Sunday, March 8, 2020

யெளவனம் தொலைத்தவள்

Image result for durga devi painting

உன் கருவறையின்
இருளாகவும் ஒளியாகவும்
என்னை எரித்துக் கொண்டேன்.
உன் வில்வ மரத்தின் நிழலில்
என் யெளவனம் தொலைத்தேன்.
நீ கால்தூக்கி ஆடும்போதெல்லாம்
பூமிப் பந்தின் விசையை நிறுத்தும்
வித்தைகள் செய்தேன்.
நடராசன் நீ..
என்னைப் போராட அனுப்பினாய்
ஆயுதம் தாங்கினேன்.
முலை வற்றியது
முகம் கறுத்தது
உதடுகள் தடித்து வெடித்தன
பூக்களின் வாசம் மறந்துப்போனது.
ரத்தவாடையுடன் பிசுபிசுத்த கூந்தல்
கொடுமணல் பரப்பில் காய்ந்துப்போனது..
எப்போதாவது எட்டிப்பார்க்கும்
கனவுகளில் மிச்சமிருந்தது
நீ கடைசியாக கொடுத்த முத்தத்தின் வாசனை.
உன் கோட்டைகள் அதிர
வெற்றிமுரசுகள் ஒலிக்க
உன்னொடு ஆட ஓடோடி
வருகிறேன்..
உன் கழுத்து பாம்புகள் நெளிகின்றன.
நெற்றிக்கண் படபடக்கிறது அறியாமல்.
நீயோ மலர்ப்படுக்கையில்
அவளுடன் சயனித்திருக்கிறாய்..
கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கும்
மாலையிலிருந்து
ஒவ்வொரு மண்டையோடுகளாய்
உதிர்கின்றன…
ஓம் நமசிவாய.

No comments:

Post a Comment