Sunday, June 21, 2015

அஸ்தமிக்கும் சூரியன்


முதலிடத்திற்கு நடக்கும் போட்டியில்
இரண்டாவது இடத்தை எட்டி உதைக்கிறது
மூன்றாவது இடம்.
மூன்றாவது இடத்திலிருந்து
முதல் இடத்திற்கு பாய்ந்துவிட தயாராகிவிட்டது
பைங்கிளி.
எல்லாம் அறிந்த முதலிடத்தின் கனவுகளில்
இரண்டாம் இடத்திற்கு இடமில்லை
என்று வருத்தப்படுகிறான் தோட்டக்காரன்.


இரண்டாம் இடம் முதலிடத்தைத் தீர்மானிக்கும்
என்பது இனி விதியல்ல என்று
போஸ்டர் அடித்து தம்பட்டம் அடிக்கிறது
பாலூட்டி வளர்ததப் பைங்கிளி.

இப்போதெல்லாம் இரண்டாமிடம் வெற்றிடமானதை
போஸ்டர்களைத் தின்னும் மாடுகள் தவிர
எவரும் கண்டுகொள்வதில்லை.

வளர்த்தக் கிடா மார்பில் பாய்ந்த வலி மறக்க
தனிமைப்பாடசாலையில்
புத்தகங்களுக்குப் பாடம் நடத்துகிறது
ஒரு பல்கலைக்கழகம்.
கள்ளமவுனத்தின் மனசாட்சிக்குத் தெரியும்
சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற
கடவுச்சீட்டு காலவதியாகிவிட்டது என்பது.

இரண்டாம் இடமிருந்தால் தான்
முதலிடம் இருப்பது சாத்தியமாகும்
என்ற அரிச்சுவடி மறந்தவர்கள்
அர்ததசாஸ்திரம் எழுத முடியுமா?
அழுகிறது அஸ்தமிக்கும் சூரியன்.

No comments:

Post a Comment