Saturday, June 13, 2015

பாரதிதாசன் பற்றி புதுமைப்பித்தன்






பில்ஹணீயம் எனும் கதையை, பாவேந்தன் பாரதிதாசன் ‘புரட்சிக் கவி’ எனும் பெயரில் புதிய நோக்கில் எழுதியிருந்ததைக் குறித்து புதுமைப்பித்தன் 1944ல்  எழுதிய விமரிசன கட்டுரையிலிருந்து  சில பகுதிகள்:

பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப்போன சொத்துக்கள் பல. இவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டின் ஞானரதம், குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாஸன் என்று சொல்ல வேண்டும்.
எங்கெங்குக் காணினும் சக்தியடா ! – ஏழுகடல்
அவள் வண்ணமடா
என ஸ்ரீ கனக சுப்புரத்தினம் தமது கன்னிக் கவிதையைக் கொணர்ந்து சமர்ப்பித்தபொழுது, பாரதியாரின் ‘தராசு’ “எழுக புலவன்” என ஆசீர்வதித்தது. அன்று முதல் பாரதிதாஸனாகிவிட்ட ஸ்ரீ கனக சுப்புரத்தினம் பாரதி வகுத்த பாதையிலே பல அழகுக் கனவுகளை நிர்மாணித்துத் தந்திருக்கிறார். பாரிச வாய்வும், பக்கவாதமும் போட்டலைக்கும் இன்றைய கவிதையுலகிலே, அவருடைய பாட்டுக்கள்தான் நிமிர்ந்து நடக்கின்றன. நண்பர் ஸ்ரீ கனக சுப்புரத்தினம் நம்மிடையே வாழ்பவர்; நம்மைப் போல, கருத்து விசித்திரங்களும் கருத்து விருப்பு வெறுப்புக்களும் ஆணித்தரமான அபிப்பிராயங்களும் கொண்டவர். பாரதிதாஸன் கவி; கனவுக் கோயில்களைக் கட்டி நம்மை அதில் குடியேற்றி மகிழ்கிறவர். ‘குள்ளச் சிறு மனிதர்களின்’ எத்து நூல் வைத்து அவரது காவிய மாளிகளைகளை முழம்போட முயலுகிறவர்களுக்கு ஸ்ரீ கனக சுப்புரத்தினம் இடைமறித்து நின்று தம் கருத்துக்களைக் காட்டி மிரட்டி ஓட்டிவிடுவார். பாரதிதாஸனைப் பழகி அனுபவிக்க வேண்டுமெனில் ஸ்ரீ கனக சுப்புரத்தினத்தின் கருத்துக்களைக் கண்டு பயப்படுவது விவேகமல்ல; ‘நட்ட கல்லும் பேசுமோ’ என்று பாடியவரைவிட இவர் பிரமாதமான தவறு எதுவும் செய்துவிடவில்லை. அவருடைய காவியங்களில், ராமாயணம் என்னும் பெரும் புளுகும், ‘எங்கள் மடாதிபதி’ ‘சைவத்தை ஆரம்பித்த’ விமரிசையும் இருந்தால் என்ன குற்றம் ? அவர் கவி.

 தன்னுடைய அந்தஸ்துக்காக ஒருவனை உயிர்வதை செய்யத்துணியும் மன்னனுக்கு ராஜ்யத்தில் இடமில்லை என்பதுதான் இந்தப் புரட்சிக் கவியின் ஆதாரக் கருத்து. களவையும் நிலவையும் பற்றி பாடிக் கொண்டிருந்த கவிஞன், பிரஞ்சு புரட்சிக்கு உதயகீதம் பாடிய ரூஸோவைப் போலக் கனல்விடுகிறான். ‘ அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே’ என்று கொண்டு பட்டினத்தார் தம் வீட்டுக்குத்தான் நெருப்பு வைக்க பார்க்கிறார். புரட்சிக் கவியான உதாரனது பேச்சு, வீண் கருவம், டம்பம், வரம்பற்ற தன்னிச்சை, கொலை வெறி, அந்தஸ்து என்ற உச்சாணி கொம்பு என்ற உளுத்துப் போன கருத்துக்களைச் சுட்டு சாம்பலாக்குகிறது. கூளங்கள் கொதித்தெழுந்து உயிர் வதைக்குத் துணிந்திட்ட மன்னனைத் தேடி வரும்போது, மன்னன் இன்றைய வளமுறைப்படி நாட்டைவிட்டு வெளியேறி விடுகிறான்.
. புரட்சிக்கவியில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் பச்சைத் தமிழன்; சாயச்சரக்கல்ல; மழை பெய்த மூன்றாம் நாள் சாயம் விட்டுப்போகும் பண்ருட்டிப் பொம்மை அல்ல..



இரண்டாவதாக இவர் காதல் துறையில் பாடும் பாட்டுகள் யாவும் உடம்பு விகாரங்களைத் தட்டியெழுப்பும் பாட்டுகளே தவிர, உள்ளத்தின் போக்கைக் காட்டுவன அல்ல; புலன் நுகர்ச்சியில் சந்துஷ்டியேற்பட்டுவிட்டால் போதும் எனச் சொல்லுவதைப் போல் இருக்கிறது என்று சிலர் அளக்கிறார்கள்.
அவரது பாடல்கள் உடம்பை மறந்துவிட்டு, நெறி திறம்பாக் காதல்துறை காட்டும் வெறும் சொப்பனாவஸ்தைகள் அல்ல என்பது உண்மை. உடம்பை மறந்த காதலைப் பாடுகிறவன்தான், தான் கற்பனா லோகத்தில் நடப்பதாக நினைத்துக்கொண்டு, உளைச்சேற்றில் மிதிக்கிறவன்.
நேரான குங்குமக் கொங்கை
காட்டிச் சிரித்தொரு பெண்
போறாள் பிடிபிடி யென்றே
நிலவு புறப்பட்டதே
[அவ்வை: அசதிக் கோவை]
எனவும்,
கொங்கைகளும் கொன்றைகளும்
பொன்சொரியும் காலம்
[நந்திக் கலம்பகம்]

எனவும், மனம்விட்டுப் பாடிய கவிஞர் பரம்பரையைச் சேர்ந்தவர்தான் அவரும். தமிழ்ப் பண்புக்குப் புறம்பானவர் அல்ல. ஏதோ பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலீஷ் இலக்கியத்தின் போலி மூடாக்குகளை வைத்து எதையெடுத்தாலும் விரசம் விரசம் எனத் திரைபோடும் ரசனோபாக்கியான கர்த்தர்களுக்கு இது புரியாமலிருந்தால் பாரதிதாஸன் எப்படி பொறுப்பாளியாக முடியும் ? இன்று, இலக்கியத்தை இங்கிலீஷ் கண்ணாடி கொண்டு சோதனை செய்து, அந்தச் சங்கப் பலகையின் அங்கீகாரம் பெற்றதே கவிதை என நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றால், அதைவிட தமிழ்க் காவியத்துக்கே சந்தனக் கட்டையில் சிதைவைத்து சந்துஷ்டியடையலாம்.

No comments:

Post a Comment