Monday, May 20, 2019

HAMID - அல்லாவுடன் பேசும் காஷ்மீரி சிறுவன்

Image result for hamid movie
HAMID –
ஹமீது- திரைப்படம்..
காணாமல் போன காஷ்மீர் மக்களின் அரசியல் கதை.
சமகால அரசியல் பின்புலத்தில் கதைகளை
திரைப்படமாக்கும் போது ஏற்படும் பெரிய சிக்கல்
சார்பு நிலை. எது சரி, யார் பக்கம்  நியாயம் இருக்கிறது
என்ற கேள்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சமாக
இருந்து விடுவது வாடிக்கை. ஆனால் ஹமீது அப்படி இல்லை
என்பதும் சமகால தீவிரமான இந்திய அரசியலை , காஷ்மீரின்
பின்புலத்தில் காட்டும் போது காஷ்மீர் மக்களின் கண்ணீரும்
அவர்களை இரவும் பகலும் காவல் காத்து  நிற்கிறோம்
என்ற நிலையில் இந்திய இராணுவ வீர்ர்களின் மன நிலையும்
அழுத்தமும்… மாறி மாறி காட்சிகள் விரியும் போது..
தேசமும் எல்லைகளும் தேவைதானா..
எதற்காக இந்தச் சண்டைகள் தொடர்கின்றன,
யாரை எதிர்த்து சண்டைப் போடுகிறது நம் இந்திய அரசு?
இப்படியான பல கேள்விகள் படம் பார்க்கும் போதும்
பார்த்து முடித்தப் பிறகும் நம்மைத் துரத்துகின்றன.

கதை புதிய கதையல்ல,
கிறிஸ்துமஸ் நேரத்தில் சொர்க்கத்தில் இருக்கும்
தன் அப்பாவுக்கு சிறுவன் ஒருவன் கடிதம் எழுதுகிறான்,
அதை வாசிக்கும் போஸ்ட்மேன் அச்சிறுவனுக்கு சொர்க்கத்திலிருந்து
பரிசுகள் அனுப்புவதாக எழுதி பரிசுகள் அனுப்பிய கதையை நம்மில்
பலர் வாசித்திருப்போம். கதை என்னவோ அதே கதை தான்.
ஹமீது 786 என்ற எண் அல்லாவின் எண் என்று முடிவு செய்து
தன் அப்பாவின் செல்போனிலிருந்து அழைக்கிறான். செல்போன்
எண் பத்து இலக்கமாக இருக்க வேண்டும் என்று கடைக்கார ர்
சொல்ல ஒரு நோட்டீசில் அச்சிடப்பட்டிருக்கும் செல்போன்
வரிசைப் படி 786 எண்ணை முதல் எண் 9 போட்டு 786 786 786
என்று அழைக்கிறான். அந்த எண் இந்தியப் படைவீரனுக்குப்
போய்விடுகிறது. அல்லாவுடன் பேசுவதாகவே சிறுவன்
நினைக்கிறான். பிறந்த  தன் பெண் குழந்தையைப் பார்க்காமல்
குழந்தையின் நினைவுகளில் தவிக்கும் அப்பாவின் மனம்
ஹமீது என்ற சிறுவனிடம் பேச ஆரம்பிக்கிறது/ காணாமல் போன
தன் அப்பா அல்லாவிடம் இருக்கிறார். அல்லா, என் அப்பாவிடம்
சீக்கிரமாக என்னிடம் வரச் சொல்லுங்கள் என்று தினமும்
பேசுகிறான்… கதையின் ஊடாக சிறுவனின் பேச்சு.
அல்லா கொடுத்த உயிரை எடுக்கும் உரிமை யாருக்கும்
கிடையாது என்று சிறுவன் சொல்லும் போது..
இம்மாதிரி சிறுவர்களைக் குறிவைத்து மடக்கி தங்கள்
இயக்கத்தில் சேர்க்கும் அமைப்புகள்.. இப்படியாக கதை
விரிகிறது.

அல்லாவாக சிறுவனிடம் போனில் நடிக்கும் இந்திய வீரன்
ஹமீதுவின் அப்பாவைத் தேடும் முயற்சி அவன் அதிகாரிகளுக்குத்
தெரிய வருகிறது. அந்தச் சிறுவனுக்கு உதவ விரும்புகிறேன்
என்று அவன் சொல்லும் போது “  நீ உதவ விரும்புவது ஹமீதுக்காகவா?
ஹமீதின் அம்மாவுக்காகவா? என்று அதிகாரி கேட்கிறார்.
“ உனக்கு கொடுத்திருக்கும் வேலையை மட்டும் செய்.
இதிலெல்லாம் தலையிடாதே..” என்று அதிகாரம் சொல்கிறது.
படைவீரன் சல்யூட் அடித்துவிட்டு நகர்ந்து செல்வதைத் தவிர
நடைமுறையில் எதுவும் சாத்தியப்படவில்லை.

சிறுவன் ஹமீதின் அம்மா இஷ்ரத்தான நடிக்கும் ரஷிகா டுகல்..
ஒவ்வொரு காட்சியிலும் அற்புதமாக நடித்திருக்கிறார்.
நடிக்கவில்லை, அந்தக் கதைப் பாத்திரமாகவே மாறி இருக்கிறார்
என்று யாருக்கெல்லாமோ சொல்வார்கள் நம் விமர்சகர்கள்.
ஆனால் ரஷிகா டுகல் .. அப்படித்தான் ஹமீதில் வாழ்ந்திருக்கிறார்.
ஐஜஸ் கான் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படம்
காஷ்மீர் காட்சிகளைக் கூட இரண்டாம்  நிலைக்குத் தள்ளிவிட்டு
ஒவ்வொரு வசனத்திலும் பாத்திரங்களின் நடிப்பிலும் சமகால
அரசியலை கலைவடிவத்தில் எவ்விதமான சேதாரமும் இல்லாமல்
கொடுத்திருப்பதும் .
கண்களில் வழியும் கண்ணீரின் சூடு ஆறவில்லை இன்னும்.


No comments:

Post a Comment