர்தலில் நீங்க ஜெயிச்சு
அமோகமா வெற்றி பெற்று முதல்வராகனும்னு தான்
நேக்கும் ஆசை. ஆனா பாருங்கோ..
இப்போ இந்த சுக்ர ப்ரீத்தியாகம் செய்ததால் தான்
நீங்க முதல்வராகிட்டேள்னு 
நானும் நம்ப வேண்டியது
வந்திடுடு டு டு டும்!!  அந்தப் பயம் தான் இப்போ..

சுக்ர மூல மந்திரம்..
ஹிமிகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம்  குரும்
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்ம்யஹ்ம்.

#திமுக_ஸ்டாலின்


Friday, June 22, 2018

MY BOOKS IN Amazon & Kindle




அச்சில் வெளிவந்த என் புத்தகங்கள் சில .
தற்போது மின்னூல்களாக ..
My books in amazon and kindle.
நிழல்களைத் தேடி, ஐந்திணை .. இரு கவிதை தொகுப்புகள்.
தனியறை, பெண்வழிபாடு.. இரு சிறுகதை தொகுப்புகள்
ஊமைத் தசும்புகள், செய்திகளின் அதிர்வலைகள்.. இரு கட்டுரை தொகுப்புகள்.. 
அமேசான் மற்றும் கிந்டில் வாசிப்பில்
என் அனுமதியுடன் தான்.



https://www.amazon.co.uk/Seithigalin-Athirvalaikal-Tamil-Puthiyamaadhavi-ebook/dp/B0711GPJK6


 மற்றபடி என் மொழியாக்க கவிதைகள் தொகுப்பு நூல்
கதவுகள் திறக்கும் வானம் ... என் அனுமதி இன்றி
கீழ்கண்ட தளத்தில் மின்னூலாக இருப்பது தெரியவந்துள்ளது.
m.dailyhunt.in/Ebooks/.../kathavukal-tirakkum-vanam-book-8326...
Translate this page
 Rating: 5 - ‎1 vote




Sunday, June 17, 2018

காலாவில் பயணித்த அப்பாக்கள்...

காலாவில் பயணித்த எம் அப்பாக்கள்
"நான் படிப்பின் மோஸ்தரில் என் அப்பாக்களை விட்டு
விலகினேன்.. காலம் செல்ல செல்ல இச்சமூகம் என்
அப்பாக்களின் உசரங்களைக் காட்டிக் கொண்டே இருக்கிறது!
காலாவை திரையில் பார்த்தேன். (Norwalk AMC IMAX )
நேற்றிரவு தூக்கம் வரவில்லை. காலாவின் வசனங்களில் மட்டுமல்ல
போராட்டங்களிலும் ரத்தங்களிலும் என் அப்பாக்கள் …
அவர்களின் முகம் என்னருகில் வந்தது. அவர்களின் சில பக்கங்களை
நானே புரட்டாமல் இருக்கவே நினைக்கிறேன். அந்தப் பக்கங்களை
காலா என்னைப் புரட்ட வைத்தது. திரையரங்கிலிருந்து வெளியில்
வரும்போது தலை வலிக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு கண்பதி உற்சவம்
கடைசி நாள் .. கையில் ஈரக்குலையை ஏந்திக்கொண்டு
 (ஈரக்குலை என் அம்மாவின் மொழி) இருக்கும் பெண்கள். 
யார் யாரை வெட்டிச் சாய்ப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது!
பெண்கள் அச்சத்துடன் விழித்திருப்பார்கள்.
விடிவதற்குள் அந்தச் செய்தியும் வந்து தொலைக்கும்.
இன்னார் கொலை செய்யப்பட்டார் என்று.
கலவரங்கள் கலவரங்கள் கலவரங்கள்..
எங்கள் வீட்டில் பெரிய சிலம்பு கம்பம் 
நாங்கள் பெரியவர்களாக வளரும் வரை கபோடின் 
மூலையில் சாய்ந்திருக்கும்.. அது எதற்காக என்று
பல  நாட்கள் நான் அறிந்ததில்லை.
ஒரு நாள் அந்தக் கம்பை எடுத்துக் கொண்டு
கை பனியனுடன் ஓடிய என் அப்பா .. 
அதுவரை நான் பார்த்திராத அப்பா. 
அப்பாவுக்கு சிலம்பம் தெரியும் என்பதும்
வர்ண அடிகள் தெரியும் என்பதும் 
அவருக்கு சண்டியர் என்று ஒரு பெயருண்டு என்பதும் 
அதன் பின் அறிந்தக் கதை.
பிரிட்டிஷ்காரன் வங்கியில் வேலை. 
அதற்குரிய மிடுக்கான உடை. 7 மொழிகளைச் சரளமாகப் பேசும் அப்பா... 
இப்படியாகவே இருந்த அப்பாவை அவர்கள் தெருவில் இறங்கிச்
சண்டைப் போட அனுமதித்ததில்லை. 
நீங்க எதுக்கு அண்ணே.. இங்கேல்லாம்? நாங்க பார்த்துப்போம்..
என்பார்கள். கருக்கலில் அப்பாவை வந்து சந்திப்பார்கள்.
இதெல்லாம் அப்பாவின் அரசியலுக்கும் அப்பாற்பட்ட செயல்பாடுகள்.
அப்பாவின் தம்பி பி.எஸ்.கோவிந்தசாமி சேட் .. 
என் சித்தப்பா தான் அன்றைய கள நாயகன்.
நூறு பேரு கையில் கம்பு அரிவாளுடன் வந்தாலும் 
அதே புன்னகையில் .. 
ஒரு கையில் வேட்டி நுனியைப் பிடித்துக் கொண்டு 
“ஏலே.. எங்கல வந்து காட்டறீங்க!”
என்று நிற்பார் பாருங்கள்.. அவர் தான் அன்றைக்கு குட்டிவாடி
 பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதவன்.. 
எங்களுக்கு சொந்த ஊர் பத்தமடை.
அப்பா சிவப்பு சித்தாந்தம் படித்தவர் . கறுப்புச்சட்டைப் போடாத பெரியாரிஷ்ட்.
கறுப்பு சிவப்புக் கொடியை (திமுக )மும்பையில் ஏற்றியவர்.
சித்தப்பா முழுக்க முழுக்க நீல வண்ணத்தில் .. குடியரசுக் கட்சி தலைவர்.
தாராவி கணேசர்கோவில் தர்மகர்த்தாவாக இருந்தவர். ..
எஸ்.கே.இராமசாமி.. (பத்தமடை இவர் தாய்மாமா ஊர். இவர் தம்பிகள் தங்கை
படித்ததெல்லாம் பத்தமடை ஸ்கூலில் தான்)ர்இவரும் என் உறவினர். இன்னொரு சித்தப்பா முறை.
இவர் தாதா தான். இவருடைய முதல் மனைவி இறந்தவுடன் அன்றைக்கு இவர்
குரூப்பில் இருந்த 500 பேருக்கும் மேலான அடியாட்கள் மொட்டைப் போட்டுக்கொண்டார்கள்.
என் சித்தியின் கணவரும் அதில் ஒருவர். “எங்களுக்கெல்லாம் அன்னமிட்ட அன்னலட்சுமி
போயிட்டாளே “ என்று அவர் தண்ணி அடிச்சிட்டு வந்து எங்க அம்மாவிடம் அழுதது
கதைகள்.. .. அப்படியே பால்தாக்கரேயின் முகம் .. நிழலாக கூடவே பயணிக்கிறது.
உற்பத்தி சார்ந்த சமூகம் உருவாகி வந்தக் காலக்கட்டத்தில் சொத்துக்களையும்
அதிகாரத்தையும் ஆள்பலத்தையும் ஏன் தான் சம்பாதித்த எதையுமே
தன் வாரிசுகளுக்கு என்று ஒதுக்கத்தெரியாத என் அப்பாக்கள்
எல்லாவற்றையும் தன்னுடனும் தன்னுடன் வாழ்ந்த சமூகத்திற்கும் என்று
வாழ்ந்த என் அப்பாக்கள்..
என் அப்பாக்கள் நல்லவர்கள்.வல்லவர்கள். 
அவர்கள் போராட்டங்களை கலவரங்களை
அடிதடிகளை நான் என் படிப்பின் மோஸ்தரில் 
புரிந்து கொள்ள மறுத்தேன்.
அவர்களை விட்டு நான் விலகி விலகிப் போனேன்.
காலம் செல்ல செல்ல சமூகம் எனக்கு அவர்களின் உசரங்களை
உணர்த்திக் கொண்டே இருக்கிறது..

இன்று நான் தற்போது இருக்கும் அமெரிக்க மண்ணில் “அப்பாக்களின் நாள்”
(17th June third Sunday).. 
தலையைத் தூக்கி அப்பாக்களைப் பார்க்கிறேன்.
How to be Black .. book ..
Baratunde Thurston of Jack & Jill Politics and the Onion 
என் மடியில் தன் கனமான பக்கங்களுடன்.
கண்களில் கண்ணீருடன்.. மெல்ல அந்தப் புத்தகத்தை எடுத்து
என் மார்புடன் அணைத்துக் கொள்கிறேன்.
காலா … பா. இரஞ்சித் தின் படம்.
இரஞ்சித்திற்கும் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும்
என் அன்பு தம்பி மகிழ் நன், தோழமை ஆதவன் தீட்சண்யா..
மற்றும் திரைக்களத்தில் களமாடிய என் பிள்ளைகள்..
அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

Wednesday, June 13, 2018

அப்பா வுக்கு...


அப்பாவுக்கு

உன் உசரம் நான் என்பதில் உனக்குப் பெருமை.
உன்னைப் போலவே நானும்
கணக்கில் புலியாக்கும்..!
சொல்லிச் சொல்லி பூரித்துப் போனாய்.

- அணில்
- இலை
துணைப்பாடமாய் பிரஞ்சு படித்ததை
பிரஞ்சு மொழியில் புதினங்கள் வாசிப்பதாய்
கொஞ்சம் அதிகப்படியாகத்தான்
பெருமைப்பட்டுக்கொண்டாய்.

நோட்டுப்புத்தகத்தில் கிறுக்கியிருக்கும்
கார்டூன் சித்திரங்களை
கலையார்வமாக
கர்வத்துடன் பிரகடனம் செய்தாய்.

உன் மகிழ்ச்சி உன் பெருமை உன் கவுரவம்
என் சான்றிதழ்களில் பரிசுகளில் வெற்றிக்கோப்பைகளில்
பொறிக்கப்பட்டிருப்பதாய்
நேற்றுவரை வலம் வந்த நீ..
கல்யாணமாலை ஒலிபரப்பில்
எதையும் சொல்லாமல்
ஏன் இருட்டடிப்பு செய்தாய்?

இப்போதெல்லாம் 
அம்மாவைப்போல
சமைக்கத் தெரிவதிலும்
அத்தையைப் போல தலையாட்டி
அடக்க ஒடுக்கமாய்
அடங்கி இருப்பதிலும்
இருப்பதாக சொல்கிறாய்
நீ கட்டிக்காத 
பெருமையும் குல கவுரவமும்.

தந்தையே
பனிமலைகளை உடைத்து எடுத்து
துண்டுகளாக்கி சூடேற்றிய நீ
சூட்டில் பனிக்கட்டிகள் உருகாமலிருக்கும்
சூத்திரத்தை
எப்போது எழுதப் போகிறாய்?


_மீள்பதிவு. என் கவிதை தொகுப்பு ஐந்திணை

Saturday, June 9, 2018

மழைத்துளி காதல்



இன்றைய நாளும் கிழமையும் தெரியவில்லை.
விடியலும் கருக்கலும் அறியாத குகை.
என் கனவுகளில் மழையின் முத்தம்.
தோழி.. அறிவாயோ..
மழைக்காலத்தில் அவன் என்னைத் தேடி 
கட்டாயம் வந்திருப்பான்.
அவன் வாக்குத்தவறாதவன்.
அலைகளின் சாட்சியாக கடற்கரை மணலில்
அவனுடன் நான்.அறிந்தவள் நீ.
என் வாசனையில்லாத பூமாலைகளை அவன் அணிவதில்லை.
பூந்தோட்டங்களில் என்னைத் தேடி அவன் அலைகிறான்.
என் தடயங்களை அவர்கள் அழித்திருப்பார்கள்
என்று சந்தேகிக்கிறான்.
கருமேகங்கள் என்னைக் காணாத அதிர்ச்சியில்
மின்னலாய் நடுங்கி இடியாய் அழுகின்றன.
மழை நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது.
என் ரகசியங்களை அறிந்த மித்தி நதியிடம் ஓடுகிறான்.
சாக்கடைகள் பெருக்கெடுத்து நதியில் கலக்கின்றன.
நதியின் திசையை நாற்காலிகள் திருப்பிவிட்டதை
அவன் அறிவானோ?
நதி கடலில் கலப்பதோ
அவனில் சங்கமிப்பதோ..  
அரண்மனை திட்டங்களில் காணாமல் போய்விட்டதை
அவனிடம் சொல்வாயா தோழி..!

அரபிக்கடலின் அலைகள் ஆர்ப்பரிக்கின்றன.
இது மழைக்கால அலைகளின் மொழியல்லவே
பாறைகள் பயப்படுகின்றன.
அவனுக்காக  என்னைத் தேடும் 
மழைக்காடுகள் .
என்னைக் காணாமல் ஊமையாகிப் போன
மாடப்புறாக்கள்..
பெரு நகரம் மழையில் மிதக்கிறது செய்தியாக.
தண்டவாளங்கள் உடைந்துப்போனதாய்
பேருந்துகள் வெள்ளத்தில் மிதப்பதாய்
மீனவர்கள் கடலில் போகவேண்டாம்
எச்சரிக்கை எச்சரிக்கை 
மனிதர்கள் சுவர்களுக்குள் முடங்கிக்கொள்கிறார்கள்..
நான் வாக்குத்தவறிவிட்டதாய்
அவனை ஏமாற்றிவிட்டதாய்
கார்மேகங்கள் குற்றம் சுமத்துகின்றன.
என் செய்வேன் தோழி?

அந்த நாளின் அதே நினைவுகளில்
குடைகள் விரிகின்றன மழையில் நனைகின்றன.
நம்ப மறுக்கிறது அவன் மனம்
என்னை நினைக்கிறது அவன் உடல்
அலைகளை வீசி எறிகிறான்
அவனைச் சுற்றி பேய்மழை..
என்னைத் தேடித் தேடி தொலைந்துப் போவானோ?
அல்லது என்னையே தொலைத்துவிடுவானோ?
தோழி..
விரிந்தக் குடையின் கம்பிகள் வளைந்து
சதைகள் கிழிந்து..
இனி.. விரியுமோ..
இந்தக் கவிதையின் குடை..?!

Thursday, June 7, 2018

பிரணாப் முகர்ஜியும் ஆர் எஸ் எஸ் ..ம்




வயசு கூட கூட புத்தி வளராவிட்டாலும் பரவாயில்லை.
மந்தமாகக் கூடாது. 
பிறகென்ன.. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி
ஆர் எஸ் எஸ் கூப்பிட்டாங்கனு அவுங்க கூட்டத்திற்கு
போயிருக்கலாமா.?இந்தப் பெரிசுக்கு 
இதெல்லாம் நரிகளின் ஏமாற்றுவேலைனு தெரியல!

அப்பா.. நீங்க போனது மட்டும் தான் போட்டோவோட
பதிவாகும்.. பதிவாகிவிட்டது. என்ன பேசினீர்கள் என்று
வரலாறு மறந்துவிடும்.. “ என்று அவரோட மகள் டிவிட்டரில்
சொல்லியிருக்காங்க.
இதனால் நான் சொல்ல வருவது என்னவென்றால்
அப்பாக்கள் பொண்ணுக சொல்றதைக் கேட்கனும்!
(Former president Pranab Mukherjee addresses 
a Rashtriya Swayamsevak Sangh (RSS) event 
at its headquarters in Nagpur, on 07th June)

Tuesday, June 5, 2018

ரஞ்சித்தா ? காலாவா??


ரஞ்சித்தா.. காலாவா..?

காலாவில் நடித்த நடிகரின் பெயர்..மறந்துவிட்டது!”



கொஞ்சம் இக்கட்டான தருணமிது .
எனக்கு ரொம்ப பெரிசா சினிமா பற்றிய விவரமெல்லாம் கிடையாது.
ஆனால் சினிமாவின் சமூக தாக்கமும் அரசியல் தாக்கமும் விளைவுகளும்
ஓரளவு தெரியும். அந்தக் காலத்தில் நானும்வாத்தியார்படத்திற்கு விசில்
அடித்திருக்கிறேன்.!!
ரஞ்சித்திற்கு சினிமாவை வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும்
கருதவில்லை. தன் கருத்துகளுக்கு பிரபலங்களை ஆயுதமாக பயன்படுத்த
முடியுமா என்று முயற்சி செய்து அதில் தோற்றுப் போனவராகக் கூட கருத
இடமிருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் ரஞ்சித்திற்கு ஒரு பார்வை இருக்கிறது
என்பதில் ஐயமில்லை.
அடுத்த அவர் எடுத்திருக்கும்காலாதிரைப்படம்.
யார் இந்த காலா?
காலாவுக்கும் தாராவிக்கும் என்ன தொடர்பு?
ஞ்சித் தாராவியை காலாவின் எப்படி காட்டுகிறார்?
தாராவி என்றால் ஆசியாவின் நாற்றமெடுக்கும் குடிசைப்பகுதி என்றும்
தாராவி என்றால் அம்மணமாகத் திரியும் அபலைப் பெண் என்றும்
தாராவி என்றால் மலமும் குப்பையும் கொட்டப்பட்டிருக்கும் குப்பைத்தொட்டி என்றும்
தாராவி என்றால் தாதாகளின் அட்டகாசங்கள் இரவிலும் நடக்கும் களம் என்றும்
தாராவி என்றால் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் வாழும் இடம் என்றும்
தாராவி என்றால்
தாராவி என்றால்
இப்படியான ஓரிடம் என்றும் இதுவரைக் காட்டப்பட்ட சினிமாக்காரர்களின்
காமிராக்கண்களின் அதே பார்வையை ரஞ்சித்தும் கொடுத்திருக்கிறாரா?
ரஞ்சித்திற்கு தாராவி குறித்து என்னமாதிரியான கருத்து இருக்கிறது?
ரஞ்சித் அவர்கள் தாராவி வாழி இளைய சமூகத்தை சினிமா என்ற
பெரிய வெளிச்சத்தில் வந்து விழுகின்ற விட்டில் பூச்சிகளாக நினைத்திருக்கிறாரா?
இப்போதைக்கு எனக்கு எந்தக் கருத்தும் இல்லை.
ரஞ்சித் அவர்களை காலா திரைப்படத்தின் சூட்டிங் மும்பையில் நடந்தப்போது
சந்தித்திருக்கலாம் தான்! ஆனால் என்னவோ இடைவெளியை அப்படியே
வைத்துக்கொண்டேன். அதெல்லாம் இருக்கட்டும்.
இப்போது ரஞ்சித்திற்காக காலா திரைப்படத்தைப் பார்க்கலாம் என்று ஒரு சாரார்.
அதில் நடித்திருக்கும் நடிகருக்காக அத்திரைப்படத்தைப் புறக்கணிக்க வேண்டும்
என்று ஒரு சாரார்இவர்கள் சொல்லும் கருத்துகள்.. விவாதங்கள்
.. 
ஒரு திரைப்படம் வெளிவரும் போது இம்மாதிரியான விவாதங்கள் எழுவது
தமிழுலகில் ஒன்றும் புதிதல்ல. ஆனால் காலா திரைப்படமும் அத்திரைப்படத்தில்
தங்களையும் இணைத்துக் கொண்டதற்காக தாராவியில் ஏற்பட்டிருக்கும் 
சின்னதா ஒரு மகிழ்ச்சியும் என்னை இப்படம் குறித்து நிறைய யோசிக்க வைத்திருக்கிறது.
எந்த ஒரு சினிமா நடிகருக்கும் ரொம்ப பெரிசா சமூகப் பிரக்ஞை இருந்தது/இருக்கிறது
என்றொ அது என்னவோ காலாவில் நடித்தவருக்கு மட்டும் இல்லை என்றொ
பேசுவதெல்லாம் அபத்தம். பிரச்சனை இதுவல்ல.
காலாவுக்கும் காலாவில் நடித்தவருக்கும் எதுவும் சம்பந்தமே இல்லை
அதை காலாவின் தாராவி களமும் தாராவி வாழ் என் தமிழ் இளைஞர்களும்
புரிந்த கொள்ள வேண்டும் என்பது மட்டுமே !
இப்போது என்னைப் போன்றவர்கள் முன் எழுந்திருக்கும் தலையாய பிரச்சனை.
எல்லா பக்கத்திலிருந்தும் அடிவாங்கிக்கொண்டிருக்கும் எங்களுக்கு
இப்பிரச்சனையின் இன்னொரு முகமும் தெரியும்.
காலாவில் ஏற்பட்டிருக்கும் குழப்பமும் சிக்கலும் எம் 
மக்களின் சில உணர்வுகள் சார்ந்தவை. 
அவர்களின் முகங்களில் மத்தாப்பு பூ போல
பூத்த புன்னகையைக் கண்டு அதில் பங்கு பெறவும் முடியாமல்
விலகி நிற்கவும் முடியாமல் தவிப்பதை அவர்கள்
அறிந்திருக்கிறார்களா? தெரியவில்லை. 
தந்தை பெரியாரின்  தடியை ஊன்றி எழுந்த எம்மக்கள் 
அம்பேத்கரின் அறிவாயுதம் என்ற வெளிச்சத்தில் 
பயணிக்க ஆரம்பித்திருக்கும் இத்தருணத்தில்

காலா.. காலா.. தாராவிக்கும் தாராவி வாழ் மக்களுக்கும்
எந்த ஓர் அடையாளமும் அல்ல.
நமக்கான அடையாளங்கள் இமயமலையில் இல்லை.
தாராவியின் அடையாளம் மித்தி நதிக்கரையில் இருக்கிறது.
மித்தி நதி சாக்கடை அல்ல.
நமக்கு அது என்றும் நதிதான். 
நதியின் ஓட்டத்தை எவனும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

காலாரஞ்சித் படம். 
ரஞ்சித் .. காலாவின் மகன்.
மற்றபடி கறுப்பாக இருப்பதாலேயே எல்லோரும் காலாவாகிவிட முடியாது.
வேஷம் போட்டவெல்லாம் காலாவாகிவிட முடியாது.
நம்மவராகிவிடவும் முடியாது.

காலா திரைப்படம் மூலம் இன்னொரு தளத்திற்கு
என் தாராவி வாழ் இளைஞர்கள் வந்திருப்பார்கள்.
அவர்களையும் அவர்கள் உணர்வுகளையும் மதிக்கிறேன்.
கொண்டாடுகிறேன். 
சில தருணங்களில் நம்மோடும் நம் உணர்வுகளோடும் நாம்
போராட வேண்டி இருக்கிறது.
நம் பாதை அப்படி ஒன்றும் ரொம்பவும் சீர்செய்யப்பட்டதல்ல.
தனித்தும் கூட பயணிக்கும் தருணங்கள் வருகிறது.
தாராவி .. அப்போதும் நம்முடன் இருக்கும்.
……

(காலாவில் நடித்த நடிகரின் பெயர் மறந்துவிட்டது. அதனால் தான்
பதிவில் குறிப்பிடவில்லை!
சினிமா ரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டுமாக..)
#தாராவி_காலா_ரஞ்சித்

Friday, June 1, 2018

படகின் பயணம் - 1





கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் 
கண்டுகொண்டேன். கொண்டேன்.
அவன் தானா . ..இவன் அவன் தானா
அவனாகத்தான் இருக்க முடியும்.
அந்தச் சிரிப்பு, அந்த நடை 
அந்த எழுத்தின் வளைவுகள்
அந்த உண்மையின் எதிரொலி
இவன் அவனாகத்தான் இருக்க முடியும்.

குந்தி தன் கர்ணபுத்திரனை அடையாளம் கண்ட
அதே நாளில் நானும் அவனை அடையாளம் கண்டேன்.
சிறுவனாக என் நினைவு உரையாடல்களில்
வளர்ந்த அவன்.. 
தன் காதலியின் மடியில்
வாலிபத்தின் முறுக்கேறிய தோள்கள் 
இளைப்பாற படகடியில் படுத்திருந்தான்
 என் மழைத்துளிகள் சிதறி விழுந்த கடல் அலை
அவன் பாதங்களை முத்தமிட்டு முத்தமிட்டு
நினைவுகளை மீட்டிக் கொண்டது.
கிருஷ்ணபரமாத்மாக்களின் அனுமதிக்கு
காத்திருப்பதில்லை அலைகள். 
பாண்டுப்புதல்வர்களுக்காக
எந்த வரமும் கேட்கப் போவதில்லை
என் அலைகள்..
அவனைக் கண்டு கொண்டேன்.
நீ அவன் தானா.. என்று நானும் கேட்கவில்லை.
நான் அவன் தான் என்று அவனும் சொல்லவில்லை.
 இத்தனை ஆண்டுகளின் மவுனத்தில்
என் மொழியை அவன் கண்டடைந்தது போல
அவன் விழிகளை நான் கண்டடைந்தேன்.