Saturday, May 16, 2015

நாளையும் நான் வாழவேண்டும்




யுத்தம் எனக்குப் பிடிக்கவில்லை
குண்டுமழைக் குளிப்பில்
குருதியுறைந்த வீதிகளில்
நிணவாடை கலந்த சுவாசிப்புகளில்
வெறுப்படைகிறேன்.

குண்டுகளின் அதிர்வோசை
கேட்காத ஒரு தேசத்தை
இங்கே தேடுகிறேன்.
வெறிச்சோடிப் போன வீதிகளிலும்
முட்புதர் படர்ந்த வயல்களிலும்
மீண்டும் குதூகலம் கொப்பளிக்க
ஒரு மயானத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்ட
மகிழ்வோடு பூரிக்கும்
என் தேசத்தைத் தேடி
கால்கள் விரைகின்றன.

நான் இன்னமும் மரணிக்கவில்லை
எப்பொழுதும்..
- போராளி அம்புலி.

அம்மா ..
இன்று நான் உன்னிடம் வந்தபோது
வீட்டு முற்றத்தில் பதிந்த என்
பாதச்சுவடுகளை
பாதுகாத்து வை.
நாளை நான் வருவேன் என்பது
என்ன நிச்சயம்?
 -போராளி ரூபி மார்க்கிரட் - 1992)

அழகிய மன்னம்பேரி
அவள் ஒரு போராளி
அவளை அவர்கள் பிடித்தனர்
ஒரு அழகி என்பதால்
அவளிடம் ரகசியங்கள் இருந்ததால்
அவளை அவர்கள் சிதைத்தனர்
நிர்வாணமாக குறையுயிராக
தெருவிலே விட்டுச்சென்றனர்..
அழகிய மன்னம்பேரி
ஆனால் அவளைப் போல
அவளது மரணம் அழகானதேயல்ல..

(எழுதியவர் பெயர் தெரியவில்லை. 31/10/96 செம்மணி புதைகுழி
துண்டுப்பிரசுரத்தில் இடம் பெற்ற கவிதை)

"எழுதுங்களேன்
நான் எழுதாது செல்லும்
என் கவிதையை எழுதுங்களேன்"

-கேப்டன் வானதி(யின் கடைசி வரிகள்)

எழுதாத உன் கவிதை எழுதப்பட்டுவிட்டது.
உனக்கான அஞ்சலியாய் ..
போராளிகளே..
நீங்கள் எப்போதும் மரணிக்கவில்லை.



No comments:

Post a Comment