Tuesday, August 28, 2018

தமிழாற்றுப்படை ..கால்டுவெல் -வைரமுத்து.





தமிழாற்றுப்படை கால்டுவெல்லுக்கு 
செய்த துரோகம்…
கவிஞர் வைரமுத்து உரையில்..
கால்டுவெல் தன் இன ஆராய்ச்சியில் ஆதித்தமிழனாக
கொண்டாடிய தமிழனை நீங்கள் 
வேட்டிக்கட்டிய விலங்குகளாகத் திரிந்த மக்கள் “
என்று சொன்ன போது 
தாமிரபரணி மீண்டும் தலைகுனிந்தது.
தமிழ்ச் சாதீ கால்டுவெல்லுக்கு இழைத்த துரோகம்
தொடர்கிறது.
கால்டுவெல் ஊர் திருத்தியும், சீர் திருத்தியும், பேர் திருத்தியும் 
ஆற்றிய பெருந்தொண்டுகளை மறைத்துவிட்டது மறதியின் புழுதி!”
என்று கால்டுவெல் விழாவில் எங்கள் நெல்லை மண்ணில்
பேசினீர்களே.. 
இது... மறதியின் புழுதி அல்ல…
கால்டுவெல்லின் ஆய்வும் கருத்தும் அரசியல் தளத்தில் 
பேசு பொருளாகி அவரவர் சுயலாபங்களுக்கு
ஏற்ற வகையில் வெட்டியும் ஒட்டியும் கையாளப்பட்டது 
என்பது தான் உண்மை.
கால்டுவெல்,
எங்களை மன்னித்துவிடுங்கள்...
காந்திக்கு துப்பாக்கி குண்டுகளைப்
பரிசாகக் கொடுத்த
மதவாதிகளை விடக் கொடியவர்கள் நாங்கள்.
இன்றுவரை எல்லா மேடைகளிலும்
உங்கள் பக்கங்களை
வாசிக்கமாலேயே உரக்கப் பேசுவதற்காக
எங்களை மன்னித்த மாமனிதரே..
எங்கள் சாதித்தமிழன்
அறிந்தே செய்த இந்த தவறுகளுக்காகவும் சேர்த்தே
அவர்களை மன்னித்தருளும்.
ஆமென்.
(விலங்குகளாகத் திரிந்தவர்கள் என்று சொல்வதற்கும்
சமூகம் விலங்கினும் கீழாக நடத்திய மனிதர்கள் 
என்று சொல்வதற்குமான அர்த்த வேறுபாடுகள் அறியாதவரா
கவிஞர் வைரமுத்து.. ? !!)
#வைரமுத்து_தமிழாற்றுப்படை_கால்டுவெல்


Sunday, August 26, 2018

சூர்யா@நட்புமண்டலம்.6



ராக்கி கட்டி நம் நட்பை
சகோதர பாசமாக்கி
அவமானப்படுத்திவிடாதே.
ஒரு ரக்‌ஷாபந்தன் நாளில் நம் நட்பு
காயப்பட்டது.
நீ எனக்கும் ரக்‌ஷாபந்தன் கயிறு கட்டி
சகோதரன் ஆக்கிவிடு என்று சொன்னாய்.
மின்னல் என்னைத் தாக்கியது.
என் வனம் எரிந்தது.
என் சூர்யாவைச் சுற்றி புகைமண்டலம்..
இது என்ன கிரஹணம்?
நம் நட்பின் கவிதையை சுட்டுப் பொசுக்கி
அதில் குளிர்காய்வது.. யார்?
நேற்று வரை தேவைப்படாத சகோதர உறவு
இன்று எங்கிருந்து முளைத்தது?
சகோதரன் - சகோதரி உறவு மிகச் சிறந்ததுதான்.
-இயற்கையானதுதான்.
- அற்புதமானதுதான்.
-புனிதமானதுதான்.
-ஆனால் அதிசயமானதல்லவே.
விடியலும் அஸ்தமனமும் இயற்கையானது சூர்யா..
பூமி உருண்டையின் சுழற்சியில்
பகலும் இரவும் அதிசயமல்ல சூர்யா.
அதெல்லாம் நீ அறியாததும் அல்ல.
நம் நட்பை சாதாரணமான ரத்த உறவின் வடிகாலான
சகோதரப் பாசத்தில்
தொலைத்துவிட வேண்டுமா?
தொலைப்பதற்காகவா நம் கனவுகளைத் தோண்டி தோண்டி
இந்த நட்பு வைரத்தை வெட்டி எடுத்தோம்?
சீர்வரிசைக்காக அடிதடி
சொத்து தகராறில் வெட்டு கொலை
இப்படி சீர்கெட்டு கிடக்கும் சகோதர உறவுகளுடன்
நம் நட்பையும் ஏன் கரைத்து விட வேண்டும்?
உன்னுடன் ஒராண்டே பழகிய உன் நண்பனை
நீ என்றாவது சகோதரன் என் று அழைத்ததுண்டா?
ஓர் ஆணிடன் பழகும்போது எட்டிப் பார்க்காத சகோதரப் பாசம்
ஒரு பெண்ணுடன் பழகும்போது மட்டும் எட்டிப்
பார்த்தே ஆகவேண்டும் என்று ஏதாவது சட்டமா?
அப்படி ஒரு சட்டம் -
எழுதப்படாத சட்டம் இருக்குமேயானால்
அந்த சட்டத்தை உடைப்போம் வா.

இந்த மண்ணில் எதுவும் உடைக்கப் படாதவரை 
உண்மைகள் வெளிச்சத்திற்கு வராது. 
வந்ததும் இல்லை.
சகோதர உறவில் தான் நம் நட்பை
நியாயப் படுத்திக் கொள்ள முடியும் என்றால்
அந்த நியாயம் என்னைப் பொருத்தவரை
நம் நட்பு தளத்திற்கு இழைக்கப் பட்ட அநியாயமே.!
எது நியாயம்?
எது அநியாயம்?
அண்டை வீட்டுக்காரனைக் கொன்றால் அது கொலை
அண்டை நாட்டுக்காரனைக் கொன்றால் அதுவே வீரம்.
வங்க தேசத்து சகோதரனுக்காக படை அனுப்பினால்
அது மனித தர்மம்.
இந்திய அரசின் ராஜ தந்திரம்.
ஆனால்-
இலங்கை சகோதரனுக்காக குரல் கொடுத்தால் கூட
அது அரசியல் குற்றம்.
தண்டனை.. சிறைவாசம்.
இதுதானே நம் மண்ணின் நியாய அநியாயங்களின்
அகரமுதலி சொல்லும் அர்த்தங்கள்
இந்த பச்சோந்திதனமான அர்த்தங்கள்
நமக்கு தேவையில்லை சூர்யா.
தோழியை காதலி என்றழைப்பதும் நினைப்பதும் எவ்வளவு தவறு
என்று நாம் நினைத்தோமோ அதைவிடத் தவறு , 
இமாலயத் தவறு..
உன் தோழியை நீ சகோதரி என்றழைப்பதுதானடா.
அதில் உன் ஆண்மையும் என் பெண்மையும்
கறைப்பட்டு விடுகின்றது.
ஆம் ..நம் பண்பாடே அதில் தலைகுனிந்து விடுகின்றது.
கடைசிவரை ஒரு பெண்ணின் உறவை
தோழி என்ற நட்பின் தளத்தில் தொடர முடியவில்லை என்றால்
இது என்னடா கலாச்சாரம்?

"கல்தோன்றி மண்தோன்றா காலத்தே 
வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி"
இதில் பெருமைபட்டுக் கொள்ள என்னடா இருக்கின்றது?
"ஏன் நீ இயல்பான விசயங்களை -
இந்தச் சமுதாயம் ஏற்றுக் கொண்டிருக்கும்
மிகச் சாதாரணமான விசயங்களையும்
கேள்விக்குறி ஆக்குகின்றாய்?"
என்று தானே கேட்கின்றாய்.
கேள்விகள் பிறந்தால் தானே
இன்றல்ல நாளையாவது பதில் கிடைக்கும்.
உன்னிடமும் நாம் வாழும் சமுதாயத்திடமும் பதிலில்லை
என்பதாலேயே என் கேள்விகளை நான் கருக்கலைப்பு
செய்ய மாட்டேன்.
தகப்பன் பெயர் தெரியாத நிலையில்,
சொல்ல முடியாத நிலையில்
சிசுவின் கருக்கலைப்பு வேண்டுமானலும்
நியாயப் படுத்தப்படலாம்.
ஆனால் பதில் தெரியாத நிலையில்,
பதில் தெரிந்தாலும் அதை எழுத தயங்கும் அறிவுஜீவிகளுக்காக
நான் என் கேள்விகளைக் கருக்கலைப்பு செய்யவே மாட்டேன்.
ராக்கி கயிற்றையும்
மஞ்சள் கயிற்றையும் விட
மேலானது நம் நட்பு.

Saturday, August 25, 2018

சூர்யா@நட்புமண்டல்.5




ஜானகிராமனின்அம்மா வந்தாள்கதைகளில் நான் 
மூழ்கிக்கிடந்தக் காலக்கட்டம்.
அன்பே ஆரமுதே என்று ஆரம்பித்து செம்பருத்தியாகி 
மரப்பசுவை விரட்டி
மோகமுள் யமுனாவாகி நான் ஜானகிராமனை 
பூஜை செய்து கும்பிடாதக் குறையாக
அலைந்துக் கொண்டிருந்தேன்.
அதுதான் உனக்குப் பிடிக்கவில்லை.
அந்தப் பைத்தியக்கார நாட்களில் ஒரு நாள் 
நீ உன் கண்கள் சிவப்பேற என்னைக் கடித்துக் குதறினாய்.


-உன்னைப் போல இரண்டுபேர் கலை கலைக்காகவே என்ற  
மயமானைத் தேடி ஓடுவதால்தான் இங்கே ஒழுக்கமும் 
கலாச்சாரமும் சிறைவைக்கப் பட்டிருக்கின்றது. 
இதைப் பற்றி எல்லாம் உங்களுக்கு என்ன கவலை?-என்றாய்

"ஆமாம் அப்படி என்னதான்  என் ஜானகிராமன் 
ஒழுக்க குறைவாக எழுதிவிட்டார்?” நானும் பதிலுக்கு உறுமினேன்.

"ஒகோ உன் ஜானகிராமனா...? உருப்பட்ட மாதிரிதான்.
உன் ஜானகிராமன் எழுதுவதில் எப்படிப்பட்ட ஆனந்தம் இருக்கின்றது
 என்று சொல்லியிருக்கின்றார் தெரியுமா? 
இந்தா இதைப்படித்துப் பார்" என்று அவரின் பேட்டி ஒன்றை 
என்னிடம் நீட்டினாய். அதில் சிலவரிகள்..

"எனக்கே எனக்கு என்று சொல்லுகிற எழுத்தைப்பற்றித்தான்
 இங்கு சொல்ல வேண்டும். அதுதான் மரியாதை. 
அதுதான் உயர்வு. அதுதான் கௌரவம்.” 
என்று ஆரம்பித்திருந்தார்.

எனக்கே எனக்காக எழுதுவதைப்பற்றி என்ன சொல்லமுடியும்.
 விஸ்தாரமாகச் சொல்ல என்ன இருக்கிறது? எனக்கே 
எனக்காக எழுதவேண்டும் போலிருக்கிறது. எழுதுகிறேன். 
அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் 
செய்கிற இன்பம் அதில் இருக்கிறது. காதல் செயகிற இன்பம், 
ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிபோதல், வேதனை -
எல்லாம் அதில் இருக்கின்றன. 
இன்னும் உள்ளபடி சொல்லவேண்டும் என்றால் 
பிறர் மனைவியை காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு-
எல்லாம் அதில் இருக்கின்றன. கண்ய நஷ்டம், பாபம் பாபம் என்று 
மூலையில் முடங்கியவாறே கையாலாகாமல் 
முணுமுணுக்கிற மனசாட்சி, சந்தி சிரிப்பு, சந்தேகக்கண்கள் - 
இத்தனையையும் பொருட்படுத்தாமல் முன்னேறுகிற 
பிடிவாதம், வெறி அதாவது ஆனந்தம் - எல்லாம் அதில் 
இருக்கின்றன.. 
உங்களுக்காக எழுதும் பொழுதோ, 
உங்களுக்கும் எனக்கும் எழுதும்போதோ மனைவியைக் 
காதலிக்கிற நல்லபிள்ளைத்தனமும் நிர்பந்தமும்தான் 
கண்ணுக்குத் தெரிகின்றன. பல சமயங்களில் 
நல்லபிள்ளையாகத்தான் காலம் தள்ளவேண்டியிருக்கிறது. 
மனிதவாழ்க்கையின் நெருக்கடிகளும் பிடுங்கல்களும் 
அப்படிச் செய்துவிடுகின்றன. 
இந்த நிர்பந்தங்கள் இல்லாதவர்களைக் கண்டும் 
பொறாமைப்படுகிறேன்......"
மெதுவாகப் படித்தேன். படித்து முடித்தவுடன் காச்மூச்சுனு 
கத்துவேன் என்று நினைத்தாயா..? எனக்கு அதில் அப்படி 
கோபப்பட எதுவுமே இருக்கின்ற மாதிரி தோணலை.
உனக்கு நான் சாதாரணமாக எடுத்துக் கொண்டதே எரிச்சல் தந்தது.
"அடுத்தவன் பொண்டாட்டியை காதலிக்கின்ற இன்பம்தான் 
அவரின் எழுத்து என்றால் அப்படிப்பட்ட எழுத்து எனக்கு 
வேண்டாம் " என்றாய்.
அப்படியானல் நீ யாருடைய எழுத்தையுமே படிக்க முடியாதுப்பா.. 
உன் கவிஞர்கள் எல்லோரும் இதைத்தானே 
கவிதையின் மொழியில் எழுதறீங்க..
கவிதையின் இன்பம் , எது கவிதை, எது ரசனை இதற்கெல்லாம் 
ஒரு பெண்ணை சம்மந்தப் படுத்தாமல் எழுதியது 
யார்? ஒருவரைச் சொல்ல முடியுமா, சொல்.

நீ கொண்டாடுகிற கண்ணதாசனில் ஆரம்ம்பித்து
நேற்று தொலைக்காட்சியில் பேட்டிக் கொடுத்த கவிஞர் வரை 
என்ன சொன்னார்கள் ?
ஒரே பெண்ணின் காதலில் மட்டும் இத்தனைக் காதல் கவிதைகளை 
எழுத முடியாது என்று . மீசையை முறுக்கிக் கொண்டு சொன்ன போது
நீ ரசித்தாயே.… !என்னப்பா அர்த்தம்?.. 
உன் கவிஞர்களுக்கு ஒரு நியாயம்? 
என் ஜானகிராமனுக்கு ஒரு நியாயமா? " என்றேன்.

நான் சொல்வது எதையுமே நீ கேட்கின்ற மனநிலைமையில் இல்லை.
வீண்வாதம், விதாண்டவாதம் செய்தாய்.

"பிறன் இல் விழையாமை" தான் ஆண்மை என்றாய்.

திருவள்ளுவர் வாழ்க!! என்றேன் நானும். 
ஒரு குற்றம், தவறு சமூகத்தில் இருந்தால் தானே
 அது கூடாது என்று சொல்ல வேண்டியதே வருகின்றது.. 
திருவள்ளுவர் காலத்திலேயே  எல்லாம் இருந்திருக்கிறது!”
என்றேன்

"ஆனால் நம் திருவள்ளுவர் அதை நியாயப்படுத்தவில்லை
 உன் ஜானகிராமனைப் போல


"போடா போ ஜானகிராமன் ஒன்னும் திருக்குறள் எழுதலை

"உன்னை மாதிரி நாலுபேர் இருக்கின்ற வரை 
இந்தச் சமுதாயம் உருப்படாது.. உருப்படவும் விடமாட்டீங்க


"ஏய் .. சும்மா ஜம்பம் அடிக்காதேடா..  
நீ உன் மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் 
காதலிக்கலை, ரசிக்கலை. ஆசைப்படலை.னு சொல்லு
பார்ப்போம்..”

சூர்யா, நீ அமைதியானாய்.
எனக்குத் தெரியும் என் சூர்யாவால் 
என்னிடம் பொய் சொல்ல முடியாது என்று.

நட்பு பற்றி கிருத்திகாதேவி என்ற பள்ளி மாணவி 
( நான் இக்கவிதையை வாசிக்கும் போது அவர் பள்ளி மாணவியாக
இருந்தார்!)எழுதிய கவிதைதான் 
மெளனம் நம்மைக் கவிந்திருந்த
அக்கணத்தில் நம் மூச்சுக்காற்றில் சொற்களின்றி தன்னை
வாசித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.


"வேறிடத்தில்-
உண்மைபேச வேண்டியவர்களும்
ஊமைகளாயிருப்பார்கள்,
இங்குமட்டும்தான்-
ஊமைகளும்
உண்மை பேசுபவர்களாய்
இருப்பார்கள்"

நான் உன்னிடம் கேட்ட கேள்வியை  நீ என்னிடம் கேட்டிருந்தால்
……………
என் பதிலும் கூட உன் பதிலாகத் தான் இருக்கும்.
சூர்யா..இந்தக் கேள்விக்கு மெளனம் மட்டும் தான் பதிலாக முடியும்.
எல்லோரிடமும் பொய்யாகப் பேசி, சிரித்து, 
அழுது, ஆடிப் பாடி..சலித்துவிட்டது இந்த முகமூடிகள்.
. உன்னிடம் நானும் என்னிடம் நீயும் பொய்முகம் இல்லாமல் 
நமக்கான சுயமுகத்துடன் சுவாசிப்பதால் தான்
நட்பு நம் காற்றை சுவாசித்து தன் இருத்தலை 
நிச்சயப்படுத்திக் கொண்டே 

(நட்பு வளரும்)

Friday, August 24, 2018

சூர்யா@நட்புமண்டலம்.4





சூர்யா..சாதிச் சண்டையில் நம் நட்பில் சகதிப் பட்டுவிடுமோ
என்று பயந்த நாட்களும் உண்டு.
எங்கள் மூதாதையர்கள் உன் மூதாதையர்களின் அடிமைகளாக..
அதுவும் எப்படிப்பட்ட அடிமைகளாய்.. 
எங்கள் பெண்கள் ரவிக்கை அணிய
அனுமதிக்கப் பட்டதில்லை. 
ஏன் எங்கள் தெருக்களில் ஆண் நாய்கள் வளர்க்க 
அனுமதிக்கிடையாதாம்.
இதெல்லாம் எனக்கு ரொம்பவும் 
பிற்காலத்தில்தான் தெரியவந்தது. முதல் முறையாக நான் எந்தச் சாதி 
என்று அறிந்தவுடன் ஒருவாரம் உட்கார்ந்து அழுதேனாம். 
என் அம்மா சொல்வார்கள். 
நானும் நீயும் வேறு வேறு சாதி என்பதால் அழுதேனாம்.
உன் சாதியாக நான் மாற வேண்டும் என்று அழுது ரகளைச் செய்தேனாம்.

இந்த இப்பிறவியில் மாற்ற முடியாதது என்ற புரிதல் கூட இல்லாமல்
“சாதிகள் இல்லையடி பாப்பா “ என்று வளர்க்கப்பட்டதன் விளைவு..!
இப்போது நினைத்தால் என் அறியாமையை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்.
ஆனால் எனக்குள் அந்த அழுகை ஒரு நெருப்பாக 
எரிந்துக் கொண்டே இருக்கிறது.
காற்றடிக்கு ம் போது ஜூவாலையாக எரியும் நெருப்பு..
“சாதி அற்றவள் நான்” என்ற தண்ணீரில் அணையாத நெருப்பு..
நெருப்பின் கங்குகள் எனக்குள்..
என்னை எரித்துக்கொண்டும் எரிந்துக்கொண்டும்..
என் சிதையின் நெருப்பில் சேரும் வரை 
எரியத்தான் செய்யுமோ சூர்யா?
அழுகை வெறியானது.
எவருக்கும் தாழ்ந்தவரில்லை என்ற வெறி வேகமெடுத்தது.
முடியாதது எதுவுமில்லை 
வானம் என் வசப்படும் என்று முட்டி மோத வைத்தது.
பள்ளிக்கூடம், கல்லூரிப் போட்டிகளின் பரிசுகளாக
 தங்கப் பதக்கங்களாக என்னைச் சுற்றி வந்தப்போதும்
என் வெறி அடங்கவில்லை.
அது கவிதைப் போட்டியில் கலந்து கொள்ளும் அளவுக்கு
கொண்டு வந்துவிட்டது!
கவிதைகளை அதுவும் நீ தரும் கவிதை புத்தகங்களை மட்டுமே 
படித்திருந்த என்னைக் கவிதைப்போட்டியில் கலந்து கொள்ள வைத்தது. 
உனக்கு நினைவிருக்கின்றதா? 
அந்த கவிதைப்போட்டியின் தலைப்பு "போர்வாள்"

புரட்சியின் காற்றே! என்னை நினைவிருக்கின்றதா?
சக்தியைப் பாடி உன் பக்தியைக் காட்ட நினைத்தவனே
நான் தான் இருட்டை உனக்கு அறிமுகப்படுத்தினேன்
உன் விடியலில் வெளிச்சம் விழுந்தது.
அக்னிக்குஞ்சே அடைக்காத்தேன்.
அதனால்தான் -
புரட்சி தீயாக நீ புதுப்பிறவி எடுத்தாய்.
நான் -
உன் தாய்
உன் ஆதி தாய்!
உன்னை-
பிரசவிக்காமலேயே
தமிழமுதூட்டிய
உன் ஊழித்தாய்!
இன்று-
உறைக்குள் வாளாக
உறங்கிக் கிடக்கின்றேன்
உன் -
போர்முகம் பார்க்க
ஏங்கித் தவிக்கின்றேன்.
புரட்சிக் காற்றே..
உன் போர்வாள் எழுதட்டும் 
புதியசரித்திரம் !
(இது கவிதையா ஆ? கேட்டுடாதீங்க..)
இப்படியாக வாசிக்கப்பட்ட கவிதைக்கு கைதட்டல் கிடைத்தது.
நீ மட்டும் கை தட்டவில்லை.
உன் முகத்திலும் அதிர்ச்சி.
எனக்கும் கவிதை எழுதத்தெரியும் என்பது
உனக்கு மட்டும் புதுச் செய்தியல்ல.எனக்கும்தான் சூர்யா.
என்கவிதைக்கு முதல் பரிசு.. உன் கவிதை இரண்டாம் பரிசு
. நீ அற்புதமான மரபுக்கவிதையை சந்தம் தவறாமல் எழுதி 
உனக்கே உரிய சூடானக் குரலில் மேடையில் முழங்கினாய். 
ஆனால் 
என் கவிதைக்கு எப்படி பரிசு கொடுத்தார்கள்..?
அதன்பின் எல்லோரும் சொன்னார்கள். 
உணர்ச்சி மயமாக வாசித்தேனாம்.
என் குரலில் சத்தியத்தின் 
கம்பீரம்..இருந்ததாம்..
ஆனால் சூர்யா .. 
என் முதல் கவிதையே என் கடைசிக் கவிதையும் ஆகிவிட்டது.
நீ தான் சூர்யா கவிதைக் கோட்டையில் உன் ராஜங்கத்தை
நடத்திக் கொண்டிருந்தாய். நடத்திக் கொண்டிருக்கின்றாய்.
உன்னை வைத்தே என் வாழ்வின் எல்லா நியதிகளையும் 
முடிவுகளையும் தீர்மானித்தேன். நீ தான் எனக்கு குருவாக 
இருந்தாய். என் கட்டை விரலைக் காணிக்கையாக கேட்காத 
குருவல்லவா நீ.!!
உன்னைப் போலவே மற்றவர்களையும் எண்ணிப் பழகியதில் தான் 
எத்தனை எத்தனைக் காயங்கள்.
பக்கம் நெருங்கிப் பழகியப்பின் தான் எவ்வளவு அதிர்ச்சி..!
அறிஞர்களின் அறிவுச்சுடரில்தான் எவ்வளவு இருட்டு.!
கவிஞர்களின் கவிதைகளில்தான் எத்தனை பொய்முகம்..!

சூர்யா யாருமே உன்னைப் போல இல்லையடா..
நீ தீயென்று எழுதினால் வாசிக்கும்போது சுட்டது.
உன் எழுத்தில் சத்தியம் சுவாசித்துக் கொண்டிருந்தது.
சத்திய சோதனைகள் நமக்கும் இருந்தன.
(வளரும் நட்பு)

Thursday, August 23, 2018

சூர்யா@நட்புமண்டலம்.3

<ஆரியமாயை பேசிய நீ எப்படியடா அக்ரஹாரத்தின்
அழகுத்தேவதையைக் காதலித்தாய்?" ம்>

உன் காதல் மனைவியைப் பற்றி உன் “நான்” என்ன நினைக்கிறேன்?
நீ இன்றுவரைக் கேட்டதில்லை.
ஆனால் என் கண்களில் தெரியும் குறும்புத்தனத்தை நீ வாசித்தாய்.
என் எண்ண அலைகளை உன் பட்டுத்தெறிக்கும் பார்வை அளந்துவிடும்.
எனக்குத் தெரியுமடா..
டேய்.. இராட்சசனே..
இந்த உன் அந்தரங்கம் மட்டும் நான் வாசிக்க முடியாத
உன் கவிதையாக தொடர்கிறது.
உன் காதலியே உன் மனைவியானதைக் கேள்விப்பட்டு எவ்வளவு
சந்தோசப் பட்டேன் தெரியுமா? ஒரு சந்தேகம் சூர்யா..
ரொம்பவும் தீவிரமாக ஆரியமாயை பேசிய நீ ..
ஆமாம்.. நீ எப்படியடா ஒரு அக்ரஹாரத்தின் அழகுத் தேவதையைக்
காதலித்தாய்?
அக்ரக்ஹாரத்தைக் காதலிக்க கூடாது என்று நான் சொல்லவில்லை.
அழகின் தேவதையைக் காதலிக்க கூடாது என்றும்
நான் சொல்ல வரவில்லை.
ஆனால், ஓர் அக்ரக்ஹாரத்திற்காகவும் 
அழகின் பூச்சுக்காகவும் மட்டுமே காதலிக்க முடியுமா.. ?
"காதலுக்கு கண்ணில்லையடி தோழி" என்று சொல்லாதே.
எனக்குத் தெரியும் இமைகள் மூடித் தூங்கும்போது கூட 
அறிவின் கண்கள் விழித்திருக்கும் என் சூர்யாவுக்கு!
இந்தக் காதல் எப்படி .. எந்தப் பார்வையில்!
புரியலைடா.
உன் காதலியுடன் நீ என்னடா பேசினாய்?
என்ன பேசியிருப்பாய்? என்று எண்ணி பார்க்கின்றேன்.
உனக்கு பிடித்த உன் காரல்மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், 
மாசேதுங், காண்டேகர், ராகுல் சாங்கரிதித்தியான், ஜீவா, திருக்குறள் , 
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் அம்பேத்கார்,ரவீந்திரநாத் தாகூர்,
பாரதி, பாரதிதாசன்
.....என்று உன் சிந்தனையை ஆக்கிரமித்து உன் 
மூளையில் எல்லா செல்களிலும் நிரம்பி வழியும் எதையும் எடுத்து 
நீ அவளுடன் பருகி இருக்க முடியாது
..இந்த சுவைகளை அறியாதவள் அவள்.
அவள் அறிந்தது மிஞ்சிப் போனால் தேவாரம் , திருவாசகமா இருக்கும்.
ஆண்டாளின் பாசுரங்களை அவள் 
உனக்காக உருகி உருகிப் பாடியிருப்பாளோ?😂
இல்லை மனைவியாக வருபவளுக்கு உன் அறிவுக்களஞ்சியம்
தேவையில்லை என்பது என்ன மாதிரியான
சிவப்பு சித்தாந்தம்? 

வேண்டாம்.. என் சூர்யாவின் குழந்தைகளைப் பெற்றெடுத்தவள்,
என் சூர்யாவை காதலிக்க வைத்த அவளிடம்
நான் அறியாத ஏதொ ஒன்று இருந்திருக்கும்.
இருந்திருக்க வேண்டும்.
அந்தக் கெமிஸ்ட் ரியை என் பெளதீக அறிவின்
சூத்திரங்களுக்குள் திணிப்பதை நான் விரும்பவில்லை.
உன் மனைவியை நான் முதன் முதலில் பார்த்தவுடன்
அதிர்ச்சி அடைந்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.
பின்னே என்ன? என் சூரியாவின் மனைவியை இரண்டு சாண் அளவு
ஜரிகை பார்டர் போட்ட பட்டுப் புடவையில்
.. கூந்தலில் வாசமில்லாத சிவப்பு கனகாம்பர பூக்களை
கூடை கூடையாக சுமந்து கொண்டிருக்கும் கோலத்தில்
பார்த்தால் அதிர்ச்சி வராமல் என்னடா வரும்?
அலங்காரம் கூட பெண்ணை அடிமைப் படுத்தும் என்ற
சிந்தனையை என்னில் விதைத்தவனின் கை பிடித்தவள்
அலங்காரத் தேர் போல என் முன்னால் நின்றாள்.
சூர்யா, இன்றுவரை உன் இந்த காதலின் ரகசியம் மட்டும் நான் அறியாத,
அறிந்து கொள்ள முடியாத
ரகசியமாகவே இருந்துவருகின்றது..
சூர்யா...உன்னுடைய இந்த வட்டம் மட்டும்
உனக்கானதாகவே இருக்கட்டும்.

Wednesday, August 22, 2018

NO, Thanks, .. policy

NO, THANKS .


இந்தியப் பிரதமர் மோடி செய்தது சரியா தவறா?
<வாங்க மாட்டேன் என்று சொன்னால்
சொன்னது சொன்னதுதான்னு
இருக்கனுமா வேண்டாமா…>
அரபு நாடுகள் கேரள வெள்ள நிவாரணத்திற்கு
கொடுக்க முன்வந்த பெரிய தொகையை
வாங்க மறுத்துவிட்டது. அதை மிகவும் நாசூக்காகவே
வெளிப்படுத்தி இருக்கிறார் மோதி.
இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கையில் பல்வேறு
மாற்றங்கள் வந்திருக்கின்றன, சுனாமிப் பேரழிவின் போது
மன்மோகன்சிங் அவர்களின் தலைமையிலான காங்கிரசு அரசு
வெளி நாடுகளின் உதவியைப் பெறுவதற்கில்லை, எங்கள்
இடர்பாடுகளை நாங்களே கவனித்துக் கொள்வோம் என்று
அறிவித்தது. எனவே மோதி சொன்னது.. ஒன்றும் புதிதல்ல.
இப்போது எனக்கு இன்னொரு சந்தேகம்.
வெளி நாட்டின் உதவியை நேரடியாக பெறமாட்டோம் என்று
அறிவித்த காங்கிரசு கட்சி உலக வங்கியிடமிருந்து கடன்
வாங்கியது ! அதெல்லாம் வழக்கமானது தான் என்று
வைத்துக்கொள்வோம். ஆனால் காங்கிரசு அரசு இன்னொரு
நூதனமான வழிமுறையைப் பின்பற்றியது. அதாகப்பட்டது..
இந்தியாவுக்கு உதவி செய்ய விரும்பும் வெளி நாடுகள்
இந்தியாவிலிருக்கும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக
தங்கள் உதவிகளைச் செய்யலாம் ! என்று அறிவித்தது..
வாங்க மாட்டேன் என்று சொன்னால்
சொன்னது சொன்னதுதான்னு
இருக்கனுமா வேண்டாமா…
அது என்ன.. அரசுக்கு வேண்டும்.. அரசின் ஏஜெண்டுகளுக்கு
அனுப்புனு சொல்றது?
இந்த வெளியுறவு பாலிசி எனக்குப் புரியவே இல்ல.
உங்களுக்கு?
மன்மோகன் சிங் /காங்கிரசு அரசு சொன்னதைத்தான்
மோடி யும் பிஜேபி அரசும் செய்கிறது என்பவர்கள்
இந்த அண்டர்கிரவுண்ட் பாலிசி பற்றிப் பேசுவதே இ

சூர்யா@நட்புமண்டலம்.2





காதல் வனவாசத்தில் வாடிப் போகலாம். ஆனால் நட்பு வனவாசத்தில் கூட மனவாசனையை இழப்பதில்லை. ராமனைக் காதலிக்க மட்டுமே அறிந்திருந்ததால் தான் சீதை அவன் வனவாசத்தில் கூட அவனைப் பிரியாமல் அவனுடன்" ராமனிருக்குமிடமே என் அயோத்தி" என்று மரவுரி தரித்தாள்.இலட்சுமணனின் துணைவியோ அவனுடன் வனவாசம் செல்லாமல் தன் கடமைகளை நாட்டிலிருந்தே செய்தாள். ஏனேன்றால் அவளுக்கு தன் துணைவன் மீதிருந்த காதலுடன் நட்பும் கலந்திருந்தது.நட்பு கலந்த அவர்கள் காதலில் நம்பிக்கை என்றும் இருந்தது. நட்பில்லாத காதல் கடைசிக் காலத்தில் கூட அக்னிப் பிரவேசம் செய்து தன் புனிதத்தை நிருபிக்க வேண்டிய நிலைக்கு வந்தது. காதல் இல்லாத நம் நட்பு காலமெல்லாம் வனவாசத்திலேயே வாழ்ந்தது. வனவாசத்திலேயே வளர்ந்தது.நாம் நட்பை மட்டுமே காதலித்தோம்.. நம் நட்பில் அழகின் சிரிப்பு அர்த்தம் இழந்தது. சூர்யா, ஒருநாள் நீ நெருடாவின் கவிதைகள் மொழிபெயர்ப்பைக் கொடுத்தாய். உனக்குப் பிடித்தக் கவிஞர் நெருடா என்பதுதான் எனக்கு தெரியுமே. புத்தகத்தில் கவிதை வரிகளில் நீ அடிக்கோடிட்ட வரிகள் பல இருந்தும் என் கண்கள் என்னவோ அந்த ஒரு கவிதையை விட்டு  நகல மறுத்தது.இன்றும் அந்தக் கவிதை பசுமையாக நினைவிலிருக்கின்றது.

இந்த இரவில் என்னால் எழுத இயலும்

-பாப்லொ நெருடா-

Womanதுயர்மிகு வரிகளை
இந்த இரவில்
என்னால் எழுதவியலும்
உடைத்துச் சிதறடிக்கப்பட்ட
இரவில்
நீல விண் மீன்கள்
தூரத்தே நடு நடுங்குகின்றன.
இரவுக்காற்று
வானில் சுழன்று
இசைக்கின்றன.
துயர்மிகு வரிகளை
இந்த இரவில்
என்னால் எழுதவியலும்
நான்
அவளைக் காதலித்தேன்
அவளும் என்னைக்
காதலித்திருக்கக் கூடும்

இதனைப் போலொரு
முழு இரவினில்
அவளென் தோள்களில் சாய்ந்திருந்தாள்
முடிவற்ற வானில் கீழ்
மீண்டும் மீண்டும்
அவளை நான் முத்தமிட்டேன்.

அவள் என்னைக் காதலித்தாள்
சிலவேளைகளில்
நானும் அவளைக்
காதலித்திருக்கக் கூடும்
இன்றும் மகோன்னதமான
அவள் விழிகளை
எவ்வாறு
காதலிக்காதிருக்கவியலும்

துயர்மிகு வரிகளை
இந்த இரவில்
என்னால் எழுதவியலும்
என்னிடம் அவள் ஈல்லை
நினைக்கிறேன் நான்
நான் அவளை
இழந்துவிட்டதை
உணர்கிறேன்.
அவளோடு இல்லாததால்
இந்த மிகப்பெரிய இரவு
மேலும் மிகப்பெரியதாகிறது.

என் காதல்
அவளிடம் இல்லாததால்
எதுவுமாகிவிடவில்லை
அவள்
என்னோடு இல்லாததால்
இரவுகள்
உடைக்கப்பட்டு
சிதறடிக்கப்பட்டவைகளாகின்றன
விளைச்சல் நிலத்தில்
வீழும் நீர்த்துளிகள் போல
வார்த்தைகள்
ஆத்மாவிற்குள்
வீழ்கின்றன.

தூரத்தின் உள்ளே
யாரோ பாடிக்கொண்டிருக்கிறார்கள்
தூரத்தின் உள்ளே
அவளை இழந்ததால்
என் ஆத்மா
திருப்திகரமானதாக இல்லை.

என்னுடைய பார்வைகள்
அவளுக்காகத் தேடிக்கொண்டே
அவளிடமே சென்றடைந்து விடுகின்றன.
என்னிதயம் பார்க்கிறது அவளுக்காக
அவள் என்னுடன் இல்லை.

அதே இரவில்
வெண்மையாக்கப்ட்ட
அதே மரங்கள்
அதே நேரத்தில்
நாங்கள்
அதே மாதிரியாக
நீடித்திருக்கவில்லை.

நீண்டகாலமாக
நான் அவளைக் காதலித்திருக்கவில்லை
ஆனால் எவ்வாறு
அவளைக் காதலித்தேன் நான்
என் குரல்
அவள் கேட்கும்
காற்றைத்
தொட்டறிய முயற்சித்தது.

அவளின் குரலின் முன்னே
அவளின் ஒளியுடலின் முன்னே
அவளின் எல்லையற்ற
விழிகளின் முன்னே
என் முத்தங்கள் போல
பிறிதொருவனுடைய
அவள்
பிறிதொருவனுடையவளாகலாம்.

நீண்டகாலமாக
நான் அவளைக் காதலித்திருக்காவிடினும்
நிச்சயமாக
நான் அவளைக் காதலித்திருக்கக் கூடும்
காதல் மிகச்சிறியது
மறதியோ மிகப் பெரியது.

ஏனெனில்
இதனைப் போலொரு
முழு இரவினில்
அவள் என்
தோள்களில் சாய்ந்திருந்தாள்
அவளை இழந்ததால்
என் ஆத்மா
திருப்திகரமானதாக இல்லை

என்னை
அவள் வருந்துகிறாள்
இதுவே
அவளுக்காக
நான் எழுதும்
இறுதி வார்த்தைகளாக இருக்கட்டும்
இறுதி வரிகளாகவும்
இருக்கட்டும்
(தமிழில் .முத்துகிருஷ்ணன்)

 மீண்டும் மீண்டும் அந்த வரிகள் உன் குரலில் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. நான் கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்காரி மாதிரி ஆகிப்போனேன்..நீ எந்த எந்த வரிகளை அடிக்கோடிட்டிருந்தாய் என்பது உனக்கு இன்று மறந்து போயிருக்கும்..அந்த வரிகளை இப்போது நினைவு படுத்திப் பார்..நான் எவ்வளவு குழம்ப்பி போயிருப்பேன் என்று
உனக்கு புரியும்.

உன் அடிக்கோடுகள்

நீ£ண்டகாலமாக
நான் அவளைக் காதலித்திருக்கவில்லை

பிறிதொருவனுடைய
அவள்
பிறிதொருவனுடையவளாகலாம்.

நீண்டகாலமாக
நான் அவளைக் காதலித்திருக்காவிடினும்
நிச்சயமாக
நான் அவளைக் காதலித்திருக்கக் கூடும்
காதல் மிகச்சிறியது
மறதியோ மிகப் பெரியது.

சூர்யா ..நீ என்னைக் காதலிக்கின்றாயா?
அன்று இந்தக் கேள்வி என்னை துளைத்து எடுத்தது.
அதுமட்டுமா.. அதைத்தொடர்ந்து ஆயிரமாயிரம் கேள்விகள்..

சூர்யா, கடைசியில் நீயும் மற்ற சாதாரண ஆண்களைப் போலத்தானா..?
ரத்த சம்பந்தம் இல்லாத, உடலுறவு இல்லாத ஆண்-பெண் உறவுகள் காதல் என்ற வைரஸின்
தாக்குதலிருந்து தப்பவே முடியாதா?

அப்படியானால் நீ என்னிடம் பேசியதெல்லாம் வெறும் அலங்கார வார்த்தைகள் தானா?

சூர்யா.., நட்பு பற்றி நீ என்னிடம் என்னவெல்லாம் சொன்னாயடா.-.?

-காதலிக்கலாம்
காதலித்தவளைக் கல்யாணம் செய்து கொண்டு மீண்டும் வேறு ஒருத்தியையும் காதலிக்கலாம்..
காதலித்து கைப்பிடித்தவள் இறந்த பின்னால் மீண்டும் வேறு ஒரு பெண்ணைக் காதலிக்கலாம்..
கல்யாணம் செய்து கொள்ளலாம்.. அவளுடனும் பிள்ளைப் பெற்று கொள்ளலாம்..
இதற்கு பெயர்தான் காதல்-
ஆனால் நட்பு அப்படிப்பட்டதல்லவே.
பூமி உருண்டயில் பிராணவாயுவை மட்டுமே சுவாசிக்க முடியும். நட்பு நமக்கு பிராணவாயு மாதிரி.
சந்திர மண்டலத்தில் கால் பதிக்கும் அதிசயத்தை நடத்திக் காட்டும் போதும் நட்பு தான் நம் ஆக்ஸிஜன் 
சிலிண்டர்..-

... இப்படி நீ சொன்னதெல்லாம் இன்று எப்படியடா பொய்யானது?
காதல் கெட்ட வார்த்தை அல்ல. உண்மைதான்.
நண்பர்களாக இருந்து பின் காதலர்களாக மாறி அதன்பின் கணவன் -மனைவியாக வாழ்ந்தவர்கள் பலருண்டு.
ஆனால் கடைசிவரை காதலை விலக்கிய நட்பின் சாட்சியாக வாழ வேண்டும் என்பத்ற்காகவே நட்பை மட்டுமே 
காதலிக்கப் பிறந்தவர்கள் நாம்.

நம் நட்பு தூங்கிய நேரத்தில் பருவக் கோளாறில் உன் காதல் படுக்க வந்துவிட்டதா?

உன் நெருடாவின் கவிதைவரிகள் என் நெஞ்சில் நெருஞ்சி முட்களாக தைத்துக் கொண்டிருந்தன.

இரண்டு நாட்கள் இரண்டு வருடங்களானது.

புத்தகம் வாங்க வந்தாய்." நீ படித்தயா?" கேட்டாய்
உன் கண்களை நிமிர்ந்து பார்க்க எனக்கு துணிவு வரவில்லை.
சட்டென்று "இவன் என் சூரியா இல்லை" என்று மனசில் பட்டது.
உன் அருகாமையில் இதுவரை நான் உணராத ஆண்வாடை.
நட்பாக என்னை நனைத்த மழையின் சாரலில்லை நீ.
என் வேர்களைப் பிடுங்கி இந்த மண்ணிலிருந்து என்னை விரட்ட வந்த பேய்மழை. இந்த ஆண்மையின் பேயாட்டத்தில் நான் விழப் போவதில்லை.
என் நட்பையும் என் சூர்யாவையும் நான் இழக்கப் போவதில்லை.

எந்த கவிதையைச் சொல்கின்றாய்?- கேட்டேன்
என் குரலே எனக்கு அந்நியமாகப் பட்டது.
உன் கண்கள் ஆச்சரியத்தில் ..
"ஏன் எல்லா கவிதைதகளையும் தான் சொல்கின்றேன்.உனக்கு பிடிக்கலயா?"
எனக்கு கோபம் வந்தது.
சூர்யா செயவதையும்  செய்துவிட்டு எதுவும் செய்யாத மாதிரி ஏன் நாடகம் ஆடுகின்றாய்?
என் கோபத்தை உணர்ந்தவுடன் தான் நான் எதோ சீரியசாக பேசுகின்றேன் என்பதை நீ அறிந்தாய்.

உன் நெருடாவின் அடிக்கோடிட்ட -- என்ன்னைப் பைத்தியமாக்கிய அந்த வரிகளைக் காட்டினேன்.
உன் கண்களில் சூரிய அடுப்புகள் கொதித்தது.
புத்தகத்தை கோபத்துடன் என் கைகளிருந்து பிடுங்கி மூடினாய்.
"ச்ச்சி.." என்றாய். வேகமாக உன் சைக்கிளை மிதித்து கொண்டு கண் இமைக்கும் நேரத்திற்குள் என் 
பார்வையிலிருந்து மறைந்துவிட்டாய்.

சொற்களில்லாத வெறும் உன் ஒலிக்குறிப்பில்  நீ என்ன வெல்லாமோ சொற்களால் சொல்ல முடியாத 
ஆயிரம்மாயிரம் அர்த்தங்களைச் சொல்லிச் சென்றுவிட்டாய்.

- ச்ச்சி உன் பெண்புத்தி பின்புத்திதானா?
-ச்ச்சி நம் நட்பின் மீது நீ வைத்திருந்த நம்பிக்கை இவ்வளவுதானா?
-ச்ச்சி நீயும் ஒரு சாதரண பெண்தானா?
-ச்ச்சி உன்னையா இந்த சூரியனைச் சூடேற்றும் ஒளிக்கதிர்கள் என்று நினைத்தேன்?
-ச்ச்சி நீயும் கடைசியில் ஒரு மோகமுள் தானா?
ஆதிமனிதனின் ஒலிக்குறிப்பில் நீ உதிர்த்துச் சென்ற ச்ச்சிக்கு இன்னும் நான் சரியான அர்த்தங்களை
தேடிக்கொண்டு தானிருக்கின்றேன்.
மொழியும் சொற்களும் ஆதிமனிதன் படைத்த ஒலிக்குறிப்பின் உண்மையான அர்த்ததை உணர்த்த முடியாமல் இன்றும் 
திண்டாடிக் கொண்டிருப்பதை உணர்கின்ற போது அறிவுஜீவி¢த்தனம் கொஞ்சமாக
தலைகுனிந்துதான் போகின்றது.

சூர்யா.. எதிர்வாதம் செய்யாமல், விளக்கம் தராமல், பக்கம் பக்கமாக கடிதமோ, கதையோ நாவலோ 
எழுதாமல் ஏன் ஒரு இரண்டு வரி புதுக்கவிதை கூட எழுதாமல் உன் ஒற்றை ஒலிக்குறிப்பில் நம் நட்பு  மண்டலத்தை 
நிச்சயப்படுத்திவிட்டாய். அன்று உன் மீது கோபம் வந்தாலும் இன்று என் சூர்யாவை நினைக்க நினைக்க 
பெருமையாக இருக்கின்றது.