Monday, November 10, 2014

மாநில கட்சிகளுக்கு அரோகரா..!
இந்தப் பதிவை எழுதும் இந்நிமிடம் வரை மராத்திய மாநில அரசியல்
வட்டத்தில் சிவசேனா எதிர்க்கட்சியாகவே இருக்கிறது. சட்டசபையில்
பெரும்பான்மையை நிரூபித்தப்பின் சிவசேனாவை ஆட்சியில் பங்குதாரராக
கூட்டு சேர்ப்பதா இல்லையா என்பதை தீர்மானிப்போம் என்று
தெளிவாக மராத்திய மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஷ் அறிவித்துவிட்டார்.
சிவசேனாவின் ஆதரவிலும் கூட்டணியிலும் மராத்திய மாநிலத்தில்
பிஜேபி தன்னை வலுப்படுத்திக் கொண்டது என்பதை மறுப்பதற்கில்லை.
கொள்கை அளவில் சிவசேனாவும் பிஜேபியும் ஒத்துப்போகும் அரசியல் கட்சிகள்
என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் . அப்படியான ஒரு கூட்டணியை
முறித்துக் கொள்வதிலும் கண்டு கொள்ளாமல் டில்லி வட்டாரம் மவுனமாக
காலம் கடத்துவதிலும் சிவசேனாவுக்கு தன்மானப் பிரச்சனை மட்டுமல்ல,
பெரும் தலைவலியாகவும் இருக்கிறது. அதனால் தான் டில்லியில் மந்திரி சபை
விரிவாக்கத்தில் சிவசேனாவுக்கு மத்திய அரசில் ஒதுக்கப்பட்ட மந்திரி பதவியை
ஏற்காமல் டில்லி வரை சென்ற சிவசேனா தலைவர் அனில் தேசாய் விழாவைப்
புறக்கணித்துவிட்டு திரும்பி இருக்கிறார்.

பிஜேபிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்போம் என்று சரத்பவார் சொல்வது
ஏன்? பிஜேபிக்கும் சரத்பவாரின் NCP க்கும் என்ன தொடர்பு? என்று கொள்கை
ரீதியான கேள்விகளைத் தொடர்ந்து வைக்கிறது சிவசேனா. பால்தாக்கரேவின்
மறைவுக்குப் பின் பிஜேபி சிவசேனாவுக்கு உருவாக்கும் இந்நெருக்கடிகளை
கூர்ந்து கவனிக்க வேண்டும்.

இதேநிலைமை தான் தமிழக்த்திற்கும். தமிழ்நாட்டின் அரசியலில் திமுகவக்கு
2G , அதிமுக வுக்கு சொத்துக்குவிப்பு வழக்கும் அதனால் ஏற்பட்டிருக்கும்
வெற்றிடம். இச்சூழலில் தான் இலங்கை அரசு அறிவிக்கிறது 5 தமிழக
மீனவர்களுக்குத் தூக்குத்தண்டனை என்று. உடனே வழக்கம் போல
சில தமிழக ஒலிபெருக்கிகளின் அலறல்., அறிக்கைகள். (ஒலிபெருக்கி-யார்,
அறிக்கை - யார் என்ற ஊகத்தை தமிழ்ச் செய்திகளைத் தவறாமல்
பார்க்கும் உங்கள் சாய்ஸ்க்கு விட்டுவிடுகிறேன்) இவை எதையும்
கண்டு கொள்ளாமல்  காய் நகர்த்தியது பிஜேபி. இந்தியாவின் பிரதமர்
பேசினாராம் இலங்கை அதிபருடன். அதிபரும் ஒத்துக்கொண்டார்
தமிழக் மீனவர்களை தமிழ்நாட்டுக்கு அனுப்ப. பிரச்சனைத் தீர்ந்தது.
நம் மீனவ சகோதரர்களின் உயிர் காப்பாற்றப்பட்டது என்பதில்
நமக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் இதை வைத்துக் கொண்டு
பிஜேபி  நடத்திய அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பிஜேபியும் "மோதி பக்வானு"ம் நினைத்தால் தான் தமிழர்களைக்
காப்பாற்ற முடியும் என்ற ஒரு எண்ணத்தை பொதுஜனப் புத்தியில்
ஏற்றியாகிவிட்டது.


இந்திய  நாட்டின் குடிமகனுக்கு இன்னொரு நாட்டின் அரசாங்கம்
தண்டனைக் கொடுத்தால் அதை அணுகும் அதிகாரமும்
தீர்வு காணும் பொறுப்பும் நடுவண் அரசுக்கு மட்டுமே உண்டு.
பிரச்சனையை இம்மாதிரி தான் நோக்க வேண்டும். ஆனால்
பிஜேபியின் தலைவர்கள் இதை என்னவோ தங்களின் வெற்றியாக
தங்களாலும் தங்களின் தலைவர்களாலும் மட்டுமே அதிலும்
குறிப்பாக மோதி பக்வானால் மட்டுமே செய்ய முடியும் என்ற
பிம்பத்தைக் கட்டமைக்கிறார்கள்.

இலங்கை அதிபருடன் அரசியல் பேச்சுவார்த்தைகள் மட்டுமல்ல,
இம்மாதிரி ஸ்டண்டுகளுக்கான ஒத்திகைகளும் நடக்கிறதோ?


இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்தந்த மாநில
கட்சிகளின் ஆதரவுடன் நுழையும் பிஜேபி அடுத்தக் கட்ட
நடவடிக்கையாக மாநில கட்சிகளை கருவறுப்பதில் கவனம்
செலுத்துகிறது. இன்று மராத்திய மாநிலம், தமிழ்நாட்டு அரசியலில்
நடப்பது இதுதான். ஒற்றை இந்தியா, ஒரே மொழி, ஒரே மதம்,
அகண்ட பாரதம் என்று படிப்படியாக தன் அசல் முகத்தைக்
காட்டுகிறது.

வாஜ்பாய், அத்வானி, சுஷ்மா சுவராஜ் என்று பிஜேபியின்
குறிப்பிடத்தகுந்த ஆளுமைகளும் மோதி என்ற
ஒற்றைப் பிம்பத்தில் அடங்கிப் போனார்களோ அல்லது
அடக்கப்பட்டார்களோ ..,தெரியவில்லை.

நேற்று நடந்ததை எதிர்த்தோம்.
நம்  அழுகுரல் உலகமெல்லாம் கேட்டது.
இன்று நடப்பதை சபதமின்றி
உங்கள் செவிகளுக்கு மட்டுமே கேட்கும்படி
மெல்லிய குரலில் .சொல்ல மட்டும் தான் முடிகிறது.
நாளை??.

No comments:

Post a Comment