Tuesday, March 22, 2011

கூட்டணி



கிழவியின் இட்லிக்கடையில் நல்ல கூட்டம். எலெக்ஷன் பிரச்சாரத்திற்கு நடக்கும் எல்லா கட்சியின் கூட்டங்களும் ஊர்வலமும் கிழவியின் கடை விரித்திருக்கும் அம்மன் கோவில் மரத்தடியைத் தாண்டித்தான் போகவேண்டும். வருவோர் போவோருமாக வியாபாரம் அதிகமாக
இருந்தது. துணைக்கு பக்கத்து வீட்டு மரியம்மா பையன் சூசையை வைத்துக் கொண்டாள்.


காசு நல்ல புழங்கியது. இது கடன் சொல்லிட்டு சாப்பிடற உள்ளூர் கூட்டமில்லை.
காசு கொடுத்து சாப்பிடற வெளியூர் கூட்டம்.
இந்த வருடம் மகனின் திவசத்தை நல்ல படியா செய்யனும்னு கிழவி மனசுக்குள் நினைத்துக் கொண்டாள். கிழவியின் ஒரே மகன் இறந்து நாளை விடிந்தால் இரண்டு வருசம் ஆகப் போகிறது.இந்த மாதிரி எலக்ஷன் நேரத்தில்தான் தகராறில் அவன் வம்பாங் கொள்ளையா
போய்ட்டான்.
செத்தாலும் செத்தான்...நோய்பட்டு தூக்கிட்டுப்போக நாலு ஆள் இல்லாத
அனாதை மாதிரியா செத்தான். அவன் மகராசானா செத்தான். சும்மா சொல்லப்புடாது.
அன்னிக்கி கூட்டம்னா கூட்டம் அம்புட்டு கூட்டம். எம்மாம் பூ மாலை விழுந்திச்சி. பெரிய்ய பெரிய தலைவர் மாரெல்லாம் வந்தாங்க... நான் தலையில் அடிச்சி கூப்பாடு போட்டதைக்
கூட படம் பிடிச்சாங்க .பேப்பர்கார மகராசனெல்லாம் வந்து எம்மாம் படம் பிடிச்சாங்க தெரியுமா..
தலைவரு வந்திருந்தாரு.. நம்ம ஆளு மாதிரியே இல்ல வெள்ளைக்காரன் மாதிரி இருந்தாரு.
அவரு கூட எனக்கு என்னவோ நிறைய பணம் தரப்போறதா சொன்னாராம்.
சூசைப் பயக் கூட சொன்னான். ஆனா இரண்டு வருஷம் ஆகப் போறது. இன்னும் பணம் தான் கைக்கு வந்த பாடில்லை. பஞ்சாயத்து போர்டுக்கு அலைஞ்சதுதான் மிச்சம்..ம்.

கடைவியாபாரம் எல்லாம் முடிஞ்சது. கிழவி கூட்டமா போற ஊர்வலத்தைப்
பார்த்தாள்.


"ஏலே சூசை.. நேற்றுதானே பெரிய கூட்டம் வந்திச்சி..இன்னிக்கும் என்ன அதே கூட்டமா?

"இல்ல பாட்டி..இது வேற கட்சி..நம்ம அண்ணன் இருந்திச்சி பாரு அந்த கட்சி கூட்டம்.
நம்ம அண்ணன் செத்த அன்னிக்கி வந்தாரு பாரு சிவப்பா ஒரு தலைவரு.. அவரு இன்னிக்கி வாராராம்."

"யாரு அந்த மவராசனா..?நல்லாயிருக்கட்டும்.
ஏலே சூசை அந்த மகாராசனைப் பார்த்து நமக்கு இன்னும் பணம் வரலைன்னு சொல்வோம் வர்றியா.."

"யே கிழவி சும்மா இரு. அவருக்கு அதெல்லாம் எங்கே நினவில இருக்கப் போவுது"

"போலே அவரு என்ன நம்மூர்க்காரப் பயலுக மாதிரியா? சொன்னா சொன்ன வாக்கு தவறு மாட்டர்லே"

ஊர்வலம் துவங்கியது. கூட்டம் ஜெ ஜேனு.
கிழவி திறந்த வேனில் கை அசைத்தபடியே வந்த தலைவரைப் பார்த்துவிட்டாள். எவ்வளவு பெரிய மனுஷன்.. நம்ம நிற்கிறதைப் பாத்துப்பிட்டு
தான் கையை அசைக்கிறாரு.. கிழவியும் பதிலுக்கு கை அசைத்தாள். அவள் கண்களில் கண்ணீர் சேலை தலைப்பை எடுத்து கண்கள் ரண்டையும் துடைத்து கொண்டாள். அவர் நின்று பயணம் செய்த வேன் அவளருகில் வந்தது. தலைவரு பக்கத்தில் நிற்பது யார்?
வணக்கம் போட்ட படி நெற்றியில் சந்தணப்பொட்டுடன் நிற்பது அவந்தானே..எம்மவன் காசியை
ஆள்வைத்து அடித்துக் கொன்ற அந்த பாவிப்பயல் தானே...கிழவியின் பெற்றவயிறு பற்றி எரிந்தது.


"ஏலே சூசை..தலைவர் கிட்ட நிக்கறது அந்த கொலைகாரப் பேய்தானே.."

"ஆத்தா, கத்தாதே.. சும்மா இரு. இப்போ அவுங்க ரண்டு பேரும் கூட்டாளிங்க"

கிழவி ஆவேசம் வந்தது போல் ஓடினாள்.
"அடப் பாவிகளா.. நீங்க நல்லா இருப்பீங்களா.உங்க பிள்ளை குட்டிக நல்லா
இருக்குமா?"

இறந்து போன மகன் காசியின் முகம் கண்முன்னால் வந்து நின்றது. ரோட்டோரத்தில் தார் ரோடு போடுவதற்காக குவிந்து கிடந்த கற்களை எடுத்து ஊர்வலத்தை நோக்கி வீசினாள்.
வெறிப்பிடித்தவள் போல கூட்டத்தை தள்ளிக் கொண்டு ஓடினாள். மண்ணை எடுத்து கூட்டத்தில் தூவினாள்.
ஊர்வலம் சிதறியது. போலீசார் ஓடிவந்து கிழவியைச் சுற்றி வளையம் அமைத்தார்கள். கிழவி நடுரோட்டில் உட்கார்ந்து கொண்டு 'ஓ" வென்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

ஏதோ பெரிய்ய மனித வெடிகுண்டு வெடிக்கப் போகிறது என்று பயந்த போலீசார் கிழவியைப் பார்த்தவுடன் எரிச்சலுடன் ஒருவர் மாற்றி ஒருவர் லத்தியால் விளாசு விளாசுனு விளாசித்தள்ளினார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வளவோ கவனமாகச் செய்திருந்தும்
இந்தக் கிழவி எங்கிருந்தோ வந்து இப்படி எல்லாவற்றிலும் மண்ணை அள்ளி போட்டு விட்டாளே..நாளைக்கு டி.ஜி யி¢லிருந்து சி.எம். வரை கேட்கப்போகிற கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்ற டென்ஷனில் கிழவியைப் பின்னி எடுத்து விட்டார்கள்.

அவளுக்கு அவர்கள் கொடுத்த எந்த அடியும் வலிக்கவில்லை. அவள் கண்கள்
ஆகாசத்தைப் பார்த்து என்னவோ தேடிக்கொண்டிருந்தது.

மறுநாள் பத்திரிகைகளில் விதவிதமான செய்திகள்.
"தலைவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
தலைவரைக் கொலை செய்ய சதியா?
இது எதிர்கட்சிகளின் சதிச்செயல் .."

கிழவி என்ன ஆனாளோ தெரியவில்லை.

(2005 ல் வெளிவந்த என் சிறுகதை தொகுப்பு மின்சாரவண்டிகள் நூலில்
இடம்பெற்றிருக்கும் கதை. ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் கூட்டணி
கூத்து நடக்கும் போதெல்லாம் இந்தக் கதையில் வரும் அந்த மூதாட்டியின்
அழுகுரல் காதில் விழுகிறது...)




3 comments:

  1. தயவு செய்து எழுத்து font வண்ணத்தை மாற்றுங்கள்!

    ReplyDelete
  2. சாக்கடைகளின் சங்கமம் காண சகிக்கதாது.
    அருமையான கதை

    ReplyDelete
  3. 'மயிரிழையில் தப்பித்தார்'என்று உண்மையை ஆராய்கின்ற பத்திரிக்கை, பொய்யானச்செய்தியை உண்மையைப்போல் எழுதுவது. ஊடகங்களும் இப்போது ஒரு கட்சி செய்கினற எல்லா வேலையிலும் ஈடுபடுகிறது என்பதற்கு ஒரு சான்றாண்மையாக இறுக்கிறது
    இக்கதை.

    ReplyDelete