Tuesday, May 5, 2015

மலையகத்தின் முதல் தொழிற்சங்க பெண் அரசியல்வாதி





(புகைப்படத்தில் பார்வையாளர் வரிசையில் விவாதத்தில் சரஸ்வதி சிவகுரு)

இலங்கை மலையகத்தில் கடந்த ஏப் 25 மற்றும் 26ல் நடந்த
பெண்ணிய சந்திப்பு & பெண்ணிய உரையாடல் கருத்தரங்க நிகழ்வில்  சிலர்  என்னை ஆச்சரியப்படுத்திவிட்டார்கள்.
ஒரு சிலரில் சில நடவடிக்கைகள் எனக்கு தனிப்பட்ட முறையில் அதிர்ச்சி தருவதாகவும் வருத்தமளிப்தாகவும் இருந்ததும் உண்மைதான். வருத்தப்பட்ட விடயங்களைப் பற்றி பேசுவதில் பலனில்லை. எனவே என்னை ஆச்சரியப்படுத்திய ஒரு பெண்மணியைப் பற்றி முதலில் பேசலாம் என்று நினைக்கிறேன்.
அப்பெண்மணி ஒர் அரசியல்வாதி என்பதால் என் கவனத்திற்கான காரணமாகவும் இருந்திருக்கலாம்.
அவர் பெயர் சரஸ்வதி சிவகுரு.

தோட்டத்தொழிலாளியின் மகளாக முதல் பெண்  மகாணசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சரஸ்வதி சிவகுரு தேசிய தொழிற்சங்க அரசியல் வரலாற்றில் முதல் பெண் அரசியல்வாதி என்ற பெருமைக்குரியவர். இன்று இலங்கையை ஆளும் மைத்திரி அரசுக்கு ஆதரவு கொடுக்கும் அரசியல் நிலைப்பாட்டில் இருக்கும் ஓர் ஆளும்கட்சியின் அரசியல்வாதி என்பது இன்னும் கூடுதல் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி.

இரண்டு நாட்கள் நிகழ்விலும் அவர் பார்வையாளராக மட்டுமே அமர்ந்திருந்தார். மலையகம்  குறித்த கருத்தரங்க  விவாதங்களில் காத்திரமான பங்களிப்பையும் செய்தார். ஆதாரங்களுடன் தன் செய்திகளைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தினார். எவ்வித உணர்ச்சி அரசியலையும் அவர் நடத்தவில்லை. மொத்தத்தில் ரொம்பவும் எளிமையானவராகவும் அதனாலெயே இனிமையானவாரகவும் காட்சி அளித்தார்.
ஓர் அரசியல்வாதி, அதுவும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகாண சபை உறுப்பினர், நுவரோலி மலையகப்பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.. எவ்வித ஆடம்பரமோ விளம்பரமோ
காட்டாமல்  பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தார்.
நிகழ்வில் எந்த ஒரு அமர்விலும் அவர் தலைமை ஏற்கவும் இல்லை.
அரசியல்வாதி தலைமை ஏற்றால் இக்கருத்தரங்கிற்கு அரசியல் முலாம் பூசப்பட்டுவிடும் அபாயம் ஏற்பட்டுவிடலாம் என்பதால்
அதுவும் தவிர்க்கப்பட்டிருந்தது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அப்பொதுதான் நம் ஊர் அரசியல்வாதிகள் நினைவுக்கு வந்தார்கள். தேர்தலில் வெற்றி பெற்றவரை விடுங்கள்.. அரசியல் கட்சியின் மாவட்டம், வட்டங்கள் கூட எப்படி எல்லாம் அலட்டுவார்கள் .. இம்மாதிரி எல்லாம் ஒரு கருத்தரங்க நிகழ்வில் ஒரு அரசியல் பிரபலம்  கூட்டத்தில் உட்கார்ந்து நிகழ்வைக் கேட்டுக்கொண்டு இருப்பார் என்பதை எவராலும் கற்பனை செய்ய முடியுமா???!!!

எனக்கு சரஸ்வதி சிவகுரு அவர்களின் அரசியல் நிலைப்பாடு, அவர் சார்ந்த அரசியல் கட்சியின் வாக்குறுதிகள், இலட்சியங்கள் இவை
எல்லாம் ஓரளவு தான் தெரியும். அதுவும் தினகரன், தினக்குரல் உபயம்.. அவ்வளவுதான். ஆனால் அப்பெண்மணி இக்கருத்தரங்கில் கலந்துகொண்டதும் அப்போதைய அவர் செயல்பாடுகளும் என்னை வியப்பில் ஆழ்த்தின.
சரஸ்வதி சிவகுரு அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பேசியது நினைவுக்கு வருகிறது.
"தோட்டத்தொழிலாளியின் மகளாக முதலாவது பெண் பிரதிநிதியாக மகாண சபையில் அங்கம் வகிக்க கிடைத்தமை பெரும்பாக்கியமாகும். எனது வெற்றி உழைக்கும் பெருந்தோட்டப் பெண்களுக்குக் கிடைத்த வெற்றியாகும். எனக்காக வாக்களித்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மலையகப் பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் பெண்கள், ஆசிரியைகள், ஆடைத் தொழிற்சாலையில் தொழில் புரியும் யுவதிகள் போன்ற பெண்களின் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இந்த சந்தர்ப்பதைப் பயன்படுத்துவேன்"
இது வெறும் நன்றி சொல்லும் அரசியல்வாதியின் அறிக்கையாக இல்லாமல் மலையக அரசியல் வாழ்வில் அதிலும் குறிப்பாக பெண்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் ஒரு பயணமாக உங்கள் அரசியல் வாழ்வு இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்..

இலங்கை மகாண சபை குறித்த விவரங்கள்:
 இலங்கையில் மாகாண சபைகள் (Provincial Councils) என்பது இலங்கை மாகாணங்களுக்கான சட்டவாக்க அவைஆகும்.[1] இலங்கை அரசியலமைப்பின் படி, மாகாண சபை ஆனது குறிப்பிட்ட மாகாணத்தின் வேளாண்மை, கல்வி, சுகாதாரம், வீடமைப்புத் திட்டம், உள்ளூராட்சிகள், சாலைவழிப் போக்குவரத்து, சமூக சேவை போன்றவற்றின் நிருவாகங்களைக் கவனிக்கும். இவற்றை விட காவல்துறை அதிகாரம், காணி போன்றவற்றுக்கும் அரசியலமைப்பின் படி இதற்கு அதிகாரங்கள் உள்ளன, ஆனாலும் மத்திய அரசு இவற்றுக்கான அதிகாரங்களை மாகாண அரசுக்கு வழங்க மறுத்து வருகின்றது. மாகாண சபைக்கு தேர்தல்மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
1987 சூலை 29 இல் கையெழுத்திடப்பட்டஇலங்கை-இந்திய ஒப்பந்தத்தின்  (rajiv- JR Jeyawardana) படி அதே ஆண்டு நவம்பர் 14 இல் இலங்கை நாடாளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது.[2] 1988 பெப்ரவரி 3 இல் ஒன்பது மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன.
மாகாண சபைகள் அமைக்கப்பதற்கான நோக்கம் என்னவென இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் முகவுரையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

1.    இலங்கையின் இறைமையையும், தன்னாதிக்கத்தையும் ஒற்றை ஆட்சியையும் பாதுகாப்பதற்காகவும்,

2.    இலங்கையில் பல்லின மக்கள்  வாழும் நாடாதலாலும், பல மொழி பேசும் ஒரு நாடாக ஏற்றுக் கொள்வதாலும்,

3.    பல்லின மக்கள் வாழ்வதால் அவ்வவ் இனத்திற்கு வெவ்வேறான மொழி, கலாசாரம், என்பன உண்டு என்பதை அங்கீகரிப்பதாலும்,

4.    தமிழ் மொழி பேசுபவர்கள் இலங்கையின் ஏனைய மக்களுடன் ஒன்றாகக் கலந்து வசிப்பதுடன், வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையாக வசிப்பதால் அவ்வடக்கு கிழக்கு அவர்களது பூர்வீக பூமி என ஏற்றுக் கொள்வதாலும்,

5.    இலங்கை சுதந்திரமும், இறைமையும் தன்னாஅதிக்கமும் கொண்ட ஒற்றையாட்சி என்பதாலும், அவற்றைப் பாதுகாக்க வேண்டியிருப்பதாலும்,
மாகாண சபைகள் அமைப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது)

மலையக அரசியல் குறித்த விவரங்களுக்கு:









1 comment:

  1. நல்ல தொகுப்பு. நானும் மலையகம் தான். தமிழகத்தில் இருந்து கூலிகளாக அழைத்து வரப்பட்டு இருநூறு வருடங்களாக அடிமை வாழ்வு வாழ்ந்து வரும் எம் சமூகத்தின் விடியலுக்கான நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete