Tuesday, June 17, 2014

மோதியின் கசப்பான மருந்து ??





மோதி சொன்ன கசப்பான மருந்து என்னவாக இருக்கும்?
அந்த மருந்து யாருக்கு கசப்பானதாக இருக்கும்?
ஏன் கசப்பானதாக இருக்கும்?
மன்மோகன் சிங் கசப்பான மருந்து என்று சொன்னபோதெல்லாம்
கசப்பானது என்று வாந்தி எடுத்தவர்களுக்கு
மோதி கசப்பான மருந்து என்று சொன்னதை ஏன் வாந்தி
எடுத்து வெளியில் தள்ள முடியவில்லை?
இதுதான் மாமியார் உடைத்தால் மண்குடம்,  மருமகள் உடைத்தால்
பொன்குடம் என்று சொல்வார்களோ!

இப்படியாக ஊகங்களின் அடிப்படையில் ஊடகங்கள் அவரவர்
திறமையைக் காட்டும் வகையில் விவாதங்களை நடத்திக்
கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட 16/6/14 இரவு புதிய தலைமுறை
தொலைக்காட்சியில் நேர்ப்படப் பேசு நிகழ்ச்சி இக்கசப்பான மருந்து
குறித்த விவாதங்களை முன்வைத்தே நடந்தது.

எப்போதுமே கசப்பான மருந்துகள் கசப்பாக இருந்தாலும்
வாழ்க்கையைக் கசப்பாக்குவதில்லை என்பது
நம் பாட்டி வைத்தியத்தின் தத்துவம்.
அந்தப் பழைய தத்துவத்தை புதிய தலைமுறை மறந்துவிட்டது
நல்லது தான். கசப்பானதெல்லாம் கசப்பானதாகவே இருக்கும்
என்பதுதான் இன்றைய அரசியல் பொருளாதர கணக்கோ என்னவோ!

மோதி சொன்ன கசப்பான மருந்து என்னவாக இருக்கும் என்பதை
அறிய இத்தனை ஆராய்ச்சிகளும் விவாதங்களும் ஏன்?
ரொம்ப சிம்பிள், ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ளவும்
அவர் பேசுவதைப் புரிந்து கொள்ளவும் ரொம்பவும் பின்னோக்கி
2002 கோத்ரா வரை பயணம் செய்தாக வேண்டும் என்றெல்லாம்
எதுவும் அவசியமில்லை. மிக அண்மைக்காலத்தின் அவர்
சம்ப்ந்தப்பட்ட நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்தாலே
போதும்.

2010ல் மேற்கு வங்க மாநிலத்தில் சிங்கூரில் டாடா மோட்டார்ஸ்
நிறுவனம் 'ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு கார்" என்ற முழக்கத்தை
முன்வைத்து தொழிற்சாலை ஆரம்பிக்க முன்வந்தது. அப்போது
அங்கு ஆட்சியில் இருந்த இடதுசாரிகள் அரசு, உழவர்களின் நிலத்தைப்
பறித்து டாடாவிடம் கொடுத்தது. அதை எதிர்த்து மம்தா பானர்ஜியும்
மாவோயிஸ்டுகளும் உழவர்களும் களத்தில் இறங்கிப் போராடினார்கள்.
நிலமை கை மீறியவுடன் டாடா நிறுவனம் பின்வாங்கியது.
" நாங்கள் வீடற்றவர்களாக நடுத்தெருவில் நின்றபோது எங்களுக்கு
அடைக்கலம் தந்தவர் மோதி" என்று டாடா நிறுவன இயக்குநர்
இரவிகாந்த் மோதியைப் புகழ்ந்தார், ஏன் தெரியுமா?
மோதி டாடா நிறுவனத்திற்கு ஒரே நாளில் அகமதாபாத் அருகில்
உள்ள 1000 ஏக்கர் நிலத்தைக் கொடுத்தார். அது மட்டுமல்ல,
நானோ கார் தயாரிக்க டாடாவின் முதலீடு : வெறும் 3000 கோடி ரூபாய்தான்.
மோதி வாரி வழங்கியது ரூ. 30,000 கோடி. நிதி உதவி, மின் சலுகை, கடன், வரிச்சலுகை இத்தியாதி ..


மிக அண்மைக்காலத்திய இன்னொரு முக்கியமான நிகழ்வு,
நடந்து முடிந்த தேர்தல் களம்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் ரூபாய் 70
இலட்சம் வரை மட்டுமே செலவு செய்யலாம் என்கிறது தேர்தல்
ஆணையம். ஆனால் அதே தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியின்
தேர்தல் செலவுக்கான உச்சவரம்பை நிர்ணயிக்கவில்லை. அதன்படி
பார்த்தால் நடந்து முடிந்த தேர்தலுக்கு
இந்திய அரசுக்கான செலவு : ரூ 3426 கோடி.
அவுட்லுக் மே 26, 2014 ஆய்வின் படி, வேட்பாளர்களும் கட்சிகளும்
செலவு செய்த மொத்த தொகை : ரூ 31,950 கோடி.
இத்தொகையில் 21,300 கோடி செலவு செய்த கட்சி பா. ஜனதா கட்சி.
மற்ற கட்சிகள் செலவு செய்தது 10,650 கோடி மட்டும் தான்.

காங்கிரசுக்கும் பா. ஜனதா கட்சிக்கும் பொருளாதர, வெளிநாட்டுக்
கொள்கைகளில் பெருத்த வேறுபாடு ஏதாவது இருக்குமா?
என்ற கேள்விக்கே அர்த்தமில்லை.
இரு கட்சிகளும் வெளிநாட்டுக் கொள்கையில் அமெரிக்காவை ஆதரிக்கும்,
பொருளாதரக் கொள்கையில் முதலாளித்துவ கார்ப்பரேட் கைப்பாவைகளாகவே இருக்கும்.
THEY WILL BE PART AND PARCEL OF CORPORATOCRACY.
THIS IS A NEW KIND OF POLARIZATION IN POLITICS (TEHALKA 2008)

No comments:

Post a Comment