Friday, June 12, 2015

பாரதியும் தம்பலாக்களும்


புதுவை வாழ் எழுத்தாளர் பாரதி வசந்தன் எழுதியிருக்கும் தம்பலா சிறுகதை
நூலை    வாசித்த அனுபவம் இனிது. சிறுகதை
ஆங்கிலத்திலும் பிரஞ்சு  மொழியிலும் மொழியாக்கம் பெற்றுள்ளது.
சிறுகதைக்கான விமர்சனங்கள், கதை மாந்தர்களின் நிஜம், அதற்கான
வரலாற்று ஆவணங்கள், அதைத் தேடி அலைந்த எழுத்தாளரின் பயணம்,
பயணத்தில் அனுபவித்த காயங்கள் என்று அனைத்தையும் ஒரே நூல்
வடிவாக்கியிருக்கும் முயற்சி தமிழ் இலக்கிய உலகத்தில் ஒரு புதிய , முதல்
முயற்சி.

தம்பலா சிறுகதையில் பாரதியும் தம்பலாவும் கனகலிங்கமும் கதைப்பாத்திரங்கள்.

தம்பலாவும் கனகலிங்கமும் பாரதி கண்ட இரு நிஜங்கள். இருவருமே
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள்.
இதில் கனகலிங்கத்தைப் பாரதி தன் சமூக சீர்திருத்த கருத்துக்காக
கையில் எடுத்துக்கொண்டு அவனுக்குப் பூணூல் அணிவித்து
தன்னளவில் ஒரு மிகப்பெரிய சமூகப் புரட்சியை நடத்திக் காட்டுகிறார்.
ஒரு கனகலிங்கத்திற்கு புணூல் போடுவதாலேயே சமூகப்புரட்சியை
ஏற்படுத்திவிட முடியாது என்பதால் இந்தக் கருத்து தளத்தில் பாரதியை
மிகவும் கடுமையாக விமர்சனம் செய்கிறார் புதுமைப்பித்தன்.
பாரதி நம்பிய ஆசார சீர்திருத்தங்கள் புதுமைப்பித்தனுக்கு அசட்டுத்தனங்களாகப்
பட்டன. பாரதி எழுதிய சிறுகதை "முற்றுப் பெறாத சந்திரிகையின் கதையில்
பாரதி கோபலய்யங்காருக்கும் வேலைக்காரி மீனாக்ஷிக்கும் நடத்திய
கலப்பு மணத்தை விகடம் பண்ணுகிறார் புதுமைப்பித்தன் "கோபலய்யங்காரின்
மனைவி' சிறுகதையில்.
கனகலிங்கத்திற்கு பாரதி தான் குரு. எப்போதும் கனகலிங்கத்திடம் கண்ட
சிஷ்யபக்தி பாரதிக்குக்கும் பாரதியின் ஆளுமைக்கு ரொம்பவும் சாதாரணமான
விஷயம். பாரதி கனகலிங்கத்திடம் பொறாமைப் படவோ வியப்படையவோ
எதுவுமில்லை. ஆனால் ஒடுக்கப்பட்ட அதே சமூகத்தைச் சார்ந்த
தம்பலாவைக் கண்டு பாரதி பிரமிப்பு அடைகின்றான.

பாரதி நேரில் சந்திக்க வேண்டும் என்று விரும்பிய ஒரு மனிதனாக
தம்பலா கதைப் பாத்திரம் சித்தரிக்கப்படுகிறது. தம்பலா.
 குதிரையிலிருந்து இறங்கும் போது அவன் தோற்றத்தில் தெரிந்த
கம்பீரம், அவன் குதிரை மேல் போவதைக் கண்டு பொறாமைக் கொண்ட
உயர் ஜாதிக்காரர்கள் "தோட்டிப் பயலுக்குத் திமிர பார்த்தியான்னு' அவன் முதுகுக்குப் பின்னால் பேசுகிறார்களாம். இதைச் சொல்லிவிட்டு
"பற்கள் எல்லாம் வெளியே தெரியும்படியாக சர்வசாதாரணமாகச் சிரித்தான்.
அதில் வெளிப்பட்ட அலட்சியம் பாரதிக்குப் பிடித்திருந்தது"
என்கிறார் கதைச் சொல்லி.

பாரதியைப் பற்றி சொல்லும் போது கதையாசிரியர்
'மிகவும் மெலிந்த சரீரம், ஆனால் வீர புருஷனுகுரியதோர்  நடை" என்ற
வரிகள் தம்பலாவின் தோற்றம், வீரம், கம்பீரத்துடம் ஒப்புமைப் படுத்தி
பார்க்க வேண்டிய வரிகள்.

தம்பலா தோட்டிகளை அவமானப் படுத்தியதற்காக  புதுச்சேரியை நாறடித்த
சம்பவத்தைக் கேட்டு,
'அப்படியான காரியமா செய்தீர்கள் தம்பலா? '
என்று கேட்கிற இடத்திலும்,
'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கர்த்தர் நீதி நியாயம் செய்கிறாரோ இல்லையோ..
இந்தத் தம்பலா கண்டிப்பா செய்வான்' என்று சொல்லும் போது
தம்பலாவின் குரலில் தொனித்த உறுதியும் ஆவேசமும் பாரதியை
கண்களை இமைக்காமல் அவனைப் பார்க்க வைக்கிறது.

இந்த இடத்தில் தான் தம்பலா என்ற கதைப்பாத்திரம் கம்பீரத்துடன்
வாசகனின் மனதில் வலம் வருகிறது.
ஒரு எழுத்தாளனாக பாரதிவசந்தன் கத்தி மீது நடக்க வேண்டிய
இடம். ஒருவர் பாரதிவசந்தனே ஆராதிக்கும் பாரதி, இன்னொருவர்
பாரதி கண்டு பிரமித்த தம்பலா. இந்த இரண்டு பாத்திரங்களுமே
நிஜம். ஒருவரின் நிழலில் ஒருவர் மறைந்துவிடாமல் இருவரையும்
சேர்த்து சுமக்க வேண்டிய இடம். பாரதி வசந்தன் பாரதி மீது
கொண்ட அதீதப் பற்று காரணமாகக் கூட எவ்விதமான நாடகத்தன்மையையும்
கதையில் புகுத்தாமல் மிகவும் கவனத்துடன் கதை முடிவை நோக்கி
நகர்த்த வேண்டிய இடம்.
இந்த இடத்தை பாரதிவசந்தன் மிகவும் சரியாகவே கடந்திருக்கிறார்.
அதனால் தான் இக்கதை யதார்த்தத்திலிருந்து விலகாமல் இருக்கிறது.
பாரதி, தம்பலா சந்திப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் கதையை நகர்த்தி
பாரதி சந்திக்க வரும்போது புதுச்சேரியை ஒரு பருந்து பார்வையில்
பின்புலமாகக் காட்டி சந்தித்தப் பின் பாரதி என்ன சொல்லியிருக்க முடியும்
என்பதோடு கதையை முடிக்கிறார்.

புதுச்சேரி தமிழ் பாரதி வசந்தனுக்கு கைகொடுத்திருக்கிறது.
கிறித்தவனான தம்பலாவின் 'பிரகாசமான நெற்றியில் மிகச் சின்னதாய்
சந்தணப்பொட்டு' என்று எழுதியிருப்பது கிறித்தவர்கள் அக்காலத்தில்
இந்துமத அடையாளங்களை விடாமல் பின்பற்றினார்கள்
என்பதைக் காட்டுகிறது.

பாரதி தம்பலாவின் வீட்டுக்கு வெளியே திண்ணையில் தான் அமர்ந்திருக்கிறார்,
வீட்டுக்குள் போகவில்லை. ஆனால் தம்பலாவின் வீட்டைப் பார்த்து
பெருமை அடைகிறார்.
வீட்டுக்குள் போனதாகவோ
 தம்பலா விருந்து உபசரித்ததாகவோ காட்டியிருந்தால்
அது நம்பகத்தன்மைக்கு அப்பாற்பட்டதாக இருந்திருக்கும்.
பாரதி வசந்தன் அந்தத் தவறைச் செய்யவில்லை.

கதை முடிவில் பாரதியின் வரிகளாக பாரதிவசந்தன் எழுதியிருக்கும் வரிகள்:

" ஒரு மனுஷன் தாழ்ந்த குலத்திலே பிறந்துவிட்டான் என்கிறதுக்காக அவனை
ஒதுக்கி வைப்பதோ ஒடுக்கி வைப்பதோ அவனுக்கும் கேடு, பிறருக்கும் கேடு.
இனிமேல் பள்ளனோ, பறையனோ, சக்கிலியோ, தோட்டியோ யாரும் தம்மைக்
கைநீட்டி அடிக்காத வண்ணம் பார்த்துக் கொள்வது நல்லது"

இந்த வரிகள் ஒடுக்கப்பட்டவர் பார்வையிலும்
சமூக சீர்திருத்த தளத்திலும்  விமர்சனத்திற்கும்  எதிர்வினைகளுக்கும்
இடமளிப்பவை. ஆனாலும் பாரதி இப்படித்தான் சொல்லியிருக்க
முடியும் என்ற முடிவுக்கு பாரதி வசந்தன் வந்திருப்பது பாரதியின் காலத்துடனும்
ஆசார சீர்திருத்தங்கள் இந்து சமூகத்தை ஒற்றுமைப் படுத்தும், சீர்திருத்தும்
என்று நம்பிய பாரதியின் கருத்துடனும் நேர்க்கோட்டில் இருப்பது போல
எழுதியிருப்பது பாராட்டுதலுக்குரியது தான்.

விமர்சனத்திற்குரிய இந்த வரிகளை
எழுதியதன் மூலம் பாரதிவசந்தன் கதையை மீண்டும் ஒரு முறை வாசிக்க வைத்து மவுனமாக ஒரு புரட்சியை செய்திருக்கிறார்.
எழுதிய எழுத்துகளுக்கு நடுவில் எழுதப்படாமல் கடந்து வந்த மவுனத்தில்
இன்னொரு கதையையும் சேர்த்தே  வாசிக்க வைத்ததில் தம்பலாவுக்கு
தனி இடம் உண்டு.
பாரதியைக் கொண்டாடுபவர்களும் பாரதியை விமர்சிப்பவர்களும்
என்று இருசாராருக்குமே  மறுவாசிப்புக்கு இடம் கொடுப்பது இக்கதையின்
சிறப்பு.

நூல்:
A Trilingual edition
BHARATHI VASANTHAN'S
THAMBULA
English version : P Raja
French version: S A Vengada Soupraya Nayagar
வெளியீடு: நிவேதிதா புத்தகப் பூங்கா, சென்னை
(ஏப்ரல் 2010 ல் எழுதிய விமர்சனம். வடக்குவாசல் இதழில் வெளிவந்தது
 மீள்வாசிப்புக்காக)
No comments:

Post a Comment