Monday, June 23, 2014

கண்ணதாசனின் "போய்வருகிறேன்"







இன்று கண்ணதாசனின் பிறந்தநாள். 24 ஜூன் 1927.

திராவிட அரசியல் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு
கண்ணதாசனின் வனவாசம் மிகுந்த பாதிப்பை
ஏற்படுத்தியது.

இன்றும் சமூக வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும்
தனித்து நிற்கும் போதெல்லாம்
என் காயங்களுக்கு மயிலிறகாய் இருப்பது
கண்ணதாசனின் போய்வருகிறேன் கட்டுரைதான்.

கண்ணதாசனுடன் நான் முரண்படும் புள்ளிகளும் உண்டு.
(யாருடன் தான் நான் முரண்படவில்லை!) காலத்தை தாண்டி
இந்த நிமிடம் வரை "போய்வருகிறேன்" கட்டுரையின் பாதிப்பை
உணர்கிறேன். சில தருணங்களில் அப்படி அதில் என்ன இருக்கிறது
என்று கூட நினைத்தது உண்டு. அந்த வரிகளில் பாதிக்கப்பட்ட
மனசின் வேதனையும் விம்மலும் ஏமாற்றப்பட்டவனின் அழுகுரலும்
ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
கண்ணதாசன் போய் பல வருடங்கள் ஆனபிறகும் இன்றும்
போய்வருகிறேன் என்ற குரலின் ஒவ்வொரு வரிகளும் வெவ்வேறு
தருணங்களில் பற்பல அர்த்தங்களுடன் எனக்குள் பயணித்துக்  கொண்டிருக்கின்றன.

அக்கட்டுரையிலிருந்து சிலவரிகள்:

என் இனிய நண்பர்களே!

தூய்மையான உங்கள்  இதயங்களைக் கொஞ்சம் இந்தப் பக்கம் திருப்பங்கள்

நல்லோர் உரைகளைக் கேட்டு கேட்டு மெல்லிய பண்பு படைத்த
உங்கள் செவிகளைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள்,

உங்கள் வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் விழுந்துவிடப் போகிறது.
உங்கள் சோலையிலிருந்து ஒரு குயில் கண்காணா உலகத்திற்கு
பறந்து செல்லப் போகிறது.
உங்கள் மலர்த் தோட்டத்திலிருந்து ஒரு மலர்
உதிர்ந்துவிடப் போகிறது.
உங்கள் கூட்டத்தில் கட்டப்பட்டிருந்த நன்றி மிக்க ஒரு உருவம்
தன் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு போய்விடப் போகிறது.
தனக்கென வாழ்ந்து பழக்கமில்லாதது என்று உங்களால் சொல்லப்பட்ட
ஒருஇதயத்தை நீங்கள் இழந்துவிடப் போகிறீர்கள்.
இருள் கப்பியதும் சோகமயமானதுமான முடிவை
உங்கள் தோழன் பெறப்போகிறான.
முடிவின் தலைவாசலில் நின்று கொண்டு அவன்
உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறான்.
முடிவின் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன.
அந்த வாசலில் நிற்கின்ற உங்கள் நண்பன் சிரம் தாழ்த்தி
கடைசி முறையாக உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
துள்ளி துடித்துக் கொண்டிருந்த அவனுடைய போராட்ட இதயம்
மெல்ல மெல்ல அமைதி அடைந்துக் கொண்டிருக்கிறது.
எந்தக் கடமையை முழு மனதோடும்
யாருடைய தூண்டுதலும் இல்லாமல் ஏற்றுக் கொண்டிருந்தானோ
அந்தக் கடமையிலிருந்து ஓய்வு பெறப் போகிறான்.
அவன் இந்த முடிவை விரும்பவில்லை.
இந்த முடிவு அவனை விரும்புகிறது.
தாண்ட முடியாத உங்கள் அன்பு வேலியை அவன்
தாண்டிக் கொண்டு ஓடப் போகிறான்.
அடர்ந்தக் காடும் பசுமை நிறைந்த மரங்களும் மணம் பரப்பும்
மலர்களும் சலசலவென ஓடிக்கொண்டிருக்கும் நதியும்
அந்த நதியின் கரையிலுள்ள அழகிய சிறு இல்லமும்
அமைதியை நாடும் அவன் கண்களுக்குத் தெரிந்துக்
கொண்டிருக்கின்றன.

அவன் இனி சுதந்திரம் நிறைந்தவன்.
அவன் இனி தனிமனிதன்,
ஆனால் எந்த மூலையில் இருந்தாலும்
அவன் உங்களையே சிந்தித்துக் கொண்டிருப்பான்.
கன்னங்கரிய காகங்களையும் குயில்களையும் காணும் போதும்
செக்கச்சிவந்த செம்போத்துப் பறவைகளையும் பார்க்கும் போதும்
உங்கள் அணைப்பிலே அவன் மகிழ்ந்துக் கொண்டிருந்த
இன்பகரமான நாட்களை எண்ணிக்கொண்டிருப்பான்.
கனவுகளிலும் நினைவுகளிலும் எளிய கவிதை மலர்களை
பறித்துக் கொண்டிருந்த அவனது உள்ளம்
உங்களுக்காகவே ஏங்கிக் கொண்டிருக்கும்.
ஒருவேளை மறுபடியும் அவன் உங்களைச் சந்திக்க நேர்ந்தால்
ஊமை தான் கண்ட கனவுகளை
சைகையில் விளக்குவது போல்
தத்துவங்களால் விமர்சனம் செய்துக் கொண்டிருப்பான்.
எதையும் பொருட்படுத்தாதவனாகவும்
எதிலும் அகப்பட்டுக் கொள்ளாதவனாகவும்தான் இதுவரை
அவன் உங்களோடு வாழ்ந்திருந்தான்.
அவனது வாழ்க்கை வேடிக்கையான நாடகமாக
முடிந்து விடப் போகிறது.
பதவி வேண்டும், பதவிக்கு மேல் பதவி வேண்டும்
என்று அவன் அடித்துக் கொண்டதை எப்போதாவது
நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
தன்னைப் பற்றி தானே விளம்பரம் செய்து கொள்ளும்
வேடிக்கை மனிதர்கள் கூட்டத்தில்
எப்போதாவது அவனை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா?
இன்னாருடைய கண்ணீருக்கு அவன் காரணமாய் இருந்தான்
என்று எப்போதாவது அவனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?
அவன் ஜார்ஜ் மன்னரின் நிழலில் குடி இருந்திருக்கிறான்.
அவன் சார்லஸின் குணங்களை அனுபவித்திருக்கிறான்.
ஆனால் அவன் மட்டும் பைரனாகவே வாழ்ந்திருக்கிறான்.
ஏனோ அவன் மனம் சலித்துவிட்டது.
அவன் வேலைப்பார்த்த அரசாங்கம் அவனை
நிம்மதி இல்லாமல் அடித்துவிட்டது.
உள்ளதை உள்ளபடி சொல்வது எவ்வளவு
ஆபத்தானது என்பதை அவன் அனுபவ பூர்வமாகக் கண்டுவிட்டான்.
நெஞ்சத்தால் ஒரு மனிதன், சொல்லால் ஒரு மனிதன்,
'செயலால் ஒரு மனிதன் என்று ஒவ்வொரு மனிதனும்
மூன்று வடிவம் எடுக்கும் உலத்தில் அவன் மட்டும்
ஒரே மனிதனாக வாழ்ந்துவிட்டான்.
அவன் அன்போடு கை போட்ட சில தோள்களில்
முட்செடிகள் கத்தை கத்தையாக வளர்ந்திருந்தன.
யாரைக் குத்துகிறோம் என்று தெரியாமலேயே
அவன் கையைக் கிழித்துவிட்டன.
கையில் ரத்தம் வடிகிறது என்று கதறினான்.
அதை எப்படி நீ சத்தம் போட்டுச் சொல்லலாம்
என்று சிலர் கோபித்தனர்.
அவனுக்குச் சிரிப்பு வந்தது.
உடனே அழுகையும் வந்தது.
ஊமையாகவே இருந்துவிட்டான்.
என் அருமை நண்பர்களே!!
இது அவனுக்குப் பழக்கமில்லாத ஒன்று.
இரகசியங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவனுக்குத் தெரியாதுய்.
அதிலும், பத்துபேரின் கட்டளைக்குப் பயந்து தான்
தவறேன்று நினைப்பதைச் சரியென்று மாற்றிக்கொள்ள
அவன் தயாராக இல்லை.
.......
.........
தான் நினைக்கும் அனைத்தையும் உரத்தக் குரலில் பாடுவான்.
ஒவ்வொரு வார்த்தையையும் முத்துச் சரம் போல கோர்ப்பான்.
உங்கள் இதயங்களையும் காதுகளையும்
அவன் தடவிக் கொண்டிருப்பான்.
பழைய பாணர் பரம்பரையில் ஒருவனாகவே
 அவன் தன்னை முடிவுக் கட்டிக் கொண்டான்.
அவன் எப்போதும் உங்கள் நண்பன்.
நீங்கள் அவனை மறந்துவிடலாம்
நிச்சயமாக அவன் உங்களை மறக்க மாட்டான்.
எப்போதாவது தற்செயலாக நீங்கள் அவனைச் சந்திக்க
நேர்ந்தால் அவன் கண்களில் கண்ணீர் வரும்.
அந்தக் கண்ணீர்  அவன் மாறவில்லை என்பதைக் காட்டும்.
.........

அவன் புறப்பட்டது என்னவோ வேட்டைக்குத்தான்
வேட்டையாடும் நேரமும் தூரமும் அவன் கண்களுக்கு'
விலகியே போய்க்கொண்டிருந்தன.
......
'தான் வேட்டைக்காரன்' என்று நினைத்துக் கொண்டே
பாட்டுப்பாட அவனால் முடியவில்லை.
நீ பாட்டுப்பாடுகிறவனா?
வேட்டைக்காரனா? என்கிற கேள்வி
அவன் இதயத்தில் எழுந்து கொண்டே இருந்தது.

என் உயிரினும் இனியவர்களே!
அந்தக் கேள்விக்கு அவன் பதில் கண்டுபிடித்துவிட்டான்.

அமைதி நிறைந்த உலகம்..
அங்கே ஒரு கயிற்றுக்கட்டிலில் அவன் சாய்ந்துக்கிடக்கிறான்.
....
ஒரு இலையின்  விளிம்பிலிருந்து பனித்துளி மலர் மீது
விழுகிறது.
அந்த ஓசைக்கூட அவன் காதுகளுக்கு கேட்கிறது.
செம்பக மலர்  ஒன்று பூமியில் விழுகிறது,
இலட்சக்கணக்கானவர்களின் கையோலியைக் கேட்டு கேட்டு
மரத்துப் போன அவன் செவிகளில்,
அந்த மெல்லிய மலர்விழும் ஓசையைக் கேட்குமளவுக்கு
மென்மையடைந்துவிடுகின்றன.
....

ஏறும்போது இருந்த மயக்கம் இறங்கும் போது இல்லை.
.....
......

பேரிச்சைகளுக்கு நடுவே, அடிதடிகளுக்கு நடுவே குழுவும் குழுவும்
மோதிக்கொள்ளும் கூச்சல்களுக்கிடையே,
என் நண்பர்களே கூர்ந்து கேளுங்கள்!
ஒரு சிறுபாட்டு உங்கள் காதுகளுக்கு கேட்கிறதா?

"நான் நானாக, எனக்குள் எனக்காக, என் பொருட்டுத்தனியாக
அடங்கி அமைவுற்றிருக்கிறேன்."

இந்தப் பாடல் உங்கள் காதுகளில் விழுகிறதா?
அதோ அவன் தான் பாடிக் கொண்டிருக்கிறான்.
அவன் இப்படித் தினமும் பாடுவான.
ஒவ்வொரு கட்டத்திலும், அவன் வாழ்வில் ஒவ்வொரு
அதிசயம் நடக்கும்.
அந்த அதிசயங்கள் ஒவ்வொன்றும் அவன் நம்மவன்
என்று உங்களைச் சொல்ல வைக்கும்.
.....
இதோ பாருங்கள், அவன் சாவைப் பார்த்துவிட்டுத்தான்
வாழ்வுக்குத் திரும்பி வந்திருக்கிறான்.
மற்றவர்களின் கால்களில் தன் உடம்பைத் தூக்கி நிறுத்திவிட்டு
தானே நடப்பது போல பாவித்துக் கொள்வோர் அவன் நண்பனாக
இருந்திருக்கிறார்கள்.
அவனை அதிகம் பேச வைக்காதீர்கள்.
அவன் துறவியாவதை உங்களால் அனுமதிக்க முடியாதென்றால்
அவனை ஒரு மெளன தேவதையாக வைத்துக் கொள்ளுங்கள்.





2 comments:

  1. கண்ணதாசன்
    நிரந்தரமாவர்
    எந்த நிலையிலும் அவருக்கு
    மரணமிலலை

    நினைவுநாளில் கவியரசுவைப் போற்றுவோம்

    ReplyDelete
  2. வனவாசமும் மனவாசமும் என் கல்லூரி நாட்களில் படித்தவை . வெண்புறா மன்றம் என்ற அவரின் அமைப்பில் இராணிப்பேட்டையில் நான் இயங்கினேன் . அவரை வைத்து அரசியல் கூட்டங்கள் நடத்திய அனுபவமும் உண்டு . கவிதையை வாழவைக்கத் தெரிந்து கொண்டவர் தன்னை வாழவைத்துக் கொள்ளும் கலையை அறிய மறுத்தவர் . காலத்தால அழியாதவர் .

    ReplyDelete