Friday, March 15, 2019

THE BOY WHO HARNESSED THE WIND

Image result for the boy who harnessed the wind

சினிமா ஒரு பொழுதுப்போக்கு அம்சம் 
என்ற பொதுப்புத்திக்கு இம்மாதிரி திரைப்படங்கள்
சவாலாக இருக்கின்றன.
உண்மைக் கதைகள் புத்தகமாக வெளிவரும் போது
கிடைக்கும் வரவேற்பு அதைச் சினிமாவாக எடுக்கும்
போது சினிமாக்காரர்கள் அந்த எழுத்தின் ஜீவனை
தொலைத்துவிடும் அபாயம் ஏற்படுவதுண்டு.
ஆனால் இக்கதையில் அது நிகழவில்லை!
கதையின் களம் ஆப்பிரிக்காவின் மாலவி.(MALAWI)
வானம் பொய்த்த பூமி.
மாய மந்திரங்களை நம்பும் மனிதர்கள்.
பூஜை செய்தால் மழை வரும் என்ற
நம்பிக்கையுடன் வாழும் மனிதர்கள்.
அவர்களிடையே கல்வி தான் எங்கள்
சமூகத்தை முன்னேற்றும் என்று நம்பும்
தம்பதியர். அவர்களின் மகன் (William Kamkwamba)
13 வயது சிறுவன். அவன் பள்ளிக்கூடம் போகும்
முதல் நாள் காட்சியில் விரிகிறது திரைப்படம்.
அப்போது வலது கையைத் தலைக்கு மேல் தூக்கி
இட து காதைத் தொட்டுவிட்டால் அக்குழந்தைக்கு
பள்ளிக்கூடம் போகும் வயது வந்துவிட்ட து என்பது
தான் எங்கள் காலத்தில் சொல்லப்பட்ட து என்று
வில்லியம் அப்பா சொல்லுவார். அக்காட்சி வரும்
போது நானும் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன்.
கதையின் களமும் நம்பிக்கைகளும்
கலாச்சார பண்பாட்டு எச்சங்களும்
நமக்கும் அவர்களுக்கும் இடையில்
சின்ன நூலிழையாய் ஓடிக்கொண்டிருக்கிறது
என்ற எண்ணம் வந்த து.
வில்லியமின் அக்கா தன் காதலனுடன்

ஓடிப்போக மறுப்பாள். அதற்கு அவள் சொல்லும்
காரணங்கள் இரண்டு.
முதல் காரணம் என் குடும்பத்திற்கு அச்செயல் அவமானம்.
இரண்டாவது காரணம் மொழி தெரியாத இன்னொரு
பிரதேசத்திற்கு நான் வரமாட்டேன் என்பது தான்.

வானம் பொய்க்கும் போது பூமி வறண்டால்
என்னவெல்லாம் நடக்கும் என்பதை
அப்படியே காட்சியாக விவரிக்கும் போது
அக்காட்சிகள் நம் மண்ணுக்கும் மனிதர்களுக்கும்
பொருந்திப்போகிறது. 
ரேஷனுக்காக ஒடும் மனிதர்கள், அடிதடி, 
தானியங்களைக் கொள்ளை அடிக்கும் கூட்டம்,
பசி… இத்தனைக்கும் நடுவில் நம்பிக்கை…
சிறுவன் வில்லியம் பள்ளிக்கூட கட்டணம்
கட்ட முடியாமல் பள்ளிக்கூட த்திலிருந்து விரட்டப்
படுகிறான். அவன் தன் அக்காவின் காதலன் 
உதவியுடன் பள்ளிக்கூட லைப்ர ரியைப் 
பயன்படுத்திக் கொள்கிறான்.
ஏற்கனவெ ரேடியோக்களை ரிப்பேர் செய்யும் அவன்
சைக்கிளில் டைனமோ இருப்பதால் லைட் எரிவதும்
அதே டைனமோ இருந்தால் காற்றிலிருந்து மின்சாரம்
தயாரித்துவிட முடியும் என்று முயற்சி செய்கிறான்.
அந்த ஊரிலியே அவன் அப்பாவிடம் தான் சைக்கிள்
இருக்கிறது. அப்பா அவனை நம்பி முதலில் கொடுக்க
மறுக்கிறார். ஆனால் கதை இறுதியில் அவன் 
அப்பாவின் உதவியுடன் முதல் காற்றாடி மின் உற்பத்தியை செய்து
அவர்கள் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து …
இவ்வளவு தான் கதை.

நடிப்பு, காட்சி அமைப்புகள், உடை, அலங்காரம்…
அதுவும் வறட்சி காலத்தில் உதடுகள் காய்ந்து
வெடித்துப்போய்விடும்.. அதைக்கூட அப்படியே
காட்சி ப்ரேமுக்குள் கொண்டு வந்திருப்பார்கள்.
இப்படியான கதைகளை டாகுமெண்ட்ரியாக
எடுப்பார்கள். ஆனால் சினிமாவாக எடுப்பது
என்பதும் அதில் கொஞ்சம் கூட மிகை இல்லாமல்
காட்சிப் படுத்துவதும் ஒவ்வொரு காட்சியிலும்
களம் கதைப் பாத்திரத்தில் காட்டி இருக்கும்
கவனம்.. மிகையில்லாத நடிப்பு..
ஒவ்வொரு மாணவனும் பார்க்க வேண்டிய
திரைப்படம். வாழ்க்கையை மட்டுமல்ல
கனவுகளைக் கைப்பற்றும் வித்தையையும்
அவர்கள் கண்டடையட்டுமே!
படம் முடிந்தவுடன் எந்த ஒரு பிரச்சனையை
எடுத்துக் கொண்டாலும் இம்மாதிரி காட்டுவதற்கு
நாம் பழக வில்லை, சர்க்கார் விஜய் சினிமா
பாணியில் காட்டுவதற்கே பழகிவிட்டோமோ..
சென்ற தலைமுறையில் வாழ்ந்தவர் தான்
ஜி டி நாயுடு என்ற அறிவியல் அறிஞர்.
அவரைப் பற்றி இன்றைய தலைமுறைக்கு
சொல்லக்கூடிய ஒரு சினிமாவைக் கூட
காட்டவில்லை தமிழ்ச்சினிமா உலகம்.
யோசிப்பார்களா… நம் இளைய இயக்குனர்கள்?

No comments:

Post a Comment