Saturday, June 9, 2018

மழைத்துளி காதல்



இன்றைய நாளும் கிழமையும் தெரியவில்லை.
விடியலும் கருக்கலும் அறியாத குகை.
என் கனவுகளில் மழையின் முத்தம்.
தோழி.. அறிவாயோ..
மழைக்காலத்தில் அவன் என்னைத் தேடி 
கட்டாயம் வந்திருப்பான்.
அவன் வாக்குத்தவறாதவன்.
அலைகளின் சாட்சியாக கடற்கரை மணலில்
அவனுடன் நான்.அறிந்தவள் நீ.
என் வாசனையில்லாத பூமாலைகளை அவன் அணிவதில்லை.
பூந்தோட்டங்களில் என்னைத் தேடி அவன் அலைகிறான்.
என் தடயங்களை அவர்கள் அழித்திருப்பார்கள்
என்று சந்தேகிக்கிறான்.
கருமேகங்கள் என்னைக் காணாத அதிர்ச்சியில்
மின்னலாய் நடுங்கி இடியாய் அழுகின்றன.
மழை நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது.
என் ரகசியங்களை அறிந்த மித்தி நதியிடம் ஓடுகிறான்.
சாக்கடைகள் பெருக்கெடுத்து நதியில் கலக்கின்றன.
நதியின் திசையை நாற்காலிகள் திருப்பிவிட்டதை
அவன் அறிவானோ?
நதி கடலில் கலப்பதோ
அவனில் சங்கமிப்பதோ..  
அரண்மனை திட்டங்களில் காணாமல் போய்விட்டதை
அவனிடம் சொல்வாயா தோழி..!

அரபிக்கடலின் அலைகள் ஆர்ப்பரிக்கின்றன.
இது மழைக்கால அலைகளின் மொழியல்லவே
பாறைகள் பயப்படுகின்றன.
அவனுக்காக  என்னைத் தேடும் 
மழைக்காடுகள் .
என்னைக் காணாமல் ஊமையாகிப் போன
மாடப்புறாக்கள்..
பெரு நகரம் மழையில் மிதக்கிறது செய்தியாக.
தண்டவாளங்கள் உடைந்துப்போனதாய்
பேருந்துகள் வெள்ளத்தில் மிதப்பதாய்
மீனவர்கள் கடலில் போகவேண்டாம்
எச்சரிக்கை எச்சரிக்கை 
மனிதர்கள் சுவர்களுக்குள் முடங்கிக்கொள்கிறார்கள்..
நான் வாக்குத்தவறிவிட்டதாய்
அவனை ஏமாற்றிவிட்டதாய்
கார்மேகங்கள் குற்றம் சுமத்துகின்றன.
என் செய்வேன் தோழி?

அந்த நாளின் அதே நினைவுகளில்
குடைகள் விரிகின்றன மழையில் நனைகின்றன.
நம்ப மறுக்கிறது அவன் மனம்
என்னை நினைக்கிறது அவன் உடல்
அலைகளை வீசி எறிகிறான்
அவனைச் சுற்றி பேய்மழை..
என்னைத் தேடித் தேடி தொலைந்துப் போவானோ?
அல்லது என்னையே தொலைத்துவிடுவானோ?
தோழி..
விரிந்தக் குடையின் கம்பிகள் வளைந்து
சதைகள் கிழிந்து..
இனி.. விரியுமோ..
இந்தக் கவிதையின் குடை..?!

1 comment:

  1. நல்ல கவிதை. ரசிக்க வைத்தது.

    ReplyDelete