Thursday, May 28, 2015

கங்காணியின் பேத்தியாக இலங்கை மலையகத்தில் நான்
தேயிலைத் தோட்டங்களுக்கு ஒரு சுற்றுலா பயணியாக நான் செல்வது முதல் முறையல்ல.
மூணாறு, ஊட்டி பகுதிகளுக்கு சென்றிருக்கிறேன். மேலும் பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரியில் இளங்கலை பயிலும்போது விடுதி வாழ்க்கை. அக்காலத்தில்
எஸ்டேட் பகுதியிலிருந்து என்னுடன் படித்த தோழியர் உண்டு. எஸ்டேட் என்றால் மலைப்பகுதி, தேயிலை தோட்டம் என்று எங்கள் ஊரில் புழக்கத்தில் இருக்கும் சொல்.
ஆனால் அப்போதெல்லாம் ஏற்படாத ஒர் அவஸ்தை என் இலங்கை மலையகப் பயணத்தில் ஏற்பட்டது. மலையகத்தில் பூகோள நில அமைப்பு ரொம்பவும் ஸ்பெஷலாக .. சுற்றிலும்
மலை.. மலையில் இறங்குமுகமாக பச்சை நிறத்தில் காற்றில் படபடக்கும் தேயிலைத் தோட்டங்கள். அதிலும் கருத்தரங்கம் நடந்த இடமும் எங்களுக்கு தங்கி இருக்க ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த இடமும் இயற்கை அழகின் பச்சைநிற சிரிப்பு.
என்கிருந்தோ வந்து அப்போது ஒட்டிக்கொண்டது என் பூட்டன் கங்காணியின் முகம்
அவரை நான் மறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று கூட சொல்லலாம். ஆனால் அந்த முகத்தை மறக்கவில்லை என்பதை மலையகம் போன பின்னர் தான் நானே உணர்ந்து
கொண்டேன். கங்காணி தாத்தா என் அம்மாவின் அம்மாவுக்கு அப்பா. அதாவது என் தாய்க்கு தாய்வழி தாத்தா. எனக்கு தாய்வழி பூட்டன் . சரிதானே.
அப்போதே ஆறடி உயரம். தேக்கு மரம் போல உடல்வாகு. எப்போதும் உதட்டில் சுருட்டு.
மேல்சட்டைக்கு மேல் ஒரு கறுப்புக் கலர் கோர்ட் போட்டிருப்பார். கையில் அந்தக் காலத்திலேயே ஒரு வாக்கிங் ஸ்டிக். எனக்கென்ன வயதிருக்கும்,.... இரண்டாம் வகுப்போ மூன்றாம் வகுப்போ படித்துக்கொண்டிருந்திருப்பேன். சரியாக நினைவில்லை.
ஆனால் அந்தக் காலத்திலேயே அவர் தன் இலங்கைப் பயணம் பற்றியும் கப்பலில் பயணம் செய்தது பற்றியும் எங்கள் அனைவரிடமும் கதைக் கதையாக சொல்வார்.
நாங்கள் மும்பையிலிருந்து ஊருக்குப் போனவுடன் வந்துவிடுவார். அப்பாவைப் பார்க்க.
அவர் வந்துவிட்டாலே எனக்கு கொண்டாட்டம் தான். அவர் சொல்லும் வீரதீரக்க் கதைகளைக் கேட்க தயாராகிவிடுவேன். அடிக்கடி இங்கிலீசு வேறு பேசுவாரா.. எனக்கு அந்த வயதில் அதுவே வியப்பாக இருக்கும். " ப்பப்பா.. இந்த தாத்தாவுக்கு எப்படி இங்கிலீஷ் தெரியும்?" என்று அப்பாவிடம் கேட்டிருக்கிறேன். அப்பா என் கேள்விக்குப் பதில் சொல்லாமல் இருப்பார். ஆனால் தாத்தா ஆரம்பித்துவிடுவார். தான் எப்படி வெள்ளைக்கார துரையிடம் இங்கிலீசு பேசுவேன் என்பதையும் வெள்ளைக்கார துரைச்சானி அம்மாவை இந்தியாவுக்கு அழைத்து வந்து சுற்றிக்காட்டியது பற்றியும் கதைக் கதையாக சொல்லுவார். எனக்கு அதெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். அத்துடன் அவர் ஒரு சிறந்த வேட்டைக்காரன். ஆமாம்.. காடுகளுக்கு வேட்டைக்குச்
செல்வதும் விலங்குகளின் மாமிசத்தை மஞ்சள் சேர்த்து கயிற்றில் கோத்து காய வைத்து உண்பதும் அவருக்குப் பிடித்தமானவை. அதனால் தான் அவர் தன் வயதானக் காலத்திலும்
கட்டுமஸ்தாக இருப்பதாக எங்கள் ஊர் இளசுகளிடம் கதை அளப்பதைக் கேட்டிருக்கிறேன்.
கங்காணி தாத்தா என்றுதான் எல்லோரும் அவரை அழைப்போம். அவருக்கும் அதில் பெருமை.
என் அம்மம்மாக்களும் கங்காணி பொண்ணுகளாக்கும் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொண்டிருந்தார்கள். அவர் தன் பரிசாக தான் வைத்திருந்த வேட்டைநாய் டைகரை எங்களுக்கு
கொடுத்தார். இதெல்லாம் ரொம்ப ரொம்ப பழைய கதை. ஆனால் அது என்னவோ நான் மலையகத்தில் போய் சேர்ந்தவுடன் அந்தக் கிழவன் முகம் வந்து என்னைப் படாதப் பாடு படுத்திவிட்டது.
கங்காணி என்றால் யார்? அவர்கள் செய்த தொழில் என்ன?
அதில் பெருமைப்பட என்ன இருக்கிறது? என்பதெல்லாம் நான் வளர வளர எனக்குத் தெரிந்துவிட்டது. ஆனால் அதெல்லாம் எனக்குத் தெரிய ஆரம்பிக்கும் வயதில் கங்காணி தாத்தா கண்ணைமூடிவிட்டார்.
கங்காணி தாத்தா பெருமையுடம் பேசிய மலையகத்தில் நான் இருக்கிறேன். .. எத்தனையோ குடும்பங்களை அவர் இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கலாம். அவர் அழைத்துவந்தவர்களில்
எத்தனை பேர் வழியில் இறந்துப் போனார்களோ..!
பசுமையான அந்த இலங்கை மலையகத்தில் கங்காணி தாத்தா அழைத்து வந்த பெண்களின் கண்ணீரின் ஈரம் .. அந்த தேயிலையில் இருக்கிறது. எனக்கு அங்கு இருக்கும்போது அதனாலோ
என்னவோ எப்போதும் விரும்பி பருகும் "டீ" கூட .. குடிக்கமுடியாமல் போய்விட்டது.
மலையகத்திலிருந்து தேயிலை வாங்கிவர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதுவும் முடியவில்லை. "அக்கா சிலோன் டீ வாங்கிவந்தாயா?" என்று என் தங்கைகள் மும்பை வந்தவுடன்
கேட்டார்கள். அப்போது தான் அவர்களிடம் கங்கானி தாத்தா நினைவில் வந்ததைச் சொன்னேன்.
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் உலகம் எங்கும் இருந்த,
சூரியன் அஸ்தமிக்காத தன் காலனிநாடுகளில்
சுரங்கம் வெட்டவும், பாலம் கட்டவும், ரயில்பாதை அமைக்கவும் காபி, ரப்பர், தேயிலை தோட்டங்களில் வேலைப்பார்க்க அடிமைகளாவும் கோடிக்கணக்கான எம் மக்களை பிடித்துச் சென்றிருக்கிறார்கள். சஞ்சிக்கூலி, துண்டுக்கூலி, ஆள்கட்டி, கங்காணி என்று காலனி
ஆதிக்கம் உருவாக்கிய சொற்கள் வெறும் அடையாள சொற்களோ செய்யும் தொழில் குறிக்கும் சொற்களோ மட்டும் அல்ல. அச்சொற்கள் வரலாறு காணாத சுரண்டலின் புதிய அடையாளங்கள்.
அந்த வெள்ளைக்காரர்கள் உறிஞ்சும் ஒவ்வொரு மிடறு காபி, தேநீர் விளைவிக்க எம்மக்கள் அந்த இருண்ட மலைப்பகுதியில் மலைக்காடுகளில் எவ்வளவு வதைப்பட்டிருப்பார்கள்?
தென் ஆப்பிரிக்காவின் வைர தங்கச் சுரங்கங்களிலும் மலேசியாவின் ஈயச் சுரங்கங்களிலும் சர்க்கரைக்காக கரும்பு விளைவித்த பீஜீத் தீவுகளிலும் மேற்கத்திய தீவுகளிலும் இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்டவர்கள் யார்?
யார்? யார்?
சரக்குகளை ஏற்றிச்செல்லும் கப்பல்களைப் போல இந்தியப் பெருங்கடல் எங்கும் எம்மக்கள்..
விலைமதிப்பில்லாத எம் உழைக்கும் மக்கள்-
சரக்குகளைப் போல ஏற்றி செல்லப்பட்டிருக்கிறார்கள். அப்படி சென்றவர்களில் ஒருவர் கூட இந்திய சாதி அடுக்கின் உயர்
மட்டத்தில் இருந்தவர்களாக இல்லை என்ற உண்மை.. எவ்வளவு கொடியது? எவ்வளவு கேவலமானது!
இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் தான் மனிதர்களுக்கு
மதிப்பில்லையோ? மிகவும் மலிவான சரக்காக எம்மக்கள் மட்டுமே இருந்தார்களோ?
உலகம் எங்கும் தமிழர்கள் இருக்கிறார்கள், தமிழர்கள் இருக்கிறார்கள் என்று சொல்கிறோமே..
149 நாடுகளில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரமே வெளிவந்திருக்கிறது..
ஆனால் இந்தப் புலம் பெயர்வின் காரணமும் ஏற்றிச் சென்ற கப்பல்களின் முகமும் கோரமானவை. இதில் பெருமைப்பட்டுக்கொள்ள தமிழ்ச்சமூகத்திற்கு எதுவும் இல்லை!
இத்துடன் தங்கள் இருத்தலுக்காக நாம் வாழும் காலத்திலேயே புலம் பெயர்ந்திருக்கும் ஈழத்தமிழர்கள் உலக நாடுகளின் ஒவ்வொரு மூலையிலும்...
கங்காணி தாத்தா மலையகத்தில் என்னை இப்படியாக பல்வேறு நினைவுகளை இழுத்து வந்து அலைக்கழித்தார்.
தோழி சந்திரலேகா-கிங்ஸ்லி தம்பதியர் மலையகத்தில் உண்மையிலேயே ஒரு மலைமீது கட்டியிருக்கும் தங்கள் இல்லத்திற்கு இரவு உணவுக்கு அழைத்தார்கள். மலையகத்தில்
கவிந்திருக்கும் இருட்டு.. அவர்கள் வீட்டுக்குச் செல்லும் பாதையோ ஒற்றையடி குறுகலான ஏற்றமான மலைப்பாதை. கிங்ஸ்லி மோட்டார் பைக்கில் விளக்கை ஏற்றி வழிகாட்டிக்கொண்டு
முன்னால் சென்றார். கங்காணி தாத்தா என்னைத் தொந்தரவு செய்யாமல் இருக்க நான்
"புதியவானம், புதிய பூமி" பாட்டுப்பாடிக்கொண்டு மலை ஏறினேன்.
இரவு விருந்து முடிந்து திரும்பும்போது லறீனாவுக்கு அட்டைக் கடித்தது. உடனடியாக அவர் பழக்கப்பட்டவர் என்பதால் அட்டையை எடுத்து வீசினார். தங்கும் விடுதிக்கு வந்தவுடன்
எல்லோரும் அட்டைக்கடி செக்கிங் செய்த போது.. " என் முழங்காலில் அட்டை"
பிறகென்ன..! அப்புறம் நடந்ததெல்லாம் சஸ்பென்ஸ். (அக்காட்சியை யாழினி நடித்துக் காட்டுவதைப் பார்க்க வேண்டும். யாழினி .. மீண்டும் ஒரு முறை அக்காட்சியை நடித்துக்காட்டி..
அப்படியே நம் வலைத்தளத்தில் ஏற்றுங்கள்... . )
லறீனாவின் கைமருத்துவத்தால் மலையகத்தில் அட்டைக்கடியிலிருந்து நான் தப்பினேன். ஒரு மணிநேரம் வழிந்துக்கொண்டிருந்த ரத்தம் ஒருவழியாக நின்றது.
லறீனாவின் மகனும் மகளும் "ஏம்மா.. இந்த ஆன்டியை மட்டும் அட்டைக்கடித்தது?"
என்று அன்று இரவு முழுவதும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். லறீனாவும் பல்வேறு கற்பனைக் கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்..
லறீனா.. " கங்காணியின் பேத்தியல்லவா நான்.. அதுதான் என்னிடம் நலம் விசாரிக்க (?)
வந்திருக்கிறது தேயிலை தோட்டத்தின் அட்டை"


3 comments:

 1. மிக நல்ல பதிவு சகோ!
  கங்காணி என்ற சொல்லை கேட்ட உடனே எனக்கு பாலாவின் பரதேசி நினைவுக்கு வந்தது. உங்களின் பூட்டனார் கங்காணி என்பதால் பெருமையாக சொல்வீர்களோ என்று நினைத்தேன். உள்ளதை உள்ளபடி சொல்லிவிட்டீர்கள். தமிழர்களின் நிலையையும் கூறியிருப்பது அருமை!
  உங்கள் பதிவை தொடர்கிறேன்!
  நன்றி!

  ReplyDelete
 2. //ஆனால் இந்தப் புலம் பெயர்வின் காரணமும் ஏற்றிச் சென்ற கப்பல்களின் முகமும் கோரமானவை// உண்மைதான்.

  ReplyDelete
 3. இலங்கையின் மலைநாட்டில் எந்தப்பகுதி போனீங்க! அட்டை உரிஞ்சுவதைவிட அரசியல்வாதிகள் உரிஞ்சுவது அதிகம் நம்நாட்டில்[[.

  ReplyDelete