Monday, October 27, 2014

இந்தியாவை ஏமாற்றும் நோக்கியா...





பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்கியா கைபேசி தயாரிப்பு நிறுவனம் கடந்த 2006 முதல் திருபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில்(SEZ) கைப்பேசித் தொழிற்சாலையை தொடங்கி நடத்தி வந்தது. இந்நிறுவனத்திற்கு இந்திய அரசும், தமிழக அரசும் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வாரி வழங்கின.
 31,000க்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக மற்றும் மறைமுகமாக இதனால் வேலை வாய்ப்பை பெற்றனர்.
ரூ.620 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட நோக்கியா நிறுவனம் கடந்த 8 ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரிச்சலுகைப் பெற்றுள்ளது. ஏறத்தாழ 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபத் தொகையாக பின்லாந்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை இந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தது. தமிழ்நாடு அரசு ரூ 2400 கோடி வரி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறது.

இந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதால் நோக்கிய நிறுவனம்
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் 2013ல் செய்து கொண்ட ஒப்பந்தம்
நிறைவேறவில்லை. அதாவது நோக்கியா மைக்ரோசாஃப்ட்டுக்கு
கைமாறவில்லை.
இப்போது நோக்கியா நவம்பர் முதல் தன் உற்பத்தியை நிறுத்தி இருப்பதாக
அறிவித்துவிட்டது. அதில் பணிபுரியும் பலர் விருப்ப ஓய்வுக்கும்
சம்மதித்துவிட்டார்கள்/ கட்டாயப்படுத்தப்பட்டுவிட்டார்கள்.


பலகோடி ரூபாய்க்கு வரிவிலக்குப் பெற்று சகலவிதமான ராஜமரியாதையுடன் சிவப்புக் கம்பளம் விரித்து இங்கே வரும்
அயல்நாட்டு நிறுவனங்கள் மொத்த லாபத்தையும் கொள்ளையடித்து
தன் நாட்டுக்கு அனுப்புவதுடன் தொழில் நடத்தும் நாட்டின் சட்ட திட்டங்களையும் மதிக்காமல் அடாவடித்தனம் செய்வதும் வரி ஏய்ப்பு
செய்வதும் வழக்குத் தொடர்ந்தால் "சரிதான் போடா" என்று கதவை
அடைத்து மூடிவிட்டு போகத் தயாராக இருப்பதும்... தொடர்ந்து நடக்கிறது.
ஆனாலும் கண்களை மூடிக்கொண்டு இந்திய அரசு வெளிநாட்டு முதலாளிகளை தங்கள் நாட்டுக்கு வந்து முதலீடு செய்ய அழைக்கிறது.
அப்படி அழைப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் நம் ஊடகங்கள்
அந்த நிறுவனங்கள் செய்யும் ஏமாற்றுகளைக் காட்டுவதில்லை.


நோக்கியாவில் வேலை வாய்ப்பு பெற்றிருந்த அந்த 31000 பேரின் எதிர்காலம்
என்னவாகும்? நோக்கியா நிறுவ்னம்  இந்தியாவில் முதலீடு செய்த இதே
ரூ 620 கோடியில் 8 ஆண்டுகளில் 25000 கோடி நிகரலாபத்தை
தன் சொந்த நாட்டில் முதலீடு செய்திருந்தால் கிடைத்திருக்குமா?


என்னவோ இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு விட்டதாகவும் நம் பாடப்புத்தகங்களில்
படித்திருக்கிறோம். ஆனால்
இப்போதும் சுரண்டல்கள் நடக்கத்தான் செய்கின்றன.
சுதந்திர இந்தியாவின் அனுமதியுடன்,  வெவ்வேறு பெயர்களில்.

 


No comments:

Post a Comment