வாசிக்காமல் நான் தொலைத்துவிட்ட
புத்தகம்
என் அம்மா.
இன்று என் அம்மாவின் நினைவுநாள். (19/07/2007)
மருத்துவமனையில் அம்மா இருக்கும்போதெல்லாம் இரவு
பொழுதில் அம்மாவுடன் தங்குவேன். கையுடன் தடிமனான
புத்தகம் எதாவது கையில் இருக்கும். அம்மாவுக்கு சாப்பாடு
கொடுத்தப்பின்... நான் புத்தகத்துடன் உட்கார்ந்துவிடுவேன்.
சில நேரங்களில் எதாவது வேணுமாம்மா... என்று கேட்பேன்.
வேண்டாம் என்று தலையசைப்பார். மீண்டும் புத்தகத்திற்குள்
நான்..
நள்ளிரவு மணி 12 ஐ தாண்டி இருக்கும்...
அம்மா என்ன செய்கிறார் என்று திரும்பி பார்த்தால்
நான் புத்தகம் வாசித்துக்கொண்டிருப்பதை பார்த்துக்
கொண்டு இருப்பது தெரியும்....
"என்னம்மா... பாத்ரூம் போணுமா.."
"ஒன்னுமில்ல.. நீ படிம்மா.." என்பார்.
பொதுவாக ஒரு தலையசைப்பில் பேசுவார்.
இப்போதும் நள்ளிரவில் புத்தகம் வாசிக்கும் போது..
அம்மாவின் வாசனை.. என்னைச் சுற்றி..
அம்மாவின் கண்கள் என்னைப் பார்த்துக்கொண்டே இருப்பது
போல இருக்கும்.
இது பைத்தியக்காரத்தனமாக இருக்கலாம்.
அதனாலென்ன... கொஞ்சம் கொஞ்சம் இம்மாதிரி
பைத்தியக்காரத்தனங்கள் இல்லை என்றால்
வாழ்க்கையில் தான் என்ன இருக்கிறது..?
வாசித்த புத்தகங்களை விட
வாசிக்காமல் நான் தொலைத்த இப்புத்தகம்..
இத்தருணத்தை கனமானதாக்கி
என்னை அழுத்துகிறது.
அம்மா ...
ரொம்ப ரொம்ப அழகா இருப்பா..
அவள் எந்தப்புடவைக் கட்டிக்கொண்டாலும்
அந்தப் புடவைக்கு ஒரு அழகு வந்துவிடும்....
எப்போது யார் வந்தாலும் பசியாற்றும் அவள் குணம்..
வீட்டில் வேலை செய்பவர்களின் முகம் பார்த்து
தேவை அறிந்து கொடுக்கும் அவள் கைகள்
மன்னிக்கும் அவள் சுபாவம்.
பொறாமை என்றால் என்ன என்று அறியாத
அவள் வெகுளித்தனம்
ஏழு மொழிகள் தெரிந்த என் அப்பாவை விட
அம்மா தான் இப்போதெல்லாம் எனக்கு
பிரமிப்பூட்டுகிறாள்.
ஆகாயமாக அவள் விரிந்து என்னை ஆட்கொள்கிறாள்...
ஆடைகளின்றி அலங்காரமின்றி
உயிர்த்துடிப்பை பிடித்து இழுத்து அணைத்து
வாழ்க்கையைப் பிரசவிக்கும் மரணம் அழகானது.
என் உள்ளங்கைப் பிடித்து
உன் உயிர்ப்பிரிந்த தருணங்களில்
என் நரம்பு மண்டலங்களைச் சிலிர்க்க வைத்தது
காற்றில் கலந்த உன் உயிர்மூச்சு.
அம்மா.. உன்னைப் போலவே
உன் மரணமும் அழகானது.
(புகைப்படம் அப்பாவுடன் அம்மா ... திருமண ஆல்பம்)
Add caption |
No comments:
Post a Comment