Friday, May 17, 2019

R S S வசனத்தில் கமலின் நடிப்பா??

ஹேராம்..
கோட்சேவின் குண்டுகளில்
மகாத்மாவின் மரணத்தில்
நீ ஏன் மறுபிறவி எடுத்தாய்..
ஹே ...ராம்..
கமலுக்குப் பதில் சொல்லி காந்தியின் கொள்ளுப்பேரன் எழுதிய கடிதம் வாட்ஸ் அப்பில் உலா வருகிறது. அக்கடிதம் கோட்சேவை தீவிரவாதி என்று சொல்வதை ஏற்க மறுக்கிறது. அத்துடன் ஆர் எஸ் எஸ் அமைப்பினரின் கட்டுப்பாடு பயிற்சி செயலூக்கம் சாதி மறுப்பு ( யெஸ் சாதி மறுப்பு உட்பட ...!) அனைத்தையும் அவர்களின் பயிற்சி முகாமில் நேரில் கண்ட காந்தி ஆர் எஸ் எஸ் அமைப்பை மிகவும் பாராட்டியதாகவும் சொல்கிறது.

இந்தக் கடிதத்தின் ஒவ்வொரு வரிகளையும் வாசிக்கும் போது ... கமலின் கோட்சே இந்து தீவிரவாதி வசனம் ஏற்கனவே பிஜேபி எழுதிய வசனமோ அதில் கமல் தன்னுடைய கதைப் பாத்திரத்தை எழுதிக் கொடுத்த வசனத்தைப் பேசி நிறைவு செய்திருக்கிறாரோ என்ற ஐயம் எழுகிறது.
அதாவது இப்படியான ஒரு கேள்வியை இத்தருணத்தில் எழுப்பி வரலாற்றில் எழுதப்பட்டிருக்கும் சில உண்மைகளை மாற்றி எழுதவும் சிலவற்றை மீண்டும் விமர்சித்து உரையாடல் நிகழ்த்தி இந்து தேசாபிமானத்தைக் கட்டமைக்கவும் பிஜேபி இத்தருணத்தை மிகவும் சாதுரியமாகப் பயன்படுத்துவதாகவே தெரிகிறது.
காரணம்.. கமலின் இந்த வசனம்,,, பிஜேபிக்கோ அல்லது காங்க்கிரசுக்கோ வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப் போகும் வசனம் அல்ல. ஆனாலும்
இந்த வசனம் தேர்தல் களத்தின் சூட்டோடு சூடாக
அனல் பறக்க பரிமாறப்படுகிறது. இதன் சூடு ஆறிவிடாமல் காப்பாற்றுவதில் ஊடகங்கள் பெரும்பங்காற்றிக் கொண்டு இருக்கின்றன.
இது ஒருவகையில் பிஜேபின் தொலை தூரப்பார்வை மற்றும் பிஜேபி கட்டமைக்க விரும்பும் இந்து தேசத்தின் அபிமானிகளுக்கான உரையாடலாக மாறி இருக்கிறது.  திட்டமிட்டு மாற்றப்பட்டிருக்கிறது. காந்தி இதை இதைச் செய்யவில்லை... அதனால் தான் நாதுராம் கேட்சே காந்தியைச் சுட்டுக் கொன்றான் என்ற வாதத்தை மீண்டும் பொதுவெளிக்கு கொண்டு வந்ததில் கமல் ஒரு துருப்புச் சீட்டு. கதையும் வசனமும் அவர்கள் எழுதுகிறார்கள். 
இப்படியாக மீண்டும் மீண்டும்
காந்தி மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து கொண்டே இருக்கின்றன... இன்னும் எத்தனை தடவை தான் அந்தக் கிழவனைச் சாகடிக்கப் போகிறார்களோ ..
ஹே ராம்...

No comments:

Post a Comment