Sunday, April 3, 2016

பஃறுளியின் வாசனை
புலம்பெயர்தல் என்பது
ஜீவராசிகளின் தொடர்கதை.
பனிப்பிரதேசத்தின் பறவைகள்
கூடுகட்டி குஞ்சுகள் பொறிக்க
நம் மண்ணின் மரக்கிளைகளைத் தேடி
பல்லாயிரம் மைல்கள் தாண்டி
பறந்து வருகின்றன.

கடல் சூழ்ந்த நம் பூமியில்
நம் கரைகளைத் தொடாத
பசிபிக் கடலின் ஆமைகளும்
முட்டையிடும் பருவத்தில்
நம் நெய்தல் நிலம் தேடி
பயணிக்கின்றன.

மனிதனும்
நிலம் தேடி நீர் தேடி
பசி தீர்க்க பயணித்த தூரத்தை
காலத்தை
கணக்கில் எடுத்தால்
பிரமிப்பாகவே இருக்கிறது.

இப்பயணங்களில் தமிழனின் குரல்
திரைகடலோடி திரவியம் தேடிய
பெருமையை ,
பொருள்வழிப் பிரிதல் என்று வகைப்படுத்தி
பெருமையுடன் பேசுகிறது.
இப்பெருமைகளின் மறுபக்கத்தில்
இன்றும் தங்கள் இருத்தலுக்காக
புலம்பெயரும் தமிழர்கள் இருக்கிறார்கள்.
இப்புலம்பெயர்தல்
நம் பெருமைமிகு வரலாற்றின்
இருண்ட மறுபக்கம்.
அந்த மறுபக்கத்தில்
அரபிக்கடலோர மித்திநதிக்கரையில்
நானும் என் கவிதைகளும்.

எல்லா நதிகளும் கடலில் சங்கமிக்கும்.
இது நதிகளின் உரிமை.
அந்த உரிமையும் மறுக்கப்பட்ட
மித்தி நதியில்
மிதக்கின்றன எங்கள் வாழ்க்கைப்படகுகள்.

நாலு தலைமுறைகளுக்கும் மேலாக
இந்த மண்ணில் எங்கள் வாழ்க்கை
எங்கள் இருத்தலுக்கான வாழ்க்கையில்
தொட்டிச்செடிகளாகவே தொடர்கிறது
எங்கள் வேர்களின் பயணம்.

காங்கிரீட் காடுகளில்
கண்ணாடி ஜன்னல்களின் வழியாக
நீலநிற வானத்தை எட்டிப்பார்க்கும்
தொட்டிச்செடிகளின்
இலைகள் மட்டுமே அறியும்
மறுக்கப்பட்ட நிலத்தடி மண்ணின் வாசனையை
கட்டுடைத்துப் பயணிக்கும்
வேர்களின் பயணத்தை.

மாநகரத்தின் ஜனக்கடலில்
கரைந்துவிடவோ கலந்துவிடவோ முடியாமல்
ப்ஃறுளியின் மணல்மேடுகளில்
புதையுண்ட எங்கள் நிஜங்களைத் தேடி
கடலடியில் பயணிக்கிறோம்
ஆமைகளைப் போல.

கபாடபுரமும் குமரிக்கோடும்
எங்கள் கண்முன் விரிகிறது.
சிவனே எம் இனக்குழு தலைவனாய்
எங்களுடன் உரையாடுகிறான்.
கொற்றவையின் கைப்பிடித்து
நடக்கிறது எங்கள் கவிதை.

பெண்ணிய பெருவெளியில்
தந்தை பெரியாருக்கு முன் வாழ்ந்த
பெருமகனாய்
நெற்றிக்கண் திறந்து வழிகாட்டுகிறான் அவன்.
அவனோடு பயணிக்கிறேன்
அங்கே
மருதம் திரிந்த பாலையில்
அவன் மனைக்கிழத்தி
காதல் மறுக்கபப்ட்ட கொற்றவையாய்
பெருமூச்சு விடுகிறாள்.
என் கனவுகள் கலைகிறது.

மண்ணில் புதையுண்ட பஃறுளியின் ஈரம்
கடலடியில் நீரோட்டமாய்
பாய்ந்து வருகிறது.
அனாதையாக நிற்கும் எங்கள் இருத்தலை
முத்தமிட்டு வாரி அணைத்துக்கொள்கிறது.

பஃறுளியி மகள் நான்
நதிகளுக்கு என்று வரையறுக்கபப்ட்டிருக்கும்
எல்லைகள் கடந்து பயணிக்கிறேன்.
பஃறுளி என் முகம்.......
கதை என்றும் கட்டுரை என்றும்
விமர்சனம் என்றும்
கவிதை என்றும்
நீங்கள் கற்பித்திருக்கும்
அனைத்து வடிவங்களிலும்
அவளே நானாக..
என் மொழியாக..

மழைப்பொழியும் ஒரு கார்கால நள்ளிரவில்
பஃறுளியின் ஈரம்
என் தொட்டிச்செடிகளின் இலைகளில்
பட்டுத் தெறிக்கிறது..
நாளைய விடியலில்
என் தொட்டிச்செடிகள் பூத்திருக்கும்
எனக்காகவும் உங்களுக்காகவும்

அந்தப் பூக்களை
உங்கள் வாசலுக்கு எடுத்துவரும்
எழுத்து அறக்கட்டளைக்கும்
அறக்கட்டளை குழுவினருக்கும்
என் ஆதித்தாய் பஃறுளியின் வாழ்த்துகளுடன்.

உங்களன்பு,

புதியமாதவி.
மும்பையிலிருந்து,.

15 ஆகஸ்டு 2015 சுதந்திர தின நள்ளிரவில்..
(மவுனத்தில் பிளிறல் கவிதை தொகுப்பில்.. என்னுரை)

No comments:

Post a Comment