Monday, November 3, 2014

மதிப்பெண் வாங்கவைக்கும் எந்திரங்களா, ஆசிரியர்கள்?





இந்தியாவில் வய்து 6 முதல் 14 வயதுவரை அனைத்து
குழந்தைகளுக்கும் கல்வி இலவசம் என்று சட்டம் இயற்றியது
04 ஆகஸ்டு 2009ல் இந்திய பாராளுமன்றம். அச்சட்டத்தின் மூலம்
 "கல்வி ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை உரிமை"
என்ற 135 நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் தன்னை இணைத்துக் கொண்டது.
இச்சட்டம் காஷ்மீர் மாநிலம் தவிர பிற அனைத்து இந்தியா மாநிலங்களிலும்\
அமுலுக்கு வந்துள்ளது. இத்தருணத்தில் இச்சட்டத்தை அமுலுக்காவதில்
உள்ள சிக்கல்கள் குறித்தும் நிதி தேவை குறித்தும் பலவேறு வாதங்கள்
தொடர்கின்றன. ஆனால் எல்லோரும் ஒத்துக்கொள்வது என்னவென்றால்
"கல்வி ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை" என்பதைத்தான்.

இத்தருணத்தில் கல்வி முறை குறித்தும் அதன் நிறை குறைகளையும்
விமர்சனத்திற்குள்ளாக்கி இருக்கும் எழுத்தாளர் நா.முத்துநிலவனின்
புத்தகம் மிகுந்த கவனிப்புக்குரியதாகிறது. முத்துநிலவன் அவர்கள்
அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணி செய்து அண்மையில் பணி ஓய்வு
பெற்றவர் என்பது கூடுதல் கவனிப்புக்கான காரணமாவதுடன்
கூர்மையான கருத்துகளுடன் எவராலும் மறுக்க முடியாத யதார்த்தங்களை
முன்னிறுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறது.

சாப்பிடும் பிஸாவிலிருந்து அணியும் காலணி வரை அமெரிக்க மயமாக
விரும்பும் இளைஞர்கள் கல்வி முறையில் இந்தியா ஏன் அமெரிக்காவைப்
பின்பற்றுவதில்லை, அமெரிக்காவில் செருப்பு தைப்பவன் குழந்தையும்
அமெரிக்க ஜனாதிபதி குழந்தையும் ஒரே பாடப்புத்தகத்தைத்தான்
படிக்க வேண்டும். கல்விமுறையில் வசதியானவர், வசதியில்லாதவர்
என்ற பாகுபாடு அங்கில்லை. ஆனால் நம்மிடம் அரசு பள்ளியில்
படிக்கும் குழந்தை என்றாலே, குடிசை வாசியின் குழந்தை என்ற
புரிதல் பொதுஜனப் புத்தியில் பதிந்திவிட்டது.ஏன்?

நம் கல்வி முறை குறித்து பேச வரும் அனைவரும் "மெக்காலே கல்வித்திட்டம்"
தான் இதற்கெல்லாம் காரணம் என்றும் வெள்ளையர் ஆட்சியில் ஆங்கிலேய
பேரரசு தன்னிடம் வேலைப்பார்க்க குமாஸ்தாக்களை உருவாக்கும் நோக்கத்துடன்
திட்டமிடப்பட்ட கல்விதான் மெக்காலே கல்வித்திட்டம் என்று சொல்கிறார்கள்.
இது முழுக்க உண்மையும் அல்ல, புனைவும் அல்ல என்ற புரிதல் முதலில்
வேண்டும். ஏனேனில் மெக்காலே கல்வித்திட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்
இந்தியாவில் ந்டைமுறையில் இருந்த கல்வித்திட்டம் என்ன? என்ற
வரலாற்றை அறிந்தால் அதன் விளைவுகள் இன்று வரை நம் கல்வித்திட்டத்தில்
ஏற்படுத்திய ஏற்படுத்திகொண்டிருக்கும் விளைவுகளைப் புரிந்து கொள்வது
எளிதாக இருக்கும்.

மெக்காலே கல்வித்திட்டத்திற்கு முன் இந்தியாவில் இரு கல்வி முறைகள் இருந்தன.
அந்த இரண்டுமே மதம் சார்ந்த , மத நம்பிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும்
கல்வி முறை. ஒன்று அரபிக் மொழியில் கற்பிக்கப்பட்ட மதரசா பள்ளிகள்,
இன்னொன்று  - சமஸ்கிருத மொழியில் கற்பிக்கப்பட்ட இந்துத்துவ பள்ளிகள்.
இந்த இரு பள்ளிக்கூடங்களும் கல்வியில் த்லைசிறந்து விளங்கிய
இந்தியாவின் நாளந்தா பல்கலை கழகம் என்ற பவுத்த கல்வியை
அழித்தொழித்த சிதைவிலிருந்து வளர்ந்தவை.

உலக நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்து கல்வி கற்றார்கள்,
நாளந்தாவிலும் காஞ்சிபுரத்திலும் அக்கல்விக்கூடங்க்கள் இருந்தன
என்று நம் வரலாறு சொல்கிறது. பவுத்தத்தை அழித்த வருணாசிரமம்
கல்வி எல்லோருக்குமானது என்ற பவுத்தத்தின் அடிப்படைக் கொள்கையை
முற்றிலும் நிராகரித்தது. இப்படியான சம்ஸ்கிருத பள்ளிகளும் மதரசா
பள்ளிகளும் இருந்தக் காலக்கட்டத்தில் 1835ல் மெக்காலே கல்வித்திட்டம்
பரிந்துரைக்கப்பட்டது. மெக்காலே கல்வித்திட்டத்தின் நோக்கம் வேறாக
இருந்தாலும் அதன் விளைவுகள் தான் சுதந்திரம், சமத்துவம் , சகோதரத்துவம்
என்ற பிரஞ்சு புரட்சியின் தாரக் மந்திரத்தை உரக்க படிக்க வைத்ததுடன்
ஒவ்வொரு படித்த இளைஞனையும் அக்கருத்துகள் வசப்படுத்தியதும்
நிகழ்ந்தது.

மெக்காலே கல்வித்திட்டம் மேற்கத்திய கலாச்சாரத்தைப் புகுத்திவிட்டது
என்ற எண்ணமும் இந்தியர்களை வெறும் குமாஸ்தாக்களாக மட்டுமே
வைத்திருக்கும் கல்விமுறை என்ற எண்ணமும் மேலோங்க அதற்கு
மாற்றாக மீண்டும் கடந்த காலமே பொற்காலம் என்ற கனவுகளுக்குள்
நம் கல்வியாளர்களும் சிக்கினார்கள். அதாவது குருகுலக்கல்வியின்
பெருமைகள் பேசப்பட்டன. புராண இதிகாச நாயகர்கள் நம் தலைவர்களாக
கடவுளர்களாக புனையப்பட்டார்கள். நம்  காந்தி மகான் கூட
"அரிச்சந்திரம் நாடக்த்தைப் பார்த்து தான் " வாழ்க்கையை " சத்தியசோதனை"
ஆக்கி தேசப்பிதா ஆன பிம்பம் கட்டமைக்கப்பட்டது.
கட்டுரையாளர் நா.முத்துநிலவன்  இப்பிம்பங்க்களைக் கட்டுடைக்கிறார்.
.

"சாதாரணமான ஒரு மனிதனின் கடமையையோ
சத்தியம் தவறாத ஒரு புருஷனின் கடமையையோ
சரித்திரத்தில் நிற்கும் ஓர் அரசனின் கடமையையோ
சரியாகச் செய்யாத அரிச்சந்திரனின் கதை சரியானதுதானா?
(பக் 118)

என்ற கேள்வி அந்தப் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியரான
தனக்கே ஏற்படுவதாகவும் அரிச்சந்திரன் பாடம் நடத்தும் போதெல்லாம்
தனக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டிருப்பதையும் மிகச்சரியாகவே
உணர்த்துகிறார் முத்துநிலவன்.

ஏன்? இந்த தர்மச்சங்கடம், அதுவும் அப்பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியருக்கே!

தீண்டாமையை ஒழிக்கும் வாசகங்க்கள் தமிழக அரசின் பாடநூல் அனைத்திலும்
முதல் பக்கத்தில். ஆனால் பாடத்தில் "குல வித்தை கல்லாமல் பாகம் படும்" என்ற
குலக்கல்விக்கு ஆதரவான பழமொழிப் பாடல். எது உண்மை, எது புராணம்,
எது கற்பனை? எது வரலாறு ? என்ற புரிதலின்றி இடம் பெறும்
பாடங்கள்...இது நம் பாடத்திட்டத்தின் குறைபாடு.



இன்னொரு முக்கியமான குறைபாடு... நம் நாட்டில் : தாதாக்கள் எல்லாம்
கல்வித்தந்தைகள்" ஆகிவிட்ட அவலம். புறறீசல் போல பெருகிவரும்
தனியார் கல்விக்கூடங்கள்  , கல்வி நிறுவனங்களாகி பெரும்
பணம் குவிக்கும் வியாபாரமாக கல்லூரி கார்ப்பரேட்டுகள் என்ற
புதியதொரு வர்க்கம் உருவாகிவிட்டது..
இதைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசாங்கம் சட்டங்களை நிறைவேற்றுவதுடன்
தன் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறது. சட்டங்கள் நிறைவேற்றும்
போதெல்லாம் குற்றவாளிகள் மேல்முறையீடு செய்வது போல இந்தப்
புதிய வர்க்கமும் மேல்முறையீடு செய்கிறது. அதன் பின் கண்துடைப்புக்கு
கமிட்டி, கமிஷன், திட்டக்குழு இத்தியாதி காட்சிகள் தொடர்கதையாகின்றன.
இதற்குள் ஆட்சி மாறுகிறது, காட்சி மாறுகிறது.. கல்வித்திட்டங்க்கள்
மட்டும் மாறுவதே இல்லை.!!


*தேர்வு முறையும் மாறவேண்டும்,
திருத்தும் முறையும் மாறவேண்டும்,

*எப்படியாவது மதிப்பெண் வாங்க வைக்கும் எந்திரங்க்களா, ஆசிரியர்கள்?

*செய்தித்தாளைக் காசுக் கொடுத்து வாங்கிப்படிக்கும் ஆசிரியர்கள், எத்தனைப்பேர்?

*ஆங்கிலேயர் ஆட்சியில் கூட 13 வயதில் தான் ஆங்கிலம் அறிமுகமானது.
தமிழர் ஆட்சியிலோ 3 வயதிலேயே அறிமுகப்படுத்துகிறோம்!
அரசனை விஞ்சிய அரச விசுவாசம்!!

*ஆசிரியருக்கு விருது வழங்க அந்த ஆசிரியரே விண்ணப்பிக்க வேண்டுமா?

*தமிழ் மெய் எழுத்துகள் வரிசையில் காரணத்துடன் இருக்கும் ஓர் ஒழுங்குமுறை,

*தமிழாசிரியர்களே செய்யும் தமிழ்ப்பிழை.. என்று சுவையான , பயனுள்ள
கட்டுரைகள் பல இடம் பெற்றிருக்கின்றன.

வலைத்தளம்/வலைப்பூக்களில் வெளிவந்த கட்டுரைகள் சிலவற்றுக்கு
உடனுக்குடன் வெளிவந்த பின்னூட்டங்களையும் கட்டுரையில்
இணைத்து வெளியிட்டிருப்பது கட்டுரையாளரின் பரந்துப்பட்ட
மனப்பான்மையைக் காட்டுவதுடன், கட்டுரைக்கான பன்முகத்தையும்
ஒருசேரக் கொண்டுவருகிறது. இப்புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் அய்யா.

இன்றைய இக்கல்வி முறை குறித்து இன்னும் பலநூறு குரல்கள்
எழவேண்டும். அனைத்தும் கலவியாளர்களிடமிருந்து வரவேண்டும்.
கல்விச்சிந்தனைகள் வளர வேண்டும்.

"முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே (னே).."



- அகரம் வெளியீடு,
பக் 157, விலை ரூ 120/

















2 comments:

  1. -//ஆங்கிலேயர் ஆட்சியில் கூட 13 வயதில் தான் ஆங்கிலம் அறிமுகமானது.
    தமிழர் ஆட்சியிலோ 3 வயதிலேயே அறிமுகப்படுத்துகிறோம்!
    அரசனை விஞ்சிய அரச விசுவாசம்!!///
    கவிஞரின் வார்த்தைகளில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் உண்மைகளை உரக்கச் சொல்லுகின்றன

    ReplyDelete
  2. அடுத்த புத்தகம் இன்னும் படிக்கலயா?

    திருப்பூர் மற்றும் மணவை வந்தபோது தொலைபேசக்கூட இல்லாதவருடன், நான்மட்டும் மும்பை வரும்போது பேசுவது சுயமரியாதைக் குறைவாகத்தான் இருக்கிறது..
    நன்றி.

    ReplyDelete