Wednesday, March 28, 2007

சிறுகதை : லைஃப் ஸ்டைல்

லைஃப் ஸ்டைல்
----------------->> புதியமாதவி, மும்பை

சென்னையிலிருந்து வந்திருக்கும் நண்பர்களை அப்படியே லைஃப் ஸ்டைல் மால் ஷாப்பிங்கிற்கு
அழைத்துச் செல்வதில் இப்போதெல்லாம் ஏக குஷி. அப்படித்தான் அன்றும் நண்பர்கள் அரங்கநாயகியும்
சிவாபிள்ளையும் லைஃப் ஸ்டைலைப் பார்த்து மலைத்துப் போய் நின்றதைக் காண சின்னதாக
ஒரு பெருமை எட்டிப்பார்த்தது. என்னவோ மும்பை வாசிகள் எல்லோரும் இந்த மாதிரி பளபள
குளு குளு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பது போல அவர்கள் நினைப்பதாக நான் நினைத்து
அதில் ஓர் சந்தோஷம்.

சிறப்பு பொருளாதர மண்டலங்களைப் பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேப்பர் வாசிக்கத்தான்
சிவாபிள்ளையும் அரங்கநாயகியும் மும்பை வந்திருந்தார்கள். அரங்கநாயகியின் பேப்பர் சுமாராக
இருந்தது. சிவாபிள்ளை அதிகமான புள்ளிவிவரங்களைக் கொடுத்து அதிகமாக போரடித்தார்.
இரவு டிரெயினில் இருவரும் சென்னை செல்ல வேண்டும். மும்பை வருகிறவர்கள் எல்லோருக்கும்
மும்பையில் ஷாப்பிங் போக வேண்டும் என்பது தவிர்க்க முடியாத நிகழ்வாக இருப்பதை
பலமுறை நான் பார்த்திருக்கிறேன். அப்படித்தான் அவர்கள் இருவரும் வந்ததலிருந்தே சொல்லிக்
கொண்டிருந்தார்கள் ஷாப்பிங் போகனும் என்று.

காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வருவதற்குள் இருவருக்கும் பொறுக்கவில்லை. எது எடுத்தாலும்
99/ என்று விளம்பரப்படுத்தியிருக்கும் கடைக்குள் நுழைந்துவிட்டார்கள். எதை எடுக்க எதை
பார்க்க என்பது தெரியாமல் சின்னக் குழந்தையாக இருவரும் ஒவ்வொரு பொருளாகப் பார்த்துக்கொண்டே
வந்தார்கள். பால்கனியில் தொங்கவிட காற்றில் அசைந்து ரம்மியமாக ஒலிக்கும் மணிகளை
எடுத்துப் பார்த்தார் சிவாபிள்ளை. அதில் இரண்டு மூன்று டிசைன்களை எடுத்துக்கொண்டு
வந்து என்னிடம் காட்டினார்.
அரங்கநாயகி புதுவீடு கட்டி குடியேறி இருக்கிறார்கள். அவர்களுக்கு புதுவீட்டுக்கு எதுவுமே
வாங்கிக்கொடுக்கவில்லை, இதை வாங்கிக் கொடுக்கவா? என்று என்னிடம் கேட்டார்.
அவருக்கு என்ன இஷ்டமோ அதை வாங்கிக் கொடுக்கட்டுமே நாம் எப்படி இதில் கருத்து
சொல்ல முடியும்? என்று மனசில் நினைத்துக் கொண்டே ஒரு கவரிங் புன்னகையைச் சிந்தி
"ஓ.. கொடுக்கலாமே நல்லா இருக்கு சார்.." என்று சொல்லிவைத்தேன்.

இந்த மூன்றில் எதை எடுக்கட்டும்?

இது என்னடா பெரிய வம்பா போச்சு.. ம்ம்ம் அவர் கையில் வைத்திருக்கும் ஒவ்வொரு ஆடும்
மணிகளையும் வாங்கிப் பார்த்துவிட்டு என்னவோ எனக்கு அதைப் பற்றி எல்லாம் தெரிந்ததுபோல
''இது வேண்டாம்.. ரொம்ப கனமா இருக்கு..
இது.. கலர் கண்ணைப் பறிக்கிற மாதிரி இல்ல...
ஆங்.. இது நல்லா இருக்கே.. என்ன சார் ..இது எப்படி இருக்கு.."

"நானும் இதைத் தான் நினைச்சேன் மேடம்..நம்ம ரெண்டு பேரின் டேஸ்ட்டும் ஒன்றுபோலவே
இருக்கு.."

"அடக் கண்றாவியே...! இதை வந்ததலிருந்து எத்தனைத் தடவை சொல்லிச் சொல்லி"

அப்புறம் கண்ணாடிக்குடுவையில் மூங்கில் செடிகள்.. செடிகளின் தண்டுகளைச் சுற்றி கலர் கலரான
கூலாங்கற்கள், சோவிகள், சிப்பிகள். பார்க்க ரொம்பவே அழகாக இருந்தது.
மேடம் சென்னையில் இதுவே முந்நூறு ரூபாய்.. இங்கே 99க்கு கிடைக்குதுனு என் மனைவியிடம்
சொன்னால் இன்னும் இரண்டு மூன்று அவள் தம்பி தங்கைகள் வீட்டுக்கும் வாங்கிட்டு வந்தால் என்ன
என்று சண்டை போடுவாள்.. சிவாபிள்ளை ஒன்று எடுக்க, அரங்கநாயகியும் ஒன்றெடுக்க
அதை அப்படியே ப்ளாஸ்டிக் பையில் போட்டு கட்டிக் கொடுத்தான் கடையில் இருக்கும் பையன்.
சார்.. வீட்டில் போய் இந்தப் பிளாஸ்டிக்கை எடுத்தா போதும் ஆனா.. செடியில் காற்று படறமாதிரி
வைக்கனும்.. இல்லாட்டி டிரெயினில் கொண்டு போவதற்குள் வாடிப் போயிடும்.. என்று சொல்லிவிட்டு
பக்கத்தில் வந்து மெதுவாக "இந்தச் செடி வாங்கி வாடிப் போகக்கூடாது சார்... " என்று வாக்குச்
சொல்லிவிட்டு போனான்.

அவன் பில் போடும் போதுதான் நினைவில் வந்தது.
கவுண்டரில் போய் இந்த இரண்டு மூங்கில் செடிகளுக்கும் தனியாக பில் போடுங்க . என்றேன்.

இந்தச் செடியை மட்டும் யாராவது வாங்கி கொடுத்துதான் நம் வீட்டில் வைக்கனும் சார்..
நம்மளே வாங்கி வச்சிக்க கூடாது..

எனக்குத் தெரிந்த பெஃன்குய் விஷய ஞானத்தைக் காட்டினேன். இரண்டு பேருக்கும் ஏக
சந்தோஷம். என் தரப்பில் நான் அவர்களுக்கு வாங்கி கொடுக்கிறேன் என்பதைவிட
அவர்கள் வீட்டுக்கு சாஸ்திரங்களின் படி மிகப் பெரிய தவறு நடக்க இருந்ததைத் தடுத்து
நிறுத்திவிட்டதில். எவ்வளவு பெரிய தவறு செய்ய இருந்தோம்.. இதை நாமே வாங்கிட்டு போய்
நம்ம வீட்டில் வைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? என்ற எண்ணமும் அவர்கள் மனதில்
வந்திருக்க வேண்டும்.

கடையை விட்டு வெளியில் வந்தவுடன் அவர்கள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.
' மேடம்.. இந்த மூங்கில் செடி மட்டுமில்லே.. இந்த லாஃபிங்புத்தா சிலை இருக்கில்லே இதையும்
நமக்கு நாமே வாங்கி வச்சிக்க கூடாது..' என்று சொல்லிவைத்தேன்.
'அப்படியா இதை ஏன் முதல்லேயே சொல்லலை.. உங்களையே எங்கள் ரெண்டுபேருக்கும்
சிரிக்கும் புத்த பகவானை வாங்கித்தரச் சொல்லியிருப்போமே" என்றார் சிவாபிள்ளை.

ஒரு வழியாக இத்தாலியன் கிட்சன், அட் ஹோம் பர்னிச்சர், வெட்னஸ்டே ஷாப்பிங் , ஷாப்பர்சஸ் ஷாப்
என்று ஒவ்வொரு கடையாக அழைத்துச் சென்று வெளியில் வரவும் ஷாப்பர்ஸ் ஷாப்பின்
ஹைபர் கடைக்குள் நுழையும் போது மணி பிற்பகல் இரண்டாகிவிட்டது. அதுவும் நுழைவாயிலின்
இடது புறம் நாக்கில் எச்சில் ஊற வைக்கும் உணவுப் பொருட்கள். பொரித்த மீன்,
சிக்கன் லாலிபாப், சுட்ட மட்டன், பெரிய பெரிய எலக்ரிக் கிரில்களின் சுழன்று கொண்டிருக்கும்
தோல் உரித்த முழுக்கோழிகள், வகை வகையான கறி வகைகள், பஞ்சாபி, காஷ்மீரி,
சிந்தி, குஜராத்தி, சவுத் இந்தியன் உணவு வகைகள்.. அத்தனையும் பார்த்தவுடன் அந்த இடத்திலிருந்து
இருவரும் நகர்வது மாதிரி தெரியவில்லை. கண்ணில் பட்டதை எல்லாம் வாங்க வேண்டும்
என்று சிவாபிள்ளை பரபரப்பு.. சார்.. எவ்வளவு சாப்பிட முடியும்? வேண்டாம் சார்..
நாளைக்கு டிரெயினில் போகனும் நீங்க..' என்று எச்சரிகை கொடுத்துவிட்டு அவர்களுக்காக
உணவு அயிட்டங்களை வாங்க கூப்பன் வாங்கினேன். ஒவ்வொரு கூப்பனையும்
வெவ்வேறு கவுண்டரில் கொடுக்க வேண்டும். பொரித்த மீனுக்கு தனிக் கவுண்டர், ரைஸ்ஸுக்கு
தனி, சிக்கனுக்குத் தனி.. ஒவ்வொன்றாக கொடுத்த அங்கே வெள்ளை சீருடையில் இருக்கும்
இளம் ஆண்- பெண்கள் ஒவ்வொரு பிளேட்டையும் ஓவனில் வைத்து சூடு செய்து
சுடச்சுட கொடுத்தார்கள்.
நின்று கொண்டு சாப்பிட வசதியாக உயரமான டேபுள்கள் போடப்பட்டிருந்தன. பக்கத்தில்
அக்குவாகார்ட் குடிதண்ணீர் வசதி. தண்ணிரைக் குடிக்க டிஸ்போஷபல் க்ளாஸ்கள்.
ஒரு பிளேட் சிக்கன் லாலிபாய் 50 ரூபாய்தான். இதுவே ஓட்டலுக்குப் போநா எண்பது ரூபாய்க்கு
மேலே. ஹோட்டலுக்குப் போனா எப்படியும் குடிக்கறதுக்கு மினரல் வாட்டர்தான் வாஙகி ஆகனும்.
இல்லாட்ட கார்ப்பரேஷன் தண்ணிரைக் குடிச்சிட்டு டாக்டருக்கு தெண்டம் அழனும்..
நம்ம கண்ணு முன்னாலேயே சமைக்கிறான்.. என்ன நீட்டா இருக்கு பாருங்க.. "
மூக்கில் வேர்த்து வழிய சிக்கனைக் கடித்துக் கொண்டே மூக்கையும் 'ம்ம்க்மம்ம்' என்று
உள்ளுக்குள் இழுத்துக்கொண்டு வாயில் சிக்கன் துண்டுகளுடன் பேசினார் சிவாபிள்ளை.
வழக்கம்போல அரங்கநாயகி மேடம் ' எனக்கு இதுப் பிடிக்காது.. இது ஒத்துக்காது''" என்று
பிகு செய்து கொண்டிருந்தார்கள்.
'இப்படி சாப்பிட்ட எப்படி மேடம்.. இந்த விலையிலே இப்படி கிடைக்குமா? கிடைக்கும் போது
ஒரு வெட்டு வெட்ட வேண்டாமா.. என்னப் பாருங்க" என்று சொல்லிக்கொண்டே அரங்கநாயகிக்காக
மேங்கோலஸ்ஸி வாங்கி வந்தார்.

சாப்பிட்டு முடிந்தவுடன் கடைக்குள் நுழைந்தோம். வரிசையாக் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
வகை வகையான வீட்டுக்குத் தேவையான அனைத்தும் ஒரிடத்தில் குவிந்து கிடப்பதைப் பார்த்து
ஒவ்வொன்றாய் எடுப்பது எடுத்ததை அப்படியே மீண்டும் வைப்பதுமாய் இரண்டு பேருனம்
என்னுடன் நடந்தார்கள். துடைப்பத்திலிருந்து யுரேகா க்ளீனர் வரை எல்லாம் இருந்தது.
'அம்மா அப்பாவைத் தவிர மற்ற எல்லாம் இந்த ஒரே கடையில் வாங்கிடலாம் போலிருக்கு'
என்று ஆச்சரியப்பட்டார் அரங்கநாயகி மேடம்.

சென்ற வாரம் வந்திருந்தப் போது லிக்குயிட் டெட்டால் ஹேண்ட் வாஸுடன் ஒரு கோல்கேட்
இலவசமாகக் கிடைத்தது. அந்த ஸ்க்கீம் இருக்கிறதா என்று அங்fகு நின்று கொண்டிருந்த
சேள்ஸ் கேளிடம் கேட்டேன். இப்போது அதில்லை என்றும் டெட்டால் ஹேண்ட் வாஸூடன்
ஒரு கர்ர்னியர் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் ஃபேஸ் பேக் இருப்பதாகச் சொன்னாள்.
அந்த வாரம் என்னென்ன ஸ்கீமெல்லாம் இருக்கிறது என்று ஒரு பட்டியல் ஒப்பித்தாள.

5 கிலோ பாசுமதி அரிசி வாங்கினால் 1 கிலோ சீனி இலவசம்
5 கிலோ அன்னபூர்ணா ஆட்டா வாங்கினால் 1 கிலோ சர்ஃப் எக்ஸல் இலவசம்
5 லிட்டர் சன் பிளவர் எண்ணேய் வாங்கினால் 1 கிலோ பாசுமதி அரிசி இலவசம்..
5 டவ் சோப் வாங்கினால் ஒரு 250கிராம் சன்சில்க் ஷாம்பூ இலவசம்

மொத்தம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்கினால் ஒரு நான் ஸ்டிக் தவா இலவசம்
ருபாய் 2500க்கு மேல் வாங்கினால் ஒரு டபுள் கார்ட் பெட்சீட் இலவசம்..

எல்லாவற்றுடனும் ஏதாவது ஒன்று இலவசமாக வந்து வாங்குபவர்களை குஷிப்படுத்திக்
கொண்டிருந்தது.
அரிசியில் மட்டும் 45 வகையான அரிசிகள்..
பருப்பில் 13 வகை.. ஒரு தூசி கிடையாது. அப்படியே பகலிலும் எரிந்து கொண்டிருக்கும்
அந்த நியோன் வெளிச்சத்தில் அரிசிகள் மின்னின.
வெஸ்ட் இண்டியா கடையில் 50 விழுக்காடு தள்ளுபடி சேல்ஸ் என்று போட்டிருந்தார்கள்.
இரண்டு பேரும் உள்ளே நுழைந்து டீ ஷர்ட், காஸுவல் வேர் என்று எடுக்க ஆரம்பித்தார்கள்.
அதுவும் ரூபாய் 99, ரூபாய் 150, ரூபாரய் 250 என்று போர்டு போட்டு தொங்கவிடப்
பட்டிருக்கும் சட்டைகளைப் பார்த்தவுடன் சிவாபிள்ளைக்கு ஏக சந்தோசம்.
'மேடம் தையல் கூலியே 125க்கு மேலே கொடுக்க வேண்டியிருக்கு.. இங்கே என்னடானா
99க்கும் 150க்கும் இவ்வளவு நல்ல சட்டை துணியே கிடைக்குதே..
அவருக்கு இரண்டு, அவருடைய மகனுக்கும் நான்கு என்று எடுத்துக் கொண்டார்.
அரங்கநாயகியும் தன் அக்காபிள்ளைகள், அண்ணன் பிள்ளைகளுக்கும் தன் கணவருக்கும்
என்று மொத்தம் எட்டு சட்டைகளை எடுத்துக் கொண்டு நடந்தார்கள்.
கவுண்டரில் பில்போடும் போது தான் தெரிந்தது.. 99 ரூபாய் என்று போட்டிருக்கும் இடத்தில்
தொங்கிக்கொண்டிருக்கும் சட்டைகள் எல்லாமே 99 ரூபாய்க்கானதில்லை என்பது,
சிவாபிள்ளைக்கு கோபம் வந்தது. 'யூ ஆர் சீட்டிங் த பப்ளிக்' என்றார்.
'ந்நோ சார்.. அங்கே என்ன எழுதியிருக்கிறது என்று பாருங்கள்.. ரூபிஸ் 99 ஆன்வெர்ட்ஸ் என்று
எழுதியிருக்கிறது பாருங்கள்.. ' என்றான்.
பாவிகளா.. ருபாய் 99 என்று யானை மாதிரி எழுதிவச்சிட்டு பக்கத்திலே ஆன்வெர்ட்ஸ்ங்கிறதை
பைனாகுலர் வச்சி பாக்கிற மாதிரி எழுதி எலலர்ரையும் முட்டாளாக்கிட்டு இருக்கீங்க!'
என்று சென்னை தமிழில் ஏக வசனத்தில் அவர்களைத் திட்டிக்கொண்டே வந்தார்.
கடைசியில் லைஃப் ஸ்டைல் ஷாப்பிங்கில் ஏற்பட்ட குஷி இப்படி அவருக்கு மூட் அவுட்டாகிற
மாதிரி ஆனதில் எனக்கு வருத்தமாக இருந்தது.
காரில் ஏசியை ஆன் செய்து ஹை வேயில் வேகமாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தோம்.
அவருடைய காமிராவுக்கு செல் தீர்ந்து போனதைச் சொல்லி வாங்குவதற்காக முலுண்ட்
காய்கறி மார்க்கெட் அருகிலிருநக்கும் கடைக்குப் போனோம். கடையில் நின்ற கொஞ்ச
நேரத்தில் எங்கள் மூவருக்கும் வேர்த்துக் கொட்டியது. காலையில் 10 மணியிலிருந்து
பிற்பகல் 3.30 வரை லைஃப் ஸ்டைலில் ஏசியில் ஷாப்பின்ஹ் செய்த போது ஏற்ப்டாத
எரிச்சல் அந்தக் கடையில் காத்திருந்த 10 நிமிடத்தில் ஏற்பட்டது.
"ஃபேன் போடச் சொல்லி சிவாபிள்ளை சொல்லவும்
' அபி த் தோ பவர் கட் ஹை. லோ ஷெட்டிங்'
3 மணி நேர பவர் கட் மே மாதத்தில் எட்டு மணி நேரமாகப் போகிறது என்று
கவலையுடன் சொன்னார் கடைக்காரர்.

பத்தடி தள்ளி அவ்வளவு பெரிய கடைகளில் எல்லாம் பவர் கட் இல்லை.. இந்த ஆளு
நம்மளை ஏமாத்தறான் பாருங்க என்றார் சிவாபிள்ளை.

அவன் நம்மை ஏமாத்தலை சார்.. உண்மை அதுதான் என்று அவரிடம் நான் சொன்னதை
அவர் கண்டு கொண்ட மாதிரியே இல்லை.

காம்பவுண்டுக்குள் நுழைந்தவுடன் காரைப் பார்க்கிங் செய்துவிட்டு பின்பக்கமாக லிஃப்டை நோக்கி நடந்தேன்.
தூக்கி மடித்து வைத்திருக்கும் பேண்ட், சாயம் போன சிவப்புக்கலர் பனியனுடன் என்னிடம் ஓடி வந்தான்
அவன்.
"மேடம் உங்க கார் துடைக்க யாரையும் வச்சிருக்கீங்களா.. நான் இப்போ உங்க காலனியில் கார் துடைக்கற
வேலையைச் செய்திட்டிருக்கேன். நீங்க எப்படியும் எனக்கு உங்க கார் துடைக்கிற வேலையைத் தரனும்."
அவன் வேகமாகப் பேசினான்.
ஏ ஒன் கடைக்காரந்தானே இது. இவனுக்கு என்னாச்சு.. கடையில் கல்லாவில் உட்கார்ந்து கொண்டு
ஒவ்வொரு வாடிக்கைக் காரர்களுக்கும் அவரவர் பயன்படுத்தும் பிராண்ட் பெயர்களை நினைவில்
வைத்துகொண்டு அது படி சாமான்களை எழுதி அனுப்பும் அவனா இவன்.
ஆளைப் பார்த்தவுடன் அவன் ப்ளாட் எண்ணை எழுதிதான் பில் போடுவான். கிட்டத்தட்ட 1000 பேருக்குமேலிருக்கும்
இந்தக் குடியிருப்பில் ஒவ்வொருவரின் தேவையும் அவனுக்குத் தெரியும்.

சப்பாத்தி செய்ய கோதுமையைத் திரித்து வீட்டுக்கு அனுப்பிவிடுவான். அதற்கெல்லாம் எதுவும் சர்வீஸ் சார்ஜ்
கிடையாது. சக்தி அப்பளம் வந்தவுடன் மறக்காமல் நான் போனால் சொல்லுவாந்.
'மேடம்.. அப்பளம் ஆகயா.. சாமான்க்கே சாத் பேஜ்னேது.." என்று கேட்பான்.
என் பதிலுக்கு காத்திருக்காமல் ஒரு பாக்கெட் அப்பளம் என் பில்லில் சேர்க்கப்படும்.
கிட்டத்தட்ட அந்தக் காலனியில் குடியிருக்கும் எல்லா மக்களின் மொழியும் ஓரளவு அவனுக்குத் தெரியும்.
அன்று அப்படித்தான்.. ஒரு வயதானப் பாட்டி அவனிடம் வந்து
"அரைக்கிலோ சீனி" என்று சொல்ல சரியாக சீனியை எடுத்தான்.
அருகில் நின்ற எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
' தமிழ் ஸிக்கயா?' என்று கேட்டேன்.
சிரித்துக் கொண்டெ அந்தப் பாட்டியைப் பார்த்தான்.
பாட்டி கடைக்கு வர ஆரம்பித்தப் பின் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டதாக சொல்ல
இருவரும் சேர்ந்து சிரித்தோம். பாட்டிக்கு நானும் தமிழ்க்காரிதான் என்று அறிந்து கொண்டதில்
ஆச்சரியம்.
எந்த ஊரு எத்தனைப் பிள்ளைக என்று எல்லாம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இப்போது கொஞ்ச காலமாக ஏ ஒன் கடையில் அதிகம் வியாபாரமில்லை.
எனக்கே கடைசியாக எப்போது ஏ ஒன் கடைக்குப் போனோம் என்று நினைவில்லை.
ப்ல மாதங்கள் ஆகிவிட்டது அவன் கடைக்குப் போய்.

உ.பி.காரன். அவன் ஊரிலிருக்கும் எல்லோருமே இந்தியாவில் வெவ்வேறு நகரங்களில்
கடை வைத்திருப்பவர்கள் என்று அவன் சொல்லியிருக்கிறான்.
கம்பீரமாக புன்னகையுடன் கடையில் கல்லாவில் உட்கார்ந்து கொண்டு வியாபாரம் செய்யும்
அவனுக்கு இப்போது கார்த்துடைக்கும் வேலை வேண்டி நிற்கும் அவசியம் என்ன வந்தது?

'இந்த மாதம் முடியட்டும், அடுத்த மாதத்திலிருந்து.. இப்போது கார்த்துடைக்கும் பையன் பாதிநாட்கள்
வருவது இல்லை. அவனுக்கு குட்பை சொல்லிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்து கொண்டேன்.

கை நிறைய லைஃப் ஸ்டைலில் வாங்கிவந்த ஷாப்பிங் பைகளுடன் நாங்கள் மூவரும் நடந்துச்
செல்வதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே நின்றான் அவன்.

-----------------------------

1 comment:

  1. Make your information existing and varied do not just continuously send out a similar 5 information repeatedly. If you would like always keep people's focus, there should be something fresh, or their consideration may go somewhere else. Should they wished for round the clock commercials, they will just stay at home viewing residence shopping routes. Even though many of them achieve that, let them have one thing diverse when they check out their inbox. [url=http://www.ss12w12ws.info]Illnerev5ss[/url]

    ReplyDelete