Sunday, May 31, 2015

நந்தஜோதி பீம்தாஸை சந்தித்தேன்





நம்பமுடியவில்லை. எல்லாம் இந்த 48 மணி நேரத்திற்குள் நடந்திருக்கிறது.
முதலில் நண்பர் ஆதவன் தீட்சண்யாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
அவர் தானே எனக்கு பீம்தாஸை அறிமுகப்படுத்தியவர்.
தோழர் ஆதவனின் புத்தகத்தை அதன் மேலட்டையின் நுனியிலிருந்து கடைசி பக்கத்தின் கடைசி எழுத்து முற்றும்வரை.. பலமுறை வாசித்து வாசித்து பீம்தாஸுடன் உரையாட ஆரம்பித்துவிட்டேன். என் நண்பர்கள் சிலரிடமும் பீம்தாஸ் குறித்தும் அவருடைய மீசையின் பிரதாபங்கள் குறித்தும் கொஞ்சம் அதிகமாகத்தான் அலட்டிக்கொண்டு விட்டேன் என்று நினைக்கிறேன். இப்படியாக நான் 48 மணிநேரமும் பீம்தாஸ் நினைவாக இருக்க.. என் கைபேசியில்
" hai, iam beemdoss , want to meet you, "
என்று குறுஞ்செய்தி வந்தால் எப்படி இருக்கும்?
36 வயதினிலே நாயகிக்கு மயக்கம் வந்த மாதிரி எனக்கும்..
அதிர்ச்சி.. குழப்பம்.. கனவோ.. நனவோ.. நம்பமுடியவில்லை..
உடனே தொடர்பு கொண்டேன். ஏர்போர்ட்டில் 2 மணி நேரம் சந்திக்கலாம் என்றார்.
மெட்ரோ பிடித்து ஓடி.. அவரை சந்திக்கும் வரை..
என்ன பேசினோம் என்று கட்டாயம் எழுத வேண்டும். ஆனால் என்னவெல்லோமோ பேசினோம்.. அவர் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டாலும் சரி..
என் மனசில் பட்டதை எல்லாம் பேசினேன்.. அல்லது உளறினேனா தெரியல.
ஆனால் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.
அவரிடம் நான் சொல்ல விரும்பிய ஒரு முக்கியமான செய்தியைச் சொல்லாமல் வந்துவிட்டேனே என்று வந்தப்பிறகு நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
அதனால் என்ன.. அவருக்குத் தெரிந்திருக்கலாம். அவர் புதுவிசை வாசகராக இருக்கலாம் தானே. புதுவிசையில் தான் என்னுடைய அந்தக்கதை வெளிவந்தது.
"செப்டம்பர் 29, 3007" என்பது அக்கதையில் தலைப்பு. நினைவிருக்கிறதா ஆதவன்?
2007ல் வெளிவந்த "புதிய ஆரம்பங்கள் " என்ற என் சிறுகதை தொகுப்பில் அக்கதை இடம்பெற்றுள்ளது.
"மீசை என்பது வெறும் மயிர் " என்ற நாவலை வாசித்தவுடன் எனக்கு என் கதையும் நினைவுக்கு வந்தது. என் கதை மீது எனக்கே கொஞ்ச்ம பெருமை வந்துவிட்டது!!
அந்தக்கதையை நான் பீம்தாஸிடம் கொடுக்க மறந்துவிட்டேன். உங்களிடம் இருந்தால் அவருக்கு அனுப்பி வைக்கவும். தன்னைப் போலவே ஒரு பெண்ணும் பகடி செய்து எப்படி எல்லாம் எழுதி இருக்கிறாள் என்பதை எண்ணி நிச்சயம் நம் பீம்தாஸ்
பெருமைப்படுவார் தானே!
எங்கள் சந்திப்பு:
நான் தான் கொஞ்சம் டென்ஷனாக இருந்தேன். அவசரத்தில் கிளம்பியதில் மேட்சிங் துப்பட்டா கிடைக்கவில்லை. கையில் கிடைத்ததை எடுத்து மாட்டிக்கொண்டு ஓடினேன்.
தலையில் வேறு எண்ணெய்க்குளியலுக்கு வைத்த எண்ணேய் வழிந்துக்கொண்டிருந்தது.
அதைப் பற்றி எல்லாம் போகிற அவசரத்தில் எண்ணிப்பார்க்க நேரமில்லை.
நான் நினைத்ததைவிட அதிக வயதானவராக இருந்தார் பீம்தாஸ். ஆனால் அவர் குரலில் நான் கற்பனை செய்திருந்த அதே கம்பீரம். அடிக்கடி அவர் சிரித்த சிரிப்பு..
அதிலும் குறிப்பாக அவருடைய சில வரிகளைச் சொல்லி நான் விளக்கம் தேடிய கதையை ரொம்பவும் மனிதர் ரசித்து ரசித்து சிரித்தார். நான் என் முகத்தில் வியர்வையுடன் சேர்ந்து வழிந்த எண்ணெயைத் துடைத்துக்கொண்டேன்.
எங்கள் பேச்சு நந்தனில் ஆரம்பித்து மகாத்மா ஜோதிராவ்புலே, பாபாசாகிப் அம்பேத்கர், அயோத்திதாசர் வரை நீண்டது.
நிலவறை நூலகம், அவர் தங்கி இருக்கும் தீவு,
அங்கிருக்கும் மக்கள் என்று நிறைய கதைத்தோம்.
நீங்கள் தாராவி பகுதியைக் கட்டாயம்
பார்க்கவேண்டும் என்று சொன்னேன். மனுஷன் அதற்கும் ஒரு சிரிப்பு சிரித்து வைத்தார்.
ஒரு சேரிப்பகுதியில் வாழ்ந்தவன் நான். புதிதாக அதில் என்ன பார்க்க இருக்கிறது? என்று கேட்டார்.
நானும் பதிலுக்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் சேரியைப்
பார்த்திருப்பீர்கள், வாழ்ந்திருக்கிறீர்கள். ஒரு பெருநகரத்தின் சேரியைப் பார்த்திருக்கிறீர்களா?
அது எப்படி இருக்கும் என்பது தெரியுமா?
எங்கள் மராட்டிய கவிஞன் நாம்தேவ் தாசல்
எழுதிய GOLPITHA காட்டும் சேரி வாழ்க்கையை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று சொன்னேன்.
படைப்புகளின் படுக்கையில் கடவுளின் மலம்
ஒரே அடுப்பில் சுடப்படுகிறது
வேதனையும் ரொட்டியும்.
என்று கோல்பிதா காட்டும் மாநகர சேரியின் அவலங்களைப் பற்றிப்
பேசிக்கொண்டோம்.
கடந்த 48 மணிநேரத்தில் நடந்த கூகுள் ரகளை முதல் என் நண்பர்கள்
வட்டத்தை நான் மீசை என்பது வெறும் மயிருடா என்று செய்திருக்கும் எல்லா ரகளைகளையும் சொல்லி சிரித்தோம். அவரும் ரசித்துக்கொண்டார்.
அது என்னவொ வழக்கம்போல பிரபலங்களை சந்திக்கும் போது
அவர்களுடன் நின்று ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற
ஓர்மை எனக்கு ஏற்படுவதில்லை. அப்படியே இப்போதும் நானும்
பீம்தாஸும் எங்கள் சந்திப்பின் நினைவாக ஒரு புகைப்படமும்
எடுத்துக் கொள்ளவில்லை , உங்களிடம் காட்ட.
அதனால் என்ன.. பீம்தாஸின் சிரிப்பு எப்போதும் என் செவியில்
ஒலித்துகொண்டே இருக்கிறது. இந்த நாள் என் வாழ்க்கையிலும்
நந்தஜோதி பீம்தாஸ் வாழ்க்கையிலும் ஒரு மறக்கமுடியாத நாள் தான்.
எங்கள் சந்திப்பை பீம்தாஸே கூட தன் அடுத்தப் புனைவில் எழுதக்கூடும்.
..அதுவரை..
பீம்தாஸை எனக்கு அறிமுகப்படுத்திய தோழர் ஆதவனுக்கு என் நன்றி.
வெறும் நன்றி மட்டும் சொன்னால் போதாது என்பதால் ஆதவனுடன்
அண்மையில் அவர் மும்பை வந்தப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும்.. எங்களுடன் எழுத்தாளர் தோழி அம்பை அவர்கள்.

No comments:

Post a Comment