Friday, July 15, 2011

பெண்பால் ஒவ்வாமை



பசுவுக்குப் பூஜை
பெண்சிசுவுக்கு கள்ளிப்பால்
தொல்காப்பியன் அறியாத
பால்வேற்றுமை



என்று 11 வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கவிதை இப்போது நினைவுக்கு வருகிறது. 26 ஜூன் 2011 ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான பெண்பால் அழித்தல், பால் மாற்று அறுவைச்சிகிக்சை என்ற அதிர்ச்சிதரும் செய்தியும் அச்செய்தி குறித்து வந்துக் கொண்டிருக்கும் எதிர்வினைகளும் மறுவினைகளும் மருத்துவ துறை மீது நமக்கிருக்கும் ஒரு சில நம்பிக்கைகளையும் கேள்விக்குட்படுத்துகிறது. இந்தச் செய்தி தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள் தரும் செய்திகள் ஒரு மாஃபிய கும்பலின் அதிகார வளையத்திற்குள் மருத்துவமும் சிக்கிக்கொண்டு விட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

சொத்துடமை சமுதாயம் ஒவ்வொரு ஆணுக்கும் தன் உதிரத்தில் உதித்த வாரிசுகளுக்கு மட்டுமே சொத்துடமையாக வேண்டும் என்ற எண்ணத்தில் திருமண உறவு, பெண்ணுக்கு கற்பொழுக்கம் என்று சில சமூகக்கட்டுப்பாடுகளை ஏற்படுத்திய போதும் கூட பெண்பால் ஒவ்வாமை வளர்த்தெடுக்கப்படவில்லை. போரில் ஆண்களை இழப்பதும் சிசு மரணங்களும் மிகவும் அதிகமாக இருந்தக் காலத்தில் ஒரு பெண் ஆண்குழந்தையைப் பெற்றெடுப்பது அவளுக்கான கட்டாயமாக மட்டுமல்ல சமூகத்தின் தேவையாகவும் இருந்திருக்க முடியும். அதிலும் குறிப்பாக அதிகார வர்க்கத்தில், அரச குடும்பங்களில் ஆண்வாரிசைப் பெற்றெடுக்கும் கட்டாயம் அரசிக்கு இருந்திருக்கும். இதுவே கூட அரசனின் மனைவியரின் அந்தஸ்த்தை நிர்ணயித்திருக்கும்.

பால் அழித்தல் என்பதும் பால் மாற்று அறுவைச்சிகிச்சையும் இக்கருத்துகளின் பின்புலத்தில் நடந்தேறி இருக்கின்றன. குறிப்பாக சீனத்தில் இப்பழக்கம் குறித்த வரலாற்று பதிவு கி.மு. 8ஆம் நூற்றாண்டுவரைப் பின்னோக்கிப் போகிறது. அதற்கும் முன்னரே இப்பழக்கம் வழக்கில் இருந்திருக்க வேண்டும் என்றே அப்பதிவு காட்டுகிறது. இவர்கள் நபுஞ்சகர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். ஆண்பால் அழித்தல்/ அறுவைச்சிகிக்கை மூலம் ஆண்பால் உறுப்புகளை அகற்றப்பட்டவர்கள் தான் நபுஞ்சகர்கள்.

தாய்மையடையக்கூடிய பெண்கள் இருக்கும் அரசனின் அரண்மனையில் வேறு எந்த ஆணுடைய விந்தும் விழுந்து எந்தப் பெண்ணின் கருமுட்டையிலும் கலந்து துளிர்த்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே நபுஞ்சகர்கள் உருவாக்கப்பட்டார்கள். அதையும் மீறி சிநேகங்கள் உருவான கதைகள் பல உண்டு. ஆனாலும் கரு உருவாக முடியாது என்பதால் அரசனின் வாரிசு தூய்மை பேணப்பட்டது எனலாம்.

மிங்க் முடியாட்சியில் மட்டும் 70,000 ஆண் குழந்தைகளுக்கு பால் அழிப்பை அறுவைச்சிகிச்சை மூலம் செய்திருக்கிறார்கள்! இந்த அறுவை நிபுணர்கள் அறுவைச்சிகிச்சையை பரம்பரை பரம்பரையாக குடும்பத்தொழிலாகவே செய்துவந்திருக்கிறார்கள். நரம்புகளை மரக்க வைக்கும் மூலிகைக் கஷாயங்கள் கொடுத்து உறுப்புகளை மிளகுக்கலந்த சுடுநீரால் கழுவுவார்களாம். ஆணுறுப்பை முழுக்க அறுத்தெறிவது ஒரு வகை, பீஜக்கொட்டை மட்டும் அகற்றப்படுவது இன்னொரு வகை என்று இரண்டு வகையான அறுவைச்சிகிச்சை முறைகள் நடைமுறையில் இருந்திருக்கின்றன. இந்த அறுவையின் போது நிறையபேர் இறந்தும் போயிருக்கிறார்கள். இதெல்லாமே ஆண் தன் சொத்துடமைக்கு வாரிசாக தன் உதிர வழி வாரிசு மட்டுமே இருந்தாக வேண்டும் என்ற எண்ணத்தின் உச்சக்கட்டம்! அரண்மனையில் மற்ற வேலைகள் செய்ய ஆண்களும் வேண்டும் அதே நேரத்தில் எங்காவது அந்த இருட்டில் ஏதாவது நடந்துவிடுமோ என்ற அச்சத்தின் விளைவு தான் ஆண்பால் அழித்த நபுஞ்சர்களின் வரலாறு. 19 ஆம் நூற்றாண்டில் சீனத்தில் போய் வசித்த ஆங்கிலேயர் மூலம் தான் வெளியுலகுக்கு சீனாவின் இந்த வழக்கம் தெரியவந்தது.

ஆண்பால் அழிப்பு அன்று நடந்ததற்கு எப்படி சொத்துடமை வாரிசுடமை காரணமாக இருந்ததோ அதன் இன்னொரு பக்கம் தான் பெண் சிசுக்கொலை, பெண்கருவை அழித்தல், அண்மையில் கழிவோடையில் கண்டெடுக்கப்பட்ட பெண்கரு அழிப்புக்குவியல்கள், இப்போது ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் பெண் குழந்தைகளை அறுவை மூலம் ஆண்குழந்தைகளாக மாற்றும் அசிங்கம், அருவெறுப்பு…

மத்திய பிரதேசத்தில் இந்தூரில் இதற்கெனவே புகழ்ப்பெற்ற 7 அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் இருக்கிறார்கள் . ஓராண்டுக்கு இதுவரை 200 முதல் 300 வரை இம்மாதிரி அறுவைச்சிகிச்சைகள் நடந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக மும்பை, டில்லி போன்ற பெருநகரங்களிலிருந்து இதற்காக செல்லும் பெற்றோர்களின் எண்ணிக்கை 8 விழுக்காடு. இதற்காகும் செலவு 1.5 இலட்சம். ஒரு பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்கி திருமணத்திற்கு சீர்வரிசையாகக் கொட்டிக்கொடுக்கும் செலவுடன் ஒப்பிட்டால் இந்த அறுவைச்சிகிச்சைக்கு ஆகும் செலவு மிகவும் குறைவு என்றும் அந்தச் செய்தி பதிவு செய்துள்ளது.

இச்செய்தி வெளிவந்தவுடன் குழந்தைகள் நலன் காக்கும் பிரதமரின் அலுவலகம், இந்திய மருத்துவக் கழகம், மத்திய பிரதேசம் அனைத்தும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றன. பெண் குழந்தைகளை அறுவை மூலம் ஆணாக மாற்றும் போது அப்படி மாற்றப்பட்ட ஆண், ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியாது என்றும் சொல்லப்படுகிறது. இக்கருத்து இன்னொரு சந்தேகத்தையும் நமக்கு ஏற்படுத்துகிறது. பெற்றோர்கள் ஆண்வாரிசை விரும்புவதன் அடிப்படை நோக்கம் தன் வம்சாவளி விருத்தியும் அது தொடர வேண்டும் என்ற ஆசையிலும்தான்.

செயற்கை குழாய்வழி குழந்தை ஜனிக்கும் இன்றைய காலக்கட்டத்திலும் பெண் வழி வாரிசுகளை தங்கள் வாரிசுகளாக ஏற்றுக்கொள்ள அறிவார்ந்த சமூகமும் முன்வரவில்லை . எனவே பெண் குழந்தையை ஆண் குழந்தையாக்கி தங்கள் வாரிசுரிமையை நிலைநாட்டத்துடிக்கும் பெற்றோர்கள் அப்படி மாற்றப்பட்ட ஆண் வாரிசால் தன் வம்சம் தளைக்கும் வாய்ப்பில்லை என்றால் அவர்கள் இந்தப் பால் மாற்று அறுவைச்சிகிச்சையை செய்வார்களா? அவர்களின் நோக்கம் நிறைவேறாத போது இந்த அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் என்ன?

இந்தச் செய்திக்கு எதிர்வினையாக வைக்கப்பட்டிருக்கும் இக்கேள்வி மிகவும் கனமானது. மிகவும் யோசிக்க வைப்பதும் கூட.

மற்றபடி, பிறப்பிலேயே சில பெண் குழந்தைகளின் உடல் உறுப்பில் ஆண் குழந்தைகளின் அடையாளம் காணப்படுவதுண்டு.
(a child with abnormal or ambiguous genitals. A girl may be born with a noticeably large clitoris giving impression of a penis or lacking a vaginal opening. A boy may be born with a notably small penis or with a scrotum that is divided so that it looks like labia, a part of female sexual organ)
எனவே வளர்ந்தப் பின் அக்குழந்தைக்கு ஏற்படும் பால் வேற்றுமை குழப்பம் தீர்க்கவே பால் மாற்று அறுவைச்சிகிச்சைகள் (genitoplasty)நடக்கின்றன என்கிறார்கள்

பால்மாற்று அறுவைச்சிகிச்சையில் புகழ்பெற்ற இந்திய மருத்துவர் டாக்டர். எஸ்.வி. கோட்வால் “ஒரு குழந்தைக்கு இம்மாதிரியான பால்மாற்று அறுவைச்சிகிச்சை செய்வது சாத்தியமே இல்லை” என்று உறுதியாகச் சொல்கிறார்.

இக்கருத்துகளை எல்லாம் முன்வைத்து பார்க்கும் போது எனக்குச் சில ஐயப்பாடுகள் எழுகின்றன. குழந்தைகளுக்குச் செய்ய முடியுமா ? செய்ய முடியாதா? என்ற கேள்விகளை மருத்துவர்கள் பேசித்தீர்த்துக் கொள்ளட்டும்.

*இம்மாதிரி அறுவைச்சிகிச்சைக்கு தங்கள் பெண் குழந்தைகளை எடுத்துச் செல்லும் பெற்றோர்களின் குழந்தைகள் வரலாறு. ஒருவேளை அவர்களுக்கு வாரிசை வளர்த்தெடுக்க ஏற்கனவே ஆண்குழந்தை இருந்தால், நமக்கெதற்கு இந்தப் பெண் குழந்தையை வளர்க்க வேண்டிய சிக்கல்? என்று எண்ணி ஒன்றரை இலட்சத்தில் தங்கள் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள முன்வருகின்றார்களா? என்பதைக் கவனிக்க வேண்டும்.

* இந்த அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைகளுக்கெல்லாம் உடல் ரீதியான பால் உறுப்பு சம்பந்தமான குறைபாடுகள் இருந்தது என்பதற்கான சான்றுகள் இந்தூர் மருத்துவமனைகளில் இருக்கின்றனவா?

* ஓராண்டில் சற்றொப்ப 200 முதல் 300 அறுவைச் சிகிச்சை நடக்கிறது இந்தூரில் என்றும் புதுடில்லியில் இருக்கும் சர்.கங்காராம் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு 2 முதல் 5 வரை இம்மாதிரியான குறைபாடுகளுக்கு அறுவைச்சிகிச்சை செய்யப்படுகிறது என்றும் செய்திகள் சொல்கின்றன. இந்தப் புள்ளிவிவரங்களின் வரலாறு என்ன? இக்குறைபாடு அண்மையில் அதிகரித்திருக்கிறதா? எந்தப் பகுதியில் வாழ்ந்த/பிறந்தக் குழந்தைகளுக்கு இக்குறைபாடு பொதுவாக அதிகமாக இருப்பதாக தெரிகிறது? இக்குறைபாட்டின் காரணம் என்ன? மூலம் என்ன? பரம்பரை வியாதியா?

சமூகத்தின் மீது அக்கறைக்கொண்ட ஒவ்வொருவருக்கும் இம்மாதிரியான ஆயிரம் கேள்விகள் எழுகின்றன. கத்தரிகாயிலிருந்து பூச்சி மருந்து வரை உலகக் கண்டு பிடிப்புகளின் சோதனைக்கூடாமாகி விட்டது இந்தியச்சந்தை. இப்போதெல்லாம் நம் மனித வளம் வெள்ளை எலிகளுக்கு மாற்றாக மாற்றப்பட்டிருக்கிறதோ என்று அச்சமாக இருக்கிறது .

ஆண் பெண் எண்ணிக்கை விகிதம் மும்பையில் 1000 : 874 டில்லியில் 1000 : 866. சமீபத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தற்போது இந்தியாவில் பெண்குழந்தைகளை விட ஆண்குழந்தைகளின் எண்ணிக்கை 7 மில்லியன் அதிகம்! என்ற புள்ளிவிவரமும் இந்த நேரத்தில் என் நினைவுக்கு வந்து என்னை அலைக்கழிக்கிறது.

எங்கேயோ ஏதோ ஒரு மூலையில் என்னவொ நடக்கிறது ….
நடந்ததும் நல்லதாக இல்லை
நடப்பதும் நல்லதாக இல்லை
நாளை.. ?

——–

துணை நின்ற பதிவுகள்:

Hindustan Times , 26/6/11

Asian Tribune , 27/6/11 by R Vasudevan

பால் அழித்தல் – சிங்கை ஜெயந்தி சங்கரின் கட்டுரை,
இருவாட்சி பொங்கல் மலர் 2, 2010

(NanRi : thinnai.com)

Saturday, July 9, 2011

தமிழக அரசு தீர்மானமும் சாத்தியக்கூறுகளும்.



தமிழ்நாட்டு சட்டசபையை துவக்கிவைத்து ஆளுநர்ஆற்றும் உரைக்கு நன்றி தெரிவிக்கும்
உரைகளை இடைநிறுத்திவிட்டு ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை தமிழ்நாட்டு முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். வாழ்க!
என்று ஒவ்வொருவரும் வாழ்த்தி பூங்கொத்து கொடுத்து ஓய்வாக
இருக்கும் போது கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

அவரை வாழ்த்துவதில் எனக்கொன்றும் கருத்து வேறுபாடுகள் இல்லை. ஆனால்
"போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்' என்று சொன்னதும் இவர்தான்
என்பதை மறக்க முடியவில்லை.

இலங்கை மீது பொருளாதர தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபை
தீர்மானத்தில் சொல்லப்படுகிறது. தடைவிதிக்க நடுவண் அரசு சம்மதிக்குமா?
ஏனேனில் போர் முடிந்தவுடன் சுவிட்சர்லாந்தில் 24 நாடுகள் கூடி போர்க்குற்ற
தீர்மானம் இலங்கை மீது கொண்டுவந்தப் போது அத்தீர்மானம் தோல்வியுற
காரணமாக இருந்ததே நம் இந்திய அரசுதானே!

ஜோதிபாசு மேற்கு வங்க சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானமும்
மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் போலீஸ் படையைக் கொண்டு
போரிடப்போவதாக முழங்கியதும் அடிக்கடி இப்போது நினைவுப்படுத்தப்படுகிறது.
பூகோள ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இந்தியா அரசால் தெற்கெல்லையில்
இருக்கும் இலங்கை மீது அதே நடவடிக்கைகளை எடுக்கும் சூழல்
இருக்கிறதா?

இதை எல்லாம் கடந்து தமிழக முதல்வர் போர்க்கோலம் பூண்டால்
இந்திய அரசு வழக்கம் போல அவர் மீது இருக்கும் சொத்துக்குவிப்பு
வழக்குகளைக் கொண்டு தன் வளையத்துக்குள் இறுக்கிப்பிடிக்காது
என்பது என்ன நிச்சயம்?

இந்தத் தீர்மானமே நடுவண் அரசை மிரட்டுவதற்கும்
அரசியல் சுயலாபங்களுக்கும் கையில் எடுத்திருக்கும்
சாட்டையாக மட்டுமே இருக்குமானால் ....

கடந்தக் கால தமிழர் குறித்த வரலாற்று நிகழ்வுகள் இப்படியான
கசப்பான உணர்வுகளையும் அச்சத்தையும் தருகின்றன.

வடக்கு மாநிலங்களில் தன் இராணுவத்தை வைத்தே மனித
உரிமைகளைச் சிதைத்தாலும் இந்திய அரசு , சர்வதேச அளவில்
மனித உரிமைகளை மதிக்கும் இந்திய தேசம் என்ற பிம்பம்
சுக்கு நூறாக உடைவதை நம் தேசத்தலைவர் வகையறாக்கள்
அப்படி ஒன்றும் விட்டுக்கொடுத்துவிட மாட்டார்கள்.
ஏதாவது செய்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்போது
வசமாக இலங்கை அரசை மட்டும் மாட்டிவிட்டு தப்பித்துக்
கொள்வார்கள். அதில் நம்மவர்கள் கில்லாடிகள்.
அந்தக் கில்லாடித்தனம் மட்டுமே இப்போதைக்கான
நமக்கிருக்கும் ஒரே நம்பிக்கை.

Friday, July 8, 2011

UNO report on srilanka war : SOME IMPORTANT POINTS


REPORT OF THE SECRETARY-GENERAL'S PANEL OF EXPERTS ON
ACCOUNTABILITY IN SRI LANKA - 31 MARCH 2011


56) srilanka in its diplimatic efforts, the govt drew on the favourable global environment for
support from the number of states, in the context of the "war on terror" and in the region.'
gained increased collaborations from the indian govt due to the LTTE's assassination
of rajiv gandhi. in one significant example, the indian navy directly assisted sri lankan
forces in intercepting the floating warehouses used by the LTTE to maintain its
supplies by sea.

தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று உலகமெங்கும் ஓங்கி ஒலித்த சூழலை
இலங்கை அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. புலிகள் ராஜீவ் காந்தியைக்
கொலை செய்ததைக் காரணம் காட்டி இந்திய அரசுடன் உறவைப் பலப்படுத்திக் கொண்டது.
இதன் முக்கியமான ஓரு விளைவுதான் புலிகள் கடல்வழி தங்களுக்குத் தேவையான
பொருட்களைக் கொண்டு செல்வதை இந்திய கப்பற்படையின் நேரடி கண்காணிப்பில்
தடுக்கப்பட்டது.

63)
white van operation:

உண்மை நிலையை எழுதத்துணிந்த பத்திரிகையாளர்கள், ஊடகங்களை
புலிகள் என்று சொல்லி வெள்ளை வேனில் அழைத்துச் சென்று கொடுமைப்படுத்திக்
கொலை செய்த சம்பவங்கள். 2006 முதல் போரின் கடைசிகட்டம் வரை
66 பேர் இப்படி காணாமல் போய் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
a potent symbol of this operations was the WHITE VAN. white vans were used
to abduct and often disappear critics of the govt or those suspected of links with
the LTTE and more generally to instil fear in the population. An elite unit within the special task
force of the plice is implicated in running these white van opearations. those abducted were
removed to secret locations, interrogated and tortured in a variety of ways including through
beatings , forced nudity, suffocation with plastic bags, partial drowning, extraction of fingers or toe nails,
pr administering electric shocks. many were killed and their bodies disposed of secretly.
human right workers, journalistsm newspaper editors, humanitarina workers accused of being
"tiger sympathizers" were also caught in the net.

e-g. two prominnent journalists, associated newspapers of ceylon ltd.
Poddala Jayantha, picked up in white van severely beaten in june 2009 . 8 jan 2009, prominenet
newspaper editor, Lasantha Wickrematunge was killed.
ref: srilanka journalist rish death by BBC News, 3rd feb 2009.

75)
ஐ.நா தன்னுடைய செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள தீர்மானித்தது.
அலுவலகம் கிளிநொச்சியிலிருந்து வவுனியாவுக்கு மாற்றப்படுகிறது. பிற உலக நாடுகளின்
அமைப்புகளும் தங்கள் பணியாளர்களை திரும்ப அழைத்துக்கொள்கின்றன.
கிளிநொச்சியிலிருந்து ஐ.நா. பணியாளர்கள் கிளம்ப தயாராக இருக்கும்போது'ஏவுகணைத்
தாக்குதல்கள் ஐ.நா அலுவலகத்தை நோக்கி..
15 செப் 2009ல் பொதுமக்கள் கூடி 'தயவுசெய்து இங்கிருந்து போகாதீர்கள்" என்று
கெஞ்சுகிறார்கள். (பக் 21)


128) ஊடகங்களிடம் பேசக்கூடாது என்றும் குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டும்
என்றும் மீறீனால் தண்டனை என்றும் இலங்கையில் ஹெல்த் மினிஸ்டர்
எச்சரிக்கை செய்திருந்தார். டாக்டர் சத்தமூர்த்தியும் வரதராஜாவும் வன்னியில் இருந்த
நிலையை 05 மார்ச் 2009ல் "situation report health sector vanni" =
இலங்கை அரசுக்கு 16 மார்ச் அனுப்பிய ரிபோர்ட்டில்
போதுமான தேவையான மருத்துவ வசதிகள் இருந்திருந்தால் காயப்பட்ட பலரை
மருத்துவமனையில் காப்பாற்றி இருக்க முடியும். அடிப்படை மருத்துவ வசதிகள்
கூட இல்லாத நிலை நிலவியது.

" most of the hospital deaths could have been prevented if basic infrastucture facilities
and essential medicines were made available... we have been supplied with No antibiotics,
no anaethestics and not even a single bottle of IV fluid, leaving
us in a desperate situation of not being able to provide even life saving emergency
surgery" (pg 38)

146) வன்னியிலிருந்து அரசாங்கத்தின் பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் இடம்பெயர்ந்தப்போது
ஸ்கிரீன் செக்கிங் நடந்தது. அப்போது, ஆண்களும் பெண்களும் தனித்தனியாக நடந்தாலும்
அவர்கள் ஆடைகளை முழுவதும் நீக்கி நிர்வாணமாக்கி செக்கிங் செய்திருக்கிறார்கள்.
மக்களிடன் பேச அனைத்து உலக நாடுகளின் அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. (பக் 43)

161) ஆண்களை போரில் இழந்த குடும்பத்தின் பெ ண்களும் குழந்தைகளும் அவர்களுக்கு
முன்பின் தெரியாத ஆண்களுடன் ஒரே கேம்பில் அடைக்கப்பட்டனர். பெண்கள் குளிக்கும்போதும்
உடை மாற்றும் போதும் சிங்கள இராணுவத்தினர் பார்த்தது மட்டுமல்ல, வயிற்றுப் பசிக்காகவும்
தங்குமிடத்திற்காகவும் கேம்ப்களில் பெண்கள் தங்கள் உடலை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
(பக் 45)

193)
தங்கள் தாக்குதலின் மூலம் பொதுமக்கள் கட்டாயம் கொல்லப்படுவார்கள் என்று
அறிந்தும் தாக்குவது என்பது கொலைச் செயலாகும். சேனல் 4 காணோளி
காட்சிகள் இறுதிக்கட்ட போரில் சரணடைந்த/ கொண்டு செல்லப்பட்ட புலிகள்
இயக்கத்தினரை நிராயுதபாணியாக்கி இலங்கை இராணுவவீரர்கள் சுட்டுக்கொல்வதைக்
காட்டுகிறது.

where a civilian population is subject to an attack such as an artillery attack, which results in civilian
deaths such deaths may appropriately be characterized as murder, when the perpertrators had
knowledge of the probability that the attack would cause death" the channel 4 videos indicates that the SLA executed unarmed LTTE cadre who were taken into custordy particularly during the final days of the war.
(pg 56)

207) shelling of hospitals and humanitarian objects:

உலக மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் படி, (விதி. 25, 28, 31, 32 ) மருத்துவர்,\
மருத்துவ இடம், மருத்துவ ஊர்தி, மனித உரிமை பாதுகாப்பு நபர்கள், அவர்கள்
சம்பந்தப்பட்ட பொருட்கள் பாதுகாக்கப்படவும் மதிக்கப்படவும் வேண்டும்.
ஆனால் இலங்கை இராணுவம் ஐ.நாவின் கொடி பறந்த மருத்துவமனைகளைக்
குண்டு வீசித்தாக்கியது.ஏற்கனவே இலங்கை அரசுக்கு ஐ.நாவின் மருத்துவக்குழு
இடம் தெரிவிக்கப்பட்டிருந்தும் தாக்குதல் நடத்தியது. அதைப்போலவே
ஐ.நாவின் கொடி பறந்துக்கொண்டிருந்த அதன் அலுவலகம் , such as inthe first NFZ-
(no firing zone) குண்டுவீசித் தாக்கப்பட்டது .


113) படைக்கு புதிய ஆட்கள் கட்டாயமாக தேவைப்படும் சூழலில். புலிகள் இளைஞர்களையும்
இளம் சிறார்களையும் இழுத்துச் சென்றார்கள். அதிலும் குறிபாக ஏப்ரல் மாத, திர்கோணமலை
எழிலன் நூற்றுக்கணக்கான இளைஞர்களைப் பலவந்தமாக வலையன்மடம் சர்ச் பகுதியிலிருந்து
முல்லைவாய்க்கல் செல்லும் பேருந்தில் ஏற்றினார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை
விட்டுவிடும் படி கெஞ்சி அழுதார்கள். (பக் 34)

&
annexure 3 pg 186

satellite imagery - explanatory note.

யுனிடார் - யுனோசட் ( United nations office of military affairs and the united nationa
institute for training and research) உதவியுடன் செயற்கோள்கள் அனுப்பிய
புகைப்படங்கள். முதல் ஆறு படங்கள் மருத்துவமனைகளின் மீது ஆர்டிலரி குண்டுகள்
வீசப்பட்டதை உறுதி செய்கின்றன. அடுத்த பத்து படங்களில் மூன்று No fire zone
என்று இலங்கை அரசு அறிவித்த இடங்களை குறிவைத்து தாக்குவதைக் காட்டுகிறது.


இந்த அறிக்கைச் சொல்லும் உப்பு சப்பில்லாத சில தீர்வுகள்:
----------------------------------------------------------




* போர்க்காலத்தில் நடந்த மனித உரிமை மீறல்களை அரசே விசாரிக்க வேண்டும்.

*கடத்தப்பட்டு பின் மாயமானவர்கள் பற்றிய உண்மை நிலையை அறிவிக்க வேண்டும்.

* அரசே நிகழ்த்தும் வன்முறைகளை நிறுத்த வேண்டும்.

*இக்குற்றச்சாட்டுகளை எல்லாம் அனைத்து சமூகத்தினரும் பங்கேற்று ஆய்வு
செய்யும் நடவடிக்கைகளை அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்.

* இறுதிக்கட்டப்போரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக
அரசு தனது பொறுப்பை ஏற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.

Wednesday, July 6, 2011

ஈழம் பிரச்சனை குறித்து அறிஞர் அண்ணா 1954ல்





தகவல் : நன்றி திரு குமணராசன், ஆசிரியர், இலெமுரியா

தமிழ் சிந்தனையாளர் சங்கமத்தின் எட்டாம் அமர்வில்

ஈழத்தமிழர் படுகொலை பற்றிய ஐநா அறிக்கை வெளிவந்தப் பின்
அது குறித்த கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள், சொற்பொழிவுகள்,
கட்டுரைகள் என்று வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இச்சூழலில்
இவ்வறிக்கை குறித்த ஒரு தெளிவு மும்பை மக்களிடம் இருக்கிறதா
என்ற ஐயம் எங்களுக்கு ஏற்பட்டது. அப்போதுதான் தமிழ் சிந்தனையாளர்
சங்கமத்தின் எட்டாம் அமர்வில் 'இலங்கை தமிழர் படுகொலை பற்றிய
ஐநா அறிக்கை' என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்ற
திரு குமணராசன் - தமிழ் இலெமுரியா மாத இதழின் ஆசிரியர் அவர்களைக்
கேட்டுக் கொண்டோம்.







திரு குமணராசன் அவர்கள் திராவிட இயக்கப் பின்னணியில் வளர்ந்தவர்.
தந்தை பெரியாரின் கொள்கைகளைத் தன் வாழ்க்கையில் அனைத்து தளங்களிலும்
கடைப்பிடித்து வரும் ஒரு சிலரில் மிகவும் முக்கியமானவர். சிறந்தச் சிந்தனையாளர்,
பேச்சாளர், மும்பை புறந்கர் திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பை
ஈழத்தமிழர் பிரச்சனை குறித்த திமுக வின் நிலைப்பாடு காரணமாகத் துறந்தவர்.
ஈழத்தமிழர் பலருக்கு நன்கு அறிமுகமானவரும் கூட.

நவிமும்பை தமிழ்ச் சங்க அரங்கத்தில், 3/7/11 ஞாயிறு மாலை 7 மணிக்கு கூட்டம்
ஆரம்பமாகியது.
மும்பை மழையில் நனைந்துக் கொண்டு வந்தவர்களை அன்றைக்கு அவர்
பேச்சு சூடாக்கியது. அவர் பேச்சிலிருந்து சில துளிகள்..

>இந்த சூலை மாதம் ஈழத்தமிழர் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வுகள்
நடந்த மாதம். இப்படி ஒரு ஜூலை மாதத்தில் தான் குட்டிமணி வன்கொடுமை
செய்யப்பட்டார். பண்டாரநாயகாவுடன் இந்திய அரசு ஓர் ஒப்பந்தம் செய்ததே
அதுவும் இந்த ஜூலை மாதத்தில்தான், ஏன்.. ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே
ஒப்பந்தமும் ஜூலை 27 1987ல் தான்.
இன்றைக்கு அதே ஜூலை மாதத்தில் தான் அந்த நினைவுகளை எல்லாம் சுமந்துக்
கொண்டு உங்கள் முன் நான் நிற்கிறேன். தமிழனுக்கு எட்டாத உரிமைகளை
உங்கள் எட்டாவது அமர்வில் பேச என்னை அழைத்திருக்கின்றீர்கள்.

> தாயை இழந்த சேயிடம் பொம்மையைக் காட்டி ஏமாற்றுவது போல ஐநா
அறிக்கையும்.

> ஈழத்தமிழர் குறித்து எதற்கும் அசையாத தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி
இருக்கிறது.

> இலங்கையில் தமிழர் வரலாறு வந்தேறிகளின் வரலாறு மட்டுமல்ல, அந்த நிலத்தின்
மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் வரலாறும் கூடத்தான் என்பதைப்
பலர் புரிந்து கொள்வதில்லை. எனவே இலங்கை வரலாற்றைத் தொட்டுச்செல்வது
சிலரின் ஐயப்பாடுகளைத் தீர்த்து வைக்கும்.
(சரியாகவே தான் சொன்னார் என்று நினைத்துக் கொண்டேன். ஏனேனில் அங்கே
வேலைத்தேடிப் போனவா தனிநாடு கேட்டா சரியா? சொல்லுங்கோ..? என்று
ஒரு கல்லூரி பேராசிரியரே மும்பையில் பேசியது என் நினைவுக்கு வந்தது.!!)

> ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த , நிர்வாகக்காரணங்களுக்காக இந்தியா என்றும்
இலங்கை என்றும் ஒன்றுபட்ட தேசங்களின் சுதந்திர வரலாற்றுப் போரில்
தமிழனின் குரல் என்றுமே தனித்து ஒலிக்கவில்லையே. அவர்களின் அன்று
பெருந்தன்மையுடன் நடந்துக் கொண்டார்கள். அதனால் தான் ஒன்றுபட்ட
சுதந்திர இந்தியா, ஒன்றுபட்ட சுதந்திர இலங்கை என்று கொடி பறந்தது.

> ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை அடங்கி இருந்த சிங்களவர், சுதந்திரம்
கொடுக்கப்பட்டவுடன் தங்கள் கோரமுகத்தைக் காட்டியது ஏன்?
காரணம் ஈழத்தமிழனின் பொருளாதர, கல்வி ஆளுமை.

> அதன் பின் சிங்களவர்/ தமிழர்களுக்கு நடுவே தரப்படுத்துதல் என்ற கீறல்
விழுகிறது.
> 1954ல் ஆசியஜோதி பண்டிட் ஜவஹர்லால் நேரு ஒப்பந்தம் செய்து
கொள்கிறார். ஈழத்தமிழர்களின் நலனுக்காக அல்ல, தன்னை ஆசியஜோதி
என்று நிலைநிறுத்திக்கொள்ள. தங்கள் அரசியல் சுய லாபங்களுக்காக.




(அனைத்து தீர்மானங்களையும் குறித்து காலவரிசைப்படி அவர் பட்டியலிட்டார்.)

வட்டுக்கோட்டைத் தீர்மானம் தமிழீழம் அமைய இளைஞர்களே வாருங்கள் என்றழைப்பு
விட்டது.

> ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். தமிழர்கள் பல்வேறு தமிழீழ அமைப்புகளின்
மூலம் அமைதியான முறையில் எடுத்த எல்லா முடிவுகளும் தீர்மானங்களும்
சிதைக்கப்ட்டனவே, இதற்கெல்லாம் காரணம் யார்? ஈழத்தமிழர்களா?
இக்காலக்கட்டத்தில் புலிகள் இயக்கம் அப்போது பிறக்கவே இல்லை.
ஈழத்தமிழர் ஆயுதம் ஏந்தியதற்கு காரணம் புலிகள் , புலிகள் என்று
சொல்கிறவர்கள் யோசிக்க வேண்டும்.

> 1983, ஆகஸ்டு 04ல் இதே மும்பையில் ஈழத்தமிழர்களை ஆதரித்து 10 இலட்சம்
தமிழர்கள் திரண்டார்கள். தமிழர் பேரவையின் தலைவர் வரதராசனார் தலைமையில்.
அன்றைக்கு தமிழர்கள் பேரணியில் கலந்துக் கொள்ள வசதியாக அம்பர்நாத்திலிருந்து
ஒரு ரயில்வண்டியே முன்பதிவே செய்யப்பட்டது. இன்றைக்கு அந்தத் தமிழர்கள்
எல்லாம் எங்கே போய்விட்டார்கள்?

>கொத்துகொத்தாக ஈழத்தமிழர் செத்து மடியும் போது கள்ள மவுனம் சாதித்த
ஐநாவும் பான்கிமூனும் இன்றைக்கு மனித உரிமைகள் குறித்துப் பேசுகிறார்கள்

> இந்திய எல்லைப் போரில் எல்லாம் துடித்து எழுந்தவன் தெற்கே வாழ்ந்த தமிழன்.
வேற்றுமையில் ஒற்றுமை என்று இந்தியாவின் பதாகையைத் தூக்கிப் பிடித்திருக்கும்
கைகள் தமிழனின் கைகள். ஆனால் இந்தியா மட்டும் எப்போதும் தமிழனை
வேற்றுமைப் படுத்தியே பார்க்கிறது.
(ஆமாம்.. இந்தியா எங்களைக் காப்பாற்றும் என்கிறது இலங்கை அரசும்
ராஜபக்சேயும். இந்தியா எங்களைக் காப்பாற்றும் என்று கூறமுடியுமா
நம் தமிழக மீனவர்கள்? என்று அடுத்தக்கட்டத்திற்கு என் மனம் தாவியது)

> மேற்கு வங்க மாநிலத்தின் அன்றைய முதல்வர் ஜோதிபாசு சட்டமன்றத்தில்
நிறைவேற்றிய தீர்மானம், நடுவண் அரசு ஏற்காவிட்டால் மாநில அரசின்
கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் போலீஸ்படையைக் கொண்டு போராடத் தயங்க
மாட்டேன் என்று வெகுண்டெழுந்ததும் அதுவே பங்களாதேசம் என்று
இன்றைக்கு ஐநாவில் ஒரு தனிதேசக்கொடிப் பறக்க காரணமானதும்
வடக்கே சாத்தியப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடுவதற்கில்லை.

> இந்த அறிக்கையில் ஒரு வரியில் கூட இனப்படுகொலை என்ற சொல்
பயன்படுத்தப்படவில்லை.

> No Fire zone என்று அறிவித்துவிட்டு அங்கே தமிழர்களைக் குவித்து
குண்டு போட்டு அழித்ததைப் பதிவு செய்துள்ளது.

> கேம்ப் களில் ஸ்கீரின் சோதனை என்ற பெயரில் நம் தமிழ்ப்பெண்களின்
உடலைத் தொட்டுப் பார்த்ததையும் ஏன் நிர்வாணமாக்கியதையும்
பதிவு செய்துள்ளது.

திரு குமணராசன் அவர்கள் சற்றொப்ப இரண்டு மணிநேரம் பேசினார்.
அதன்பின் இலங்கையின் கொலைக்களம் என்ற சேனல்4 ல் வெளியான
ஆவணப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது.
கனத்த இதயத்துடன் ... நாங்கள்..ஒவ்வொருவரும்.

Wednesday, June 29, 2011

மெழுகுவர்த்திகள் மட்டும் போதுமா?

மெரீனா கடற்கரையில் மெழுவர்த்தி ஏந்தி
உங்கள் உணர்வை
உங்கள் எதிர்ப்பைக் காட்டிய
என் உறவுகளே....

ஆண்டுக்கொரு முறை மெழுகுவர்த்தி ஏந்தி
நினைவேந்தல் நடத்துவதன் ஆரம்பவிழாவா
உங்கள் கூட்டமும் உங்கள் கோஷமும்..?
அப்படியானால்
என்னை மன்னித்துவிடுங்கள்...
இனிமேல் மெழுகுவர்த்திகளை
உங்கள் தீர்க்கமுடியாத வியாதியாகிவிட்ட
மின்சாரதடையின் போது மட்டுமே
உபயோகப்படுத்துங்கள்.
அது உங்களுக்கு மட்டுமல்ல
உங்கள் அடையாளங்களைச் சுமந்து
உங்கள் அடையாளங்கள் இருந்ததால் மட்டுமே
மண்ணில் விதைக்கப்பட்ட
மானுட விதைகளுக்கு
நீங்கள் செய்யும் மரியாதையாக
இருக்க முடியும்.

எப்போதும் உணர்வுக்குமிழிக்குள்
பொங்கி வெளிவந்து
கரை சேர்வதற்குள் உடைந்துப் போன
கடந்தக் காலத்தின் கதைகள்
தொடர்கதையாகிவிடாது
என்பது என்ன நிச்சயம்?

உங்கள் திட்டம் என்ன?
உங்கள் செயல்பாடு என்ன?
உங்களுக்குள் இருக்கும்
உப்பு புளி சண்டைகளை
உங்களுக்குள் இருக்கும்
அதிகார ஆசைகள்
உங்களுக்குள் இருக்கும்
உன்மத்தங்கள்
எல்லாவற்றையும் எரித்துவிட்டீர்களா?
எரித்தச் சாம்பலை வங்கக்கடல்நீரில்
கரைத்துவிட்டீர்களா?

யாராவது தீர்மானம் போட்டால்
எல்லாம் நடக்கும் என்று
எப்போதும் நினைத்தீர்கள்!
அட இப்போதும் நினைக்கிறீர்கள்!
எப்படி நடக்கும்?
இறையாண்மை இருக்கிறதே..!
அதை வெல்லும் மறையாண்மை
மறவர் ஆண்மை
உங்களிடம் இருக்கிறதா..?

செண்ட்ரல் ஸ்டேஷந்தாண்டி
உங்கள் செய்திகள் கூட
பயணிக்கவில்லை என்பதை
என்றாவது பார்த்திருக்கின்றீர்களா
?
மெரீனாவில் ஏற்றிய
மெழுகுவர்த்திகள் எரிந்து முடிவதற்குள்
இலவச டிவிக்களில்
மானாட மயிலாட பார்க்கும்
மானுடப்பிறவிகளே...

இருளைச் சுமந்துக்கொண்டே
எரியும் மெழுகுவர்த்தியாய்
இந்தியத் தமிழனாய்
இருக்க நினைப்பது

சத்தியமாய்த் தவறில்லை
சாத்தியமா தெரியவில்லை

செங்கோட்டையிலிருந்து
தேவதூதர்கள்
வருவார்கள்
போவார்கள்
எழுதுவார்கள்
அறிக்கை விடுவார்கள்..
ஆகா என்று
ஆனந்தப்பட்டு ஆரத்தழுவும்
காட்சிகள் மாறவில்லை
கட்சிகள் தான் மாறி இருக்கின்றன.

முடியும் என்றால்
உங்கள் அணிவகுப்பை
செங்கோட்டையை நோக்கித்
திருப்புங்கள்
செங்கோட்டை வாசலெங்கும்
மெழுகுவர்த்திகள் எரியட்டும்
அணையாமல் எரியட்டும்
குளிர்ந்தக் காற்றில்
அணைந்துவிடாமல்
சூடேற்றக் காத்திருக்கும்
சூரியக்குஞ்சுகளின் சார்பாக...

Tuesday, June 21, 2011

காயங்களுக்கு மயிலிறகாய் கவிதைமொழி....


என் கவிதை தொகுப்பு "ஐந்திணை"
இருவாட்சி பதிப்பகம், சென்னை வெளியிட்டுள்ளது.
அந்நூலுக்கான என்னுரையில்.....


காதல் ஒரு நினைவுச்சுருள்.
ஒரு நிமிடத்தில் ஓராயிரம் ஆண்டுகளின் நினைவுகளைப்
புரட்டிப் போடும் வேகம்
காதலின் நினைவுச்சுருளுக்குள் பத்திரமாக
நமக்குத் தெரிந்தும் தெரியாமலும்
நமக்குள் ஓடிக்கொண்டுதானிருக்கிறது.
அந்த நினைவுகளைப் புரட்டிப்பார்ப்பதும் அசைப்போடுவதும்
பெண்ணுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கற்பொழுக்கத்தில் ஒரு கரும்புள்ளிஎன்று
காலம் காலமாக அவளுக்குப் போதிக்கப்பட்டு வருகிறது.
அதனால்தான்
அந்த நினைவுச்சுருளைத் தொட்டுப்பார்க்கவே பெண்கள் அச்சப்படுகிறார்கள்.
சமூகம், சமூக அந்தஸ்த்து, குடும்பம்..
இப்படியாக சொல்லப்படும் காரணங்கள்
அனைத்தும் பெண்ணை மையமாக்கி
சுற்றி சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் வளையங்கள்.
அந்த வளையத்துக்குள் இருந்துக்கொண்டே
பிரபஞ்சம் போல பரந்து விரிந்து
தன்னை ஆட்கொண்ட காதலை வெளிப்படுத்துவது என்பது
சங்ககாலம் தொட்டே பெண் எதிர்நோக்கும் பிரச்சனையாகவே
வலம் வந்துக் கொண்டிருக்கிறது.
புறம் சார்ந்தக் காரணிகள் ஒருபக்கம் என்றால்,
புறக்காரணிகளின் தாக்கத்தால் ஏற்படும்
அகம் சார்ந்த உணர்வுகளே குற்றமாகி
அவள் கழுத்துக்கு மேலே தூக்குக்கயிறாய்
எப்போதும் அசைந்து ஆடிக்கொண்டிருக்கிறது
.

காதல் இயல்பானது-
காதல் இயற்கையானது -
என்ற உண்மையை அவள் உணர்ந்து கொள்ள நடக்கும் போராட்டத்தில்
அவள் சமூகத்துடன் மட்டுமல்ல,
'நான் - பெண் ' என்ற தன் சுயத்துடனும்
போராடிக் கொண்டே இருக்கிறாள்.
இந்தப் போராட்டத்தில்
உண்மையை அப்படியே நிர்வாணமாக்க
அவள் உடல் கூசுகிறது.
மொழிகளின் வசீகரமான வார்த்தைகளால் உண்மைகளை
அவள் அலங்காரம் செய்துக் கொள்கிறாள்.
கவிதைமொழி அவள் காயங்களுக்கு மயிலிறகாய் தடவிக்கொடுக்கிறது.

**

காதலும் பெண்ணும் ஒன்றில் ஒன்றாய்க் கலந்து கரைந்து நிற்பதை
அவள் உணரும் தருணத்தில்..
அவள் தான் காதல்
காதல் தான் அவள்.
அவளிடமிருந்து எவராலும் எக்காலத்தும் காதலைப் பிரித்தெடுக்க முடியாது.
குட்டிப்போட்டு பாலூட்டுவது மட்டுமே பெண்ணின் அடையாளம் என்ற வட்டத்தை
அவள் உடைத்துவிட்டாள். காதல் மட்டுமே அவளுக்கான அடையாளம்.
ஆகாயத்தின் கீழிருக்கும் அனைத்தையும் அவள் காதல் தனதாக்கிக் கொள்கிறது
களவும் கற்பும் ஊடலும் கூடலும் மட்டுமே காதலாகி இருந்த அவள் வாழ்க்கையில்
நெய்தலும் பாலையும் காதலின் வலிமையைக் காட்டும் அவள் ஆயுதங்களாகின்றன.

**

உங்கள் காதல் கவிதைகளின் போதையில் பெண் தள்ளாடுவதை
உங்களின் வெற்றி என்று கொண்டாடினீர்கள்.
அப்போதுதான் அவளுக்குத் தெரியவந்தது
காதல் என்ற பெயரால் அவள் கட்டப்பட்டிருக்கும் சூக்குமம்.
காதலுக்கு கூட இனி அவள் அடிமையாக இருக்க மாட்டாள்.
காதல் மட்டுமே விட்டு விடுதலையாகி பறக்கும் சுகத்தைத் தரும்
என்பதை அவள் தனக்காக மட்டுமல்ல, உங்களுக்காகவும் சேர்த்தே பாடிக்கொண்டிருப்பாள்.
வேடனின் வலையுடன் பறந்தப் புறாவின் கதையை நீங்கள் அறிவீர்கள்.
வேடன் வலையையே சிறகாக்கி பறக்கும் புறாவாக அவள்

இதோ.. உங்களுடன்.

**

கவிதைகளில் "கூறியது கூறல்" இருப்பதை நானறிவேன். வெவ்வேறு காலக்கட்டத்தில்
எழுதியவை என்ற காரணங்களுக்கெல்லாம் அப்பால் அபாயங்கள் இருப்பதை
அடிக்கடி நினைவுபடுத்தினால் விபத்துகள் தவிர்க்கப்படலாம் என்ற நப்பாசைதான்!
உள்ளாடையிலிருந்து உள்ளாட்சி தேர்தல் வரை இங்கே அரசியல் இருக்கும் போது
ஐந்திணையிலும் அரசியல் கலந்திருப்பது ஆயுள் தண்டனைக்கான குற்றமா என்ன?

**


ஐந்திணையை என் அப்பச்சி - அப்பாவின் அம்மா - நினைவில் வாழும்
என் பாட்டி அமராவதி சுப்பையாவுக்கு... என்று ஒற்றைவரியில்
அறிமுகப்படுத்துவது அவளுக்கு நான் செய்யும் நியாயமாக இருக்காது.
என் பாட்டியின் புகைப்படம் இல்லவே இல்லை. நாங்கள் யாரும் அவளைப்
பார்த்ததில்லை. ரவிக்கையும் காலில் செருப்பும் அணிவது மறுக்கப்பட்ட
சமூகத்தில் அவள் 1915வாக்கில் தன் திருமணத்தின் போதே திருநெல்வேலி சீமையிலிருந்து
ரவிக்கை அணிந்து காலில் செருப்புடன் எங்கள் கிராமத்தில் அடியெடுத்து வைத்து
மவுனமாக ஒரு புரட்சியைச் செய்திருக்கிறாள்..கொழும்பு, கராச்சி, பம்பாய் என்று
தாத்தாவுடன் கப்பலில் பயணம் செய்திருக்கிறாள். அவள் செய்த புரட்சிகளைப்
புரிந்துக் கொள்ளவும் பெருமையுடன் உங்களுக்கு அறிமுகப்படுத்தவும் ஐந்திணையில்
ஒரு புள்ளி வைத்திருக்கிறேன்.

**

கடுகளவு உதவி செய்தாலும் அதைக் கடலளவாய் எப்போதும் இசைத்துக் கொண்டிருக்கும்
பேருள்ளம் சிலருக்குதான் உண்டு. என் நட்புவட்டத்தில் எப்போதும் அந்த
அலைகளுக்குச் சொந்தக்காரர் நண்பர் அன்பாதவன் அவர்கள். அவருடைய முயற்சிதான்
என் எழுத்துகள் பல அச்சேற உதவியாகவும் உறுதுணையாகவும் இருக்கின்றன.
தன் பணிகளுக்கு நடுவில் இக்கவிதைகளுக்கு அவரே அணிந்துரையும் தந்து
சிறப்பு செய்திருக்கிறார்.
வடிவமைத்த கோவை பாலா, வெளியிடும் உதயக்கண்ணன், என் கவிதைகளுக்கு
இடமளிக்கும் சிற்றிதழ், இணைய இதழ் தோழமை உறவுகளுக்கும் என் வணக்கமும்
நன்றியும்.

Thursday, June 16, 2011

சமச்சீர் கல்வியும் சண்டைக்கோழியும்




சமச்சீர் கல்வியை தடை செய்வதும் அதற்கான காரணங்களாக
பாடத்திட்டத்தில் குற்றம் கண்டுபிடித்ததும்.. இப்படியாக
நித்தமும் ஓர் அறிக்கை யுத்தம்.. பாவப்பட்டவர்கள்
மாணவர்களும் பெற்றோர்களும் மட்டுமல்ல.. பள்ளிகூட
ஆசிரியர்களும் தான்.
ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி
பாடத்திட்டம் தொடரும் என்று அறிவித்தாகிவிட்டது.
ஆறாம் வகுப்புக்குப் பின் பழைய பாடத்திட்டமாம்!
தலையைச் சுற்றுகிறது...! இந்தக் கேலிக்கூத்துக்கெல்லாம்
சொல்லப்படும் காரணங்களும் அரசியல் தலைவர்களின்
கோமாளித்தனங்களும்...!!

தினமலர் 13/6/2011ல் வெளியாகி இருக்கும் ஒரு செய்தி.

" ப்ளஸ் 1 ப்ளஸ் 2 பாடப்புத்தகங்களில் கடைசிப் பக்கத்தில்
செம்மொழி மாநாடு லோகோ அச்சிடப்பட்டுள்ளது. இப்புத்தகங்களில்
உள்ள லோகோவை மறைக்கும் வகையில் அதன் மீது ஸ்டிக்கர்
ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 10 வகையான அளவுகளில்
இரண்டு லட்சம் ஸ்டிக்கர் திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து
கோரப்பட்டிருந்தன. அதன்படி பச்சை நிறத்திலான ப்ளெயின் ஸ்டிக்கர்
வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான ஸ்டிக்கர் வழங்கி
புத்தகங்கள் மீது ஒட்டிய பின்பே மாணவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது."

செம்மொழி மாநாடு நிகழ்வில் பலருக்கும் கருத்து வேறுபாடு உண்டு.
செம்மொழி மாநாடு கலைஞரின் கவிதை.. "செம்மொழியான தமிழ்மொழியாம்..."
வெளிவந்தவுடனேயே பல்வேறு விமர்சனங்கள் வந்தன. இலக்கண குற்றத்தையும்
தமிழறிஞர்கள் சுட்டிக்காட்டினார்கள்...
இதெல்லாம் இருக்கட்டும்.. ஆனால் முந்தைய திமுக ஆட்சியில் செம்மொழி
மாநாடு முத்திரையும் அதில் எழுதப்பட்ட 'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்'
என்ற வாசகங்களும் மட்டும்தான் ஒவ்வொரு தமிழனும் பெருமைக்கொண்ட
விரும்பிய ஓர் அம்சம். அதை அரசுப் பொறுப்பேற்றவுடன் தமிழக முதல்வர்
ஜெயலலிதா அவர்கள் திமுக கலைஞர் மீதான வெறுப்பை தமிழனின் பெருமிதமான
திருவள்ளுவரை அவமதிக்கும் வகையில் செயல்படுத்தி இருக்கிறார்.
இந்த நிகழ்வின் மூலம் சமச்சீர் கல்வியை எதிர்ப்பது ஏன் என்பதை
மட்டுமல்ல..
' நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் பார்..! '
என்ற தன் அதிகாரத்தின் உச்சத்தையும் காட்டி இருக்கிறார் தமிழக முதல்வர்.

குஷ்பு எதாவது உளறிக்கொட்டினால் கொதித்துப் போகும் என் தமிழ்
உணர்வாளர்கள் இதை எல்லாம் கண்டும் காணாமலும் இருக்க
கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு.. "

Saturday, June 11, 2011

கலைஞர் டிவியும் திமுகவும்




கலைஞர் டிவி.. திமுக என்ற அரசியல் இயக்கத்தின் தொலைக்காட்சி அல்ல.
திமுக என்ற அரசியல் இயக்கத்தின் தலைவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும்
சொந்தமான ஒரு சொத்து கலைஞர் டிவி. வீடு வாசல் தோட்டம் நகை நட்டு போல
இதுவும் ஒரு சொத்து. அதிலும் பொன்முட்டையிடும் வாத்து என்று கூட வைத்துக்
கொள்ளலாம்.

சரி, திமுகவின் எந்த திராவிட இயக்க கருத்துகளை முன்வைத்து
கலைஞர் டிவியின் நிகழ்ச்சிகள் இருக்கிறதா என்று பார்த்தால்
மற்ற தொலைக்காட்சிகளுக்கும் கலைஞர் டிவிக்கும் எந்த வேற்பாடுகளும்
கிடையாது. எனவே கலைஞர் டிவியை திராவிட இயக்கத்தின் கருத்துப் பரப்பும்
ஊடகம் என்று காதில் பூச்சுத்த முடியாது.

கலைஞர் டிவி ஆரம்பிக்கும் போது திமுக வின் பொதுக்குழு செயற்குழு
கூட்டத்தைக் கூட்டி அதில் கருத்துக் கேட்டு ஆரம்பித்தார்களா என்றால்
அப்படியும் இல்லை. ஆனால் கலைஞர் டிவிக்கு இன்று ஏற்பட்டிருக்கும்
அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண திமுக வின் பொதுக்குழு
செயற்குழு கூட்டப்படுவது ஏன்?

Saturday, June 4, 2011

கலைஞர் வசனத்தில் குளறுபடி




திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய 88வது வயது
பிறந்தநாள் அன்று 3/6/2011 ல் தன் தொண்டர்களுக்குச் சொன்னது:

" சமுதாய எழுச்சிக்காகவும் அரசியல் மறுமலர்ச்சிக்காகவும் தங்களை
ஒப்படைத்துக் கொண்ட தோழர்கள், உடன்பிறப்புகள்,
'கூடா நட்பு கேடாய் முடியும்!' என்ற பொன்மொழியை மறந்துவிடாமல்
பயணம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் " என்றார்.

எல்லாம் சரிதான். நீங்கள் மிகச் சிறந்த வசனகர்த்தா என்பதில்
என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால் இதென்ன.. ?? இந்த வசனத்தை நீங்கள் சொல்றமாதிரி
இருப்பது கதையுடனும் காட்சியுடனும் பொருந்தவே இல்லையே.
உடன்பிறப்புகள் உங்கள் பிறந்தநாளுக்குச் சொன்னதாக
இருந்தால் தானே சரியாக இருக்கும்.

இப்படி எல்லாம் உங்களைப் போன்ற சிறந்த வசனகர்த்தாக்கள்
வசனத்தில் குளறுபடி செய்வது தான் எங்களுக்கு குழப்பமாக
இருக்கிறது. கதையும் புரியலை.. உங்கள் கதைப் பாத்திரமும்
புரியலை.. பாவம் உடன்பிறப்புகளும் கூட்டணி தோழர்களும்.

Sunday, May 22, 2011

அரசியல் குருபெயர்ச்சி






தேர்தல் முடிவுகள் வந்த நாள்..
மறக்க முடியாத நாளாக இருந்தது.முந்தின நாள்: இரவில் தூக்கம் வரவில்லை.
வீனஸ் சேனலில் வேலைக்குச் சேர்ந்தப் பின் நண்பர்கள் வட்டம் அதிகமாகிப்போனதுஒருவகையில் எரிச்சலாகவே இருந்தது.

எலெக்ஷன் ரிசல்ட் விடிந்தால் காலை 10 மணிக்கெல்லாம் தெரிந்துவிடப் போகிறது.இருந்தாலும் ஏன் தான் இந்த மாதிரி எல்லாம் கேள்விக் கேட்டு தொந்தரவு செய்கிறார்களோ தெரியவில்லை.

அரசியல் கட்சியில் இருப்பவர்களும் தேர்தலில் போட்டி இடும் வேட்பாளர்களும்கேட்டால் ஏதொ அதற்கு காரணம் இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால்சொந்தக்காரர்கள் முதல் கல்லூரியில் ஒன்றாய் படித்த தோழியின் கணவர் வரைபோன் செய்து விசாரித்தார்கள்.
எங்கள் கணிப்பு இதுதான் என்று சொன்னால் அப்படியா என்று கேட்டுவிட்டுஇருக்க வேண்டியதுதானே. காரண காரியங்கள் எல்லாம் கேட்பார்கள்,அவர்கள் திருப்தி படுகிறமாதிரி பதில் சொல்லியாக வேண்டும்.இல்லை என்றால் நாங்கள் செய்த கருத்துக் கணிப்பு வேலை எல்லாம்ஒரு பைத்தியக்காரத்தனம் என்கிற மாதிரி பேசுவார்கள்.அப்படிச் சொல்கிறவர்களிடம் அப்புறம் நீங்கள் ஏன் சார் போன் போட்டுஎங்களிடன் கேட்கிறீர்கள் என்று கேட்டால் சரியான பதில் வராது.

வீனஸ் சேனலில் நாங்கள் கொடுத்திருந்தக் கருத்து கணிப்பு நான்கு மாநிலங்களிலும்சரியாக இருந்தது. அந்த டீமுக்கு நான் தான் பொறுப்பு என்பதால் மேலிடத்திலிருந்துஏகப்பட்ட பாராட்டு வந்தது.ஸ்டார், ஹெட் லைன்ஸ் என்று நான் இதற்கு முன்பு வேலைப் பார்த்த சேனல்நண்பர்களும் எனக்கு வாழ்த்துச் சொன்னார்கள். உங்களை ரொம்ப மிஸ் பண்ணினோம்என்று சொன்னது எனக்கு கொஞ்சம் பெருமையாகத் தான் இருந்தது.

எல்லோரின் கருத்துக் கணிப்பையும் மீறி ஜெயலலிதா அதிரடியாக இவ்வளவுஇடங்களைப் பிடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றுஅரசியல் பிரிவில் வேலைப்பார்க்கும் நரேஸ் நாலு பத்திரிகை காரர்களைவைத்துக் கொண்டு அலசிக் கொண்டிருந்தான்.

செல்வி ஜெயலலிதா பழைய தவறுகளைச் செய்ய மாட்டார் என்றும்இன்னும் 10 வருடத்திற்கு அவரை அசைக்க முடியாது என்றும்சிலர் சொன்னார்கள்.

ஜெயலலிதா, மம்தா இருவரின் ஜாதகப்படி எதிரிகள்இருந்த இடம் தெரியாமல் போவார்கள் என்றும் அவர்கள் வெற்றிக்குகுருபெயர்ச்சியே காரணம் என்றும் ஒரு பண்டிதர் அலசிக் கொண்டிருந்தார்..

தேர்தல் முடிவுகளை நக்கீரன் ஆசிரியரை வைத்துக்கொண்டு அட்டகாசமாகஆரம்பித்த கலைஞர் டிவி 10 மணிக்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல்அல்லாடிக் கொண்டிருந்தது பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ரொம்பவும்பரிதாபமாக இருந்தது. எப்படியோ 'மானாட மயிலாட' போட்டு அன்றைய பகல் பொழுதை ஓட்டினார்கள்.

ஸ்டாலின் பின்னடைவு என்ற செய்தி அடிக்கடி வந்து பயமுறுத்தியது உண்மை!உண்மையாப்பா? என்று சென்னை நண்பர்களைத் தொடர்புக் கொண்டால்ஒவ்வொருவரும் அவரவர் கேள்விப்பட்டதைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

என் கருத்துக்கணிப்புக்கு மிகவும் பலமாக இருந்தது திமுகாவின் பழம் பெரும்தொண்டர்களின் ரகசிய வாக்குமூலங்கள் என்று நான் யாரிடமும் வெளியில்சொல்லவில்லை.
எங்கள் ஊரில் திமுகாவின் பழம் பெரும் தொண்டர் ஒருவர் சொன்னக் கருத்துதான்என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது. அவரும் என் அப்பாவும் நெருங்கியநண்பர்கள். இருவரும் கலந்துக் கொள்ளாத திமுக மாநாடுகளே கிடையாது.இரண்டு பேருமே மனைவி பிள்ளைகள் என்று கவலைப்பட்டதே இல்லை.என் அப்பாவுக்காவது மாசச்சம்பளம் வரும் உத்தியோகம் இருந்தது.அவருக்கு அதுவும் கிடையாது. இரண்டு வீட்டிலும் பிள்ளைச் செல்வங்களுக்குமட்டும் குறைவில்லை. எந்தப் பிள்ளை எந்த வகுப்பு படிக்கிறது, என்ன செய்கிறதுஎன்று இருவரிடமும் கேட்டால் தெரியாது. ஆனால் கட்சியில் யார் யார் என்னசெய்து கொண்டிருக்கிறார்கள், என்ன எழுதினார்கள், இத்தியாதி விசயங்கள்அத்துப்படியாகத் தெரியும். அதெல்லாம் ஒரு பெரிய கதை.

அவரிடம் தான் எலெக்ஷனுக்கு முந்தியே கொஞ்சம் பல்ஸ் பிடிச்சிபார்ப்பதற்காக போனில் பேசிக்கொண்டிருந்தேன்.

ஆவடையப்பன் தோற்கட்டும்
எல்லாரும் தோக்கட்டும் அப்போ தான் புத்தி வரும்..
மூணே மூணு பேரு ஜெயிச்சா போதும்..
தலைவரு, ஸ்டாலினு அப்புறம் நம்ம பேராசியர்..'"

நான் வேறு அவர் வேறல்ல, நான் தான் அவர், அவர்தான் நான்... என்றுஅடிக்கடி அன்பழகன் சொல்வாராம் நெல்லை நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.பாவம் அவருக்கு ரொம்பவும் வேண்டியவரு அவுட் போலிருக்கே என்றுஅன்பழகனின் தோல்வியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.

அப்போதுதான் விழித்தெழு இயக்கத்திலிருந்து தம்பி ஸ்ரீதர் வீட்டுக்குவந்தான். எலெக்ஷன் ரிசல்ட் குறித்து ரொம்பவும் காரசாரமாகப்பேசிக்கொண்டிருந்தான்.அன்பழகன் தோல்விக்கு மிகவும் சரியாக ஒரு நியாயத்தை முன் வைத்துப்பேசினான்.

பிறகென்ன அக்கா,
மக்களுக்கு இப்போதெல்லாம் புரிந்துவிட்டது,குற்றம் செய்பவன் மட்டும் குற்றவாளி இல்லை,அந்தக் குற்றத்தைக் கண்டும் காணாமல் கூட இருப்பவன் மிகப்பெரிய குற்றவாளி.அதற்குரிய தண்டனையைத் தான் வழங்கி இருக்கிறார்கள்! வாழ்க.
என்றான்.

அவன் எதைப் பேசினாலும் கொஞ்சம் சூடாகத்தான் பேசுவான்.அவன் சொல்வதிலிருந்த நியாயங்கள் எனக்கும் புரிந்தது.செம்மொழி மாநாட்டு மேடையில் மியுசிக் சேரில் உட்கார இடம் பிடிப்பதுமாதிரி வாரிசுகள் போட்டிப் போட்டதைக் கண்டும் காணாமல்இடிச்சப்புளி மாதிரி மனுசன் உட்கார்ந்திருந்தக் கோலம் நினைவுக்கு வந்தது.

அன்றிரவு,நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டே படுத்திருக்கிறேன்.
ஒவ்வொரு நட்சத்திரமாக கடலில் விழுந்துக் கொண்டிருக்கிறது என்றுகாற்று வந்து மெதுவாகச் சொல்கிறது
புதிய வானம், புதிய நட்சத்திரங்கள் வரட்டும், என்கிறேன்.
ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டையை புதிய வானம் புனரமைக்குமா?காற்று கேட்கிறது கண்ணீருடன்.
கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்ல கைகளை நீட்டியவுடன்காற்று காணாமல் போகிறது..

தெற்கிலிருந்து அழும் விம்மல் ஓசை..
முட்புதரில் கிழிந்துத் தொங்கும் உள்ளாடை
மருத்துவமனைகள் எங்கும் பிணவாடை.
சாபமிடுகிறாள் என் ஆதித்தாய்.
பயமாக இருக்கிறது.. குருதி வழிய காயத்துடன்அவள் நின்ற கோலம்

மன்னித்து விடு தாயே ... என்று அலறுகிறேன்.
அவள் கருப்பை வெடித்துச் சிதறுகிறது
ரத்த வெள்ளத்தில் மிதக்கிறது அவள் குழந்தை பிணமாக..
மயங்கி விழுகிறேன்.எழுந்து நிற்கத் தெம்பில்லை.
ஆதித்தாயின் சாபம் என்னைத் துரத்துகிறது.
என் இருத்தலை ஆயிரம் ஏவுகணைகளால் துளைத்து எடுக்கிறது.

ஊரில் அப்பா பெயரால் ஏற்றப்பட்டிருந்த கொடிக்கம்பம்
சாய்ந்துவிழுந்துவிட்டதாம்.
மீண்டும் கொடிக்கம்பதை தூக்கி நிறுத்தவா?
அல்லது விழுந்தது விழுந்ததாகவே இருக்கட்டுமே என்று விட்டுவிடவா? கேட்கிறான் தம்பி, புரியவில்லை. அவனுக்கு என்ன பதில் சொல்லட்டும்?
காலம் என் பதிலுக்காக காத்திருக்கப் போவதில்லை.
கொடிக்கம்பத்தில் பொறிக்கப்பட்டிருந்தஅப்பாவின் பெயர்
கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதைகிறது.பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.. மவுனமாக.
அந்தப் பெயர், அந்த மனிதர், அந்த முகம், அந்த வாழ்க்கை
அதில் எனக்கான இடம் ஒரு சின்னப் புள்ளிதான் என்றாலும்
ஓ வென்று அழ வேண்டும் போலிருக்கிறது.
என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர்..
நான் தூக்கத்தில் அழுதேனா.. தெரியவில்லையே
நட்சத்திரத்தில் தொங்கிக்கொண்டிருந்த அப்பாவின் நீண்ட நேரியல்என் கண்ணீரைத் துடைக்கிறது.

காலையில் திமுக தொண்டர் தோல்வி தாங்காமல் தற்கொலை என்ற செய்தியை வாசித்தவுடன் கோபம் வந்தது.உங்கள் ஊரில் மட்டும் ஏன் எதற்கெடுத்தாலும் தற்கொலை, தீக்குளிப்பு!அடிப்படையில் உங்கள் எல்லோருக்குமே எதோ ஒரு வகை மனவியாதிப்டித்திருக்கிறது என்கிறார்கள் என்னுடன் வேலைப்பார்க்கும்வீன்ஸ் டிவி நண்பர்கள்.
இருக்கலாம் ! என்று சொல்லிவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடல் நலம்பெற மராட்டிய மாநில ரஜினி ரசிகர் மன்ற தலைவர் எனக்குத் தெரிந்தவர்தான், ஆதிமூலம் ஏதொ யாகமெல்லாம் செய்யப் போகிறாராம்அதைக் கவர் செய்ய காமிராமேனுடன் வேகமாக வெளியில் புறப்பட்டேன்.

Tuesday, May 17, 2011

இன்னமும் போராளிகளே..



மௌனிக்கப்பட்ட ஆயுதங்களும் மௌனமாய் அழும் முன்னைநாள் பெண்போராளிகளும். (..நன்றி சாத்திரி -@தமிழ்மணம் )







இலங்கைத்தீவில் 30 ஆண்டுகால ஆயுதப்போர் வடகிழக்கு தமிழர்களிடம் ஏற்பட்ட மாற்றங்களில் முக்கியமான மிகப்பெரிய வரலாற்று மாற்றமாக தமிழ்பெண்களின் மாற்றமும்.அவர்கள் மீதான பார்வையும். இடம் பிடித்திருந்தது ; பகத்து வீட்டிற்கு போவதானாலும் பக்கத்தில் ஒரு துணையை அழைத்துக்கொண்டே போவதற்கு பழக்கப்பட்ட அல்லது பழக்கத்தினை திணிக்கப்ப்பட்ட தமிழ் பெண்கள.; அது மட்டுமல்லாது சம்பிரதாயம் அல்லது சமூக கட்டுப்பாடு என்கிற பெயரில் நடை உடை பழக்கவழக்கங்கள் என்று பெண்கள் மீது திணிக்கப்பட்டிருந்த அனைத்து விதிமுறைகளையும் உடைத்து தன்னந்தனியே இராணுவ உடைகளுடன் காடு மேடெங்கும் கைகளில் துப்பாக்கிகழுடன் திரிந்தார்கள் வாகனங்கள் ஓட்டினார்கள். இராணுவ முகாம்களினுள் புகுந்து வேவுபார்த்தார்கள். கடலிலும் தரையிலும் சமர்கள் செய்தார்கள். இப்படி எதிர்மறையானதொரு மாற்றத்தினை கொண்டிருந்தார்கள். சமூகத்தில் ஒரு ஆணை எதிர்த்து பெண் கதைத்தாலே அவளை அடங்காப்பிடாரி என்றும்.உடைகளில் மாற்றங்களை கொண்டிருந்தாலே அர்த்தங்கள் சொல்லமுடியாத பல பட்டங்களை அள்ளி வழங்கும் தமிழ் சமூகம் பின்னர் சமராடிய அதே பெண்களை அணைத்து ஆனந்தக்கூத்தாடி அவர்களை ஆயுதம் தரித்த பெண்தெய்வங்களான துர்க்கை காளிமாதா என்று போற்றி கொண்டாடியது.
பெண்கள் மீதான பார்வையே தனிமதிப்பாகிப்போனது.அவர்களின் வீரக்கதைகள் விதவிதமாகப் பேசப்பட்டது. ஆனால் ஆயுதங்கள் மொளனிக்கப்பட்டு ஆயுதப்போரும் முடிவிற்கு வந்தபின்னர். ஆயுதங்களற்ற அதே துர்(கா);கைகளும் காளிகளும் அதே சமூகத்தால் தெரு நாயினும் விடகேவலமாய் பாரக்கப்படுகிறார்கள். இப்பொழுதெல்லாம் அவர்கள் போற்றப்படுவதில்லை. கொண்டாடப்படுவதில்லை. எங்களை போற்றவேண்டாம். தூற்றாமல் இருந்தாலே போதும் என்று மனதினுள் அழுகின்றார்கள் முன்னைநாள் பெண்போராளிகள்.இறுதி யுத்தத்தின் போது சரணடைந்து விசாரணைகள் சித்திரவதைகள் மனஉழைச்சல்கள் என்று அத்தனையையும் தாண்டி விடுவிக்கப்பட்டு தங்கள் சொந்த வாழ்க்கைக்கு திரும்பிய பல நூறு பெண்களின் கதைகள் ஒரு கட்டுரை மூலமாக அத்தனையும் சொல்லிவிட முடியாது. இவர்கள் இன்று தமிழ் சமூகத்தால் ஒதுக்கபடுவதற்கான முக்கிய காரணங்களாக பாதிக்கப் பட்ட பெண்கள் கூறுவது முதன்மையானது. 1)சாதியம்(திருமணமானவர்கள்) 2) பிரதேசம் 3)யுத்தத்தில் அவர்கள் அடைந்தஅடைந்த ஊனம். 4)வறுமை என்று தரம் பிரிக்கலாம்.
1)சாதியம்...இங்கு அதிகமாகப் பாதிப்படைந்தவர்கள் நீண்டகாலம் போராளிகளாக இருந்து இயக்கத்திலேயே திருமணமாகி யுத்தத்தில் கணவனை இழந்த பெண்களே. புலிகள் அமைப்பின் எழுச்சிகாலகட்டங்களில் அமைப்பில் சாதிகளற்ற கலப்பு காதல் திருமணங்களே ஊக்கிவிக்கப்பட்டது. அது புலிகள் அமைப்பில் இருந்தவர்களிற்கு மட்டுமல்ல சாதாரணமான பொதுமக்களிலும் சாதி மாறி காதலித்தவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிற்கு ஓடிச்சென்று திருமணம் செய்து கொண்டனர்.இப்படி சாதி மாறி திருமணம் செய்தவர்கள் யுத்தத்தில் கணவர்களை பறி கொடுத்தபின்னர் தங்கள் குழந்தைகளுடன் வாழவழியற்று வருமானமும் இல்லாத நிலையில் கணவனின் உறவுகளாலும்; ஏற்றுக்கொள்ளப்படமல் பெண்ணின் உறவுகளாலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் தனியே தவிப்பது மட்டுமல்லாது சமூகத்து ஆண்களின் தவறான கண்ணோட்டங்களும் இவர்கள் மீதே அதிக அழுததத்தினை கொடுக்கின்றது இவர்களே அதிகம் பாதிக்கபட்டவர்களாகின்றனர்.
2)பிரதேசம்..இங்கு அதிகம் பாதிப்படைவது கிழக்கு மாகாண பெண்களே முகாம்களிலிருந்து வெளியே வந்த பெணகள் தங்கள் சொந்த ஊரிற்கு திரும்ப முடியாத நிலை அதற்கான காரணங்கள் அவர்களின் கிராமங்கள் இன்று சிங்கள குடியேற்றங்களாகி விட்டது .அல்லது அவர்களிற்கு உறவுகள் யாரும் இல்லை அல்லது தொடர்புகள் அறுந்து பலவருடங்களாகியிருக்கும். முக்கிய காரணமாக அவர்கள் போராளிகளாய் இருந்த காலத்தில் உயர்நிலை பதவிகளில் இருந்திருப்பார்கள்.அல்லது ஊரில் சிறு பிரச்சனைகளிற்காக யாரிற்காவது தண்டனைகள் வழங்கியிருப்பார்கள். இவர்கள் சொந்த ஊரிற்கு திரும்பி சாதாரண வாழ்வில் ஈடுபடும்பொழுது பாதிக்கப்பட்டவர்களாலேயோ அல்லது அவரிற்கு வேண்டதவர்களால் மீண்டும் காட்டிக்கொடுக்கப்பட்டு புலனாய்வாளர்களால் கைது செய்யப்படலாம் அல்லது உயிராபத்து ஏற்படலாமென நினைத்து வேறு பிரதேசங்களில் குடியேறியவர்கள். அப்படி வேறு பிரதேசங்களில் குடியேறியிருந்தாலும் மேலே சொன்ன அனைத்து பிரச்சனைகளுடன் பிரதேசவாதமும் அவர்களை ஒதுக்குகின்றது.
3) யுத்தகாலத்தில் ஊனமடைந்த போராளிகள் புலிகளின் காலத்தில் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்ததோடு அவரவர்களின் திறைமைகளிக்கேற்ப இயலுமான வேலைத்திட்டங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய நிலையில் ஊனமடைந்த பெண்போராளிகளின் நிலை அவர்களது உறவுகளால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.அவர்களை தனியாக பராமரிக்க இயலாது அதே நேரம் சாதாணமாள பெண்களிற்கே திருமணம் செய்வதற்கு சீதனம் செலவுகள் என பணம் தேவைப்படும் இந்த நிலையில் ஊனமான பெண்ணை வைத்து என்ன செய்வது என்பது அவர்களது காரணங்களாகின்றது. அண்மையில் ஒரு முன்னைநாள் போராளிப் பெண்ணொருத்தி என்னுடன் தொலைபேசியில் கதைத்தபொழுது சொன்ன விடயங்கள்.அவள் யுத்தத்தில் இரண்டு கால்களையும் முழங்காலுடன் இழந்தவள்.பின்னர் அவளது குரல் வளத்தால் அவள் புலிகளின் குரல் வானொலியில் பணிபுரிந்தவள். யுத்தம் முடிவடைந்த பின்னர் தடுப்பு முகாமிலிருந்து விடுதலையாகி அவனது வீட்டிற்கு சென்ற பொழுது தாய் தந்தை அவளை துரத்தி விட்டார்கள் தனக்கு யாரையும் தெரியாது எங்கேயும் போக முடியாதென வீட்டு வாசலில் அழுதபடி இருந்தவளை அவளது சகோதரன் மீதமிருந்த முழங்கால்களில் பிடித்து தரதரவென இழுத்துவந்து வீதியில் எறிந்துவிட்டு போய்விட்டானாம். பின்னர் அவளின் நண்பர்கள் மூலம் எம்முடன் தொடர்பினை ஏற்படுத்தியதில் அவளை பராமரிப்பு நிலையம் ஒன்றில் சேர்த்து அடிப்படை உதவிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது ஒரு உதாரணம்தான்.
4)வறுமை என்பது நான் முதலில் எழுதியிருக்கும் காரணங்களுடன் சேர்ந்தே வருகின்ற ஒரு விடயம்தான். யுத்தம் முடிவிற்கு வந்தபின்னர் காயங்களோ அற்ற திருமணமும் செய்திருக்காத பெண்கள் உடல் ரீதியிலான தாக்கம் குறைந்து காணப்பட்டாலும் உளரீதியான தாக்கங்கள் நிறையவே உள்ளது. புலிகள் அமைப்பில் பலவருடங்கள் இருந்துவிட்ட காரணத்தால் இவர்களது கல்வியை தொடராது இருந்தவர்கள். இன்றைய வேகமான வளர்ச்சிகண்ட உலகில் இவர்களது கல்வி அடிப்படைகளை வைத்து எந்த வேலையும் செய்ய முடியாத நிலைமை. திருமணம் என்று வரும்பொழுது புலிகள் அமைப்பில் இருந்தது ஒரு காரணத்தடையாக முன்னே நிற்கின்றது. அண்மையில் எனக்கு தெரிந்த ஒருவர் பிரான்சில் வசிப்பவர் தனது மகனிற்கு ஊரில் ஒரு நல்ல பெண்ணாக தேடுவதாக சொன்னார் நான் அவரிடம் எனக்கு தெரிந்த நிறையபெண்கள் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் இப்போ வெளியில் வந்து சரியாக சிரமப் படுகிறார்கள் வேணுமானால் விபரம் தருகிறேன் போய் பார்த்து விரும்பினால் திருமணத்தை நடத்து என்றேன்.உடனே அவர் பதறியவராக ஜயோ புலியிலை இருந்தவளா அதுகள் குடும்பத்துக்கு சரிவராது என்றார்.
இப்படி காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.ஆனால் ஒன்றை மட்டும் நாம் வெகு இலாவகமாய் மறந்து விட்டோம் அல்லது மறந்தது போல் நடிக்கிறோம் இவர்கள் போராட பேனது யாரிற்காக?? எம்சமூகத்திற்காகவும் எம்மினத்திற்காகவுமேஅதற்காக அவர்பட்ட சிரமங்கள் வலிகள் வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்கள் வெற்றிகளை கொண்டாடிய சமூகம் தோல்விகளை துரத்துவது ஏன். அன்று அவர்கள் கைகளில் ஆயுதங்களை கொடுத்து இன்னொரு இனத்துடன் போராட தள்ளிவிட்டோம். ஆனால் இன்று அவர்கள் ஆயுதங்களற்றவர்களாயும் தோற்று போனவர்களாயும் களைத்துப்போயிருந்தாலும் எமது சமூகச்சாக்கடைகளுடன் போராட தள்ளியிருக்கிறோம். எனவே அவர்கள் முன்னைநாள் பெண் போராளிகளல்ல.......... இன்னமும் போராளிகளே..







நன்றி தமிழ்மணம் & சாத்திரி






Thursday, April 7, 2011

மன்மோகன்சிங்கின் மனவளக்கலை







தமிழர்கள் தமிழ்நாட்டில் ரொம்பவும் தான் குழம்பிப் போயிருப்பார்கள்.

காங்கிரசுக்கு 63 இடத்திலும் டெபாசிட் கூட கிடைக்காமல் புத்திப் புகட்டுவார்கள்
எம் தமிழர்கள் என்றெல்லாம் நான் பகற்கனவு காண விரும்பவில்லை.

காங்கிரசு அதிமுகாவுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்கப் போகிறது

காங்கிரசு தோற்றாலும் ஜெயித்தாலும் திமுகாவுக்கு "ஆப்பு
" தான்.
என்கிறார்கள் சில நம்பிக்கைக்குரிய ஊடக நண்பர்கள்.


ராஜபக்சே தமிழினத்தின் எதிரி
எனவே அவன் வரக்கூடாது மும்பைக்கு என்று சண்டைக்கோழியாய்
சிலிர்த்துப்போய் இங்கிருக்கும் பிற மொழிக்காரர்களிடம் பேசிய போது
ஃபிட் பிட்டாக சில கருத்துகள் உதிர்ந்தன.


இந்திய அரசாங்கம் அவனை அழைக்கிறது. இந்தியாவின் ஜனாதிபதி ராஜபக்சே அருகில்
அமர்ந்து கிரிக்கெட் பார்க்கிறார். இந்திய அரசு தமிழன அழிப்பில் ராஜபக்சேக்கு
வலக்கரமாகவும் இடக்கரமாகவும் இருந்திருக்கிறது, இருக்கிறது.
காங்கிரசாகட்டும் பிஜேபி ஆகட்டும்.. இந்த வெளியுறவுக்கொள்கையில்
மட்டும் ஒரே கொள்கை உள்ளவர்கள் தான். கம்யூனிஸ்டுகளும் விதிவிலக்கானவர்கள்
அல்ல. இவர்கள் எல்லோரும் சேர்ந்த அரசியல் உலகம் தான் இந்தியா.
ஏன் .. உங்கள் தமிழ்நாட்டில் தேர்தல் களத்தைப் பாருங்களேன்..
வேட்பாளாராக எல்லா கட்சிகளிலும் மக்கள் போட்டிப் போட்டுக்கொண்டு நின்றார்களே!

காங்கிரசு, பிஜேபி இவர்களுடன் மாறி மாறி கூட்டணி பேசி கூட்டணி அமைத்து கூட்டணி
உடைத்து கூட்டணியில் கொள்ளை அடிப்பவர்கள் தான் உங்கள் தமிழினத்தலைவர்கள்!
மனித நேயம், மனித உரிமை என்ற அடிப்படையில் ராஜபக்சேவை நீங்கள் எதிர்க்கலாம்
என்றால் முதலில் எதிர்த்திருக்க வேண்டியது சாட்சாத் ஓபாமாவைத்தான்.
அமெரிக்க வல்லரசு செய்யாத அட்டகாசமா? கொடுமையா? மனித உரிமை மீறல்களா?

சரி இந்த மாதிரியான விமர்சனங்களை எல்லாம் மண்டையில் ஏற்றிக்கொண்டு
நான் இப்போதெல்லாம் அவஸ்தைப் படுவதில்லை.

தமிழ்நாட்டில் தேர்தல் நேரம்.
தேர்தலுக்கு முன்னும் பின்னும் நடக்கப்போகும் காமெடி!
அசத்தப்போவது யாருனு தெரியலை?
ஏதாவது நினைவுகள் உங்களைத் தூக்கமின்றி அலைக்கழிக்கலாம்.
உளவியல் பிரச்சனைகளின் தாக்கம் உடனே வெளியில் தெரியாதாம்.
எனவே தான் இந்த டிப்ஸ் உங்கள் அனைவருக்காகவும்.
இதை மன்மோகன்சிங் மனவளக்கலை என்று மனோதத்துவ நிபுணர்கள்
சொல்கிறார்கள்.
ரொம்பவும் சிம்பிள்..

தமிழன எதிரி
தமிழனத் தூரோகி
2 ஜி, 3ஜி, இஸ்ரோ
கூட்டணி தர்மம்
லைவ் காமெடி
லைவ் அடிதடி
கட்டைப்பஞ்சாயத்து
கச்சத்தீவு
இப்படியாக எதைப் பற்றிக் கேட்டாலும் ஒரே பதில்..


"ஓ.. அப்படியா..! எனக்குத் தெரியாதே! ' என்று சொல்ல வேண்டும்.
அப்படிச் சொல்லும் போது உங்கள் குரலும் உங்கள் உடல்மொழியும்
மன்மோகன்சிங் போலவே இருந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
.
மனநிம்மதிக்கு இந்த எளியமுறையை நம் தமிழர்களும் கற்று
கற்றபின் அவர்போலவே நிற்கவும் தக என்று திருக்குறளுடன்
இணைத்து பயன்பெறுமாறு வேண்டுகிறேன்.

துணைநின்ற நூல்கள்:

*மன்மோகன்சிங் மனவளக்கலை
* body language of singh @ parliment - you tube ..
*அசத்தப்போவது யாரு? தமிழ்நாட்டு தேர்தல் கள ஆய்வு


.

Tuesday, April 5, 2011

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நன்றி



28 வருடங்கள் காத்திருந்து இறுதியாக கிடைத்த உலகக்கோப்பைக்காக
நான் நன்றி சொல்ல வரவில்லை. உங்களுக்கு கிடைத்திருக்கும் ஊடக
வெளிச்சம், பாராட்டு பரிசு/பணம் மழையாகக் கொட்டுகிறது. உங்களைப் போன்ற
சக விளையாட்டு வீரர்களான ஹாக்கி விளையாடு வீரர்களுக்கு பொருத்தமான
காலணி கூட கிடைப்பதில்லை. இன்னும் 25 வருடங்களுக்கு நீங்கள் இந்தக்
கோப்பையை முத்தமிட்ட கனவுகளைக் கண்டே ஒரு தலைமுறை வாழ்ந்துவிட
முடியும். இதைக் காட்டிக் காட்டியே விதம் விதமான விளம்பரங்களில்
உங்கள் அனைவரின் முகமும் வரப்போவதை நினைத்து இப்போதே எனக்குப்
பயமாக இருக்கிறது. உங்களுக்கு கிடைக்கும் பணத்தில் மற்ற விளையாட்டுகளை விளையாடும் வீரர்களுக்கு ஏதாவது செய்தால் என்ன? என்றெல்லாம் கிறுக்குத்தனமாக உங்களிடம் நான் கேட்கப்போவதில்லை.

பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட வரும்போதெல்லாம் எங்க ஊரு பெரிசு
பால்தாக்கரே சத்தம் போடுவது வாடிக்கை. எனக்கு அப்போதெல்லாம் கோபம்
வருவதும் உண்டு.
விளையாட்டை விளையாட்டா பாருங்கய்யா.. என்று அறிவுரை எல்லாம்
சொல்லி இருக்கேன்! இந்து முஸ்லீம் என்று ஒரு வட்டத்தை என் பார்வை
தாண்டியதில்லை. ஒரு முறை பாகிஸ்தான் அதிபர் இந்தியா வந்து விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது இந்திய எல்லையில் பாகிஸ்தான் படை ஊடுருவி தாக்க ஆரம்பித்தது எனக்கும் நினைவிருக்கிறது என்றாலும் அதற்கு பாகிஸ்தான்
கிரிக்கெட் வீரர்கள் என்ன செய்வார்கள் என்று நியாயம் பேசி இருக்கிறேன்.

இலங்கை அதிபர் மும்பை வருகிறார் என்றவுடனேயே டென்ஷன் அதிகமானது.
எதுவும் எங்களால் செய்ய முடியாது என்று தெரிந்திருந்தாலும் அந்த இயலாமை
இன்னும் கொஞ்சம் எங்கள் எண்ணத்தைக் கொடூரமாக்கியது.
இலங்கை வீரர்கள் வெற்றிப் பெற்று அந்த வெற்றிப்புன்னகையுடன்
ராஜபக்சே .. நினைத்துப் பார்க்கவே முடியவில்லை!
இதற்காகவாவது இந்தியா வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்று
நான் நினைத்தது நியாயமற்ற உணர்வாக இருக்கலாம், என்னிலிருந்த
கொடூர எண்ணமாக இருக்கலாம். நான் எந்த மகாத்மாகவும் என்னை
நினைத்துக் கொள்ளவோ ஏமாற்றிக்கொள்ளவோ விரும்பவில்லை.

இலங்கை கிரிக்கெட் வீரர்களே... என்னை மன்னித்துவிடுங்கள்.
இந்திய கிரிக்கெட் வீரர்களே... உங்களுக்கு நன்றி..
உங்கள் வெற்றி .. என்னை என் காயத்தை...
மயிலிறகாய்த் தடவிக் கொடுத்தது.
என்னால் செய்ய முடியாததை உங்கள் பந்தும் மட்டையும்
செய்ததற்காக மீண்டும் உங்களுக்கு நன்றி.

Tuesday, March 22, 2011

கூட்டணி



கிழவியின் இட்லிக்கடையில் நல்ல கூட்டம். எலெக்ஷன் பிரச்சாரத்திற்கு நடக்கும் எல்லா கட்சியின் கூட்டங்களும் ஊர்வலமும் கிழவியின் கடை விரித்திருக்கும் அம்மன் கோவில் மரத்தடியைத் தாண்டித்தான் போகவேண்டும். வருவோர் போவோருமாக வியாபாரம் அதிகமாக
இருந்தது. துணைக்கு பக்கத்து வீட்டு மரியம்மா பையன் சூசையை வைத்துக் கொண்டாள்.


காசு நல்ல புழங்கியது. இது கடன் சொல்லிட்டு சாப்பிடற உள்ளூர் கூட்டமில்லை.
காசு கொடுத்து சாப்பிடற வெளியூர் கூட்டம்.
இந்த வருடம் மகனின் திவசத்தை நல்ல படியா செய்யனும்னு கிழவி மனசுக்குள் நினைத்துக் கொண்டாள். கிழவியின் ஒரே மகன் இறந்து நாளை விடிந்தால் இரண்டு வருசம் ஆகப் போகிறது.இந்த மாதிரி எலக்ஷன் நேரத்தில்தான் தகராறில் அவன் வம்பாங் கொள்ளையா
போய்ட்டான்.
செத்தாலும் செத்தான்...நோய்பட்டு தூக்கிட்டுப்போக நாலு ஆள் இல்லாத
அனாதை மாதிரியா செத்தான். அவன் மகராசானா செத்தான். சும்மா சொல்லப்புடாது.
அன்னிக்கி கூட்டம்னா கூட்டம் அம்புட்டு கூட்டம். எம்மாம் பூ மாலை விழுந்திச்சி. பெரிய்ய பெரிய தலைவர் மாரெல்லாம் வந்தாங்க... நான் தலையில் அடிச்சி கூப்பாடு போட்டதைக்
கூட படம் பிடிச்சாங்க .பேப்பர்கார மகராசனெல்லாம் வந்து எம்மாம் படம் பிடிச்சாங்க தெரியுமா..
தலைவரு வந்திருந்தாரு.. நம்ம ஆளு மாதிரியே இல்ல வெள்ளைக்காரன் மாதிரி இருந்தாரு.
அவரு கூட எனக்கு என்னவோ நிறைய பணம் தரப்போறதா சொன்னாராம்.
சூசைப் பயக் கூட சொன்னான். ஆனா இரண்டு வருஷம் ஆகப் போறது. இன்னும் பணம் தான் கைக்கு வந்த பாடில்லை. பஞ்சாயத்து போர்டுக்கு அலைஞ்சதுதான் மிச்சம்..ம்.

கடைவியாபாரம் எல்லாம் முடிஞ்சது. கிழவி கூட்டமா போற ஊர்வலத்தைப்
பார்த்தாள்.


"ஏலே சூசை.. நேற்றுதானே பெரிய கூட்டம் வந்திச்சி..இன்னிக்கும் என்ன அதே கூட்டமா?

"இல்ல பாட்டி..இது வேற கட்சி..நம்ம அண்ணன் இருந்திச்சி பாரு அந்த கட்சி கூட்டம்.
நம்ம அண்ணன் செத்த அன்னிக்கி வந்தாரு பாரு சிவப்பா ஒரு தலைவரு.. அவரு இன்னிக்கி வாராராம்."

"யாரு அந்த மவராசனா..?நல்லாயிருக்கட்டும்.
ஏலே சூசை அந்த மகாராசனைப் பார்த்து நமக்கு இன்னும் பணம் வரலைன்னு சொல்வோம் வர்றியா.."

"யே கிழவி சும்மா இரு. அவருக்கு அதெல்லாம் எங்கே நினவில இருக்கப் போவுது"

"போலே அவரு என்ன நம்மூர்க்காரப் பயலுக மாதிரியா? சொன்னா சொன்ன வாக்கு தவறு மாட்டர்லே"

ஊர்வலம் துவங்கியது. கூட்டம் ஜெ ஜேனு.
கிழவி திறந்த வேனில் கை அசைத்தபடியே வந்த தலைவரைப் பார்த்துவிட்டாள். எவ்வளவு பெரிய மனுஷன்.. நம்ம நிற்கிறதைப் பாத்துப்பிட்டு
தான் கையை அசைக்கிறாரு.. கிழவியும் பதிலுக்கு கை அசைத்தாள். அவள் கண்களில் கண்ணீர் சேலை தலைப்பை எடுத்து கண்கள் ரண்டையும் துடைத்து கொண்டாள். அவர் நின்று பயணம் செய்த வேன் அவளருகில் வந்தது. தலைவரு பக்கத்தில் நிற்பது யார்?
வணக்கம் போட்ட படி நெற்றியில் சந்தணப்பொட்டுடன் நிற்பது அவந்தானே..எம்மவன் காசியை
ஆள்வைத்து அடித்துக் கொன்ற அந்த பாவிப்பயல் தானே...கிழவியின் பெற்றவயிறு பற்றி எரிந்தது.


"ஏலே சூசை..தலைவர் கிட்ட நிக்கறது அந்த கொலைகாரப் பேய்தானே.."

"ஆத்தா, கத்தாதே.. சும்மா இரு. இப்போ அவுங்க ரண்டு பேரும் கூட்டாளிங்க"

கிழவி ஆவேசம் வந்தது போல் ஓடினாள்.
"அடப் பாவிகளா.. நீங்க நல்லா இருப்பீங்களா.உங்க பிள்ளை குட்டிக நல்லா
இருக்குமா?"

இறந்து போன மகன் காசியின் முகம் கண்முன்னால் வந்து நின்றது. ரோட்டோரத்தில் தார் ரோடு போடுவதற்காக குவிந்து கிடந்த கற்களை எடுத்து ஊர்வலத்தை நோக்கி வீசினாள்.
வெறிப்பிடித்தவள் போல கூட்டத்தை தள்ளிக் கொண்டு ஓடினாள். மண்ணை எடுத்து கூட்டத்தில் தூவினாள்.
ஊர்வலம் சிதறியது. போலீசார் ஓடிவந்து கிழவியைச் சுற்றி வளையம் அமைத்தார்கள். கிழவி நடுரோட்டில் உட்கார்ந்து கொண்டு 'ஓ" வென்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

ஏதோ பெரிய்ய மனித வெடிகுண்டு வெடிக்கப் போகிறது என்று பயந்த போலீசார் கிழவியைப் பார்த்தவுடன் எரிச்சலுடன் ஒருவர் மாற்றி ஒருவர் லத்தியால் விளாசு விளாசுனு விளாசித்தள்ளினார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வளவோ கவனமாகச் செய்திருந்தும்
இந்தக் கிழவி எங்கிருந்தோ வந்து இப்படி எல்லாவற்றிலும் மண்ணை அள்ளி போட்டு விட்டாளே..நாளைக்கு டி.ஜி யி¢லிருந்து சி.எம். வரை கேட்கப்போகிற கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்ற டென்ஷனில் கிழவியைப் பின்னி எடுத்து விட்டார்கள்.

அவளுக்கு அவர்கள் கொடுத்த எந்த அடியும் வலிக்கவில்லை. அவள் கண்கள்
ஆகாசத்தைப் பார்த்து என்னவோ தேடிக்கொண்டிருந்தது.

மறுநாள் பத்திரிகைகளில் விதவிதமான செய்திகள்.
"தலைவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
தலைவரைக் கொலை செய்ய சதியா?
இது எதிர்கட்சிகளின் சதிச்செயல் .."

கிழவி என்ன ஆனாளோ தெரியவில்லை.

(2005 ல் வெளிவந்த என் சிறுகதை தொகுப்பு மின்சாரவண்டிகள் நூலில்
இடம்பெற்றிருக்கும் கதை. ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் கூட்டணி
கூத்து நடக்கும் போதெல்லாம் இந்தக் கதையில் வரும் அந்த மூதாட்டியின்
அழுகுரல் காதில் விழுகிறது...)




Thursday, March 3, 2011

எங்கள் அருணாவும் கருணைக்கொலை மனுவும்





அருணாவை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அவள் செய்தக் குற்றம் என்ன தெரியுமா?
பாலூட்டியாகப் பிறந்தது மட்டும்தான்!
அவள் இருமுலையும் அல்குலும் தான் அவள் சுமந்தக் குற்றம்.
அதற்காக அவள் அனுபவிக்கும் தண்டனை...
நம்மால் கற்பனைச் செய்துப் பார்க்க முடியாத தண்டனை
38 ஆண்டுகள் KEM மருத்துவமனையில் படுக்கையில் இருக்கிறாள்..
கோமாவில் இருக்கிறாளா.. இல்லை செடியிலிருந்து பறிக்கப்பட்ட
காய்கறி போல ஒரு சதைப் பிண்டமாக (permanent vegetative state)
இருக்கிறாளா.. மருத்துவர்களும் பத்திரிகைகளும் இப்போது அதைப்பற்றி
பல்வேறு கருத்துகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் என்னைப் பொருத்தவரையில்..
அவள் கொலை செய்யப்பட்டு 38 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.
அவளை இந்த நிலைக்குள்ளாக்கிய சோகன்லால் வால்மிகி மீது
எங்கள் சட்டம் ரொம்பவும் தான் கருணைக் காட்டி இருக்கிறது,
வல்லாங்கு (Rape) செய்ததாக அவன் குற்றம் சாட்டப்படவில்லை.
அவன் மீது வெறும் திருட்டுக் குற்றம் மட்டுமே.
அதிலிருந்தும் அவன் வெளிவந்தாகிவிட்டது. தற்போது டில்லி மருத்துவமனையில்
அவன் வார்ட் பாயாக மீண்டும் வேலை. ஒருவேளை இந்த 38 வருடத்தில்
அவன் ரிடையராகி சொந்த ஊருக்குப்போய் நிம்மதியாக பான்பாராக் சாப்பிட்டுக்
கொண்டு இருக்கலாம், யாருக்குத் தெரியும்.

அருணாவுக்கு கட்டாயமாக கொடுக்கப்படும் மருந்து, உணவுகளை நிறுத்தி
அவளுக்கு கருணைக் காட்ட வேண்டும், அதாவது கருணைக்கொலைக்கு
நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி இருக்கிறார் அருணாவைப் பற்றிய
அனைத்துச் செய்திகளையும் ஒரு புத்தகமாக எழுதிய பிங்கி விரானி.
நீதிமன்ற உத்தரவு படி அருணாவின் மூளையை செகேனிங் செய்து
பார்த்திருக்கிறார்கள். மூளை சுருங்கிப் போய்விட்டதாகத் தெரிகிறது.


அருணா கோமா நிலையில் இல்லை என்கிறார் KEM டாக்டர் சஞ்சய் ஓக்.
அவள் சங்கீதம் கேட்பதையும் அண்மையில் மீன் சாப்பிடக் கொடுத்தப்ப்போது
அவள் சந்தோஷமாக சாப்பிட்டதையும் அதனால் அவளுக்கு மீன் உணவு
விருப்பமானது என்பதை அறிந்துக்கொண்டதாகவும் கூறுகிறார்.
அழுவதும் சில நேரங்களில் சத்தமிடுவதும் கை கால்களை அசைப்பதும்
அவள் அறைக்குள் வந்தவர்கள் யார் என்பதை அறியவில்லை என்றாலும்
யாரோ வந்திருக்கிறார்கள் என்பதை அவள் அறிந்துக் கொள்கிறாள்
என்றும் டாக்டர் சஞ்சய் ஓக் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த 38 ஆண்டுகள் படுக்கையில் இருக்கும் அருணாவை
அங்கு வேலைப்பார்க்கும் எவருமே தொல்லையாக நினைக்கவில்லை
என்றும் படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு ஏற்படும் புண்கள்
அவளுக்கு இல்லை என்றும் சொல்கிறார் டாக்டர் ஓக்.
"எங்களுக்கு அவள் உயிருடன் இருந்தாக வேண்டும், எங்களைப் பொருத்தவரையில்
அவள் மற்றவர்களைப் போல உயிருடன் இருப்பவள்தான்
We want us alive and she is very much a living person for us,"
என்பதுதான் இன்றும் டாக்டர் சஞ்சய் ஓக்கின் கருத்து.

மருத்துவப்புத்தகங்கள் permanent vegetative state நிலையில் இருக்கும்
நோயாளிகள் கண்களை அசைப்பது அழுவதும் சிரிப்பதும் உணர்ச்சிகளின்
வெளிப்பாட்டினாலோ அல்லது புறக்காரணிகளின் தூண்டுதலாலோ அல்ல
என்று சொல்கிறது.அதனால் தான் KEM மருத்துவமனை நரம்பியல்
அறுவைச்சிகிச்சை டாட்கர் சுனில் பாண்ட்யா அருணாவில் நிலையை
permanent vegetative state என்ற கருத்துடன் ஒத்துப்போகிறார்.

எல்லாவற்றுக்கும் அமெரிக்காவை உதாரணம் காட்டும் நம்மவர்கள் ஐந்து
ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க உச்சநீதிமன்றம் 15 ஆண்டுகள்
PVS நிலையிலிருந்த டெர்ரிசச்வோ (Terri Schiavo) என்பவருக்கு
உணவு கொடுப்பதை நிறுத்த உத்தரவிட்டதன் மூலம் கருணைக்கொலைக்கு
ஆதரவளித்ததைக் காரணம் காட்டுகிறார்கள்.ஆனால்
19 ஆண்டுகள் கோமா நிலையிலிருந்து மீண்டு வந்தவர்கள் இருக்கிறார்கள்.
இந்தியச் சட்டம் 21, சட்டப்படி வாழ்வதற்கான உரிமையைப் பற்றி
பேசுகிறது, சட்டப்படி சாவதற்கான உரிமையை அல்ல.

அருணாவுக்கு நினைவு திரும்பக்கூடாது. அப்படி ஓர் அதிசயம் நடந்தால்
அதுதான் அவளுக்கு மிகப்பெரிய தண்டனையாக இருக்கும்.
உறவுகள் கைவிட்டதற்காக அழுவாளா?
உண்மைகள் தூக்கிலிடப்பட்டதற்காய்த் துடிப்பாளா?
காதல் செத்துப்போனதற்காய் கண்ணீர் வடிப்பாளா?
இல்லை.. இல்லை..
முகம் சுளிக்காமல் தன்னைத் தங்களில் ஒருத்தியாக இந்த 38 வருடங்கள்
காத்த அந்த மருத்துவமனை நர்சுகளிடம் நன்றி சொல்லி
மனிதநேயம் இன்னும் செத்துப்போகவில்லை, நன்றி .. என்று
தன் கடைசிமூச்சை அவர்கள் காலடியில் விடுவாளா?
அருணா என்ன செய்வாள்.. அவளால் என்னதான் செய்யமுடியும்?
62 வயது அருணாவுக்கு நினைவு திரும்பாமலேயே
இருக்கட்டும்.

(ref: TOI, 28/2/11& Mumbai mirror)


**

அவளைப் பற்றிய செய்தியை நான் உண்மையின் ஊர்வலங்கள் என்ற
தொடரில் திண்ணையில் எழுதியிருந்தேன். அதன் பின் என் வலைத்தளத்திலும்
சில வருடங்கள் கழித்து மறுவாசிப்புக்காக கொடுத்திருக்கிறேன்.
அருணாவைப் பற்றிய அந்தப் பக்கங்களை ...


http://puthiyamaadhavi.blogspot.com/2010/08/blog-post_05.html

Monday, February 21, 2011

இந்திய தமிழச்சியின் கண்ணீர்வாக்குமூலம்





அம்மா..
உன் கடைசிப்பயணத்தில்
என் கண்ணீர் வாக்குமூலம்.
என்னை மன்னித்துவிடு.
நான் விரும்பினாலும்
நான் விரும்பாவிட்டாலும்
என்மீது சுமத்தப்பட்டிருக்கும்
இந்தியன் என்ற அடையாளத்தினை
கிழித்து எறியும்
எந்த ஆயுதங்களும் இல்லாமல்
நிராயுதப்பாணியாக
களத்தில் நிற்கும்
என்னை..
அம்மா மன்னித்துவிடு.

கசாப்புக்கு கூட
உயர்நீதிமன்றம
உச்ச நீதிமன்றம்
கதவுகள் திறந்திருக்கின்றன
பலகோடியில் பராமரிப்பு செலவு
இத்தனையும் செய்து
இந்திய முகத்தைக்
காப்பாற்றத் தெரிந்த
எங்கள் நீதிதேவதைக்கு
அன்னையே..
சக்கரநாற்காலியில்
நீ சாய்ந்தக்கோலத்தில்
மருத்துவம் நாடி வந்தப்போது மட்டும்
கறுப்புத்துணியால்
கண்களைக் கட்டிய
கங்காணிகள்
எப்போதும் உலாவருகிறார்கள்
எங்கள் தோட்டத்தில்.

தோட்டம் எங்களுடையதாக இருந்தாலும்
நாங்கள் அதில் கூலிகளாக்கப்பட்டதை

அறியாமலேயே
கூட்டணி மேடையில்
கும்மாளம் போடுகிறோம்.
அம்மா.. அவர்களை மட்டுமல்ல
அவர்களையே மாறி மாறி
தலைவர்களாகக் கொண்டாடும்
எங்களையும்
மன்னித்துவிடு.
வீரர்கள் விதைக்கப்பட்ட
மண்ணில்
உன் கடைசிப்பயணம்

புறநானூறை வாழவைத்த
என் அகநானூறே
உன் பாதங்களைத் தொட்டு
வணங்கத்துடிக்கும்
கைகளைத் தொலைத்து நிற்கும்
................ உன் மகள்.......

Monday, February 14, 2011

எழுத்தாளர் அம்பையின் மறுவினை



அன்புள்ள மாதவி,


அன்றைய கூட்டம் பற்றிய பதிவுக்கு நன்றி. அதில் சில தவறுகள் உள்ளன. நிறைய நேரம்

பேசியதைப் பதிவு செய்யும்போது இப்படி நேரும்தான். அம்மா தன் நகைகளை

வங்கிக்குக் கொண்டு போய் அதை வைத்துக் கடன் வாங்கி நான் சென்னை போக ஏற்பாடு

செய்ததன் காரணம் என் தந்தை வேறு ஊரில் வேலையில் இருந்ததால்தான்.மேலும் நான்

சென்னை செல்வதை அவர் ஒப்புக்கொள்ளாததால்தான் அம்மா அப்படிச் செய்ய நேரிட்டது.

இதை நான் கூறினேன். ஒரு வேளை அது சரியாகப் பதிவாகாமல் போயிருக்கலாம். மேலும்

தாம்பரம் செல்லும் மின்வண்டியில் என் செவியில் அம்மா கூறியது, “லக்ஷ்மியின்

கனவெல்லாம் நனவாகப் போகிறது” என்றுதான். ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால்

இந்த நிகழ்ச்சியை நான் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். அது வேறு மாதிரி

பதிவாகக் கூடாது என்பதால்தான்.


குமுதம் பத்திரிகை பற்றிய தகவல் பல ஆண்டுகளுக்கு முன் அங்கு வேலை செய்த ஒருவர்

வியாபாரப் பத்திரிகைகள் செய்துகொள்ள வேண்டிய சமரசங்கள் பற்றிப் பேசியபோது

கூறியது. உங்கள் பதிவில் அது தற்சமயம் நடக்கும் நிகழ்வை நான் கூறுவது போல்

அமைந்திருக்கிறது.


இந்தத் தவறுகளைத் திருத்தினால் மகிழ்ச்சி அடைவேன்.


அன்றையக் கூட்டம் எனக்கும் திருப்தியை அளித்தது. அதற்காக நீங்களும் ராஜாவும்

எடுத்துக்கொண்ட சிரமத்துக்கு நன்றி.


அன்புடன்,


அம்பை.

_____________

நன்றி அம்பை. தவறுகளைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

அன்புடன்,

புதியமாதவி

Saturday, February 12, 2011

எழுத்தாளர் அம்பையுடன்




மும்பையில் அரசியல், இலக்கியம், கலை குறித்த மாற்று கருத்துகளை முன்வைக்கவும்
காத்திரமான கலந்துரையாடலுக்கும் கருத்துப்பரிமாற்றத்திற்குமான தளம் தேவை
என்பதனாலும் அந்த வெற்றிடத்தை நிரப்புவது இன்றைய சந்தைமயமான ஊடகச் சூழலில்
மிகவும் தேவை என்பதாலும் மும்பை தமிழ் போஸ்ட் வார இதழை நடத்திய அனுபவமிக்க
நண்பர் ராஜாவாயிஸ் அவர்கள் இந்த அமைப்பை டிசம்பர் 2010 முதல் நடத்திவருகிறார்.


மும்பை, சிந்தனையாளர் சங்கமத்தின் மூன்றாம் அமர்வில் எழுத்தாளர் அம்பை
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உடல், மொழி, ஊடக சந்தை என்ற
தலைப்பில் தன் கருத்துகளை முன்வைத்தார். பிப், 6ல் மாலை 6.30க்கு
மாதுங்கா லேபர் கேம்ப் பகுதியில் இருக்கும் பரவர்சங்கத்தில் இக்கூட்டம்
நடந்தது. தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்பினர்,
எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கலந்துக் கொண்டு கலந்துரையாடல்
ஆரோக்கியமாக நிகழ உறுதுணையாக இருந்தார்கள்.

எழுத்தாளர் அம்பையைப் பற்றிய ஓர் அறிமுகத்தை மிகவும் சுருக்கமாகக் கொடுத்தார்
எழுத்தாளர் புதியமாதவி. 1960களில் அம்பை எழுத வந்தக் காலத்தில் நம்மில் பலர்
பிறந்திருக்கவில்லை. சிலர் அப்போதுதான் அ- அம்மா என்று எழுத்துக்கூட்டி வாசிக்க
ஆரம்பித்திருந்தோம் என்று ஆரம்பித்த புதியமாதவி, இன்றைக்கும் அம்மையின் எழுத்துகளின்
சிகரத்தைத் தொட்டுவிட இன்னும் தொலைதூரம் எங்களுக்கெல்லாம் பயணிக்க வேண்டி
இருக்கிறது என்பதுதான் அம்பையின் சிறப்பு என்றார். 1970களில் அம்பை 'கசடதபற'
இதழில் எழுதி வெளிவந்த 'அம்மா ஒரு கொலை செய்தாள்' சிறுகதை 1978ல் மதுரை
பல்கலை கழகத்தில் முதுகலை படிக்கும் காலத்தில் எங்களால் மிகவும்
பேசப்பட்ட கதையும் விவாதிக்கப்பட்ட கதையுமாக இருந்ததை நினைவு கூர்ந்தார்.
'அழகே இல்லாததால் அவள் எனக்குத் தங்கையாகி விட்டாள்' என்ற புதுக்கவிதையும்
இக்கதையுடன் சம்ப்ந்தப்படுத்தி பேசப்பட்டதையும் தானும் தன் தோழியரும் இக்கதையின்
ஊடாக தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதையும் சொன்னார்.

வயதான தன் தாயை அருகிலிருந்து கவனித்தக் காலத்தில் எல்லாம் அம்பையின் வரிகள்
நினைவுக்கு வந்ததாகவும் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கை அனுபவமும் அந்தந்த பருவ
காலத்து நினைவுகளுடன் அம்பையின் கதைகளில் பதிவு செய்யப்பட்டிருப்பதையும்
சொன்னார். "ஒவ்வொரு பெண்ணும் இன்னொருத்தியின் கண் அடியில் உள்ள கருவட்டங்களைத் தடவ வேண்டும்" என்ற அம்பையின் வரிகளைச் சொன்ன புதியமாதவி , அம்பையின் கதைகளை வாசித்தப்பின் தோசையின் மீதிருந்த விருப்பம் காணாமல் போனதையும் 10 அல்லது இருபது வருடங்களுக்கு மேலாக எத்தனை இலட்சக்கணக்கான தோசைகளைப் பெண் செய்துக்கொண்டிருக்கிறாள் என்பதை உணர வைத்தவை அம்பையின் கதைகள் என்றும் அதன்பின் தோசை மீதிருந்த விருப்பம் காணாமல் போய்விட்டதை எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பதிவு செய்திருப்பதையும் எடுத்துக்காட்டி
அம்பையின் எழுத்துகளைத் தேடி வாசிக்கும்படி அனைவருக்கும் வேண்டுகோள் வைத்தார்.
இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி அமைப்பினரால் கலைஞர் பொற்கிழி விருது சிறுகதைகளுக்காக அம்பைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தகுதியானர்வர்களை அடையாளம் கண்டு விருது வழங்குவதன் மூலம் சில சமயங்களில் விருதுகளும் தங்களைக் கவுரவித்துக் கொள்கின்றன என்று சொல்லி அமர்ந்தார் புதியமாதவி.


'அம்மா ஒரு கொலை செய்தாள்' கதையைப் பற்றி பேசினார் புதியமாதவி, அந்தக் கதை இடம் பெற்ற தொகுப்பு 1976ல் வெளிவந்தது. கிணற்றில் போட்ட கல் மாதிரிதான், அத்தொகுப்பு குறித்த விமர்சனங்களும்.
என்று ஆரம்பித்த அம்பை தன் எழுத்துப்பயணம் குறித்தும் தெளிவாகவும் உறுதியாகவும் ஆற்றொழுக்கான நடையில் ஒவ்வொரு சொற்களையும் தேர்ந்தெடுத்து ஆழமாக தன் கருத்துகளை முன்வைத்தார்.
அவற்றில் சில:

"நான் சென்னை கிறிஸ்டின் காலேஜில் பட்டப்படிப்புக்காக வந்தப் போது என் வீட்டில்
அம்மாவின் கைவளையளை வைத்துதான் படிக்க அனுப்பும் பொருளாதர நிலை இருந்தது.
கட்டாயம் மேற்படிப்பு படித்தே ஆகவேண்டும் என்று என் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தேன். அதுவரை பாவாடை தாவணியில் இருந்த எனக்கு கல்லூரியில் படிக்கப்போவதால் வீட்டில் நான்கு புடவைகளும் ஒரு டிரங்க்பெட்டியும் வாங்கினார்கள். என்னை தாம்பரம் கிறிஸ்டின் காலேஜில் விட அம்மாவும் கூட வந்தாள். கல்லூரி வாசலில் என்னைத் தனியாக விட்டு பிரியும் போது அம்மாவின் குரல் என் காதுகளில் விழுந்தது. "லஷ்மி, என் கனவெல்லாம் நினவாகிவிட்டது'
இன்றும் அந்தக் குரல் .. என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதன்பின் என் புத்தகம் வெளிவந்தது, ஓருநாள் அவளிடம் அவள் சொன்ன வார்த்தைகளைச் சொன்னபோது என் அம்மா என்னிடம் கேட்டாள், 'அப்படியா சொன்னேன், நினைவில்லையே!" என்றாள் . வார்த்தைகளைச் சொன்னவர்கள் மறந்துவிடலாம், ஆனால் கேட்டவர்கள் மறப்பதில்லை".

"ஒரு வெளிநாட்டு எழுத்தாளரிடம் நீங்கள் எப்படிக் கதை எழுதுகிறீர்கள்? என்று கேட்டார்கள்.
அவர் சொன்னார் . 'என் ஜன்னலகளைத் திறந்து வைக்கிறேன், பறவைகளைப் போல கதைகள் உள்ளே நுழைகின்றன' என்றாராம். அவர் அப்படிச் சொன்னதை என்னிடமும் சொல்லி 'உங்களுக்கு எப்படி? ' என்று கேட்டார்கள். நான் சொன்னேன். அவருடைய பதில்,
ஜன்னல், பறவை என்பதெல்லாம் ரொம்பவும் கவித்துவமானதுதான். ஆனால் பெண்களுக்கு
அப்படி அமைவதில்லை என்றேன். மேலும் ஜன்னல் இருப்பதும் அதைத் திறக்கும் அதிகாரமும்
அப்படியே திறந்தாலும் அதில் பறவைகள் உள்நுழைய அனுமதிக்கும் அதிகாரமும்
ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டுமே!" என்றேன்.

"குமுதம் பத்திரிகை ஆபிஸில் காலையில் எல்லோரும் கூடுவார்கள். பகவத்கீதையிலிருந்து
ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு பேசி கலைந்தவுடன் அரைகுறை ஆடையில் இருக்கும் பெண்களின் புகைப்படத்தில் எந்தப் படத்தை எந்தப் பக்கத்தில் போடலாம் என்பதைக் குறித்து பகவத்கீதைப் பற்றிப் பேசியவரே செலக்ட் செய்வார். இங்கே அவர் பேசிய பகவத்கீதைக்கும் குமுதத்திற்கும் சம்ந்தமில்லாமல் போய்விடுகிறது. பத்திரிகை ஊடகத்தில் ஜனரஞ்சகமான பத்திரிகைகளில் சமரசம் செய்துக் கொள்ளாமல் எழுதுவது என்பது ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு பெரிய போராட்டமாகவே இருக்கிறது. சிறுபத்திரிகைகளின் பங்கு பாராட்டுதலுக்குரியது."

'பெண் எழுத்தாளர்கள் என்பதும் இன்றைக்கு எழுதிக்கொண்டிருக்கும் பெண் எழுத்தாளர்களில் தலைசிறந்தவர்,பெண் எழுத்தாளர்களின் ஒருவர் என்பதுமான அறிமுகங்கள், அடையாளங்கள் ஏன்? எவரையாவது ஆண் எழுத்தாளர் என்றோ ஆண் எழுத்தாளர்களில் ஒருவர் என்றோ எங்காவது எவராவது அடையாளப்படுத்தி இருக்கிறார்களா?ஏன்?
"வீட்டின் மூலையில் ஒரு சமையலறை' தொகுப்பைப் பற்றிய அறிமுகத்தில் நான்கு கதைகள் பெண்களைக் குறித்தவை. மீதிக்கதைகள் சோதனைக் கதைகள் என்றார் நண்பர் ஒருவர். ஆமாம் யாருக்குச் சோதனையாக இருக்கிறது அக்கதைகள் என்று நானே அவரிடம் கேட்டேன். ஆண்களைப் பற்றி ஆண்கள் எழுதினாலும் பெண்கள் எழுதினாலும் அவை எல்லாம் வாழ்க்கையைப் பற்றியதாகப் பார்க்கப்படுகிறது.
இச்சமூகத்தில் ஆணே சமுகத்தின் ஒட்டுமொத்த அடையாளமாகப் பார்க்கப்
படுகிறான். ஆண் செய்வதும் ஆண் எழுதுவதும் சமூகத்தின் பொதுமைப் பண்புகளாக அடையாளப்படுத்தப் படுகின்றன."

"பட்டுணர்வு எந்தளவுக்கு மொழியை நெருங்கிறதோ அதற்கேற்ப மொழி மாற்றம் அடைகிறது. நான் அந்திமாலை நாவல் எழுதும் போதிருந்த என் மொழி இன்று என்னிடம் இல்லை. அந்த நாவலில் பேசப்பட்டிருக்கும் ஆண்-பெண் உறவில் உடல் இச்சை தவிர்க்கப்பட்டிருக்கும். உடல் உள்ளம் என்று இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஆண் பெண் உறவில் உடல் இரண்டாம் நிலைக்கு வந்து உள்ளமே பிரதானமாக்கப்பட்டிருக்கும். அந்த நாவலை எழுதிய காலக்கட்டத்தில் எனக்கு காதலைப் பற்றியும் தெரிந்திருக்கவில்லை, ஆண்களைப் பற்றியும் தெரிந்திருக்கவில்லை. உடலைப் பற்றியும் தெரிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். பிற்காலத்தில் என் கதைகளில் என் மொழி மாற்றமடைந்திருப்பதை கணையாழியின் ஆசிரியர்தான் எனக்கு முதன் முதலில் சுட்டிக் காட்டினார்."

"ஆனந்தவிகடனில் ஒரு கதையாசிரியர் முதிர்கன்னியை ஊசிப்போன பண்டம் என்று எழுதி இருந்தார். ஒரு பெண்ணை ஊசிப்போன பண்டம் என்று சொல்கிற பண்பாடு நம் தமிழில்தான் இருக்கிறது. வேறு எங்கும் நான் கேள்விப்படவில்லை."

கலந்துரையாடலின் போது:

தமிழ் லெமுரியா மாத இதழின் ஆசிரியர் திரு.சு. குமணராசன் : நீங்கள் பேசிய ஆண்-பெண் உறவில் பெண்ணை இரண்டாம் நிலைக்குத் தள்ளியதில் பெரும்பங்கு இந்துமதத்திற்குத் தான் இருக்கிறது.
உங்கள் கருத்து என்ன?

அம்பை: நான் உங்கள் கருத்தை முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்கிறேன். இந்து மதக் கடவுள் கதைகள் அனைத்திலும் பெண் இரண்டாம் நிலையில் இருப்பவள். அதாவது சார்ந்திருப்பவள்.
நான் கலந்துக் கொண்ட ஒரு கருத்தரங்கில் symbol and Civilization என்ற தலைப்பில் பேசியவர் இந்துமதக் கடவுளின் புகைப்படங்களை ஆதாரமாக்கிப் பேசினார். விஷ்ணுவின் காலடியில் உட்கார்ந்து லட்சுமி கால்களை அமுக்கி தடவி விட்டுக் கொண்டிருப்பாள். அதற்கு அவர் சொன்னக் காரணம் லட்சுமி அப்படி தடவி விடுவதனால்தான் விஷ்ணுவுக்கு காக்கும் சக்தி நிலைத்திருக்கிறது, லட்சுமியை அவர் சக்தியின் ஊக்கமாக இருக்கிறாள் என்றார். நான் கேட்கிறேன்,காலமெல்லாம் விஷ்ணுவின் காலைத் தடவிக் கொண்டிருக்கும் லட்சுமி எப்போதாவது தன் காலையும் தொட்டு தடவிக் கொண்டால் நன்றாக இருக்குமே, அவளுக்கும் ஊக்கசக்தி கிடைக்குமே என்று.
இந்துமதம் ஆண்-பெண் சம உரிமையை மட்டும் எதிர்க்கவில்லை. அதுதான் இந்தியாவின்
சாதியத்தையும் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. (சபாஷ் அம்பை! கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது)

*பெண் இயற்கையாகவே பலகீனமான்வள்,
*பெண்ணுக்கு நாங்கள் உரிமைகளைக் கொடுத்திருக்கிறோம்,
*ஆண் செய்வதை எல்லாம் பெண் செய்ய முடியாது
*பெண்கள் இப்படி பேச ஆரம்பித்தப் பிறகுதான் குடும்ப அமைப்பு உடைய ஆரம்பித்துவிட்டது.
மணமுறிவுகள் அதிகமாகிவிட்டன, குடும்பத்தைக் கவனிக்கப் பிறந்தவள் பெண்...
இப்படியாகப் பல்வேறு கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக ..

அவர்கள் கேள்விகள் அனைத்துக்கும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டே வந்தார் அம்பை.

பெண்ணுக்கு உரிமைகளைக் கொடுத்திருப்பதாகச் சொல்கின்றீர்களே, நீங்கள் கொடுப்பதற்கு
உரிமைகள் என்ன கடையில் வாங்கிக்கொடுக்கும் பொருளா? யாரும் உரிமைகளைக் கொடுக்க
வேண்டியதில்லை. பெண் அவளுக்கான உரிமைகளை அவளே எடுத்துக் கொள்கிறாள்.

ஆண் குடித்துவிட்டு வந்தால் உடையாதக் குடும்பம், ஆண் பரத்தையிடம் போய்விட்டு வந்தால் உடையாதக் குடும்பம், பெண்ணுக்கு சுதந்திரம் கொடுத்தால்/ பெண்ணுக்கு சுதந்திரம் கிடைத்தால் மட்டும் டொப்புனு உடைந்துவிடுமா என்ன? உடைவதற்கு அது என்ன மண்பாண்டமா?

விழித்தெழு இயக்கத்தின் ஸ்ரீதர் ஈழம் குறித்தும் அங்குள்ள பெண்கள் நிலைக் குறித்தும் கேட்ட
கேள்விக்குப் பதில் சொல்லும் போது லீனா மணிமேகலையின் செங்கடல்
படத்திற்கு இந்திய அரசு அனுமதி மறுத்திருப்பதை வன்மையாகக் கண்டித்தார். செங்கடல்
படத்தை நான் பார்த்தேன். சிங்கள இலங்கை அரசுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்கிறார்.,லீனா.
அது எப்படி இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்பது தான் புரியவில்லை.

அண்மையில் காலச்சுவட்டில் அருந்ததிராய் குறித்து எழுதியிருக்கும் கட்டுரைக் குறித்த
கேள்வியை எழுப்பினார் எழுத்தாளர் தமிழ்நேசன். 1992 , பாபர் மசூதி இடிப்பு, அதன் பின்
தொடர்ந்து இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகள், அதிலும் குறிப்பாக மிகவும் அதிகமாக்ப்
பாதிக்கப்பட்ட மும்பை வாழ் மக்கள்.. இந்த வரலாறு எதையும் அந்தக் காலக்கட்டத்தில்
குழந்தைகளாக இருந்தவர்களும் சரி, அதன் பின் பிறந்து வளர்ந்தவர்களும் சரி,
சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இந்தப் பிரச்சனைக்கு எதற்காக இத்தனை
ஆர்ப்பாட்டம், போலீஸ் பாதுகாப்பு, பதட்டம்..? அந்த இடத்தில் கழிவறைக் கட்டுங்களேன்
என்று அவர்களால் சொல்ல முடிகிறது ( இதுவும் நல்ல ஐடியா தான் ! அப்புறம் கழிவறைகளுக்கு யார் பெயரை வைப்பது என்று பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது!!!). இக்கட்டுரை உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்டது என்றும் தெளிவுக்காக மீண்டும் வாசிக்கும்படியும் அம்பை கேட்டுக்கொண்டார்.

அம்பை மும்பையில் தமிழர்களின் அமைப்பு சார்ந்த எந்த பொது நிகழ்விலும் இதுவரைக்
கலந்துக் கொண்டதில்லை. இங்கிருக்கும் தமிழ்ச்சங்கங்கள் நடத்தும் பட்டிமன்றங்கள் அம்பைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதை அவரே ஒப்புக்கொண்டார். அந்த வகையில் இந்நிகழ்வு மிகவும் குறிப்பிடத்தக்கது என்பதுடன் அம்பை மனம் விட்டு பேசியதும் மாற்றுக்கருத்துகளை அமைதியாக கேட்டு ஆணித்தரமாக தன் விளக்கங்களை வைத்ததும் கூட்டத்தில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் ஓர் இனிய அனுபவமாக அமைந்தது. இதற்குத் தளம் அமைத்துக் கொடுத்த சிந்தனையாளர் சங்கம அமைப்பின் ராஜாவாயிஸ், உதவியாக இருந்த கராத்தே முருகன், முகவைத் திருநாதன் அனைவருக்கும் நன்றி.

Wednesday, January 26, 2011

அம்மாவின் காதலன்(ர்)



காதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன்
என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா? இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்
என்று ர் விகுதிப் போட்டு மரியாதையைத் தெரிவிக்கலாமா என்று இரண்டு நாட்கள்
யோசித்துப் பார்த்துவிட்டு வாசிப்பவர்கள் சாய்ஸ்க்கு ஏற்றபடி இருக்கட்டும் என்று
ஒருவழியாக முடிவுக்கு வருவதற்குள் ரொம்பவும் தான் நான் அவஸ்தைப் பட்டுவிட்டேன்.

அண்ணனின் காதலி பற்றி நிறைய எழுதலாம். தம்பிகளின் காதலிகள் குறித்தும்
எழுதுவதற்கு கைவசம் நிறைய உண்மை நிகழ்வுகளே இருக்கின்றன. தாத்தாவின்
காதலியர் குறித்து கி.ராவின் ரேஞ்சுக்கு எழுதுவதற்கு விஷயங்கள் உண்டு.
அதிலும் என்னுடைய தாத்தாக்கள் கொழும்பு, பர்மா, கராச்சி என்று சுற்றி
அலைந்திருக்கிறார்கள். அடா பொழைப்புத்தேடித் தாங்க!
போகிற இடத்தில் எல்லாம் அவரவர் தகுதிக்கு ஏற்ப காதலியர் கிடைத்திருப்பார்கள்.
எப்படியோ அந்த வகையில் இந்தப் பிரதேசங்களில் எல்லாம் எனக்கு மரபணு சார்ந்த
ரத்த உறவுகள் இருக்கிறார்களாக்கும். இதில் எனக்குப் பெருமைதான்.
அக்காவின் காதலர் குறித்து தெரிந்தாலும் எழுதினால் குழப்பம் வரும்.
அதனால் அவர்களைப் பற்றி நாம் எழுதாமல் இருப்பதே உத்தமம்.

ஆனால் இந்தக் காதலர் கதைகளில் எல்லாம் இல்லாத ஒரு நெகிழ்வும்
என்னவென்று சொல்ல முடியாத ஓர் உணர்வும் அம்மாவின் காதல் கதையை
எழுதும் போது மட்டும் ஏன் ஏற்படுகிறது?
அம்மாவுக்கும் காதல் இருந்திருக்கும் என்பதும் அம்மாவும் அப்பாவைத் திருமணம்
செய்வதற்கு முன் யாரையாவது காதலித்திருக்க வாய்ப்பிருக்கிறது என்பதும்
ஒத்துக் கொள்ளக்கூடியது தான் என்றாலும் மனசு இந்தச் செய்தியைக் கேட்டவுடன்
திடுக்கிட்டுத் தான் போனது.
அம்மானா இப்படித்தான் இருக்கனும்னு யாரோ என் மனசில் மந்திரிச்சி போட்டிருக்கிறார்கள்.
அதிலிருந்து மாறாக இருக்கும் எதுவும் எனக்கு என்
அம்மாவைப் பற்றியதாக இருப்பது முதலில் அதிர்ச்சியாகவும் அதன் பின்
சங்கடமாகவும் இருக்கிறது.

சாதாரணமாக வீட்டில் நடந்த அம்மா அப்பா சண்டைகளுக்கும் அம்மாவின் காதலுக்கும்
எதாவது தொடர்பு இருந்திருக்குமோ என்று தேவையிலலாமல் ஃப்லஷ் பேக்
செய்து அந்த உத்தியும் கைகொடுக்காமல் கதையை நடுவில் நிறுத்திவிட்டு
நிகழ்காலத்தில் மவுனமாக கரைந்து போகிறது வாழ்க்கை.

ஆரம்பத்தில் அம்மா மீது வெறுப்பு வந்தது உண்மைதான். அம்மா அப்பாவைத்
திருமணம் செய்வதற்கு முன் வேறு ஒருவரைக் காதலித்திருந்தாள் என்ற
உண்மை அம்மாவின் கற்புக்கு ஏற்பட்ட இழுக்கு என்று பழைய காலத்து
ப்ளாக் அண்ட் வொய்ட் சினிமா காதல் ரேஞ்சில் யோசித்தேனோ என்னவோ.
ஆனால் அந்தக் கோபம் வெகு சீக்கிரத்தில் பரிதாபமாக மாறிப்போனது.
அம்மாவைப் பற்றி இந்தச் செய்தியைச் சொன்னது அம்மாவின் சித்தப்பா
மனைவி. அவளுக்கு எப்போதுமே அம்மாவையும் அம்மாவின் தங்கைகளையும்
பற்றி இப்படி எதாவது கதைகள் கட்டி விடுவதும் அதைச் சந்தர்ப்பம் கிடைக்கும்
போதெல்லாம் யாரிடமாவது சொல்வதும் வழக்கம் என்று அம்மாவின் கடைசித் தங்கை
அதாவது எங்கள் சின்ன சித்தி சொன்னாள். அவள் சொன்னால் சரியாகத் தான்
இருக்கும். சித்தி இதைச் சொன்னதும் அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டேன்.
ஏனோ அழுகை அழுகையா வந்தது. சித்தி 'என்னடி இது, இதுக்குப் போயி
மனசைக் குழுப்பிட்டிருந்தியானு' சொல்லிட்டு பாசத்துடன் முதுகில் தடவிக்
கொடுத்தாள்.
'கட்டையிலே போறவா.. சுடுகாடு போறவரைக்கும் அவப் புத்தி அவளை விட்டுப்
போகாது' என்று தன் சித்தப்பன் பொண்டாட்டியை வாய்க்கு வந்தப் படி
திட்டித் தீர்த்தாள். சித்தி எங்க அம்மாக்கூடப் பொறந்தவர்களிலேயே கொஞ்சம்
அதிகம் படித்தவள். அந்தக் காலத்திலேயே எல்.ஐ.சியில் வேலைப் பார்த்தவள்.
அவள் இந்த ரேஞ்சில் கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனைச் செய்ததை
நான் அன்றுதான் பார்த்திருக்கிறேன்.
அப்போதைக்குச் சித்தியின் வார்த்தைகள் ஆறுதலாக இருந்தது.
அம்மாவைப் பற்றிய இந்தச் செய்தியை நான் யாரிடமும் சொல்லவும்
விரும்பவில்லை.

ஒருநாள் மாமியாருக்கும் நாத்தனாருக்கும் வாய்ச்சண்டை.
சண்டைக்கான காரணம் என்னவென்று பார்த்தால்
'நீதானே உன் பிறந்த வூட்டு சொந்தம் விட்டுப் போயிடக் கூடாதுனு இந்த
கரிகெட்ட மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுத்த..
என்னைக் கீழுர்லே கேட்டாவா,
நீ என்ன சொன்னே
கீழுர்க்காரப் பயலுவ அந்தக் காலத்திலே நம்ம தாத்தாக்கிட்டே கைநீட்டி
நின்னவுனுக.. இப்போ என்னவோ நாலு எழுத்துப் படிச்சிட்டோம்னு
நாலு காசு வந்தவுடனே நம்ம வாசலுக்கு வந்து பொண்ணு கேட்க
வந்துட்டானுவ.. அடி செருப்பாலேன...'

'ஆமாம் அந்தச் சாதிக்கெட்டப் பயலுவளுக்கு உன்னைக் கெட்டிக் கொடுத்திருக்கனும்..
அப்போ தெரிஞ்சிருக்கும்..'

'உன்னோட இந்தப் பேச்சும் திமிரும் தான் என் குடியிலே மண்ணை அள்ளிப்
போட்டிச்சி.. என்னைக் கேட்டுவந்தவக இன்னைக்கு மாடிப் போட்டு வீடு கட்டி
இன்னிக்கு வரைக்கும் துபாயிலா இருக்காம். பாத்துக்கா.
நீ கட்டிவச்ச மாப்பிள்ளை மாதிரி ஊர் மேஞ்சிட்டு இருக்கலே'

'ஏ தாயி.. என்ன பேச்சு இது.. உன் பிள்ளை சமஞ்சப் பொறவும்
அம்மைக்கிட்ட வந்து அவனுக்குக் கட்டிக் கொடுத்த என்ன
இவனுக்குக் கட்டிக் கொடுத்த என்னனு பேசிக்கிட்டு'
பக்கத்துவீட்டு வள்ளியம்மைப் பாட்டி அதட்டினாள்.

'நீ சும்மா கிடக்க மாட்டே கெளவி.. அந்தக் காலத்திலே மலையாளத்துக்கு
பொண்ணுக் கெட்டிக் கொடுக்காதே, மலையாளத்துக் காரனுவ மாயமந்திரம்
தெரிஞ்சவனுகனு .. தோவாளை மாப்பிள்ளைக் கேட்டு வந்தப்போ
எங்க அம்மைக்குச் சொல்லிக் கொடுத்து கெடுத்தவ நீதானே.
எனக்கு வர்ற வெளத்துலே உன்னைப் பொறவு ஏதாவது சொல்லிப்பிடுவேன்.
பேசாமா உன் சூத்தைப் பொத்திக்கிட்டுப் போ.."
மாமியார் சாகிற வரை நாத்தனார் இதே கதையைப் பல்வேறு வசனங்களில்
சொல்லிக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன்.
ஆரம்பத்தில் இவர்கள் இருவரின் சண்டையும் எனக்கு கலக்கல் காமெடி மாதிரி
இருக்கும். ஆனால் காலம் செல்ல செல்ல நாத்தனாரின் புலம்பல் பயம்
கொடுத்தது.

என் அம்மா இப்படி எல்லாம் கிடையாது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை
வரும் போதெல்லாம் அம்மாவின் சத்தம் கேட்டதே கிடையாது. அப்பாதான்
வாயாலும் கையாலும் கொடுப்பார்., பிறகு அவர் ஓய்ந்துப் போய் நிறுத்திக்
கொள்வார். அம்மா அப்பா சொல்வதற்கெல்லாம் எதிர்த்து பேசி இருந்தால்
ஒருவேளை அப்பா அம்மாவை இவ்வளவு அடித்து துன்புறுத்தி இருக்க மாட்டாரோ
அப்பா அடிக்க அடிக்க கண்ணீர் சிந்தாமல் ஒரு சத்தம் வெளியில் காட்டாமல்
அப்படியே மனசுக்குள் போட்டு அரைத்து மென்று துப்பிக் கொண்டிருந்த அவள்
குணம் தான் அப்பாவுக்கு கோபத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.
அம்மா ரொம்பவும் அழுத்தமானவளாக இருந்திருக்கிறாள் என்று இப்போது
நினைக்கத் தோன்றுகிறது.

உறவினர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று எத்தனை எத்தனையோ
மனிதர்களின் காதலைப் பற்றி அறிந்ததெல்லாம் அந்தந்த நேரத்தில் பயணத்தில் சந்தித்து
கைகுலுக்கி மறந்துவிடும் மனசு போல இருந்தது ஆனால் அம்மாதான் மறக்க வேண்டும்
என்று நினைத்தாலும் அடிக்கடி நினைவில் வந்து தொந்தரவு செய்து கொண்டிருந்தாள்.

அம்மா காதலித்தது யாரை? அவர் இப்போது உயிருடன் இருக்கிறாரா இல்லையா?
எந்த ஊரில் இருக்க கூடும்? யாரைக் கேட்டால் தெரிய வரும் என்று மனசு தவித்தது.
அம்மா உயிருடன் இருக்கும்போதே தெரிந்திருந்தால் அம்மாவிடமே கேட்டிருக்கலாமோ?
அப்படி அம்மாவிடம் கேட்டிருக்க முடியுமா? கேட்டிருந்தால் அம்மா என்ன சொல்லி இருப்பாள்?
வழக்கம் போல மவுனமாக இருந்திருப்பாளா? இல்லை, போடி, உன் வேலையைப் பாத்துக்கிட்டு
என்று பொய்க்கோபம் காட்டி சமாளித்திருப்பாளா?
என்னுடைய அம்மாவைப் பற்றி எனக்கே தீர்மானமாக எதுவும் சொல்ல முடியவில்லை.
அப்படி இருக்கும் போது மற்றவர்கள் என்ன சொல்லிவிடுவார்கள்?

வள்ளி முருகனைக் காதலித்தாளா ஆனைமுகனைக் காதலித்தாளா..
இது என்னடா புதுக்கதை என்று நினைக்கிறீர்களா?
புதுக்கதை எல்லாம் ஒன்றுமில்லை.. வள்ளி காட்டில் பிறந்து வளர்ந்தப் பெண்.
அவள் ஒன்றும் ஆனையைக் கண்டு பயந்து அலறி அடித்து முருகன்
பிடியில் விழுந்திருக்க மாட்டாள்.. அவள் ஆனையை நன்கு அறிந்தவள்.
பிறகு வேறு என்னவாக இருந்திருக்க முடியும்?
ஆனையுடன் பிறந்து வளர்ந்தவள் ஆனைமுகனைத் தான் காதலித்திருக்க
வேண்டும். ஆனைமுகன் ஆனை வடிவில் வந்து அவளைத் துரத்துகிறான்.
அங்கே வந்த முருகன் வள்ளியின் அழகில் மயங்கி
அவளைக் கட்டிப்பிடிக்கிறான். ஆனைமுகன் ஆனைவடிவில் வந்து விரட்டியதும்
அவனே குறிஞ்சி அழகனாக வந்து அவளைக் கட்டிப்பிடித்ததும் எல்லாம் ஆனைமுகனின்
செயல் என்றே அந்தப் பெண்ணுள்ளம் நினைக்கிறது.
களவு மணம் முடிந்து கற்பு மணத்தில் வாழ்க்கை ஆரம்பிக்கும் போதுதான்
வள்ளிக்குத் தெரிய வருகிறது ... தன்னைக் களவு மணம் செய்தவனின்
அண்ணன் தான் ஆனைமுகன் என்பதும்..
முருகனுக்கோ வள்ளியின் மனசில் இடம் பிடித்தவன் அண்ணன் ஆனைமுகன்
என்பதும் அந்த நினைப்பில் தான் அவள் தன்னைக் காதலித்தாள் என்பதும்
தெரியவந்ததும் முருகனின் ஈகோவில் பெரிய கீறலை ஏற்படுத்தி விடுகிறது.
கோபித்துக் கொண்டு ஆண்டியின் கோலத்துடன் பழநி மலையில் ஏறி
உட்கார்ந்து கொள்கிறார்.
சிவனும் பார்வதியும் போய் அழைத்தும் வரவில்லை.
இதை எல்லாம் மவுனமாக பார்த்துக் கொண்டிருந்த ஆனைமுகன்
வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியில் வந்து குளத்தங்கரையில்
உட்கார்ந்து கொள்கிறார். வள்ளியை நினைத்த மனதால் வேறு எந்தப்
பெண்ணையும் ஆனைமுகனால் நினைத்துப் பார்க்க கூட முடியவில்லை.
இந்த முக்கோணக் காதல் கதையால் சிவபெருமான் குடும்பத்தின் மானம்
மரியாதைக்கு இழுக்கு வந்துவிட வாய்ப்பிருக்கிறது என்பதால்
சுட்டப் பழம், சுடாதப் பழம் என்றும் ஞானக்கனியை அடைவதற்காக
உலகம் சுற்றிய வாலிபன் கதையும் எழுதப்பட்டிருக்கலாம்.

இந்தக் கதையை வலைப்பூவில் வாசித்துவிட்டு எனக்கு வேண்டியவர்கள்
சிலர் கோபித்துக் கொண்டார்கள். முருகன் தமிழ்க் கடவுள், தமிழ் மண்ணின்
அரசன், வள்ளியோ அசல் தமிழச்சி.. அவர்களைப் பற்றி எல்லாம் இப்படிக் கதைகள்
எழுதுவது தமிழணர்வை அழிக்க நாமே பாதைப் போட்டு கொடுத்த மாதிரி
இருக்கும் என்று வருத்தப் பட்டுக்கொண்டார்கள். சிலர் ஒரு படி மேலே போய்
நான் இந்த மாதிரி தமிழ்ப் பெண் இமேஜை சிதைத்திருக்க கூடாது என்றார்கள்.

இவர்கள் தான் இப்படி என்றால் ஆனைமுகன் என்றால் யார் என்று நினைத்தீர்கள்?
நம் புத்தர் பகவானாக்கும். அரச மரம் புத்தருடன் தொடர்புடையது.
இப்படியாக கோபித்துக் கொண்டார்கள் என் புத்த சமாஜ் நண்பர்கள்.
இதெல்லாம் புனைவுகள் தானே என்று அவர்களுக்குப் பதில் சொல்லவும்
இப்படியாக புனைவுகளின் ஊடாகவே நம் தமிழர் வரலாறும் கலாச்சாரமும்
சீரழிக்கப்பட்டது என்று ஆதங்கப்பட்டார் மும்பையில் வசிக்கும் தோழி புதியமாதவி.
வள்ளி என்ற ஒரு பெண்ணின் காதல் கதையை அந்தக் கதையின் திருப்பங்களை
ஒரு மிகப்பெரிய நாவலாக்க நினைத்த முயற்சி முளைவிடும் முன்பே கருகிப்போனது.

அம்மாவின் காதல் கதையை எழுதும் போதும் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது.
அதுவும் அந்த திருப்பம் விசா வாங்கி இந்திய எல்லைகளைத் தாண்டி
விசவரூபம் எடுத்தது.

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு சொகுசு பேருந்தில் பயணம். போகும்
வழியில் பத்துக்கேவ் முருகன் தரிசனம். கம்பீரமாக வேலுடன் முருகன்
நுழைவாயிலிலேயே வந்து நின்று நம்மை வரவேற்கும் காட்சி.
கூட வந்தப் பயணிகள், அதிலும் குறிப்பாக தழிழ்நாட்டிலிருந்து சுற்றிப்பார்க்க
வந்தவர்கள்...
'அடேய்.. நம்ம்ம இளைய தளபதி ஒரு பாட்டுக்கு ஆடினது இந்த ஸ்பாட்லே தான்,
என்று மெய்மறந்து சொல்லிச்சொல்லி ஆடாதக் குறையாக பல்வேறு போஸ்களில்
போட்டோ எடுத்து தள்ளினார்கள். அவர்கள் சொல்ல சொல்ல எனக்கும் கூட
ஒரு சில சினிமாக்களும் பாடல் காட்சிகளும் நினைவுக்கு வந்து கொஞ்சமாக
அருள் எட்டிப் பார்த்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

நல்ல கொளுத்தும் வெயிலில் தாகம் வாட்டியது. கோவில் வாசலில் இருந்தக்
கடைக்குள் நுழைந்தோம். சின்னக் கடை தான் என்றாலும் கச்சிதமாக
அளவான இருக்கைகளுடன் எல்லா வகையான குளிர்ப்பான வசதிகளுடன்
.. வருகிற சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வருவதும் போவதுமாக..
கடை எப்போதும் பரபரப்பான வியாபாரத்தில்.
கடையில் முருகன் போட்டோவுக்குப் பக்கத்தில் இன்னொரு போட்டோ
சின்னதாக மின் இணைப்புள்ள குத்துவிளக்கு வெளிச்சத்தில்.
புதிதாகவும் வித்தியாசமாகவும் பார்க்க கிடைத்த எல்லாவற்றையும்
க்ளிக் செய்யும் என் காமிரா அந்தக் காட்சியையும் மறக்காமல் க்ளிக்
செய்து கொண்டது.

சிங்கப்பூரில் அடிக்கடி அந்தக் காட்சி வந்து கனவில் தொந்தரவு செய்ய ஆரம்பித்தது.
பாங்காக் போய்த் திரும்பும் வரை அந்தக் காட்சி பல்வேறு கோணங்களில்..
டூர் முடிந்து ஊருக்கு வந்தவுடன் நல்ல ஓர் உளவியல் மருத்துவரை அணுகி
இந்தக் கனவு தொல்லையிலிருந்து விடுபட வேண்டும் என்று தீர்மானித்துக்
கொண்டேன்.
மருத்துவரிடம் போய் கேட்டால் மனுஷன் நம்மைக் கேள்விக் கேட்டே
பயமுறுத்திவிட்டார். மொத்தத்தில் வாயில் நுழையாத வார்த்தைகளை எல்லாம்
சொல்லி அவர் படித்ததை நினைவு படுத்திக் கொண்டதாகவே எனக்குப் பட்டது.

வேறு யாரிடமும் என் குழப்பத்தை வெளிப்படையாக சொல்லவும் முடியாமல்
நாளுக்கு நாள் தவிப்பு அதிகமானது.. சித்திக்கு மட்டும் தான் அம்மாவின் கதை
தெரியும். அவளிடம் தான் மீண்டும் போக வேண்டும்.
அந்த நாளும் வந்தது. மெதுவாக சித்தியின் அருகில் போய் நான் அம்மாவின்
இளம்பிராயத்து போட்டோவை மலேசியா முருகன் கோவிலடியிலிருக்கும்
கடையில் பார்த்ததாகச் சொல்லியதும் அவள் சத்தமாக சிரித்தாள்.

உனக்கு என்னாச்சும்மா..? நீ இன்னும் எங்க சித்திக்காரி கட்டிவிட்ட
கதைய்லகத்திலிருந்து வெளியில் வரலியா? அரண்டவன் கண்ணுக்கு
இருண்டதெல்லாம் பேய்னு சொல்ற கணக்கா இருக்கு நீ சொல்றது..


இல்லை சித்தி அந்தப் போட்டோ அம்மாக்குள்ளதுதான்.
நான் கூட அதே மாதிரி போட்டோவை பாட்டி இருக்கும் போது
ஊர்லே பாத்திருக்கேன். எனக்கு நல்லா நினைவு இருக்கு.
வேணும்னா நீயே பாரேன்.. நான் மலேசியாவில் அந்தக் கடையில்
போட்டோ எடுத்திட்டு வந்திருக்கேன்..

சொல்லிவிட்டு என் காமிராவில் இருக்கும் ஒவ்வொரு படங்களாக காட்ட
ஆரம்பித்தேன். அந்தக் கடை வந்தும் ஸூம் போட்டு காட்டினேன்..

என்ன தெரியுது.. விளக்கு எரியறது மட்டும் தான் தெரியுது..
நீயே பாரு..

சித்தி சொல்லவும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
காமிராவைப் பார்த்தேன். அந்த மின் இணைப்பில் நட்சத்திரமாக
வெளிச்சம் தெரிந்தது. அம்மாவின் படத்தை மட்டும் காணவில்லை...
எனக்குள் இனம் புரியாத அச்சம் ஏற்பட்டது.
அந்தக் குத்துவிளக்கு அம்மாவின் புகைப்படம் முன்னால் தான்
எரிந்து கொண்டிருந்தது. நன்றாக நினைவிருக்கிறது.
நான் என் காமிராவில் எடுத்திருந்த மற்ற காட்சிகள் எல்லாமே
ஒரு இம்மிப் பிசகாமல் பதிவாகி இருக்கிறது.
இது மட்டும் எப்படி..?

சித்தி என்னையே பார்த்தாள். நீண்ட பெருமூச்சுடன் என் கைகளைப்
பிடித்துக் கொண்டாள்,

நான் எவ்வளவோ சொல்லிட்டேன் நீ நம்ப மாட்டேங்க..
இப்போ ஒன்னு கேட்கிறேன்.. அம்மாவின் கதை நீ கேள்விப்பட்ட
மாதிரிதானு வச்சிக்கிடுவோம்.. அதைத் தெரிஞ்சி உனக்கு இப்போ
என்னவாகனும் சொல்லு..
எதுக்கும்மா உன் மனசைப் போட்டு தேவையில்லாம குழப்பிக்கிறே?
என்று கரிசனத்துடன் சொன்னாள்.

அவள் கேள்வி எனக்குச் சரியாகவே பட்டது.
அமைதியாக வீட்டுக்கு வந்தப் பின் மனம் வேறொரு மரத்தில்
ஏறிக்கொண்டது.
அது எப்படி.. அம்மாவின் புகைப்படம்... என் கண்ணால் பார்த்தது..
காமிராவில் விழவில்லை!
இதுதான் ஆவிகளின் விளையாட்டோ..
ஆவிகள் உலவுவது உண்மையோ?
நிறைய ஆவிகள் குறித்தப் புத்தகங்களை வாங்கி வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
கனவில் இப்போதும் அம்மா வரத்தான் செய்கிறாள்.
ஆனால் தன் கதையைப் பற்றி வாய்த்திறப்பதில்லை.
சில சமயங்களில் வள்ளி கனவில் வருகிறாள்..
முருகனுடன் மட்டுமல்ல எப்போதாவது ஆனைமுகனுடனும் வந்து
தரிசனம் தருகிறாள்...

-----------------------------

nanRi - yukamaayini jan 2011