Wednesday, May 27, 2015

இலங்கை பயணம் எழுப்பும் கேள்விகள்

இலங்கை பயணத்தில் எழுந்த கேள்விகள்
----------------------------------------------------கேள்வி எண்: 1

தமிழ்நாட்டின் வரலாற்றை வாசிக்கும் போது பவுத்தம் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலாக இருந்திருக்கிறது. பண்டிதர் அயோத்திதாசரின் ஆய்வுகள் இக்கருத்தை
உறுதி செய்கின்றன.  திருக்குறளை திரிகடகம் என்று சொல்லும் அவர் முடிவை
ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட பவுத்தநெறி தழுவிய மக்கள் கலாச்சார படை எடுப்பின் காரணமாக
ஆரிய வேதங்களையும் ஆரிய மேலாண்மையையும் ஏற்க மறுக்கிறார்கள். எனவே, அவர்கள்
ஊரிலிருந்து ஒதுக்குப்புறமாக விலக்கி வைக்கப்பட்டார்கள் அல்லது விலகி இருந்தார்கள்.
இப்படியாக தமிழகச்சூழலில் பவுத்தம் சமான்ய மனிதனின் வாழ்க்கையாக இருக்க
தமிழ் நிலத்திற்கு மிகவும் அருகில் இருக்கும் இலங்கை மண்ணில் ?.....
சிங்கள பவுத்த மதம்  VS  தமிழ்மக்களின் இந்துமதம் என்று தமிழ்த் தேசிய போராட்டத்தை திசைத் திருப்பிய ஒரு தவறானப் பார்வை கூட இருந்தது நினைவுக்கு வருகிறது.
இலங்கையில் போர்ச்சுக்கீசியர்களின் ஆட்சியில் தான் கிறித்துவத்தை முழுவதுமாக பரப்ப அவர்கள்
பவுத்த விகார்களை இடித்தார்கள். பவுத்த துறவிகளைக் கொன்றொழித்தார்கள். உயிர்தப்பிய பவுத்த
பிக்குகள் சிலர் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தார்கள். அதன் பின் வந்த கிழக்கிந்திய கம்பேனிக்காரர்கள் இலங்கை வாழ் பவுத்த மக்களின் சமய சடங்குகளைச் செய்யவும் வழிபாடுகளை நடத்தவும் பவுத்த துறவிகள் இல்லை என்பதால் அன்றைய பர்மாவிலிருந்து ஆயிரக்கணக்கான பவுத்த பிக்குகளை இலங்கைக்கு கொண்டுவந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.
மேலும் இந்தியாவிலும் கீழை நாடுகளிலும் பவுத்தம் பரவியதில் பெரும்பங்காற்றிய
பேரரசன் அசோகன் தன் மகனையும் மகளையும் பவுத்த நெறிப் பரப்ப இலங்கை
மண்ணுக்கு அனுப்புகிறான். இலங்கை வந்திறங்கும் அவர்களை இலங்கை அரச குடும்பமே
வரவேற்கிறது. அப்படியானால், இலங்கையில் புவுத்தம் அரண்மனை வாயிலாகவே
நுழைந்து மேலதட்டு மக்களின் வாழ்க்கையில் இடம் பிடித்ததா?
விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையில்  இலங்கை மண்ணின் பவுத்தநெறி
எம்மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தியது?

 அரண்மனை, ஆட்சி, அதிகாரம் இந்தப் பாதையில் இன்றுவரை பவுத்தம்
இலங்கையின் இன்னொரு முகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமா?
யோசித்துப் பார்க்கிறேன்....
இத்துடம் அனைத்தையும் பவுத்த நெறிக்குள் அடக்கிய பண்டித அயோத்திதாசரும்
பவுத்தம் தழுவ இலங்கை மண்ணுக்கு சென்று முறையாக பவுத்தத்துக்கு மாறியதாக
தகவல்கள் இருக்கின்றன.

வெளிப்படையாக தெரியும் இக்காரணிகள் தவிர்த்து இலங்கையில் புத்தமதம்
2000 ஆண்டுகள் பழமையைக் கொண்டிருப்பதும்
ஆட்சி அதிகாரத்துடன் இன்றுவரை தொடர்புடையதாக இருப்பதையும் கவனிக்கிறேன்.

புத்தரின் போதனைகள்  உடைந்துப்போன பல்லிலும் கொண்டுவந்து நடப்பட்ட
போதிமரத்து கிளையின் அடையாளமாகவும் மட்டும் இருப்பது ஏன்?

கேள்வி எண் 2
---------------------
இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள்  65684 ஏக்கர் பரப்பில் தென்னை காணப்படுகின்றது.யாழ்ப்பாணம் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களும் இப் பிரதோசத்தின் தென்னைச் செய்கைக்குட்பட்ட நிலப்பரப்பில் 60 வீதத்தை அடக்கியுள்ள(இலங்கையில் தமிழ்ர் பாரம்பரியப் பிரதேசத்தின் குடித்தொகைப் பண்புகளும் பொருளாதார வளங்களும் இரா. சிவச்சந்திரன். எம். ஏ)
அண்மையில் இலங்கைப் பயணத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக இளநீர்
பருகலாம் என்று விலை கேட்டால் அதிர்ச்சியாக இருந்தது.
ஒரு பெரிய இளநீர் விலை இலங்கை ரூபாய்க்கு 100 முதல் 120 வரை
சிறிய இளநீர் 80 ரூபாய். இந்தியாவில் ஒரு பெரிய இளநீர் விலை 40 ரூபாய்.(அதாவது
இலங்கை ரூபாய் மதிப்பு ரூ 80 (அதுவும் பெருநகரம்
மும்பையில். சற்றொப்ப அதே விலை அல்லது அதைவிட அதிகவிலை இலங்கையில்,
தென்னைமரங்கள் அதிகம் இருக்கும் பகுதியில் என்பது எதைக் காட்டுகிறது?
போருக்குப் பின் ஏற்பட்டிருக்கும் பொருளாதர சீரழிவைக் காட்டுகிறது.
இவ்வளவு விலை கொடுத்து பொதுமக்கள் தங்களின் அன்றாட பொருட்களை
எப்படி வாங்குகிறார்கள்? என்ற கேள்வி எழுகிறது.
யாழ்ப்பணத்தில் வாழும் இளைஞர்கள் அனைவருக்கும் வெளிநாடு செல்வது மட்டுமே
கனவாக இருக்கிறது. வீட்டுக்கு ஒருவர் வெளிநாட்டில் இருக்கலாமோ ,
அவர்கள் அனுப்பும் பணத்தில் இங்கே இவர்கள் தங்கள் சொந்த மண்ணின்
பொருளாதரம் குறித்தோ விலைவாசி உயர்வு குறித்தோ பிரக்ஞை இல்லாமல்
இருக்கிறார்களோ? அல்லது இந்தப் பொருளாதார சிரழிவை போருக்குப் பின்னரான
ஒரு நாட்டின் பொருளாதர சீரழிவாக மட்டுமே பார்க்க வேண்டுமா?
இது குறித்து இலங்கை மண்ணில் வாழும் பொருளாதார வல்லுநர்கள் என்ன
சொல்கிறார்கள்?
தங்கள் இருத்தலுக்கான நித்தமும் நடக்கும் போராட்டத்தில் வீட்டில்
உடைக்கப்பட்ட கதவுகளும் திருடப்பட்ட வளங்களும் பற்றி யோசிக்கவும்
முடியாத நிலைதான் என்று இப்போதைக்கு சமாதானம் சொல்லிக் கொள்வது
மட்டுமே அதிபுத்திசாலித்தனம் என்று விட்டுவிடலாமா!
2 comments:

 1. சில ஆண்டுகளுக்கு முன் , ஒரு நாள் இலங்கைக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது
  ஒரு கடையில் தேநீர் சாப்பிட்டேன்
  விலை 25 ரூபாய்

  ReplyDelete
 2. ஆழமான கேள்விகள்..
  உங்கள் பதிவுகளைத் தொடர்கிறேன்

  ReplyDelete