லடாக் தொகுதி மக்களவை உறுப்பினர் இனமான போராளி ஜம்யங் செரிங் நேம்ஜியலினார் அவர்கள் ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை.
தோழரின் உரையை தமிழில் மொழி பெயர்த்த நெறியாளர் ஜெயகுமார் ஸ்ரீநிவாசன் அவர்களுக்கும், மொழி பெயர்ப்பு கட்டுரையைப் பிரசுரித்த நடுநிலை பத்திரிகை வலம் மாத இதழின் ஆசிரியருக்கும் நெஞ்சார்ந்த நன்றி
"பண்டிட் ஜவாஹர்லால் நேருவின் தவறான முடிவினால் நேர்ந்த பிழையை இன்றைய அரசாங்கம் சரிசெய்துள்ளது. அதை நாங்கள் வரவேற்கிறோம். இங்கே பேசிய பலரும் லடாக்கிலே, கார்கிலிலே என்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் லடாக் என்றால் என்னவென்று தெரியுமா? கார்கில் என்றால் என்ன என்று தெரியுமா? இவற்றின் முழு விவரம் தெரியுமா?
இப்படிப் பேசிய பலரும் லடாக்கைத் தூக்கி ஓரமாகப் போட்டிருந்தார்கள். அங்கே உண்மையில் என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்று கொஞ்சம் கூடக் கவலைப்படவில்லை. இதே நாடாளுமன்றத்தில், லடாக்கில் புல் கூட முளைப்பதில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். லடாக்கின் மொழி, உணவு, கலாசாரம், வேலைவாய்ப்பு, வாழ்க்கை முறை எல்லாம் அவர்களுக்குத் தெரியுமா? லடாக்கைக் குறித்துப் பேசிய அவை உறுப்பினர்களில் எத்தனை பேர் நேரில் லடாக்கை பார்த்திருக்கிறார்கள்? அவர்களுக்குத் தெரிந்த லடாக்கெல்லாம் புத்தகங்களில் வாசித்த லடாக் மட்டுமே.
லடாக் கடந்த 71 வருடங்களாக யூனியன் பிரதேசமாக மாற போராடிக்கொண்டிருக்கிறது. 1948ல் உருவான லடாக் ஜனசங்கத்தின் தலைவர், நேருவிடம் லடாக்கை, தனி யூனியன் பிரதேசமாக மாற்ற கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையில் லடாக்கை யூனியன் பிதேசமாக மாற்றுங்கள் அல்லது இந்தியாவின் இதர பகுதிகளோடு இணையுங்கள்; ஆனால் ஜம்மு காஷ்மீரோடு மட்டும் இணைத்து விடாதீர்கள் என்று கோரியிருந்தார். அன்றைய நேரு அரசாங்கம் எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, அதைப்பற்றி யோசிக்கக்கூட தயாராக இல்லை.
காஷ்மீரத்தோடு சேர்த்ததால்தான் எங்கள் மொழி, வாழ்க்கை, கலாசாரம், வளர்ச்சி எல்லாம் தடைபட்டுப்போனது. பெரு மரியாதைக்குரிய டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, ஜம்மு காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து கொடுப்பதை எதிர்த்ததோடு, லடாக் ஜம்மு காஷ்மீரோடு இணைக்கப்படக்கூடாதென்றும் போராடினார். அவரை நாங்கள் இன்று நன்றியோடு நினைவுகூர்கிறோம்.
இன்னொன்றையும் மறந்துவிடாதீர்கள். பாகிஸ்தானோடு நடந்த அனைத்துப் போர்களிலும் லடாக் தனது பங்களிப்பையும் பலிதானத்தையும் இந்திய நாட்டிற்காக வழங்கியுள்ளது. 1948, 1972 மற்றும் 1999 வருடங்களில் நடந்த அனைத்துப் போர்களிலும் லடாக் மக்கள் தங்கள் இன்னுயிரை அளித்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் லடாக்கியர்கள் இந்தியாவைத்தான் தனது நாடாகக் கருதினார்கள். தங்களை இந்தியர்களாகத்தான் கருதினார்கள். இந்தியாவுக்கே தங்கள் வாழ்வையும் சாவையும் அர்ப்பணிக்க ஆசைப்பட்டார்கள். ஆனால் எங்கள் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக ஜம்மு காஷ்மீரோடு இணைக்கப்பட்டோம்.
மரியாதைக்குரிய காஷ்மீரைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ இவற்றை நீக்குவதால் என்னாகிவிடும் என்று கேட்டார். இதற்கு என்னுடைய பதில், இந்தச் சட்ட பிரிவுகள் நீக்கத்தால் மக்களுக்குச் சேரவேண்டிய பணத்தை, இரு குடும்பங்கள் மட்டுமே பிடுங்கித் தின்பது நிற்கும். மற்றும் ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியவை வளர்ச்சி பெறும். அதே உறுப்பினர்கள் இனி கார்கில் என்ன ஆகும் என்றெல்லாம் கவலை தெரிவித்தனர். ஆனால் கார்கிலின் 70% மக்கள் யூனியன் பிரதேசமாக ஆவதை முழு மனதுடன் வரவேற்கிறார்கள். 2014 தேர்தல் அறிக்கையிலேயே யூனியன் பிரதேசமாக மற்றுவதை சேர்க்கச் சொல்லியிருந்தோம். 2019 தேர்தல் அறிக்கையிலும் இதே கோரிக்கையைச் சேர்க்க வைத்தோம்.
கார்கில் மற்றும் லடாக்கின் ஒவ்வொரு கிராமத்தின் ஒவ்வொரு வீடுகளிலும் (பெளத்தர்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் என்ற பாகுபாடில்லாமல் அனைவரிடமும்) சென்று யூனியன் பிரதேசமாக ஆவதின் அவசியத்தையும், நன்மையையும் எடுத்துச் சொல்லியிருந்தோம். அவர்கள் அனைவரும் ஒருமனதாகவும் முழுமனதாகவும் இதுவரை லடாக் பகுதியிலிருந்து தேர்வான பாராளுமன்ற உறுப்பினர்களைக் காட்டிலும் அதிகபட்ச வாக்குவித்தியாசதில் என்னை அவைக்கு அனுபிவைத்துள்ளனர். மக்கள் பாரதப் பிரதமர் திரு. மோதியை முழுமையாய் நம்பினார்கள். இந்தத் தனி யூனியன் பிரதேசத்து அறிவிப்பை முழுமனதுடன் வரவேற்கின்றனர்.
கார்கிலைப் பற்றிப் பேசும் அவை உறுப்பினர்களுக்கு கார்கிலைப் பற்றி என்ன தெரியும்? நாடாளுமன்ற கூட்டுக் குழு ஜம்மு மற்றும் காஷ்மீருக்குச் சென்றனர். மதிப்பிற்குரிய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் லே வந்திருந்தார். அப்போது அவர் கேட்ட ‘உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்ற கேள்விக்கு, லடாக்கைத் தனி யூனியன் பிரதேசமாக மாற்றுங்கள் என்பதே எங்கள் கோரிக்கையாக இருந்தது. வேறு என்ன வேண்டும் என்ற கேள்விக்கு, ‘லடாக்கைத் தனி யுனியன் பிரதேசமாக மாற்றுவது மட்டுமே எங்கள் கோரிக்கை; வேறு எதுவும் வேண்டாம்’ என்றோம். லடாக்கின் அனைத்து மத அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைவரும் ஒரே குரலில் லடாக்கைத் தனி யூனியன் பிரதேசமாக ஆக்க கையெழுத்திட்டு மனு அளித்தோம். இந்த மனுவில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கையெழுத்திட்டிருந்தன. ஆனால் ஜனநாயகம் பேசும் காங்கிரஸ் என்ன செய்தது? அம் மனுவில் கையெழுத்திட்ட காங்கிரஸ் தலைவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதுதானா உங்கள் ஜனநாயகம்? இதுதானா உங்கள் பேச்சுரிமை?
நேற்று (5-8-2019) காலை 11 மணியிலிருந்து சபை உறுப்பினர்கள் பேசுவதைக் கேட்டுகொண்டிருக்கிறேன். இந்த சட்டப்பிரிவுகளை நீக்குவதால் காஷ்மீர மக்களின் நிலைமை என்னாகும், அவர்களின் உரிமை என்னாகும் எனத் தொண்டை கிழிய கத்திக்கொண்டிருந்தனர். இந்த அவை மூலமாக அப்படிப் பேசுபவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். அவர்கள் மூலமாய் ஜம்மு காஷ்மீரத்தை ஆட்சி செய்பவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். இந்திய அரசாங்கத்திடம் இருந்து வரும் பணம் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கான பணம். ஆனால் நீங்கள் லடாக்கின் வளர்ச்சிக்கு என்ன செய்தீர்கள்? லடாக்கிற்கான பணத்தையும் சேர்த்து காஷ்மீருக்குச் செலவு செய்தீர்கள். இதுவா உங்கள் சம உரிமை?
அடுத்ததாக, ஜம்மு மற்றும் காஷ்மீரத்திற்கு இரு தலைநகரங்கள். குளிர்காலத் தலைநகரம் மற்றும் கோடைகாலத் தலைநகரம். அதில் லடாக்கிற்கான பிரதிநிதித்துவம் என்ன என்பதைப் பாருங்கள். தலைமைச் செயலகத்தில் 1000 வேலை வாய்ப்புகள் உருவாகிறதெனில் காஷ்மீரிகள் எடுத்துக்கொண்டது போக, ஜம்மு மக்கள் சண்டையிட்டுப் போராடிப் பெற்றுக் கொண்டது போக, மீதம் உள்ளதில் எத்தனை இடங்கள் லடாக்கிகளுக்கு தந்தீர்கள். இதுவா உங்கள் சம உரிமை?
திரு அத்னான் என்ற உறுப்பினர் மத்தியப் பல்கலைக்கழகம் குறித்துப் பேசினார். காஷ்மீரிகளுக்கு ஒன்றும், போராடிப் பெற்ற ஜம்மு மக்களுக்கு ஒன்றும் கிடைத்தது. ஆனால் லடாக்கிற்காக, நான் மாணவர்கள் தலைவனாக, அனைத்து மாணவர்களையும் ஒன்றுதிரட்டி தலையில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமெனப் போராடினேன். கொடுத்தீர்களா? இதுவா உங்கள் சம உரிமை?
இப்போது லடாக்கின் வளர்ச்சியைப் பற்றிக் கவலைப்படும் காங்கிரஸ் உறுப்பினர்கள், முதலமைச்சராக இருந்தபோது லடாக்கின் வளர்ச்சிக்காக என்ன செய்தீர்கள்? புதிய மாவட்டங்களைப் பிரிக்கும்போதும் பாதி காஷ்மீருக்கும் மீதி ஜம்முவிற்கும் கொடுத்தீர்கள். லடாக்கிற்கு என்ன கொடுத்தீர்கள்? இதுவா உங்கள் சம உரிமை?
வரிவடிவமே இல்லாத காஷ்மீர மொழிக்கு அந்தஸ்து கொடுத்தீர்கள். ஜம்முவின் மொழிக்கும் அந்தஸ்து கொடுத்தீர்கள். ஆனால் வரிவடிவமும், பேச்சு வடிவமும் கொண்ட தனித்துவம் கொண்ட லடாக்கிய மொழிக்கு இன்றுவரை மொழி அந்தஸ்து கொடுக்கவில்லை. இதுவா உங்கள் சம உரிமை?
உறுப்பினர்கள் அனைவரும் மதச்சார்பின்மை, மற்றும் மக்களாட்சி குறித்துப் பேசினார்கள் . அது குறித்தும் நான் பேச விரும்புகிறேன். சட்ட பிரிவு 370 இருக்கும் தைரியத்தில் காஷ்மீரப் பண்டிட்டுகளை இரவோடு இரவாக அடித்து விரட்டினீர்களே, இதுவா உங்கள் மதசார்பின்மை? இதுவா உங்கள் சம உரிமை?
அவை உறுப்பினர் ஒருவர் சொல்கிறார், லடாக்கில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகமுள்ளது, அவர்களின் நிலை என்னாகும் எனக் கவலைப்படுகிறார். நான் சொல்கிறேன், இதே சட்டப் பிரிவுகளைத் தவறாகப் பயன்படுத்தித்தான் லடாக்கிய பெளத்தர்களைப் படுகொலை செய்து, திட்டமிட்டே இஸ்லாமியர்களின் எண்ணிக்கை உயரும்படி செய்தீர்கள். இதுவா உங்கள் செக்யூலரிசம்?
இந்த இரு குடும்பங்கள், நான் சொல்கிறேன், அவர்கள் ஆட்சி செலுத்தவில்லை, ராஜாங்கம் நடத்தினார்கள்! இதே குடும்பம், 1979ல், லடாக்கை இரு பகுதிகளாகப் பிரித்தது. பெளத்தர்கள் மெஜாரிட்டியுடன் லே மாவட்டம், இஸ்லாமியர்கள் மெஜாரிட்டியுடன் கார்கில் மாவட்டம் எனப் பிரித்தீர்கள். லடாக்கிய சகோதரர்களுக்குள் சண்டையை மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள். இதுவா உங்கள் சம உரிமை? இதுவா உங்கள் செக்யூலரிசம்?
இங்கு அமர்ந்துகொண்டு கார்கிலில் முழு அடைப்பு எனச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு யார் சொன்னது கார்கிலில் முழு அடைப்பு என? புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்! நானிருக்கிறேன், லடாக்கிலிருந்து வந்திருக்கிறேன். எந்தப் புத்தகத்தையும் பத்திரிகைகளையும் படித்துவிட்டுப் பேசிக்கொண்டிருக்கவில்லை. கள நிலவரத்தை நான் லடாக்கியனாகப் பேசுகிறேன். நீங்கள் லடாக்கிலிருந்து வரவில்லை. நான் வந்திருக்கிறேன். இதுவரை நீங்கள் பேசி நாங்கள் கேட்டோம். இன்று நாங்கள் பேசுகிறோம், நீங்கள் கேளுங்கள். சௌகரியமாக அமர்ந்து கேளுங்கள்.
இவர்கள் அனைவரும் ஒரு சாலையையும், மார்கெட்டையும் கார்கில் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சகோதரரே, உங்களுக்கு கார்கிலைப் பார்க்க வேண்டுமெனில் சம்ஸ்கர் செல்லுங்கள், வாகா முல்கோட் செல்லுங்கள், ஆர்யன் பள்ளத்தாக்கிற்குச் செல்லுங்கள், த்ஸ்தி கர்கோன்னைப் பாருங்கள். 70 சதவீதப் பகுதிகளும், மக்களும் இந்த முடிவிற்கு வரவேற்பு அளிக்கின்றனர். இந்தச் சட்டத்திருத்தத்திற்கு நன்றி சொல்கின்றனர். கார்கிலில் இன்று நடப்பதாகச் சொல்வதெல்லாம் உண்மையில் நடக்கவில்லை, இங்கிருப்பவர்கள் அங்கே தொலைபேசி மூலம் பேசிச் செய்ய வைக்கின்றனர். அவர்களுக்கே தெரியாது தாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என. கார்கில் மக்கள் தங்கள் நலனைக்குறித்து யோசிக்க வேண்டும், இங்கிருந்து உத்தரவு கொடுப்பவர்களின் பேசுக்களைக் கேட்டுக்கொண்டிருக்கக்கூடாது.
ஜன சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி ஒரு தீர்மானம் எடுத்தார். ஒரு நாட்டில் இரு அரசு, இரு அடையாளங்கள், இரு தலைமைகள் இருத்தல் கூடாது, கூடாது, கூடாது என. இதே சங்கல்பத்துடன் நான் கர்வத்துடன் சொல்கிறேன், இவர்களுக்கே தெரியாது, இதுவரை லடாக்கியர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என. இவர்கள் இன்றைக்கு ‘எங்கள் கொடி போகிறது’ என ஒப்பாரி வைக்கிறார்கள். சகோதரா, லடாக்கியர்கள் 2011லேயே உங்கள் கொடியை அகற்றிவிட்டோமே, லடாக் ஹில் அட்டோனமஸ் டெவலப்மெண்ட் கவுன்சில் சேர்மன் , கவுன்சிலர், டெப்டி மினிஸ்டர் ஒரு தீர்மானம் செய்து ஜம்மு காஷ்மீர் கொடியை அகற்றிவிட்டு இந்திய மூவர்ணக் கொடியை அல்லவா பயன்படுத்தி வருகிறோம்! ஏனெனில் நாங்கள் இந்தியாவின் பகுதியாகவே இருக்க விரும்புகிறோம். இதுதான் லடாக்.
நான் இரு குடும்பங்களைப் பற்றிப் பேசி வருகிறேன். காஷ்மீரின் கௌரவம் காஷ்மீரின் கௌரவம் என தண்டோரா அடித்துக்கொண்டிருக்கிறார்களே, அவர்கள் சமாதானம் பேசுபவர்களல்ல. அவர்கள்தான் பிரச்சினையே. அந்தப் பிரச்சினை முடிவுக்கு வருகிறது. காஷ்மீர் தனது பாட்டன் சொத்து என்ற திமிரில் அவர்கள் அதிகார போதையிலிருக்கிறார்கள். அப்படி இல்லை, இல்லவே இல்லை.
எனது உரையை முடிக்கும் முன்னர் இந்திய அரசுக்கும், மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கும், அமித்ஷா ஜி அவர்களுக்கும், மற்றும் இந்த அவை உறுப்பினர்களுக்கும், இன்று எதிர்ப்பு தெரிவித்துவிட்டு நாளை இதன் பலனை அனுபவிக்கப் போகிறவர்களுக்கும் எனது முழு நன்றிகளை லடாக்கியர்கள் சார்பாகத் தெரிவிக்க விரும்புகிறேன், ஏனெனில், இந்திய சரித்திரத்தில் முதன்முறையாய் லடாக்கியர்களின் தேவைகளை, எண்ணங்களை இந்த அரசு கேட்கிறது. கார்கிலிலும், சீனத்தை ஒட்டியுள்ள பகுதியிலும் கஷ்டங்களை அனுபவிக்கும் லடாக்கியர்களின் கஷ்டங்களை இந்த அரசு புரிந்துகொள்கிறது.
இந்தச் சட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். இதற்குப் பின்னரும் குழப்பத்தில் இருப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். நாட்டின் மீது அன்பிருப்பின் அதை வெளியில் சொல், யாருக்காகவும் காத்திருக்காதே. கர்வத்துடன் சொல் ஜெய் ஹிந்த்! அபிமானத்துடன் சொல், நாங்கள் இந்தியர்கள் என!"
No comments:
Post a Comment