Thursday, April 7, 2011

மன்மோகன்சிங்கின் மனவளக்கலை







தமிழர்கள் தமிழ்நாட்டில் ரொம்பவும் தான் குழம்பிப் போயிருப்பார்கள்.

காங்கிரசுக்கு 63 இடத்திலும் டெபாசிட் கூட கிடைக்காமல் புத்திப் புகட்டுவார்கள்
எம் தமிழர்கள் என்றெல்லாம் நான் பகற்கனவு காண விரும்பவில்லை.

காங்கிரசு அதிமுகாவுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்கப் போகிறது

காங்கிரசு தோற்றாலும் ஜெயித்தாலும் திமுகாவுக்கு "ஆப்பு
" தான்.
என்கிறார்கள் சில நம்பிக்கைக்குரிய ஊடக நண்பர்கள்.


ராஜபக்சே தமிழினத்தின் எதிரி
எனவே அவன் வரக்கூடாது மும்பைக்கு என்று சண்டைக்கோழியாய்
சிலிர்த்துப்போய் இங்கிருக்கும் பிற மொழிக்காரர்களிடம் பேசிய போது
ஃபிட் பிட்டாக சில கருத்துகள் உதிர்ந்தன.


இந்திய அரசாங்கம் அவனை அழைக்கிறது. இந்தியாவின் ஜனாதிபதி ராஜபக்சே அருகில்
அமர்ந்து கிரிக்கெட் பார்க்கிறார். இந்திய அரசு தமிழன அழிப்பில் ராஜபக்சேக்கு
வலக்கரமாகவும் இடக்கரமாகவும் இருந்திருக்கிறது, இருக்கிறது.
காங்கிரசாகட்டும் பிஜேபி ஆகட்டும்.. இந்த வெளியுறவுக்கொள்கையில்
மட்டும் ஒரே கொள்கை உள்ளவர்கள் தான். கம்யூனிஸ்டுகளும் விதிவிலக்கானவர்கள்
அல்ல. இவர்கள் எல்லோரும் சேர்ந்த அரசியல் உலகம் தான் இந்தியா.
ஏன் .. உங்கள் தமிழ்நாட்டில் தேர்தல் களத்தைப் பாருங்களேன்..
வேட்பாளாராக எல்லா கட்சிகளிலும் மக்கள் போட்டிப் போட்டுக்கொண்டு நின்றார்களே!

காங்கிரசு, பிஜேபி இவர்களுடன் மாறி மாறி கூட்டணி பேசி கூட்டணி அமைத்து கூட்டணி
உடைத்து கூட்டணியில் கொள்ளை அடிப்பவர்கள் தான் உங்கள் தமிழினத்தலைவர்கள்!
மனித நேயம், மனித உரிமை என்ற அடிப்படையில் ராஜபக்சேவை நீங்கள் எதிர்க்கலாம்
என்றால் முதலில் எதிர்த்திருக்க வேண்டியது சாட்சாத் ஓபாமாவைத்தான்.
அமெரிக்க வல்லரசு செய்யாத அட்டகாசமா? கொடுமையா? மனித உரிமை மீறல்களா?

சரி இந்த மாதிரியான விமர்சனங்களை எல்லாம் மண்டையில் ஏற்றிக்கொண்டு
நான் இப்போதெல்லாம் அவஸ்தைப் படுவதில்லை.

தமிழ்நாட்டில் தேர்தல் நேரம்.
தேர்தலுக்கு முன்னும் பின்னும் நடக்கப்போகும் காமெடி!
அசத்தப்போவது யாருனு தெரியலை?
ஏதாவது நினைவுகள் உங்களைத் தூக்கமின்றி அலைக்கழிக்கலாம்.
உளவியல் பிரச்சனைகளின் தாக்கம் உடனே வெளியில் தெரியாதாம்.
எனவே தான் இந்த டிப்ஸ் உங்கள் அனைவருக்காகவும்.
இதை மன்மோகன்சிங் மனவளக்கலை என்று மனோதத்துவ நிபுணர்கள்
சொல்கிறார்கள்.
ரொம்பவும் சிம்பிள்..

தமிழன எதிரி
தமிழனத் தூரோகி
2 ஜி, 3ஜி, இஸ்ரோ
கூட்டணி தர்மம்
லைவ் காமெடி
லைவ் அடிதடி
கட்டைப்பஞ்சாயத்து
கச்சத்தீவு
இப்படியாக எதைப் பற்றிக் கேட்டாலும் ஒரே பதில்..


"ஓ.. அப்படியா..! எனக்குத் தெரியாதே! ' என்று சொல்ல வேண்டும்.
அப்படிச் சொல்லும் போது உங்கள் குரலும் உங்கள் உடல்மொழியும்
மன்மோகன்சிங் போலவே இருந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
.
மனநிம்மதிக்கு இந்த எளியமுறையை நம் தமிழர்களும் கற்று
கற்றபின் அவர்போலவே நிற்கவும் தக என்று திருக்குறளுடன்
இணைத்து பயன்பெறுமாறு வேண்டுகிறேன்.

துணைநின்ற நூல்கள்:

*மன்மோகன்சிங் மனவளக்கலை
* body language of singh @ parliment - you tube ..
*அசத்தப்போவது யாரு? தமிழ்நாட்டு தேர்தல் கள ஆய்வு


.

Tuesday, April 5, 2011

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நன்றி



28 வருடங்கள் காத்திருந்து இறுதியாக கிடைத்த உலகக்கோப்பைக்காக
நான் நன்றி சொல்ல வரவில்லை. உங்களுக்கு கிடைத்திருக்கும் ஊடக
வெளிச்சம், பாராட்டு பரிசு/பணம் மழையாகக் கொட்டுகிறது. உங்களைப் போன்ற
சக விளையாட்டு வீரர்களான ஹாக்கி விளையாடு வீரர்களுக்கு பொருத்தமான
காலணி கூட கிடைப்பதில்லை. இன்னும் 25 வருடங்களுக்கு நீங்கள் இந்தக்
கோப்பையை முத்தமிட்ட கனவுகளைக் கண்டே ஒரு தலைமுறை வாழ்ந்துவிட
முடியும். இதைக் காட்டிக் காட்டியே விதம் விதமான விளம்பரங்களில்
உங்கள் அனைவரின் முகமும் வரப்போவதை நினைத்து இப்போதே எனக்குப்
பயமாக இருக்கிறது. உங்களுக்கு கிடைக்கும் பணத்தில் மற்ற விளையாட்டுகளை விளையாடும் வீரர்களுக்கு ஏதாவது செய்தால் என்ன? என்றெல்லாம் கிறுக்குத்தனமாக உங்களிடம் நான் கேட்கப்போவதில்லை.

பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட வரும்போதெல்லாம் எங்க ஊரு பெரிசு
பால்தாக்கரே சத்தம் போடுவது வாடிக்கை. எனக்கு அப்போதெல்லாம் கோபம்
வருவதும் உண்டு.
விளையாட்டை விளையாட்டா பாருங்கய்யா.. என்று அறிவுரை எல்லாம்
சொல்லி இருக்கேன்! இந்து முஸ்லீம் என்று ஒரு வட்டத்தை என் பார்வை
தாண்டியதில்லை. ஒரு முறை பாகிஸ்தான் அதிபர் இந்தியா வந்து விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது இந்திய எல்லையில் பாகிஸ்தான் படை ஊடுருவி தாக்க ஆரம்பித்தது எனக்கும் நினைவிருக்கிறது என்றாலும் அதற்கு பாகிஸ்தான்
கிரிக்கெட் வீரர்கள் என்ன செய்வார்கள் என்று நியாயம் பேசி இருக்கிறேன்.

இலங்கை அதிபர் மும்பை வருகிறார் என்றவுடனேயே டென்ஷன் அதிகமானது.
எதுவும் எங்களால் செய்ய முடியாது என்று தெரிந்திருந்தாலும் அந்த இயலாமை
இன்னும் கொஞ்சம் எங்கள் எண்ணத்தைக் கொடூரமாக்கியது.
இலங்கை வீரர்கள் வெற்றிப் பெற்று அந்த வெற்றிப்புன்னகையுடன்
ராஜபக்சே .. நினைத்துப் பார்க்கவே முடியவில்லை!
இதற்காகவாவது இந்தியா வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்று
நான் நினைத்தது நியாயமற்ற உணர்வாக இருக்கலாம், என்னிலிருந்த
கொடூர எண்ணமாக இருக்கலாம். நான் எந்த மகாத்மாகவும் என்னை
நினைத்துக் கொள்ளவோ ஏமாற்றிக்கொள்ளவோ விரும்பவில்லை.

இலங்கை கிரிக்கெட் வீரர்களே... என்னை மன்னித்துவிடுங்கள்.
இந்திய கிரிக்கெட் வீரர்களே... உங்களுக்கு நன்றி..
உங்கள் வெற்றி .. என்னை என் காயத்தை...
மயிலிறகாய்த் தடவிக் கொடுத்தது.
என்னால் செய்ய முடியாததை உங்கள் பந்தும் மட்டையும்
செய்ததற்காக மீண்டும் உங்களுக்கு நன்றி.

Tuesday, March 22, 2011

கூட்டணி



கிழவியின் இட்லிக்கடையில் நல்ல கூட்டம். எலெக்ஷன் பிரச்சாரத்திற்கு நடக்கும் எல்லா கட்சியின் கூட்டங்களும் ஊர்வலமும் கிழவியின் கடை விரித்திருக்கும் அம்மன் கோவில் மரத்தடியைத் தாண்டித்தான் போகவேண்டும். வருவோர் போவோருமாக வியாபாரம் அதிகமாக
இருந்தது. துணைக்கு பக்கத்து வீட்டு மரியம்மா பையன் சூசையை வைத்துக் கொண்டாள்.


காசு நல்ல புழங்கியது. இது கடன் சொல்லிட்டு சாப்பிடற உள்ளூர் கூட்டமில்லை.
காசு கொடுத்து சாப்பிடற வெளியூர் கூட்டம்.
இந்த வருடம் மகனின் திவசத்தை நல்ல படியா செய்யனும்னு கிழவி மனசுக்குள் நினைத்துக் கொண்டாள். கிழவியின் ஒரே மகன் இறந்து நாளை விடிந்தால் இரண்டு வருசம் ஆகப் போகிறது.இந்த மாதிரி எலக்ஷன் நேரத்தில்தான் தகராறில் அவன் வம்பாங் கொள்ளையா
போய்ட்டான்.
செத்தாலும் செத்தான்...நோய்பட்டு தூக்கிட்டுப்போக நாலு ஆள் இல்லாத
அனாதை மாதிரியா செத்தான். அவன் மகராசானா செத்தான். சும்மா சொல்லப்புடாது.
அன்னிக்கி கூட்டம்னா கூட்டம் அம்புட்டு கூட்டம். எம்மாம் பூ மாலை விழுந்திச்சி. பெரிய்ய பெரிய தலைவர் மாரெல்லாம் வந்தாங்க... நான் தலையில் அடிச்சி கூப்பாடு போட்டதைக்
கூட படம் பிடிச்சாங்க .பேப்பர்கார மகராசனெல்லாம் வந்து எம்மாம் படம் பிடிச்சாங்க தெரியுமா..
தலைவரு வந்திருந்தாரு.. நம்ம ஆளு மாதிரியே இல்ல வெள்ளைக்காரன் மாதிரி இருந்தாரு.
அவரு கூட எனக்கு என்னவோ நிறைய பணம் தரப்போறதா சொன்னாராம்.
சூசைப் பயக் கூட சொன்னான். ஆனா இரண்டு வருஷம் ஆகப் போறது. இன்னும் பணம் தான் கைக்கு வந்த பாடில்லை. பஞ்சாயத்து போர்டுக்கு அலைஞ்சதுதான் மிச்சம்..ம்.

கடைவியாபாரம் எல்லாம் முடிஞ்சது. கிழவி கூட்டமா போற ஊர்வலத்தைப்
பார்த்தாள்.


"ஏலே சூசை.. நேற்றுதானே பெரிய கூட்டம் வந்திச்சி..இன்னிக்கும் என்ன அதே கூட்டமா?

"இல்ல பாட்டி..இது வேற கட்சி..நம்ம அண்ணன் இருந்திச்சி பாரு அந்த கட்சி கூட்டம்.
நம்ம அண்ணன் செத்த அன்னிக்கி வந்தாரு பாரு சிவப்பா ஒரு தலைவரு.. அவரு இன்னிக்கி வாராராம்."

"யாரு அந்த மவராசனா..?நல்லாயிருக்கட்டும்.
ஏலே சூசை அந்த மகாராசனைப் பார்த்து நமக்கு இன்னும் பணம் வரலைன்னு சொல்வோம் வர்றியா.."

"யே கிழவி சும்மா இரு. அவருக்கு அதெல்லாம் எங்கே நினவில இருக்கப் போவுது"

"போலே அவரு என்ன நம்மூர்க்காரப் பயலுக மாதிரியா? சொன்னா சொன்ன வாக்கு தவறு மாட்டர்லே"

ஊர்வலம் துவங்கியது. கூட்டம் ஜெ ஜேனு.
கிழவி திறந்த வேனில் கை அசைத்தபடியே வந்த தலைவரைப் பார்த்துவிட்டாள். எவ்வளவு பெரிய மனுஷன்.. நம்ம நிற்கிறதைப் பாத்துப்பிட்டு
தான் கையை அசைக்கிறாரு.. கிழவியும் பதிலுக்கு கை அசைத்தாள். அவள் கண்களில் கண்ணீர் சேலை தலைப்பை எடுத்து கண்கள் ரண்டையும் துடைத்து கொண்டாள். அவர் நின்று பயணம் செய்த வேன் அவளருகில் வந்தது. தலைவரு பக்கத்தில் நிற்பது யார்?
வணக்கம் போட்ட படி நெற்றியில் சந்தணப்பொட்டுடன் நிற்பது அவந்தானே..எம்மவன் காசியை
ஆள்வைத்து அடித்துக் கொன்ற அந்த பாவிப்பயல் தானே...கிழவியின் பெற்றவயிறு பற்றி எரிந்தது.


"ஏலே சூசை..தலைவர் கிட்ட நிக்கறது அந்த கொலைகாரப் பேய்தானே.."

"ஆத்தா, கத்தாதே.. சும்மா இரு. இப்போ அவுங்க ரண்டு பேரும் கூட்டாளிங்க"

கிழவி ஆவேசம் வந்தது போல் ஓடினாள்.
"அடப் பாவிகளா.. நீங்க நல்லா இருப்பீங்களா.உங்க பிள்ளை குட்டிக நல்லா
இருக்குமா?"

இறந்து போன மகன் காசியின் முகம் கண்முன்னால் வந்து நின்றது. ரோட்டோரத்தில் தார் ரோடு போடுவதற்காக குவிந்து கிடந்த கற்களை எடுத்து ஊர்வலத்தை நோக்கி வீசினாள்.
வெறிப்பிடித்தவள் போல கூட்டத்தை தள்ளிக் கொண்டு ஓடினாள். மண்ணை எடுத்து கூட்டத்தில் தூவினாள்.
ஊர்வலம் சிதறியது. போலீசார் ஓடிவந்து கிழவியைச் சுற்றி வளையம் அமைத்தார்கள். கிழவி நடுரோட்டில் உட்கார்ந்து கொண்டு 'ஓ" வென்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

ஏதோ பெரிய்ய மனித வெடிகுண்டு வெடிக்கப் போகிறது என்று பயந்த போலீசார் கிழவியைப் பார்த்தவுடன் எரிச்சலுடன் ஒருவர் மாற்றி ஒருவர் லத்தியால் விளாசு விளாசுனு விளாசித்தள்ளினார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வளவோ கவனமாகச் செய்திருந்தும்
இந்தக் கிழவி எங்கிருந்தோ வந்து இப்படி எல்லாவற்றிலும் மண்ணை அள்ளி போட்டு விட்டாளே..நாளைக்கு டி.ஜி யி¢லிருந்து சி.எம். வரை கேட்கப்போகிற கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்ற டென்ஷனில் கிழவியைப் பின்னி எடுத்து விட்டார்கள்.

அவளுக்கு அவர்கள் கொடுத்த எந்த அடியும் வலிக்கவில்லை. அவள் கண்கள்
ஆகாசத்தைப் பார்த்து என்னவோ தேடிக்கொண்டிருந்தது.

மறுநாள் பத்திரிகைகளில் விதவிதமான செய்திகள்.
"தலைவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
தலைவரைக் கொலை செய்ய சதியா?
இது எதிர்கட்சிகளின் சதிச்செயல் .."

கிழவி என்ன ஆனாளோ தெரியவில்லை.

(2005 ல் வெளிவந்த என் சிறுகதை தொகுப்பு மின்சாரவண்டிகள் நூலில்
இடம்பெற்றிருக்கும் கதை. ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் கூட்டணி
கூத்து நடக்கும் போதெல்லாம் இந்தக் கதையில் வரும் அந்த மூதாட்டியின்
அழுகுரல் காதில் விழுகிறது...)




Thursday, March 3, 2011

எங்கள் அருணாவும் கருணைக்கொலை மனுவும்





அருணாவை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அவள் செய்தக் குற்றம் என்ன தெரியுமா?
பாலூட்டியாகப் பிறந்தது மட்டும்தான்!
அவள் இருமுலையும் அல்குலும் தான் அவள் சுமந்தக் குற்றம்.
அதற்காக அவள் அனுபவிக்கும் தண்டனை...
நம்மால் கற்பனைச் செய்துப் பார்க்க முடியாத தண்டனை
38 ஆண்டுகள் KEM மருத்துவமனையில் படுக்கையில் இருக்கிறாள்..
கோமாவில் இருக்கிறாளா.. இல்லை செடியிலிருந்து பறிக்கப்பட்ட
காய்கறி போல ஒரு சதைப் பிண்டமாக (permanent vegetative state)
இருக்கிறாளா.. மருத்துவர்களும் பத்திரிகைகளும் இப்போது அதைப்பற்றி
பல்வேறு கருத்துகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் என்னைப் பொருத்தவரையில்..
அவள் கொலை செய்யப்பட்டு 38 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.
அவளை இந்த நிலைக்குள்ளாக்கிய சோகன்லால் வால்மிகி மீது
எங்கள் சட்டம் ரொம்பவும் தான் கருணைக் காட்டி இருக்கிறது,
வல்லாங்கு (Rape) செய்ததாக அவன் குற்றம் சாட்டப்படவில்லை.
அவன் மீது வெறும் திருட்டுக் குற்றம் மட்டுமே.
அதிலிருந்தும் அவன் வெளிவந்தாகிவிட்டது. தற்போது டில்லி மருத்துவமனையில்
அவன் வார்ட் பாயாக மீண்டும் வேலை. ஒருவேளை இந்த 38 வருடத்தில்
அவன் ரிடையராகி சொந்த ஊருக்குப்போய் நிம்மதியாக பான்பாராக் சாப்பிட்டுக்
கொண்டு இருக்கலாம், யாருக்குத் தெரியும்.

அருணாவுக்கு கட்டாயமாக கொடுக்கப்படும் மருந்து, உணவுகளை நிறுத்தி
அவளுக்கு கருணைக் காட்ட வேண்டும், அதாவது கருணைக்கொலைக்கு
நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி இருக்கிறார் அருணாவைப் பற்றிய
அனைத்துச் செய்திகளையும் ஒரு புத்தகமாக எழுதிய பிங்கி விரானி.
நீதிமன்ற உத்தரவு படி அருணாவின் மூளையை செகேனிங் செய்து
பார்த்திருக்கிறார்கள். மூளை சுருங்கிப் போய்விட்டதாகத் தெரிகிறது.


அருணா கோமா நிலையில் இல்லை என்கிறார் KEM டாக்டர் சஞ்சய் ஓக்.
அவள் சங்கீதம் கேட்பதையும் அண்மையில் மீன் சாப்பிடக் கொடுத்தப்ப்போது
அவள் சந்தோஷமாக சாப்பிட்டதையும் அதனால் அவளுக்கு மீன் உணவு
விருப்பமானது என்பதை அறிந்துக்கொண்டதாகவும் கூறுகிறார்.
அழுவதும் சில நேரங்களில் சத்தமிடுவதும் கை கால்களை அசைப்பதும்
அவள் அறைக்குள் வந்தவர்கள் யார் என்பதை அறியவில்லை என்றாலும்
யாரோ வந்திருக்கிறார்கள் என்பதை அவள் அறிந்துக் கொள்கிறாள்
என்றும் டாக்டர் சஞ்சய் ஓக் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த 38 ஆண்டுகள் படுக்கையில் இருக்கும் அருணாவை
அங்கு வேலைப்பார்க்கும் எவருமே தொல்லையாக நினைக்கவில்லை
என்றும் படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு ஏற்படும் புண்கள்
அவளுக்கு இல்லை என்றும் சொல்கிறார் டாக்டர் ஓக்.
"எங்களுக்கு அவள் உயிருடன் இருந்தாக வேண்டும், எங்களைப் பொருத்தவரையில்
அவள் மற்றவர்களைப் போல உயிருடன் இருப்பவள்தான்
We want us alive and she is very much a living person for us,"
என்பதுதான் இன்றும் டாக்டர் சஞ்சய் ஓக்கின் கருத்து.

மருத்துவப்புத்தகங்கள் permanent vegetative state நிலையில் இருக்கும்
நோயாளிகள் கண்களை அசைப்பது அழுவதும் சிரிப்பதும் உணர்ச்சிகளின்
வெளிப்பாட்டினாலோ அல்லது புறக்காரணிகளின் தூண்டுதலாலோ அல்ல
என்று சொல்கிறது.அதனால் தான் KEM மருத்துவமனை நரம்பியல்
அறுவைச்சிகிச்சை டாட்கர் சுனில் பாண்ட்யா அருணாவில் நிலையை
permanent vegetative state என்ற கருத்துடன் ஒத்துப்போகிறார்.

எல்லாவற்றுக்கும் அமெரிக்காவை உதாரணம் காட்டும் நம்மவர்கள் ஐந்து
ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க உச்சநீதிமன்றம் 15 ஆண்டுகள்
PVS நிலையிலிருந்த டெர்ரிசச்வோ (Terri Schiavo) என்பவருக்கு
உணவு கொடுப்பதை நிறுத்த உத்தரவிட்டதன் மூலம் கருணைக்கொலைக்கு
ஆதரவளித்ததைக் காரணம் காட்டுகிறார்கள்.ஆனால்
19 ஆண்டுகள் கோமா நிலையிலிருந்து மீண்டு வந்தவர்கள் இருக்கிறார்கள்.
இந்தியச் சட்டம் 21, சட்டப்படி வாழ்வதற்கான உரிமையைப் பற்றி
பேசுகிறது, சட்டப்படி சாவதற்கான உரிமையை அல்ல.

அருணாவுக்கு நினைவு திரும்பக்கூடாது. அப்படி ஓர் அதிசயம் நடந்தால்
அதுதான் அவளுக்கு மிகப்பெரிய தண்டனையாக இருக்கும்.
உறவுகள் கைவிட்டதற்காக அழுவாளா?
உண்மைகள் தூக்கிலிடப்பட்டதற்காய்த் துடிப்பாளா?
காதல் செத்துப்போனதற்காய் கண்ணீர் வடிப்பாளா?
இல்லை.. இல்லை..
முகம் சுளிக்காமல் தன்னைத் தங்களில் ஒருத்தியாக இந்த 38 வருடங்கள்
காத்த அந்த மருத்துவமனை நர்சுகளிடம் நன்றி சொல்லி
மனிதநேயம் இன்னும் செத்துப்போகவில்லை, நன்றி .. என்று
தன் கடைசிமூச்சை அவர்கள் காலடியில் விடுவாளா?
அருணா என்ன செய்வாள்.. அவளால் என்னதான் செய்யமுடியும்?
62 வயது அருணாவுக்கு நினைவு திரும்பாமலேயே
இருக்கட்டும்.

(ref: TOI, 28/2/11& Mumbai mirror)


**

அவளைப் பற்றிய செய்தியை நான் உண்மையின் ஊர்வலங்கள் என்ற
தொடரில் திண்ணையில் எழுதியிருந்தேன். அதன் பின் என் வலைத்தளத்திலும்
சில வருடங்கள் கழித்து மறுவாசிப்புக்காக கொடுத்திருக்கிறேன்.
அருணாவைப் பற்றிய அந்தப் பக்கங்களை ...


http://puthiyamaadhavi.blogspot.com/2010/08/blog-post_05.html

Monday, February 21, 2011

இந்திய தமிழச்சியின் கண்ணீர்வாக்குமூலம்





அம்மா..
உன் கடைசிப்பயணத்தில்
என் கண்ணீர் வாக்குமூலம்.
என்னை மன்னித்துவிடு.
நான் விரும்பினாலும்
நான் விரும்பாவிட்டாலும்
என்மீது சுமத்தப்பட்டிருக்கும்
இந்தியன் என்ற அடையாளத்தினை
கிழித்து எறியும்
எந்த ஆயுதங்களும் இல்லாமல்
நிராயுதப்பாணியாக
களத்தில் நிற்கும்
என்னை..
அம்மா மன்னித்துவிடு.

கசாப்புக்கு கூட
உயர்நீதிமன்றம
உச்ச நீதிமன்றம்
கதவுகள் திறந்திருக்கின்றன
பலகோடியில் பராமரிப்பு செலவு
இத்தனையும் செய்து
இந்திய முகத்தைக்
காப்பாற்றத் தெரிந்த
எங்கள் நீதிதேவதைக்கு
அன்னையே..
சக்கரநாற்காலியில்
நீ சாய்ந்தக்கோலத்தில்
மருத்துவம் நாடி வந்தப்போது மட்டும்
கறுப்புத்துணியால்
கண்களைக் கட்டிய
கங்காணிகள்
எப்போதும் உலாவருகிறார்கள்
எங்கள் தோட்டத்தில்.

தோட்டம் எங்களுடையதாக இருந்தாலும்
நாங்கள் அதில் கூலிகளாக்கப்பட்டதை

அறியாமலேயே
கூட்டணி மேடையில்
கும்மாளம் போடுகிறோம்.
அம்மா.. அவர்களை மட்டுமல்ல
அவர்களையே மாறி மாறி
தலைவர்களாகக் கொண்டாடும்
எங்களையும்
மன்னித்துவிடு.
வீரர்கள் விதைக்கப்பட்ட
மண்ணில்
உன் கடைசிப்பயணம்

புறநானூறை வாழவைத்த
என் அகநானூறே
உன் பாதங்களைத் தொட்டு
வணங்கத்துடிக்கும்
கைகளைத் தொலைத்து நிற்கும்
................ உன் மகள்.......

Monday, February 14, 2011

எழுத்தாளர் அம்பையின் மறுவினை



அன்புள்ள மாதவி,


அன்றைய கூட்டம் பற்றிய பதிவுக்கு நன்றி. அதில் சில தவறுகள் உள்ளன. நிறைய நேரம்

பேசியதைப் பதிவு செய்யும்போது இப்படி நேரும்தான். அம்மா தன் நகைகளை

வங்கிக்குக் கொண்டு போய் அதை வைத்துக் கடன் வாங்கி நான் சென்னை போக ஏற்பாடு

செய்ததன் காரணம் என் தந்தை வேறு ஊரில் வேலையில் இருந்ததால்தான்.மேலும் நான்

சென்னை செல்வதை அவர் ஒப்புக்கொள்ளாததால்தான் அம்மா அப்படிச் செய்ய நேரிட்டது.

இதை நான் கூறினேன். ஒரு வேளை அது சரியாகப் பதிவாகாமல் போயிருக்கலாம். மேலும்

தாம்பரம் செல்லும் மின்வண்டியில் என் செவியில் அம்மா கூறியது, “லக்ஷ்மியின்

கனவெல்லாம் நனவாகப் போகிறது” என்றுதான். ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால்

இந்த நிகழ்ச்சியை நான் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். அது வேறு மாதிரி

பதிவாகக் கூடாது என்பதால்தான்.


குமுதம் பத்திரிகை பற்றிய தகவல் பல ஆண்டுகளுக்கு முன் அங்கு வேலை செய்த ஒருவர்

வியாபாரப் பத்திரிகைகள் செய்துகொள்ள வேண்டிய சமரசங்கள் பற்றிப் பேசியபோது

கூறியது. உங்கள் பதிவில் அது தற்சமயம் நடக்கும் நிகழ்வை நான் கூறுவது போல்

அமைந்திருக்கிறது.


இந்தத் தவறுகளைத் திருத்தினால் மகிழ்ச்சி அடைவேன்.


அன்றையக் கூட்டம் எனக்கும் திருப்தியை அளித்தது. அதற்காக நீங்களும் ராஜாவும்

எடுத்துக்கொண்ட சிரமத்துக்கு நன்றி.


அன்புடன்,


அம்பை.

_____________

நன்றி அம்பை. தவறுகளைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

அன்புடன்,

புதியமாதவி

Saturday, February 12, 2011

எழுத்தாளர் அம்பையுடன்




மும்பையில் அரசியல், இலக்கியம், கலை குறித்த மாற்று கருத்துகளை முன்வைக்கவும்
காத்திரமான கலந்துரையாடலுக்கும் கருத்துப்பரிமாற்றத்திற்குமான தளம் தேவை
என்பதனாலும் அந்த வெற்றிடத்தை நிரப்புவது இன்றைய சந்தைமயமான ஊடகச் சூழலில்
மிகவும் தேவை என்பதாலும் மும்பை தமிழ் போஸ்ட் வார இதழை நடத்திய அனுபவமிக்க
நண்பர் ராஜாவாயிஸ் அவர்கள் இந்த அமைப்பை டிசம்பர் 2010 முதல் நடத்திவருகிறார்.


மும்பை, சிந்தனையாளர் சங்கமத்தின் மூன்றாம் அமர்வில் எழுத்தாளர் அம்பை
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உடல், மொழி, ஊடக சந்தை என்ற
தலைப்பில் தன் கருத்துகளை முன்வைத்தார். பிப், 6ல் மாலை 6.30க்கு
மாதுங்கா லேபர் கேம்ப் பகுதியில் இருக்கும் பரவர்சங்கத்தில் இக்கூட்டம்
நடந்தது. தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்பினர்,
எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கலந்துக் கொண்டு கலந்துரையாடல்
ஆரோக்கியமாக நிகழ உறுதுணையாக இருந்தார்கள்.

எழுத்தாளர் அம்பையைப் பற்றிய ஓர் அறிமுகத்தை மிகவும் சுருக்கமாகக் கொடுத்தார்
எழுத்தாளர் புதியமாதவி. 1960களில் அம்பை எழுத வந்தக் காலத்தில் நம்மில் பலர்
பிறந்திருக்கவில்லை. சிலர் அப்போதுதான் அ- அம்மா என்று எழுத்துக்கூட்டி வாசிக்க
ஆரம்பித்திருந்தோம் என்று ஆரம்பித்த புதியமாதவி, இன்றைக்கும் அம்மையின் எழுத்துகளின்
சிகரத்தைத் தொட்டுவிட இன்னும் தொலைதூரம் எங்களுக்கெல்லாம் பயணிக்க வேண்டி
இருக்கிறது என்பதுதான் அம்பையின் சிறப்பு என்றார். 1970களில் அம்பை 'கசடதபற'
இதழில் எழுதி வெளிவந்த 'அம்மா ஒரு கொலை செய்தாள்' சிறுகதை 1978ல் மதுரை
பல்கலை கழகத்தில் முதுகலை படிக்கும் காலத்தில் எங்களால் மிகவும்
பேசப்பட்ட கதையும் விவாதிக்கப்பட்ட கதையுமாக இருந்ததை நினைவு கூர்ந்தார்.
'அழகே இல்லாததால் அவள் எனக்குத் தங்கையாகி விட்டாள்' என்ற புதுக்கவிதையும்
இக்கதையுடன் சம்ப்ந்தப்படுத்தி பேசப்பட்டதையும் தானும் தன் தோழியரும் இக்கதையின்
ஊடாக தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதையும் சொன்னார்.

வயதான தன் தாயை அருகிலிருந்து கவனித்தக் காலத்தில் எல்லாம் அம்பையின் வரிகள்
நினைவுக்கு வந்ததாகவும் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கை அனுபவமும் அந்தந்த பருவ
காலத்து நினைவுகளுடன் அம்பையின் கதைகளில் பதிவு செய்யப்பட்டிருப்பதையும்
சொன்னார். "ஒவ்வொரு பெண்ணும் இன்னொருத்தியின் கண் அடியில் உள்ள கருவட்டங்களைத் தடவ வேண்டும்" என்ற அம்பையின் வரிகளைச் சொன்ன புதியமாதவி , அம்பையின் கதைகளை வாசித்தப்பின் தோசையின் மீதிருந்த விருப்பம் காணாமல் போனதையும் 10 அல்லது இருபது வருடங்களுக்கு மேலாக எத்தனை இலட்சக்கணக்கான தோசைகளைப் பெண் செய்துக்கொண்டிருக்கிறாள் என்பதை உணர வைத்தவை அம்பையின் கதைகள் என்றும் அதன்பின் தோசை மீதிருந்த விருப்பம் காணாமல் போய்விட்டதை எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பதிவு செய்திருப்பதையும் எடுத்துக்காட்டி
அம்பையின் எழுத்துகளைத் தேடி வாசிக்கும்படி அனைவருக்கும் வேண்டுகோள் வைத்தார்.
இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி அமைப்பினரால் கலைஞர் பொற்கிழி விருது சிறுகதைகளுக்காக அம்பைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தகுதியானர்வர்களை அடையாளம் கண்டு விருது வழங்குவதன் மூலம் சில சமயங்களில் விருதுகளும் தங்களைக் கவுரவித்துக் கொள்கின்றன என்று சொல்லி அமர்ந்தார் புதியமாதவி.


'அம்மா ஒரு கொலை செய்தாள்' கதையைப் பற்றி பேசினார் புதியமாதவி, அந்தக் கதை இடம் பெற்ற தொகுப்பு 1976ல் வெளிவந்தது. கிணற்றில் போட்ட கல் மாதிரிதான், அத்தொகுப்பு குறித்த விமர்சனங்களும்.
என்று ஆரம்பித்த அம்பை தன் எழுத்துப்பயணம் குறித்தும் தெளிவாகவும் உறுதியாகவும் ஆற்றொழுக்கான நடையில் ஒவ்வொரு சொற்களையும் தேர்ந்தெடுத்து ஆழமாக தன் கருத்துகளை முன்வைத்தார்.
அவற்றில் சில:

"நான் சென்னை கிறிஸ்டின் காலேஜில் பட்டப்படிப்புக்காக வந்தப் போது என் வீட்டில்
அம்மாவின் கைவளையளை வைத்துதான் படிக்க அனுப்பும் பொருளாதர நிலை இருந்தது.
கட்டாயம் மேற்படிப்பு படித்தே ஆகவேண்டும் என்று என் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தேன். அதுவரை பாவாடை தாவணியில் இருந்த எனக்கு கல்லூரியில் படிக்கப்போவதால் வீட்டில் நான்கு புடவைகளும் ஒரு டிரங்க்பெட்டியும் வாங்கினார்கள். என்னை தாம்பரம் கிறிஸ்டின் காலேஜில் விட அம்மாவும் கூட வந்தாள். கல்லூரி வாசலில் என்னைத் தனியாக விட்டு பிரியும் போது அம்மாவின் குரல் என் காதுகளில் விழுந்தது. "லஷ்மி, என் கனவெல்லாம் நினவாகிவிட்டது'
இன்றும் அந்தக் குரல் .. என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதன்பின் என் புத்தகம் வெளிவந்தது, ஓருநாள் அவளிடம் அவள் சொன்ன வார்த்தைகளைச் சொன்னபோது என் அம்மா என்னிடம் கேட்டாள், 'அப்படியா சொன்னேன், நினைவில்லையே!" என்றாள் . வார்த்தைகளைச் சொன்னவர்கள் மறந்துவிடலாம், ஆனால் கேட்டவர்கள் மறப்பதில்லை".

"ஒரு வெளிநாட்டு எழுத்தாளரிடம் நீங்கள் எப்படிக் கதை எழுதுகிறீர்கள்? என்று கேட்டார்கள்.
அவர் சொன்னார் . 'என் ஜன்னலகளைத் திறந்து வைக்கிறேன், பறவைகளைப் போல கதைகள் உள்ளே நுழைகின்றன' என்றாராம். அவர் அப்படிச் சொன்னதை என்னிடமும் சொல்லி 'உங்களுக்கு எப்படி? ' என்று கேட்டார்கள். நான் சொன்னேன். அவருடைய பதில்,
ஜன்னல், பறவை என்பதெல்லாம் ரொம்பவும் கவித்துவமானதுதான். ஆனால் பெண்களுக்கு
அப்படி அமைவதில்லை என்றேன். மேலும் ஜன்னல் இருப்பதும் அதைத் திறக்கும் அதிகாரமும்
அப்படியே திறந்தாலும் அதில் பறவைகள் உள்நுழைய அனுமதிக்கும் அதிகாரமும்
ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டுமே!" என்றேன்.

"குமுதம் பத்திரிகை ஆபிஸில் காலையில் எல்லோரும் கூடுவார்கள். பகவத்கீதையிலிருந்து
ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு பேசி கலைந்தவுடன் அரைகுறை ஆடையில் இருக்கும் பெண்களின் புகைப்படத்தில் எந்தப் படத்தை எந்தப் பக்கத்தில் போடலாம் என்பதைக் குறித்து பகவத்கீதைப் பற்றிப் பேசியவரே செலக்ட் செய்வார். இங்கே அவர் பேசிய பகவத்கீதைக்கும் குமுதத்திற்கும் சம்ந்தமில்லாமல் போய்விடுகிறது. பத்திரிகை ஊடகத்தில் ஜனரஞ்சகமான பத்திரிகைகளில் சமரசம் செய்துக் கொள்ளாமல் எழுதுவது என்பது ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு பெரிய போராட்டமாகவே இருக்கிறது. சிறுபத்திரிகைகளின் பங்கு பாராட்டுதலுக்குரியது."

'பெண் எழுத்தாளர்கள் என்பதும் இன்றைக்கு எழுதிக்கொண்டிருக்கும் பெண் எழுத்தாளர்களில் தலைசிறந்தவர்,பெண் எழுத்தாளர்களின் ஒருவர் என்பதுமான அறிமுகங்கள், அடையாளங்கள் ஏன்? எவரையாவது ஆண் எழுத்தாளர் என்றோ ஆண் எழுத்தாளர்களில் ஒருவர் என்றோ எங்காவது எவராவது அடையாளப்படுத்தி இருக்கிறார்களா?ஏன்?
"வீட்டின் மூலையில் ஒரு சமையலறை' தொகுப்பைப் பற்றிய அறிமுகத்தில் நான்கு கதைகள் பெண்களைக் குறித்தவை. மீதிக்கதைகள் சோதனைக் கதைகள் என்றார் நண்பர் ஒருவர். ஆமாம் யாருக்குச் சோதனையாக இருக்கிறது அக்கதைகள் என்று நானே அவரிடம் கேட்டேன். ஆண்களைப் பற்றி ஆண்கள் எழுதினாலும் பெண்கள் எழுதினாலும் அவை எல்லாம் வாழ்க்கையைப் பற்றியதாகப் பார்க்கப்படுகிறது.
இச்சமூகத்தில் ஆணே சமுகத்தின் ஒட்டுமொத்த அடையாளமாகப் பார்க்கப்
படுகிறான். ஆண் செய்வதும் ஆண் எழுதுவதும் சமூகத்தின் பொதுமைப் பண்புகளாக அடையாளப்படுத்தப் படுகின்றன."

"பட்டுணர்வு எந்தளவுக்கு மொழியை நெருங்கிறதோ அதற்கேற்ப மொழி மாற்றம் அடைகிறது. நான் அந்திமாலை நாவல் எழுதும் போதிருந்த என் மொழி இன்று என்னிடம் இல்லை. அந்த நாவலில் பேசப்பட்டிருக்கும் ஆண்-பெண் உறவில் உடல் இச்சை தவிர்க்கப்பட்டிருக்கும். உடல் உள்ளம் என்று இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஆண் பெண் உறவில் உடல் இரண்டாம் நிலைக்கு வந்து உள்ளமே பிரதானமாக்கப்பட்டிருக்கும். அந்த நாவலை எழுதிய காலக்கட்டத்தில் எனக்கு காதலைப் பற்றியும் தெரிந்திருக்கவில்லை, ஆண்களைப் பற்றியும் தெரிந்திருக்கவில்லை. உடலைப் பற்றியும் தெரிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். பிற்காலத்தில் என் கதைகளில் என் மொழி மாற்றமடைந்திருப்பதை கணையாழியின் ஆசிரியர்தான் எனக்கு முதன் முதலில் சுட்டிக் காட்டினார்."

"ஆனந்தவிகடனில் ஒரு கதையாசிரியர் முதிர்கன்னியை ஊசிப்போன பண்டம் என்று எழுதி இருந்தார். ஒரு பெண்ணை ஊசிப்போன பண்டம் என்று சொல்கிற பண்பாடு நம் தமிழில்தான் இருக்கிறது. வேறு எங்கும் நான் கேள்விப்படவில்லை."

கலந்துரையாடலின் போது:

தமிழ் லெமுரியா மாத இதழின் ஆசிரியர் திரு.சு. குமணராசன் : நீங்கள் பேசிய ஆண்-பெண் உறவில் பெண்ணை இரண்டாம் நிலைக்குத் தள்ளியதில் பெரும்பங்கு இந்துமதத்திற்குத் தான் இருக்கிறது.
உங்கள் கருத்து என்ன?

அம்பை: நான் உங்கள் கருத்தை முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்கிறேன். இந்து மதக் கடவுள் கதைகள் அனைத்திலும் பெண் இரண்டாம் நிலையில் இருப்பவள். அதாவது சார்ந்திருப்பவள்.
நான் கலந்துக் கொண்ட ஒரு கருத்தரங்கில் symbol and Civilization என்ற தலைப்பில் பேசியவர் இந்துமதக் கடவுளின் புகைப்படங்களை ஆதாரமாக்கிப் பேசினார். விஷ்ணுவின் காலடியில் உட்கார்ந்து லட்சுமி கால்களை அமுக்கி தடவி விட்டுக் கொண்டிருப்பாள். அதற்கு அவர் சொன்னக் காரணம் லட்சுமி அப்படி தடவி விடுவதனால்தான் விஷ்ணுவுக்கு காக்கும் சக்தி நிலைத்திருக்கிறது, லட்சுமியை அவர் சக்தியின் ஊக்கமாக இருக்கிறாள் என்றார். நான் கேட்கிறேன்,காலமெல்லாம் விஷ்ணுவின் காலைத் தடவிக் கொண்டிருக்கும் லட்சுமி எப்போதாவது தன் காலையும் தொட்டு தடவிக் கொண்டால் நன்றாக இருக்குமே, அவளுக்கும் ஊக்கசக்தி கிடைக்குமே என்று.
இந்துமதம் ஆண்-பெண் சம உரிமையை மட்டும் எதிர்க்கவில்லை. அதுதான் இந்தியாவின்
சாதியத்தையும் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. (சபாஷ் அம்பை! கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது)

*பெண் இயற்கையாகவே பலகீனமான்வள்,
*பெண்ணுக்கு நாங்கள் உரிமைகளைக் கொடுத்திருக்கிறோம்,
*ஆண் செய்வதை எல்லாம் பெண் செய்ய முடியாது
*பெண்கள் இப்படி பேச ஆரம்பித்தப் பிறகுதான் குடும்ப அமைப்பு உடைய ஆரம்பித்துவிட்டது.
மணமுறிவுகள் அதிகமாகிவிட்டன, குடும்பத்தைக் கவனிக்கப் பிறந்தவள் பெண்...
இப்படியாகப் பல்வேறு கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக ..

அவர்கள் கேள்விகள் அனைத்துக்கும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டே வந்தார் அம்பை.

பெண்ணுக்கு உரிமைகளைக் கொடுத்திருப்பதாகச் சொல்கின்றீர்களே, நீங்கள் கொடுப்பதற்கு
உரிமைகள் என்ன கடையில் வாங்கிக்கொடுக்கும் பொருளா? யாரும் உரிமைகளைக் கொடுக்க
வேண்டியதில்லை. பெண் அவளுக்கான உரிமைகளை அவளே எடுத்துக் கொள்கிறாள்.

ஆண் குடித்துவிட்டு வந்தால் உடையாதக் குடும்பம், ஆண் பரத்தையிடம் போய்விட்டு வந்தால் உடையாதக் குடும்பம், பெண்ணுக்கு சுதந்திரம் கொடுத்தால்/ பெண்ணுக்கு சுதந்திரம் கிடைத்தால் மட்டும் டொப்புனு உடைந்துவிடுமா என்ன? உடைவதற்கு அது என்ன மண்பாண்டமா?

விழித்தெழு இயக்கத்தின் ஸ்ரீதர் ஈழம் குறித்தும் அங்குள்ள பெண்கள் நிலைக் குறித்தும் கேட்ட
கேள்விக்குப் பதில் சொல்லும் போது லீனா மணிமேகலையின் செங்கடல்
படத்திற்கு இந்திய அரசு அனுமதி மறுத்திருப்பதை வன்மையாகக் கண்டித்தார். செங்கடல்
படத்தை நான் பார்த்தேன். சிங்கள இலங்கை அரசுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்கிறார்.,லீனா.
அது எப்படி இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்பது தான் புரியவில்லை.

அண்மையில் காலச்சுவட்டில் அருந்ததிராய் குறித்து எழுதியிருக்கும் கட்டுரைக் குறித்த
கேள்வியை எழுப்பினார் எழுத்தாளர் தமிழ்நேசன். 1992 , பாபர் மசூதி இடிப்பு, அதன் பின்
தொடர்ந்து இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகள், அதிலும் குறிப்பாக மிகவும் அதிகமாக்ப்
பாதிக்கப்பட்ட மும்பை வாழ் மக்கள்.. இந்த வரலாறு எதையும் அந்தக் காலக்கட்டத்தில்
குழந்தைகளாக இருந்தவர்களும் சரி, அதன் பின் பிறந்து வளர்ந்தவர்களும் சரி,
சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இந்தப் பிரச்சனைக்கு எதற்காக இத்தனை
ஆர்ப்பாட்டம், போலீஸ் பாதுகாப்பு, பதட்டம்..? அந்த இடத்தில் கழிவறைக் கட்டுங்களேன்
என்று அவர்களால் சொல்ல முடிகிறது ( இதுவும் நல்ல ஐடியா தான் ! அப்புறம் கழிவறைகளுக்கு யார் பெயரை வைப்பது என்று பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது!!!). இக்கட்டுரை உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்டது என்றும் தெளிவுக்காக மீண்டும் வாசிக்கும்படியும் அம்பை கேட்டுக்கொண்டார்.

அம்பை மும்பையில் தமிழர்களின் அமைப்பு சார்ந்த எந்த பொது நிகழ்விலும் இதுவரைக்
கலந்துக் கொண்டதில்லை. இங்கிருக்கும் தமிழ்ச்சங்கங்கள் நடத்தும் பட்டிமன்றங்கள் அம்பைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதை அவரே ஒப்புக்கொண்டார். அந்த வகையில் இந்நிகழ்வு மிகவும் குறிப்பிடத்தக்கது என்பதுடன் அம்பை மனம் விட்டு பேசியதும் மாற்றுக்கருத்துகளை அமைதியாக கேட்டு ஆணித்தரமாக தன் விளக்கங்களை வைத்ததும் கூட்டத்தில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் ஓர் இனிய அனுபவமாக அமைந்தது. இதற்குத் தளம் அமைத்துக் கொடுத்த சிந்தனையாளர் சங்கம அமைப்பின் ராஜாவாயிஸ், உதவியாக இருந்த கராத்தே முருகன், முகவைத் திருநாதன் அனைவருக்கும் நன்றி.

Wednesday, January 26, 2011

அம்மாவின் காதலன்(ர்)



காதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன்
என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா? இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்
என்று ர் விகுதிப் போட்டு மரியாதையைத் தெரிவிக்கலாமா என்று இரண்டு நாட்கள்
யோசித்துப் பார்த்துவிட்டு வாசிப்பவர்கள் சாய்ஸ்க்கு ஏற்றபடி இருக்கட்டும் என்று
ஒருவழியாக முடிவுக்கு வருவதற்குள் ரொம்பவும் தான் நான் அவஸ்தைப் பட்டுவிட்டேன்.

அண்ணனின் காதலி பற்றி நிறைய எழுதலாம். தம்பிகளின் காதலிகள் குறித்தும்
எழுதுவதற்கு கைவசம் நிறைய உண்மை நிகழ்வுகளே இருக்கின்றன. தாத்தாவின்
காதலியர் குறித்து கி.ராவின் ரேஞ்சுக்கு எழுதுவதற்கு விஷயங்கள் உண்டு.
அதிலும் என்னுடைய தாத்தாக்கள் கொழும்பு, பர்மா, கராச்சி என்று சுற்றி
அலைந்திருக்கிறார்கள். அடா பொழைப்புத்தேடித் தாங்க!
போகிற இடத்தில் எல்லாம் அவரவர் தகுதிக்கு ஏற்ப காதலியர் கிடைத்திருப்பார்கள்.
எப்படியோ அந்த வகையில் இந்தப் பிரதேசங்களில் எல்லாம் எனக்கு மரபணு சார்ந்த
ரத்த உறவுகள் இருக்கிறார்களாக்கும். இதில் எனக்குப் பெருமைதான்.
அக்காவின் காதலர் குறித்து தெரிந்தாலும் எழுதினால் குழப்பம் வரும்.
அதனால் அவர்களைப் பற்றி நாம் எழுதாமல் இருப்பதே உத்தமம்.

ஆனால் இந்தக் காதலர் கதைகளில் எல்லாம் இல்லாத ஒரு நெகிழ்வும்
என்னவென்று சொல்ல முடியாத ஓர் உணர்வும் அம்மாவின் காதல் கதையை
எழுதும் போது மட்டும் ஏன் ஏற்படுகிறது?
அம்மாவுக்கும் காதல் இருந்திருக்கும் என்பதும் அம்மாவும் அப்பாவைத் திருமணம்
செய்வதற்கு முன் யாரையாவது காதலித்திருக்க வாய்ப்பிருக்கிறது என்பதும்
ஒத்துக் கொள்ளக்கூடியது தான் என்றாலும் மனசு இந்தச் செய்தியைக் கேட்டவுடன்
திடுக்கிட்டுத் தான் போனது.
அம்மானா இப்படித்தான் இருக்கனும்னு யாரோ என் மனசில் மந்திரிச்சி போட்டிருக்கிறார்கள்.
அதிலிருந்து மாறாக இருக்கும் எதுவும் எனக்கு என்
அம்மாவைப் பற்றியதாக இருப்பது முதலில் அதிர்ச்சியாகவும் அதன் பின்
சங்கடமாகவும் இருக்கிறது.

சாதாரணமாக வீட்டில் நடந்த அம்மா அப்பா சண்டைகளுக்கும் அம்மாவின் காதலுக்கும்
எதாவது தொடர்பு இருந்திருக்குமோ என்று தேவையிலலாமல் ஃப்லஷ் பேக்
செய்து அந்த உத்தியும் கைகொடுக்காமல் கதையை நடுவில் நிறுத்திவிட்டு
நிகழ்காலத்தில் மவுனமாக கரைந்து போகிறது வாழ்க்கை.

ஆரம்பத்தில் அம்மா மீது வெறுப்பு வந்தது உண்மைதான். அம்மா அப்பாவைத்
திருமணம் செய்வதற்கு முன் வேறு ஒருவரைக் காதலித்திருந்தாள் என்ற
உண்மை அம்மாவின் கற்புக்கு ஏற்பட்ட இழுக்கு என்று பழைய காலத்து
ப்ளாக் அண்ட் வொய்ட் சினிமா காதல் ரேஞ்சில் யோசித்தேனோ என்னவோ.
ஆனால் அந்தக் கோபம் வெகு சீக்கிரத்தில் பரிதாபமாக மாறிப்போனது.
அம்மாவைப் பற்றி இந்தச் செய்தியைச் சொன்னது அம்மாவின் சித்தப்பா
மனைவி. அவளுக்கு எப்போதுமே அம்மாவையும் அம்மாவின் தங்கைகளையும்
பற்றி இப்படி எதாவது கதைகள் கட்டி விடுவதும் அதைச் சந்தர்ப்பம் கிடைக்கும்
போதெல்லாம் யாரிடமாவது சொல்வதும் வழக்கம் என்று அம்மாவின் கடைசித் தங்கை
அதாவது எங்கள் சின்ன சித்தி சொன்னாள். அவள் சொன்னால் சரியாகத் தான்
இருக்கும். சித்தி இதைச் சொன்னதும் அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டேன்.
ஏனோ அழுகை அழுகையா வந்தது. சித்தி 'என்னடி இது, இதுக்குப் போயி
மனசைக் குழுப்பிட்டிருந்தியானு' சொல்லிட்டு பாசத்துடன் முதுகில் தடவிக்
கொடுத்தாள்.
'கட்டையிலே போறவா.. சுடுகாடு போறவரைக்கும் அவப் புத்தி அவளை விட்டுப்
போகாது' என்று தன் சித்தப்பன் பொண்டாட்டியை வாய்க்கு வந்தப் படி
திட்டித் தீர்த்தாள். சித்தி எங்க அம்மாக்கூடப் பொறந்தவர்களிலேயே கொஞ்சம்
அதிகம் படித்தவள். அந்தக் காலத்திலேயே எல்.ஐ.சியில் வேலைப் பார்த்தவள்.
அவள் இந்த ரேஞ்சில் கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனைச் செய்ததை
நான் அன்றுதான் பார்த்திருக்கிறேன்.
அப்போதைக்குச் சித்தியின் வார்த்தைகள் ஆறுதலாக இருந்தது.
அம்மாவைப் பற்றிய இந்தச் செய்தியை நான் யாரிடமும் சொல்லவும்
விரும்பவில்லை.

ஒருநாள் மாமியாருக்கும் நாத்தனாருக்கும் வாய்ச்சண்டை.
சண்டைக்கான காரணம் என்னவென்று பார்த்தால்
'நீதானே உன் பிறந்த வூட்டு சொந்தம் விட்டுப் போயிடக் கூடாதுனு இந்த
கரிகெட்ட மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுத்த..
என்னைக் கீழுர்லே கேட்டாவா,
நீ என்ன சொன்னே
கீழுர்க்காரப் பயலுவ அந்தக் காலத்திலே நம்ம தாத்தாக்கிட்டே கைநீட்டி
நின்னவுனுக.. இப்போ என்னவோ நாலு எழுத்துப் படிச்சிட்டோம்னு
நாலு காசு வந்தவுடனே நம்ம வாசலுக்கு வந்து பொண்ணு கேட்க
வந்துட்டானுவ.. அடி செருப்பாலேன...'

'ஆமாம் அந்தச் சாதிக்கெட்டப் பயலுவளுக்கு உன்னைக் கெட்டிக் கொடுத்திருக்கனும்..
அப்போ தெரிஞ்சிருக்கும்..'

'உன்னோட இந்தப் பேச்சும் திமிரும் தான் என் குடியிலே மண்ணை அள்ளிப்
போட்டிச்சி.. என்னைக் கேட்டுவந்தவக இன்னைக்கு மாடிப் போட்டு வீடு கட்டி
இன்னிக்கு வரைக்கும் துபாயிலா இருக்காம். பாத்துக்கா.
நீ கட்டிவச்ச மாப்பிள்ளை மாதிரி ஊர் மேஞ்சிட்டு இருக்கலே'

'ஏ தாயி.. என்ன பேச்சு இது.. உன் பிள்ளை சமஞ்சப் பொறவும்
அம்மைக்கிட்ட வந்து அவனுக்குக் கட்டிக் கொடுத்த என்ன
இவனுக்குக் கட்டிக் கொடுத்த என்னனு பேசிக்கிட்டு'
பக்கத்துவீட்டு வள்ளியம்மைப் பாட்டி அதட்டினாள்.

'நீ சும்மா கிடக்க மாட்டே கெளவி.. அந்தக் காலத்திலே மலையாளத்துக்கு
பொண்ணுக் கெட்டிக் கொடுக்காதே, மலையாளத்துக் காரனுவ மாயமந்திரம்
தெரிஞ்சவனுகனு .. தோவாளை மாப்பிள்ளைக் கேட்டு வந்தப்போ
எங்க அம்மைக்குச் சொல்லிக் கொடுத்து கெடுத்தவ நீதானே.
எனக்கு வர்ற வெளத்துலே உன்னைப் பொறவு ஏதாவது சொல்லிப்பிடுவேன்.
பேசாமா உன் சூத்தைப் பொத்திக்கிட்டுப் போ.."
மாமியார் சாகிற வரை நாத்தனார் இதே கதையைப் பல்வேறு வசனங்களில்
சொல்லிக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன்.
ஆரம்பத்தில் இவர்கள் இருவரின் சண்டையும் எனக்கு கலக்கல் காமெடி மாதிரி
இருக்கும். ஆனால் காலம் செல்ல செல்ல நாத்தனாரின் புலம்பல் பயம்
கொடுத்தது.

என் அம்மா இப்படி எல்லாம் கிடையாது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை
வரும் போதெல்லாம் அம்மாவின் சத்தம் கேட்டதே கிடையாது. அப்பாதான்
வாயாலும் கையாலும் கொடுப்பார்., பிறகு அவர் ஓய்ந்துப் போய் நிறுத்திக்
கொள்வார். அம்மா அப்பா சொல்வதற்கெல்லாம் எதிர்த்து பேசி இருந்தால்
ஒருவேளை அப்பா அம்மாவை இவ்வளவு அடித்து துன்புறுத்தி இருக்க மாட்டாரோ
அப்பா அடிக்க அடிக்க கண்ணீர் சிந்தாமல் ஒரு சத்தம் வெளியில் காட்டாமல்
அப்படியே மனசுக்குள் போட்டு அரைத்து மென்று துப்பிக் கொண்டிருந்த அவள்
குணம் தான் அப்பாவுக்கு கோபத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.
அம்மா ரொம்பவும் அழுத்தமானவளாக இருந்திருக்கிறாள் என்று இப்போது
நினைக்கத் தோன்றுகிறது.

உறவினர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று எத்தனை எத்தனையோ
மனிதர்களின் காதலைப் பற்றி அறிந்ததெல்லாம் அந்தந்த நேரத்தில் பயணத்தில் சந்தித்து
கைகுலுக்கி மறந்துவிடும் மனசு போல இருந்தது ஆனால் அம்மாதான் மறக்க வேண்டும்
என்று நினைத்தாலும் அடிக்கடி நினைவில் வந்து தொந்தரவு செய்து கொண்டிருந்தாள்.

அம்மா காதலித்தது யாரை? அவர் இப்போது உயிருடன் இருக்கிறாரா இல்லையா?
எந்த ஊரில் இருக்க கூடும்? யாரைக் கேட்டால் தெரிய வரும் என்று மனசு தவித்தது.
அம்மா உயிருடன் இருக்கும்போதே தெரிந்திருந்தால் அம்மாவிடமே கேட்டிருக்கலாமோ?
அப்படி அம்மாவிடம் கேட்டிருக்க முடியுமா? கேட்டிருந்தால் அம்மா என்ன சொல்லி இருப்பாள்?
வழக்கம் போல மவுனமாக இருந்திருப்பாளா? இல்லை, போடி, உன் வேலையைப் பாத்துக்கிட்டு
என்று பொய்க்கோபம் காட்டி சமாளித்திருப்பாளா?
என்னுடைய அம்மாவைப் பற்றி எனக்கே தீர்மானமாக எதுவும் சொல்ல முடியவில்லை.
அப்படி இருக்கும் போது மற்றவர்கள் என்ன சொல்லிவிடுவார்கள்?

வள்ளி முருகனைக் காதலித்தாளா ஆனைமுகனைக் காதலித்தாளா..
இது என்னடா புதுக்கதை என்று நினைக்கிறீர்களா?
புதுக்கதை எல்லாம் ஒன்றுமில்லை.. வள்ளி காட்டில் பிறந்து வளர்ந்தப் பெண்.
அவள் ஒன்றும் ஆனையைக் கண்டு பயந்து அலறி அடித்து முருகன்
பிடியில் விழுந்திருக்க மாட்டாள்.. அவள் ஆனையை நன்கு அறிந்தவள்.
பிறகு வேறு என்னவாக இருந்திருக்க முடியும்?
ஆனையுடன் பிறந்து வளர்ந்தவள் ஆனைமுகனைத் தான் காதலித்திருக்க
வேண்டும். ஆனைமுகன் ஆனை வடிவில் வந்து அவளைத் துரத்துகிறான்.
அங்கே வந்த முருகன் வள்ளியின் அழகில் மயங்கி
அவளைக் கட்டிப்பிடிக்கிறான். ஆனைமுகன் ஆனைவடிவில் வந்து விரட்டியதும்
அவனே குறிஞ்சி அழகனாக வந்து அவளைக் கட்டிப்பிடித்ததும் எல்லாம் ஆனைமுகனின்
செயல் என்றே அந்தப் பெண்ணுள்ளம் நினைக்கிறது.
களவு மணம் முடிந்து கற்பு மணத்தில் வாழ்க்கை ஆரம்பிக்கும் போதுதான்
வள்ளிக்குத் தெரிய வருகிறது ... தன்னைக் களவு மணம் செய்தவனின்
அண்ணன் தான் ஆனைமுகன் என்பதும்..
முருகனுக்கோ வள்ளியின் மனசில் இடம் பிடித்தவன் அண்ணன் ஆனைமுகன்
என்பதும் அந்த நினைப்பில் தான் அவள் தன்னைக் காதலித்தாள் என்பதும்
தெரியவந்ததும் முருகனின் ஈகோவில் பெரிய கீறலை ஏற்படுத்தி விடுகிறது.
கோபித்துக் கொண்டு ஆண்டியின் கோலத்துடன் பழநி மலையில் ஏறி
உட்கார்ந்து கொள்கிறார்.
சிவனும் பார்வதியும் போய் அழைத்தும் வரவில்லை.
இதை எல்லாம் மவுனமாக பார்த்துக் கொண்டிருந்த ஆனைமுகன்
வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியில் வந்து குளத்தங்கரையில்
உட்கார்ந்து கொள்கிறார். வள்ளியை நினைத்த மனதால் வேறு எந்தப்
பெண்ணையும் ஆனைமுகனால் நினைத்துப் பார்க்க கூட முடியவில்லை.
இந்த முக்கோணக் காதல் கதையால் சிவபெருமான் குடும்பத்தின் மானம்
மரியாதைக்கு இழுக்கு வந்துவிட வாய்ப்பிருக்கிறது என்பதால்
சுட்டப் பழம், சுடாதப் பழம் என்றும் ஞானக்கனியை அடைவதற்காக
உலகம் சுற்றிய வாலிபன் கதையும் எழுதப்பட்டிருக்கலாம்.

இந்தக் கதையை வலைப்பூவில் வாசித்துவிட்டு எனக்கு வேண்டியவர்கள்
சிலர் கோபித்துக் கொண்டார்கள். முருகன் தமிழ்க் கடவுள், தமிழ் மண்ணின்
அரசன், வள்ளியோ அசல் தமிழச்சி.. அவர்களைப் பற்றி எல்லாம் இப்படிக் கதைகள்
எழுதுவது தமிழணர்வை அழிக்க நாமே பாதைப் போட்டு கொடுத்த மாதிரி
இருக்கும் என்று வருத்தப் பட்டுக்கொண்டார்கள். சிலர் ஒரு படி மேலே போய்
நான் இந்த மாதிரி தமிழ்ப் பெண் இமேஜை சிதைத்திருக்க கூடாது என்றார்கள்.

இவர்கள் தான் இப்படி என்றால் ஆனைமுகன் என்றால் யார் என்று நினைத்தீர்கள்?
நம் புத்தர் பகவானாக்கும். அரச மரம் புத்தருடன் தொடர்புடையது.
இப்படியாக கோபித்துக் கொண்டார்கள் என் புத்த சமாஜ் நண்பர்கள்.
இதெல்லாம் புனைவுகள் தானே என்று அவர்களுக்குப் பதில் சொல்லவும்
இப்படியாக புனைவுகளின் ஊடாகவே நம் தமிழர் வரலாறும் கலாச்சாரமும்
சீரழிக்கப்பட்டது என்று ஆதங்கப்பட்டார் மும்பையில் வசிக்கும் தோழி புதியமாதவி.
வள்ளி என்ற ஒரு பெண்ணின் காதல் கதையை அந்தக் கதையின் திருப்பங்களை
ஒரு மிகப்பெரிய நாவலாக்க நினைத்த முயற்சி முளைவிடும் முன்பே கருகிப்போனது.

அம்மாவின் காதல் கதையை எழுதும் போதும் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது.
அதுவும் அந்த திருப்பம் விசா வாங்கி இந்திய எல்லைகளைத் தாண்டி
விசவரூபம் எடுத்தது.

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு சொகுசு பேருந்தில் பயணம். போகும்
வழியில் பத்துக்கேவ் முருகன் தரிசனம். கம்பீரமாக வேலுடன் முருகன்
நுழைவாயிலிலேயே வந்து நின்று நம்மை வரவேற்கும் காட்சி.
கூட வந்தப் பயணிகள், அதிலும் குறிப்பாக தழிழ்நாட்டிலிருந்து சுற்றிப்பார்க்க
வந்தவர்கள்...
'அடேய்.. நம்ம்ம இளைய தளபதி ஒரு பாட்டுக்கு ஆடினது இந்த ஸ்பாட்லே தான்,
என்று மெய்மறந்து சொல்லிச்சொல்லி ஆடாதக் குறையாக பல்வேறு போஸ்களில்
போட்டோ எடுத்து தள்ளினார்கள். அவர்கள் சொல்ல சொல்ல எனக்கும் கூட
ஒரு சில சினிமாக்களும் பாடல் காட்சிகளும் நினைவுக்கு வந்து கொஞ்சமாக
அருள் எட்டிப் பார்த்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

நல்ல கொளுத்தும் வெயிலில் தாகம் வாட்டியது. கோவில் வாசலில் இருந்தக்
கடைக்குள் நுழைந்தோம். சின்னக் கடை தான் என்றாலும் கச்சிதமாக
அளவான இருக்கைகளுடன் எல்லா வகையான குளிர்ப்பான வசதிகளுடன்
.. வருகிற சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வருவதும் போவதுமாக..
கடை எப்போதும் பரபரப்பான வியாபாரத்தில்.
கடையில் முருகன் போட்டோவுக்குப் பக்கத்தில் இன்னொரு போட்டோ
சின்னதாக மின் இணைப்புள்ள குத்துவிளக்கு வெளிச்சத்தில்.
புதிதாகவும் வித்தியாசமாகவும் பார்க்க கிடைத்த எல்லாவற்றையும்
க்ளிக் செய்யும் என் காமிரா அந்தக் காட்சியையும் மறக்காமல் க்ளிக்
செய்து கொண்டது.

சிங்கப்பூரில் அடிக்கடி அந்தக் காட்சி வந்து கனவில் தொந்தரவு செய்ய ஆரம்பித்தது.
பாங்காக் போய்த் திரும்பும் வரை அந்தக் காட்சி பல்வேறு கோணங்களில்..
டூர் முடிந்து ஊருக்கு வந்தவுடன் நல்ல ஓர் உளவியல் மருத்துவரை அணுகி
இந்தக் கனவு தொல்லையிலிருந்து விடுபட வேண்டும் என்று தீர்மானித்துக்
கொண்டேன்.
மருத்துவரிடம் போய் கேட்டால் மனுஷன் நம்மைக் கேள்விக் கேட்டே
பயமுறுத்திவிட்டார். மொத்தத்தில் வாயில் நுழையாத வார்த்தைகளை எல்லாம்
சொல்லி அவர் படித்ததை நினைவு படுத்திக் கொண்டதாகவே எனக்குப் பட்டது.

வேறு யாரிடமும் என் குழப்பத்தை வெளிப்படையாக சொல்லவும் முடியாமல்
நாளுக்கு நாள் தவிப்பு அதிகமானது.. சித்திக்கு மட்டும் தான் அம்மாவின் கதை
தெரியும். அவளிடம் தான் மீண்டும் போக வேண்டும்.
அந்த நாளும் வந்தது. மெதுவாக சித்தியின் அருகில் போய் நான் அம்மாவின்
இளம்பிராயத்து போட்டோவை மலேசியா முருகன் கோவிலடியிலிருக்கும்
கடையில் பார்த்ததாகச் சொல்லியதும் அவள் சத்தமாக சிரித்தாள்.

உனக்கு என்னாச்சும்மா..? நீ இன்னும் எங்க சித்திக்காரி கட்டிவிட்ட
கதைய்லகத்திலிருந்து வெளியில் வரலியா? அரண்டவன் கண்ணுக்கு
இருண்டதெல்லாம் பேய்னு சொல்ற கணக்கா இருக்கு நீ சொல்றது..


இல்லை சித்தி அந்தப் போட்டோ அம்மாக்குள்ளதுதான்.
நான் கூட அதே மாதிரி போட்டோவை பாட்டி இருக்கும் போது
ஊர்லே பாத்திருக்கேன். எனக்கு நல்லா நினைவு இருக்கு.
வேணும்னா நீயே பாரேன்.. நான் மலேசியாவில் அந்தக் கடையில்
போட்டோ எடுத்திட்டு வந்திருக்கேன்..

சொல்லிவிட்டு என் காமிராவில் இருக்கும் ஒவ்வொரு படங்களாக காட்ட
ஆரம்பித்தேன். அந்தக் கடை வந்தும் ஸூம் போட்டு காட்டினேன்..

என்ன தெரியுது.. விளக்கு எரியறது மட்டும் தான் தெரியுது..
நீயே பாரு..

சித்தி சொல்லவும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
காமிராவைப் பார்த்தேன். அந்த மின் இணைப்பில் நட்சத்திரமாக
வெளிச்சம் தெரிந்தது. அம்மாவின் படத்தை மட்டும் காணவில்லை...
எனக்குள் இனம் புரியாத அச்சம் ஏற்பட்டது.
அந்தக் குத்துவிளக்கு அம்மாவின் புகைப்படம் முன்னால் தான்
எரிந்து கொண்டிருந்தது. நன்றாக நினைவிருக்கிறது.
நான் என் காமிராவில் எடுத்திருந்த மற்ற காட்சிகள் எல்லாமே
ஒரு இம்மிப் பிசகாமல் பதிவாகி இருக்கிறது.
இது மட்டும் எப்படி..?

சித்தி என்னையே பார்த்தாள். நீண்ட பெருமூச்சுடன் என் கைகளைப்
பிடித்துக் கொண்டாள்,

நான் எவ்வளவோ சொல்லிட்டேன் நீ நம்ப மாட்டேங்க..
இப்போ ஒன்னு கேட்கிறேன்.. அம்மாவின் கதை நீ கேள்விப்பட்ட
மாதிரிதானு வச்சிக்கிடுவோம்.. அதைத் தெரிஞ்சி உனக்கு இப்போ
என்னவாகனும் சொல்லு..
எதுக்கும்மா உன் மனசைப் போட்டு தேவையில்லாம குழப்பிக்கிறே?
என்று கரிசனத்துடன் சொன்னாள்.

அவள் கேள்வி எனக்குச் சரியாகவே பட்டது.
அமைதியாக வீட்டுக்கு வந்தப் பின் மனம் வேறொரு மரத்தில்
ஏறிக்கொண்டது.
அது எப்படி.. அம்மாவின் புகைப்படம்... என் கண்ணால் பார்த்தது..
காமிராவில் விழவில்லை!
இதுதான் ஆவிகளின் விளையாட்டோ..
ஆவிகள் உலவுவது உண்மையோ?
நிறைய ஆவிகள் குறித்தப் புத்தகங்களை வாங்கி வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
கனவில் இப்போதும் அம்மா வரத்தான் செய்கிறாள்.
ஆனால் தன் கதையைப் பற்றி வாய்த்திறப்பதில்லை.
சில சமயங்களில் வள்ளி கனவில் வருகிறாள்..
முருகனுடன் மட்டுமல்ல எப்போதாவது ஆனைமுகனுடனும் வந்து
தரிசனம் தருகிறாள்...

-----------------------------

nanRi - yukamaayini jan 2011

Monday, December 13, 2010

செம்பருத்தி




செம்பரிதி குளத்தில் நீராடிய வதனம்
பார்த்தாலே போதையூட்டும் கவர்ச்சி
சிவந்த இதழ்களைத் தொடும்போதெல்லாம்
வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பு.
ஐந்துவிரல்களாய் இணைந்த
ஐம்பூதங்கள்
இப்படி எத்தனையோ இருந்தாலும்
நாங்கள் சூடுவதில்லை
செம்பருத்தி பூக்களை.
அச்சமாக இருக்கிறது
ஐவருடன் வாழ்ந்த
அவளறியாதக் காமத்துடன்
சூல்முடியும் சூலகமும் விரித்து
சூரியக்குஞ்சுகளைப்
பிரசவிக்கத் துடிக்கும்
அவளைப் பார்த்து.

----------------------------

Friday, December 10, 2010

மீன் தொட்டி

அழகான வளவளப்பான கரைகளுடன்
எனக்காக நீ எழுப்பிய
புதிய சமுத்திரம்.
அலைகளோ வலைகளோ
என்னை
விலைப் பேசிவிட முடியாத
புதிய சாம்ராஜ்யம்.

எப்போதும் இதமான வெளிச்சம்
சுகமான காற்றுக் குமிழிகள்
தேடி அலைய வேண்டியதில்லை
எனக்கான என் உணவை.
வேண்டும் போதெல்லாம்
விதம் விதமான
சுவைகளுடன்
விருந்துகளின் ஆரவாரம்.
பாடுகின்றேன்
கனவுகளுடன் ஆடுகின்றேன்
கண்ணாடிக் குடுவையின்
திரவங்களைப் பருகிய
போதையில்
தள்ளாடுகிறது
என் பருவ மேனி.








காமம் உடைத்தப்
புதுவெள்ளமாய்
அலைகளில் கலக்கும் நதிகளை
நான் மறந்துவிடுவது
உன் சமுத்திரத்தை மட்டுமல்ல
உன்னையும் காக்கும் அறம் என நம்புகிறாய்
அதனாலேயே
உன் சமுத்திரத்தில்
அடிக்கடி
தண்ணீரை மாற்றுவதை மட்டும்
நீ மறப்பதே இல்லை...

கொஞ்சம் கொஞ்சமாய்
பழையக் கடல் ,நதி,
பவளப்பாறை
சுறாவின் வேட்டை ,சுனாமி
எல்லாமே
உன் புதுவெள்ளத்தில் கரைந்து
காணாமல் போய்விடுகின்றன..
ஆனால்
மழைத்துளிகள்
செதில்களை நனைத்து
முத்தமிட்ட இரவுகள் மட்டும்
இன்னும் ஈரமாய்....

Sunday, November 14, 2010

ஓபாம நமஹ!

ஒபாமா போற்றி போற்றி

உலகளந்தாய் போற்றி போற்றி

உன்னையே போற்றி போற்றி

உன் டாலரைப் போற்றி போற்றி

ஐ டியைப் போற்றி போற்றி

உன் ஐடியாவைப் போற்றி போற்றி

வாழ்க ஒபாமா..

வாழ்க அமெரிக்கா

ஓம் சக்தி ஒபாமாவே சக்தி

போற்றி போற்றி

ஓபாமா போற்றி..





ஒரு வழியாக எங்கள் ஒபாமா நமஹ! மந்திரங்களை எல்லாம் முடிந்து மும்பை மட்டுமல்ல இந்தியாவே நார்மல் நிலைமைக்கு வந்திருக்கிறது.


ஒபாமாவின் வருகையை ஒட்டி என்னவெல்லாம் நடந்தது என்பதை ஒளிவு மறைவின்றி நம்ம ஊரு பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் காட்டி கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்வதற்குள் எதிர்பார்த்த மராத்திய மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? என்ற ஆருடங்களும் பலப்பரீட்சைகளும் ஆரம்பித்துவிட்டன.


இருக்கட்டும்.. ஓபாமா வருகையை ஒட்டி நடந்த மிக முக்கியமான செய்தி.. வழியில் இருந்த தென்னைமரங்களில் காய்த்து தொங்கிக் கொண்டிருந்த தேங்காய்களை எல்லாம் பறித்துவிட்டார்களாம்.


மற்றபடி எதுவும் முக்கியமானதாக தெரியவில்லை. ஒரு கம்பேனியின் விற்பனை அதிகாரி தன் கம்பேனி பொருட்களை அதிகம் விற்கவும் அதற்கான சந்தை வாய்ப்புள்ள ஊரில் எப்படி எல்லாம் இனிமையாக நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறார். இந்தியா ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினராக அமெரிக்க ஒத்துழைக்கும் என்று ஓபாமா சொல்லி வாய்மூடுவதற்குள் பாகிஸ்தானின் குரல் ஒலித்தது..

அதுவும் எப்படி..?


"உங்களால் அவ்வளவு எளிதில் ஐ.நா.வில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க விட்டுவிடுவோமா..என்ன? '


என்று மிரட்டும் தொனியில். கூடவே எல்லா சாட்சியங்களையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கும் சீனாவைக் காட்டி.. சீனாவின் வீட்டோ அதிகார சீட்டை இறக்கி உங்களை ஆட்டமிழக்கச் செய்வோம் என்கிறார்கள்..!


அமெரிக்காவால் அவர்களை என்ன செய்து விட முடியும்?

ஒபாமா இந்தியா வருவதற்கு முன் தான் பாகிஸ்தானுக்கு 200 கோடி டாலரைத் தந்தி மணியார்டர் அனுப்பியிருக்கிறார்கள்.


அளவுக்கதிகமாகச் செல்லம் கொடுத்தும் பணம் கொடுத்தும் நம்ம பசங்க கெட்டு குட்டிச்சுவராக்கப்படுவது மாதிரிதான் இதுவும்.

அமெரிக்க அனுப்புகிற பணத்துக்கு என்றைக்காவது கணக்கு கொடுத்திருக்கிறார்களா நம்ம பக்கத்து வீட்டு பாகிஸ்தான் பசங்க. இந்தக் காசை வச்சிக்கிட்டு கஷ்டப்படுகிற வீட்டு ஜனங்களுக்கு ஏதாச்சும் செய்து இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோமா? இந்தப் பணத்தை வைத்துக்கொண்டுதான் அவர்கள் என்னைப் பாரு, என் துப்பாக்கியைப் பாரு, சுட்டுப்பிடுவேன் சுட்டுனு திருடன் போலீஸ் விளையாட்டுக் காட்டிக்கொண்டு அலைகிறார்கள்.


புதியக் கண்டுப்பிடிப்பு :


அவுட்சோர்ஸிங் மூலம் அமெரிக்கர்களுக்கும் வேலைவாய்ப்புண்டு என்ற புதிய பொருளாதரக் கண்டுபிடிப்புக்கு சிங் ஓபாமா பொருளாதர திட்டம் என்ற பெயரிடலாம்.


க்ளைமாக்ஸ்:


இந்தியா யாருடைய வேலை வாய்ப்புகளையும் திருடிக் கொள்வதில்லை என்று நேருக்கு நேராகவே ஒபாமா சாட்சியாக மன்மோகன்சிங் சொன்ன காட்சி


ஸ்டார் அந்தஸ்து:


ஒபாமாவுடனும் அவர் மனைவியுடனும் கலந்துரையாடிய மும்பை மாணவர்கள். அதிலும் குறிப்பாக கை குலுக்கிய மாணவர்களுக்கு மாணவர்கள் வட்டத்தில் ஸ்டார் அந்தஸ்த்து... மேலும் அதிக விவரங்களுக்கு பார்க்க டுவிட்டர், ஃபேஸ்புக் ஆர்க்கூட் ...


எச்சரிக்கை


குடிய்ரசுத்தலைவர் கொடுத்த விருந்து நிகழ்ச்சியில் தமிழகத்தின் அதிகாரமிக்க எம்.பி. கனிமொழியும் கலந்து கொண்டிருக்கிறார். இன்றைய தினத்தந்தியில் போட்டோவுடன் வந்திருக்கும் செய்தி..

கனிமொழி எம்.பி.யுடன் ஓபாமா கலந்துரையாடினார்!


ஓபாமாவின் சின்ன ஆசை


ஓபாமா ,


நீங்கள் வி.டி. ரயில்வே நிலையத்தில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் பலியான பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்த விரும்பியதாகவும் எங்கள் ஊர் முதலமைச்சர் அசோக்சவான் (இரண்டு நாளுக்குள் அப்போதைய முதல்வர் என்று எழுத வேண்டியதாகிவிட்டது!) அதெல்லாம் முடியாது என்று மறுத்துவிட்டதாகவும் அறிந்தேன். உங்கள் வருகையை ஒட்டி இரண்டு நாட்கள் மும்பை ஜனங்களுக்கு விடுமுறை அறிவித்து எல்லா ரயில்களையும் நிறுத்தி வைத்திருந்திருக்கலாம். பாசஞ்சர் டிரெயின்களை வீராரிலும் கல்யாணிலும் நிறுத்தி இருக்கலாம். எங்களைப் போன்றவர்களிடம் ஐடியா கேட்காமல் அசோக்சவான் உங்களுக்கு ந்நோ சொன்னது தப்பு தான்.


சரி விட்டுத் தள்ளுங்கள். அவருக்கு அவருடைய பிரச்சனை. நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்... எங்கள் இளவரசர் ராகுல்காந்தியிடம் சொல்லியிருந்தீர்கள் என்றால் அவருடன் சேர்ந்து நீங்கள் எங்கள் மும்பை டிரெயினில் ஓசியில் பயணம் செய்திருக்கலாம்.!


உங்களால் கற்பனைச் செய்ய முடியாத ஒரு உச்சக்கட்ட விளம்பரம் கிடைத்திருக்கும். அம்ச்சி மும்பை மானுஷ் குஷியாகி உங்கள் கம்பேனி பொருட்களை வாங்கி உங்கள் பொருளாதரச் சரிவைக் கூட நிமிர்த்தி இருக்கலாம்.


இந்த மாதிரியான உங்கள் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள இம்மாதிரியான நிறைய ஐடியாக்கள் எங்கள் மும்பை வாசிகளிடம் நிறைய உண்டு.


எப்படியோ ஓபாமா உங்கள் எளிமையும் உங்கள் மனைவியின் அழகும் எங்கள் மீடியா பிரபலங்களுக்கு மட்டுமல்ல எங்க பொதுசனங்களுக்கும் சில பிம்பங்களை உடைத்திருக்கிறது. அதற்காக உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் உங்கள் வருகைக்கும் நன்றி ஓபாமா..


:

Tuesday, November 9, 2010

அருந்ததிராய் அப்படி என்னதான் சொல்லிவிட்டார்..?




இந்திய இறையாண்மைக்கு எதிராக அருந்ததிராய் காஷ்மீர் பிரச்சனையில்
பேசிவிட்டாராம்! எழுதிவிட்டாராம்! அவர் மீது குற்றம் சுமத்த தன் இபிகோ
கரங்களை எந்திரன் ரேஞ்சில் சுழற்ற தயாராக இருக்கிறது இந்திய அரசு.
அப்படி அவர் என்ன தான் சொல்லிவிட்டார்?
காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா சொல்வது சரியா? பாகிஸ்தான் சொல்வது
சரியா? என்றுதானே இன்றுவரை பட்டிமன்றங்கள் மாறி மாறி நடந்துக் கொண்டு
இருக்கின்றன.
யார் சொல்வது சரி என்பது அல்ல முக்கியம்.
எது சரி என்பது தான் முக்கியம்.
யார் சொல்வது உண்மைக்கு மிகவும் நெருக்கமானது?
யாருடைய பார்வை அந்த மண்ணின் மக்களின் பார்வையை முன்வைக்கிறது?
யார் சரித்திரத்தை தன் கையில் கையில் எடுத்துக் கொண்டு
திரிபு வாதம் செய்வது? இக்கேள்விகளுக்கான பதிலில் காஷ்மீரின்
இன்றைய நிலமைக்கான காரணங்களைக் கண்டடைய முடியும்.

காஷ்மீர் அழகானப் பனிமலைப் பிரதேசம். காஷ்மீரி மக்கள் அதிலும் குறிப்பாக
பெண்கள் ரொமபவும் அழகானவர்கள். காஷ்மீர் மக்களின் நலனுக்காக
இந்திய அரசு தன் படைவீரர்களை இரவும் பகலும் இடைவிடாது நிறுத்தி
காவல் காக்கிறது. நம் இராணுவவீரர்களை காஷ்மீரின் தீவிரவாதிகள்-
அதிலும் குறிப்பாக பாகிஸ்தானில் இராணுவப் பயிற்சிப் பெற்ற தீவிரவாதிகள்
சுட்டுக் கொல்கிறார்கள். காஷ்மீர் மக்களின் நலனுக்காக நம் வீரர்கள் நித்தமும்
செத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தியாதி க்ருத்துகளை நம் ஊடகங்களும்
மணிரத்னம் வகையறா ரோசாக்களும் பொதுமக்களிடம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். அதனால் தான் அருந்ததிராய்
இக்கருத்துகளுக்கு மாறாக உண்மைகளை ஓங்கி ஒலித்தவுடன் அச்சப்படுகிறார்கள்.
அருந்ததிராயை விட அதிகமாகவும் ஆணித்தரமாகவும் இதே கருத்துகளை இன்றும்
பேசியும் எழுதியும் வரும் எழுத்தாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் அவர்கள் அனைவரும் மாநில எல்லைகளைத் தாண்டவில்லை.
அவரவர் மொழியில் எழுதுவதும் ஒரு காரணம். அவர்கள் கருத்துகளை
வெகுஜன ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை.

தெகல்கா பத்திரிகையின் நேர்காணலில் ( நவ 6,2010)தான் சொல்லியதைக் குறித்து
மீண்டும் ஆணித்தரமாக அருந்ததிராய் வலியுறுத்துகிறார்.

"காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி அல்ல என்பதுதான் வரலாற்று உண்மை" என்று நீங்கள் கூறியதுதான் உங்கள் பேச்சில் விவாதத்திற்குள்ளானது.
உங்கள் கருத்தை விரிவாக சொல்ல முடியுமா? என்ற கேள்விக்கு
அருந்ததிராயின் பதில்:
"இந்த வரலாறு எல்லோரும் அறிந்ததே. நான் ஒன்றும் மக்களுக்கு ஆரம்பக்கல்வி
நிலையில் சரித்திரப் பாடம் புகட்டவில்லை ஆனால் சிக்கலான காஷ்மீர் வரலாறு
இன்றைய காஷ்மீர் சிக்கலுக்கும் காரணமில்லையா?
இல்லை என்றால் இந்திய அரசு 7 இலட்சம் இராணுவ வீரர்களை காஷ்மீரில்
ஏன் நிறுத்தி வைத்திருக்கிறது? பேச்சுவார்த்தைக்கு வருபவர்கள் ஏன் ஆஷாத்
காஷ்மீர் எல்லைக்கோட்டை தீர்மானிக்கும் படி சொல்லுகிறார்கள்?
அல்லது ஏன் அந்தப் பகுதியை பிரச்சனைக்குள்ள நிலமாக (disputed territory)
சொல்லுகிறார்கள்?
காஷ்மீர் தெருக்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்த நிஜங்களைக் கண்டு
கொள்ளாமல் எப்போது நாம் ஏன் நம் கண்களை மூடிக் கொள்கிறோம்?"
என்று கேட்டுள்ளார்.

அருந்ததிராய் பிரபலமான எழுத்தாளர். ஆங்கிலத்தில் எழுதுவதாலும் அவருடைய
நாவல் 40 மொழிகளில் மொழியாக்கம் பெற்றதன் மூலம் அவருடைய கருத்துகள்
உலக நாடுகளின் பார்வைக்குள்ளாவதாலும் இந்திய அரசு அவர் சொல்வதைக்
கண்டு அச்சப்படுகிறது. ஆனால் பிரபலமானவர்கள் சொல்வதலாயே
அவர்கள் கூறும் கருத்துகளும் பிரபலமடையும் என்பதெல்லாம் சுடச்சுட
செய்திகளுக்கு அலையும் ஊடகங்களுக்கு வேண்டுமானாலும் தேவைப்படலாம்.
ஆனால் கருத்துகளைச் சீர்த்தூக்கிப் பார்த்து அலசி ஆராய்பவர்களுக்கு
பிரபலங்களின் முத்திரை என்பது இரண்டாம் நிலைதான்.
அருந்ததிராயின் கருத்துகள் உண்மைக்கு மிகவும் நெருக்கமானவை,
வரலாற்று பார்வையில் வெகுஜனங்கள் மறந்துவிட்ட காட்சிகளை
மீண்டும் நினைவூட்டுபவை. இன்னும் சொல்லப்போனால் இந்திய அரசின்
கருத்துகளுக்கு மட்டுமல்ல பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கும் கூட
எதிரானவைதான்.

எரிமலையான பனிமலை
------------------------

காஷ்மீர் ஏன் பற்றி எரிகிறது? அதற்கு நம் இந்திய அரசு சொல்வது போல
பாகிஸ்தான் மட்டும்தான் காரணமா? என்றால் பாகிஸ்தானுக்கு எந்த வகையிலும்
குறையாமல் நம் அரசும் காரணம்தான்.

இந்தியாவுடம் இணைந்த பிற சுயராஜ்ய இணைப்புகளுக்கும் காஷ்மீர் சுயராஜ்ய
இணைப்புக்கும் உள்ள வேற்பாடுகள் முதல் காரணம்.
வரலாற்று நிகழ்வுகளைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்க வைத்திருக்கிறது
அருந்ததிராயின் பேச்சு.

இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும் முன் மவுண்ட்பேட்டன் 03/6/1947 ல்
காஷ்மீர் சென்றார்..
"எக்காரணம் கொண்டும் காஷ்மீரைத் தனிநாடாக அறிவித்து விடுதலை வழங்கும்
எண்ணம் ஆங்கிலேய அரசுக்கு இல்லை" என்பதைத் தெளிவு படுத்தினார்.
தங்கள் விருப்பம் போல் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ தங்கள் ராஜ்யத்தை
இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஆனால் காஷ்மீர்
எந்த முடிவும் எடுக்காமல் ஒரு ஒத்திவைப்பு ஒப்பந்தத்தை (standstill agreement)
இரு நாடுகளுடனும் செய்து கொண்டது. வழக்கம்போல அப்போதே பாகிஸ்தான்
அரசு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டாலும் காஷ்மீருக்கு வழங்கி வந்த
அத்தியாவசிய பொருட்களை நிறுத்திக் கொண்டது. காஷ்மீருக்கு தங்களுடன்
இணைய வேண்டும் என்று பயமுறுத்த ஆரம்பித்தது. 22 அக்டோபர் 1947ல்
பாகிஸ்தான் அதிகாரிகள் சில காஷ்மீர் மக்கள் குழுவுடனும் முஸ்ஃபராபாத்தின் இசுலாமிய அமைப்புகளுடனும் சேர்ந்து காஷ்மீருக்குள் அத்துமீறி
நுழைந்தனர். மகுரா மின்நிலையத்தைக் கைப்பற்றினார்கள். ஸ்ரீநகர் இருட்டில் மூழ்கியது.
இந்தச் சூழலில் தான் காஷ்மீர் ராஜ்யம் இந்திய அரசின் இராணுவ உதவியை நாடியது.
காஷ்மீரின் அரசர் பத்திரமாக ஜம்முவுக்கு அனுப்பப்பட்டார்.

காஷ்மீர் அரசு பிரதிநிதி மகாஜன் 25/10/1947ல் டில்லி வந்தார். இந்திய பிரதமரைச்
சந்தித்து "இன்று மாலைப் பொழுதுக்குள் ஸ்ரீநகரருக்கு இந்திய இராணுவம் அனுப்பப்
பட்டாக வேண்டும். ஸ்ரீநகரைக் காப்பாற்ற எதையும் செய்ய தயாராக இருக்கிறோம்.
நீங்கள் விரும்பும் அரசியல் அதிகாரத்தை செய்து கொள்ளலாம். நீங்கள் மறுத்தால்
நாங்கள் ஜின்னாவிடம் போக வேண்டிவரும்" என்று சொன்னவுடன், ஜின்னாவின்
பெயரைக் கேட்டவுடனேயே எரிச்லடைந்தார் பிரதமர் நேரு. கோபத்தில் மகாஜனை
வெளியேற்ற முனைந்தார். அப்போது இவர்கள் இருவரின் உரையாடலைக் கேட்ட
மூன்றாம் நபர் காஷ்மீரின் ஷேக் அப்துல்லா நேருவுக்கு அனுப்பிய துண்டுச்சீட்டு
காஷ்மீரின் தலைவிதியை மாற்றியது. நேரு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான
ஷேக் அப்துல்லா காஷ்மீரின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற இந்த வாய்ப்பை
பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
இதன் தொடர்ச்சியாகத்தான் இன்றுவரை லண்டனில் வாழ்ந்து கொண்டு ஷேக் அப்துல்லாவின் குடும்பமே காஷ்மீரின் அரசியல் அதிகாரத்தைக் குத்தகைக்கு
எடுத்துக் கொண்டிருக்கிறது.

1951இல் அங்கு நடைபெற்ற தேர்தலில் ஷேக் அப்துல்லா முன்னணியில் நின்றார். தேர்தலில் போட்டியிட 75 வேட்பாளர்கள் விண்ணப்பித்தனர். அவற்றுள் 73 விண்ணப் பங்களை ஷேக் அப்துல்லா செல்லுபடியற்றவை என அறிவித்து விட்டு, காஷ்மீரில் வெற்றிபெற்று, ஆட்சியை அமைத்தார். அந்த மக்கள்நாயகப் படுகொலையை நேரு ஆதரித்தார். இதன் தொடர்ச்சியாகவே இன்றுவரை இராணுவ பலத்துடன்
ஓட்டுப்பெட்டிகள் காஷ்மீரின் ஜனநாயகத்தைத் தீர்மானிக்கின்ற அவலம் அரங்கேறிக்
கொண்டிருக்கிறது.

காஷ்மீருக்கு தனி அரசியல் சட்டம்
--------------------------------------

இந்தியாவுக்கு என்று அரசியல் சட்டமிருக்க காஷ்மீருக்கு என்று தனி அரசியல்
சட்டம் இருக்கிறது.
அது என்ன சொல்கிறது.. "We, the people of the State of Jammu and Kashmir, having solemnly resolved, in pursuance of the accession of this State to India which took place on the twenty - sixth day of October, 1947.... IN OUR CONSTITUENT ASSEMBLY this seventeenth day of November, 1956, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.,'
அதாவது
ஜம்மு - காஷ்மீர் மக்களாகிய நாங்கள், 1947 அக்டோபர் 26 அன்று இம்மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவும், மேலும் இந்திய ஒன்றியத்தோடு இந்த மாநிலத்துக்கு உள்ள தொடர்பை வரையறை செய்ய வேண்டியும் ... ... எங்கள் மாநில அரசியல் அமைப்பு அவையில், 1956 நவம்பர் 17 அன்று நாங்கள் நிறைவேற்றியும் ஏற்றும் எங்களுக்கான இந்த அரசமைப்பை அமைத்துக்கொண்டோம்'' எனக் கூறுகிறது.

ஆனால் இந்திய அரசியல் சட்டம் “இந்திய மக்களாகிய நாங்கள், 1949 நவம்பர் 26இல் நிறைவேற்றிக் கொண்ட அரசமைப்புச் சட்டம்'' என்றே கூறுகிறது. அதாவது இந்தியாவிலுள்ள எல்லா மக்களும் “இந்திய மக்கள்''. ஆனால், காஷ்மீரில் உள்ள மக்கள் முதலில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் அடுத்து இந்திய மக்கள். சட்டப்படி அவர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள்.

1956இல் நிறைவேற்றப்பட்ட ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்ட விதி 26இன்படி - ஜம்மு - காஷ்மீருக்கு ஒரு குடியரசுத் தலைவர். அதாவது சர்தார்-இ-ரியாசத் உண்டு. ஆனால் 1959 முதல் 1965 வரையில் இந்திய அரசு மேற்கொண்ட அரசமைப்புத் திருத்தத்தின்படி, "குடியரசுத் தலைவர்' - (ஒரு தன்னாட்சிப் பகுதியின் தலைவர்) என்பது ஒழிக்கப்பட்டு, ஆளுநர் - ஒரு மாநில கவர்னர் என்கிற பதவியாக அதை மாற்றி, அதிகாரப் பறிப்பை இந்திய அரசு மேற்கொண்டது.

ஜம்மு காஷ்மீருக்கு என்று தனி தேசியக் கொடி உண்டு.

இந்தியாவுடன் ஆன இணைப்பை ஏற்றுக்கொண்ட பிறகு செய்யப்பட்ட ஜம்மு - காஷ்மீர் அரசியல் அமைப்பில், அப்பகுதி தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு நாடாக - இந்தியாவின் கூட்டுக்குள் விளங்கும் என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட எல்லாத் தனி உரிமைகளையும் 1959க்கும் 1965க்கும் இடையில் அடியோடு பறித்துக்கொண்ட 1965க்குப் பிறகு ஜம்மு - காஷ்மீர் மக்கள் பேரில் படையையும், எல்லையோரக் காவல் படையையும், காவல் துறையினரையும் ஏவி பயங்கரவாதிகளை ஒடுக்குவது என்கிற பேரால், காஷ்மீரின் தன்னுரிமைக்குப் போராடியவர்களைக் கொன்று குவித்தது இந்திய அரசு.

இந்திய ஆளுகையிலுள்ள காஷ்மீரைக் கைப்பற்றவேண்டும் என்று பாக்கிஸ்தான் அரசும், பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள ஆசாத் காஷ்மீரை (விடுதலை பெற்ற காஷ்மீரை)க் கைப்பற்ற வேண்டும் என்று இந்திய தேசியவாதிகளும், . இந்திய மக்களின் வரிப்பணத்தில் இராணுவத்துக்கென்று ஒதுக்கப்படுவதில் பெரிய அளவு தொகையை, ஜம்மு - காஷ்மீர் கிளர்ச்சிகளை அடக்கி ஒடுக்குவதற்கென்றே செலவழித்து நாசப்படுத்திவிட்டனர்.

சட்டமேதை அம்பேத்கரும் காஷ்மீரும்
--------------------------------------

காஷ்மீர் பிரச்சனையை ஜக்கிய நாடுகளின் சபைக்கு எடுத்துச் செல்ல
மவுண்ட்பேட்டன் நேருவை வலியுத்தினார். அதில் வெற்ரி பெற்றார்.
ஆனால் மவுண்ட்பேட்டன் அறிவுரையை நிராகரிக்க வேண்டும் என்றும்
எக்காலத்திலும் ஜக்கிய நாடுகளின் மன்றத்தால் காஷ்மீர் பிரச்சனைக்குத்
தீர்வு காண முடியாது என்பதையும் சொன்னவர் அம்பேத்கர்.
ஐக்கிய நாடுகளின் சபையில் இந்தியாவின் காஷ்மீர் குறித்த கருத்தை
வழிமொழிவதற்கு கூட உலக நாடுகள் முன்வராது என்றும் தீர்க்கதரிசனமாக
அம்பேத்கர் சொன்னதும் நினைவு கூரத்தக்கது.

காஷ்மீருக்கு இராணுவ உதவியை அனுப்பியதில் முன்னுரிமைக் கொடுத்த
அம்பேத்கர் காஷ்மீருக்கும் இந்திய அரசு வழங்கிய தனி அந்தஸ்த்தை (article 370) வெகுக் கடுமையாகச் சாடினார். அம்பேத்கரின் விருப்பத்தை மீறியே இச்சட்டம்
நிறைவேறியது. காஷ்மீர் குறித்த இச்சட்டத்தின் விவாதங்களுக்கு
அம்பேத்கர் பதில் சொல்லவில்லை என்பதும் கிருஷ்ணசுவாமி அய்யங்கார் தான்
விவாதத்தில் பங்குக் கொண்டார் என்பதும் பதிவாகியுள்ளது.

Balraj Madhok reportedly said, Dr. Ambedkar had clearly told Sk. Abdullah: "You wish India should protect your borders, she should build roads in your area, she should supply you food grains, and Kashmir should get equal status as India. But Government of India should have only limited powers and Indian people should have no rights in Kashmir. To give consent to this proposal, would be a treacherous thing against the interests of India and I, as the Law Minister of India, will never do it." என்பதுதான்.
நேருவுக்கோ அம்பேத்கரின் எதிர்ப்புக்குப் பின் இது தன்மானப் பிரச்சனையாகிவிட்டது
என்பதைக் கவனிக்க வேண்டும். இந்த தன்மானத்தின் தொடர்ச்சியைத் தான்
1980ல் காஷ்மீரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஆயிரக் கணக்காண மக்கள்
சாகடிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்ற இந்தியப் பிரதமர்
இந்திராகாந்தி " நான் ஒரு காஷ்மீர் பண்டிட் பார்ப்பனப் பெண் என்பதில்
பெருமை அடைவதாக சொல்ல வைத்தது.

இந்துக்கள் வாழும் ஜம்முவும் பவுத்தர்கள் வாழும் லடக் பகுதியும் இந்தியாவுடன்
இணைய வேண்டும். காஷ்மீர் பள்ளத்தாக்கின் பிற பகுதிகளில் வாழும் மக்கள்
சுதந்திரமாக அவர்களுககான அரசியல் தீர்வைக் காண அவர்களுக்குரிமை உண்டு
என்கிறார் அம்பேத்கர்.

இந்தியாவின் குறிப்பாக நேருவின் வெளிநாட்டுக் கொள்கையை மிகவும்
கவலையுடன் அம்பேத்கர் விமர்சனம் செய்தார் என்பதும் அவருடைய
கரிசனமும் கவலையும் எவ்வளவு நியாயமானவை என்பதையும்
அவருக்குப் பின் வந்த இந்தியா அனுபவத்தில் உணர்ந்து கொண்டது எனலாம்.

உள்நாட்டு அரசியல்
----------------------
பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா வகையாறாக்கள் காஷ்மீர் இந்தியாவின்
ஒரு பகுதி அல்ல என்கிறார்கள். ஆனால் அதே கருத்தை உதிர்த்தவர்கள்
இந்திய இறையாண்மையை ஏற்றுக்கொண்டு இந்திய நடுவண் அரசில்
அமைச்சர்களாக உறுதிமொழியும் ஏற்கிறார்கள். இந்திய நடுவண் அரசில்
டில்லியில் இருக்கும்போதெல்லாம் காஷ்மீர் குறித்து அவர்கள் என்ன செய்து
கொண்டிருந்தார்கள் என்பதை அடிக்கடி மாறி மாறி வரும் அவர்கள் அறிக்கைகள்
காஷ்மீர் பிரச்சனையை கேலிக்கூத்தாக்கியது தான் மிச்சம்.


காஷ்மீர் ராஜா கரண்சிங்
-------------------------
(ஓம்சக்தி நவ 2010 தீபாவளி மலரில் காஷ்மீர் அரசரின் வாரிசான காங்கிரஸ் அரசியல்வாதி டாக்டர் கரண்சிங் அவர்களின் நேர்காணலில்)
காஷ்மீர் என்று ஒரு மாநிலம் கிடையாது என்கிறார்.
"உங்கள் வாழ்நாளுக்குள் காஷ்மீர்ப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று
நம்புகிறீர்களா?" என்ற கேள்விக்குப் பதிலாக..

காஷ்மீர் மாநிலம் ஐந்துப் பகுதிகளைக் கொண்டது .
காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு பிரதேசம், லடாக், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு
காஷ்மீர் , சீனாவின் பிடியில் உள்ள சிறுபகுதி என்று 5 பகுதிகள்.
காஷ்மீருக்குத் தனியாக, ஜம்முவுக்குத் தனியாக என ஒவ்வொரு பகுதிக்கும்
ஒரு அபிலாஷை உள்ளது. இந்த அபிலாஷைகள் மிகவும் சிக்கலானவை.
எளிமைப்படுத்த முடியாதவை.
எனவே இந்தப் பிரச்சனையைப் பல கட்டங்களில் தீர்க்க வேண்டியிருக்கிறது.
பாகிஸ்தானுடன் பேசித்தான் ஆக வேண்டும்.
இந்தியா பாகிஸ்தான் என்று ஒரு கோணம்,
இரண்டாவது கோணம் ஸ்ரீநகருக்கும் இந்திய நடுவன் அரசுக்குமான உறவு
என்ன என்பதைத் தீர்மானிக்க வேண்டி இருக்கிறது.
மூன்றாவதாக பிரதேசம் சார்ந்த கோணம். ஜம்மு., லடாக், காஷ்மீர் பகுதிகளுக்கு
இடையில் உள்ள உறவு என்ன என்பதைப் பற்றியும் பார்க்க வேண்டும்.
இந்தப் பிரச்சனையில் அத்தனை லகுவான உடனடித் தீர்வு என்பது கிடையாது.
இந்தப் பிரச்சனையை அதன் முழுப்பரிமாணத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த மூன்று கோணங்களில் இப்பிரச்சனையை அணுகும்போது ஒருவேளை
இதற்கான தீர்வு கிட்டலாம்" என்கிறார்.





காஷ்மீர் மக்களின் கலகக்குரலுக்கு செவிசாய்த்தால் இந்தியாவின் பிற மொழிவழி
மாநிலங்களின் பிரிவுக்கும் அதுவே காரணமாகிவிடும் என்று மேம்போக்கான
பூச்சாண்டி காட்டும் வித்தைகளை கைவிட்டு இந்திய அரசு இந்திய மக்களின்
வரிப்பணத்தில் பெரும்பகுதியை இப்பிரச்சனைக் குறித்து 60 ஆண்டுகளுக்கும்
மேலாக செலவு செய்தாகிவிட்டது. இனியாவது மக்கள் பிரச்சனைகளை
அரசியல் தலைவர்கள் தம் தம் தனிப்பட்ட அரசியல் அதிகாரத்திற்கும்
தனிப்பட்ட ஈகோவுக்கும் இடம் கொடுக்காமல் தீர்வு செய்ய முன்வர வேண்டும்.

-------------

அருத்தி ராயின் அறிக்கை :


நான் இதை காஷ்மீரில் இருக்கும் ஸ்ரீநகரிலிருந்து எழுதுகிறேன். காஷ்மீரைப் பற்றி அண்மையில் நடத்தப்பட்ட கூட்டங்களில் நான் பேசியவற்றுக்காக நான் கைதுசெய்யப்படலாம் என இன்றைய செய்தித் தாள்கள் கூறுகின்றன. இங்கிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் சொல்வதைத்தான் நான் சொன்னேன். பல்வேறு அரசியல் நோக்கர்களும் பல ஆண்டுகளாகச் சொல்லியும் எழுதியும் வருவதைத்தான் கூறினேன். நான் பேசியவற்றின் எழுத்து வடிவத்தைப் படிப்பவர்கள் அவை அடிப்படையில் நீதிக்கான அழைப்புகள் என்பதை உணர்வார்கள். உலகிலேயே மிகவும் மோசமான ராணுவ ஆக்கிரமிப்பின்கீழ் வாழும் காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; தங்களது தாய்மண்ணிலிருந்து விரட்டப்பட்ட துயரத்தோடு காஷ்மீருக்கு வெளியே வாழ்ந்துகொண்டிருக்கும் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் ; தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் குப்பைகளுக்குக் கீழே மறைந்துகிடக்கும் புதைகுழிகளைப் பார்த்தேனே காஷ்மீரில் கொல்லப்பட்ட தலித் ராணுவ வீரர்கள், அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; இந்த ஆக்கிரமிப்புக்கான விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கும் , இப்போது போலீஸ் ராச்சியமாக மாறிவிட்ட நாட்டில் பயங்கரங்களுக்கிடையே வாழப் பழகிக்கொண்டிருக்கும் இந்திய நாட்டின் ஏழை மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றுதான் நான் பேசினேன்.
நேற்று தெற்கு காஷ்மீரில் இருக்கும் ஆப்பிள் நகரமான ஷோபியானுக்கு நான் போயிருந்தேன். அங்குதான் ஆசியா , நிலோஃபர் என்ற இரண்டு இளம்பெண்களின் சடலங்கள் அவர்களின் வீடுகளுக்கு அருகில் ஒரு ஓடையில் கண்டெடுக்கப்பட்டன . குரூரமாக அவர்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டில் நாற்பத்தேழு நாட்கள் அந்த நகரம் மூடப்பட்டுக் கிடந்தது. அவர்களைக் கொன்றவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. நிலோஃபரின் கணவரும் ஆசியாவின் சகோதரருமான ஷகீலை நான் சந்தித்தேன்.இந்தியாவிடமிருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துபோன, சுதந்திரம் ஒன்றுதான் ஒரே நம்பிக்கை என்று கருதுகிற மக்கள் துக்கத்தோடும் கோபத்தோடும் நாங்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றிச் சூழ்ந்திருந்தார்கள். கல்வீசியதற்காக துப்பாக்கியால் சுடப்பட்டு கண்களுக்கிடையே தோட்டாவால் துளைக்கப்பட்ட இளைஞர்களை சந்தித்தேன். என்னோடு பயணம் செய்த இளைஞர் ஒருவர் அனந்த்நாக் மாவட்டத்தில் இருக்கும் தனது நண்பர்களான ' டீன் ஏஜ்' இளைஞர்கள் மூன்றுபேரை எப்படி விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள் கல் வீசியதற்காக அவர்களது விரல் நகங்கள் எப்படி பிடுங்கப்பட்டன என்பதை விவரித்தார்.
‘ வெறுப்பைக் கக்கும் பேச்சை நான் பேசியதாக நாளேடுகளில் சிலர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இந்தியா சிதைவதை நான் விருபுவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதற்கு மாறாக எனது பேச்சு அன்பிலிருந்தும் பெருமிதத்திலிருந்தும் வருகிறது. நாங்கள் எல்லோரும் இந்தியர்கள்தான் என அவர்களைப் பலவந்தப்படுத்திச் சொல்லவைக்கவேண்டும் என்பதற்காக அவர்களது விரல் நகங்களைப் பிடுங்கவேண்டாம்; கற்பழிக்கவேண்டாம் , படுகொலை செய்யவேண்டாம் என்ற உணர்விலிருந்து வருகிறது. நீதி விளங்கும் ஒரு சமூகத்தில் வாழவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து வருகிறது. தமது எண்ணங்களைப் பேசுகிற காரணத்தால் எழுத்தாளர்களை மௌனிகளாக்கி வைக்க இந்த தேசம் விரும்புகிறது என்பது பரிதாபகரமானது. நீதி கோருபவர்களை சிறையில் அடைக்க இந்த நாடு முயற்சிக்கிறது, ஆனால் மதவெறிக் கொலைகாரர்கள் ; இனப்படுகொலைகளைச் செய்தவர்கள் ; கொள்ளைக்காரர்கள்; கற்பழிப்பவர்கள் , ஊழல் செய்பவர்கள், ஏழைகளிலும் ஏழையான மக்களைச் சுரண்டுபவர்கள் போன்றவர்களெல்லாம் இங்கே சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அக்டோபர் 26, 2010

--------------------------------------------------

கட்டுரைக்கு துணைநின்ற குறிப்புகள்
-------------------------------------

> Tehelka Nov 6, 2010.

> அக்டோபர் 2008 சிந்தனையாளன் வே. ஆனைமுத்து கட்டுரை.

> indian exp mar 14,2009,
What if Ambedkar had shaped India’s foreign policy?

> Kashmir Problem From Ambedkarite Perspective
BY Dr. K. Jamanadas,

Thursday, October 7, 2010

வெட்சி

(சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறை
கருத்தரங்க கட்டுரைகளை முன்வைத்து...)

வெட்சி... தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது.
வெட்சி - தமிழகத் தலித் ஆக்கங்கள் - என்ற தன்விவரம் என்னை
ரொம்பவே சிந்திக்க வைத்தது.
வெட்சி... என்றால் என்ன?

வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல்
கரந்தையாம்.. (வெட்சி குறித்த பழமையான பாடல் வரி)

வெட்சிதானே குறிஞ்சியது புறனே -
தொல்காப்பியர் எழுதி வைத்திருப்பது.

தொல்காப்பியர் நிரை கவர்தலையும் மீட்டலான கரந்தை இரண்டையும்
சேர்த்துதான் வெட்சி என்று சொல்லி வைத்திருக்கிறார்..
இம்மாதிரி நிறைய வெட்சி குறித்து எப்போதோ.. 30 வருடங்களுக்கு முன்
கல்லூரியில் படித்த வரிகள் (மனப்பாடம் செய்த வரிகள்தான்!) நினைவுக்கு வந்தன.
எப்படி எந்த வகையில் வெட்சி திணையையும் தலித் ஆக்கங்களையும்
இணைக்கிறார்கள் என்று இந்தப் புத்தகம் என் கைக்கு வந்த ஒரு மாதமாக
யோசித்து யோசித்து என்னால் எதுவுமே ஊகிக்க முடியாமல் போனதற்காக
வருத்தப்பட்டு கழிவிரக்கம் கொண்டது தான் மிச்சம். தலைப்பும் கட்டுரைகள்
முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் பல்கலைக் கழக கருத்தரங்கில் வாசித்தவை
என்ற அறிவிப்பும் கொஞ்சம் நேரம் எடுத்து வாசிக்க வேண்டியவை இக்கட்டுரைகள்
என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
இத்தியாதியான சகல முன்னேற்பாடுகளுடன் ஒரு வழியாக அயோத்தி அலகாபாத்
தீர்ப்பு வந்தப்பின் மும்பை சகஜ நிலைக்கு வந்தவிட்டது என்ற பதற்றம் நீங்கி
வாசிக்க உட்கார்ந்தேன்.
புத்தகத்தின் கடைசிப் பக்கம் வரை வாசித்தப் பின்னும் எதற்காக வெட்சி?
என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் என் அறிவுக்கு
எட்டவில்லை!

ஓரளவு நான் முழுமையாக வாசித்திருக்கும் சில தலித் எழுத்தாளர்களைப் பற்றிய
கட்டுரைகள் குறித்த கருத்தரங்க வாசிப்புகளை இங்கே குறிப்பிடுவது சரியாக
இருக்கும் என்று நினைக்கிறேன்.


அபிமானி, அழகிய பெரியவன், அயோத்திதாசர், இமையம், குணசேகரன், சந்ரு, சாணக்யா,
சிவகாமி, யாழன் ஆதி, ரவிக்குமார், ராஜ்கவுதமன் ஆக்கங்கள் குறித்தக் கட்டுரைகள்
மிகவும் தெளிவான மதிப்பீடுகளை முன்வைக்கின்றன.

* ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினர் ஆனபிறகு தலித்துகள் அவலநிலை, பிரச்சனைகள்
ஆகியவற்றைப் பற்றி தீவிரமாக எழுதுவதைக் குறைத்துக் கொண்டுள்ளார்.

*ஜே.பி.சாணக்யாவின் மொழியாளுமை குறிப்பிடத்தக்கது. சூழல்களை நுட்பமாக
விவரித்தலின் மூலம் நிகழ்வுகளைப் படிமங்களாகச் செறிவான கவித்துவமான
சொற்களில் உருவாக்கி காட்டுகிறார்.

*இமையத்தின் எழுத்துகளில் இருக்கும் தலித் உள்முரண்பாடுகளைக் கட்டுரையாளர்
அலசி வெவ்வேறு விதமான இமையத்தின் புனைவுகள் தலித் இலக்கியத்திற்கு
வளம் சேர்ப்பவை என்ற மதிப்பீடு.

*சிவகாமியின் படைப்புகள் அனைத்தும் குடும்பக்கட்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும்
தலித் பெண்கள் மீதான வன்முறைப் பற்றியதாகவும் குடும்பவெளியைக் கடந்து
செல்ல நினைக்கும் பெண்களின் சிந்தனைக் களமாகவும் இருக்கின்றன
இக்கட்டுரையாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

* அன்பாதவன் குறித்த கருத்தரங்க கட்டுரையில் அந்திமழையில் அவர்
அவ்வப்போது எழுதிவரும் கவிதைகளை எடுத்துக் கொண்டு கட்டுரையாளர்
ஆய்வு செய்கிறார். அன்பாதவன் என்ற தலித் எழுத்தாளரை அறிமுகம் செய்த
"நெருப்பில் காய்ச்சிய பறை" கவிதைகள் குறித்து கட்டுரை கள்ள மவுனம் சாதிக்கிறது.
இருக்கட்டும்.

தலித் எழுத்தாளர்கள் என்றால் தலித்தியம் மட்டும் தான் எழுத வேண்டுமா?
என்றால் இல்லை. எந்த ஒரு தலித் எழுத்தாளரும் தலித்தியம் என்று இதுவரை
சொல்லப்பட்டிருக்கும் எந்த ஒரு வரையறை எல்லைகளுக்குள் நிற்பதில்லை.
தலித்தியத்தின் அடிநாதமான சமத்துவமும் உரிமையும்
சாதியத்தை கட்டமைத்திருக்கும் மரபுகள், தொன்மக்கதைகள்,
புராண இதிகாசங்கள் , மதங்கள் , நம்பிக்கைகள் அனைத்துக்கும் எதிராக
தன்னையும் தன் எழுத்துகளையும் நிறுத்தும் கலகக்குரலாக இருந்தாலும்
அந்த உணர்வுகளின் பின்னணியில் பெண்ணியமும் பெருநகர மனிதப் பெருமூச்சின்
வேதனையும் எப்படி பார்க்கப்படுகின்றன என்பதற்கு அன்பாதவனின் தலித்தியம்
அல்லாத பிற படைப்புகளை அணுகி இருக்கலாம்.
ஹைபுன் மாயவரமும் தனிமைக் கவிந்த அறையும் மட்டுமே கட்டுரையாளரின்
கட்டுரை தொட்டுச் சென்றிருக்க தலித்திய ஆக்கத்தில் அன்பாதவனின் பங்கு
கட்டுரையில் வெற்றிடமாக்கப்பட்டிருப்பது ஏன் என்று புரியவில்லை.

* ஆதவன் தீட்சண்யாவின் சில சிறுகதைகளில் கட்டுரைப்பாங்கான நடை
இருக்கும்.. அதற்காகவே இப்படியா..? அவருடைய கட்டுரை ஒன்றைக் கருத்தரங்க
கட்டுரையாளர் சிறுகதை என்று சொல்வது!
'இட ஒதுக்கீடு யாசகமல்ல, உரிமை" என்ற தலைப்பில் நானறிந்து ஆதவன் தீட்சண்பா
கதை எதுவும் எழுதவில்லை! ஆதவன் தீட்சண்யாவும் அப்படித்தான் சொல்லுகிறார்!
ஆனால் இக்கருத்தரங்கம் அவர் கட்டுரையை சிறுகதை என்று எழுதி மேலும் மேலும்
அந்தக் கட்டுரைச் செய்திகளைச் சிறுகதையின் சமூகச் சிந்தனைகளாக வெகுவாக
சிலாகித்து எழுதி இருக்கிறது.
கட்டுரையாளருக்கு இன்னொரு உபதகவல்:
ஆதவண் தீட்சண்யாவின் கவிதைகள் மூன்று தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன.

* இந்திரனின் பன்முகத்தன்மைப் பாராட்டுதலுக்குரியதுதான்.
ஆனால் தலித் ஆக்கங்கள் குறித்த கருத்தரங்கில் இந்திரனின் பன்முகத்தன்மையைவிட
பேசப்பட்டிருக்க வேண்டியது அவருடைய மொழியாக்கங்கள்

- அதிலும் குறிப்பாக
அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம், கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்,
பிணத்தை எரித்தே வெளிச்சம், பசித்த தலைமுறை ஆகிய தொகுப்புகள்
தமிழ் தலித்திய இலக்கியத்தில் எற்படுத்திய தாக்கம் மிகவும் வீரியமானது.
இந்திரன் தலித் இலக்கியத்திற்கு செய்த மிகப்பெரிய பங்களிப்பு.
ஓர் ஆய்வு நூல் வெளியிடும் அளவுக்கு இந்திரனின் மொழியாக்க தாக்கங்களை
எடுத்துரைக்க வேண்டிய காலமிது. ஆனால் கட்டுரையாளர் இந்திரன் சார்ந்த
பிற செய்திகளை முன்னிலைப் படுத்தி சொல்ல வேண்டியவைகளைச் சொல்லாமல்
அலட்சிய போக்கை காட்டியிருப்பது வேதனை அளிக்கிறது.

* விழி.பா.இதயவேந்தன் அவர்களின் தலித் அழகியல் நூல் குறித்த கட்டுரையாளரின்
நியாயமான கோபத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.
தலித் அழகியல் என்ற நூலினை விழி. பா.இதயவேந்தனின் கட்டுரைகள் அல்லது
'விழி.பா. இதயவேந்தன் பார்வையில் பிற தலித் படைப்பாளிகள்' என்று கூட வந்திருக்கலாம்
என்று கட்டுரையாளர் சொல்வது சரிதான். அந்நூலை வாசித்தவுடன் இதே கருத்தை
விழி.பா.இதயவேந்தனிடமும் சொல்லியது நினைவுக்கு வருகிறது.

ஆனால் கட்டுரையாளர்
இந்த விமர்சனங்களின் அடுத்தக் கட்டமாக சில வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார்.
அவை:
'தலித் அழகியல் எனும் இந்நூலினைப் பொருத்தமட்டில் அழகியல் குறித்தான
பதிவே தொனிக்காமல், தலித் என்கிற சொல்லாடலைக் குறித்தே இது முதன்மைப்படுத்தப்பட்டதும்
தலித் என்கிற சொல்லிற்கு நல்ல விலையை நிர்ணயிக்க முடியும் என்கிற வியாபார யுத்தியுமே
வெளிப்பட்டதனைக் காணமுடிகிறது " என்றும்
'தலித் என்பதனை எப்படி எல்லாம் காசாக்க/அரசியலாக்க முடியுமென்று
தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள் இவ்வம்பானிகள்"
என்றும் சொல்லியிருப்பது கட்டுரையாளரின் நோக்கம் என்ன என்பதை
வெளிப்படையாக காட்டிவிட்டது!
என்னவோ தலித் என்று தலைப்பில் போட்டுவிட்டால் புத்தகம் ஆகா ஓகோ
என்று விற்பனை ஆவது போலவும் அப்படிப் புத்தகம் போட்டு தலித் எழுத்தாளர்களும்
புத்தகம் போட்ட பதிப்பாளர்களும் செல்வந்தர்கள் ஆகிவிட்டது போலவும்
தலித் அரசியல் கொடி கட்டிப் பறக்கிறது, அதனால் தலித் என்ற சொல்லுக்கு
நல்ல விலை இருக்கிறது என்றும் சொல்வதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கின்றன?
ஆய்வு கட்டுரைகளில் கருத்துகளை எழுதுவதற்கு முன் அதற்கான ஆதாரங்களையும்
கட்டாயம் முன்வைக்க வேண்டும்.
இம்மாதிரியான பொறுப்பில்லாத கருத்துகளை உதிர்ப்பதை இனியாவது
ஆய்வு செய்யும் அறிவுஜீவிகள் தவிர்ப்பது அவசியம்.


வெட்சி என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கும் தமிழகத் தலித் ஆக்கங்கள்
என்ற ஆய்வுக்கட்டுரைகள் எந்த அளவுக்கு தலித் ஆக்கங்கள் குறித்து
ஆய்வு செய்திருக்கின்றன?
ஏன் இந்த அலட்சியப் போக்கு?
ஆய்வுகள் என்பது வெறும் மேற்கோள்கள் காட்டுவது மட்டும் தானா?
சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்...


-

Monday, September 20, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலர்







அண்மையில் கொங்குமண் கோவையில் நடந்து முடிந்த முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி
மாநாட்டு மலரை முழுமையாக வாசித்துவிட்டு அது பற்றிய என் கருத்துகளை
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற ஆட்சிக்குழுத் தலைவர் பேராசிரியர் அண்ணன் சமீராமீரான்
பரிமாறிக்கொண்டதுண்டு. அதனாலேயோ என்னவோ இந்த மாநாட்டு மலர் குறித்த ஆய்வுரையை
நிகழ்த்தும்படி கேட்டுக்கொண்டார்கள் என்று நினைக்கிறேன்.


மலர் ஆய்வுக்கு முன் மலர் வெளியீடுகளைப் பற்றி சில வார்த்தைகள் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
மலர் என்ற சொல் தமிழில் எந்தப் பொருளைக் குறிக்க பயன்படுத்தி வந்தோமோ அந்தப் ச்பொருளில்
இந்த மலர்கள் அடங்காது. ஆங்கிலத்தில் சொவேனியர் என்று சொல்வதை நாம் மலர் என்று சொல்கிறொம்.
சொவேனியர் என்ற சொல் பிரஞ்சிலிருந்து வந்தது. பிரஞ்சிலும் ஆங்கிலத்திலும் இதன் பொருள்
நினைவூட்டல், நினைவுச்சின்னம், டு ரிமம்பர், மொமெண்டோ என்று சொல்வார்கள்.
ஒரு நிகழ்வை நினைவூட்டும் வகையில் தமிழில் மலர் வெளியீடுகள் வெளியிடப்படுகின்றன.
அந்த வகையில் தமிழக அரசு நடத்திய கோவை செம்மொழி மாநாட்டு நிகழ்வின் ஒரு நினைவூட்டலாக
இந்த மலரை அணுக வேண்டும்.

மலர் 16 த்லைப்புகளில் பரந்து விரிந்து மிகவும் நேர்த்தியாகாவும் கட்டுக்கோப்பாகவும்
இருப்பதுடம் இயன்றவரை தமிழ் தமிழர் சார்ந்த அனைத்து தளங்களின் ஊடாகவும் பயணிக்க
முயற்சி செய்திருப்பது பாராட்டுதலுக்குரியது.

எந்த தலைப்புக்குள்ளும் அடங்காமல் எல்லா தலைப்புகளுக்கு முன்னோடியாக
நுழைவாயிலாக் பேரறிஞர் அண்ணா வாழ்த்துகிறார் என்ற தலைப்பில்
1968ல் சென்னையில் அண்ணா முதல்வராக இருந்தப்போது நடந்த உலகத் தமிழ் மாநாட்டில்
ஆற்றிய பேருரையிலிருந்து சிலப் பகுதிகளை நம் வாசிப்புக்குக் கொடுத்து வாசிப்பவர்
நெஞ்சைத் தொடுவது ஒரு தலைமுறைக்கு பசுமை நினைவுகளைப் புரட்டிப் பார்க்க வைத்திருக்கிறது.

செம்மொழி மாநாட்டில் பெரும்பங்காற்றியவரும் சிந்துவெளி எழுத்துகளை தமிழ் எழுத்துகளாக
அடையாளம் கண்டவருமான ஐராவதம் மகாதேவன் அவர்களின் கட்டுரை சில முக்கியமான
கருத்துகளை முன்வைக்கிறது. செம்மொழித் தகுதிக்கு அகச்சான்றுகள் மட்டுமல்ல, புறச்சான்றுகள்
ஆன கல்வெட்டுகள், நாணயங்கள், இலச்சினைகள், சில்லுகள் ஆகியவற்றிலிருந்து
ஆதாரங்களைத் திரட்டித் தந்திருக்கிறது.

கரூரில் கிமு 1ஆன் அச் சார்ந்த வெள்ளி இலச்சினையில் குறவன் என்ற எழுத்துப்
பொறிக்கப்பட்டுள்ளது.குறவன் என்ற குறிஞ்சி நில மைந்தன் அன்று வெள்ளி இலச்சினைகளில்
வாழ்ந்து கொண்டிருந்தான் என்றசெய்தி இன்று நமக்கு ஆச்சரியமூட்டுகிறது.

தமிழகம் எங்கும் சில்லுகள் கிடைக்கின்றன. சில்லுகள் என்றால் உடைந்த மண் பானைச்சட்டிகளின்
துண்டுகள் தான். அப்படிக் கிடைத்திருக்கும் சில்லுகளில் கொடுமணலில் கிடைத்திருக்கும் சில்லு
கிமு 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. அதில் ஒரு துண்டில் கண்ணன் ஆதன் என்ற பெயர்
பொறிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஆதிச்சநல்லூரில் கிடைத்திருக்கும் சில்லுகள் பற்றிய செய்திகளும் எனக்கு
இப்போது நினைவுக்கு வருகிறது. இந்தச் சில்லுகள் நமக்கு இன்னொரு செய்தியையும்
ஆழமாக உணர்த்துகின்றன. அதாவது தமிழகம் எங்கும் மக்கள் எழுதப்படிக்கத் தெரிந்த
சமுதாயமாக இன்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கிறார்கள் என்பது தான் அது.

எகிப்து நாட்டின் பெரோனிக துறைமுகத்தில் கொற்றபூமான் என்ற பெயர் பொறித்த சில்லு
கிடைத்திருக்கிறது. கிபி 1 அல்லது 2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.


செம்மொழித் தொன்மையும் தொடர்ச்சியும் என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் ரா..போ.குருசாமி
அவர்களின் கட்டுரை இன்னொரு புதிய பார்வைஈர்கயை முன்வைக்கிறது.
நாம் எல்லோருமே அறிவோம். உயர்திணை அஃறிணை என்று தமிழன் கண்ட திணை வகைத்தான்
அறிவியலுடன் ஒத்துப்போகக்கூடியது.
இனி, உய்ர்திணை என்று சொல்லிவிட்டு அதன் எதிர்ப்பதமாக தாழ்திணை என்றுதானே
சொல்லியிருக்க வேண்டும்? அதைவிடுத்து அஃறிணை. அதாவது அல்+திணை
என்று ஏன் சொன்னார்கள்?
கட்டுரையாளர் குருசாமி சொல்லுகிறார். தமிழ் மொழியின் செவ்வியல் சுட்டும்
பண்பாடு இது என்று. படைக்கப்பட்ட எதையும் தாழ்ந்தது என்று சொல்வதில்
தமிழ் மொழிக்கு உகந்ததல்ல. தமிழன் ஏற்றுக்கொண்டதுமல்ல.
அதனால் தான் திணையை உயர்திணை என்றும் அதுவல்லாத மற்றவை எல்லாம்
அல்திணை அதாவது அஃறினை என்றானாம்.
ஒரு புதிய பார்வையை இக்கட்டுரை முன்வைப்பதன் மூலம்
தாழ்திணை என்று சொல்வதைக் கூட தன் திணைப் பாகுபாடாக ஏற்க மறுத்த தமிழ்ச்சமூகம்
எங்கே எப்போது எப்படி ஏன் ஊர் என்றும் சேரி என்றும் பிரிந்தது.
தாழ்ந்தச் சாதி, தாழ்த்தப்பட்ட சாதி, ஒடுக்கப்பட்ட சாதி , பிற்படுத்தப்பட்ட சாதி
என்றெல்லாம் தமிழ்ச்சாதியை இன்றுவரை ஒன்றாக சேர்க்க முடியாமல் பிரித்து
வைத்திருக்கிறது என்ற இன்னொரு சிந்தனைத் தளத்திற்கு இக்கட்டுரை வாசகனை
இழுத்துச் செல்கிறது.


ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் போதெல்லாம் இந்தியா சீனாவின் முன்னால்
த்லைகுனியத்தான் செய்கிறது. அதற்கான காரணங்களும் அரசியலும் தனியாக பேசப்பட
வேண்டிய விசயம். இந்த ஒலிம்பிக் ஆரம்பித்தது கிரேக் நாட்டில் கிமு 776ல். அப்போது 4
வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும். இப்போதும் அந்த முறையைத்தான் நாம் பயன்படுத்துகிறோம்.
கிரேக்கில் ஏற்பட்ட நிலநடுக்க பேரழிவுக்குப்பின் அதாவது கிமு 393ல் ஒலிம்பிக் நடத்துவது
தடைப்பட்டுப் போனது. அதன் பின் இன்றைக்கு நாம் காணும் ஒலிம்பிக் 1896ல் ஆரம்பிக்கப்பட்டது.
கிரேக்க நாகரிகத்துக்கு இணையான நாகரிகம் கொண்ட தமிழ் நாட்டில் அப்போது
விளையாட்டுகள் இருந்ததா? என்ற கேள்வி எழும்.
அதைத்தான் சான்றுகளுடன் எழுதியிருக்கிறார் செங்கைப்பொதுவன் - சங்க இலக்கியத்தில்
விளையாட்டுக்கலை என்ற தலைப்பில்.
சங்க இலக்கியத்தில் விளையாட்டு என்ற சொல் மட்டும் 50 இடங்களில் வருகிறது.
96 விளையாட்டுகளை அன்றைக்கு விளையாண்டிப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள்.

அதில் சில விளையாட்டுகள் குறித்தச் சுவையான செய்திகளை இக்கட்டுரைப் பதிவு
செய்திருக்கிறது.

குறிப்பாக கோல்ஃ என்று இன்று நாம் விளையாடும் விளையாட்டை அன்று வட்டுநா
என்றார்களாம். வட்டு என்றால் உருளும் குண்டான் பந்து. வட்டுநா என்பது
அந்தப் பந்தை அடிக்கும் நாக்குப்போல வளைந்த மட்டை. கோல்ஃ விளையாட்டைப்
பார்த்தவ்ர்களுக்கு இப்போது வட்டுநா என்பது எவ்வளவு பொருத்தமான காரணப்பெயர்
என்பது புரிந்திருக்கும். என்ன இன்று நம் கனவான்கள் கோல்ஃ விளையாடுவது
பச்சைப்புல்வெளியில். அன்றைக்கு 2000 வருடங்களுக்கு நம் வட்டுநா விளையாட்டை
பாறைமீதிருந்து அடித்து விளையாண்டிருக்கிறார்கள்.

'உருள்கின்ற மணிவட்டைக் குணில்க்கொண்டு துரந்தாற்போல' -
-செங்குட்டுவன் கண்ணகிச் சிலை எடுக்க இமயம் நோக்கிப்
புறப்பட்டான் என்கிற வரியில் வருகிற மணிவட்டு என்பது
பந்துதான். குணில் என்பது அந்தப் பந்தை அடிக்கும் மட்டை.
இந்த விளையாட்டுதான் இன்று நாம் விளையாடும் ஹாக்கி விளையாட்டின்
முன்னோடி எனலாம்.

1933-34களில் சிக்காகோவில் உலகநாடுகளின் கண்காட்சியில் தான் synchronized swimming
என்ற புதிய நீச்சல் நடனத்தை அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த நடனத்தை அன்றைக்கு கரிகாலன்
காவிரிக்கரையில் அட்டனத்தி நீச்சல்நடனத்தில் கண்டு களித்திருக்கிறான் என்கிறார்
கட்டுரையாளர்.
அட்டனத்தி கரிகாலன் மகள் ஆதிமந்தியின் காதலன், அட்டனத்தியுடன் நீச்சல் ந்டனமாடிய
காவிரி என்ற பெண் அட்டனத்தியின் நீச்சல் நடனத்தில் மயங்கி அவனைக் கட்டித்தழ்வ வருகிறாள்.
காவிரியின் பெருவெள்ளத்தில் இருவரும் அடித்துச் செல்லப்படுகிறார்கள். அவள் வெள்ளத்தில் சிக்கி
இறந்துவிடுகிறாள். அட்டனத்தி காவிரிக்கரை ஓரத்தில் அடித்துச்செல்லப்பட்டு கரை ஒதுங்குறான்.
மருதி என்ற பெண் அட்டனத்தியைக் காப்பாற்றி அழைத்து வர இருவரும் சேர்ந்துவாழ்கிறார்கள்.
அப்போது தான் கரிகாலனின் மகள் ஆதிமந்தி காவிரிக் கரையெங்கும் தேடி அலைகிறாள்.
தன் காதலன் இறந்திருக்க மாட்டான் என்ற நம்பிக்கையுடன்.

அட்டனத்தியைக் கண்டீரோ
கடல் கொண்டன்று, புனல் ஒளித்தன்று...
அவள் கதறலும் கண்ணீரும் மருதியை
மனம் உருகச் செய்கிறது. ஆதிமந்தியையும் அட்டனத்தியையும் அவள் சேர்த்து
வைக்கிறாள். ஆனால் அட்டனத்தியின் பிரிவால் அவள் கடலில் வீழ்ந்து தற்கொலைச்
செய்துகொள்கிறாள். இது தான் கதை. இந்தக் கதையில் வரும் அட்டனத்தி ஆடிய
நீச்சல் நடனம், கால்களையும் இடுப்பையும் தண்ணீருக்கு மேலே தூக்கி ஆடுவது.


இன்னொரு முக்கியமான கட்டுரை உலகம் போற்றும் தமிழரின் வர்மக்கலையும் வர்ம மருத்துவமும்.
-ந. சண்முகம்.

இன்று அக்குபஞ்சர், அக்குபிரஷர் என்று உடம்பின் முடிச்சுகளை அறிந்து அதில் எழுச்சி ஏற்படுத்துவதன்
மூலம் நோய்களைத் தீர்க்கும் முறையைப் பற்றி பேசாத நாளிதழ்கள் மருத்துவக்குறிப்புகள் கிடையாது.
ஆனால் இதற்கெல்லாம் தாயாக இருக்கும் நம் சித்தர்களின் வர்மக்கலை நமக்கெல்லாம் ஒரு பொருட்டாகவே
படுவதில்லை. சித்தர்களின் வர்மக்கலை 8000 வர்மப்புள்ளிகளைப் பற்றிப் பேசுகிறது.
அதில் 108 வர்மப்புள்ளிகள் அடிப்படை வர்மப்புள்ளிகளாம். இன்று இந்த வர்மக்கலை தெந்தமிழகத்தில் மட்டுமே
அறியப்பட்ட ஒரு மருத்துவம். அதிலும் குறிப்பாக எங்கள் நெல்லையிலும் குமரியிலும் மட்டுமே
குருகுல முறையில் 12 வருசம் படித்து அறியும் சித்த மருத்துவமாக இருக்கிறது.

இன்று நம் வழக்கில் இருக்கும் நீதிமன்றம் என்ற சொல்லில் இருக்கும் மன்றம் எனறு சொல்லும்போதே
நீதிமன்றம் என்றுதான் பொருள். என்ன செய்வது... சினிமா நடிகர்களுக்கு மன்றங்கள் ஆரம்பித்து
தான் பிறந்த பலனைக் கண்டடையும் இன்றைய தமிழனுக்குப் புரிந்து கொள்வதற்க்கு வசதியாக
இது அந்த மன்றம் இந்த மன்றம் மாதிரி நீ நினைத்துக்கொள்கிற மாதிரி மன்றம் இல்லைப்பா,
இது நீதி வழங்கும் மன்றம் என்று பிரித்துக் காட்டீனார்களொ என்னவோ..!
எப்படியும் இருக்கட்டும்.
எட்டுவகை நுதலிய அவையத்தானும் என்று தொல்காப்பியம் நீதிபதிக்கு இருக்க வேண்டிய
எட்டு இயல்புகளைப் பட்டியலிடுகிறது.
மன்றம், அவை, பொதியில், அம்பளம் இச்சொற்கள் எல்லாம் அன்றைக்கு நீதி வழங்கும்
நீதிமன்றத்தைக்குறிக்கப் பயன்பாட்டிலிருந்தச சொற்கள் என்று சுட்டிக்காட்டி,
எழுதப்பட்ட சட்டங்களும் விதிமுறைகளும் இலலாமலேயே தமிழ் மண்ணில்
நிதீ வழுவாது அறம் காத்த தமிழ்ச்சமூகத்தை நமக்கு காட்டுகிறார் கட்டுரையாளர்.

தமிழர் மெய்யியல் -இன்மை என்ற தலைப்பில் முனைவர் க நெடுஞ்செழியன் அவர்கள்
எழுதியிருக்கும் கட்டுரை என்னைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானக் கட்டுரை.
அதற்கு இரு காரணங்கள். அண்மையில் மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம்
வெளியிட்ட பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு மலரில் நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.
அறிஞர் அண்ணாவின் மெய்யியல் என்ற தலைப்பில். அக்கட்டுரையில் நான் கையாளும் மெய்யியல்
தத்துவம் முனைவர் க.நெடுஞ்செழியன் இக்கட்டுரையில் முன்வைக்கும் தமிழர் மெய்யியல் - இன்மை
என்ற தத்துவத்திலிருந்து எடுத்துக்கொண்டது தான்.
எனவே இக்கட்டுரையை அதன் சாரத்தை நான் புரிந்து கொண்ட வகையில் உங்கள் முன் சொல்வதற்க்கு
எனக்கு எழுத்தாளர் மன்றம் ஒரு வாய்ப்பைத் தந்தமைக்கு நன்றி.

அது என்ன? மெய்யியல், அதிலும் மெய்யியல் இன்மை?
மெய்யியல் என்றாலே இந்தியாவைப் பொறுத்தவரை இந்துமதம், இந்துமதத்தில் வேதங்களும் உபநிஷத்துகளும்
என்றுதான் எல்லோருமே இன்றுவரை ஒரு கருத்தை வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் இந்துமதத்திலிருந்தது
மாறான ஒரு மெய்யியல் இருந்தது என்பதும் அந்த மெய்யியலை வகுத்தவன் தமிழன் என்பதும் இன்றுவரை
மறைக்கப்பட்டிருக்கும் உண்மை. தமிழனின் மெய்யியல் தான் அணுக்கோட்பாடும், இன்மைக்கோட்பாடும்.
உலகம் கடவுளால் படைக்கப்பட்டது ஜீவராசிகளைக் கடவுள் படைத்தார் என்பதுதான் உலகின் அனைத்து
மதங்களும் உருவாக்கியிருக்கும் கோட்பாடு. ஆனால் தமிழன் அப்படிச் சொல்லவில்லை. ஒன்றிலிருந்து
ஒன்று பரிணாமவளர்ச்சி பெற்றதும் ஒன்று பிறிதொன்றாக மாறியதும் அந்த ஒன்று இல்லாமல் போனதும்
தமிழன் கண்ட மெய்யியல்.
எல்லாவற்றுக்கும் இப்படியான பரிணாம வளர்ச்சி இருப்பது போலவே இல்லாமல் போய்விடும் முடிவும் உண்டு.
இந்தப் பூமியும் ஒரு காலத்தில் இல்லாமல் போய்விடும் என்கிறான்.
தமிழன் கண்ட இந்த மெய்யியல் இன்மைக்கு கிரேக்கத்திலும் தனி இடம் உண்டு. கிரேக்க ஞானிகள் மெய்யியல் இன்மை
கோட்பாடை அறிந்து கொள்ள இந்தியா வந்ததை காரல்மார்க்ஸ் தன்னுடைய ஆய்வில் பதிவு செய்திருக்கிறார்.
சங்கப் புறப்பாடலில் பக்குடுக்கை நன்கணியாரின் பாடல் ஒரே ஒரு பாடல் தான் இன்று நமக்கு கிடைத்திருக்கிறது.
"ஓரில் நெய்தல் கறங்க...." என்று ஆரம்பிக்கும்
அந்தப் பாடல் அப்படியே கடவுள் மறுப்புக் கொள்கையின் பிழிவு என்கிறார் கட்டுரையாளர்.

கணினி கலைச்சொல்லாக்க கட்டுரையின் மணவை முஸ்தபா அவர்கள் இன்னொரு வரலாற்று செய்தியை
முன்வைக்கிறார். தமிழில் எல்லாம் உண்டு என்று பகுத்தறிவு கொண்டவன் சொல்ல மாட்டான்.
தமிழ்மொழ்யிலும் சில உச்சரிப்புகளைக் குறிக்கும் எழுத்துகள் இல்லை. பிறமொழியாக்கத்தின் போதும்
அவர்களுடன் தொடர்பு கொள்ளும் போதும் சில போதாமைகளைத் தமிழன் உணர்ந்தான்.
எனவேதான் ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷி என்ற எழுத்துருக்களைப் பல்லவர் காலத்தில் தமிழறிஞர்கள்
உருவாக்கினார்கள் என்கிறார் மணவை முஸ்தபா.
என்னதான் தனித்தமிழ் பேசினாலும் சில நேரங்களில் நாம் மாட்டிக்கொள்வோம்.
எனக்கு அடிக்கடித் தோன்றும்... துணைமுதலவர் ஸ்டாலின் பெயரை ஸ் என்ற வடமொழி
உச்சரிப்புக்கான எழுத்துருவைப் பயன்படுத்தாமல் எப்படி எழுத முடியும்?


பேராசிரியர் கா சிவத்தம்பி அவர்கள் இன்னொரு கருத்தை முன்வைக்கிறார்.
classical language என்ற ஆங்கிலச் சொல்லைத் தமிழாக்கம் செய்யும் போது செம்மொழி
என்று சொல்கிறோமே... classical என்ற ஆங்கிலச் சொல்லின் முழு அர்த்தத்தையும் செம்மொழி
என்ற சொல தருகிறாதா ? என்று கேட்கிறார். மேலும் classical language ஒரு classical civilization
society யிலிருந்து தான் வந்திருக்க முடியும் என்பதையும் முன்வைக்கிறார். காளிதாசனின்
சமஸ்கிருத நாடகங்கள் க்ளாசிக்கல் சன்ஸ்கிரிட்டில் எழுதப்பட்டவை. எனினும் சமஸ்கிருத நாடகங்களில்
உயர் சமூகத்தைச் சார்ந்த பாத்திரம் க்ளாசிக்கல் சமஸ்கிருதத்தில் பேச மற்ற பாத்திரங்கள் பிராகிருத மொழியில்
பேசினார்கள் என்ற செய்தியையும் தமிழ் இலக்கியம் வடமொழி என்று சுட்டும் போதெல்லாம் இந்த இருமொழிகளையும்
சேர்த்தே சுட்டியது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
இறுதியாக சிவத்தம்பி அவர்கள் செம்மொழி என்று சொல்வதற்குப் பதிலாக தொல்சீர்மொழி என்றழைக்கப்பட
வேண்டும் என்ற கருத்தை தீர்வாக வைக்கிறார். அவருடைய கருத்தில் நமக்கு உடன்பாடு தான் எனினும்
செம்மொழி வரலாற்றில் வெகுதூரம் வந்தாகிவிட்டது. எனவே இனிமேல் சொல்லை மாற்றுவதை விட
நம் சொல்லகராதிகளில் திருத்தம் செய்வதுதான் ஏற்புடையதாக இருக்கும்.
தமிழன் காலப்போக்கில் இப்படியான மாற்றங்களைச் செய்து கொண்டுதானிருக்கிறான்.
அதிலும் திராவிட இயக்க வரலாறு இந்த மாற்றங்களை ஓசையின்று செய்துவிட்டது.
இராமசாமிகள் ஸ்ரீஇராமனின் பக்தர்களாக அறியப்படாமல் கடவுள் மறுப்பாளர்களின் அடையாளமாக
இன்று அறியப்பட்டிருப்பதை நினைத்துப் பாருங்கள்.
த்மிழக முதல்வர் கலைஞரின் பெயரான கருணாநிதி என்று சொன்னால் அந்தக் கருணையே உருவான
ஈஸ்வரனைக் குறிக்கும். அந்தப் பொருளில் தான் அவருக்கு அவருடைய பெற்றோர்கள் கருணாநிதி
என்று பெயர் வைத்திருக்க வேண்டும். ஆனால் இன்றும் இனிவரும் காலத்திலும் கருணாநிதி என்று
சொன்னால் அச்சொல் ஒரு கடவுள் மறுப்பாளனின் அடையாளப்பெயராக மட்டுமே நிலைத்து நிற்கும்.
இப்படியாக திராவிட இயக்கம் தமிழ்ச்சொல் வரலாற்றில் சொல்லகராதியில் எழுதாமலேயே எழுதிவிட்ட
பொருள்மாற்றங்கள் நம்மை வியப்படைய வைக்கிறது.

சித்த மருத்துவங்கள் குறித்தும் நாட்டுப்புற பாடல்கள் குறித்தும் தரமானக் கட்டுரைகள் இடம்
பெற்றிருக்கின்றன. துணைமுதல்வர் ஸ்டாலின் அவர்களே தமிழ் மருத்துவத்தின் தொன்மையும்
தனித்தன்மையும் என்று எழுதியிருக்கும் கட்டுரை இனி வருங்காலத்தில் தமிழ்நாட்டில்
சித்த மருத்துவத்துக்கு வளமையான எதிர்காலம் இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது.

குறிஞ்சி புறப்பாடலில் 99 மலர்கள் குறிக்கப்படுகின்றன. அந்த 99 மலர்களையும் அப்படியே
புகைப்படமாக்கி வண்ணத்தில் தந்திருக்கிறார்கள். அந்தப் பகுதி காலம் காலத்துக்கும் நம்
எதிர்கால சந்ததிகளுக்காக நாம் பாதுகாத்து வைக்க வேண்டிய பொக்கிஷம்.
ஏனேனில் என் கொள்ளுப்பாட்டிக்கு அந்த 99 மல்ர்களும் தெரியும் .
என் பூட்டிக்கு எல்லா மலர்களின் பெயர் தெரியும். 80 மலர்களை மட்டுமே அவள் அறிந்திருக்க கூடும்.
என் பாட்டிக்கு 80 மலர்களின் பெயர்கள் தெரிந்தாலும் அவள் அறிந்திருந்தது 50 மலர்கள் தான்.
என் தாய்க்கு 30 மலர்கள் தான் தெரியும். எனக்கு 20 மலர்களுக்கு மேல் தெரியாது.
என் குழந்தைகளுக்கு பூவரசம் பூ பூத்தாச்சு என்று காட்ட நான் தமிழ்நாட்டில் எங்கள் ஊருக்கு
அழைத்துச் சென்றாலும் பூவரசு மரம் தேடி அலைய வேண்டிய பரிதாப நிலை.
என் பேரன் பேத்திகளுக்கு எத்தனை மலர்கள் தெரிந்திருக்க கூடும் என்று கற்பனையாக
ஊகிக்கவே அச்சமாக இருக்கிறது. இந்தச் சூழலில் இந்த மலரில் இடம் பெற்றிருக்கும்
மலர்க்கண்காட்சி நமக்குப் பொக்கிஷம்தான்.



என்னடா கட்டுரைகளாக அறிமுகப்படுத்திவிட்டு கவிதைகள் பற்றி எதுவும் பேசாமல் இருக்கிறாரே
என்று உங்களில் சிலர் நினைக்கக்கூடும்! கவிதைகள் என்ற தலைப்பில் அதிகப்பக்கங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
அதனாலேயே நான் கவிதைகள் குறித்து பேசித்தான் ஆகவேண்டும் என்பதில்லை,
அதிகமாக இருப்பாதாலேயே நாம் காக்கைகளைத் தேசியப்பறவையாக தேர்ந்தெடுக்கவில்லையே!
குறைவாக இருக்கும் மயில்களைத் தானே தேசியப்பறவையாக அறிவித்தோம் என்று அறிஞர் அண்ணா
சொன்னதுதான் நினவுக்கு வருகிறது. கவிதையில் காக்காப்பிடிப்பதும் காக்கா வளர்ப்பதும்
எப்படி என்று அறிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு இக்கவிதைகள் வழிகாட்டக்கூடும்.
மற்றபடி கபிலநிலா என்ற தலைப்பில்
பழனிபாரதி எழுதிய கவிதையை மட்டுமே நான் குறிப்பிட விரும்புவது.


ஆங்கிலக்கட்டுரைகள் மிகவும் ஏமாற்றம் அளித்துள்ளன. மேற்சொன்ன தமிழனின் தொல் சீரும் சிறப்பும்
குடத்தில் இட்ட விளக்காக இருப்பதற்கு இம்மாதிரியான அலட்சியப்போக்குத்தான் காரணம்.
மெதுவாக நமக்குள்ளெ நம்மொழியில் நம் பழம் பெருமைகளைப் பேசிப் பேசி கூடிக் கலைவது
இனி தமிழின் ஆக்கத்திற்கும் தமிழர்களின் எதிர்காலத்திற்கும் எந்த வகையிலும் உதவிச்செய்யாது
என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.

தமிழ் இலக்கியத்தில் இன்று உலகத்தரம் வாய்ந்த புதினங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் சிறுகதைகள்
குறித்தும், சரித்திர நாவல்கள் குறித்தும் எழுதிவிட்டு காலத்தின் தேவைக்கருதி எழுதப்படும் குறுநாவல்கள்,
நாவல்கள் குறித்து மலர் மவுனம் காட்டுவதைத் தவிர்த்திருக்கலாம்.

திராவிட இயக்க வரலாற்றில் 85 சிற்றிதழ்கள் நடத்தப்பட்டதாக அறிகிறேன். அந்த வரலாற்றைப்
பதிவுச் செய்யும் வாய்ப்பினை இம்மலர் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

திராவிட இயக்கம் இலக்கியத்திற்கு என்ன செய்தது? என்ற கேள்வியை இன்றுவரை இலக்கிய
பிதாமகன்கள் கேட்கிறார்கள், எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். திராவிட இயக்கம் தன் 50 ஆண்டுகால சிற்றிதழ்
மூலமும் நாடகங்கள் சினிமா வசனங்கள் மூலமும் என்ன செய்தது என்பதும்
கருத்தியல் தளத்தில் திராவிட இயக்கத்தின் தண்ணீர்ப் பாய்ந்துதான் எல்லா வயல்களும் விளைந்தது
என்பதையும் இம்மாதிரியான மலர்கள் கட்டாயம் பேசி இருக்க வேண்டும், என்பதையும்
இங்கே பதிவு செய்கிறேன்.
என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதைப் பற்றி மட்டும் பேசு, என்ன எழுதியிருக்க வேண்டும்
என்பதை நீ எங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று யாராவது நினைத்தால்
அவர்களுக்கும் சரி, என் தமிழ்ச்சமூகத்திற்கும் சரி நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம்
இதுதான். நான் தமிழ்ச்சமூகத்தின் ஓர் அங்கம். தமிழக அரசு நாளைய ஆவணமாக வெளியிடும்
பதிவுகளில் என் சமூகத்தைப் பற்றிய விட்டுப்போன நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும்
நினவூட்ட வேண்டியது தமிழ்ச் சமூகத்தின் வருங்காலத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமை.
இன்னொரு முக்கியமான கசக்கின்ற உண்மை...
காக்கா பிடிப்பவர்களால் தமிழும் வளராது தமிழனும் வளரமாட்டான். திராவிட இயக்கத்திற்கு
அதுப் பெருமையும் சேர்க்காது, எங்களைப் போன்றவர்களின் குரல் கலகக்குரலாக
தனித்து ஒலித்தாலும் இந்த இயக்கத்தின் மீதும் தமிழ்ச்சமூகத்தின் மீதும் கொண்ட
அக்கறையின் காரணமாகவே எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் எதிர்நீச்சல் போடுகின்றொம்
என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

சிறப்பான சில பகுதிகள் விடுபட்டிருக்கலாம். கொடுக்கப்பட்ட நேரத்திற்குள்
முழுமையாக அனைத்தையும் பேசிவிட முடியாது என்பதைத் தவிர
வேறு எந்தக் காரணங்களும் கிடையாது.

இந்த மாநாட்டு மலரை முழுமையாக வாசிக்கவும் உங்களுடன் என் பார்வையப் பகிர்ந்து'
கொள்ளவும் வாய்ப்பளித்த எழுத்தாளர் மன்ற நிர்வாகிகளுக்கும்
இந்த மாலைப்பொழுதில் மும்பையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து
இந்நிகழ்வைச் சிறப்பித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும்
என் நன்றியும் வணக்கமும்.


(இடமும் பொழுதும்:
நவிமும்பை தமிழ்ச்சங்கத்தில் 19/9/2010 மாலை 7 மணியளவில் நடைபெற்ற
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற ஆய்வரங்க நிகழ்வில்....)















.