Wednesday, August 4, 2010

பாட்டி என்ன சொல்லிவிட்டாள்?



எங்க ஊரிலே கல்யாணம்னு செய்தி வந்தவுடனேயே தீர்மானிச்சிட்டேன். இந்த தடவை எப்படியும் ஊருக்குப் போயிடறதுனு. ஊரிலே மழை வானத்தைக் கிழிச்சிச்கிட்டு ஊத்திச்சாம்..சொர்ணம் அத்தை கடிதம் எழுதியிருந்தா. நம்ம ஊரிலே வாய்க்காலும் ஆறும் நிரம்பிஆத்துப்பாலத்த்துக்கு மேலே தண்ணீ ஓடிச்சாம். நான் எட்டாவது படிக்கறப்போ அப்படிஎங்க ஊரு தாமிரபரணி ஆத்திலே தண்ணி ஓடிச்சி., அதைப் பாக்கறதுக்கு இந்தசொர்ணம் அத்தைக் கூட சேர்ந்து வீட்டுக்குத் தெரியாமா நாங்க ஒரு செட்டாபோனதை இன்னிக்கு நினைச்சாலும் மனசு குப்புனு மத்தாப்பு மாதிரி மேலே நோக்கிபூவா பூக்குது.

தண்ணியோட சேர்த்து பெரிய பெரிய மரமெல்லாம் அப்படியே வேரோடுவந்ததைப் பார்த்தப்போ கொஞ்சம் பயமாவும் இருந்திச்சி. பாட்டி கதையிலே வர்றவேதாளம் ஏறிய மரங்கள் இவைகளாகத்தான் இருக்கனும்னு தோணிச்சி.அப்படியே மரங்களுடன் சேர்ந்து மரத்தில் கூடு கட்டியிருக்கும் பறவைகளின் குஞ்சுகளூம் மிதந்து வந்துக் கொண்டிருந்தன. அப்புறம் காளை மாடுகளும்எருமை மாடுகளும் செத்துப் போய் மிதந்து வந்தக் காட்சியும் என்னை ரொம்பவேபயமுறுத்தியது. நிறைய நாட்கள் தூக்கமில்லாமல் அந்தக் காட்சிகள் என்னைத் தொந்தரவு செய்தது. ஆத்துக்குப் போனதும் வெள்ளம் பார்த்ததும் எல்லோருக்கும்தெரிந்துவிட அத்தைக்கு நல்ல திட்டு கிடைத்தது எல்லோரிடமும்.

'சமஞ்ச நாளக்கி உனக்கு கல்யாணமாகி இருந்த இதுக்குள்ள நீ நாலு பில்லைய பெத்திருப்பே புத்தி இருக்காட்டி உனக்கு 'என்று பாட்டி தன் பங்குக்கு அத்தையைத்திட்டினாள்.

'எல்லாம் மூதேவி உன்னாலே தானே' என்று அத்தை என்னிடம் பேசாமல் முகத்தைஉம்முனு தூக்கி வச்சிக்கிட்டு இருந்தாள் ரெண்டு நாளைக்கி.

எல்லாம் அத்தைக் கடிதாசி வந்தவுடன் நினைவுக்கு வந்தது.ஆத்துப் பாலத்துக்கு மேலே வெள்ளம் ஏறி கரை இரண்டும் நிரம்பி உடையற மாதிரிவேகமாக நுரைப் பொங்க ஓடினக் காட்சி மட்டும் ப்ரேம் போட்ட மாதிரி இப்பவும்நினப்பில் இருக்கத்தான் செய்தது.
இந்த முறை யாருக்காகவும் என் ஊருக்குப் போற ப்ளானை மாத்திக்கறதில்லேனுதீர்மானித்துக் கொண்டேன்.

ஊரும் ஆறும் வாய்க்காலும் வாய்க்கால் கரையில் வள்ர்ந்திருக்கும் தாழம்பூ புதர்களும் வாய்க்காலிம் நீச்சல் அடிச்சி கும்மாளம்போட்டதும் தினமும் நினைவில் வந்தது. இந்த 40 மாடிக்கட்டிடமும் செயறகையாதோட்டக்காரன் வளர்த்திருக்கும் புல்தரையும் செடிகளும் ஸும்மிங் பூலும் ஏன்இந்த ஆகாசம் கூட ஒரு வித செயற்கையாகவே இருந்தது.வாய்க்காலை நினைச்சவுடன் அப்படியே தாழம்பூவின் மணம் என்னைச் சுற்றிசுற்றி வந்தது.
ஊரில் போய் இறங்கியவுடன் தாழம்பூ பறிச்சி சடையில் வைத்து பின்னிக்கொள்ளவேண்டும் என்று ஆசை வந்தது. தாழம்பூ சடையில் என்னைப் பார்த்தால் என் பசங்களும் கணவரும் மும்பை நண்பர்களும் என்ன சொல்வார்கள் என்றுநினைத்து சிரித்துக் கொண்டேன்.

கல்யாண வீட்டில் எனக்கு ஏகப்பட்ட வரவேற்பு. பாட்டிதான் முன்பு போல நடமாட்டமில்லை. மூத்திரம் போவது தெரிவதில்லை. தினமும் போர்வையை நனைச்சிடறானு அவளுக்கு நார்க்கட்டிலில் ஒரு சேலையை விரித்து அதில்படுக்கை. அடிக்கடி அவள் சம்மந்தா சம்மந்தமில்லாமல் பேசுவதை யாருமே கண்டு கொள்ளவில்லை. ஆனால் அவள் தன் ப்ழைய கால நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது. அவள் சொல்லும் பெயர்களும்உறவுகளும் சம்பவங்களும் எனக்குத் தெரியவில்லை. அவளுடன் உக்காந்து பேச வேண்டும் என்றால் யாரும் என்னைத் தனியாக விடுவதாக இல்லை.ரொம்ப வருசத்துக்குப் பின் வந்திருக்கிறேன். அப்பா அம்மா இறந்துவிட்டார்கள்.அவர்களின் சார்பில் நான் இந்த திருமணத்துக்கு வந்திருப்பதாக அவர்களாகவேசொல்லிக்கொண்டார்கள். அப்பா தாய்மாமன் . அவர் செய்ய வேண்டியதெல்லாம்நான் செய்ய வேண்டும் என்று வேறு சொல்லிக்கொண்டார்கள். சந்தோஷமாகசெய்துவிடலாம் என்று தலையசைத்தவுடன் இன்னும் கவனிப்பு அதிகமாகிவிட்டது.பாட்டி இருமிக்கொண்டிருந்தாள். பக்கத்தில் போய் சுடு தண்ணி வைத்துக் கொடுத்தேன்.

'ஆரு சரசுவா'
'ஆமாம் பாட்டி'
என் கைகளைப் ப்டித்து தடவிக்கொடுத்தாள். கையில் போட்டிருக்கும் தங்க வளையலைத் தடவி 'புது வளையலா.. கல்யாணத்தோட உனக்கு முத்து வளையல் டிசைனிலே தானேஉங்கப்பன் போட்டான்.. புதுசா பேரன் செய்து போட்டிச்சா..'எனக்கே மறந்துவிட்டது என் கல்யாணத்தில் அப்பா போட்ட முத்து வளையல் டிசைன். பாட்டிக்கு இன்னும் அதெல்லாம் நினைவு இருக்குதேனு ஆச்சரியமாஇருந்தது. ஆமாம் பாட்டினு சொன்னவுடன் பாட்டியின் முகத்தில் ஒரு சந்தோஷம் தெரிந்தது.

வாசலில் பந்தல் போட தெற்குத்தெரு ராமசாமி வந்திருந்தான். இரண்டு பக்கமும் குலை தள்ளிய வாழை மரங்கள், சிவப்பு வெள்ளையில் ஸாட்டின் துணியில் தைத்திருந்த பந்தல்செட். பக்கத்தில் போய் அவர்கள் பந்தல் கட்டும் அழகைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சைக்கிளில் வந்து இறங்கினான் இளங்கோ. அவனைப் பார்த்தவுடன்நான் அடையாளம் கண்டு பிடித்துவிட்டேன். அவன் தான் என்னை அடையாளம் கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை, ஒரு வேளை தெரிந்தே தெரியாத மாதிரி நடந்து கொள்வது நல்லது என்று நினைத்திருப்ப்பானோ. அவன் பக்கத்தில் போய்
'என்ன இளங்கோ என்னைத் தெரியலையா?
'எங்கே தெரியலைனு சொல்லிடுவானோனு மனசு கிடந்து அடித்துக் கொண்டது.அவன் என் கேள்விக்குப் பதில் சொல்லாமல் எங்கேயோ பார்த்துக் கொண்டு

'என்னிக்கி வந்தே. வூட்டிலே எல்லாரும் சுவமா'

'ம்ம்ம்'

'நீ எப்படி இருக்கே'

'எனக்கென்ன ...'

அதற்குமேல் எங்கள் இருவருக்குமே பேசிக்கொள்வதற்கு எதுவுமே இல்லை.ஒரு காலத்தில் நாங்கள் இருவரும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம்.அவன் தான் பள்ளிக்கூடத்தில் ஹீரோ. படிப்பிலும் சரி, விளையாட்டிலும் சரிஅவன் தான் ஃபர்ஸ்ட். அவனை அந்தக் கோலத்தில் பார்த்ததும் என் மனசில்அவனைப் பற்றிய எல்லா நினைவுகளும் வரத்தான் செய்தது. அது அவனுக்கும்வந்திருக்கும் என்பதை இறுகிய அவன் முகம் காட்டிக் கொடுத்தது.வசதியும் வாய்ப்பும் இருந்திருந்தால் இவன் திறமைக்கு இவன் எங்கேயோ போயிருப்பான்.. இப்படி பந்தல் நட்டுக்கொண்டு சைக்கிள் கடை வைத்துக்கொண்டுஇருந்திருக்க மாட்டான்..

மறுநாள்,கல்யாண மண்டபத்தில் பட்டுச்சேலையைக் கட்டி பாட்டியை ஒரு பக்கத்தில் உட்காரவைத்திருந்தேன். வேண்டாம் பாட்டி வீட்டிலேயே இருக்கட்டுமுனு சித்தி சித்தப்பாசித்தப்பா பிள்ளைகள் எல்லாம் சொன்னார்கள். எனக்கென்னவோ அது சரியா படலை.கல்யாணத்துக்கு சமான் வாங்க டவுணுக்குப் போனவர்களிடன் பெரியவர்களுக்கானஹக்கிஸ் வாங்கிட்டு வரச்சொல்லி நல்ல மாட்டி விட்டேன். பாட்டிக்கு மூத்திரம்வர்றது தெரியலைனுதானே வெளி இடத்துக்கு கூட்டிட்டு வர முடியலைனு அவர்கள்சொன்னதால் நான் இப்படி செய்தேன். கல்யாண வீட்டில் ஒவ்வொருவரா கூப்பிட்டுகூப்பிட்டு பாட்டி கதைப் பேசிக்கொண்டிருந்தாள்.

ஆறுமுகம் தாத்தாவின் பேரன் வந்திருந்தான். என்னைப் பார்த்தவுடன் வந்து ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தான். சென்னையில் இருப்பதாகவும் பெண்ணுக்கு கல்யாணத்துக்கு மாப்பிளை பாத்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னான். என் ப்சங்களுக்குத்தான் அடி போடுகிறான்னு சித்தி என்னிடம் சொன்னாள்.எப்படித்தான் எல்லாத்துக்கும் சித்தி ஒரு காரணம் கண்டுபிடிக்கிறாளே தெரியலை.இருக்கலாம் என்று சொல்லி அப்போதைக்கு அவளிடமிருந்து தப்பித்துக் கொண்டேன்.

அவன் போனவுடன் பாட்டி என்னிடம் கேட்டாள்.
'இப்போ பேசிட்டுப் போனது ஆரு'
'உனக்குத் தெரியாது பாட்டி'
பாட்டி விடுவதாக இல்லை.'நம்ம கீழூரு வாத்தியாரு மவன் மாதிரி இருந்திச்சே'
எப்படித்தான் பாட்டி கரெக்டா கண்டு பிடிச்சாளோ..
ஆமாம் பாட்டினு சொல்லிட்டு மற்றவர்களைப் பார்க்க போனேன்.அவள் என்னைச் சத்தமா கூப்பிட்டாள்...
'ஏய் சரசு.. அவனைக் கூப்பிடேன்.'
'அவரு சாப்பிட போயிட்டாரு பாட்டி'
'செரி செரி.. ஆத்தா என்னை அவங்கிட்ட கூட்டிட்டு போயேன்'
இது என்னடா வம்பா இருக்கு என்று நினைத்துக் கொண்டேன். முதல் மாடியில் சாப்பாடு பரிமாறிக்கொண்டிருந்தார்கள். பாட்டியை முதல் மாடிக்கு அழைத்துச் செல்லமுடியாதுனு அந்த இடத்தை விட்டு நைசாக நகர்ந்து விட்டேன்.
ஒரு அரை மணி நேரத்தில் சித்தியும் சித்தாப்பாவும் கத்திக் கொண் டிருந்தார்கள்.என்னடா என்று பார்த்தால் பாட்டி படிக்கட்டில் விழுந்து விட்டாள் என்று சொன்னார்கள்.
'இதுக்குத்தான் நான் படிச்சி படிச்சி சொன்னேன். மண்டபத்துக்கு கூட்டிட்டு வர வேண்டாம்னு .. யாரு நான் சொல்றதைக் கேட்கா' என்று சித்தி அலுத்துக் கொண்டாள்.அத்தையும் நானும் அதற்குள் ஓடி வந்துவிட்டோம்.பாட்டி பாட்டி மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள்.சித்தப்பாவின் முகம் கோபத்தில் சிவதிருந்தது.எல்லாம் உன்னால் தானெனு அவர் வாய்திறந்து சொல்லாவிட்டாலும் அவர் பார்வைஅதைத்தான் சொன்னது.

'நம்ம மானம் போகுது..' என்று சித்தி மெதுவாகத்தான் சொன்னாள்.அதைக் கேட்டவுடன் சித்தப்பாவுக்கு இன்னும் கோபம் அதிகமானது.
'என்னடி பெரிசா மானம் அதுஇதுனு பேச வந்திட்டே.. உன் தங்கச்சி எவனுக்குப்பிள்ல பெத்தா .. தெரியாதா.. உங்க அப்பன் ஊரெல்லாம் கூத்தியா வச்சிருந்தான்..இவ பேச வந்திட்டா பெரிசா மானம் அதுனு..அரைஞ்சேனா.. செப்பு பேந்திடும்ம்ம்'சித்தப்பா பல்லைக் கடித்தார்.
'சும்மா இருன்னே..' அத்தை தான் அவர்கள் இருவரையும் சமாதானப் படுத்தினாள்.
நீ உள்ளே போ.. என்று உரிமையுடன் அண்ணனைப் பிடித்து மண்டபத்துக்குள் அனுப்பினாள்.
சித்தி மூக்கைச் சீந்த ஆரம்பித்துவிட்டாள். 'உங்க அண்ணன் எதுக்கு எங்க ஊட்டு ஆள்களைப் பத்தி கண்னாபின்னானு பேசனும்.. '
'அவன் புத்தி தான் உங்களுக்குத் தெரியுமே மைனி.. கல்யாண வூட்டிலே கண்ணைக்கசக்கிட்டு நிக்காதிய நாலுசனம் நம்மளைப் பாக்குதுலே'

அப்படி பாட்டி என்ன செய்துவிட்டாள் என்று எனக்குப் புரியவில்லை.சித்தப்பாவின் பேத்தி சங்கீதா பாட்டியைக் கையைப் பிடித்து ரிக்ஷாவில்ஏற்றிக்கொண்டிருந்தாள். ஏழு எட்டு வயதுதான் இருக்கும். அந்தச் சின்னக்குழந்தையைநம்பி பாட்டியை அனுப்புகிறார்களேனு எண்ணம் வந்தவுடன் நானும் அவளுடன்ரிக்ஷாவில் ஏறிக்கொண்டேன்.பாட்டி எதுக்கு மாடிக்கு ஏறினாள் என்று பாட்டியிடம் கேட்டேன்.பாட்டியின் பார்வை எங்கோ காலங்களைக் கடந்து பயணம் செய்துக் கொண்டிருந்தது.என் கேள்வியைக் காற்று அவளிடம் சுமந்து செல்வதில் தோற்றுப்போனது.
சங்கீதாதான் சொன்னாள். பாட்டி சென்னையிலிருந்து வந்திருக்கும் வாத்தியார் மகனைப் பார்க்க மாடிக்கு ஏறினாளாம். ஏற முடியாமல் கீழ விழுந்திருக்கிறாள்.விழுந்தவள்.. வாத்தியார் மகனைப் பாக்கனுன்னு கத்தி அழ ஆரம்பித்தாளாம்.

'ஏன் வயித்திலே பொறந்திருக்க வேண்டிய ராசாவை நான் பாக்கனுன்னுசொன்னாளாம்'

சின்னக்குழந்தை அப்படியே சொன்னது.
எனக்குப் பாட்டியைக் கட்டிப் பிடித்து அழ வேண்டும் போலிருந்தது.மெதுவாக பாட்டியைத் தொட்டு அவள் உள்ளங்கைகளை என் கைகளில் வைத்துமூடிக்கொண்டேன். அப்படியே ஆதரவாக அவள் தலையைத்தடவி விட்டேன்.பாட்டி என் மடியில் தலைவைத்து சாய்ந்துக் கொண்டாள்.பாட்டி அழுகிறாளா விம்முகிறாளா தெரியவில்லை. வேகமாக ஏறி இறங்கும் அவள்மூச்சுக் காற்று என் மடியைச் சூடாக்கியது. என் கர்ப்பக்கதவுகள் கண்விழித்துஅவள் கண்ணீரைச் சுமந்துக் கொண்டன.என்னையும் பாட்டியையும் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தை ரிக்ஷாவில் இருந்து இறங்கியவுடன் என்னருகில் வந்தது.'அத்தை .. உன்னை எனக்கு ரொம்ப ப்டிச்சிருக்கு .. நீதான் பாட்டி சொன்னதைக் கேட்டுகோபமேபடலை. பாட்டியைத் திட்டலை...' என்று சொல்லிவிட்டு கல்யாண மண்டபத்தை நோக்கி துள்ளிக்கொண்டு ஓடினாள்.
நான் பாட்டிக்கு ஹக்கிசை மாற்றி வேறு ஒரு புடவையைச் சுற்றி அவள்பக்கத்தில் படுத்துக் கொண்டேன்.
பாட்டியின் வயதில் எனக்கும் இந்த மாதிரிநினைவுகள் திரும்பினால்... என்னவெல்லாம் சொல்லக்கூடும் என்று நினைத்துப் பார்த்துக்கொண்டேன். ராமசாமி வாசலில் நாட்டியிருந்த வாழை மரத்தில் இலைகள் காற்றில் கிழிந்துபோயிருந்தன. குலை தள்ளியிருந்த வாழை என்னை ஆதரவாக அணைத்துக் கொண்டது.

3 comments:

  1. மணல்வீடில் இந்தக் கதை வாசித்தேனெ..

    ReplyDelete
  2. மூடிவைத்த இதயம் விழித்துக்கொண்டதோ...

    ReplyDelete
  3. கண்ணகி .. அப்படி இதயங்கள் விழித்து கொண்டால்
    எப்படி இருக்கும்,,?!

    ReplyDelete