Wednesday, March 6, 2019

அந்த ஒரு நாள் மட்டும்.. 08 மார்ச்


அந்த ஒரு நாள் மட்டும்..
உங்கள் வாழ்த்துமழைகளில்
யாரை நனைக்கிறீர்கள்?
வறண்டுப்போய்விட்ட உங்கள் நதிகள்
அருவிகள் ஓடைகள் கிணறுகள் குளங்கள்
உங்கள் சிறுதுளிக்காக தவமிருக்கின்றன..

முகம் தெரியாத முக நூல்/வாட்ஸ் அப்/.டுவிட்டர் தோழிகள்
முக்கியமில்லை என்றா சொல்கிறேன்.
ஆனால் இவர்களை விடவா ? என்று
மட்டும் கேட்கிறேன்… அவ்வளவுதான்.
மகளிர்தின வாழ்த்து சொல்லவில்லை
என்றால் எங்கே உங்களை பெண்ணியவிரோதியாக்கி
விடுவார்களோ என்ற உங்கள் படபடப்பு அடங்கட்டும்.
கொஞ்சம் நிஜத்திற்கு வாருங்கள்..
நண்பர்களே….

கொஞ்சம் உண்மையாக இருங்களேன்.
கொஞ்சம் நியாயமாக இருக்கப்பாருங்களேன்.
அந்த  ஒரு நாள் மட்டும்…
உங்களின் அவளுக்காக காலையில் ஒரு கப்
காஃபியுடன் எழுப்புங்களேன்…

ஒரு நாள் மட்டும்…
பேசுவதற்கு நேரமில்லை என்று ஓடிக்கொண்டிருக்கும்
வாழ்க்கையில்
 நீங்கள் ஓடுவதற்கு மட்டுமல்ல
நடப்பதற்கு கூட சொல்லிக்கொடுத்த அவளிடம்
அவள் பாதங்களைப் பிடித்து தடவிக்கொடுக்க
வேண்டாம்…
“அம்மா… உன் பேத்தி உன்னை மாதிரியே தான்..
அப்படியே உன் பேச்சு உன் குணம்ம்ம்ம்ம்மாக்கும்!”
என்று சொல்லுங்களேன்.

ஒரு நாள் மட்டும்..
கணவன் பிள்ளைகள் என்று தன்னை மறந்து
ஓடிக்கொண்டிருக்கும் உங்கள் புதல்வியரை அழைத்து
“ என்னடா செல்லம்… அப்பா இருக்கேன் டா உனக்கு”
என்று ஆதரவாகச் சொல்லுங்களேன்.

ஒரு நாள் மட்டும்…
எதோ ஒரு காரணத்தால் அறுபட்டுப்போன உறவின்
சங்கிலியில் ஊமையாகிப்போன
உங்கள் அக்கா தங்கைகள் இருப்பார்கள்…
உங்கள் ஈகோவை இந்த ஒரு நாள் மட்டும்
கழட்டி வைத்து விட்டு
“அக்கா அந்த நாள் நினைவு வருகிறது..
தங்கச்சி… உன் தலையில் எத்தனைக் குட்டுகள்
வைத்தேன்.. எனக்காக நீ அப்பாவிடம் திட்டுவாங்கினாயே!”
உங்கள் நினைவுகளின் சின்னக் கீற்றைப் பிடித்து
கொடுங்களேன்.. உங்கள் உடன்பிறப்புகளுக்கு.

அந்த ஒரு நாள் மட்டும்…
வயதானப் பாட்டியுடன் ஒரு செல்ஃபி எடுங்களேன்.
அந்த ஒரு நாள் மட்டும்..
உங்கள் மகளுடன் அவள் நண்பனாக இருங்களேன்..

அந்த ஒரு நாள் மட்டும்..
அந்த ஒரு நாள் மட்டும்..
உங்களைச் சுற்றி இருக்கும்
உங்கள் பெண்களின் உலகத்தில்
 நீங்கள் நட்சத்திரமாக இருங்களேன்…
இதற்கு என்ன காசா பணமா..
அந்த ஒரு நாள்…08 மார்ச்.


No comments:

Post a Comment