Monday, August 2, 2010

மழைமுகம்




மழை.. என்னைத் தீண்டும் மழை
என் வேர்களைத் தேடும் மேகங்களாய்
மழை..
என்னைத் தீண்டுகிறதோ?
தாகத்தில் வெடித்திருக்கும்
உதடுகளை
பனித்துளிகளால் முத்தமிடுகிறதோ?

குடைப்பிடித்தோ குல்லாய் அணிந்தோ
உன் காதல் மழையில்
நனைந்து போவதை
தடுப்பது மட்டும் சாத்தியமில்லை.
மழை... என்னைத் தீண்டும் மழை..
எரிகிறது எனக்குள்.

மழை என்னைத் தீண்டும் மழை
காற்றின் வேகத்துடன்
பாய்ந்து வந்து
என்னை அப்படியே
தன் மழைத்துளிகளுக்கு நடுவில்
புதைக்கிறது.
எப்படியாவது
இருண்ட மேகங்களை விலக்கி
மின்னல் வெளிச்சத்தில்
அதன் முகம் பார்க்க துடிக்கிறேன்.
இடி இடிக்கிறது..
அச்சத்தில்
கண்களை மூடிக் கொண்ட தருணத்தில்
மழை வெள்ளத்தில் நான்
மிதவையாய்..

எந்த மழையும் எட்டிப் பார்க்கமுடியாத
குகைக்குள்
மழைத்துளியின் ஈரங்களுடன்
காத்திருக்கிறேன்
இன்னொரு கார்காலத்திற்காய்.

அப்போதாவது
மண் தீண்டுமுன்
என்னைத் தீண்டத் துடிக்கும்
மழையின் முகம் பார்க்க வேண்டும்.
கோடையில்
ஈரமான நினைவுகளைச்
சுமந்திருக்க
நினைவுகளுக்கும் வேண்டுமே
முகத்தின் அடையாளம்.

2 comments:

  1. //எந்த மழையும் எட்டிப் பார்க்கமுடியாத
    குகைக்குள்
    மழைத்துளியின் ஈரங்களுடன்
    காத்திருக்கிறேன்
    இன்னொரு கார்காலத்திற்காய்.//

    அருமை.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மும்பையின் மழை துளிகளுக்கு நன்றி..

    ReplyDelete