அண்ணல் அம்பேத்கர் தனிமைப்படுத்தப்பட்டாரா?
நாக்பூரில் இலட்சக்கணக்கான தன் ஆதரவாளர்களோடு 1956 அக்டோபர் 14ல் இந்து மதத்திலிருந்து வெளியேறி பெளத்தம் தழுவினார்.அதன்பின் 53வது நாளில் டிச 06 அவர் டில்லியில் திடீரென மரணம் அடைந்தச் செய்தி..
இது குறித்த சந்தேகங்கள்
வழக்குகள்
அம்பேத்கருடன் இருந்தவர்கள் எழுதி இருக்கும் புத்தகங்கள்
எல்லாமும் அப்படியே மெளனத்தில் உறைந்துப் போயிருக்கின்றன.
என்ன நடந்தது,?
ஏன் நடந்தது?
யார் காரணம்,?
யார் அறிவார்,?!
இது குறித்து எனக்குத் தெரிந்ததைப் பதிவு செய்தாக வேண்டும்.
அன்றைய பம்பாய் தாராவி தமிழ் இளைஞர்கள் எப்போதாவது தாதரில் அம்பேத்கரின் இல்லத்தில் அவரைச் சந்திப்பதுண்டு.
அதில் முக்கியமானவர்கள்
தொல்காப்பியனார்,
என் தந்தை எஸ். வள்ளிநாயகம், நெல்லை இராமானுஜம்புதூர் இளைஞர்கள் . அண்ணலின் இறுதிக் காலங்களில் தாராவியிலிருந்து இவர்கள் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் கதவு திறக்கப்படவில்லை!சந்திப்பு மறுக்கப் பட்டிருக்கிறது.
அம்பேத்கர் குறித்து இந்திய பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளைச் சேகரித்து இவர்கள் அண்ணலிடம் கொடுப்பது வழக்கம்.
தங்களின் தலைவர் தனிமைப்படுத்தப் பட்டார் என்று இவர்கள் வருந்தினார்கள். அண்ணலின் உடல்நிலை ஓய்வு நேரம் இதெல்லாம் காரணமாக இருந்திருக்கும்,
தாராவிக்காரர்கள் என்பதால் இவர்களுக்கு அனுமதி இல்லை என்று இவர்கள் நினைத்துக் கொண்டார்கள். இப்படித்தான் நானும் நினைத்தேன்.
அண்ணலின் மரணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த தாராவியும் நிலை குலைந்துப் போனது.
என் வீட்டில் என் தந்தை காரணமே சொல்லாமல் பட்டினி கிடந்திருக்கிறார். அண்ணலின் உடல் மறுநாள்தான் பம்பாய் வந்தது. டில்லியிலிருந்து மும்பை விமானத்தில் வந்த அண்ணலின் உடலைப் பார்க்க சயான் சாலையில் கூடி இருந்த தாராவி தமிழர்கள் அந்த வாகனத்தின் பின்னால் ஓடி இருக்கிறார்கள்.
என் அப்பாவின் மெளனத்தை அம்மா புரிந்துக் கொள்ளவில்லை,!அப்பாவும் அதை தன் மனைவியுடன் பகிர்ந்துக் கொள்ளவில்லை. ஆனால் அப்பாவின் மெளனம் ஒரு பெண்ணாக என் அம்மாவை குழப்பியது. கைக்குழந்தையோடு என் அம்மா தன் பிறந்த வீட்டுக்குப் போய்விட்டார். மூன்று ஆண்டுகள் அம்மா தன் பிறந்த வீட்டில்தான் இருந்தார். அதன்பின் அப்பா போகிறார். எதுவும் பேசவில்லை அம்மா. அப்பாவுடன் கிளம்பி மீண்டும் பம்பாய் வந்துவிடுகிறார்.
அப்பாவுக்கும் அன்றைய தாராவி இளைஞர்களுக்கும் தங்கள் தலைவர் பாபாசாகிப் தனிமைப்படுத்தப்பட்டார் என்ற வருத்தம் ஒரு குற்றச்சாட்டாக கடைசிவரை இருந்தது.
இது குறித்து மாமா சீர்வரிசை சண்முகராசனிடம் பேசி இருக்கிறேன்.அவருக்கும் இதே கருத்துதான்.
வரலாறு பல மர்மங்களைக் கொண்டது.
உண்மைகள் சைத்யபூமியில் உறங்குகின்றன.
ஜெய்பீம்.

No comments:
Post a Comment