Tuesday, August 20, 2019

அவளும் புடவையும்


அவளும் புடவையும்
அவள் புதுப்புடவை வாங்குவதற்கு காரணம் எதுவும் பெரிசா
இருக்காது. குடும்பத்தில் யாருக்குப் பிறந்த நாள் என்றாலும்
அவளுக்குப் புதுப்புடவை உண்டு. வி நாயகர் சதுர்த்தி முதல் தசரா வரை
அனைத்து பண்டிகைகளுக்குப் புதுப்புடவை வாங்கிவிடுவாள்.
ஏன் .. சுதந்திர தினத்திற்கு கூட புதுப்புடவை வாங்கிக் கட்டி
இருந்தாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
இதெல்லாம் அதிர்ச்சியாக இல்லை.
தேர்தல் வந்தப் போது ஓட்டுச்சாவடியில் போய்
ஓட்டுப்போடுவதற்கும் அவள் புதுப்புடவை வாங்கிக் கொண்டு
ஓட்டுப் போட்டு மோதியை ஜெயிக்க வைத்த தாகச் சொன்னாள்..


அன்று அவளுடைய 50 வது திருமண   நாள்.
மிகவும் அழகானப் புடவையில் அவள் ..
நாங்கள் அனைவரும் அவளுக்கு வாழ்த்துகள் சொன்னோம்.
அவள் திருமண  நாளின் நினைவுகளில் மிதந்து கொண்டிருந்தாள்.
அவள் முகத்தில் அந்த நாணம் … கண்களில் வெட்கம்..
அவள் கொண்டையில் செவ்வந்தி வேணி..
நான் எதுவும் சொல்லாமல் அவளையே ரசித்துக் கொண்டிருந்தேன்.
அவள் தன் கணவர் அவளைப் பெண்பார்க்க வந்த நாளில்
எந்த நிறத்தில் புடவை கட்டி இருந்தாலோ அதே வண்ணத்தில்
புடவை தேடி  அலைந்து வாங்கியதாகவும் ஆனால் பார்டர் மட்டும்
அப்படி கிடைக்கவில்லை என்றும் கொஞ்சம்
 வருத்தப் பட்டுக் கொண்டாள்..
அப்போதுதான் சொன்னாள்…
“எனக்கு அவர் வந்துப் பார்த்துவிட்டுப் போன பிறகு
 அந்தப் புடவையைக் கழட்டிக் கொடுக்கவே மனசு வரவில்லை. இப்படித்தான் வரன் பார்க்க வரும் போதெல்லாம்
 அம்மா பக்கத்து வீட்டில் அல்லது பக்கத்து தெருவில்
யாரிடமாவது நல்ல புடவையை வாங்கி வந்து தருவாள்.
நான் கட்டிக் கொள்வேன்.
அப்போதெல்லாம் தினமும் யாராவது
 என்னைப் பெண் பார்க்க வரக் கூடாதா 
என்று நினைப்பேன். 
அம்மா அடுத்தவர்களிடம்
வாங்கி வரும் புடவையைக் கட்டிக் கொண்டு 
கையளவு கண்ணாடியில் என்னைப் பார்ப்பதில் 
எனக்கு ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே கிடையாது.

ஒரு வழியா திருமணம் ஆகி மும்பை வந்தப்போ..
அவரு வேலை வேலைனு .. அடிக்கடி வெளியில் போயிடுவாரு.
அவரோட தங்கை அவள் பெட்டியில் 
நிறைய நைலான் புடவைகள் வைத்திருந்தாள். 
ஒரு புடவையாவது தரமாட்டாளா, 
கட்டிட்டு கொடுக்கலாமே
என்று மனசு ஏங்கு. அவள் புடவை வைத்திருக்கும்
 பெட்டியை பூட்டுப் போட்டு
பூட்டி சாவியை இடுப்பில் சொருகிக் கொள்வாள்…

வாழ்க்கை ஓடியது.. இரண்டு மகன், மகள் பிறந்தார்கள்..
கணவர் வெளியூர் போகும்போதெல்லாம் எனக்கு புடவை
வாங்கி வந்தார். நான் ரொம்பவும் சந்தோஷமாகிவிடுவேன்.
அதனாலேயே எங்கு போனாலும்
 எனக்குப் புடவை வாங்காமல் வர மாட்டார்.. 
அடுத்தப் பிறவி இருக்கானு தெரியல. இந்தப் பிறவியிலேயெ
எத்தனை விதமான புடவைகள் உண்டோ 
அத்தனையும் கட்டிடனும்னு ஆசை.. ..! ..”

இப்போதெல்லாம் அவள் புதுப்புது புடவையில் வரும்போது
நான் மறக்காமல் அவள் அந்தப் புடவையில்  ரொம்ப அழகா
இருப்பதாகச் சொல்லுகிறேன். ! 
 நான் அவளையும் அவள் புடவைகளையும் ரசிக்க
ஆரம்பித்துவிட்டேன்!




1 comment:

  1. நான் அவளையும் அவள் புடவைகளையும் ரசிக்க
    ஆரம்பித்துவிட்டேன்!...

    நானும் ..

    ReplyDelete