வனத்திலிருந்து வேரோடு
பிடுங்கிச்
சென்ற போது
காற்றும்
மழையும் கதறித் தீர்த்தன.
வனவிலங்குகள்
புணர்ச்சியை விலக்கி
எட்டிப்பார்த்தன.
குகைகளுக்குள்
உன்னைத் தேடிப் பார்த்த இருள்
விடியலில்
சரணடைந்து விட்ட தாக
மரம் தாவிய
குரங்குகள் பேசிக் கொண்டன.
அழகான தொட்டியில்
அடைக்கப்பட்ட து
உன் மண்ணின்
வாசனையுடன் வேர்கள்.
தொட்டிச்செடியில்
பூப்பதும் காய்ப்பதும்
சூரியனுக்காக
உயிர்ப்பதுமாய்
அடங்கிப்போனதோ
காலம்?
வனத்திலிருந்து
பறந்து வரும்
பறவைகளின்
மொழியை அறியுமோ
தொட்டிச்செடியின்
சன்னல்கள்?
காற்றில்
பறந்து விழும் சிறகு ஒன்று
எதையோ சொல்ல
வருகிறது.
கைகளை நீட்டுகிறேன்..
மின்னல் வெளிச்சத்தில்
வேர்களை முத்தமிட்டு
கடந்து செல்கிறது
வனமும் வானமும்.
28 sept 5.03 pm
No comments:
Post a Comment