புகைப்படம் எடுத்தல் என்பது ஒரு கலையா? புகைப்படம் ஒரு கலைவடிவமா? என்ற கேள்வி முதல் காமிரா கண்டுப்பிடித்த காலம் முதல் இன்றைய டிஜிட்டல் காமிரா காலம்வரை தொடர்ந்து விவாதப்பொருளாகவே இருக்கிறது. எல்லா புகைப்படங்களும் கலைவடிவங்கள் அல்ல. காமிராவை கையில் வைத்திருப்பவர்கள் அனைவருமே காமிரா கலைஞர்களும் அல்லர்.
கலையுள்ளம் கொண்டவர் கைகளில் காமிராவின் லென்சுகள் கலைவடிவங்களை உருவாக்குகின்றன. இதில் யாருக்கும் ஐயப்பாடு இல்லை. அவர் கையிலிருக்கும் காமிரா என்றைக்குமாக மறைந்துப்போன மீண்டும் உருவாக்க முடியாத ஒரு தருணத்தை அத்தருணத்தின் உணர்வுக்கு உயிர் கொடுக்கிறது. அப்புகைப்படம் காலத்திலிருந்து ஒரு கணத்தை பிடுங்கி எடுத்துக் கொண்டு, வாழ்க்கை இயக்கத்தை சில நொடிகள் நிறுத்தி அதை நிரந்தரமாக்குவதில் ஒரு சிருஷ்டிக்குரிய படைப்பாக மாறுகிறது.
புகைப்படம் எடுத்தல் என்பது மேக்கப் கலையாமல் உடை நேர்த்தியை அதன் வண்ணங்களை , தொடர்புடைய நிகழ்ச்சிகளை எடுப்பது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞன் அத்தருணத்தின் உணர்வை அதைப் பிரதிபலிக்கும் மனித முகங்களை மனித உணர்வுகளின் ஆழத்தை மிகச் சரியாக தன் காமிரா கண்களால் பார்க்கிறான். கண நேரங்களில் மறைந்துவிடும் அத்தருணங்கள் அவன் காமிரா வழியாக உயிர்ப்பெற்று என்றும் நிலைத்திருக்கும் நினைவுகளின் தடங்களாக உணர்வுகளின் ஆவணமாக மனிதர்களோடு வாழ வைத்துவிடுகிறான்.
இம்மாதிரியான ஒரு புகைப்பட கலைஞன் தன் புகைப்பட தொழிலின் அனுபவங்களை எழுதும்போது அந்த எழுத்துக்கும் கலை அந்தஸ்த்து தானாகவே வந்து சேர்ந்துவிடுகிறது. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் அண்மையில் நான் வாசித்த ஜவஹர் ஜி எழுதிய “ கனவினைப் போலொரு காலம் “ .
ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதைப் படைப்பு போல எழுதப்பட்டிருக்கும் போட்டோகிராபரின் சுயசரிதை துணுக்குகள். ஒரு காமிராவின் பயண அனுபவங்கள். போட்டோகிராபரின் சுயசரிதை போட்டோகிராபரின் பயணம் இரண்டும் கலந்த சிறுகதை வடிவத்தில் இருக்கும் கதைகள் போன்ற உண்மைகள். கதைகளில் புனைவுகள் முதலிடம் பெறும். ஆனால் காமிரா கதைகளில் நிஜங்கள் முதலித்தில் உட்கார்ந்து கொண்டு புனைவுகளை தொட்டும் தொடாமலும் ஒரு கனவு காலத்தை உருவாக்குகின்றன.
காமிரா சந்தித்த மனிதர்களில் நாமும் இருக்கிறோம். நம் வீட்டு காது குத்து, கல்யாணம், கல்யாண வீட்டில் தகறாறு, எல்லாமும் வாசிக்கும் ஒவ்வொருவருடனும் நெருங்கிய தொடர்புடையதாக இருப்பதால் காமிரா பேசும் கதைகள் வாசிப்பவரின் கதைகளாக நொடியில் மாறி விடுகின்றன.
காமிராக்கள் சந்தித்த பெரியம்மா, புது மாப்பிள்ளை, மாப்பிள்ளைக்கு அலங்காரம் செய்வதாக அலட்டும் மாமா மச்சான்கள் அனைவரும் நம் வாழ்வில் நம்மோடு இருப்பவர்கள். எப்போதாவது கள்ளான்களும் வந்துப் போகிற வாழ்க்கை!
மீனவ சமூகத்தில் காணாமல் போனவர்களைப் பற்றிய கதைகள் மற்றவர்களுக்கு வாசித்து மறந்துப் போகும் கதைகளாக இருக்கலாம். ஆனால் நெய்தல் நில வாழ்வில் ஒவ்வொரு வீட்டிலும் இந்த மாதிரி புகைப்படங்கள் பூ வைக்கலாமா, உயிரோடு இருக்கிறாரா என்ற எதிர்ப்பார்ப்பிலேயே முடிந்துப் போகின்றன. இவை எல்லாமே அந்தந்த வீட்டு நிகழ்வுகளுக்கு ஒரு போட்டோகிராபராக போகும் ஜவஹரின் எழுத்துகளில் வட்டாரத்தன்மையுடன் வெளிப்படுகிறது. புகைப்படங்களை விட புகைப்படங்களில் வாழும் மனிதர்களின் கதைகள் அவைகளைக் கவனிக்கும் கலையுள்ளம் இதெல்லாமே சேர்ந்துதான் காமிரா கண்களில் படமாகி இருக்கும். இக்கதைகள் அந்தப் புகைப்படங்களில் முன்னுரைகளாக அப்புகைப்பட மனிதர்களின் பின்புலமாக ஒரு கனவைப் போல புகைப்படங்களோடு சேர்ந்து பேச ஆரம்பிக்கிறது.
போட்டோகிராபரின் பயணங்கள் ஒரு பத்திரிகை செய்தியைப்போல எழுதப்படவில்லை. சுயசரிதையின் சாரத்துடன் ஒரு சிறுகதை எழுத்தாளரின் கதைப்படைப்புகளுக்கு நிகராக எழுதப்பட்டிருக்கிறது, அதனால்தான் போட்டோகிராபர் ஜவஹர் ஜி எழுதுகிறார், “சத்திரத்தின் அருகில் ஒரு பெரிய ஆலமரம் ஓங்கி வளர்ந்திருந்தது. பெண் சாமி கொண்டாடிக்குச் சடை பிடித்து கிடப்பதைப் போல. அதன் விழுதுகள் அடர்ந்து நீண்டு தரையினைத் தொடுவது போலத் தொங்கின. காற்று மரத்தின் இலைகளைக் கிழித்துக்கொண்டு வீசியது “ (பக் 92)
“காட்சிக்கும் கருவிக்குமிடையில் உள்ள வெளியில்தான் கலைஞன் இயங்குகிறான். அவன் இயங்குவதற்கான ஆற்றலை கற்றதன் மூலமாகப் பெறுகிறான். வாழ்விலிருந்தும் சமூகத்திலிருந்தும் கற்றுக்கொள்கிறான் “ என் கிறார். ஜவஹர் ஜி. முன்னது அவர் எடுத்தப் புகைப்படங்கள் என்றால் இந்த நூலின் பக்கங்கள் அவர் சமூக்கத்திலிருந்தும் ஒரு போட்டோகிராபராக வாழ்விலிருந்து கற்றுக் கொண்டது எனலாம்
போட்டோகிராபரின் புத்தகத்தில் அவர் காமிராவின் பக்கங்கள் – ஒரு புகைப்படம் கூட இடம்பெறவில்லை என்பது ஒரு ஏமாற்றமாக இருந்தது என்பதையும் பதிவு செய்தாக வேண்டும்.
ஜவஹர் ஜி என்ற புகைப்பட கலைஞருக்கு வாழ்த்துகள்.
நூல் : கனவினைப் போலோரு காலம்
ஆசிரியர் : ஜவஹர் ஜி.
வெளியீடு : வேரல் புக்ஸ் ,ஜனவரி 2026
பக் 104. விலை : ரூ 150.

No comments:
Post a Comment