Wednesday, March 7, 2012

மகளிர் தினமும் காமட்டிபுரமும்


இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 4 பெண்கள் பாலியல் தொழில்
செய்ய ஆரம்பிக்கிறார்கள், அவர்களில் 3 பேர் நிர்பந்தம் காரணமாக இத்தொழில்
செய்ய வந்தவர்கள் .அதிலும் 35.47% பெண்கள் 18 வயது கூட நிரம்பாதவர்கள்
என்பதை இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பக அமைச்சர்
ரேணுகா சவுத்ரி ஒத்துக்கொள்கிறார்.
அடிமைத்தனத்தையும் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து பணம்
சம்பாதிப்பதையும் எதிர்த்து சட்டங்கள் பல எழுத்தில் இருக்கின்றன. இப்பெண்களின்
புனர் வாழ்வுக்காக பல்வேறு நலத்திட்டங்கள், சட்டங்கள், ஆய்வுகள்,
அறிக்கைகள், தொண்டு நிறுவனங்கள் என்று வரிசையாக ஒரு பக்கம்
அணிவகுப்பு நடந்தவண்ணம் இருக்கின்றது.
எனினும் சுதந்திரம் பெற்று சட்டங்கள் மனித உரிமைகள் என்ற தளத்திற்கும்
அப்பால், கற்பு என்ற பெண் ஒழுக்கத்தை அதி தீவிரமாக கொண்டாடும்
இந்திய மண்ணில் இன்னும் இருக்கின்றன வேஷியா கிராமங்கள்.
தமிழில் அப்படியே சொல்வதனால் தேவடியா கிராமங்கள்.அப்படித்தான்
அவை அழைக்கப்படுகின்றன.
குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்திலிருந்து 210 கி,மீ தொலைவில் இருக்கும்
வாடியா கிராமம் தான் வேஷியா கிராமம் என்றழைக்கப்படுகிறது.
பல நூறு வருடங்களுக்குப் பின் வருகின்ற மார்ச் மாதம் 11 ஆம் தேதியில்(11/3/2012)
தான் முதல் முறையாக இங்கிருக்கும் பெண்கள் 15 பேருக்கு முறைப்படி
திருமண வைபவம் நடக்க இருப்பதாகவும் அதற்கு அழைப்பிதழ் தயாராகி
அனுப்பப்பட்ட பின், இத்திருமண நிகழ்ச்சியை முன்னின்று நடத்தும்
தொண்டு நிறுவனத்திற்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவமும்
நிகழ்ந்திருக்கிறது. செய்திகளுக்காக அலையும் இன்றைய ஊடகங்களுக்கு
இச்செய்தி பெருந்தீனியாக இருப்பதும் என்னவோ இந்த ஓரிடத்தில்
மட்டுமே இம்மாதிரி கிராமம் இருப்பது போலவுமான தோற்றம்
ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
மனித இன வரலாற்றின் மிகப் பழமையான இத்தொழில் நடக்காத
மாநில்மே கிடையாது என்பது தான் உண்மை. பாரதமாதாவும் இதற்கு
விதிவிலக்கல்ல.
ஆடலும் பாடலுமாக வாழ்ந்த பெண்கள் பேரரசர்களின் ஆசைநாயகிகளாக
இருந்தார்கள் என்பதும் அவர்கள் அரசியலிலும் பொருளாதரத்திலும்
மிகவும் செல்வாக்குடையவர்களாக விளங்கினார்கள் என்பதும்
வரலாற்றில் மறுபக்கமாக இருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை.
ஜஹாங்கீர், அவுரங்கசீப் முதல் தஞ்சையை ஆண்ட அரசர்களுடன்
மிகவும் அதிகாரம் செலுத்திய அக்காமார்கள் வரை … …
மும்பையை இன்றுவரை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் தாதாக்களின
காதலிகளைப் பற்றி வெளிவந்திருக்கும் ஹூசைன் சைதியின்
மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை என்ற சமகால வரலாறுவரை
பாலியல் தொழிலும் பெண்களும் பற்றிய பல்வேறு செய்திகளையும்
அதற்கான காரண காரியங்களையும் அவரவர் பார்வையில்
பார்த்துக் கொண்டும் விமர்சித்துக் கொண்டும் இருக்கின்றோம்.
இச்சூழலில் தான் வாடியா கிராமம் குறித்த மேற்கண்ட செய்தி
பத்திரிகை உலகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருப்பதை
நாம் கவனிக்க வேண்டும்.
இப்பகுதியில் வாழும் 80 சரனியா ஆதிவாசி குடும்பங்களில்தான்
இத்தொழில் த்லைமுறை தலைமுறையாக தொடர்ந்து வருகிறது.
தொடர்ந்து போரில் ஈடுபட்ட ரஜபுத்திரர்களின் பிறப்பு விகிதம்
போர் ம்ரணங்கள் காரணமாக மிகவும் குறைந்த நிலையில் குழந்தை
இல்லாத பெண்ணுடன் , அவள் விருப்பத்துடன் இன்னொரு ஆண்
உடலுறவு கொள்ளவும் குழந்தையைப் பெற்றெடுக்கவும் இச்சமூகம்
ஏற்படுத்திக்கொண்ட ஒரு சடங்காகவே ஆரம்ப காலத்தில் இம்முறை
இருந்தது என்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆனால்
அம்மாதிரி ஏற்பாடுகள் காலப்போக்கில் மறக்கப்பட்டு கைவிடப்பட்ட
நிலையில் இப்பழக்கம் மட்டும் மாறாமல் அச்சமூகத்தில் இருந்ததாகவும்
பின்னர் அதுவே அவர்களுககான தொழிலாக மாறியதும்
அச்சமூகத்தில் பிறந்த ஒவ்வொரு பெண்ணும் இத்தொழில் செய்ய
நிர்பந்திக்கப்பட்டதும் நிக்ழ்ந்தது.
கொடா வழக்கம் , (goda system) என்றழைக்க்ப்படும் வழக்கத்தில்
நாக்ரா செருப்பை அப்பெண்ணின் படுக்கையறை வாசலில் வைத்திருந்தால்
அப்பெண் வேறொரு ஆடவனுடன் படுக்கையறையில் இருக்கிறாள் என்பதை
உணர்த்தும். அதிலும் குறிப்பாக அப்பெண்ணின் கணவனுக்கு இம்முறையால்
இது அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்ததாக தெரிகிறது.
அரச ப்ரம்பரை, ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், நிலக்கிழார்கள்
முதல் இன்றைய அரசியல் வாதிகள், தாதாக்கள் வரை இதில் அடக்கம்.
குஜராத் அரசாங்கம் 208 ஏக்கர் நிலத்தை இச்சமூகத்தின் ந்லத்திட்டத்திற்கு
கொடுத்து உதவியது. ஆனால் அத்திட்டமும் முழுமையாக வெற்றி பெறவில்லை.
இத்தொழில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்தது, இருக்கிறது.
ஒவ்வொரு இரவும் 3 முதல் 4 ஆண்கள் வரை இப்பெண்களின்
படுக்கையறைக்கு வருகிறார்கள், மாதவருமானம் 2000 வரை
இதன் மூலம் இப்பெண்கள் சம்பாதிக்கிறார்கள்.
பாரிய பெண்கள், நாட் பெண்கள், கொல்டா & டாம் பெண்கள், டெராடூனிலிருக்கும்
ஜானுசர், வடகாசியிலிருக்கும் ரபைய் பெண்கள் என்று பல்வேறு ஆதிவாசி
இனக்குழு பெண்கள் தங்கள் பெற்றொரால், கண்வனால், சகோதரனால்
இத்தொழிலுக்கு கொண்டுவரப்படுகிறார்கள். 1000 ரூபாய் கடன் வாங்கி
இவர்களில் ஒருத்தியைத் திருமணம் செய்பவன் இரண்டொரு ஆண்டுகளின்
வாங்கியக் கடனை திருப்பிக்கொடுக்க முடியாமல் இப்பெண்களை
ஆடு மாடுகளைப் போல விற்றுவிடுகிறான். வாங்கியவன் பயன்படுத்திவிட்டு
அவனும் விற்றுவிடுகிறான், இப்படியாக இந்த விற்பனைச் சங்கிலி மாநில
எல்லைகளை மட்டுமல்ல, எல்லைக்கோடுகளைத் தாண்டி பாகிஸ்தான்,
ஆப்கானிஸ்தான் என்று நீண்டு கொண்டே போகிறது
வாங்குபவன் இருக்கும் வரை எந்த ஒரு பொருளின் விற்பனையையும்
எந்த ஒரு சட்டமும் தடை செய்துவிட முடியாது.! பெண் விற்பனைப் பொருளா?
கேட்காதீர்கள்… விற்கப்படுகிறாள் என்பது தான் உண்மை.
இந்தக் கசப்பான உண்மையை கற்பொழுக்கத்தை த்லையில் வைத்துக்
கொண்டாட கற்றுக் கொடுத்திருக்கும் இசசமூகம் அவ்வளவு எளிதில்
வெளிப்படையாக ஒத்துக்கொள்வதில்லை.
அத்னால் தான் இத்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு முறையான
ஆயுள்காப்பீடு வசதியும் மருத்துவ வசதியும் செய்து கொடுக்கப்பட
வேண்டும் என்ற குரல் எழுந்தப் போது அப்படிக் குரல் கொடுப்பவர்களை
எல்லாம் வேசியராக விமர்சிப்பதன் மூலம் தங்கள் கற்பைக்
காப்பாற்றிக் கொண்டது நம் பண்பாடு..
இதோ அவள் பேசுகிறாள்:
.
உங்கள் கற்பை பிரசவித்தக்
கருவறையில் தான்
நானும் பிறந்தேன்.
உங்கள் கண்ணகி
என்னுடன் பிறந்தவள்
என்பதால்
எனக்கு எதுவும்
பெருமை வரப்போவதில்லை.
ஏகபத்தினி விரதனாக
உங்கள் ஸ்ரீராமனை
கட்டாயப்படுத்தியக்
காரணத்தாலேயே
சீதை நான்
பாஞ்சாலியாகப் பிறந்து
பரிதவித்தேன்
உங்கள் பாண்டவர்பூமியில்
கற்பு(உ)டன் பிறந்த
என்னை
இருட்டடிப்பு
செய்வதன் மூலமே
தங்கள் கற்பைக்
காப்பாற்றிக் கொண்டன
உங்கள் காவியங்களும்
கதைகளும்.
என்னிடம் முதலில் வந்தவன்
உங்கள் ஆதிசிவன்.
இப்போது வந்துப் போனவன்
அவன் வாரிசுகளின்
வப்பாட்டி பேரன்
காமவேட்டையில்
கிழிந்து தொங்கும் யோனிகளுக்கு
எப்போதுமே வயதாவதில்லை!
என் பெயர் பத்ரகாளி
என்றாலும் பயப்படாதீர்கள்
என் பெயருக்கும்
உங்கள் தேவிக்கும்
சம்பந்தமே இல்லை.
பாரதநாடு பழம்பெரும்நாடு
அதையும்விட
பழமையானது
என் தொழில்
என் மூலதனம்
என் சந்தை
என் கதை.
நான் -
உங்கள்
பத்தினிக்கு முன்பிறந்த பரத்தை.
பெண்கள் தின வாழ்த்து சொல்லும்
பெண்டீரே..
எனக்காக நீங்கள் போராட வேண்டாம்
கற்புடைய உங்கள் கணவன்மார்
உங்களைத் தீக்குளிக்க வைத்துவிடும்
அபாயத்திற்கு நீங்கள்
அச்சப்படுவது நியாயம்தான்.
காந்திய தேசத்தில்
ஆண்டுக்கு ஒருமுறையாவது
மதுவிலக்கு இருப்பது போல
இன்று மட்டுமாவது
எனக்கும்
விடுமுறை வேண்டும்
“மகளிர்தினம் கொண்டாட”
——————————

Monday, March 5, 2012

வரங்களே சாபங்களான காங்கோ பெண்களின் தேசம்

காங்கோ ஆப்பிரிக்கா கண்டத்தில் நடுப்பகுதியில் இருக்கும் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரியநாடு. இந்த நாட்டின் மண்வளம் கொள்ளை அடிக்கப்படும் ஆப்பிரிக்காவின் பெயரிடப்படாத யுத்தக் களத்தில் வல்லாங்கு (Rape) செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை சற்றொப்ப 2 இலட்சம். 2009க்குப் பின் ஒவ்வொரு மாதமும் வறுமையிலும் பிணியிலும் 45000 பேர் இறந்து போகிறார்கள். இதுவரை 900,000 முதல் 5400,000 வரை இறந்திருக்கலாம் என்று கணக்கிடுகிறார்கள்.


இந்த மக்கள் செய்த பாவம் என்ன? வளமிக்க நாட்டில் பிறந்ததைத் தவிர! பொன் கொழிக்கும் பூமி என்பார்கள் நம்நாட்டில். உண்மையில் காங்கோ பொன் கொழிக்கும் பூமிதான். பொன் மட்டுமல்ல, வைரமும் சேர்ந்து தான் அந்த மண்ணை அந்த மண்ணின் மக்களை மரணத்தின் பிடியில் தள்ளியது. இந்தப் பொன்னும் வைரமும் போதாது என்று அந்த மண்ணின் கனிமவளங்கள் அந்த தேசத்தை இன்று சபிக்கப்பட்ட நிலமாக , பாலியல் வன்கொடுமை பூமியாக பெண்கள் வாழ்வதற்கெ தகுதியற்ற ஒரு தேசமாக மாற்றிவிட்டது. எந்த ஒரு நாட்டிலும் அதன் வளங்கள் அந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரம். அந்த நாட்டு மக்களின் வளமிக்க வாழ்வுக்கு உத்திரவாதம் என்பது தான் பொதுவான நம்பிக்கை. ஆனால் யதார்த்த நிலையில் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் மண் வளங்களே அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை கொள்ளை அடித்து அவர்களைக் கொத்தடிமை ஆக்கிவிட்ட சோகம் முதலாளித்துவ உலகத்தின் மறுபக்கம்.

The Greatest Silence: Rape in The Congo (Official Trailer)




காங்கோவின் உள்நாட்டு யுத்தம் ஆப்பிரிக்க கண்டத்தின் உலக யுத்தமாக பேசப்படுகிறது. இரண்டாவது உலகப் போருக்குப் பின் மிகவும் அதிகமான மனிதர்களையும் அவர்கள் வாழ்வாதாரங்களையும் கொன்று கொள்ளையடித்த யுத்த பூமி காங்கோ. நிலையான அரசும் ஆட்சியும் இல்லாத நிலையும், பெருகிக் கொண்டிருக்கும் ஆயுதம் தாங்கிய போர்க்குழுக்களும் அவர்களுக்கு இடையிலான அதிகாரச் சண்டைகளும் அரசு இராணுவமே தன் குடிமக்களைச் சித்திரவதைச் செய்து சுரங்கங்களில் வேலைக்கு அமர்த்தி அடிமைகளாக்கும் கங்கானிகளாக செயல்படுவதும் இராணுவ அதிகாரிகள் நாட்டில் நடக்கும் வன்கொடுமைகளுக்கெல்லாம் தளபதிகளாக இருப்பதும் நம் எவருடைய கற்பனைக்கும் எட்டாத கறைபடிந்த நிகழ்கால வரலாற்றின் பக்கங்கள்.


தோண்டிய இடமெல்லாம் கனிம வளங்கள். தங்கமும் தாதுப்பொருட்களும். தோண்டிய பள்ளத்தில் கொட்டிக் கிடக்கும் மண் குவியல்களில் தங்கத்துண்டுகளைத் தேடி அலையும் குழ்ந்தைகளும் பெண்களும். கல்வி, மருத்துவமனை இதெல்லாம் அவர்களுக்கு கன்வுலகம்… அந்தச் சுரங்கங்களில் தோண்டி எடுக்கப்படும் தாதுக்கள் இன்றைய அறிவுலக கண்டுபிடிப்புகளின் இன்றியமையாத கச்சாப்பொருளாக இருப்பது தான் அந்தப் பூமியில் அமைதிப் புறாக்களை வேட்டையாடும் அம்புகளாக இருக்கின்றன. நம் கைபேசிகள், கணினி, காமிரா, குறுந்தகடு, இதர மின்னணு சாதனங்கள் அனைத்திலும் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான தாதுப்பொருட்கள் மிக அதிகமாக இங்கிருந்து தான் களவாடப்பட்டு உலகச் சந்தைக்கு வருகின்றன அதுவும் அடிமாட்டு விலையில். உதாரணமாக மூன்று ‘டி’ தாதுக்களைச் சொல்லலாம். டிண், டாண்டலும், டங்க்ஸ்டன் (The three Ts, Tin, Tantalum, Tungsten) டிண் என்ற கனிமம் கைபேசிகளின் சர்க்யூட் போர்டில் பயன்படுத்தப்படுகிறது. டாண்டலும் அதாவது ஓர் (ore) என்ற கனிமம் எலெக்ட்ரானிக் டிவைஸில் யன்படுகிறது.
டங்க்ஸ்டன் அதிர்வலைகளை (வைப்ரேஷன்) உருவாக்க பயன்படுகிறது.
இக்கனிமங்களை ஆஸ்திரேலியா , பிரேசில் நாடுகளிருந்து வாங்கிவதை விட காங்கோவிலிருந்து கள்ளத்தனமாக கடத்தப்பட்டதைச் சந்தையில் வாங்குவது எளிதாக இருப்பதுடன் முதலாளித்துவ பெருமுதலைகளுக்கு கொள்ளை லாபத்தையும் கொடுக்கிறது., விளைவு..? அவர்கள் கொடுக்கும் ஒவ்வொரு டாலரும் அந்த மண்ணின் ஒரு குழந்தையை அடிமையாக்குகிறது, ஒரு மணி நேரத்தில் 48 பெண்களை வல்லாங்கு (Rape) செய்கிறது. அந்ததேசத்தில் 70 மில்லியன் பெண்களைக் வல்லாங்கு செய்து இன்றைக்கு கொத்தடிமைகளாக்கி இருக்கிறது. 2006-2007ல் மட்டும் சற்றொப்ப 400,000 பெண்கள் வல்லாங்கு கொடுமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்


காங்கோவிலிருந்து கடத்திக் கொண்டுவரப்படும் கனிமங்களை வாங்குவது அந்த தேசத்தின் ஆயுதம் தாங்கிய பல்வேறு குழுக்களுக்கே போய்ச் சேர்வதால் அந்தப் பணம் ஆயுதம் வாங்கவும் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளவும் மேற்கத்திய நாடுகள் தூக்கி எறியும் எலும்புத் துண்டுகளாக இருக்கின்றன. இங்கிருக்கும் சுரங்கங்களில் 90% க்கும் மேலானவை அதிகாரப்பூர்வமற்ற தனிப்பட்ட ஆயுதக் குழுக்களின்கைகளில் இருக்கின்றன. இக்குழுக்கள் சுரங்கப பணிகள், அதற்கான சர்வதேச விதிகள் மனிதஉரிமைகள் சட்டங்கள் எதையும் மதிப்பதில்லை. மிகவும் மேசமான சூழலில் இச்சுரங்கங்களில்அடிமைகளாக வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் இந்த நாட்டின் வளமிக்க அந்த மண்ணின் மைந்தர்களும் அவர்கள் பெண்ணிரும் குழந்தைகளும். காங்கோவின் கலாச்சாரமும் கணவன் மனைவி உறவும் கூட கற்பு என்று சொல்லப்படும் மூன்றெழுத்தில் தன் மூச்சிருப்பதாக நினப்பதால் அந்தக் கற்பின் மூச்சுக்காற்றே இந்தப் பெண்களை அடிமைகளாக்கி இச்சுரங்கத்தில் தள்ளிவிட்ட கொடுமைக்கு காரணமாகவும் இருக்கிறது. மனைவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டால் அது அச்சமூகத்தில் அந்த ஆண்மகனுக்கு பெருத்தஅவமானமாக இருப்பதால் அப்பெண்ணை அவள் கணவன் ஒருபோதும்சேர்த்துக் கொள்வதில்லை. கற்பழிக்கப்பட்ட மனைவி அனாதையாகிவிடுகிறாள் தனியாக அல்ல, அவள் அவனுக்குப் பெற்ற அவன் குழந்தைகளுடன் அவள் அனாதையாகி விடுகிறாள். அப்பெண்ணின் குழந்தைகள் காங்கோ சுரங்கங்களில் அடிமைகாளாக இருப்பதால்தான் அமெரிக்க ஐரோப்பிய குழந்தைகள் வீடியோ கேம்ஸ்களில் எதிர்ப்பவர்களை எல்லாம் சுட்டுத்தள்ளிவிட்டு ஆனந்தமாக தங்கள் இலக்கை அடையும் விளையாட்டுகளை விளையாடிக் களித்துக் கொண்டிருக்கிறார்கள்.


இந்தப் பெண்களை இராணுவமும் இராணுவக்குழுக்களும் ஆயுதம் தாங்கிய பல்வேறு குழுக்களும் அடிமைப்படுத்த பயன்படுத்த வேண்டிய போராயுதம் உடல்சார்ந்த பெண் பாலியல் உறுப்பைச் சிதைப்பதாகமட்டுமே இருப்பதால் அவர்களுக்கு அது மிகவும் எளிதானதாக இருக்கிறது. இங்கு நடக்கும் கற்பழிப்புகள், உலக மனித வரலாற்றில் இதுவரை நடந்திராத, கண்டிராத கற்பனை செய்ய முடியாத கொடுமைமிக்கவை என்கிறது ஐ.நாவும் பொதுமக்கள் நலன் பற்றிய அமெரிக்க ஏடும். ஆயுதம் தாங்கியவர்கள் கூட்டாக சேர்ந்து ஒரு பெண்ணைக் பாலியல் வல்லுறுவு செய்வதும் அவள் யோனியில் துப்பாக்கியால் சுடுவதும் இன்னும் இவ்விதமான எழுத முடியாத பல்வேறு சித்திரவதைகளும் செய்வதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. காங்கோவின் சாலைகளில் “பெண்களைக் வல்லாங்கு செய்யாதீர்கள், பலர் சேர்ந்து ஒரு பெண்ணை வல்லாங்கு செய்யாதீர்கள்: ” என்று கேட்டுக்கொள்ளும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருக்கின்றன என்றால் உலகத்தில் இப்படி ஒரு தேசத்தை எந்த ஒரு மனிதராலும் கற்பனைசெய்ய முடியாது தான். கண்வன் முன் மனைவி பலரால் வன்புணர்வு செய்யப்படுவதும் தந்தை மகளையும் சகோதரன் உடன் பிறந்த சகோதரியையும் வன்புணர்வு செய்ய கட்டாயப்படுத்தும் கொடுமைகளும் இரவு பகல் போல அன்றாட நிகழ்ச்சிகளாக அந்த மண்ணில் நடந்துக் கொண்டிருக்கின்றன.

அவள் பெயர் புக்காவு. (Bukavu) அவள் வாழைப்பழமும் வேர்க்கடலையும் விற்று பிழைக்கும் எளியப் பெண். அவளைப் பலர் சேர்ந்து பாலியல் வன்முறைசெய்தனர் அவள் இரண்டு வருடங்களாக கிழிந்த யோனியுடன் ரத்தக் கசிந்து சீழ்ப் பிடித்த நாற்றமெடுக்கும் யோனியுடன் நடந்தாள்…நடந்தாள்…இறுதியாக அவள் தன்சி மருத்துவமனையை வந்தடையும் போது அவளுக்கு முன் 80 பெண்கள் அவளைப் போலவே கிழிந்த யோனியுடன்…. காத்திருந்தார்கள் யோனிகளை தைத்து ஓரளவு சரிப்படுத்தும் அறுவைச் சிகிச்சைக்காக. அந்த யோனியைத் தைக்கும் அறுவை ஒரு வாரத்திற்கு 5 பெண்களுக்குத் தான் செய்யப்படும், அதற்கு மேல் செய்கின்ற வசதி அந்த மருத்துவமனையில் இல்லை. புக்காவுக்கு யோனி தைக்கப்பட்டதா? தெரியவில்லை. அவள் என்னவானாள்…? யாருக்கு கவலை அதைப் பற்றி!


பாஷி மருத்துவமனையில் 250 நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் அங்கே பாலுறுப்பு சிதைவுகளை சரி செய்ய நடக்கும் அறுவைச்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் குழுச்சண்டையில் போரில் காயம்பட்ட வீரர்களின் எண்ணிக்கையைவிட மூன்று மடங்மு அதிகம். சிதைந்த யோனியை தைக்கும் அறுவை/பாலுறுப்பு சிதைவுகளை சரி செய்ய ஒரு பெண் ஆறுமுறை அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் . (women go to 6 operations to repair the sexual injuries)



*CONGO – the resource curse
* UN Official called the country ‘ THE RAPE COUNTRY OF THE WORLD’
* UN has called the country ‘ THE CENTRE OF RAPE AS A WEAPON OF WAR’
* CONGO THE WORST PLACE ON EARTH TO BE A WOMAN.




மூன்று மாதத்திற்கு ஒரு புதிய கைபேசியை அறிமுகப்படுத்துகின்றன நம் கைபேசி கார்ப்பரேட்டுகள். கைபேசிகளிலும் மின்னணு சாதங்களிலும் பயன்படுத்தப்படும் பொருள்களை வாங்கும் சந்தையில் அப்பொருட்கள் எங்கிருந்து வந்தன என்பதைக் கண்டறியும் சப்ளை செயின் சாத்தியமில்லை என்கிறார்கள் கைபேசி கார்ப்பரேட் அதிகாரிகள்.
நாமோ பழைய கைபேசிகளுக்கு இப்படியும் விடை கொடுக்கலாம் என்ற விளம்பரங்களை ரசித்துக் கொண்டிருக்கிறோம். இன்று தங்க நகைக்கடை இல்லாத ஊரே இல்லை, தங்கம் அணியாத பெண் இருக்க முடியுமா? . தங்கமும் வைரமும் இல்லாத திருமணமா?

புதிய பொருளாதர சந்தையில் அமெரிக்காவின் பொருளாதர சரிவால் தங்கம் மட்டுமே சரியான முதலீடாகிவிட்ட நவீன பொருளாதர இந்தியக் கண்டுபிடிப்பு! இந்தியப் பொருளாதரத்தின் பெரும்பலமாக இருப்பதை எண்ணிப் பூரிப்படைந்து கொண்டிருக்கிறோம். வரும் நிதி ஆண்டில் தங்கத்தின் இறக்குமதி அதிகம் இருக்கும் என்கிறார்கள் எப்போதும் நம் பொருளாதர சந்தைப் புலிகள்!

இந்தச் சூழலில் காங்கோ என்ற தேசம் நாம் வாழும் பூமி உருண்டையில் தான் இருக்கிறது என்பதும் இந்தக் கதைகள் எல்லாம் உண்மைக்கதைகள், அதிலும் நாம் வாழும் காலத்தில் நடந்து கொண்டிருக்கும் சமகால
வரலாற்று நிகழ்வுகள் என்பதும் எந்த தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும்?

இதோ என் கைபேசி அழைக்கிறது… காங்கோ பெண்களின் கதை கேட்டு.


.
(பின்குறிப்பு: documentary ‘blood in the mobile ‘ directed by Frank Piasecki Poulsen
this film shows the connection between our phones
and the civil war in Congo. blood in the mobile is a film about our responsibility for the conflict
in the Congo and about corporate social responsibility)





Thursday, February 23, 2012

ஒருநாள் சாய் காஃபி செலவு ரூபாய் 48,000...!



அந்த மாநிலத்தில் தொழில் வளர்ச்சி இல்லை, மண் வளமில்லை,
வறண்ட பூமி.. அதுமட்டுமல்ல... இந்தக் காரணங்களாலேயே அந்த மாநில
அரசு டைரியோ குறிப்பேடோ ( diary or directory)வெளியிடுவதில்லை. அவ்வளவு
வறுமையாம். அதனால் எளிமையாம்! போனால் போகிறது என்று
அந்த மாநில முதல்வர் அவரைப் பார்க்க வருகிறவர்களுக்கு கூட
காந்தி டைரி தான் கொடுப்பார். அந்த காந்தி டைரியிலும் மாநில
அரசு குறித்தோ அதிகாரிகள் பற்றிய குறிப்ப்களோ அரசு துறைகளின்
தொலைபேசி எண்களோ இத்தியாதி எந்தவிதமான குறிப்புகளும்
கிடையாது.
அப்படிப்பட்ட இந்திய மாநிலமான ராஜஸ்தானில் தான் முதல்வர்
அசோக் ஹெக்லட் தன்னைப் பார்க்க வரும் விருந்தினர்களுக்கு
ஏப்ரல் 1, 2009 முதல் ஜனவரி 16, 2012 வரை , சற்றொப்ப
மூன்று வருடங்களில் 4.86 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறாராம்.
அவருக்கு முன் ராஜஸ்தானின் முதல்வராக இருந்த சிந்தியா
அரண்மனை அரசி வசுந்தாராவை விட இது அதிகம். அரசி
2004 முதல் 2007 வரை செலவு செய்தது வெறும் 2.2 கோடிதான்.
கணக்குப் பார்த்தால் இன்றைய முதல்வர் ஒரு நாள் சாய் காஃபிக்கு
செலவு செய்யும் தொகை ரூ.48,000. சொச்சம்...!

நம்ம தமிழ்நாட்டில் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்று
யாருக்காவது தெரியுமா..? வேறொன்றுமில்லை, சாய் காஃபிக்கு
ராஜஸ்தானுக்குப் போகலாமா இல்லை நம்ம ஊருனு தமிழ்நாட்டுக்கே
வந்துட்டுப் போகலாமானு தெரியலே...கொஞ்சல் விசாரிச்சு சொல்லுங்க.

(செய்தி ஆதாரம்: இந்தியா டுடே பிப், 20, 2012)

Monday, February 20, 2012

பசித்தவனின் பயணம் - நாஞ்சில் நாடன் சிறுகதைகள்



நாஞ்சில் நாடனையும் மும்பையையும் என்றைக்கும் பிரித்துப் பார்க்க
முடியாது. மும்பைக்கு வந்ததால் தான் நாஞ்சில் நாடன் எழுத ஆரம்பித்தார்
என்று சொல்வதைவிட மும்பை மண்ணும் மும்பை மனிதர்களும் அவர்
கதைகளின் உயிரோட்டமாக வாழ்ந்து கொண்டிருப்பதால் அதுவே
அவர் எழுத்துகளின் தனித்துவமான அடையாளமாக இருக்கிறது.

நாஞ்சில் நாடன் என்ற மானுடன் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் மதிப்பும்
மரியாதையும் இருக்கிறது. நாஞ்சில் நாடன் என்ற படைப்பாளி இதே இந்த
மும்பை மண்ணில் எழுத ஆரம்பித்தக் காலக்கட்டத்தில் தீபம் இதழில்
வெளியான அவர் சிறுகதையை வாசித்துவிட்டு கழிவறைக் காகிதம்
அதாவது டிஷ்யு பேப்பர் என்று விமர்சித்த காலக்கட்டம் இருந்தது
என்பதை அவர் மறந்திருக்க முடியாது. எங்களாலும் மறக்க முடியவில்லை.
அடுத்ததாக விருதுகள் பரிசுகள் குறித்து மிகத் தீவிரமாக தன் கருத்துகளை
முன்வைத்த ஒரு நேர்மையான எழுத்தாளராக படைப்புலகம் அவரைக்
கண்டது. அவருடைய அந்த அறச்சீற்றம் அவர் படைப்புகளையும் தாண்டிய
ஒரு வாசகர் வட்டத்தை அவருக்கு உருவாக்கியது என்பது மற்ற எவருக்கும்
வாய்க்காத ஒரு பெரும்பேறு என்றுதான் நினைக்கிறேன்.

இன்று, நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க சிறுகதை தொகுப்புக்கு
சென்ற ஆண்டில் 2010ல் சாகித்திய அகதெமி விருது கிடைத்தப் பின்
விருதுகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுவதன் மூலம் அந்த
விருதுகளும் தங்களுக்கான தகுதிகளை நினைவுபடுத்திக் கொள்வதாகவே
நினைக்கிறேன். இந்த விருதுக்குப்பின் இதுவரை சாகித்திய அகதெமி
விருது பெற்ற எந்த ஒரு படைப்பாளருக்கும் கிடைத்திராத ஊடக
கவனிப்பும் கணினி இணைய வாசல்கள் எங்கும் நாஞ்சில் நாடனின்
தோரணங்கள் அலங்கரித்திருக்கும் காட்சியும் கொஞ்சம் மகிழ்ச்சியைத் தந்தாலும்
அந்த ஆரவாரமான கொண்டாட்டங்களுக்கு நடுவில் சின்னதாக ஓர் இனம்புரியாத
அச்சம் என் போன்றவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தருணம் இது.

இந்தச் சூழலில் தான் நாஞ்சில் நாடனின் சிறுகதைகளை மறுவாசிப்பு
செய்தேன். விருது பெற்ற சூடிய பூ சூடற்க கதைகளையும் வாசிக்கும்
அனுபவம் கிடைத்தது. ஒருவகையில் என் முதல் கவிதை தொகுப்பு
'சூரிய பயணம் ' தொகுதிக்கு ஓர் அறிமுகமாக ஓர் அணிந்துரை தந்தக்
காரணத்தாலேயே ஆசான் என்று சொல்ல வரவில்லை! ஆனால் இன்றைக்கு
கும்பமுனி தான் எம் பாட்டன், எம் சொத்து, எம் சித்தன், எனக்குத் தெரியாத
என் வயக்காட்டையும் சூடடிப்பையும் என் மாட்டையும் என் மனுசர்களையும் அட
எனக்கு கெட்ட வார்த்தைகளையும் கூட போகிற போக்கில் வசவாகவும்
வர்ணனையாகவும் குசும்பாகவும் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கும்
ஆசான். ஆமாம் ஆசாந்தான். கும்பமுனி என் கட்டைவிரலை காணிக்கையாகக்
கேட்க மாட்டார் என்ற நம்பிக்கையில் தான் மும்பை வாழ் தமிழர்களே!
உங்கள் முன்னிலையில் உங்கள் சாட்சியாக கும்பமுனி எனக்கு மட்டுமல்ல,
மும்பை தளத்தில் இயங்கும் எழுத்தாளர்களுக்கு மிதவையில் ஒரு
பரிசில் ஓட்டி சதுரங்க குதிரையில் காய்நகர்த்தி ஆட்டம் சொல்லிக்கொடுத்து
தலைகீழ் விகிதங்கள் வாழ்க்கையில் விதிவிலக்கல்ல என்பதைப் புரிய வைத்த
ஓர் ஆசான்.
அடுத்து அவர் படைப்புகளைத் தொடர்ந்து வாசிப்பதால் நான் அவருடைய
நல்ல வாசகர். இதில் 'நல்ல 'என்பது எனக்கு நானே கொடுத்துக் கொள்ளும்
அடைமொழி. அவர் பார்த்த அனுபவித்த அதே மண்ணும் அதே மும்பை
மனிதர்களும் எனக்கும் பார்க்கவும் அனுபவிக்கவும் கிடைத்திருப்பது
எனக்கும் என் எழுத்துகளுக்கும் கிடைத்திருக்கும் பாக்கியமோ துரதிருஷ்டமோ
யானறியேன் பராபரமே. இன்றைக்கு கட்டுரைகள் பக்கம் அவர் உதிர்க்கும்
அனைத்து statements களுடன் ஒத்துப்போவது என்பது என் போன்றவர்களுக்கு
சாத்தியமில்லை என்பதும் முரண்தொடையாக இருப்பதை மறைப்பதற்கில்லை.

இவ்வளவு பீடிகையும் இப்போது எனக்குத் தேவைப்படுகிறது. ஆய்வுரை என்று
சொன்னதாலேயே புரிந்த புரியாத சரியாக உச்சரிக்க கூட தெரியாத எந்த
இசங்களையும் மேற்கோள் காட்டி அந்தச் சட்டத்துக்குள் நாஞ்சில் நாடனின்
சிறுகதைகளை அளந்துப் பார்க்கும் அதிமேதாவி அறிவுஜீவித்தனம் எனக்கு
உடன்பாடல்ல. கொடுக்க கொடுக்க குறையாத அமுதசுரபியும் அந்த ஆபுத்திரன்
கதையும் பிற எந்த மொழியிலும் காணக்கிடைக்காத தமிழனின் அசல்
கதை. தமிழனின் மூலக்கதை. தமிழ் மரபின் கனவு, கற்பனை. தமிழ் பண்பாட்டின்
உச்சம், தமிழன் இந்த உலக மானுட குலத்திற்கே கொடுத்த ஓர் உன்னதமான
பண்பாடு. தமிழ் தொன்மங்களை நன்கு படித்தவர் , தெரிந்தவர், புலமை மிக்கவர் என்பதுடன்
அந்தச் சாலச்சிறந்த தொன்மத்திலிருந்து எடுத்துச் சொல்ல எத்தனையோ இருப்பதினால்
இன்றைய நவீன படைப்புலக விலாசத்தில் மேனாட்டு வாந்தி எடுப்புகளுக்கெல்லாம்
தனிக் கவனிப்பு இருப்பதைக் கண்டும் கேலியும் கிண்டலுமாக அதைக் கடந்து
தொடர்ந்து எழுத்துலகில் தன் பயணத்தைத் தொடர்வதை அவர்
சிறுகதைகளின் போக்கு நமக்கு உணர்த்துகிறது.


'கவிதை எழுதுவதில் உள்ள கவுரவம் நிலத்தை உழுவதிலும் இருக்கிறது என்பதைப்
புரிந்து கொள்ளாத எந்த சமூகமும் முன்னேற முடியாது ' என்று அடிக்கடி
முழுங்குகின்ற மார்க்சிய மேடைகள் , பேரணிகள், இன்குலாப் ஜிந்தாபாத்
கோஷங்கள் கற்பிக்காத அல்லது காட்டாத எம் நிலத்தையும் வாழ்க்கையையும்
இவர் சிறுகதைகள் காட்டி இருக்கின்றன என்பது உண்மை.

'வயல் அறுவடையின் போது ஏராளமான நெல்மணிகள் வயலில் உதிர்ந்து போய்
வீணாகின்றன. இப்படி நெல் தொளிந்து போகாமல் இருக்க விவசாய
விஞ்ஞானிகள் வழி கண்டு பிடிக்க கூடாதா? என்று ஒரு சிறுவன் தன்
அப்பாவிடம் கேட்கிறான். 'இங்க வீசக்கூடிய காத்துக்கு, பெய்யப்பட்ட
மழைக்கு, அடிக்கக்கூடிய வெயிலுக்கு எல்லாம் ரூவாயா கொடுக்கோம்?
நாம பாடுபட்டதுக்குக் கூலி எடுத்துக்கிடலாம். நம்மைச் சுத்தி காக்கா,
குருவி, எலி, பாம்பு , தவளை, விட்டில், புழு, பூச்சி எல்லான் சீவிக்கணும்.
அதை மறந்திரப்பிடாது' என்கிறார் அவன் அப்பா. அந்தச் சிறுவன் தான்
எழுத வரும்போது அவன் கண்ட அந்த விவசாய உலகம் அவன் படைப்புலகமாக
விரிகிறது. விவசாயத்தின் ஒவ்வொரு நெளிவு சுழிவுகளையும் அறிந்தவர் என்பதால்
அந்தப் பின்புலம் அவர் சிறுகதைகளின் ஆளுமையாக தனித்துவமாக இருக்கிறது.

வாய் கசந்தது என்ற சிறுகதையில் சூடடிக்கும் காட்சி விலாவரியாக அவர்
எழுதிச் சென்றிருக்கிறார். அரிசி மரத்தை ஊருக்குப் போனபோது தோட்டத்தில்
தேடிய மும்பை குழந்தைகள் பலருண்டு. இதைச் சொல்லும் போது வேதனை தான்
மிஞ்சுகிறது. இந்தக் கதையின் இந்த விவரங்கள் கூட நாளைய நம் தலைமுறைக்கு
ஓர் ஆவணமாகிவிடுமோ என்ற அச்சம் இருக்கத்தான் செய்கிறது. இக்கதையை
நான் சொல்ல வருவதற்கு காரணம் இக்கதையின் உத்தியோ கருப்பொருளோ
ஏன் ஆவணமாக்கியிருக்கும் விவசாயக்காட்சியோ அல்ல. இக்கதையின் ஊடாக
அவர் வைக்கும் ஒரு நுண்ணிய அரசியல். இந்த அரசியலில் எவ்விதமான
ஆரவாரமும் இல்லை.

வயலில் விளைந்த நெல்லை கூலியாக அளந்து கொடுக்கும்போது அளக்கின்ற
மரக்கால் வேறாகிவிடுகின்ற காட்சி, இரவு ஒன்றரை மணிக்கு எழுந்து சூட்டடிக்கப்
போன ஐயப்பனுக்கு கிடைக்கின்ற கூலியின் மதிப்பு 2 ரூபாயும் இருபது பைசாவும்.
க்தைக்கு த்லைப்பு வாய் கசந்தது. இந்த மரக்கால் மாறுவதும் கூலியும்
காலம் காலமாக விவசாய பெரும்புள்ளிகள் நடத்தும் சுரண்டல் தான்.
ஆனால் ஐயப்பனின் தாத்தாவோ அப்பனோ புரிந்து கொள்ளாததை அல்லது
ஏற்றுக்கொண்டதை இவனால் மட்டும் அப்படியே ஏன் ஏற்றுக்கொள்ள
முடிய்வில்லை? அவன் படிக்கிற பையனாக இருப்பதாலா?
உழைப்புக்கும் உழைப்புக்கான கூலிக்குமான
விகிதாச்சார கணக்கு வாய் கசக்க வைக்கிறது. ஐயப்பனுக்கு.
வாசிப்பவனுக்கும் வாய்க்கசக்கும் அனுப்வத்தை
கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தந்துவிட முடிகிறது நாஞ்சில் நாடனால்.

நாஞ்சில்நாடன் படைப்புகள் குறித்து கடுமையான இன்னொரு விமர்சனம் வைக்கப்படுவதை
நானறிவேன். அதுதான் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் சாதி சான்றிதழ். அதாவது
வெள்ளாளர் எழுத்து என்று. மொக்கையான விமர்சனம்.
இவை குறித்து நாஞ்சில்நாடன் அவர்களே அதிகமாக பேசி இருக்கிறார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் எழும்போதெல்லாம் அவருடைய 'சில வைராக்கியங்கள்'
சிறுகதை என் நினைவுக்கு வரும். குமரி மாவட்ட வேளாளர் மாநாடு நடக்கிறது.
மேடையில் வேளாளர்களையும் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்
என்று பேசுகிறார் தலைவர்.பூதலிங்கம் பிள்ளை. மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற
.கதை மாந்தர்களான பரமசிவம் பிள்ளைக்கு அவர் பேச்சு ரசிக்கிறது. சங்கரலிங்கம் பிள்ளை
முகத்தில் சுரத்தில்லை.
அவன் ஏன் பேச மாட்டான்? அவனுக்கென்ன? நிமுந்தா வானம், கவுந்தா பூமி! பேசுதான்!
என்கிறார் சங்கரலிங்கம் பிள்ளை.
"ஏன் பேசுவதிலே என்ன தப்பு? உள்ளதத் தானே சொன்னாரு! இந்தக் காலத்தில் சாதீகீதி எல்லாம்
ஏது ஓய்? எல்லாம் ஒண்ணுதாலா? எல்லார் ஒடம்பிலேயும் ரெத்தம் சிவப்புதாலா?
புல்லறுக்கிறவளைத் தூக்கி வரப்பிலே கெடத்தும் போது சாதி எங்கே ஓய் போச்சு?...
..................................காலத்துக்கு ஏத்தாப்பிலே மாறாண்டாமா நாமளும்?..."
என்று ப்ரமசிவம் பிள்ளை பொரிந்தார் என்று ஒரு காட்சி. அடுத்த காட்சி அவர்
வீட்டில் மகளுக்கு வரன் துப்பு கொண்டு வந்து காத்திருக்கிறார் அவர்
மைத்துனர். விசாரிக்கும் போது தெரியவருகிறது பையன் யாரென்பது.

யாருண்ணா கேக்க? அவன் மருமக்கவழிக்காரம்லா? ஒனக்கு புத்தி ஏண்டே
இப்படிப் போகணும்?'
என்ற பரமசிவத்திடம் 'அதெல்லாம் பாத்துக்கிட்டிருந்தா முடியுமா? இந்தக் காலத்தில?
என்கிறார் மைத்துனர்.
பரமசிவம் பிள்ளை இடைவெட்டினார். 'சரிதான், சோலியைப் பாத்துக்கிட்டு போடே!
மாப்பிள்ளை பாக்கான் மாப்பிள்ளை!"
என்று முடியும் கதையில் தான் சாதியம் இன்றுவரை நிலைத்திருப்பதற்கான
அடிப்படைக் காரணமான அகமண முறை அம்மனமாக்கப்பட்டிருக்கும!
இந்தியாவில் சுயசாதி அடையாளத்தை துறந்தவர் எவருமில்லை.
எழுத்தாளன் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அந்த சாதிக்குள்ளெ
பிறந்து வளர்ந்து வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் படைப்பாளி
தன் படைப்புகளில் சாதிய முள் வேலிகளை உடைத்துக்கொண்டு
திமிறிக்கொண்டு காயங்களுடனும் ரத்தம் சொட்டவும் வெளிவர
தொடர்ந்து முயற்சி செய்துக்கொண்டுதான் இருக்கிறான்.


நாஞ்சில் நாடன் சிறுகதைகளின் பெருவெளியாக இருப்பது தீராதப் பசி.
'சின்னஞ்சிறு வயதில் ஆறோ ஏழோ படிக்கின்ற போது ஊரில் நடந்த திருமண வீட்டில்
மத்தியானம் சாப்பிட, வகுப்பாசிரியரிடன் அனுமதி பெற்று ஒன்றரை மைல் ஓடிவந்து
பந்தியில் உட்கார்ந்திருக்கும்போது , உடை கண்டு, பொருளாதர நிலை கண்டு,
பந்தியில் இருந்து தூக்கி வெளியே விடப்பட்ட சிறுவனின் அகம் இன்னும்
மறந்து போகவில்லை. பசியின், அவமானத்தின், சோகத்தின் பலகணிகள் மூலமாகச்
சுற்றியிருந்த உலகைப் பார்த்தேன் " என்று அவரே பதிவு செய்துமிருக்கிறார்.
அந்தப் பசியின் முகத்தை ஆரம்பகால கதைகள் முதல் அண்மையில் வெளிவந்திருக்கும்
கதைகள் வரை அப்படியே கோட்டோவியாமாக வாசகனுக்கு கொடுத்துக்கொண்டே
இருக்கிறார். 1975களில் எழுதிய விரதம் கதையில் சின்னத்தம்பியா பிள்ளைக்கு
திருமணமான தன் இரு மகள்களிடமும் விரதச்சாப்பாடு சாப்பிட வ்ந்திருப்பதை
பசித்திருக்கும் நிலையிலும் சொல்ல முடியாமல் சுய கவுரவம் தடுக்கிறது.
பசியோடு வெந்நீரை வாங்கி குடித்துவிட்டு சாப்பிட்டாகிவிட்டது என்பதை
காட்டிக்கொள்ள வேண்டியதிருக்கிறது. இருள்கள் நிழல்களல்ல கதையில்
திருமண வீட்டில் பிச்சைக்காரர்களுடன் சேர்ந்து காத்திருக்கும் பண்டாரம்,
பிசைந்த சோற்றைப் பிச்சை வாங்கித் தின்பதா? என்று காத்திருக்கும் காட்சி,
விலக்கும் விதியும் கதையில் எண்ணெய்த் தேய்த்து குளித்துவிட்டு வரும்
பரமக்க்ண்ணு கருவாட்டுக்குழம்பை நாய் நக்கியதைப் பார்த்து விடுகிறான்.
நாய் தின்ற மிச்சத்தைத் தின்பதா? எங்கெல்லாம் வாய் வைத்துவிட்டு வந்ததோ?
என்று நினைத்தாலும் பசியின்சுரண்டல் ஜெயிக்கிறது. இப்படியாக அவர் கதை நெடுக
அவரை பல்வேறு விதமாக துரத்தும் பசி தனிமனித உணர்வாக இருக்கும் வயிற்றுப் பசி
ஒரு சமுதாயப் பண்பாட்டின் எச்சமாக படைப்பின் உச்சத்தை எட்டிப்பிடித்திருப்பது
அவருடைய 'யாம் உண்பேம்' சிறுகதையில் தான். நாஞ்சில் நாடனின் பசி குறித்த
மேற்சொன்ன கதைகளில் எல்லாம் ஏற்படாத ஓர் உணர்வின் உச்சம் அவருடைய
'யாம் உண்பேம்' சிறுகதை மூலமாக நான் உணர்ந்தேன். சூடிய பூ சூடற்க
கதை தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் அச்சிறுகதையை வாசித்தவுடன்
ஓவென கதறி அழ வேண்டும் போலிருந்தது எனக்கு.
இந்தக் கதையை வாசிக்கும் முன் இந்தக் கதைக்கான பின்புலத்தை மிகவும்
தெளிவாக அருந்ததிராயின் புரோக்கன் ரிபப்ளிக் கட்டுரைகளும் அதற்கு முன்பே
எழுத்தாளர் இந்திரன் மொழியாக்கத்தில் வெளிவந்திருக்கும் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள் நாம்'
என்ற ஆதிவாசிகளின் கவிதைகளும் எனக்கு கொடுத்திருந்ததும் ஒரு காரணமாக
இருந்திருக்கலாம் என்று கருதுகிறேன்.
நம் ஆரண்யகாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு, காட்டையும்
கழநியையும் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு பிச்சை கேட்கவே
தெரியாது. அதை அவன் அறிந்திருக்கவே இல்லை. பெற்ற மகன் குடும்பத்துடன் செய்து
கொண்ட தற்கொலை அவனை அவன் இடத்திலிருந்து விரட்டுகிறது. பசியின் விரட்டல்
வேறு.
"எதிரே இருப்பவன் ஒரு துண்டு ரொட்டியை சப்ஜியுடன் வாய்க்கு கொண்டு போகும்
நேரம், பாபுராவின் உயர்த்திய கையை , முதிய தோல் சுருங்கிய நாத்ரேயின் கை எட்டிப்
பிடித்து வெட வெடத்தது. குலைந்து ஒலித்த குரலால் அதிர்வுற்று பாபுராவ் நிமிர்ந்து
பார்த்தான்.

'அமி காணார்.... அமி காணார்..'

எனக்குத் தா என்றல்ல , நான் தின்பேன் என்றல்ல, நாம் உண்போம் என.
தூய சங்கத் தமிழில் பெயர்த்தால் யாம் உண்பேம் என.

கண்கள் கசிந்திருந்தன. பிடித்த கரம் நடுங்கியது. மீண்டும் பதற்றம் பரவ,
அமி காணார்... அமி காணார்...

நண்பர்களே... இந்த இடத்தில் தான் நான் உடைந்து சுக்குநூறாகி ஓவென
கதறி அழுதேன்...

உண்டா லம்மவிவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே......
[புறநானூறு: 182]

என்று சொன்னானே 2500 ஆண்டுகளுக்கு முன் ஒருவன்

இம்மைச் செய்தது மறுமைக்கும் ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்
பிறரும் சான்றோர் சென்ற நெறி என
ஆங்குப் பட்டன்று அவன்கை வண்மையே
(புறம் 134)

என்று சொர்க்கம் நரகத்திற்கு அஞ்சாமல் வாழ்ந்தானே ஒரு இனக்குழு தலைவன்.

தனியொருவனுக்கு உணவில்லை எனில்
இச் ஜகத்தினை அழித்திடுவோம்

என்று ஆவேசப்பட்டானே நம் பாரதி...
இதை எல்லாம் தன் பண்பாடாக கொண்டு வாழ்ந்தவனால்தான்
அந்த 'அமி காணார் அமி காணார் ' என்ற குரலில் ஒலித்த
அவலத்தைப் புரிந்து கொள்ள முடியும். இந்தக் குரலில் ஒலித்த
பசி தனி மனிதன் ஒருவனின் பசி மட்டுமல்ல, இது இந்த நாட்டின்
பண்பாட்டைச் சுரண்டுகின்ற பசி, இது ஒரு தனிமனித அவலம் அல்ல,
ஒரு சமூக அவலம். அவமானம், ஏன் ஆபத்தும் கூட!
இக்கதை நாஞ்சிலாரின் சொந்த அனுபவம் தான்
என்பதை அவருடைய நக்கீரன் நேர்காணல் வழி அறிந்து கொண்டேன்.
அமி காணார் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் அவரும் அழுதிருக்கிறார்.
வாசித்தவனையும் அழ வைத்திருக்கிறது அக்கதை. இந்தக் கதையின் நிஜம்
நம்மைச் சுடுகிறது. தன் அனுபவத்தை வாசகனின் அனுபவமாக்குவதில்
வெற்றி காண்பது தான் ஒரு சிறந்த படைப்பு . விமர்சன பிதாமகன்கள்
இதற்கு என்னவெல்லாமோ பெயர் வைத்துக்கொண்டு பக்கம் பக்கமாக
எழுதிக்கொண்டும் சண்டை போட்டுக்கொண்டும் இருக்கட்டும்.
என்னளவில் இதுவே ஒரு படைப்பாளனின் வெற்றி என்று கருதுகிறேன்.
ஹேட்ஸ் ஆஃப் நாஞ்சில்!




நாஞ்சில் நாட்டு வாழ்க்கை பின்னணியில் எழுதப்பட்டவை, மும்பை நகர வாழ்க்கை
தந்த அனுபவங்களின் ஊடாக அறிந்ததும் அனுபவித்ததும் இந்த இரண்டு வாழ்க்கையையும்
இணைக்கும் அவருடைய பயணங்கள், பயணங்கள், அந்தப் பயணங்கள் கற்றுக்கொடுத்த
பரந்து பட்ட இன்னொரு உலகம், பசியின் துரத்தல் ஆகிய வட்டங்களைச் சுற்றி சுற்றியே
எழுதப்பட்டிருக்கிறது நாஞ்சிலாரின் சிறுகதைகள். சிறுகதையில் உத்தி, மொழி நடை,
வர்ணனை இவற்றில் கூட பெரிதாக எந்த மாற்றத்தையும் சொல்வதற்கில்லை.
ஆனால் 2000க்குப் பிறகு அவர் எழுதியிருக்கும் கதைகளின் மொழி உத்தி
ஆகியவற்றில் கும்பமுனி கொண்டுவந்திருக்கும் மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை.
கட்டுரைகள் அதிகம் எழுதிக்கொண்டிருக்கிற காரணத்தினாலோ என்னவோ
இக்கதைகள் கட்டுரைப் பாங்கான ஒரு மொழிநடையைக் கொண்டிருப்பதும்
கும்பமுனியின் கேலியும் கிண்டலும் குசும்பும் தான் கட்டுரைகளை கதைகளாக்கி
இருப்பதில் பெரும்பங்காற்றி இருக்கின்றன என்றும் சொல்லலாம்.


நாஞ்சிலார் படைப்புகளில் பெண் பாத்திரங்கள் என்று அவர் நாவல்களை
முன்வைத்து நான் ஏற்கனவே பதிவு செய்திருப்பதிலிருந்து சிறுகதைகள்
எவ்விதத்திலும் மாறவில்லை. சொல்லப்போனால் சிறுகதைகள் பெரும்பாலும்
ஆண் கதை மாந்தர்களைச் சுற்றி சுற்றியே வருகின்றன. ஒன்றிரண்டு
சிறுகதை விதிவிலக்காக 'உபாதை ' சிறுகதையைச் சொல்லலாம்.
சில கதைகளில் 'சும்மா' வந்து தலையைக் காட்டிவிட்டு போகும்
பெண்கள்.. பல கதைகளின் அதுதானும் கிடையாது !

நாஞ்சிலாரின் படுவப்பத்து கதையை வாசிக்கும் போது புதுமைபித்தனின் புதிய கந்தபுராணம்
சிறுகதை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

தமிழ் இலக்கிய விமர்சனங்களில் ஒப்பீட்டாய்வு என்ன காரணத்தினாலோ பெரும்பாலும்
ஒதுக்கப்பட்டே வந்திருக்கிறது. புதுமைப்பித்தன் சிறுகதைகளுடன் நாஞ்சிலாரின் சிறுகதைகளை
ஒப்பீட்டாய்வு முறையில் அணுகுவது விமர்சன உலகில் ஆரொக்கியமான ஒரு சூழலை
உருவாக்கும்..

தொன்மங்களை புராணங்களை அறிந்த படைப்பாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்
நாஞ்சிலார். தான் தமிழுக்கு எழுத வந்ததன் காரணகர்த்தாக்களில் ஒருவராக
அன்றைய பம்பாய் தமிழ்ச் சங்கம் நடத்திய இராமயண வகுப்பும் வகுப்பெடுத்த
ரா.பத்மநாபன் என்று ......... குறிப்பிடும் நாஞ்சிலார் இன்றுவரை புராணங்களின் தொன்மத்திலிருந்து
கதைகள் எழுதியதாகத் தெரியவில்லை! (அப்படி எதுவும் எழுதப்பட்டிருந்தால் அதை
நான் வாசிக்கும் அனுபவம் கிட்டவில்லை என்று ஈண்டு பொருள் கொள்க!)

ராமாயணம் படிச்சா ப்டிச்சிருக்குனு சொன்னா உடனே சீதையைப் பத்தி எழுதித்தான் ஆகணுமா,
எழுதாட்டி என்ன? எழுதுனதை விமர்சிக்கலாம், இதை ஏன் எழுதலை, நீ அதை ஏன் எழுதலைனு
விமர்சனங்கிற பேர்லே சொல்லிக்கிட்டே போகுது பாருங்க... இதுகளுக்கெல்லாம் நான் என்னத்தைச்
சொல்லட்டும் இன்னும் என் பாட்டன் கோவணத்தையே எழுதி முடிக்கலை, அதுக்கப்புறமில்ல
படிச்சதும் பிடிச்சதும்னு ..... கும்பமுனியின் அடுத்தக் கதையில் வரலாம்
சரி இருக்கட்டும்... இப்போதெல்லாம் நாஞ்சிலாரின் கட்டுப்பாட்டுக்குள்
கும்பமுனி இல்லை என்று வேறு சொல்லிக்கொள்கிறார்கள், உண்மையா நாஞ்சில் சார்?

நன்றி.

(12-2-2012 ஞாயிறு மாலை மும்பை தமிழ்ச் சங்கத்தில் மும்பையின் பல்வேறு
அமைப்புகள் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து நடத்திய பாராட்டு விழாவில்
நாஞ்சில் நாடன் சிறுகதைகள் குறித்த என் (ஆய்வுரை) உரை .







.
.

Tuesday, February 14, 2012

மாதா+ பிதா +குரு < கொலைவெறி

ஒரு 15 வயது நிரம்பாத மாணவன் தனக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும்
ஆசிரியரைக் கொலை செய்த சம்பவம் ஊடகங்களுக்கு வேண்டுமானால்
திடுக்கிடும் செய்தியாக இருக்கலாம். ஆனால் சமூக ஆர்வலர்களுக்கு
இந்தச் செய்தி சமூக அவலங்களின் எதிரொலி. ஓர் அபாயச்சங்கு.

இந்தச் செய்தியின் இரண்டு பக்கங்களையும் பார்த்தாக வேண்டும்.
ஆசிரியரைக் கொலை செய்ய நினைத்ததே தவறுதான். மன்னிக்க
முடியாதக் குற்றம் தான். ஆனால் இந்த விபரீத முடிவெடுக்க
அவன் மட்டும் தான் காரணமா?

உண்மையான குற்றவாளிகள் யார்?

*பள்ளி நிர்வாகம்*
. எப்போதும் 100% மாணவர்கள் தேர்ச்சி இருந்தே ஆகவேண்டும்
என்று ஆணையிடும் பள்ளி நிர்வாகம். அதற்காக நிர்பந்திக்கப்படும் ஆசிரியர்களும்
வகுப்பறைகளும். பாடப்புத்தகம் படிப்பது தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தினால்
மதிப்பெண்கள் குறைந்துவிடும் என்ற தவறான கருத்து பரப்புரை.
எனக்குத் தெரிந்த ஒரு பள்ளி கூடத்தில் மாணவ மாணவியர் இரவில்
பள்ளி கூடத்தில் தங்கியாக வேண்டும். காலையில் 7 மணிக்கு வீட்டுக்கு
வந்து குளித்து உடைமாற்றி சாப்பாடு எடுத்துக்கொண்டு மீண்டும்
வகுப்புகளுக்குப் போக வேண்டும். 10ஆம் வகுப்பு மாணவர்கள் மீது
அவ்வளவு அக்கறை அந்த பள்ளி கூடத்துக்கு!

சில ஆசிரியர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளின்
வடிகாலாக "நான் ரொம்பவும் கண்டிப்பான டீச்சராக்கும்!" என்ற போர்வையில்
நடத்தும் அதிகார துஷ்பிரயோகங்கள்.

குடும்பம்
----------

அம்மா அப்பாவுக்கு எப்படியும் தன் பிள்ளை எஞ்சினியர் ஆகிவிட வேண்டும் என்பதுதான்
ஆசை. குறிப்பாக தமிழ்நாட்டில் பெருகிவரும் பொறியியல் கல்லூரிகள், அங்கே நடக்கும்
பி.இ. டிகிரி விற்பனை சந்தை ரொம்பவும் லாபகரமான தொழிலாக கொடி கட்டிப் பறப்பது
இதனால் தான். நடுத்தர குடும்பத்தில் இப்போதெல்லாம் இரண்டு குழந்தைகளுக்கு
மேலிருப்பதில்லை. பெற்றோர்கள் தங்கள் கனவுகளை எல்லாம் தங்கள் குழந்தைகளின்
மீது சுமைகளாக ஏற்றி வைக்கும் செயல். ஒவ்வொரு குழந்தையும் பெற்றோர்களின்
வாரிசுகள் தான் என்றாலும் பெற்றோர்களின் நகல்கள் அல்ல. இந்தப் புரிதலை
அதிகம் படித்த பெற்றோர்களும் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்கு தங்கள்
வாரிசுகளை நினைத்து அச்சம், அவர்களின் எதிர்காலத்தை நினைத்து அச்சம்,
நண்பர்களின் குழந்தைகள் எல்லாம் எஞ்சினியராகிவிட்டால், தங்கள் குழந்தையும்
எப்படியும் எஞ்சினியர் ஆகியே தீரவேண்டும். இல்லையென்றால்,
அந்த ஏமாற்றத்தை அவர்களால் தாங்கிக்கொள்ளவே
முடியாது, அந்த அச்சமும் எதிர்பார்ப்பும் பல நேரங்களில் அளவுகடந்துப் போய்விடுவதாலும்
நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவர்களைத் துரத்திக் கொண்டே இருப்பதாலும்
அவர்களும் தங்கள் குழந்தைகளை அலைக்கழிக்கிறார்கள். விளைவு..?
ஒரு குழந்தைக்கு தன் ஆசைகளை, தன் இயலாமைகளை தன் தோல்விகளை,
பகிர்ந்து கொள்ள யாருமே இல்லாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த அம்மா அப்பாவுடன் சேர்ந்து ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களும்
எரிகிற வீட்டில் பெட்ரோலை ஊற்றிவிட்டு போய்க்கொண்டிருப்பார்கள்.
90 விழுக்காடுக்கு குறைவாக தங்கள் பிள்ளை மதிப்பெண் எடுத்திருந்தால்
விரக்தியின் உச்சத்திற்கே போய்விடும் பெற்றோர்களை மட்டுமே
இப்போது நாம் பார்க்கிறோம்.
அம்மா அப்பா இருவரும் வேலைக்குப் போய்வரும் சூழலில் 10 ஆம் வகுப்பு
வந்தவுடன் இருவரும் மாறி மாறி விடுப்பு எடுத்து வீட்டிலிருந்து
அந்தக் குழந்தையைக் கவனிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு
நடத்தும் நாடகம் இருக்கிற்தே அது நம் கற்பனைக்கு எட்டாதது.

கோச்சிங் க்ளாஸ்
-----------------
ஒரு காலத்தில் கோச்சிங் க்ளாஸ் போவது என்பது அந்த மாணவனுக்கு மட்டுமல்ல
அவன் படிக்கும் பள்ளி கூடத்துக்கும் தரக்குறைவான ஒரு செயலாக பார்க்கப்பட்டது.
இன்று? பள்ளி நிர்வாகம், வீடு குடும்பம் இதெல்லாம் போதாது என்று கோச்சிங்
க்ளாஸ்கள்.... ஒரு வீதிக்கு ஒன்றிரண்டு.. நம் பிள்ளைகள் பாஸாகிவிடுவார்கள்
அதுவும் 80 முதல் 90 விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்து என்ற உத்திரவாதத்துடன்!
இந்தக் கோச்சிங் க்ளாஸ்களின் கால அட்டவணையைப் பார்த்தால் த்லைச் சுற்றும்.
ஒரு கோச்சிங் க்ளாஸ் டாய்லெட் கதவுகளில் கணக்கு சூத்திரங்களை ஒட்டி
வைத்திருக்கும் ஸ்டிக்கர்களை மாணவர்களுக்கு கொடுத்திருந்தார்கள் என்றால்
பார்த்துக்கொள்ளுங்களேன். அதாவது மாணவர்கள் கக்கூசிலிருக்கும் போது கூட
நேரத்தை வீணாக்காமல் கணக்குப் பாடம் படிக்கச் சொல்லிக் கொடுக்கிறார்க்ளாம்!
காலையில் எழுந்து பல் துலக்குவதிலிருந்து இரவு எத்தனை மணிக்குத் தூங்க
வேண்டும் என்பதை அட்டவணைப் போட்டு மாணவர்களுக்கும் அதைக்
கண்காணிக்க பெற்றோர்களுக்கும் கொடுத்திருக்கும் புகழ்பெற்ற பள்ளி கூடங்களையும்
கோச்சிங் க்ளாஸ்களையும் நானறிவேன்.

விளைவுகள்
-----------------

மாணவன் ஆசிரியரைக் கொன்றது சரியா தவறா என்று பட்டிமன்றம் நடத்துவதை
விடுத்து சமூக சூழல்களையும் இதெற்கெல்லாம் யார் யார் பொறுப்பு என்பதையும்
சமூக அக்கறையுடன் நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.
கொலை செய்யப்பட்டது அந்த ஆசிரியர் மட்டுமல்ல, அந்த மாணவனும் கூடத்தான்.
நம் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வந்தாக வேண்டும் என்ற
அபாயச் சங்குதான் இம்மாதிரி சம்பவங்கள்.
யோகா, நடனம், இசை, கராத்தே என்று மாணவர்களுக்கு இளம் வயதில்
கட்டாயப்பாடமாக்க வேண்டும்.
கொலைவெறி பாடலை ரசிக்கச் சொல்லிக்கொடுத்து விட்டு அந்தச் செயலை
மட்டும் விமர்சிக்கும் தகுதி இந்தச் சமூகத்திற்கு கிடையாது.

(சென்னையில் உள்ள செயிண்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் ஆண்கள் பள்ளியில்
9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆசிரியை உமா மகேஸ்வரி அவர்களை, திட்டமிட்டு
தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் 14 இடத்தில் குத்தி கொடூரமாக கொலை
செய்திருக்கிறான். அந்தச் செய்தியின் தாக்கம் தான் இக்கட்டுரை. செய்தியில் இடம் பெற்ற ஆசிரியை, மாணவர்,
பள்ளிகூடம் , அவர் குடும்பம் இத்தியாதி தனிப்பட்ட எவர் மீதும் குற்றம் சுமத்துவது என்
நோக்கமல்ல. ).

Monday, January 23, 2012

ஜல்லிக்கட்டும் ஃபார்முலா கார்பந்தயங்களும்





ஜல்லிக்கட்டு தமிழனின் பாரம்பரிய வீ ர விளையாட்டு என்ற குரல் ஒவ்வொரு ஆண்டும்
தைப் பொங்கலை ஒட்டி ஓங்கி ஒலிக்கும் குரலாக இருக்கிறது ..
இந்த ஆண்டு என் மதிப்பிற்குரிய தோழி மாலதி மைத்ரி
அவர்களும் ஒரு கருத்தை வைத்திருப்பாதாக அறிந்தேன்.
அதாவது பார்முலா 1, ஃபார்முலா 3 போன்ற மேல்தட்டு மக்களின் வீர விளையாட்டுகளுக்கு
ஆதரவளிக்கும் அரசு கிராமப்புற மக்களின் தொன்றுதொட்ட வீர விளையாட்டான
ஜல்லிக்கட்டை மட்டும் ஏன் தடை செய்ய வேண்டும் என்று நினைக்கிறது?
இக்கேள்வி மிகவும் சரியானதாகவே மேம்போக்காக இப்பிரச்சனையை
அணுகுபவர்களுக்கு தோன்றலாம். இம்மாதிரியான பார்வை சமூகப் பிரச்சனைகளை
எப்போதும் வர்க்கப்பிரச்சனையாக மட்டுமே அணுகும் ஒரு வட்டத்தை
உருவாக்கி இருக்கிறது. இந்தியச் சமூகச் சூழல் என்றைக்குமே இந்த
வட்டத்துக்குள் சிக்குவதில்லை என்பது தான் சாதியத்தின் அடிப்படை
வெற்றியாக இருப்பதை ஏனோ அறிவு ஜீவிகளும் எடுத்துச் சொல்ல
முன்வருவதில்லை. வர்க்கம் தாண்டிய சமூகத்தின் அடித்தளம் வரை
கெட்டிப்பட்டிருக்கும் சாதியத்தின் ஆணிவேரை , பிரச்சனைகளின்
மையமாக காட்டுவதைக் கூட அறிவுஜீவிகள் வேண்டுமென்றே தவிர்க்கின்றார்களோ
என்ற ஐயம் ஏற்படுகிறது.

சமூகப்பிரச்சனைகளின் மையமாக எப்போதும் பிசகாத நூலிழையாக இருக்கும்
சாதிப்படிநிலையை எடுத்துச் சொன்னால் கூட முகம் சுளிப்பதும்
'இவர்களுக்கு வேறு வேலையில்லை' என்று ஒதுக்கி வைப்பதும்
இன்றும் தோழமை வட்டங்களில் கூடத் தொடரத்தான் செய்கிறது.


இந்தியாவில் டில்லிக்கு அருகில் உ.பி மாநில எல்லையில் நொய்டாவில் இரண்டாயிரத்து ஐநூறு ௦௦ ஏக்கர்
பரப்பில்இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் கார் பந்தய சுற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதை அனுமதிக்கும் அரசு நடுத்தர வர்க்க , கிராமப்புற மக்களின் ஜல்லிக்கட்டை மட்டும் விமர்சிப்பதும்
கோர்ட் வாசல் வரை இழுத்திருப்பதும் சரியா ? என்ற
கேள்வியின் ஊடாக நாம் எதை எதிர்பார்க்கிறோம்?
பார்முலா ஒன கார் பந்தயங்கள் போல ஜல்லிக்கட்டும் ஆக வேண்டும் என்றா?
அப்படி ஆக வேண்டும் என்பது தான் அரசின் விருப்பமும். அதாவது ஜல்லிக்கட்டும் இனிமேல்
மல்லையா ஜல்லிக்கட்டு. ஜெபி குருப் ஜல்லிக்கட்டு, டாட்டா ஜல்லிக்கட்டு என்று முதலாளிதுவமாகி
அதன் பின் உலக மயமாக வேண்டும் என்பதே அரசின் நேக்கமும் ஆகும்.

ஜல்லிக்கட்டு ஒரு மிருகவதை என்று பேசும் கருணா மூர்த்திகளும் சரி,
ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனம் என்று பேசும் நாகரிக தலைமுறையும் சரி,
சாதியக் கொடுமைகளுக்கு எதிராக எப்போதும் கள்ளமவுனமே சாதித்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டை நாகரிகமாகவும் மனிதாபிமானம் மிக்கதாகவும் மாற்ற நினைப்பவர்கள்
ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் ஜல்லிக்கட்டு தமிழனின் வீர விளையாட்டு,
தமிழர் பண்பாடு என்ற தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்களின் வீர வசனங்கள் இன்னொரு பக்கம்.

உரக்கச் சொல்லும் பொய்யும் உண்மையாகிவிடும் என்ற யதார்த்தநிலையை
நன்குத் தெரிந்தக் கொண்டவர்களே மேற்சொன்ன தமிழ் பண்பாட்டுக் காவலர்கள்!
ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரியம் என்றும் பண்பாடு என்றும் வீர விளையாட்டு
என்றும் பலரும் அவர்கள் சொன்னதை அப்படியே நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் பரவியதே நாயக்க மன்னர்கள் ஆட்சியில் தான்
என்பதே வரலாற்று உண்மை.

தமிழகத்தில் கி.மு. 1500 காலத்தில் ”மஞ்சு விரட்டு” அல்லது “”எருது கட்டுதல்” என்ற வீர விளையாட்டே பாரம்பரியமாக நிலவியது. பொங்கல் விழாக்களின் போது காளைகள் நெடுஞ்சாலைகளில் அவிழ்த்து விடப்பட்டு, கிராமத்து இளைஞர்கள் அவற்றை விரட்டிக் கொண்டு ஓடுவர். சாலையின் இருமருங்கிலும் மக்கள் திரண்டு ஆரவாரிப்பர். அப்பந்தயத்தில் முதலில் வந்து வெற்றிபெறும் வீரருக்குப் பரிசளிக்கப்படும். இதில் மாடுகளுக்கோ மனிதர்களுக்கோ காயமேற்படாது.


நீண்ட நெடுங்காலமாக தமிழர்களின் பாரம்பரியமாக நிலவி வந்த “”மஞ்சு விரட்டு”, ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மாட்டை அடக்கும் ஜல்லிக்கட்டாக மாறியது. நாயக்கர் ஆட்சியில் படிப்படியாக ஜமீன்தாரி முறை உருவாகி வந்தது. ஜமீன்தார்கள் தமது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் பறைசாற்றும் அடையாளமாக உருவாக்கியதுதான் ஜல்லிக்கட்டு. ஜமீன்தார்களே ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து, அதை யாராலும் அடக்க முடியாது என்று வீரப் பெருமை பேசினர். மாடுகளின் கொம்புகளில் தங்கக் காசுகளைப் பையில் போட்டுக் கட்டி, அதை அடக்குவோருக்கு அப்பரிசுத் தொகை வழங்கப்படுவதாக அறிவித்தனர். ஜமீன்தார்களின் ஆதிக்கம், சாதி ஆதிக்கமாகவும்; காளையை அடக்கும் வீரம், தாழ்த்தப்பட்ட சாதியினரை ஒடுக்கும் வீரமாகவும் வேர் விட்டது.

இந்த உண்மைகளை தொல் ஓவிய வரலாற்றாளரான காந்திராஜனும், சென்னை கவின்கலைக் கல்லூரி முதல்வரான பேராசிரியர் சந்திரசேகரனும் வெளிக் கொணர்ந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகிலுள்ள கருக்கியூர் குன்றில் ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியத்தில் காணப்படும் மஞ்சு விரட்டு காட்சியையும், மதுரை திண்டுக்கல்லுக்கிடையே கல்லூத்து மேட்டுப்பட்டியிலுள்ள தொன்மை வாய்ந்த குகை ஓவியத்தையும் ஆதாரமாகக் காட்டி, மஞ்சு விரட்டுதான் தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டாகத் திகழ்ந்ததை வரலாற்று அறிவியல் முறைப்படி நிரூபித்துள்ளனர்( புதிய ஜனநாயகம் 2008)

இன்றைக்கு தைப் பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கலின் போது எங்கள் தென்மாவட்டங்களில் (நெல்லை)
இப்போதும் மஞ்சு விரட்டு நிகழ்வு மட்டுமே நடக்கிறது. ஜல்லிக்கட்டு நடக்கின்ற தமிழகப் பகுதிகளில்
அந்த விளையாட்டு ஆதிக்கச் சாதியின் அடையாளமாகவும் நிலவுடமை சமூகத்தின் முகமாகவுமே
இருப்பதையும் பார்க்கிறோம். ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தங்கள் பாரம்பரியமாக
கொண்டாடுபவர்களும் அந்த ஆதிக்கச்சாதி மனோபாவத்துடனேயே இருப்பதையும் அடையாளம்
காண முடிகிறது.

இந்த ஆதிக்கச்சாதி மனோபாவத்தை வளர்த்தெடுத்ததில் நம் தமிழ் திரைப்படங்களுக்கு
மிக முக்கியமானப் பங்குண்டு. ஜல்லிக்கட்டு காளை எப்போதுமே அந்த ஊர்ப் பண்ணையாரின்
காளையாகவே இருக்கும்.

பாரம்பரியம், பண்பாட்டு அடையாளம் என்று கொண்டாடுவதையும் நாம் கேள்விக்குட்படுத்த
வேண்டி இருக்கிறது. எது தமிழனின் பாரம்பரியம்? எது தமிழனின் பண்பாடு?
ஊர் என்றும் சேரி என்றும் தமிழன் பிரிந்திருப்பது தமிழனின் பாரம்பரியமா?
தமிழனின் பண்பாடா? என்று கேட்டால் அந்தக் கேள்வி கூட தமிழ்ப் பண்பாட்டுக்
காவலர்களுக்கு உவப்பானதாக இருப்பதில்லை. இக்கேள்விகளைத் தொடுப்பவர்கள்,
தமிழினத் துரோகிகள், தமிழ்த் தேசிய விரோதிகள் என்று பார்க்கும் பார்வையும் வளர்த்தெடுக்கப்பட்டிருப்பது
கவலைத் தருவதாகவே இருக்கிறது.

உங்கள் மொழி , சாதிக் காப்பாற்றும் மொழி
உங்கள் மதம் சாதிக் காப்பாற்றும் மதம்
உங்கள் அரசு சாதிக் காப்பாற்றும் அரசு
என்று தந்தை பெரியார் தமிழ் மொழியையும் அதன் பெருமைமிக்க பாரம்பரியத்தையும்
கண்டு மருண்டு விடாமல் வெகுண்டெழுந்த அறச்சீற்றம் அணையாமல் அக்னிக்குஞ்சாக
எரிந்துக் கொண்டுதான் இருக்கிறது ஜல்லிக்கட்டு காளைகளின் சீவிவிடப்பட்டிருக்கும்
கூரிய கொம்புகளுக்குப் பயப்படாமல்.

நன்றி: திண்ணை டாட் காம்

Tuesday, January 17, 2012

உத்திர பிரதேசத்தில் யாரும் கைகளுடன் வெளியில் நடமாடக் கூடாது.



உத்திர பிரதேசத்தில் தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்த மாநிலத்தில் இருக்கும் யானை சிலைகளை மூடி வைக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம்
யானை என்பதால் இந்த உத்தரவு. எல்லாம் சரிதான்... உத்திர பிரதேசத்தில் யாரும்
கை அசைத்து டட்டா காட்டுவதோ கையை தூக்கி காட்டுவதோ எப்படி சரியாம்?
அதையும் தடை செய்திருக்க வேண்டாமோ? கை காங்கிரசு சின்னம் ஆயிற்றே!

எனவே, இனி உத்திர பிரதேசத்தில் யாரும் கைகளுடன் வெளியில் நடமாடக் கூடாது.
கை முட்டியை ஒரு வெள்ளை துணியால் கட்டி வைத்துக்கொண்டு தான் வெளியில் வர வேண்டும்.
தேர்தல் முடியும் வரை சாப்பிட கூட யாரும் முட்டியை விரித்து வெளி இடங்களில் சாப்பிட
கூடாது. தேர்தல் முடியும் வரை எந்த பயன்பாட்டுக்கும் கைகளை தூக்குவதோ
அசைப்பதோ விரிப்பதோ சட்டப்படி குற்றம்!

மும்பை ஜனக்கடலில்





மும்பையை முழுசா பாக்கனுமா... மும்பை வி.டி ஸ்டேஷனைப் பாருங்க. (இப்போ அதுப் பேரு சி.எஸ்.டி ங்க)
இல்லைனா தாதர் ஸ்டேஷனுக்கு வாங்க. தாதர் ஸ்டேஷனில் நீங்க நடக்க வேண்டாம். போற திசையை நோக்கி நின்னாப் போதும். அப்படியே ஜனக்கூட்டமே உங்களை விர்ருனு எடுத்திட்டு போயிடும்.

மும்பை பெண்களுக்கு ஓர் அசாதரணமான திறமை உண்டு. அதைப் பார்க்கனும்னா நீங்க
வி.டி. ஸ்டேஷனுக்குப் போனா ரொம்ப வசதியா இருக்கும். டிரெயின் வந்து ப்ளாட்பாரத்தில்
நிக்கறதுக்கு முந்தியே ஹேண்ட் பேக்கை இறுக்கமா முன்பக்கம் போட்டு பிடிச்சிக்கிட்டு
துப்பட்டாவை இழுத்து சொருகிக்கொண்டோ அல்லது துப்பட்டாவை மடிச்சி பேக்கில்
வைத்துக் கொண்டோ ரைட் சைட் விண்டோ ஸீட்டை பிடிக்கறதுக்கு ஒரு ஜம்ப் அடிப்பாங்கப்
பாருங்க... எம்மாடியோவ் அந்தக் காட்சி கண்கொள்ளாக் காட்சியா இருக்கும்.
ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகளில் இந்த மாதிரி ஒரு போட்டியை வச்சா
எங்க ஊரு துப்பட்டாக்கள் தூள் கிளப்பி விடுவார்கள்.
ஜல்லிக்கட்டில் காளை மாடு அடக்குவதெல்லாம் இந்த வீர சாகசத்திற்கு முன்னால்
வெறும் ஜிஜிப்பி.

அப்புறம் இந்த டிரெயினில் ஏறி உட்காந்த வுடனே இரண்டு நிமிடங்களுக்குள் நிக்கிறதுக்கு
இடமில்லாமல் நிரம்பிவிடும். நிற்பவர்கள் உட்கார்ந்திருப்பவர்களிடம் "ஸீட் ஸீட் ' என்று
கேட்பார்கள். அதிலும் சிலர் சைகையால் 'எங்கே?" என்று கேட்பார்கள். உட்கார்ந்திருப்பவர்கள்
சொல்லியாக வேண்டும். உடனே நிற்பவர் ஸீட்டை ரிசர்வ் செய்துவிடுவார்.
அதிலும் ஒரு சிலர் பைகுல்லாவிலோ தாதரிலோ வந்து அதே வண்டியில் ஏறப்போகும்
தன் தோழியருக்காக ஸீட் ஒதுக்குவது... இதில் நடக்கும் குளறுபடிகள், வாக்குவாதங்கள்,
சண்டைகள், இத்தனைக் கூட்டத்துக்கு நடுவிலும் ஜோராக நடக்கும் வளையல், காதணி,
பொட்டு, நகப்பாலிஷ், ஹேர்க்கிளிப் , நைட்டி, சுடிதார் டிரெஸ் மெட்டிரியல்,சிக்கு, ஆரஞ்சு பழ விற்பனை என்று ஒரு சில்லறை வணிக வளாகமே ஏறி இறங்கி மும்மரமாக வியாபாரம் நடக்கும்.




இந்த மும்பைக்கு நான் நான்காவது தலைமுறை தமிழ்க்குடும்பம். நான் ஓடி விளையாடிய
கடற்கரையைக் காணவில்லை என்று இப்போது சொன்னால் உங்களுக்கு வடிவேல் தன்
கிணறு காணவில்லை என்று ஜோக் அடித்த மாதிரி இருக்கலாம். ஆனா என் கடற்கரை
காணாமல் போனது ரொம்பவும் நிசமானது. என் வீட்டு பெரிய ஜன்னலிருந்து பார்த்தால்
கடற்கரை தெரியும். மாலை நேரத்தில் மட்டுமல்ல, பள்ளிக்கூடத்திற்கு போன நேரம் தவிர
மற்ற நேரமெல்லாம் அந்தக் கடற்கரை தான் எங்கள் விளையாட்டு மைதானம்.
கொளுத்துகின்ற வெயிலிலும் விளையாண்டிருக்கிறேன். பாடப்புத்தகம் எடுத்துப்
படித்தாகவோ ஹோம் வொர்க் எதுவும் செய்ததாகவோ நினைவில் இல்லை.
எங்களைக் கண்டு கடற்கரை பயப்படவில்லை. பெற்றோர்கள் தான் பயந்துப் போய் தமிழ்நாட்டில் விடுதிகளுடன் கூடிய பள்ளிக்கூடங்களில் சேர்த்துவிட்டு நிம்மதியாக இருந்தார்கள்.
நாங்கள் வளர வளர ஒவ்வொன்றாக இந்த மும்பையின் காட்சிகளும் மாறிக்கொண்டே
வந்தது. அந்த மாற்றத்தில் தான் என் கடற்கரையும் காணாமலே போய்விட்டது.
இப்போது என் கடற்கரை இருந்த இடத்தில் தான் பாந்திரா சயான் ஹைவே..
அந்த ரோட்டில் காரில் போகும் போதெல்லாம் இப்பொதும் என் காதுகளில்
அந்தக் காணாமல் போன கடலலைகளின் சப்தம் கேட்கிறது.


பாந்திரா என்று சொன்னவுடன் இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
மும்பையில் அய்யா வரதராசன் கொடி கட்டிப் பறந்த நேரம். அவர் மும்பையில்
இருக்கும் வரை செண்ட்ரல் மாதுங்கா ரயிலடிக்கு அருகில் தான் அவருடைய
கணபதி விழா பத்து நாட்களும் நடக்கும். சும்மா ஜே ஜேனு. தமிழ்நாட்டின்
சினிமா பிரபலப் பாடகர்கள் அனைவரும் வந்திருக்கிறார்கள்.
ஒருமுறை அவர் போட்ட பந்தல் தீ பிடித்து எரிந்துப் போய்விட்டது.
அதிகாலை விடியவில்லை. வரதராசன் காலகில்லாவுக்கு வருகிறார்.
காலகில்லா பகுதி சயானுக்கும் தராவிக்கும் நடுவில் இருக்கும் இடம்.
அங்கிருந்த என் மாமா சண்முகராசன் அவர்களை எழுப்பி கூட
அழைத்துக் கொண்டு பாந்திராவில் இருக்கும் சிவசேனா பால்தாக்கரே
வீட்டுக்கு அவர் கார் விரைகிறது. அவர்கள் இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள்?
தெரியாது. ஆனால் வரதராசன் கோபமாக இருந்திருக்கிறார்.
அன்று மாலைக்குள் எரிந்தப் பந்தல் மீண்டும் எழுந்து நின்றாக வேண்டும் என்று
சொல்லிவிட்டு வந்துவிட்டார்கள்.
அன்று மாலை வழக்கம் போல திட்டமிட்ட படி அங்கே பந்தலில் நிகழ்ச்சி நடந்தது.
இந்த்ச் சம்பவம் மணிரத்தினத்தின் "நாயகன் " அறியாத நாயகன் கதை.




கடந்த ஞாயிறன்று மாலை எழுத்தாளர் மன்றத்தின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் நினைவுச் சொற்பொழிவுனு என்னைப் பேசச் சொல்லியிருந்தார்கள்.
சரி என்று ஒத்துக்கொண்டு பேசிவிட்டு வந்தேன். இன்று காலை 20/12/2011 தினத்தந்தியில்
புகைப்படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது.
செய்தியில் : புதியமாதவி, விசுவநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்னு எழுதியிருக்காங்க.
மற்ற பத்திரிகைகளில் எப்படி வந்திருக்கிறதோ..! தெரியாது. இதற்காகவெல்லாம் நாங்க
பத்திரிகையாளர்களுடன் சண்டை போடுவதில்லை. தினசரிகளில் நகைச்சுவை வரக்கூடானு
யார் சொன்னது? !!!


நன்றி : வடக்கு வாசல் ஜன.2012

Sunday, January 8, 2012

கொலவெறியும் ஏ ஆர் ரகுமானும்




http://www.youtube.com/watch?v=4L5qR6HtePQ&feature=youtu.be%2F


கொலவெறிப்பாட்டைக் கேட்டதும் நடுவராக இருந்த
பாடகர் பி ஜெயசந்திரன் எழுந்து வெளியேறுகிறார்.
பாடகர் பி ஜெயசந்திரன் , மலையாலம், இந்தி தமிழ் சினிமாக்களில் பாடிப் பல விருதுகள் பெற்றவர்.
ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு,
தாலாட்டுதே வானம்,
ஆடிவெள்ளி தேடி உன்னை
ஆகிய நம்மால் மறக்க முடியாத தமிழ் பாடல்களைப் பாடியவர்.



நம் இசைப்புயல் ரகுமான்

மிகவும் ரசித்ததாக சொல்கிறார்.இந்த கிட் சாங் மூலம் தமிழ் இசை தேசத்தையே திருப்பி பார்க்க வைத்து விட்டதாம்!
வாழ்க
ராராராராகுகுகுகுகுமான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!



Saturday, December 31, 2011

2012 ல் தேவை ஒரு ஃகாட் ஃபாதர்







ஓரளவு அறிமுகமான
எழுத்தாளருக்கு / அரசியல் விமர்சகருக்கு
தமிழக இலக்கிய அரசியல் வட்டத்தில்
அனுபவமிக்க
ஒரு ஃகாட் ஃபாதர்/ஃகாட் மதர்
தேவை.

பிரபலமான அரசியல்வாதிகளின்
அரசியல் அறிவை அவர்களின்
அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம்
அறிந்துக் கொண்டதால்
தன்னுடைய அரசியல் ஞானம் அவர்களை விட
எவ்வகையிலும் தரம் குறைந்ததில்லை என்று திடமாக நம்புகிறார்.

மிகப் பிரபலமானவர்களின் பிரபலமான படைப்புகளை
வாசித்த அனுபவங்கள் மூலம்
அவர்கள் பிரபலமான சூத்திரத்தை
அவரும் அறிந்துக் கொள்ளும் வாய்ப்பு ,
அறிந்தவர்கள் சொன்ன அண்மைக்கால சரித்திரங்கள்
என்ற பின்புலத்தின் அடிப்படையில்
அவருடைய 2012க்கான திட்டங்கள்:

2012க்கான திட்ட அறிக்கை
----------------------------

* 2012ல் ஓர் இலக்கிய- அரசியல் பத்திரிகை ஆரம்பிப்பது.

* விருதுகள் அறிவிப்பது. (இது ஒருவகையான கொடுக்கல்/வாங்கல்)

*யாராவது எதிர்மறையாக விமர்சிக்க ஆரம்பித்தால் அவருக்கே
விருது கொடுப்பதில்/புத்தகம் வெளியீட்டு விழாவில் தலைமை இத்தியாதி
முன்னுரிமைகள் கொடுப்பது.

* இறுதியாக அரசியல் கட்சி ஆரம்பிப்பது. அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தாக வேண்டும்
என்ற கொள்கையில் மிகவும் உறுதியாக இருப்பவர்களுக்கு கட்சியில்
பொறுப்புகளும் பதவிகளும் கொடுப்பது.

இந்த திட்டங்களை நடைமுறைப் படுத்த அவசரத் தேவை
ஒரு ஃகாட் ஃபாதர்/ ஃகாட் மதர்.

கள ஆய்வறிக்கை
--------------------


*யாராவது பிரபலத்தை நோக்கிச் செருப்பு வீசினால் பிரபலமாகிவிடலாம்
என்றார் என் நண்பர் ஒருவர். திகார் ஜெயில் வாசலில் போய் நில்லுங்கள்,
நிறைய பிரபலங்கள் உள்ளேயும் வெளியேயும் ... உங்களுக்கு வசதியாக
இருக்கும் என்றார். இந்த ஐடியா சொன்னவர் ஒரு டி.வி,க்காரர் என்பதால்
அவருக்குப் புத்தாண்டில் சுடச்சுட பிரேக் நியுஸ் கிடைக்கும் என்று
நம்மை வைத்து காமெடி கிமெடி பண்ணுகிறாரோ என்ற சந்தேகம்
வந்துவிட்டதால் அந்த ஐடியாவைக் கைவிட்டு விட்டோம்.

*சில இடங்களில் சிலர் வெளியேற்றப்பட்டதால் அந்த வேகன்சியில்
முயற்சிக்கலாம் என்றால் நம்மால் இன் -ஹுவுஸ் , 24x7 வேலை
எல்லாம் செய்ய முடியாது என்பதால் அதுவும் டிராப்.

*பிரபலங்களின் செல்ல நாய்/ நண்டுகளை சின்னவீடு/பெரியவீடு வேறுபாடின்றி
புகழ்ந்து கவிதைப்பாட வேண்டும் என்றார் ஓர் அனுபவஸ்தர். பிரபலங்களைப்
பற்றியே கவிதை எழுத எம் கவிதைகளுக்குத் தெரியாமல் போய்விட்டதால்
அதுவும் ஒத்துவரவில்லை.

*நவீன கவிதைகளைப் படைக்கும் அண்ணன் தம்பி, சித்தப்பா/மாமன்/மச்சான்
அவர்களின் பிள்ளைகள் என்று யாருமில்லை. அப்படி இருந்திருந்தாலும் கூட
அவர்கள் எழுதியதை நம் பெயரில் போட்டு அவர்கள் உதவியுடன்
உலக மொழிகளுக்கு நம் எழுத்துகளை எடுத்துச் செல்லும் கொடுப்பினையும்
இந்தப் பிறவியில் இல்லாமல் போய்விட்டது.

*அன்னா ஹசாரேவின் மும்பை உண்ணாவிரதத்தில் கலந்துக் கொள்வதற்கு
முன்னரே அவரும் உண்ணாவிரதத்தையே முடித்துக் கொண்டதால்
கிடைக்க இருந்த ஒரு வாய்ப்பும் கைநழுவிப் போய்விட்டது!
(உண்ணாவிரதம் இருப்பது எப்படி ? என்பதை அவர் நம்ம தமிழ்நாட்டுக்குப்
போய் பயிற்சி எடுத்திருக்க வேண்டாமா... ??!!)


பின்குறிப்பு:
-------------

பிரபலமாவது எப்படி ? என்பது குறித்த ஓர் ஆய்வின்
அடிப்படையில் மேற்கண்ட 2012க்கான திட்ட அறிக்கைத்
தயார் செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


திட்டங்கள் குறித்து கருத்தரங்குகள்/பயிற்சிப் பட்டறைகள் நடத்த
மாநில ரீதியாகவும்/மாவட்ட ரீதியாகவும் ஐ.ஐ.எம் பட்டதாரிகள் தேவை.

ஏற்கனவே எம்முடன் தொடர்பில் இருக்கும் பெரிசுகள் இதற்கு
விண்ணப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(அதாகப்பட்டது அவர்கள் எல்லாம் ஒரு வேஸ்ட் ஃபீஸ்கள்/கையாலாகத
பிழைக்கத் தெரியாத பெரிசுகள்) எனினும் பொதுக்குழுவுக்கு அவர்கள்
அனைவரும் ஆயுட்கால கவுரவ ஆலோசகர்களாக நியமிக்கப்படுவார்கள்
என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கள் திட்டங்களை விளம்பரங்களாகவும் தலைப்புச் செய்திகளாகவும்
ப்ரேக் ந்யுஸ்களாகவும் வெளியிடும் ஊடகங்களை , ஊடகவியலாரைக்
கனமான கவர்கள் கொடுத்து கவனித்துக் கொள்ள தனியாக
ஒரு குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.

திட்டங்கள் மாற்றத்திற்குட்பட்டவை.
புதிய கருத்துகளுக்கு என்றும் வரவேற்புண்டு.

(இத்திட்டக்குறிப்பு தனிச்சுற்றுக்கு மட்டும்)

Friday, December 30, 2011

சந்திப்பின் வலி



சந்திப்பின் வலி
---------------------

உன்னைச் சந்திக்கத் துடித்த
கனவு வசப்பட்ட தருணம்.
மவுனம் கனமானது.
என்னை நேசித்த நீயும்
நீயே பிரபஞ்சமாக இருந்த நானும்
நாம் தொலைந்துபோனதை
உணர்ந்து கொண்ட அந்த தருணம்
நம் பிரிவின் வலியைவிட
கொடுமையானது.
நரை விழுந்து
முகம் கருத்து
இளமை விடைபெற்றுக்கொண்டிருக்கும்
இந்த நாட்களில்
சிட்டுக்குருவிகளாய்த் திரிந்த நாட்கள்
நேற்றைய கனவுகளாய்
நம் முன்.
நம் இமைகளை அழுத்தும் பாரமாய்
----


Thursday, December 29, 2011

திராவிடம் அருங்காட்சியகத்தில்





தமிழ் தேசியமும் திராவிட அரசியலும் என்ற தலைப்பில் எழுதியதை வாசித்த
எனதருமை தோழி சொல்கிறார்:
என்னப்பா இது... திராவிடம் அது இது என்று பேசிக்கொண்டு...
திராவிடம் என்ற சொல்லே இப்போது அருங்காட்சியகத்தில்
வைக்கப்படும் பொருளாகிவிட்டது என்றார்.
அவர் நிறைய படித்தவர். திராவிட அரசியல் தெரிந்தவர்.
ஊடகவியலார்.

அவர் சொன்னதை எல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன். இறுதியாக
நான் அவரிடம் ஒரே ஒரு கேள்வியைத் தான் வைத்தேன்.

இருக்கட்டும் நீங்கள் சொல்கிற படியே இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
அப்படியானால் எதுக்காக எங்க தமிழ்நாட்டில் அரசியல் கடை திறக்கறவன்
எல்லாம் திராவிடன்ங்கற சொல்லை வால் மாதிரி ஒட்ட வச்சிக்கிட்டு
கடை விரிக்கிறான்... இந்தக் கடையை ஆந்திராவில், கர்நாடகத்தில்,
ஏன் கேரளாவில் போய் விரிச்சி பார்க்கச் சொல்லுங்க.. அங்கே வாலை
ஒட்ட நறுக்கிடுவான்கிற பயமா? தமிழன்னா என்ன கேணப்பசங்கனு
நினைச்சுங்கீளா?னு ..................(எடிட் எடிட் எடிட் திருநெல்வேலி கெட்ட
வார்த்தைகள்.......!!!!)

அட இதுக்குப் போயி இவ்வளவு ஆத்திரப் படுவீங்கனு நினைக்கலியேனு
சொன்னார்கள்...
ஆமாம்... இதற்கெல்லாம் ஆத்திரப் படாமல் வேறு எதற்கு ஆத்திரப்படுவதாம்?
........................ரவுத்திரம் பழகு...


Tuesday, December 27, 2011

தமிழ்த்தேசியமும் திராவிட அரசியலும்




இந்தியக்குடியரசின் ஓர் அங்கமாக ஒரு மாநிலமாக ஓரினமாக ஒரு மொழியாக
இருக்கும் தமிழன் இந்தியக் குடியரசின் ஒற்றைப் பண்பாடு, ஒரு மொழி,
ஓர் இனம், ஒரு மதம் என்ற ஒருமைத்தன்மையில் ஆதிகாலம் தொட்டு
கலந்து விடாமல் தனித்தே நிற்கிறான்.

சிலம்புக் காவியம் படைத்த இளங்கோவடிகளின் தமிழ் மண்ணில்
இன்று தமிழனுக்கு அவன் தமிழன் என்ற அடையாளம் இருப்பதாலேயே
இடமில்லை, அடித்து விரட்டப்படுகிறான், சொந்த மண்ணிலேயே
அகதிகளாகிவிடும் அவலம் இன்று உச்சநிலையை எட்டியுள்ளது.

அதாவது திராவிட இன மக்கள் அதாவது திராவிட மண்ணின் பங்காளிகள்
இன்று ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு எதிரெதிர் அணியில்
நிற்கிறார்கள். இவர்கள் இப்படி அடித்துக் கொண்டு சாவதில் மூன்றாவது
அணிக்குப் பெரும் வெற்றியும் கொள்ளை இலாபமும் இருக்கிறது என்பதையும்
நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

திராவிட மொழிக்குடும்பம், திராவிட இனம் ஆகிய கருத்துகள்
திராவிட மொழிகளின் தாயாக இருக்கும் தமிழ்மொழி பேசிய மக்களிடம்
மட்டும் தான் இருந்ததா? என்ற கேள்வியை முன்வைத்து கடந்தக் காலத்தை
அறிவுப்பூர்வமாக நாம் அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

அன்றைய மதராஸ் ஸ்டேட்டில் தமிழர்களை விடவும் அதிகமாக தெலுங்கு
கன்னடம் பேசியவர்கள் வாழ்ந்தார்கள் என்பதுடன் அவர்கள் செல்வாக்கு
மிக்கவர்களாகவும் இருந்தார்கள் என்பதையும் நினைவு கூர வேண்டியிருக்கிறது.
தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம்
என்ற பெயர்கள் எல்லாம் இந்த உண்மையை இலைமறைக் காயாக
உணர்த்தும் சான்றுகள். அந்தச் சூழலும் கால்டுவெல் எழுதிய திராவிட
மொழிகளின் ஒப்பிலக்கணம் மூலம் கிடைத்த திராவிட மொழி
இன எழுச்சியும் அரசியல் களத்தில் மிகக் கூர்மையான ஆயுதங்களாக
திராவிட இயக்கத்தாரால் முன் எடுத்துச் செல்லப்பட்டன.

அக்காலக் கட்டத்தில் தமிழன் தொடுத்த முதல் போர் என்றழைக்கப்படும்
இந்தி எதிர்ப்பு போராட்ட களத்தில் இந்த ஆயுதங்கள் மிகவும்
சக்தி வாய்ந்தவைகளாக இந்திய அரசுக்கு ஒரு நம்ப முடியாத
கலகக்குரலாக இருந்தது. மொழி என்ற கருத்துருவாக்கத்தில்
தமிழன் இந்தளவுக்கு களத்தில் இறங்கிப் போரிடுவான் என்பது
நடுவண் அரசு அறிந்துக் கொண்ட முதல் பாடமாக இருந்தது.

இந்தி எதிர்ப்பு போரில் அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியின் தலைமையில் தமிழர் படை
திருச்சி தாண்டி, செங்கல்பட்டு தாண்டி 42 நாட்கள், 577 மைல்கள் நடந்து
சென்னை வந்தடைந்தது. காந்தியடிகளின் தண்டியாத்திரையை விடவும்,
ராஜாஜியின் வேதாரண்ய உப்பளப்படையை விடவும் 4 மடங்குப் பெரிய
படையை தன் மொழிப் போர் வரலாற்றில் நடத்திச் சென்றவன் தமிழன்.

அன்றைக்கும் தமிழன் தொடுத்த முதல் போரை அடக்கவந்த
இந்திய இராணுவம் தன் மொழிக்காக துப்பாக்கி குண்டுகளை
எதிர்நோக்கிய ஒரு சமூகத்தைக் கண்டு அஞ்சி ஓடியது.
அப்போதெல்லாம் தமிழ்நாடு, தமிழ் மொழி தமிழ் மண் என்ற
உணர்ச்சிப் பொங்கி இருந்தக் காலம். அந்த உணர்ச்சியை அப்படியே
திராவிட அரசியல் தனக்கானதாக கபளீகரம் செய்துவிட்டதோ
என்ற கேள்வி நம் முன் எழுகிறது.

.

இன்று ஆட்சியில் இருக்கும் அதிமுக, நேற்றுவரை ஆட்சியில்
இருந்த திமுக, நாளைய ஆட்சிக்கனவில் இருக்கும் மதிமுக,
இந்த திராவிடச் சாரலில் அதன் ஈரமே அறியாமல் தன்னைத் தேசிய திமுக
என்றழைத்துக் கொண்டிருக்கும் விஜயகாந்தின் திமுக...
இன்னும் திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம்,
ஆனைமுத்து, சுப.வீ, கொளத்தூர் மணி என்று ஆள் ஆளுக்கு
தனித்தனியாக நடத்திக் கொண்டிருக்கும் திராவிட பட்டறைகள்..
அலுவலகங்கள்... இத்தியாதி சகலமானவர்களிடமும்
காலம் வைக்கும் ஒரே ஒரு கேள்வி இதுதான்.
இன்றைய சூழலில்,
உங்கள் அடையாளங்களில் இருக்கும் "திராவிடம்" என்பது என்ன?

வரலாற்று ரீதியாகவும் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும்
நில ரீதியாகவும் எதெல்லாம் திராவிடம் என்று அழைக்கப்பட்டதோ
அதற்கும் நீங்கள் காட்டும் திராவிடத்திற்குமான வேறுபாடுகள் என்ன?

திராவிடம் என்ற சொல் அதற்கான பொருள் வீச்சு, வரலாற்றுப் பின்னணி
எல்லாம் உச்சக்கட்டத்தில் பேசப்பட்ட காலத்திலும் சரி, திராவிடம் என்ற
சொல் பொதுமக்களிடமும் அரசியல் சமூக தளத்திலும் அறிமுகமான
காலக்கட்டத்திலும் கூட இந்தச் சொல் மீதான புரிதல்கள் குறித்த
ஐயப்பாடுகள் எழுந்தன. ஆனால் பெரும்பான்மையானோர் கருத்து
என்ற பெயரிலும் இயக்கத்தில் இருந்துக்கொண்டே இயக்கத்தை விமர்சிப்பவர்களின் விமர்சனங்களை முற்றிலும் புறக்கணிப்பதுடன் கள்ளமவுனம் சாதித்து
அவர்களைக் கண்டு கொள்ளாமல் இருட்டடிப்பு செய்வதும் நிகழ்ந்துதானிருக்கின்றன.

சேலம் நீதிக்கட்சி மாநாடு. தலைவர் தந்தை பெரியார். மாநாட்டைத் திறந்து வைத்து பேசியவர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள். அந்த மாநாட்டில் தான் பெரும்பான்மையோர் கருத்துக்கிணங்க நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெறுகிறது.
ஆனால் மாநாட்டைத் திறந்து வைத்துப் பேசிய கி.ஆ.பெ. தன் பேச்சில் தென்னிந்திய நலவுரிமைக் கழகத்தை தமிழ்நாட்டு நீதிக்கட்சி என்ற பெயரில் மாற்றி அமைத்து ஆதரவு திரட்ட வேண்டும் என்ற தன் கருத்தைத் தெரிவிக்கிறார். கி.ஆ.பெ. வரலாறு குறித்த நூலில் மா.சு. சம்பந்தன் அவர்கள் இன்னொரு கருத்தையும் பதிவு செய்துள்ளார். (திருச்சி விசுவநாதம் - வரலாறு, பாரி நிலையம் வெளியீடு)
அதில் " கி.ஆ.பெ . திராவிட இனம் என்பதிலோ திராவிட நாடு என்பதிலோ
கருத்து வேற்றுமை கொண்டவர் அல்லர். திட்டமிட்டு மலையாளம், கன்னடம்,
தெலுங்கு முதலிய இடங்களில் பிரசாரம் செய்து திராவிட நாடுகளின் கூட்டாச்சிக்கு ஆதரவு தேடுவது தான் முறை, தமிழ்நாட்டில் மட்டும் திராவிடநாடு பேசுவது சரியல்ல"
என்ற கருத்தைக் கொண்டிருந்ததாகப் பதிவு செய்திருக்கிறார்.

இந்தக் கருத்து முன்வைக்கப்படும் போதெல்லாம் திராவிடம் என்பது
இன அடையாளம், அந்த அடையாளத்தை விடுத்து தமிழன் என்று
மட்டுமே அடையாளப்படுத்திக் கொண்டால் தமிழ்மொழி பேசுபவர்கள்
என்ற காரணத்தாலேயே அவாள்கள் இவாள்கள் எல்லாம் வந்துவிடுவார்கள்!
என்ற காரணங்களை எல்லாம் அதிமுக, அதிமுக அரசு, அதிமுக தலைமை
என்ற நிகழ்கால நிஜங்களின் ஊடாக பேசுவது எத்துணைப் போலித்தனமாக
இருக்கிறது !

திராவிடன் என்ற அடையாளமும் ராகுல் திராவிட் என்ற கிரிக்கெட் வீரரின் பெயரில் ஒட்டிக்கொண்டிருக்கும் திராவிட் என்பதும் திராவிட இன அடையாளத்தின் இன்னொரு பக்கத்தை ஒரு சில ஆய்வாளர்கள் நடுவில் எழுப்பியிருந்தாலும் ஊடகமும் தமிழக அரசியலும் இம்மாதிரியான கருத்துகளை இருட்டடிப்பு செய்கின்றன,


தமிழன் என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டு அரசியல் நடத்த
என்ன தயக்கம்? தமிழன் என்ற அடையாளம் யாருக்கு, ஏன்
ஒவ்வாமையாக இருக்கிறது? எவருக்கெல்லாம் இன்றைக்கு திராவிட
அடையாளம் பாதுகாப்பாய் தமிழ் மண்ணில் வெற்றிகரமான அரசியல்
கதாகாலட்சேபம் நடத்த உதவியாக இருக்கிறது?
காவிரி நதிநீர் பங்கீட்டில் கன்னடம் பேசும் திராவிடன் தமிழனின் எதிரியாக இருக்கிறான்.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மலையாளம் பேசும் திராவிடன்
தமிழனின் எதிரியாக இருக்கிறான். கன்னடத்திலோ மலையாளத்திலோ
திராவிடன் இல்லவே இல்லை. கன்னட கேரள ஏன் ஆந்திராவிலும் கூட
திராவிட அரசியல் இல்லவே இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் திராவிட
அரசியல்.. திராவிட அரசியல் தொடர்கிறது. திராவிடம், திராவிடன் என்ற
அடையாளங்கள் தமிழ்த்தேசியம் என்ற மையப்புள்ளியை விட்டு தமிழனைத்
திசைமாற்றி இருக்கிறதா? தடம் புரள வைத்திருக்கிறதா?

முல்லைப் பெரியாறு மவுனமாக இந்தக் கேள்விகளையும் சேர்த்தே நம் முன்
வைத்திருக்கிறது. வழக்கம் போல நாம் கள்ளமவுனம் சாதித்து அல்லது
இருட்டடிப்பு செய்து அரசியல் தலைவர்களின் சுய லாபங்களுக்காக தேர்தல் வெற்றிக்காக
இலவசங்களுக்காக நம் வாழ்வாதரங்களை இழந்துவிட்டு ...
வரப்போகிற கூடன் குளம் அபாயங்களுக்கு நடுவில் நம் அடுத்த
தலைமுறைக்கு, நம் குழந்தைகளுக்கு எந்த தமிழ் நிலத்தைக்
கொடுக்கப் போகிறோம்?



Thursday, December 22, 2011

இந்திய அரசின் இன்றைய போர்க்களம்





"மக்கள் அவர்கள் இருப்பிடத்தைக் காலி செய்துவிட்டு கேம்ப் பகுதிக்கு
வந்தாக வேண்டும். இக்காரியத்தைச் செவ்வனே செய்து முடிக்க
அரசு பேருதவி செய்ய தயாராக இருக்கிறது. சரணடைய மறுக்கும்
கிராமங்கள் தீக்கிரையாக்கப்படும். இந்தச் செய்தியை ஊடகத்திற்கு
எடுத்துச் செல்ல முனையும் பத்திரிகையாளர், செய்தியாளரைக்
கண்ட இடத்திலேயே சுட்டுத்தள்ளுங்கள்....."
இந்த அதிகார வர்க்கத்தின் குரல் வந்தது ஈழத்தில் இருந்து அல்ல.
இந்தியாவிலிருந்து இந்திய மக்களுக்கு எதிராக வந்தக் குரல்தான் இது.
பிஜப்பூரின் காவல்துறை அதிகாரி தனக்கு கீழ் பணி புரியும் காவல்துறைக்கு
வயர்லஸ் மூலமாக பிறப்பித்த உத்தரவு...
அதிகாரியின் பெயர் டி. எஸ். மன்ஹர்.

கண்ணுக்குத் தெரியாத போர்க்களம் இது. இங்கே அந்நிய சக்திகளின்
ஊடுருவல் இல்லை. எல்லைக்கோடுகளின் பிரச்சனைகள் இல்லை.
எந்த ஒப்பந்தங்களும் மீறப்பட்டு விட்டதாய் அடிக்கடி சொல்லப்படும்
அபத்தமான காரணங்கள் கூட இல்லை. ஆனால் இந்திய அரசு
தன் சர்வ வல்லமைப் படைத்த இராணுவ, போலீஸ், எல்லைப் பாதுகாப்பு
படைகளை ஏவி இந்த மக்களுக்கு எதிராக தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கிறது.

யார் இவர்கள்?
இவர்களை இப்படி வேட்டை நாயாக இந்திய அரசு துரத்தி துரத்தி விரட்டுகிறதே?
ஏன்? எவருக்காக நடக்கிறது இந்தப் போர்?
இவர்கள் செய்தப்பாவம் எல்லாம் உங்களையும் என்னையும் போல ஒரு
நகரத்திலோ நகரமயமாகும் கிராமத்திலோ பிறக்காமல் வனங்களில்
பிறந்தது மட்டும் தான். அதுவும் அந்த வனப்பிரதேசம் இந்திய மண்ணின்
இயற்கை வளங்களை, தாதுப்பொருட்களை அதுவும் வல்லரசுகளுக்கு
வல்லரசுகளாகவே தொடர தேவையான தாதுப்பொருட்களை தன்
வேர்களின் அடியில் கொண்டு இருப்பதுதான் காரணம்.

கிராமம் கிராமமாக இந்த மலைப்பிரதேச மக்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து துரத்தப்படுகிறார்கள்,
பிச்சைப்போடுவது போல எப்போதாவது அவர்களுக்கு இழப்பீடு தொகை
என்ற பெயரில் எலும்புத்துண்டுகள் வீசப்படுகின்றன. குடும்பம் குடும்பமாக
மக்கள் அதிகாரவர்க்கத்தின் ஆணையை மீறமுடியாமல் வெளியேறுகிறார்கள்.
பெரும்பாலோர் பெருநகரங்களில் கூலிகளாக, அவர்கள் பெண்டிர் பலாத்காரமாக
பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுகிறார்கள். அவர்கள் வாழ்வாதாரமான நிலம்
அவர்களிடமிருந்து அபகரிக்கப்படுகிறது. அவர்கள் வாழ்வைப் பாதுகாக்க வேண்டிய
அரசாங்கமே பெருமுதலாளிகளுக்காக இந்தக் கங்கானி வேலையைச் செய்கிறது.
அவர்களுக்கு அவர்கள் பாதுகாப்புக்கு என்று எந்த இந்தியச் சட்டமும் இல்லை.
அவர்களைத்தான் இந்திய அரசு மாவோயிஸ்டுகள் என்று சொல்கிறது.


நேற்றைய (15/9/11) டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கூட நம் உள்துறை
அமைச்சர் ப.சிதம்பரம் அலறுகிறார்.. "தீவிரவாதிகளை விட மாவோயிஸ்டுகளால்
இந்தியாவுக்கு இருக்கும் ஆபத்து மோசமானது" என்று.



அஹிம்சை வழியில் சுதந்திரம் வாங்கியதாய் அறுபது வருடங்களாய் சரித்திரப்பாடம்
நடத்தி வெற்றி கண்ட இந்திய அரசு இவர்களைக் கண்டு பயப்படுகிறதாம்!
இந்தியக்குடியரசுக்கு இவர்களால் பேராபத்தாம்! ஜன்னி கண்டவன் பிதற்றுவது
போல தங்கள் வாழ்வாதரங்களுக்காய் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைமைக்குத்
தள்ளப்பட்டவர்களைக் கண்டு வல்லரசு ஆகப்போகும் இந்தியக்குடியரசு
"ஆபத்து ஆபத்து " என்று அலறுகிறது.


வில்லும் அம்பும் ஆயுதமாக ஏந்திய தோள்களில் கலவரத்தின் போது கையகப்படுத்தப்பட்ட
துப்பாக்கிகளுடன் அந்தக் காட்டுமனிதர்கள் திரிகிறார்கள். அவர்களை அடக்க இந்திய அரசின்
செண்ட்ரல் ரிசர்வ் போலீஸ் படை, எல்லைப் பாதுகாப்பு படை, இந்திய திபேத்திய எல்லைப்
பாதுகாவல் போலீஸ் படை என்று தன் இராணுவப்படைகளைக் குவித்திருப்பது போதாது என்று
இந்திய வான்படை தற்காப்புக்காக அவர்களை எப்போது வேண்டுமானாலும் சுட்டுத்தள்ளும்
அதிகாரத்துடன் வலம் வருகிறது. இந்திய அரசு இந்தியக் குடிமக்களை தன் சொந்த
இராணுவப்பலம் கொண்டு அடக்குவதுடன் அவர்களை அவர்கள் மண்ணிலிருந்து விரட்டி
பாக்சைடு சுரங்க முதலாளிகளின் நலனைப் பாதுகாக்கிறது.

தண்டகாரண்ய காடுகளில் 19 மாவோயிஸ்டுகளைச் சுட்டுக்கொன்றுவிட்டதாக சொன்ன
போலீஸ் அதிகாரியிடம் "இவர்கள் மாவோயிஸ்டுகள் என்பதற்கான அடையாளம் என்ன?"
என்ற கேள்விக்கு அந்த அதிகாரி சொன்ன பதில்:
"அவர்களிடம் மலேரியா வியாதிக்கு மருந்துகளும் டெட்டால் பாட்டில்களும் இருந்தன"
என்பதுதான். இந்தச் செய்தியை எந்த 24 மணிநேர தொலைக்காட்சியும் காட்டுவதில்லை.
எந்தப் பத்திரிகையும் இச்செய்திகளை செய்திகளாக்குவதில்லை. செய்தி ஊடகங்கள் அனைத்தும்
அதிகார வர்க்கத்தின் நலன் பேணுவதில் கூட்டுக்களவாணிகளாக இருக்கின்றன.

ஊடகங்கள் தனியார் நிறுவனங்களின் கைப்பாவைகளாக இருக்கின்றன. செய்திகளை அவர்கள்
உடனுக்குடன் வெளிக்கொண்டுவருகிறார்கள் என்பதுடன் செய்திகளையும் அவர்களே
தீர்மானிக்கிறார்கள் என்பது தான் நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான
செய்தி .
மே, 2010ல் மேற்கு வங்கம் ஜார்க்கிராம் பகுதியில் நடந்த ரயில் விபத்தும் அதில் 150 பேர்
பலியானதும் உண்மையானச் செய்தி. ஆனால் அதற்கு காரணமானவர்கள் மாவோயிஸ்டுகள்
என்பது ஊடகங்கள் உருவாக்கிய செய்தி. அந்தச் செய்திக்கான ஆதாரங்கள் எதுவுமில்லை.

ஆதாரமற்ற அந்தச் செய்தியினைக் கொண்டு கற்பனையில் உருவாக்கப்பட்ட செய்தி:
"மாவோயிஸ்டுகள் தாங்கள் கொலை செய்த போலீஸ்காரரின் உடலைச் சிதைத்து... "
என்று கொடூரக்கற்பனைகளைத் தன் முதல் பக்கத்தில் கொட்டு எழுத்துகளில்
அச்சிட்டு பரபரப்பான விற்பனைக்கு வழி வகுத்துக் கொள்கிறது.
ஆனால் 'இது உண்மையல்ல" என்று போலீஸ்
நிர்வாகமே மறுப்பு கொடுத்தச் செய்தியை மட்டும் தபால்தலை அளவுக்கு சின்னதாக
தன் பக்கங்களுக்கு நடுவில் எங்காவது புதைத்து வெளியிடுகிறது.

ஒரிசா மாநிலத்தில் ராயக்கடா மாவட்டத்தில் , டிசம்பர் 2000ல்
ஹிண்டல்கோ கம்பேனியை (Hindalco - Birla grp)
எதிர்த்து (Prakrat Sampad Suraksha Parisad - PSSP) இயற்கை வளங்களைப்
பாதுகாக்கும் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். ஒரிசாவில்
அதிகமாக இருக்கும் பாக்சைடு தான் ஹிண்டல்கோ , மிட்டல், டாடா, ஜிண்டால்,
எஸ்ஸார், பாஸ்கோ, ரியோ டிண்டோ, வேதாந்தா என்று பல முதலாளித்துவ
முதலைகளின் பசிக்கு ஒரிசாவைத் தீனியாக்க துடித்தது. இந்திய அரசும் வழக்கம்போல
பெருமுதலைகளின் பசி ஆற்றவே முன்வந்தது. 15 டிசம்பர் 2000ல் வெளியூரிலிருந்து
லாரிகளில் ஆட்களைக் கொண்டு வந்து பாக்ஸைடு சுரங்கங்களுக்கு ஆதரவாக
குரல் எழுப்பியது பணமுதலைகள். அங்கிருந்த ஆதிவாசிகள் அவர்களை விரட்டி
அடித்தனர். ஆயுதம் தாங்கிய சிறப்புக் காவல்படை வந்திறங்கியது,.
3 ஆதிவாசிகள் காவல்படையின் துப்பாக்கிச் சூட்டில் பலியானர்கள்.
அவர்களின் நினைவாக இன்றும் குச்சைய்படர் (Kuchaipadar) கிராமத்தில்
கறுப்புக்கொடி ஏற்றுகிறார்கள். அதுவும் இந்திய பேரரசின்
சுதந்திரதினமான ஆகஸ்டு 15லும் , குடியரசு தினமான ஜனவரி 26 லும்
கறுப்புக்கொடி ஏற்றப்படுகிறது.


தண்டகாரண்ய காடுகளில் மருத்துவமனைகள் கிடையாது. இந்தியாவிலேயே ஊட்டச்சத்து
குறைவான குழந்தைகள் இங்கே தான் பிறந்து வளர்ந்துக்கொண்டிருக்கிறார்கள். கல்விக்கான
பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. ஆனால் மாணவர்களோ ஆசிரியர்களோ கிடையாது.
ஆசிரியர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்காமலேயே மாதச் சம்பளம் கிடைக்கிறது.
பள்ளி கூடங்களில் இந்திய அரசின் சீருடை அணிந்த போலீஸ் பாதுகாப்புபடை
பத்திரமாகத் தங்கி இருக்கும் கூடாரங்களாக மாற்றப்பட்டுவிட்டன.
அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலை எல்லாம்
அந்தந்த கிராமத்து மக்களை அவர்கள் இருப்பிடத்திலிருந்து விரட்டுவது தான்.

இந்திய அரசு அவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்கிறது. எதற்காக தெரியுமா?
அவர்கள் எத்தனைப் பேரைச் (மாவோயிஸ்டுகளை) சுட்டுக்கொல்கிறார்களோ
அதற்கேற்ப அவர்கள் ஊக்கத்தொகையும். அதனாலேயே கிணற்றிலும் குளத்திலும்
காட்டிலும் மேட்டிலும் தெரு முனையிலும் திரிந்துக் கொண்டிருக்கும் இளைஞர்களை
விரட்டி விரட்டிக் கொலை செய்கிறது. அப்படிக் கொலைச் செய்யப்பட்டவர்கள்
மாவோயிஸ்டுகள் தான் என்று நிருபீக்க போலீசே மாவோயிஸ்டுகள் சீருடையை
அவர்களுக்கு அணிவித்து காவல் நிலையத்தில் காட்டி சன்மானம் பெற்ற பின்
அவர்கள் உடலை வீசி எறிகிறது...!
அப்படிக்கொலை செய்யப்பட்டவர்களின் இறந்த உடலை வாங்க அவர்கள் வாகனத்தின்
பின்னாலேயே ஓடும் தாயின்/ சகோதரியின்/மனைவியின் அவலம்..
வார்த்தைகளுக்குள் அடங்காது.

இதை எல்லாம் இந்திய அரசு யாருக்காக செய்கிறது? ஏன்?
இந்தக் காடுகளில் மலைகளில் மண்ணடியில் புதைந்துக்கிடக்கும்
இயற்கை தாதுப்பொருட்களுக்காக. அதிலும் குறிப்பாக பாக்சைடு.
பாக்சைடிலிருந்து அலுமினியம் தயாரிக்கப்படுகிறது. ஒரு டன் அலுமினியம்
தயாரிக்க ஆறு டன் பாக்சைடு தேவைப்படுகிறது. அதுமட்டுமல்ல,
ஆயிரம் டன்களுக்கு அதிகமான தண்ணீரும் அதிகமான மின்சாரமும்
தேவைப்படுகிறது. இதனால் தான் இக்காடுகளில் பெரிய அணைக்கட்டுகள்
கட்டப்பட்டு நீர்த்தேக்கி வைக்கப்படுகிறது.
யாருக்காக எதற்காக இவ்வளவு அலுமினியம் தயாரிக்க வேண்டும்?
இந்த அலுமினியம் தான் ஆயுதம் தயாரிக்கும் தொழிலில் மிக முக்கியமான
ஒரு கலவைப் பொருளாக இருக்கிறது.
இந்த அலுமினியம் தயாரிப்பில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் மேற்கத்திய நாடுகள்
இந்த தயாரிப்பு வேலைகளைச் செய்ய இந்திய போன்ற நாடுகளைக் குத்தகைக்கு
எடுத்திருக்கின்றன.


இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் சோனியகாந்தியின் கைப்பாவை..! என்று
தலையங்கம் எழுதி சில பத்திரிகைகள் புரட்சியாளர்களாய் தங்களை
அடையாளப்படுத்திக்கொள்கின்றன. ஆனால் அந்தப் புரட்சியாளர்களும்
வெளிப்படையாக தெரியும் இச்செய்திக்குப் பின்னால் ஒளிந்திருக்கும்
வேறு சில நிஜங்கள்.
மேற்கு வங்க நிதி அமைச்சராக இருந்த அசோக் மித்ரா தன் வாழ்க்கை வரலாற்றை
எழுதும் போது ஒரு உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார்.
கைதவறிப் போட்டதா? இல்லைக் காட்டுக்கொடுத்தக் காரியமா? தெரியவில்லை!

1991ல், இந்திய அரசு தன் பொருளாதர சரிவை சமாளிக்க உலக பன்னாட்டு
நிதி நிறுவனத்திடம் (International monetary fund) கடன் கேட்கிறது.
அந்நிறுவனம் இரண்டு நிபந்தனைகளை வைக்கிறது.
ஒன்று பொருளாதர சீர்திருத்தம் (அதாவது தாராளமயம், தனியார்மயம்)
இரண்டாவது மன்மோகன்சிங்கை இந்தியாவின் நிதித்துறை அமைச்சராக்க
வேண்டும்! சாட்சாத் அதே மன்மோகன்சிங் அவர்கள் தான் இப்போது
இந்தியாவின் பிரதமராகவே இருக்கிறார்.
வெள்ளை வேட்டி பளபளக்க டில்லியில் வலம் வரும் உள்ளாட்சி அமைச்சர்
ப.சிதம்பரம் அவர்கள் நாளை ஒருவேளை பி.ஜே.பி யோ அல்லது மூன்றாவது
கூட்டணியோ யார் ஆட்சிக்கு வந்தாலும் அப்போதும் அமைச்சராக வலம்
வரக்கூடும். அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.


கர்நாடக அரசின் லோகாயுத அறிக்கைப்படி, சுரங்கத்தில் எடுக்கப்படும்
ஒரு டன் இரும்புக்கு அரசுக்கு கிடைக்கும் தொகை ரூபாய் 27/
சுரங்க முதலாளிக்கு கிடைக்கும் தொகை ரூபாய் 5,000/.
பாக்சைடு சுரங்கங்களில் சுரங்க பெரு முதலாளிகளுக்கு
கிடைக்கும் தொகை இதைவிட பலமடங்கு!
இந்தப் பணம் தான் இந்தியாவில் ஒரு கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தை
உருவாக்கி ஆட்சி செய்கிறது.

இந்தியாவில் மக்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பாராளுமன்றத்தைவிட
வலிமையானது கார்ப்பரேட் ராஜ்யம். பணமுதலைகளின்
பன்னாட்டு கருப்புப்பணப் பேரரசு. இந்தக் கார்ப்பரேட் ராஜ்யம்
பண்டித ஜவஹர்லால் நேருவின் காலத்திலேயே இலைவிட்டது
என்று சொல்லலாம். உண்மையில் இதன் வளர்ச்சி
இன்னொரு ராஜியமாகி இந்திய அரசுக்கே ஆப்பு வைக்கும்
என்கிற கலக்கம் நேருவுக்கு இருந்ததோ என்னவோ.....
நேரு இங்கிலாந்தின் பொருளாதர நிபுணர்
நிக்கலோஸ் கால்டரின் தலைமையில் ஓர் ஆய்வுக்குழுவை
ஏற்படுத்தினார். பெரும்பணக்காரர்களின் ஆண்டு உயர் வருமானத்தில்
75 விழுக்காடு நேரடியாக வருமானவரியாக வசூலிக்க வேண்டும்
என்ற பரிந்துரையை அரசு ஏற்றது. 1956 ஆம் ஆண்டில்
செல்வவரி, நன்கொடை வரி, இறப்பு வரி, செலவு வரி, மூலதன
இலாப வரி (Wealth tax, gift tax, expenditure tax, capital gains tax)
என்ற துணைவரிகளை விதித்து வரி ஏய்ப்பைத் தடுக்கலாம்
என்று கால்டர் குழு வலியுறுத்தியது.
ஆனால் காலப்போக்கில் இந்த வரிகளில் பல்வேறு சலுகைகள்
வழங்கப்பட்டன. உலக மயமாதல், தாராள மயமாதல், தனியார்
மயமாதல் என்று இந்தியாவின் பாதை திரும்பிய காலக்கட்டத்தில்
நடுவண் அரசு (கவனிக்க IMF ன் நிபந்தனைகளை) பல்வேறு வரிச்சலுகைகளை
அள்ளி அள்ளி வழங்கி இருக்கிறது.

மத்திய அரசின் தணிக்கை அறிக்கையின்படி,
2010ஆன் ஆண்டில் மட்டும் நிறுவன வரிக்கு வழங்கபட்ட
சலுகையால் அரசிற்கு ஏற்பட்ட நிதியிழப்பு ரூபாய். 35000 கோடி.
1990 முதல் 2010 வரை மத்திய அரசு வழங்கியுள்ள வரிச்சலுகை
100 இலட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

மேற்கண்ட அபரிதமான வரிச்சலுகைகளைப் பெற்றவர்களுக்கும்
அதாவது தனியார்மய ஜாம்பவான்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும்
இடையே எந்தச்சக்திகளாலும் உடைக்க முடியாத பிரிக்க முடியாத
ஓர் உறவு இருக்கிறது. அதாவது கள்ளத்தனமான உறவு வலுவாக
இருக்கிறது. இந்த secretive society தான் இந்தியாவை எந்தக் கட்சி
ஆட்சிக்கு வந்தாலும் ஆண்டுக்கொண்டிருக்கிறது. அரசின் கோட்பாடுகளை,
விதிகளைத் தீர்மானிக்கும் சக்திவாய்ந்தது இந்தக் கார்ப்பரேட் சாம்ராஜ்யம்.


திரைப்படம், ஊடகம், மத நிறுவனங்கள், இங்கெல்லாம் இவர்களின்
பெரும்பணம் புகுந்து விளையாடிக்கொண்டிருக்கிறது.
இந்த அபரிதமான பெரும் பணப்பெருக்கத்தைக் கொண்டுதான் இந்தியாவின்
தேர்தல் ஓட்டுகளை, அரசாங்கத்தை, நீதித்துறையை, தொலைக்காட்சிகளை,
பத்திரிகைகளை, தொண்டு நிறுவனங்களை, கல்லூரிகளை, பல்கலை கழகங்களை,
விளையாட்டுகளை (குறிப்பாக கிரிக்கெட்) மருத்துவமனைகளை.... என்று அனைத்தையும்
தன் கையகப்படுத்தி இருக்கிறது கார்ப்பரேட் சாம்ராஜ்யம்.

இவைகளை எல்லாம் அறிந்துக்கொள்ளும் வசதியும் ஆற்றலும்
கொண்ட அறிவுசார்ந்த /படித்த நடுத்தர வர்க்கம் இந்தக் கார்ப்பரேட்
ராஜ்யங்களின் சமஸ்தானங்களை கட்டி மேய்க்கின்ற
வேலையை திறன்பட செய்கிறார்கள்.
படித்த நடுத்தர வர்க்கம் இன்றைக்கு பல ஆயிரங்களில்
மாத ஊதியம் பெறுகின்ற பெரும் பேற்றை அடைந்திருப்பதற்கு
இந்தக் கார்ப்பரேட் சாம்ராஜ்யங்கள் காரணமாக இருக்கின்றன.
இந்த நடுத்தர வர்க்கம் தான் அந்தக் கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தின்
தாராளமய தனியார்மய சந்தையின் நுகர்வோராகவும் இருக்கிறார்கள்.
கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தின் பணம் இப்படி சுழற்சி முறையில்
அவர்கள் கஜானாவுக்கு மீண்டும் வந்தடைகிறது
.
எனவே தான், இந்தப் போராட்டக்களத்தில் நிற்பவ்ர்கள் ஆதிவாசிகளாகவும்
சட்டத்திற்கு எதிராக செயல்படும் அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள்
ஆபத்தான மாவோயிஸ்டுகள் என்றும் , தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படும்
நிலைமை ஏற்பட்டிருக்கிறது.


ஆய்தப்போராட்டம் எதற்கும் தீர்வாகிவிட முடியாது. அவர்கள் பேச்சுவார்த்தைக்கு
வர வேண்டும் என்று சில அறிவுஜீவிகள் சொல்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் மாவோயிஸ்டுகள் சொல்லும் பதில் ஒன்றுதான்.
முதலில் அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள்.
உங்கள் சிதம்பரத்திடம் சொல்லுங்கள் பசுமைவேட்டையை
நிறுத்து என்று!

அந்த வனப்பகுதியிலிருந்து ஒலிக்கிறது அவர்களின் குரல்:

நம்மை இன்று அதிகாரம் செய்பவர்கள்
ஒரு காலத்தில்
நமக்குப் பக்கத்தில் வசிப்பதற்காக வந்தார்கள்.

நாம் அவர்களுக்குப் பழங்களையும்
கிழங்குகளையும் கொடுத்தோம்.

நமது தாய்கள்
அவர்களுக்குப் பால் கொடுத்தனர்.
நமது தந்தையர்
அவர்களுக்கு உணவு கொடுத்தனர்.

வந்தவர்கள்
வெறும் கையொடு வந்தார்கள்
இன்றைக்கு அவர்கள்
பன்னாட்டுக் கம்பேனிகளின் பங்குதாரர்கள்

அவர்களது
அரண்மனை போன்ற வீடுகளை
அலங்கரிக்க
நமது தலைகளைக் கேட்கிறார்கள்.

அவர்கள் அதைக் கேட்பது
வெறும் வாழ்தலுக்காகத்தான் என்றிருந்தால்
அதையும் கொடுத்திருப்போம்
பலியிடுதலின் மரியாதை தெரிந்தவர்கள்
நாங்கள் என்ற வகையில்.
அவர்களது உல்லாசத்துக்கு
நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்க மாட்டோம்

அநீதிக்கு எதிராக
எங்கள் கருத்தை உயர்த்த உயர்த்த
போலீஸ் பூட்ஸ் கால்களின் சத்தமும்
ஆபாசமான குற்றச்சாட்டுகளும்
பல்கிப் பெருகி பயமுறுத்துகின்றன.

ஆமாம் நாம்
அங்கிருக்கும் வரையிலும்
நமது கடைசி மூச்சுவரை
இசைக்கருவியின்
அலுத்துப்போன தந்திக்கம்பிகளை
ஒழுங்கமைப்போம்.

அப்போதுதான்
ந்மது வாழ்வையும்
இருத்தலையும்

உயர்த்திப் பிடிக்க முடியும்

--------------

கட்டுரைக்குத் துணைநின்ற நூல்கள்:

அருந்ததிராய் - Broken republic

சிந்தனையாளன் -ஜூலை 2011

பாடல் : அஞ்சையா, கோயா மலைப்பகுதி: இந்திரனின்
கடவுளுக்கு முன்பிறந்தவர்கள் ஆதிவாசிக்கவிதைகள் தொகுப்பிலிருந்து.

----

நன்றி : பதிவுகள் டாட் காம்






Wednesday, December 21, 2011

போரிலக்கிய வரலாற்றில்..... பெயரிடாத நட்சத்திரங்கள்



போரிலக்கியம் என்ற சொல் தமிழனுக்கு ஒன்றும் புதியதல்ல. காதலும் வீரமும்
நாணயத்தின் இருபக்கங்கள் போல வாழ்ந்த நம் பண்டைய தமிழ்ச் சமூகத்தில்
வீரம் மிக்க கதைகள் பல உண்டு.

"பகைவர் முன் நின்று போரில் யானையைத் தடுத்துக் கொன்று வீர மரணம்
அடைந்த வீரனுக்கு எடுத்த நடுகல்லில் நெல்தூவி வழிபாடு செய்வது தவிர
எமக்கு வேறு வழிபாடு இல்லை" என்று சங்க இலக்கியத்தில் பேசப்பட்டது
வெறும் கவிதை மட்டுமல்ல, அதுவே நம் வாழ்க்கை. அதுவே நம் வழிபாடு.
அதுவே நம் நம்பிக்கை. தமிழன் வாழ்க்கையில் சிரார்த்தம் செய்வதெல்லாம்
கிடையாது. அதெல்லாம் ரொம்பவும் பிற்காலத்தில் வந்ததுதான்.
நடுகல் வழிபாடாக இருந்த தமிழன் வழிபாட்டின் தொடர்ச்சியாகவே
திருவள்ளுவர் நம்பிய "நீத்தார் பெருமை"யும். இன்றும் கூட எம் கிராமப்புறங்களில்
தைப் பொங்கலுக்கு அடுத்த நாளில் அக்குடும்பத்தில் நீத்தார்பெருமையை
நினைவுகூர்ந்து அவர்களுக்கு விருப்பமானதைச் சமைத்துப் படையலிட்டு
புதுத்துணி வாங்கி வைத்து அக்குடும்பத்தார் கூடி வழிபாடு செய்யும் நாளாகவே
இருப்பது அதன் எச்சம் தான்..

போரிலக்கிய வரலாற்றில் கலிங்கத்துப் பரணிக்கு தனி இடம் உண்டு, எனினும்
பரணியில் பெண்ணுக்கான இடம் போர்க்களத்தில் போரிட்டு இல்லம் திரும்பும்
ஆடவனை மகிழ்விப்பது மட்டுமே. அதாவது வீரனின் காதல் வடிகாலாகவும்
பசித்திருக்கும் அவன் காமத்தைத் தீர்த்து வைக்கும் நுகர்ப்பொருளாகவும்
மட்டுமே சித்தரிக்கப்படுகிறாள். போர்த்தெய்வமாக பெண் தெய்வம் வளர்த்தெடுக்கப்பட்ட
இக்காலக்கட்டத்திலும் கூட பெண்ணின் நிலை இப்படியாகத்தான் இருந்தது.
இதை தொல்காப்பியர் கால தமிழ்ச் சமூகத்தின் தொடர்ச்சியாகவே காணலாம்.
தமிழனின் பண்பாடு என்று பேச வரும் போது அதன் முதல் அத்தியாயத்தில்
இடம் ப்டிக்கும் தொல்காப்பியமும் "போர்க்களத்தில் பெண்ணை விலக்கியே
வைத்திருக்கிறது "

"எண்ணரும் பாசறைப் பெண்ணோடு புணரார்"

"புறத்தோர் ஆங்கண் புரைவதென்ப "
(தொல். பொருளதிகாராம் கற். நூற்பா 34 &35)


இந்திய மொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் பெற்றதுடன் இந்திய இனக்குழு மக்களின் வாய்மொழிப் பாடல் கதைகளில் இடம் பெற்று ஏதொ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் காப்பியங்களான இராமாயணம், மகாபாரதம் இரண்டும் கூட என்னிடம் கேட்டால் 'போரிலக்கியம்' என்று தான் சொல்வேன். அவ்விரு காப்பியங்களிலும் 'அரக்கியர்' என்றழைக்கப்படும் பெண்கள் தான் ஆணுடன் சமமாக எதிர்நின்று சமராடிய பெண்களாக என் கண்முன் வருகிறார்கள். இந்தக் காப்பியங்கள் எல்லாம் கற்பனையே
என்று சொல்லுபவர் குறித்து நமக்குப் பிரச்சனையே இல்லை! ஆனால் காப்பிய
நிகழ்வுகள் எல்லாம் வரலாறாக நிறுவப்படும் போது இந்த அரக்கியர் யார்? என்பதும் அந்த வீரப்பெண்களுக்கும் தமிழ்ச் சமூகத்திற்குமான அடையாளம் குறித்தும் தொடர்புகள் குறித்துமான இந்திய இனக்குழு வரலாற்றை நாமும் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.

இராமயணக் காப்பியத்தில் அயோத்தி இராமனின் தந்தை தசரதனின் காதல் மனைவி கைகேயிதான் மன்னனுடம் போர்க்களத்தில் அருகிலிருந்தப் பெண்ணாக காட்டப்படுகிறாள்.
தசரதன் போரிடும் போது தேர்ச்சக்கரத்தின் அச்சாணி முறிந்துவிட அவள் தன்
கட்டைவிரலை அச்சாணியாக்கி அவன் வெற்றிக்கு காரணமாகிறாள். அதனால்தான் தசரதன் அவளுக்கு இரு வரம் கொடுத்ததாகவும் அவள் அந்த வரங்களை தனக்குத் தேவைப்படும் காலத்தில் கேட்டுக்கொள்வேன் என்று சொன்னதும் அதன் பின் இராமனின் பட்டாபிஷேகத்திற்கு முந்தினம் அவள் வரம் கேட்டதும் அவன் கொடுத்ததும் இன்றும் நம் அயோத்தியா அரசியல் வரை விரிகின்ற இராமாயணக்கதையாக இருக்கிறது .

மகாபாரதக் கதையில் மானபங்கப்படுத்த தேவி பாஞ்சாலி கூட

ஓம் தேவி பராசக்தி ஆணையுரைத்தேன்
பாவி துச்சாதனன் செந்நீர்- அந்தப்
பாழ் துரியோதனன் ஆக்கை இரத்தம்
மேவி இரண்டும் கலந்து குழல்
மீதினில் பூசி நறுநெய் குளித்தே
சீவி குழல் முடிப்பேன் யான் -இது
செய்யுமுன்னே முடியேன் "
என்று சபதம்தான் செய்தாளே தவிர அவள் சபதத்தை நிறைவேற்றியதும் அந்தப்
பொறுப்பும் அவள் கணவன்மாரின் செய்லபாடாகவே இருப்பதையும் பார்க்கிறோம்.

முதலாம் உலகப்போரின் மிகச்சிறந்த போர் இலக்கியமாக போற்றப்படும்
விரா மேரி பிரிட்டனைனின் தன் வரலாறு கூட ( Vera Mary Brittain's Her
Testament of youth is one of the outstanding biographies of the first world war)
நேரடியாக போர்க்களத்தில் போரிட்ட பெண்ணின் வரலாற்று இலக்கியம் அல்ல.
முதலாம் உலகப்போரில் போரில் காயம்பட்ட ஜெர்மானிய வீரர்களைக் கவனிக்கும் செவிலிப்பெண்ணாக வேலைப்பார்த்த அனுபவமும் அப்போரில் தன் காதலனையும் சகோதரனையும் இழந்த வலியும் அவள் தன் வரலாற்றையும் போரின் கொடுமைகளையும் எழுத வைத்தன எனலாம்.

இந்த வரலாற்றின் பின்னணியில் அண்மையில் ஊடறு + விடியல் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் ஈழப்பெண் போராளிகளின் கவிதை தொகுப்பு நூல்
"பெயரிடாத நட்சத்திரங்கள்' மிகுந்தக் கவனத்தைப் பெறுகிறது.

வீர உணர்வை தலைமுறை தலைமுறையாய் தன் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்கும் கடப்பாடு மட்டுமே கொண்டிருந்த தமிழ்ச் சமூகத்தில் பெண்ணுக்கான அந்த வீர உணர்வையும் கண்ணகியின் அறச்சீற்றத்தையும் தொன்மங்களிலிருந்து எடுத்துக்கொண்டு நம் ஈழப் பெண் போராளிகள் விடுதலை இயக்க வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் படைத்திருக்கிறார்கள்.

கவிதைக்கான தகுதிகளாக படிமம் , குறியீடு என்ற அறிவுஜீவித்தனமான அளவுகோல்களை எல்லாம் வைத்துக்கொண்டு இக்கவிதையை அணுகுபவர்கள் நிச்சயமாக ஏமாற்றம் அடையக் கூடும்.
க்ருத்துருவாக்கங்களின் எதிரொலியாக உருவாகும் கவிதைகள் பிரச்சாரமாக குன்றிவிடும் என்று நவீன கவிதையின் பிதாமகன்கள் எல்லால் சொல்லியிருப்பதைப் புரட்டிப் போட்டிருக்கும் நெம்புகோல் கவிதைகள் பெயரிடாத நட்சத்திரங்கள். வாழ்க்கை அனுபவத்திலிருந்து
நிறுவப்படும் கருத்துருவம் பிரச்சாரமாகாது என்பதற்கு ஈழப் பெண் போராளிகளின் இக்கவிதைகளே மிகச்சிறந்த சான்றுகளாக இருக்கின்றன.

19 வருடங்களாக நீதிமன்ற கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்த எம் வாச்சாத்தி பெண்களின் சோகத்தின் ஒரு துளி கூட எம் தாய்த்தமிழ் நாட்டின் பெண் கவிஞர்களின் பெண்மொழியைப் பாதித்ததில்லை. வரலாற்றுப் பார்வையோ சமகால அரசியல் பார்வையோ அது குறித்த தெளிவோ தேடலோ நம் தமிழ்நாட்டில் பெண் கவிஞர்களிடம் இல்லையே என்று ஆதங்கப்படும்
சூழ்நிலையில் தான் ஈழப்பெண் கவிஞர்களின் கவிதைகள் மிகச்சிறந்த ஆறுதலாக இருக்கின்றன.
அரசியல், வரலாற்று நிகழ்வுகளின் ஊடாகப் பயணித்து பெண்ணுடலை, பெண்ணியத்தைப் பேசி இருக்கிறார்கள்.

இவர்கள் ஆயுதம் தாங்கியது காலத்தின் கட்டாயம் என்பதை அடுத்த நூற்றாண்டின் வாசகனுக்கும்
எளிதில் உணர்த்தும் வகையில் பின் இணைப்பாக யாழ்ப்பாணம் மாணவர் ஒன்றியம் 1996ல்
கவிதை வடிவில் வெளியிட்ட துண்டு பிரசுரத்தை இணைத்திருப்பது பாராட்டுதலுக்குரியது.

தான் கவிஞராக அறியப்பட வேண்டும் என்றோ பெண்ணியம் பேச வேண்டும் என்றோ தேச இன விடுதலையை ஆவணமாக்க வேண்டும் என்றோ எழுதப்பட்டவை அல்ல இக்கவிதைகள். ஆனால் இவை எல்லாமாக இருக்கின்றன இக்கவிதைகள். சிட்டுக்குருவிகளின்
சிறகசைப்பு போல மழைத்துளிப் பட்ட மண்வாசனைப் போல பனிக்குடம் உடைத்து மலர்ந்த குழந்தையின் அழுகுரல் போல இயல்பாக, உண்மையாக இருக்கின்றன இக்கவிதைகள்.

விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள், குறிப்பாக புகலிடத்து வாழும் மேற்கத்திய
பெண்நிலைவாத நோக்கில் மட்டுமே சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
பெண் என்றால் உயிர்தரும் தாயமை
பெண் போராளி என்றால் உயிர் அழிக்கும் வன்முறை
பெண் இயல்புக்கு மாறான பெண்ணின் இயற்கை உணர்வுகளை அழித்த குரூரம் என்று குரல் கொடுத்தனர்.
இன்னொரு பக்கம் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் இந்தப் பெண்களை முற்றிலும் வித்தியாசமானவர்களாக மற்ற பெண்களிடமிருந்து மாறுபட்டவர்களாக சித்தரித்தனர்.
அடேல் பாலசிங்கம் அவர்கள் " women is combat belong to a totally new world, a world outside a normal woman's life. And that is what makes these women fighters so interesting and admirable.
They have taken up a life that bears little resemblance at all to ordinary existence of women'
என்றார்கள். பெண் போராளிகளுக்கும் சமூகத்திற்குமான இடைவெளி இருந்து கொண்டே இருந்தது என்று சொல்வதை விட அப்படி ஒரு இடைவெளியை உருவாக்கி அதைப் பத்திரமாகக் கட்டிக் காப்பதில் இயக்கமும் சமூகமும் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
விளைவு?
இன்று அவர்கள் என்னவாக இருக்கிறார்கள்? என்ற கேள்விதான்.

போர்க்காலத்தை விடக் கொடியது போருக்குப் பிந்தையக் காலக்கட்டம். துப்பாக்கிகள் மவுனமான இக்காலக்கட்டத்தில் அவர்கள் போற்றப்படவில்லை. கொண்டாடப்படவில்லை. உயிருடன் வாழும்
பெண் போராளிகளின் இன்றைய நிலைமை தமிழ்ச் சமூகத்தின் நன்றி கெட்ட குணத்தை மட்டுமல்ல,
தமிழ்ச் சமூகத்தில் முகமூடியைக் கிழித்திருக்கிறது.

அவர்கள் ஆயுதம் தாங்கியதும் போராடியதும் யாருக்காக?
அவர்கள் உடல் ஊனமுற்றது யாருக்காக?
போரில் வீரமரணம் அடைந்தால் மட்டும்தான் போராளியா?
போரில் காயமடைந்து ஊனமுற்றவர்களாக தோற்றுப்போனவர்களாக களைத்துப் போயிருக்கும்
அவர்கள் இன்று நிராயுதபானியாக தங்களுடைய சொந்த தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக
- அதன் உடலிருந்து வடியும் சாதியம், சடங்கு சம்பிரதாயம், ஆணாதிக்கம் ஆகிய
அனைத்துக்கும் எதிராக களத்தில் நிற்கிறார்கள். அவர்கள் இன்னும் மரணிக்கவில்லை.

(04/12/2011 ஞாயிறு மாலை, மும்பை தமிழ்ச் சங்கத்தில் , தமிழ் சிந்தனையாளர் சங்கமத்தின்
13 ஆம் அமர்வில் பெயரிடாத நட்சத்திரங்கள் - ஈழப்பெண் போராளிகள் கவிதைத் தொகுப்பு
குறித்த அறிமுக உரை. )