பேராசிரியர் சுபவீயின் நேர்காணலை முன்வைத்து:
சில நேரங்களில் சில மனிதர்கள்..........
புதியமாதவி, மும்பை
காவிகளுக்கு நடுவில் மஞ்சள் துண்டு மேடை ஏறும்போதெல்லாம் புருவங்கள் உயர்ந்த காலங்கள்மாறிவிட்டது. அண்மையில் காவியுடையுடன், வெள்ளை உடையுடன் வந்தவர்களுடன் ஒரே மேடையில் அமர்ந்துஅவர்களுடன் ஆன்மீகம் பேசாமலும் அவர்கள் இவருடன் அரசியல் பேசாமலும்காமிராவின் ஒளிச்சேர்க்கையில் புன்னகைத்த தருணங்கள் யாருக்கும் அதிர்ச்சியைத் தரவில்லை.ஏன் வீட்டிற்கு வந்தவரின் கால்களின் விழுந்து குடும்பத்தினர்வணங்கியதும் கண்டு யாரும் அலட்டிக் கொள்ளவில்லை.என்றைக்கு திருமூலரின் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திருமந்திரத்தைத் திருடி தனதாக்கிக் கொண்டார்களோ அன்றைக்கே இந்தக் காட்சிகளுக்கான வசனங்களை எழுதிவிட்டார்கள்!1980களில் என் போன்றவர்கள் கல்லூரிகளில் படிக்கும் போது தலையில் வைத்துக் கொண்டாடிய எழுத்தாளர்களில் ஒருவர் ஜெயகாந்தன்.
1960 களில் அவருடைய கதைகளுக்காகவேபத்திரிகைகளைக் காத்திருந்து வாங்கிச் சென்றவர்கள் உண்டு என்று சொல்வார்கள்.அப்போதும் சரி எப்போதும் அவர் திராவிடக் கட்சிகளை, கருத்துகளை, தலைவர்களை, எழுத்துகளைசகட்டுமேனிக்குத் திட்டி இருக்கிறார். அன்றைக்கு அவருக்கு எவ்வளவு பெரிய திராவிட அமைப்பிலிருந்தும் விருதுகளோ பரிசுகளோ அறிவித்திருந்தாலும் 'என் படைப்புகளுக்கு விருது வழங்கும் தகுதி இவர்களுக்கு இருக்கிறதா?' என்ற கேள்வியை முன்வைத்து அவருக்கே உரிய தொனியில் கம்பீரமாக குரைத்திருப்பார்! ஞானபீட விருது வாங்கியவருக்கு முரசொலிஅறக்கட்டளையின் விருது வழங்கப்பட்ட போது 'அடடா இப்போது யாருக்கு தகுதி கூடி விட்டது' என்பது தெரியாமல் இலக்கியவாதிகள் தலைமயிரைப் பிய்த்துக் கொண்டதுதான் மிச்சம்!இந்த இரண்டு காட்சிகளையும் காணும்போது இவர்களுக்கு நடுவில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறார் இசைஞானி இளையராஜா.
எனக்கும் கூட அந்தக் கலைஞன் குறித்து சில வருத்தங்கள் இருந்தது. சில இன்னும் இருக்கிறது. இசைஞானி இளையராஜா அவர்கள் தந்தை பெரியாரின் படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று கூறியவுடன் வருத்தப் பட்டவர்களில் நானும் ஒருத்திதான். உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் ஆண்டுவிழாவில் (19-11-2006)சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள மும்பை வந்திருந்த சுப.வீர பாண்டியன் அவர்கள்பொதிகைமைந்தன் மும்பை தமிழ் டைம்ஸ் நாளிதழுக்காக கண்ட நேர்க்காணலில் இது குறித்த கேள்விக்கு பதில் சொல்லும்போது" இளையராஜா அப்படி சொல்லியிருப்பாரானால் அவர் மீது கோபப்படுவதை விட அவருக்காக வருத்தப்படுவதற்குத் தான்கூடுதல் இடம் இருக்கிறது. இளையராஜா போன்றவர்களும் நம்மைப் போன்றவர்களும் இன்றைக்கு சமூகதளத்தில்இந்த இடத்தில் இருப்பதற்கே தந்தை பெரியார்தான் காரணம். அந்த நன்றியுணர்ச்சியை இளையராஜாவும் பிறரும்மறந்து விடக் கூடாது.
நான் ஒரு செய்தியை இங்கே குறிப்பிட வேண்டும். 1924ம் ஆண்டு வைக்கம் போராட்டம்பற்றி அய்யா பெரியார் அவர்கள் எழுதுகிற போது குறிப்பிட்ட செய்தி இது.'வைக்கத்திலிருந்து போராட்டத்திற்கு தலைமையேற்க வரும்படி எனக்கு ஒரு கடிதம் வந்தது. அப்போது நான் சுற்றுப் பயணத்திலிருந்தேன். ஈரோட்டுக்கு வந்த அந்தக் கடிதம் ரீடேரக்ட் செய்யப்பட்டு, மதுரை மாவட்டம் போடிக்கு அருகிலிருந்த பண்ணைபுரம் என்ற கிராமத்தில் நான் பேசிக் கொண்டிருக்கிற போது அந்தக் கடிதம் எனக்கு வந்து சேர்ந்தது' என்று பெரியார் எழுதியிருக்கிறார்.கண்டிப்பாக இளையராஜா அப்போது பிறந்திருக்க முடியாது.
இளையராஜா பிறப்பதற்கு முன்பே அவர் ஊருக்காகவும்அந்த மண்ணுக்காகவும் அந்த மக்களூக்காகவும் 1924ல் பண்ணைபுரத்தில் நின்று பிரச்சாரம் செய்தவர் தந்தைபெரியார் என்கிற உண்மை இளையராஜாவுக்குப் புரியுமேயானால் பெரியார் திடலுக்கு வந்த போது பெரியார் சிலைக்கு மாலை போடமாட்டேன் என்றோ, பெரியார் படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்றும் ஒரு நாளும் சொல்லியிருக்க மாட்டார்" என்று சொன்னார்.இளையராஜா பெரியார் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தால் அதை யாரும் விமர்சனமாக்கியிருக்க முடியாது. திரைப்படங்களுக்கு இசையமைத்தல் இளையராஜாவின் தொழில். அவ்வளவுதான்.
தன் தனிப்பட்ட கொள்கைகளைஎவரிடமும் சொல்லி அதன் மூலம் தனக்கான ஓர் அடையாளத்தையோ இல்லை ஒரு கூட்டத்தையோ உருவாக்கவும் இளையராஜாவுக்குத் தெரியாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் அகமும் புறமும் ஒன்றாக வாழும் ஓர் அசல்மனிதனின் வாழ்க்கை. அரிதாரங்கள் பூசி வெளிச்சங்களுக்கு நடுவில் வெவ்வேறு முகங்களுடன் நடிக்கும் திரையுலகிலும்இரட்டை வேடங்கள் போட்டு நடிக்கத் தெரியாதவராகவே தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் அவருடையதிரையுலக வாழ்க்கை. இன்னும் சொல்லப்போனால் தான் ஏற்றுக் கொண்டிருக்கும் கருத்து சித்தாந்தத்திலிருந்து எதற்காகவும் எந்த இடத்திலும் எவர் பொருட்டும் தன்னைத் தடம் மாற்றிக்கொள்ளாத பேராண்மை.
பெரியார் திரைப்படத்திற்கு இசையமைக்க மறுத்ததன் மூலம் தன் சித்தாந்த தன்மானத்தை நிலைநிறுத்திக் கொண்டு,தன் சுயமிழக்காமல் தன் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டார் இசைஞானி இளையராஜா.இது தானே தன்மானம், இதுதானே சுயமரியாதை.இளையராஜாவிடம் வாழ்வியலாகிவிட்ட தன்மானம், சுயமரியாதைக் கருத்துகள் தந்தை பெரியாரைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பவர்களிடம் சரிந்து நீர்த்து போய்விட்ட காட்சிக்காகபேராசிரியர் சுபவீ போன்றவர்கள் கோபப்படாவிட்டாலும் வருத்தப்படுவார்கள் என்று நம்புகிறோம்.
No comments:
Post a Comment