Thursday, June 4, 2015

அகில இந்திய கருத்தரங்கம், மத்திய பிரதேசம்.

National Symposium at MHOW, MADYA PRADESH
----------------------------------------------------------------------------------




அகில இந்திய காங்கிரசு ஏற்பாடு செய்திருந்த தேசிய கருத்தரங்கம்
NATIONAL SYMPOSIUM ON VISION OF BABASAHEB DR. B R AMBEDKAR:
ROADMAP AHEAD FOR THE EMPOWERMENT OF DALITS AND ADIVASIS..

ஒரு மாதத்திற்கு முன்பே டில்லியில் இருந்து தொலைபேசியில்
என்னிடம் பேசினார்கள். " எனக்கும் காங்கிரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாதே!, என்னை எதற்காக அழைக்கிறீர்கள்?" என்பதே என் முதல் கேள்வியாக இருந்தது. என்னைப் பற்றியும் என் அரசியல் விமர்சனங்கள் பற்றியும் வாசித்திருப்பதை அவர்கள் உறுதி செய்தது எனக்கு கொஞ்சம் வியப்பாக இருந்தது. என்னிடம் பேசியவர் யார் என்பதைப் பற்றியோ அவரின் அரசியல் செல்வாக்கு பற்றியோ கருத்தரங்கத்திற்கு போகும் வரை எனக்கு எதுவும் தெரியாது! மும்பை
காங்கிரசு ரவீந்திர தல்வியும் தொடர்பு கொண்டார். அதன் பின் என் வேலைகளுக்கு நடுவில் நானும் மறந்துவிட நாளை காலை 6 மணிக்கு உங்கள் விமானடிக்கெட் இந்தூருக்கு என்று போன் வருகிறது. அதுவும்
கிளம்புவதற்கு முன் தினம் மாலை 6 மணிக்கு. இப்படி அவசரத்தில் புறப்பட்டு போன அனுபவமும் காங்கிரசு அரசியல் வாதிகளை சந்தித்த அனுபவமும் சற்று வித்தியாசமாக இருந்தது.


இந்தூர் விமானநிலையத்திலிருந்து அம்பேத்கர்  பிறந்த இடமான
மஹொ பகுதிக்கு 45நிமிடம் சாலை வழி பயணம். போய் 1 மணி நேரத்திற்குள்
கருத்தரங்குக்கு கிளம்பியாக வேண்டிய அவசரத்தில் நான்.
விமானநிலையத்தில் தான் ரூத்மனோரமாவை சந்தித்தேன்.
முதல்முறையாக அப்போதுதான் சந்தித்தாலும் பலநாட்கள்
பழகியது போல இனிமையாக பழகினார்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் சிந்தனையாளர்கள்,
அரசியல்விமர்சகர்கள் எழுத்தாளர்கள் களப்பணியாளர்கள் என்று
கருத்தரங்கம் களை கட்டியது. கொலம்பிய பல்கலை கழகம் முதல்
நாக்பூர் பல்கலை கழகம் வரை.. என்று ஒரு பக்கம் கல்வியாளர்கள்
வேறு. சில ஆய்வு மாணவர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
தன் இளைய மகனை அண்மையில் இழந்துவிட்ட தோழி சிவகாமி
அவர்களையும்  அங்குதான் சந்திக்கிறேன். அதுவும் எங்கள் முதல்
சந்திப்பு, கண்களில் கண்ணீருடன். என்ன பேசுவது, எப்படி ஆறுதல்
சொல்வது என்று தெரியவில்லை. இரண்டு நாட்களும் நாங்கள் இருவரும்
நிறைய பேசிக்கொண்டோம்.


இந்துத்துவா அரசியலை முன்னிறுத்தி இன்றைய ஆட்சியில் இருக்கும்
மோடி சர்க்காரை எதிர்க்க பலமான ஒரு பரீட்சைக்கு காங்கிரசு தன்னைத் தாயர்ப்படுத்திக் கொள்கிறதா? இக்கருத்தரங்கை மட்டும் வைத்துக் கொண்டு அப்படி ஒரு முடிவுக்கு வந்துவிட முடியுமா?
11 மணிக்கு என்று போட்டிருந்தாலும் கருத்தரங்கு 12 மணிக்குத்தான் ஆரம்பித்தது. என்னைப் போல பலர் அன்று காலையில் தான் வந்து கொண்டிருந்தது கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
தொடர்ந்து இந்தியாவை காங்கிரசு ஆண்டிருக்கிறது. எங்கள் ஆட்ச்யின் தவறுகளைப் பற்றி குற்றம் குறைகளைப் பற்றிப் பேசலாம் நீங்கள் என்று
இக்கருத்தரங்கில் அவர்கள் மனம் திறக்கிறார்கள்.


> congress should confess என்கிறார் ஒருவர். புனா ஒப்பந்தம் தலித்துகளுக்கும்
அம்பேதருக்கும் கொடுமை செய்துவிட்டது என்ற ஆவேசத்துடன்.

> மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு, இவர்களும் அம்பேத்கர்
மூவரும் இருக்கும் காங்கிரசின் போஸ்டர்.... காங்கிரசின் புதிய அவதாரம்
புது அடையாளம் என்று சொல்கிறார் இன்னொருவர்.

>யாரும் அம்பேத்கருக்கு இடம் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.
அவர் சாதாரண இந்தியர்களின் தலைவன், காக்கவந்த ரட்சகன் ..

சிந்தனைவாதிகள் ஒருவர் பின் ஒருவராக.. மின்னல் போல..
கருத்துகள்..ஒன்றை ஒன்று வெட்டிக்கொண்டும் கைகுலுக்கிக்
கொண்டும்... மாலை 6 மணிவரை.
அதன் பின் பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு ராகுல்காந்தி கருத்தரங்கிற்கு வந்தார். இந்தூர் வெயிலில் வேர்த்து விறுவிறுத்து..
ரொம்பவும் இயல்பாகவும் எளிமையாகவும் தான் அவர் தோற்றம்.
கருத்தரங்கில் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அவருடைய எளிய
நேர்மையான பதிலும் விளக்கங்களும்.
அவருடைய பதில் நமக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் அதில் பாசாங்கில்லை. சரியாக ஏழரை மணிக்கு கிளம்பினார்.
திக் விஜய்சிங் மற்றும் குமாரி செல்ஜா இருவரும் கருத்தரங்கை பின்வரிசையில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
சுஷில்குமார் ஷிண்டே ஒரு மணி நேரம் வந்துவிட்டுப் போனார்.

நேற்று இந்தூரிலிருந்து 4 மணிக்கு கிளம்பி 5 மணிக்கு மீண்டும்\மும்பை.
இரவு கருத்தரங்கம் பற்றி கருத்து கேட்கிறார்கள் டில்லியிலிருந்து
 கே.ராஜூவும் மும்பையிலிருந்து ரவிந்திர தல்வியும்.
என் கருத்தை அவர்களுக்கு எழுத வேண்டும். எழுத்தில் பதிவு செய்ய
முடியாதவை எப்போதும் இருக்கத்தானே செய்யும். அவற்றை
சந்தர்ப்பம் வரும்போது சொல்லிவிட வேண்டியது தான்.




No comments:

Post a Comment